Saturday 9 May 2015

உத்தம வில்லன் - ஒரு நடிகனின் சுய தரிசனம்


இன்று ஜப்பான், தோக்கியோவில் உள்ள மியோதன் (Myoden) பகுதியில் உள்ள ஏயோன் (AEON) சினிமா வளாகத்தில்  "உத்தம வில்லன்" படம் பார்த்தேன்.

தமிழ் சினிமாவிற்கு முற்றிலும் புதிதான கதைக் களம் இது. தமிழர்களின் பழமையான கிராமியக் கலைகளில் ஒன்றான    வில்லுப்பாட்டின் வழியே கதைக்குள் கதை சொல்லும் உத்தியினை கமல் கையாண்டிருப்பது வரவேற்புக்குரியது. இத்தையக உத்தி நம் மொழிக்கே உரியது என்ற கர்வத்தினையும் கமல் சொல்லாமல் சொல்லி அடித்திருக்கிறார். கமல் தன் எல்லா படங்களையும் தாண்டி ஒரே பாய்ச்சலில் விஸ்வரூபம் எடுத்தது போல் உள்ளது.  







Utthama Villan at AEON Cinema, Myoden, Japan.

ஒரு நடிகனின் கதையாக விரிவடையும் படத்தின் காட்சிகள்  கமலுக்கு நேர்த்தியாய் பொருந்தி போவதால் பார்வையாளனை படம் ஆரம்பித்த உடனே தன் வசம் வீழ்த்திக் கொள்கிறார். இதன் சாட்சியாய் வரும் கே.பி சாரின் பாத்திரம் தெரிந்தே பின்னப்பட்ட வலை போல் உள்ளது. சமகாலத்தில் வெறெந்த நடிகரைப் போலவும் அல்லாமல் கமலுக்கே வாய்ந்திருந்த பிரத்யோக இரகசிய வாழ்க்கையும், அவரின் அக வாழ்க்கை பற்றிய மக்களின் பொது புத்தியும் இப்படம் பார்ப்பதற்கான ஒரு உந்து விசையாக படம்நெடுக  பார்க்க முடிகிறது. அந்த வகையில் பார்க்கும் போது தமிழுக்கு கிடைத்த ஆட்டோ பிக்சன் (Autofiction) கதையாகவே உத்தம வில்லனை அங்கீகரிக்கலாம்.

சின்ன சின்ன தொய்வுகள் படத்தில் இருந்தாலும் அவை கதையின் உட்கதைக்குள் வருவதால் பிரதான கதை ஓட்டத்தினை பெரிதாய் தடை செய்வதில்லை. சில வசனங்கள் சட்டென மின்னலைப் போல கடந்து போய் விடுகிறது. அதன் வசீகரிப்பு பல காட்சிகளை தாண்டி மீண்டும் மீண்டும் மனம் அசை போடுகிறது.  ஒரே நேர் கோட்டில் பொருத்தி பார்க்க முடியாத கதையின் வேறு வேறு பகுதிகள் பார்வையாளை கொஞ்சம் குழப்பலாம், ஆனால் இதுவே இப்படத்தின் ஆணி வேர். மலையாள படங்களில் இது போன்ற படங்களை அங்கிருக்கும் நடிகர்கள் அனாசயமாக நடித்து ஸ்கோர் செய்வார்கள். அதே சமயம் அதை உள் வாங்கி கொள்ளும் இரசிகர்கள் வெகு இயல்பாய் மலையாள சினிமாவிற்கு வாய்தது போல் தமிழுக்கு பெரும் பரப்பளவில் வாய்க்கவில்லை என்பது நம் துரதிஸ்டமே.

ஒவ்வொரு காட்சி இறுதியிலும் போடப்படும் முடிச்சு, அடுத்த காட்சியின் துவக்கத்திலேயே காட்சிகளாய் சொல்லாமல் கதை மாந்தர்கள் வழியே அவிழ்க்கப்படும் உத்தி முந்தைய தமிழ் படங்களைப் போல் அல்லாமல் "உத்தம வில்லன்" எளிதாக கடந்து விடுகிறது. இது நம்மவர்களின் கதை சொல்லும் உத்திகளில் ஏற்பட்டிருக்கும் முதிர்ச்சியாகவே பார்க்க முடிகிறது. பெரும்பாலான படங்களில் கமலின் மிகை நடிப்பினை இரசிக குஞ்சுகள் மட்டுமே சிலாகிக்க முடியும். ஆனால் உத்தம் வில்லன், கமலின் மிகை நடிப்பிலிருந்து  சற்றே விலகி எதார்த நிலையின் எல்லையில் இருப்பதால் கமலை புதிய பரிணாமத்தில் தரிசிக்க முடிகிறது. இப்படத்தின் மற்றொரு பலம்  படம் நெடுக வலம் வரும் சக கதா பாத்திரங்கள். கமலின் மகன் மற்றும் மகள் வேடங்களில் வரும் இருவருமே பாத்திரங்களுக்கு இயல்பாய் பொருந்தி போகிறார்கள். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் வரும் ஆண்ட்ரியா, பூஜா குமார், எம். எஸ். பாஸ்கர், ஊர்வசி, கே.பி. நாசர் என எல்லோருமே சிக்ஸர் அடித்திருக்கிறார்கள்.

தன் மரணத்தினை வீட்டில் உள்ள உறவுகளுக்கு சொல்ல முற்படும் காட்சியாகட்டும், தன் இரகசிய வாழ்க்கையின் அந்தியந்த தோழியுடன்  உரையாடும் காட்சிகளில் கமலின் உடல் மொழி கிளாசிக் ரகம். பின்னனி இசை அற்புதம், ஜிப்ரானுக்கு வாழ்த்துகள். படத்தினை  தியேட்டருக்கு சென்று பொறுமையாக பார்த்து இரசியுங்கள்.

கமலின் ஒட்டு மொத்த திரை உலக வாழ்க்கையில் "உத்தம வில்லன்" ஒரு மைல்கல்.இனி தன்னை பின் தொடர்பவர்கள்  அதனை உடைத்துப் பார்க்கட்டும் என்று வெகு துணிச்சலாகவே
களத்தில் இறங்கியது போல் உள்ளது.

 "உத்தம வில்லன்" ஒரு சிஸ்யன் தனது குருவிற்கு அளித்த கட்டை விரலை விடவும் மேலான காணிக்கை.   கே.பி சாரின் ஆத்மா நிச்சயம் சாந்தி அடைந்திருக்கும்.

இப்படத்தினை ஜப்பானில் திரையிட்ட "செல்லுலாய்ட் ஜப்பான்" நிறுவனத்திற்கு நன்றி.


6 comments:

  1. உள் வாங்கி கொள்ளும் இரசிகர்கள் வெகு இயல்பாய் மலையாள சினிமாவிற்கு வாய்தது போல் தமிழுக்கு பெரும் பரப்பளவில் வாய்க்கவில்லை என்பது நம் துரதிஸ்டமே.
    அருமை அய்யா...!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. அருமையான விமர்சனம். மக்களின் பார்வையில் திரைக் கலைஞனின் வாழ்க்கையை வெளிப்படையாய் விவரித்த விதம் சற்றே வித்தியாசமானது. Commercial aspect என்று பாராமல் எதார்தமான திரைக்கதை.

    ReplyDelete