Monday 11 January 2016

ஜப்பானிய கதை சொல்லி ‍  (Japanese Story Teller)

தமிழர்களின் தொன்று தொட்ட ஆதி தொன்ம கலைகளான வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம்  தொடங்கி பக்தி இலக்கிய கால கட்டத்தில்  கதாகாலட்சேபம் வழியாக‌ நாம் நம் பண்பாட்டு சங்கதிகளை கதை சொல்லுவதன் (story telling) மூலம் பல தலைமுறைகளுக்கு  கடத்தி வந்திருக்கிறோம்.. ஆனால் இந்த கணிப்பொறி காலத்தில் அவையெல்லாம் மக்களால் கைவிடப்பட்டு மிக மோசமான சூழலில் அந்த கலைஞர்கள் உள்ளனர்.

ஆனால்   400 வருடம்  பழமையான‌ தொல் கலைகளில் ஒன்றான கதை சொல்லும் (story telling) கலைக்கென்று ஜப்பானில்  இன்றும்  தனித்த அரங்குகள்  செயல்பட்டு கொண்டு இருக்கிறது.  ஜப்பானிய மக்களும் தங்கள் கலையினை மறக்காமல் இன்றும் இதனை வழக்கத்தில் வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கதை சொல்லுவதற்கென்று ஒரு கலையா என ஆச்சரியப் படுகிறீர்கள்தானே, இந்த கட்டுரையினை மேலும் படியுங்கள். 

பழமை வாய்ந்த அந்த கதை சொல்லும் ஜப்பானிய‌ கலையின் பெயர்  ரகுகோகா (落語家 Rakugoka)

சொல்லப்படும் கதையின் உட்கருத்தினை பொறுத்து இந்த கலை இரண்டு விதமான‌ பெயர்களில் அழைக்கப்படுகிறது. 

1. ரகுய்கோ (rakuigo) எனப்படும் நகைச்சுவை ததும்பும் விகடகவி கதைகள் மற்றும் 
2. கதாநாயக  வழிபாடுகளை (hero worship) சொல்லும் கோதானி (kodani)  எனப்படும் வீர தீர கதைகள்

இந்த கதைகளை சொல்லும் கதை சொல்லி "கனாசிகா" என்று அழைக்கப்படுகிறார்.

கோசா எனப்படும் மேடை (高座) ஒன்றின் மீது தனது முழங்காலை மடித்து  உட்கார்ந்து கொண்டு வஜ்ராசன அமைப்பில் இருந்தவாறு கனாசிகா கதை சொல்லுவார். அவரது எதிரே பார்வையாளர்கள் அல்லது ரசிகர்கள் அமர்திருப்பர். 

கதை சொல்லிக்கென்று தனித்த உடை இருக்கிற‌து. ஜப்பானியர்களின் பாரம்பரிய உடையான கிமானோ அல்லது நீண்ட கால் சட்டை உடைய ககாமாவையும் மேலங்கியான கவோரியும் அணிந்து கொண்டு கதை சொல்வர்.  




தோக்கியோவில் அசகுசா பகுதியில் உள்ள‌ ரகுகோ கதை சொல்லும்  கலை பற்றிய விளக்க பலகை

தோக்கியோவில் அசகுசா பகுதியில் உள்ள‌  ரகுகோ  சிலை


வழமையான நாடக நடிகர்களை போல் அல்லாமல் "கனாசிகா"  என்னும் கதை சொல்லி கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கேற்ப தன் குரல், உடல் மொழி ஆகியவற்றை ஏற்ற இறக்கத்துடன்   உட்கார்ந்த  இடத்தில் இருந்தபடியே சுவாரசியத்துடன் சொல்வார்.   நகைச்சுவை நிரம்பிய ரகுய்கோ கதை‌ சொல்லும் போது இரசிகர்களின் சிரிப்பொலியில் அரங்கமே அதிர்ந்திருக்கும். குறிப்பாக‌, கதை சொல்லி தன் கையில் சென்சு (扇子 sensu) எனப்படும் காகித விசிறியையும், தெனுகுய் (手拭 tenugui) எனப்படும் சிறிய துணியும் கையில் வைத்து அபிநயம் பிடித்தவாறே கதை சொல்லும் பாங்கே தனி.

