Saturday 2 January 2016

இறவா பெண்ணியக் கவிதை


கவிதையென்பது தங்க‌ குத்தூசி போல அவற்றினை அழகியலாகவும், விடுதலை தரும் புரட்சியின் குறியீடாகவும் பயன்படுத்துவதென்பது கவிஞனின் எழுதுக் கோலுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் மந்திரம்.

புதுக் கவிதைகள் பற்றிய என் வாசிப்பு யாத்திரை வைரமுத்து, மேத்தா, கவிக்கோ அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், வண்ணதாசன் என என் கல்லூரி காலத்தில் தொடங்கியது. வார்த்தைகள் ஒவ்வொன்றும் தச்சன் செய்த ஈட்டி போல் இறங்கும்.இதில் வண்ணதாசனின் கவிதைகள் மட்டும் மயிலிறகு ரகம். பெரும்பாலானவற்றில், நீட்டி முழங்கும் வார்த்தை தேரின் இம்சை இருக்காது. இவர்களின் கவிதைகளில் வெறும் ஒரு சொல் என கடந்து போக முடியாத படி சில கவிதைகள் நம்மை அதிர்வுற செய்பவை. ஒரு படி மேலே போய் மனப்பாடமாய் மனசில் நிலைத்து நிற்பவை.

சமீபத்தில் நிறைய கவிஞர்கள் தமிழ் சூழலுக்கு வந்துள்ளார்கள்.
சில கவிஞர்கள் நம்பிக்கை தருகிறார்கள். எளிமையான சொல் ஒன்றின் மூலம் கவிதை கூடு ஒன்றை கட்டி தருகிறார்கள். இன்றைக்கு அப்படி ஒரு அழகிய கூடு ஒன்றை முக நூல் வழியே கண்டடைய முடிந்தது.

2014 ஆம் ஆண்டு குமுதம் தீராநதியில் வந்திருந்த தமிழச்சி தங்கபாண்டியனின்  காலத்துரு என்னும் கவிதை ஒன்றை அவர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
நிறைய படிமங்களை அடுக்கி வைத்திருக்கும் அடந்த புதுக்கவிதையாய் தோன்றியது. ஆயினும் முதல் வாசிப்பிலேயே அந்த‌ வார்த்தை அலமாரியினை எளிதாய் திறந்து படிக்க முடிந்தது. வார்த்தைகள் யாவும் தூசி துடைத்து வைத்த ஒரு கண்ணாடி போல் அத்தனை தெளிவு.

பெரும்பாலும் இது போன்ற கவிதைகளை படித்து விட்டு கடந்து போய் விடுவேன். ஆயினும் இதனை பகிர காரணம் பெண்ணியவாத காட்டு கத்தலுக்கு இடையில் நம் சட்டை காலரை பிடித்து யாரோ உலுக்குவது போல் இருந்த வரிகள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த கவிதைதான் ஆனால் இன்றைய சூழலுக்கு நன்கு பொருந்தி போகும்படியாய் இருக்கும் கவிதை வரிகளே இதன் இறவாத் தன்மையினை உணர்த்துகிறது.

"கூரான இரும்பு கம்பியுடைய‌
எல்லா வீட்டு கதவுகளிலும்
தடவப் பட்டு விட்டது ‍
டெல்லி பேருந்தில் சிந்திய‌
உதிரத்தின் ஒரு துளி.
காலத் துரு ஏறிவிடுமதனை
சத்தமில்லாது இரவில் ஆண்களும்
ஓசையெழுப்பியபடி
அதிகாலையில் பெண்களும்
தினமும் திறக்கின்றார்கள்."

நம் வழமையான ஞாபக மறதி என்னும் துரு ஏறிவிடாத படியாய் நம் மனசாட்சியின் கதவுகளில் காலத்துருவாய் எச்சரிக்கை செய்கிறது இந்த‌ வரிகள்.

இது நிர்பயாவின் பெற்றோரின் குரலாக மட்டுமல்ல பதின்ம வயது பெண் பிள்ளைகளை கொண்ட ஒரு தாயின் குரலாகவே காலத்திற்கும் நீதி கேட்கும் படியாய் நிலைத்து நிற்கிறது. ஒரு படி மேலே போய் இரவுப் பொழுதை ஆண்களுக்கும், பகல் பொழுதினை பெண்களுக்குமானதாய் வைக்கும் இடத்தில்தான் கவிதை எழுந்து நிற்கிறது.

பைத்தியக்காரியின் கர்ப்பப்பை, வண்டிகள் அழித்து செல்லும் கோலம், கழுமரத்தில் இருந்து வீழும் இறகு, சோற்றுக்கு உப்பென காமம் என புதிய சொற்களால் நிரம்பி வழியும் பெருங் கவிதை இது.

காற்புள்ளிக்கும் குறைவான, ஒரு மழைக்கால நாள் ஒன்றில் மட்டுமே வாழும் ஈசலைப் போலவாவது, குறைந்த பட்ச சுதந்திரத்தினை கூட ஒரு பெண்ணிற்கு கொடுக்க முடியாத ஆண்களாய் நாம் வாழ்கிறோமா என்ற கேள்வியினை ஒட்டு மொத்த சமூகத்திடம் கேள்வியாய் கேட்டு விட்டு கவிதை முடியாமல் முடிகிறது.

ஒன்றுதான் நான் வேண்டுவது, இக்கவிதையினை கல்லூரி பாட திட்டத்தில் வைத்திடுங்கள், அங்கேதான் பெண்ணை புரிந்து கொள்ளும் புதிய ஆண்கள் பிறக்கிறார்கள்.
இந்த கவிதை பல புதிய ஆண்மக்களை பிரசவிக்கும் என நம்புகிறேன்.








No comments:

Post a Comment