Thursday 26 November 2015


மின் மிதி வண்டி நிலையங்கள் ‍ - பார்சலோனா நகரம்

(BiCing in Barcelona city)

மதியம் 3 மணி வாக்கில் பார்சலோனா நகருக்கு வந்து விட்டேன் .நல்ல பசி. நான் தங்கி இருக்கும் மான்ட்டே கார்லோ விடுதியில் இருந்து (லசு ராம்ப‌லசு வீதி) அருகில் இருக்கும் இடத்திற்கு அப்படியே உலா போகலாம் என நடக்க ஆரம்பித்தேன். நகரம் முழுக்க சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது.

பார்சலோனா நகரில் (Barcelona) எலக்ரானிக் மிதிவண்டிகளை (Battery powered Bicycles) வாடகை எடுக்கும் வசதி உள்ளது. இப்படிப்பட்ட எலக்ரானிக் மிதி வண்டிகளை வாடகைக்கு விடுவதை இங்குதான் முதன் முதலாக பார்க்கிறேன்

கார்பன் நச்சு புகையில்லாத பசுமையான சூழலை ஏற்படுத்தும் வகையில் மிக அற்புதமான ஒரு சூழலை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நகரின் பல இடங்களில் எலக்ரானிக் மிதி வண்டிகளை வாடகைக்கு எடுக்க வசதியாக தானியங்கி நிலையங்களை வைத்திருக்கிறார்கள். இதனை பார்சலோனா நகர் மன்ற குழு (Barcelona City Council) முன்னின்று நடத்துகிறது. இதற்கு Viu BiCiNg என்று பெயரிட்டுள்ளார்கள்.






இந்த மிதி வண்டியுடன் பொருத்தப்பட்டுள்ள பாட்டரியில் மின் சக்தியினை தேக்கி வைத்து கொள்ளும் வசதி இருப்பதால், நாம் இரு சக்கர மோட்டார் வாகனங்களை போல் மணிக்கு 20 கிமீ வேகத்தில் ஓட்டி செல்லலாம். மிக இலகுவான எடையில் இருப்பதால் கையாள எளிதாக இருக்கிறது.

நாம் ஓட்டி செல்லும் வழியில் மின் சக்தி குறைந்து விட்டால் கவலையே வேண்டாம். அருகில் உள்ள நிறுத்தத்தில் மிதி வண்டியினை நிறுத்தி விட்டு வேறு ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். அல்லது மிதி வண்டி நிலையங்களில் வைக்கப்பட்டு இருக்கும் டிரான்ஸ்பார்மர் பெட்டியில் இருந்தும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பெரும்பாலும் மிதி வண்டிகள் பொருத்தப்பட்டுள்ள தாங்கு கம்பியில் (stand) இருந்து மிதிவண்டியின் பாட்டரிகளில் மின்சக்தியினை சேமித்து (charging) வைக்கும் படி வைத்திருக்கிறார்கள்கள்.

இந்த மிதி வண்டியினை உள்ளூர் வாசிகள் தங்கள் வீட்டு முகவரி மற்றும் அடையளாங்களை இணையத்தில் பதிந்து தானியங்கி அட்டைகளை வாங்கி கொள்ளலாம். வருடாந்திர சந்தா 47.16 யூரோ. மிதி வண்டி எடுத்த முதல் அரை மணி நேரம் இலவசம். அடுத்த அரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை 0.74 யூரோ ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு செலுத்த வேண்டும். ஆகவே முதல் அரை மணி நேரத்தில் செல்லும் இடத்தில் அருகில் உள்ள நிலையத்தில் விட்டு விடலாம். பார்சலோன நகர் முழுக்க 41 இடங்களில் நிறுத்தம் உள்ளது. இதற்கான செயலிகளை திறன் பேசிகளில் தரவிறுக்கம் செய்து கொண்டால் எந்த இடத்தில் இந்த மிதி வண்டி நிலையங்கள் என அறிந்து கொள்ளலாம்.

சுற்றுலா பயணிகளுக்கு என்று தனியாக வாடகை கடைகளும் உள்ளது.
இந்த பைகிங் (Bicing) என்று அழைக்கப்படும் மிதி வண்டியின் பயன்பாடு வருடா வருடம் அதிகரித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் இந்நகரின் மாசு கேடு பெருமளவு குறைக்கப்பட்டு உள்ளது.

மேலும் மொத்தம் உள்ள மிதி வண்டிகளை அனைவரும் பகிர்ந்து ஓட்டுவதால் மிதி வண்டிகளை நிறுத்தும் இடமும் மிச்சம் ஆகிறது.

ஒரு வேளை மிதிவண்டியினை நிலையத்தில் விடாமல் ஏமாற்றலாம் என நினைத்தால் முடியவே முடியாது. மிதி வண்டி எடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் நிலையத்தில் விடவில்லை என்றால் 4.49 ஒரு மணி நேரத்திற்கு அபாராதம். அடுத்த நாளுக்குள் விடவில்லை காவல்துறை மூலம் நடவைக்கை எடுக்கப்பட்டு 150 யூரோ வரை அபாராதம் வசூலித்து விடுவார்கள்.

அடுத்த முறை பார்சலோனா நகருக்கு போனால் ஒரு முறை இந்த பாட்டரி மிதி வண்டியில் ஒரு முறை வலம் வாருங்கள்

(நிலையத்தில் மட்டுமே இந்த வண்டிகளை நிறுத்த முடியும் என்பதால் இந்த வண்டிகளுக்கு தனிப் பட்ட நிறுத்த வசதி (Stand) இருக்காது)


No comments:

Post a Comment