Saturday 4 July 2015

சூரிய ஆற்றலில் இயங்கும் விமானம் - சோலார் இம்பல்சு (Solar Impulse-II) வரலாற்றின் மைல் கல்


நேற்றைய நாள் ( 03, July 2015) சூரிய ஆற்றல் பயன்பாட்டிற்கான  (Solar Energy Utilization) செயல்பாடுகள் குறித்த புதுமையான முயற்சிகளின் வரலாற்றில் ஒரு மைல் கல் என்றே சொல்ல வேண்டும்.


முற்றிலும் இயற்கையில் கிடைக்கும் சூரிய ஆற்றலினைக் கொண்டு  எரிபொருளே இல்லாமல் (Zero-fuel) வடிவமைக்கப்பட்ட சிறிய ரக விமானம் உலகை கடந்த நான்கு மாதம் வலம் வந்து கொண்டு இருந்தது. அதன் பெயர் சோலார் இம்பல்சு-II (Soar Impulse -II: Si2).

நேற்று உள்ளூர் நேரப்படி காலை  6:30 மணி அளவில் கவாய் (Hawai) தீவில் தரை இறங்கும் முன்பு அதன் விமானிகளான பெட்ரான்டு பிக்கார்டு (Betrand Piccard) மற்றும் ஆன்ட்ரு பொர்சுபெக்  (Andre Borschberg) இருவரின் கண்ணிலும் வெற்றியின் ஒளி கீற்று தெரிய ஆரம்பித்தது.




 சோலார் இம்பல்சு-II விமானம் கவாய் தீவில் இறங்குவதற்கு முன்பு


சோலார் இம்பல்சு-II விமானத்தின் விமானிகள் பெட்ரான்டு பிக்கார்டு (Betrand Piccard) மற்றும் ஆன்ட்ரு பொர்சுபெக்  (Andre Borschberg)


மார்ச் 9 ஆம் தேதி ஓமன் நாட்டின் மசுகட்டில் (Muscat) துவக்கப்பட்ட    இந்த நான்கு மாதத்தில் அவர்கள் சந்தித்த சவால்கள், வேதனைகள் யாவும் இன்னும் சிறிது நேரத்தில் வரலாற்றின் பக்கங்களில் எழுதப் பட இருக்கிறது என்கிற பெருமிதத்துடன் சோலார் இம்பல்சு-II விமானத்தினை கவாய் தீவில் கொனுலுலு பகுதியில் உள்ள கலிலோவா (Kalaeloa) விமான நிலையத்தில் தரை  இறக்கினார்கள்.

எரிபொருளற்ற விமானமாகிய சோலார் இம்பல்சு-II மூலம் மூலம் உலகை முதலில் வலம் வந்த சாதனையாளர்களாய் கவாய் தீவில் அவர்கள்  இறங்கியவுடன் பத்திரிக்கையாளர்களிடம் பெட்ரான்டு சொன்ன வார்த்தை இதுதான் "தற்போது புதுப்பிக்க தக்க ஆற்றல் மூலம் சவால் நிறைந்த கடினமான பணிகளை செய்ய இயலாது என எவரும் கூற  மாட்டார்கள்" .  சூரிய ஆற்றலின் செயல்பாடு என்பது குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று சமூகத்தில் நிலவி வரும் பொதுவான நம்பிக்கையினை உடைக்கவே அவர் அவ்வாறு கூறினார். உண்மையில்  சூரிய ஆற்றலைக் கொண்டு இத்தகைய சாதனைகளை செய்ய இயலுமா  என்று உலகமே  வாய் பிளக்க வைக்கும்  இந்த விமானத்தின் சாதனைதான் என்ன?

அதை கீழ்கண்ட பத்தியில் காண்போம்

சுற்றுப்புற சூழல் மாசு சீர்கேட்டினால் உலகமே பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் இன்றைய சூழலில் மரபு சாரா, புதுப்பிக்கத் தக்க ஆற்றலின் பயன்பாடுகள் குறித்து உலக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  அமைக்கப்பட்ட பயணம்தான், சூரிய மின் சக்தியின் மூலம் இயங்கும் சிறிய ரக சோலார் இம்பல்சு-II விமானத்தின் நோக்கம். 