Tachibanaya Senkitsu a Hanasiga Story teller
ரகுகோ கதை சொல்லும் கலையானது 17 ஆம் நூற்றாண்டில் ஜப்பானின் காமிகதா பகுதியில் (கியோத்தோ,ஒசாகா) இருந்து தொடங்கி  பிறகு எதோ கால கட்டத்தில் (1603 1868) தோக்கியோவிற்கு பரவியது.

ஆரம்பத்தில் இந்த கதை சொல்லும் உத்தியானது புத்த கோவில்களில் நீதி கதைகள் சொல்ல புத்தகுருமார்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டது. பிறகு மெதுவாக  அங்காடிகள், சந்தைகள், தெருக்களின் முனை என மக்கள் கூடும் இடங்களில் இந்த கதை சொல்லும் உத்தி பரவ தொடங்கியது. தற்போது கதை சொல்லுவதற்கென்று "யொசெ" எனப்படும் தனித்த அரங்குகள் வந்து விட்டது.

இந்த கதை சொல்லிகள் தங்களது குருமார்களால் வழி வழியாக பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இவர்கள் எந்த பள்ளியில் இருந்து வருகிறார்கள் என்ற அடையாளத்துடனேயே தற்போதும் அறியப்படுகிறார்கள்.

ஒரு காலைப் பொழுதில்  தோக்கியோவில் அசகுசா (Asakusa) கோவிலுக்கு செல்லலாம் என சென்றபோது, அசகுசா தொடர் வண்டி நிலையத்தின் மிக‌ அருகே இருந்த (சுகுபா விரைவு வண்டி தடம்) "யொசெ" அரங்கு ஒன்றின் முன்பு நிறைய வயதான முதியவர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். ஜப்பானியர்கள் தங்களின் கலையினை இன்னும் கைவிடாமல் இப்படி வைத்திருக்கிறார்களே என அந்த வரிசையினை பார்க்கும் போதே தெரிந்து விட்டது


தோக்கியோவில் அசகுசா பகுதியில் உள்ள‌ ரகுகோ கதை சொல்லும் கதையரங்கு

தோக்கியோவில் அசகுசா பகுதியில் உள்ள‌ ரகுகோ கதை சொல்லும் கதையரங்கு

தோக்கியோவில் அசகுசா பகுதியில்உள்ள‌ ரகுகோ கதை சொல்லும் கதையரங்கு

தோக்கியோவில் அசகுசா பகுதியில் உள்ள‌ ரகுகோ கதை சொல்லும் கதையரங்கு

தோக்கியோவில் அசகுசா பகுதியில் உள்ள‌ ரகுகோ கதை சொல்லும் கதையரங்கு



 அந்த இடத்தினை மெல்ல‌ கடந்து, "வதேவில்ல" (vaudeville) எனப்படும் அந்த கதையரங்கின் வெளிப்புறத்தினை ஒரு முறை சுற்றி பார்த்து விட்டு வந்தேன். நாடக கலைஞர்கள் தங்களின் பொக்கிசமாக வைத்திருக்கும் பழைய புகைப்படங்களை போன்று 50   வருடம் பழமையான கனாசிகா புகைப்படங்களை பார்க்க முடிந்தது. ஒரு சில கதை சொல்லும் உத்திகளின் போது சாமிசென் (Shamisen, 三味線) எனப்படும் மூன்று நரம்புகள் கொண்ட தந்தி வாத்திய கருவிகள் பயன்படுத்துவதையும் பார்க்க முடிகிறது (இந்த வாத்திய கருவியினை பற்றி தனி கட்டுரையே எழுதலாம்). இது கதை சொல்லும் போது பின்னனி இசைக்கும், கதை சொல்லி அரங்கத்திற்கும் வரும்போது குதூகலப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.


சாமிசென் இசைக் கருவி இசைக்கும் கதை சொல்லி


நாமும் ஏன் நம்மிடம் உள்ள தொல்கலைகளை மீட்டெடுக்க கூடாது. ஏனெனில் தற்போது அழிவின் விளிம்பில் உள்ள கூத்து, பொம்மலாட்டம் போன்ற கலைஞர்களை  நாம் காப்பாற்றா விட்டால் இனி வரும் சந்ததியினருக்கு இப்படி ஒரு கலைகள் இங்கே இருந்ததற்கான சுவடே இருக்காது. 

No comments:

Post a Comment