Wednesday 11 November 2015

 தொடு புலன் உணர் பாதைகள் (Tactile paving tiles)


ஜப்பான் இரயில் நிலையங்களில்  நான் பார்த்து வியந்த விசயங்களில் ஒன்று விழிச் சவால் உடைய திறனாளிகள் (Visual impaired persons) பயன்படுத்துவதற்காக உள்ள பிரத்யோக  தொடு புலன் உணர் பாதைகள் (Tactile paving). 

வழி காட்டும் குச்சியால் (white can) எளிதாக தொட்டு உணரும் வண்ணம் தடித்த குமிழ்களாக  (truncated domes) இப்பாதையில் பொருத்தப் பட்டு இருக்கும். மற்ற நபர்கள் இந்த பாதையினை தொந்தரவு செய்ய இயலா வண்ணம் மஞ்சள் வண்ணமிடப்பட்டு இருக்கும். தற்போது இவை நெகிழிகளால் செய்யப்பட்ட டைல்சு அச்சுகளாக கிடைக்கிறது. 

அடிப்படையில் இரண்டு விதமான குறியீடுகள் இந்த பாதையில் உள்ளன. புள்ளி புள்ளிகளாக (dots) உள்ள குமிழ்கள் நிறுத்த எச்சரிக்கையினையும் (stop), நீளவாக்கில் கோடுகளாக (lines) உள்ள குமிழ்கள் மேற்கொண்டு செல்லலாம் (proceed)  என்ற  அர்த்தத்தில் அமைக்கப்பட்டுள்ளன.


Left side indicates "Stop", right side block indicates "Go"

எங்கள் தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தில் இருந்து உங்கா  (Unga) இரயில் நிலையத்திற்கு பத்து நிமிடம் நடக்க வேண்டும். இடையில் சிறு ஆற்று பாலத்தினையும், இரண்டு தெருக்களையும் கடக்க வேண்டும். ஆனால் இந்த மொத்த பகுதி முழுவதும்  மேற் சொன்ன பிரத்யோக தொடு புலன் உணர் பாதையினை பல்கலைக் கழக வாயிலில் இருந்து இரயில் நிலையத்தின் உள்ளே இரயில் நிற்கும் பிளாட்பாரம் வரை போட்டிருக்கிறார்கள்.

தோக்கியோ அறிவியல் பலகலைக் கழகத்தின் (நோதா வளாகம்) பிரதான வாயிலின் எதிர் புறம் ஆரம்பிக்கும் தொடு புலன் உணர் பாதை

 தோக்கியோ அறிவியல் பலகலைக் கழகத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஆற்று பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தொடு புலன் உணர் பாதை

 தோக்கியோ அறிவியல் பலகலைக் கழகத்திற்கு செல்லும் வழியில் உள்ள பாதையில் அமைக்கப்பட்டுள்ள தொடு புலன் உணர் பாதை

உங்கா இரயில் நிலையத்தின் பின் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள‌ தொடு புலன் உணர் பாதை

உங்கா இரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள‌ தொடு புலன் உணர் பாதை

இந்த பாதைகள் முழுதும் அந்த பகுதியில் உள்ள நகர் மன்றத்திற்கு வரும் மக்களின் வரிப்பணத்தில் போடப்படுகிறது.

மேலும் இரயிலின் உள்ளே வாசலின் அருகிலும், நுழைந்தவுடன் இடது அல்லது வலது புறம் இருக்கும் முன்னுரிமை (priority seats) இருக்கைகளின் கைப்பிடி கம்பிகளிலும் எளிதில் தொட்டு உணரும் வண்ணம் பிரத்யோக மஞ்சள் வண்ண குமிழ்கள் பொருத்தப்படிருக்கும் இது மட்டுமல்லாமல் மக்கள் புழங்கும் தெருக்களின் பிளாட்பாரங்களிலும் இது போன்ற பாதைகளை அமைத்துள்ளார்கள். 


நகரியமா ஒத்தகன மோரி (Nagariyama Otakanamori) இரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தொடு புலன் உணர் பாதை

காமதா (Kamata) இரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தொடு புலன் உணர் பாதை

காமதா (Kamata) இரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தொடு புலன் உணர் பாதை 

விழிச் சவால் உடைய திறனாளிகள் எளிதில் கவனமாக‌ செல்லும் வண்ணம் பிளாட்பாரத்தின் நடுவில் இந்த பாதை அமைக்கப்பட்டு இருக்கும்.

அது சரி இப்படி ஒரு பாதையினை யார் தான் கண்டுபிடித்தது?

1965 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் செய்சி மியாகே (Seiichi Miyake) என்பார் தனது விழிச் சவால் உடைய நண்பர் ஒருவருக்கு உதவும் பொருட்டு இந்த தொடு புலன் உணர் பாதைகளை வடிவமைத்தார். பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து 1967 ஆம் ஆண்டு இது ஜப்பான் நாட்டு அரசால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சோதனை முயற்சியாக ஒகாயாமா (Okayama) நகரில் உள்ள தெருக்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பயன்பாட்டினை   தொடர்ந்து ஜப்பான் நாடு முழுவதும் இந்த பாதைகள் அமைக்கப்பட்டது.

பின்னர் இந்த வடிவமைப்பின் பயனை கண்டுணர்ந்த மற்ற நாடுகள் தங்கள் நாட்டில் உள்ளவர்களும் பயன்பெறும் வகையில் இந்த பாதைகளை அமைத்துள்ளனர். தற்போது இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, தென் கொரியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளின் இரயில் நிலையங்களில் இந்த தொடு புலன் உணர் பாதைகளை காணலாம். 

புள்ளிகள் நிறைந்த எச்சரிகை குமிழ்களை கட்டிடங்களின் உள்பகுதியில் படிக்கட்டுகள் ஆரம்பிக்கும் இடத்தில் விழிச் சவாலர்களுக்கு உதவும் வகையில் தற்போது பதிக்க ஆரம்பித்து உள்ளார்கள். ஒரு வகையில் இது வரவேற்கப் பட வேண்டிய விசயம்.


சர்வதேச போட்டோ கேட்டலிஸ்ட் ஆய்வக கட்டிடத்தின் உள்பகுதியில் உலோகத்தால் பொருத்தப்பட்டுள்ள தொடு புலன் உணர் குமிழ்கள்
உலகின் முன்னேறிய நாடுகளை ஒப்பிடுகையில் இந்த பாதைகளை அமைப்பதில் ஜப்பான் மற்ற நாடுகளுக்கு மிகச் சிறந்த எடுத்துகாட்டாக உள்ளது.

இனி வரும் காலங்களில் நம் நாட்டில் அமைக்கப்படும் சாலைகளில் ஓரங்களிலும், இரயில்வே நிலைய பிளாட் பாரம், பேருந்து நிலையங்களில்  இது போன்ற பிரத்யோக டைல்ஸ் கற்களை (Tactile paving tiles) பதித்தால் விழிச் சவால் உடைய திறனாளிகள் நடக்க எளிதாக இருக்கும்

No comments:

Post a Comment