இதற்கான திட்டத்தினை சுவிட்சர்லாந்து நாட்டின் விமானி  பெட்ரான்டு பிக்கார்டு   தீட்டினார். பிறகு, உலகின் பிரசித்தி பெற்ற நிறுவனங்களோடு கூட்டு ஆராய்ச்சி மூலம் 80 பொறியாளர்களை கொண்டு இவ்விமானத்தினை வடிவமைத்தார். 

இதன் சோதனை ஓட்டமாக முதலில் வடிவமைக்கப்பட்ட சோலர் இம்பல்சு-I விமானம் ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றினை 2009 ஆம் ஆண்டில் இருந்து 2013 ஆம் ஆண்டிற்குள் வேறு வேறு கால கட்டங்களில் பல்வேறு தூரங்களை பரிசோதனைகளின் அடிப்படையில்  கடந்தது. இதில் கிடைக்கப் பெற்ற அனுபவங்களை கொண்டு தற்போது இருக்கும் சோலார் இம்பல்சு -II விமானத்தினை இக்குழுவினர் வடிவமைத்தனர்.

சோலார் இம்பல்சு விமானத்துடன் வெற்றிக்குழுவினர்

இந்த விமான பயணம் ஊர் கூடி இழுத்த தேர் என்றுதான் சொல்ல வேண்டும். மிகப் பெரிய நிபுணர் குழு (Mission Control Center) தரையில் இருந்த படியே 24 மணி நேரமும் விமானத்தின் போக்கினை கண்காணித்து குறிப்பிட்ட நிறுத்தங்களில் இறங்குவதற்கும், சரியான பருவ நிலைக்கு தக்கவாறு பயணிக்கவும் பெரிதும் உதவி புரிந்துள்ளனர். 

சோலார் இம்பல்சு-II  தனது பயணத்தில் பல ருசிகரமான இடங்களை கடந்து பயணித்துள்ளது. பெர்சிய வளைகுடாவின பாலைவனங்கள், இந்தியாவின் அச்சமூட்டும் பருவ கால நிலை, பர்மிய கோயில்கள், சீனப் பெருஞ்சுவர், மற்றும் உலகின் இரு பெருங்கடல்கள் (பசிபிக் மற்றும் அட்லாண்டிக்) ஆகியவை இந்த பட்டியலில் அடங்கும்.



Route Map -Solar Impulse -II




இதன் பயணத்தில் இந்தியா, சீனா, மியான்மர், ஜப்பான், அமெரிக்கா நாடுகளில் நிறுத்தம் செய்து அங்குள்ள தன்னார்வ தொண்டு அமைப்புகள், பல்கலைக் கழகங்கள், கல்லூரி, பள்ளி மாணவர்களுடன் உரையாடி எதிர் காலத்தில் மாசற்ற நுட்பங்களின் அவசியம் பற்றிய விழிப்புணர்வினை தூண்டியுள்ளனர்.  

கடைசி நிறுத்தப் பயணமான ஜப்பானில் பருவ கால  சாதகமின்மையினால் நகோயா (Nagoya) நகரத்தில் ஒரு வாரமாக தங்கி இருந்து பின்னர் இறுதி இலக்கான கவாய் தீவினை (6500 கிமீ) நான்கு நாட்கள் 22 மணி நேரம்  இரவும் பகலும் தொடர்ந்து பயணம் செய்து அடைந்தனர். இது உலகின் இடைநில்லா (non stop) விமான பயணத்தில் ஒரு சாதனையாகும். 

விமானத்தில் பறந்து சாதிப்பது என்ன ஒரு பெரிய சவாலா என நினைப்பவர்கள் எனது சோலார் இம்பல்சு விமானம் குறித்த முதல் கட்டுரையினை படித்தால் அதில் பறப்பதில் உள்ள சவால்கள் புரியும்.

http://vedichi-sudhagar.blogspot.jp/2015/03/solar-powered-plane-takes-off-in-first.html

வெறும் மூன்று கன மீட்டர் அளவே உடைய விமான அறையில் தொடர்ந்து ஐந்து நாட்கள் இரண்டு விமானிகள் பயணிப்பதென்பது எத்தனை கடின செயல் என்று நமக்கு சொல்லி புரியவேண்டியதில்லை. 

