Saturday 26 December 2015

 ஜப்பானிய முடி திருத்தும் நிலையங்கள் 2

பால்ய வயதில் என் கிராமத்தில் இருக்கும் முடி திருத்தும் நிலையங்களுக்கு சென்றால் பாதி நாள் கடையிலேயே உட்கார்ந்து இருக்க வேண்டும். ஒரு போதும் வரிசையினை பின்பற்ற மாட்டார்கள். அதுவும் ஞாயிற்று கிழமை கடைக்கு போனால் இராத்திரி ஆகி விடும்.

பல நேரங்களில் நாட்டாமை முதல் உள்ளூர் கட்சிகாரர்கள் என வரிசையாக வண்டி கட்டி கொண்டு வந்து விட்டால் அவ்வளவுதான், தங்கள் பாராளுமன்ற அதிகாரத்தினை பயன்படுத்தி வரிசையில் இருப்பவர்களை தாண்டி முடி திருத்தும் அரியணையில் அமர்ந்து விடுவார்கள். அந்த கணங்களில் அறிவின் ஊற்றுக் கண்ணாக அங்கு கிடக்கும் பழைய செய்தி தாள்கள், வார சஞ்சரிகைகள் என எல்லாவற்றையும் மேய்ந்து கொண்டே இருப்பேன்.

இந்த சூழலை பார்த்து அறியும் சிறுவர்கள் மனதில் எதிர்மறையான எண்ணங்களே நிச்சயம் பதியும் என நாம் யாரும் யோசிப்பதில்லை. பின்னாளில் அவர்களும் இதே தவறைத்தான் செய்வார்கள். இதன் நீட்சிதான் பேருந்தில் அடித்து பிடித்து கொண்டு ஏறுவது.

முடி திருத்தும் நிலையங்கள் முன்பைவிட இப்போது எல்லா இடங்களிலும் கொஞ்சம் நவீனம் ஆகி இருக்கிறது. அந்த வகையில் மகிழ்ச்சி.

ஆனால் அந்த வரிசையில் முடி வெட்டிக் கொள்ளும் பழக்கம் இன்னும் வந்த பாடில்லை. சில நேரங்களில் அடி தடி வரை இப்பிரச்சினை நீள்கிறது.

ஜப்பானில் எனது பல்கலைக் கழக வளாகத்தில் ஒரு முடி திருத்தும் நிலையம் உள்ளது. அறுபது வயதிற்கு மேற்பட்ட பெண்மணி ஒருவர் தான் இந்த நிலையத்தினை நடத்துகிறார். வெளியில் உள்ள கடைகளை ஒப்பிடும் போது இங்கு 25 சதவிகிதம் தள்ளுபடி. ஆகையால் நிறைய மணவர்கள், பேராசிரியர்கள் இங்கு முடி வெட்டிக் கொள்கிறார்கள்.

சரி இந்த கடையில் வரும் கூட்டத்தினை எப்படி சமாளிக்கிறார்கள். இந்த முடி திருத்தும் நிலையத்தின் வெளியே ஒரு எழுது பலகை உள்ளது. இதில் ஒரு வாரத்திற்கு முன்பே எந்த தேதியில், மணிக்கு முடி வெட்டிக் கொள்ளலாம் என முன் பதிவு செய்து கொள்ளலாம். ஆகையால் சரியாக அந்த நேரத்துக்கு சென்றால் போதும். அதனால் நம் நேரமும் மிச்சம் ஆகிறது. இந்த கடையில் முடி வெட்டி கொள்பவரை தவிர அங்கே யாரையும் பார்க்க முடியாது.

நிறைய நாடுகளில் தொலைபேசி மூலம் முன் பதிவு செய்து கொள்ளும் முறையினை அறிமுகப் படுத்தி உள்ளார்கள்.

ஆனால் இந்த கரும் பலகை முறை மிகவும் சிக்கனமானது. இவ்வாறு நம் ஊரிலும் நடை முறைப் படுத்தப்பட்டால் மனித வள ஆற்றலை நிச்சயம் நாம் சேமிக்கலாம்.

கடைக்கு செல்ல்லும் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் மத்தியில் வரிசையாக மட்டுமே செல்ல வேண்டும் என்ற எண்ணங்களை நிச்சயம் பதிக்க முடியும்.


Reservation board, Hair dressing shop, Tokyo University of Science Campus, Nodashi, Japan

Reservation board, Hair dressing shop, Tokyo University of Science Campus, Nodashi, Japan

ஜப்பானின் முடி திருத்தும் நிலையங்களில் நூலகங்கள் அளவிற்கு எவ்வாறு புத்தகங்கள் வைக்கப்பட்டு இருக்கும் என்பது பற்றிய எனது பழைய கட்டுரையினை படிக்க இங்கே சொடுக்கவும்.



No comments:

Post a Comment