Sunday 27 December 2015

ஜப்பானிய தபால் நிலையங்கள் - 3

வெளிநாட்டில் இருந்து வரும் கடித மூட்டைகளை வாங்கி அவற்றினை உள்நாட்டு தபால் நிலையங்களுக்கு  அனுப்புவது, அல்லது உள்ளூரில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் தபால் பார்சல்களை கையாளுவவது இது போன்ற வழக்கமான பணிகளுக்காக‌ விமான நிலையங்களில் தபால் நிலையங்கள் இயங்கும் (Mail Processing Center).  இவை பொதுவாக  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அல்லாமல் விமான நிலையத்திற்கு வெளியில் பார்சல் பிரிவாக தனித்து இயங்கும்.

ஆனால், ஜப்பானில் நரிதா சர்வதேச பறப்பகத்தில் (Narita International Airport, Tokyo) விமான நிலையத்தின் உள்ளே  மக்கள் சேவைக்காக 24 மணி நேரமும் தபால் நிலையங்கள் இயங்கி வருகிறது.  இந்த தபால் நிலையங்களின் சேவையானது வழக்கமான உள்ளூர் தபால் நிலையங்களை விட  சற்றே வித்தியாசமானது.

1. வெளிநாடுகளில் இருந்து ஜப்பானுக்கு சுற்றுலா வரும் பயணிகள் அந்தந்த ஊர்களில் வாங்கும் பொருட்களை உள்ளூர் தபால் நிலையத்தில் கொடுத்து விட்டால் அவர்கள் இந்த விமான நிலையத்திற்கு அனுப்பி விடுவார்கள்.  பின்னர் விமானத்தில் பயணிக்கும் நாள் அன்று நேரடியாக இந்த தபால் நிலையத்திற்கு சென்று கடவு சீட்டினை (Passport) காட்டி நம் அடையாளத்தினை உறுதி செய்த பின்னர் பார்சலை பெற்றுக் கொள்ளலாம். 

2. இதுதவிர. ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் விமான பயணத்திற்கு முன்பு வாழ்த்து அட்டைகள் (Greeting cards), நினைவு புகைப்பட அட்டைகள் ஆகியவற்றினை குறைந்த விலையில் அஞ்சல் தலையினை இங்கு வாங்கி ஒட்டி கொடுத்து விட்டால் போதும். விரைவில் நாம் அனுப்பிய முகவரிக்கு விமான சேவை மூலம் சென்று விடும். 

3. எக்கனாமிக் வகுப்பில் பயணிப்பவர்களுக்கு பெரிய‌ தலைவலியாக இருப்பது கையில் எடுத்து செல்லும் பொருட்களுக்கான‌ (cabin and check in luggage) விமான சேவை நிறுவனங்கள் நிர்ணயிக்கும் எடை அளவு.   தப்பி தவறி  இந்த எடைக்கு மேல் எடுத்து சென்றால் ஒரு சில விமான சேவை நிறுவனங்களை தவிர‌  பெரும்பாலான நிறுவனங்கள் கந்து வட்டி கந்தசாமி அளவிற்கு இறங்கி அபராதத்தினை வாங்கி விடுவார்கள். அந்த சமயங்களில் நம் மக்கள் வெளி நாடுகளுக்கு ஆசையாக கொண்டு செல்லும் பதார்த்தங்களையோ அல்லது மளிகை சாமானங்களையோ குப்பையில் எறிந்து விடுவார்கள். ஏனெனில் அபராத தொகை சாமான்களின் விலையினை விட பத்து மடங்கு அதிகம் இருக்கும். ஆனால், நரிதா சர்வதேச பறப்பகத்தில் இந்த பிரச்சின இல்லை. எடை அதிகமான பொருட்களை இங்குள்ள‌ தபால் நிலையத்தில் இருந்து அனுப்பி விடலாம். 

இது போன்ற பல வசதிகள் இங்குள்ள தபால் நிலையங்கள் வழங்குவதால் ஜப்பானின் சுற்றுலா வருமானமும் அதிகரிக்கிறது


Japan Post, Terminal 2 and 3 Narita International Airport, Tokyo

Japan Post, Terminal 2 and 3 Narita International Airport, Tokyo

(சென்னை உள்ளிட இந்திய விமான நிலையங்களின் பிரச்சினை போர்டிங் பாஸ் வாங்கும் இடத்தில் ஒரு தபால் நிலையம் கூட இருக்காது. அப்படி இருந்தால், இது போன்ற இக்கட்டான சூழலில் இந்த தபால் நிலையத்தில் இருந்து பொருட்களை விமான (EMS or SAL) அல்லது கப்பல் வழி தபால் (surface shipping) சேவை மூலம் வெளிநாடுகளுக்கு அல்லது நாம் செல்ல வேண்டிய  முகவரிக்கு குறைந்த விலையில் அனுப்பி விடலாம். மேலும் இதன் மூலம் நம் தபால் துறையினருக்கும் வருமானம் அதிகரிக்கும்).


*  தற்போது சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பறப்பக முனையில் புதிய  தபால் நிலையத்தினை சென்ற ஆகஸ்டு மாதத்தில் இருந்து துவங்கி உள்ளார்கள். இந்த தபால் நிலையத்திற்கு வரும் வெளிநாட்டவர்கள் அல்லது பார்வையாளர்கள் அடையாள அட்டையினை காட்டி தங்கள் உருவம் பொறித்த அஞ்சல் தலையினை அச்சடித்து (printing) வாங்கி கொள்ளும் வசதியினை ஏற்படுத்தி உள்ளார்கள். மேலும் இணைய வசதி உள்ளிட்ட, பிரிண்டிங் வசதியினை கட்டண சேவையாக‌ தருகின்றனர். ஆனால் இது போன்ற சேவைகளை விடவும், மேலே குறிப்பிட்ட சேவை அதிமுக்கியமானது. 

* நம் நாட்டு தபால் நிலையங்களில் இருக்கும் அடுத்த முக்கியமான‌ பிரச்சினை பொருட்களை அனுப்ப தேவையான‌ பார்சல் அட்டை பெட்டிகள் (cotton box) கிடைப்பது.  வெளி நாடுகளில் (கொரியா, ஜப்பான்) பார்சல் அனுப்ப‌ சிறிய ரக (1 கிலோ கொள்ளவு) முதல் பெரிய ரக (25 லிட்டர்) பார்சல் பெட்டிகள் வரை தபால் நிலையங்களில் விற்கப்படுகிறது. ஆகையால் அதிக எடையுள்ள பொருட்களை அனுப்ப சிரமம் இல்லாமல் அங்கேயே நாம் அட்டை பெட்டிகளை வாங்கி கொள்ளலாம். இதற்காக வெளி கடைகளில் தேடி அலைய வேண்டாம்.  இது போன்று அட்டை பெட்டிகளை தபால் நிலையத்தில் கொண்டு வந்தால் மக்களுக்கு பெரிதும் உபயோகமாக இருக்கும். அதை விட்டு விட்டு தபால் நிலையத்தில்  தங்க காசுகள் விற்கிறார்கள். இதன் தத்துவம் எனக்கு என்னவென்று புரியவில்லை.



 

No comments:

Post a Comment