இத்தையக கடினமான பயணங்கள் நமக்கு சொல்லும் பாடங்கள் ஒன்றுதான் விடா முயற்ச்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் உலகையே வலம் வர முடியும். முதலில் இவ்விமானம் பயணிக்கத் துவங்கிய போது இதன் இறகுகள் விமான ஓடுதளத்தினை விட பெரிதாக இருக்கிறதே இது எங்கே பறக்க போகிறது என்றெல்லாம் கிண்டல் செய்தார்கள். 

மிக மோசமான பருவ கால சூழ்நிலையில் பயணத்தினை தொடர முடியாத நிலையில் கூட இதன் பிரதான விமானி பதட்டப் படாமல் தெளிவாக சிந்தித்து பொறுமையாக செயலாற்றியதும்  கூட இதன் சாதனைக்கு ஒரு முக்கியமான காரணம் ஆகும்

சூரிய மின் சக்தியினைக் கொண்டு   விமானத்தின் மூலம் உலகையே வலம் வரும் போது நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு பதில் சூரிய மின் சக்தியினை  பயன்படுத்துவதன் மூலம் எதிர் கால சந்ததிகளுக்கு ஆற்றல் வளத்தினை சேமித்து வைக்க இயலும். 

முக்கியமாக சிறிய ரக வாகனங்கள் சூரிய மின்சக்தியின் மூலம் இயக்கப்படு மானால்  பெட்ரோலிய எரிபொருட்கள் மூலம் ஏற்படும் விரும்பதகாத கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டினை   தடுக்க இயலும். 

கடுமையான சவால்களுக்கு இடையில்  நான்கு மாதமாக இவ்விமானத்தினை திறம் பட இயக்கிய விமானிகளுக்கும் அதன் குழுவினருக்கும் நமது வாழ்த்துகளை சொல்வோம்.

---------------------------------------------------------------------------------------------------------------------- 

சோலார் இம்ப்லசு விமானத்தினை பற்றிய கீழ்கண்ட சுட்டியில் எனது முதல் பதிவினை படிக்கலாம் 

http://vedichi-sudhagar.blogspot.jp/2015/03/solar-powered-plane-takes-off-in-first.html

சோலார் இம்பல்சு விமான பயணம் குறித்த சுவையான தகவல்கள்

1. இதன் முதல் பயணம் ஓமன் நாட்டின் மசுகட் நகரில்  இருந்து  இந்தியாவின் அகமதாபாத் வரை துவங்கியது. இரண்டு நகரங்களுக்கும் இடைப்பட்ட தொலைவான 1468 கி.மீ தூரத்தினை நேர் கோட்டில் பயணித்து உலக சாதனை புரிந்தது


2. இந்த விமானத்தின் இறக்கைகள் (72 meter) மிகப் பெரிய போயிங் ரக (Boeing 747) விமானத்தின் இறக்கைகளை விட நீளமானது. ஆனால் அதன் இறக்கைகளின் எடையினை போயிங் இறக்கைகளோடு ஒப்பிடும் போது ஒரு சதவிகிதமே. 

3. சோலார் இம்பல்சு குறித்த திட்ட வடிவம் பன்னிரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.

4. பகலில் சூரிய ஒளியின் கிடைக்கப்பெறும் மின் சக்தியின் மூலமும்,  மீதமாக மின்கலங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மின் சக்தியின் மூலம் இரவிலும் தொடந்து 24 மணி நேரமும் இயக்கவல்லது.

5. இந்த விமானத்தின் வேகம் 45 கிமீ/மணி ஆகும். இது ஒரு சிறிய மொபட் வண்டியின் வேகத்தினை விடவும் குறைவே. 

6. இதன் இறக்கைகளில் பொருத்தப்பட்ட 17000 சோலார் மின் கலங்கள்  சூரிய ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி லித்தியம் மின் கலங்களில் (633 Kg) சேமித்து வைக்கிறது

7. பறக்கும்போது சராசரியாக தரையில் இருந்து 15000 அடி உயரத்திலும் அதிக பட்சமாக 25000 அடி உயரத்திலும் பறக்க வல்லது 



No comments:

Post a Comment