Thursday 31 March 2016


கேலிக்குள்ளாகும் நம் தேச பக்தி


வார இறுதிகளில் கார்டிப் (cardiff) நகரில் இருந்து சுவான்சியில் (swansea) இருக்கும் வீட்டிற்கு செல்லும் போது சுவான்சி நகரில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள தால்போட் துறைமுகம் (Port Tolpot) வழியாக பயணிப்பது வழக்கம். தெற்கு வேல்சு மாகாண‌ பகுதியில் இருக்கும் கார்டிப்- ‍சுவான்சி நெடுஞ்சாலையில் வழி நெடுக புல்வெளிகள் நிறைந்திருக்கும். கம்பளி ஆடுகள், மாடுகள், குதிரைகள் யாவும் அந்த புல்வெளிகளில் மேய்ந்து கொண்டிருக்கும். பார்க்கவே அற்புதமாக இருக்கும். இந்த சாலையின் இடையில் இருக்கும் தால்போட் துறைமுகப் பகுதியில் மட்டும் எண்ணற்ற தொழிற்சாலைகள் புகையினை கக்கிய படி பார்க்கவே அச்சுறுத்தலாக இருக்கும். அப்படி ஒரு சூழலில் பேருந்தில் இருந்து எடுத்த புகைப்படம்தான் இது. இந்த பயணங்களில் நான் கண்டு ஆச்சரியமடைந்தது இந்தியாவின் தலை சிறந்த நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் டாடா இரும்பு உருக்கு ஆலை ஒன்று என் கண்ணில் பட்டது. இந்த பகுதியில் இருக்கும் மிகப் பெரிய தொழிற்சாலைகளில் முதன்மையானது என்றே சொல்லாலாம். இந்த நிறுவனத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் பணி புரிகிறார்கள். கடல் கடந்து பிரித்தானியாவில் பணி புரிய நான் வந்திருந்தாலும், நம் ஊர் நிறுவனம் இங்குள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திருப்பது குறித்து மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் நேற்று இரவு இந்த தொழிற்சாலையினை மூடுவதாக டாடா குழுமம் அறிவித்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. இதற்கு காரணங்களாக‌ பிரித்தானியாவில் குறைந்த விலையில் சீன இரும்பு பொருட்களின் இறக்குமதி, மற்றும் சர்வதேச சந்தையில் ஸ்டெர்லிங் பவுண்டின் வீழ்ச்சி போன்றவை முக்கிய காரணிகளாக டாட குழுமம் கூறுகிறது. முக்கிய காரணமாக நான் பார்ப்பது, சீன நிறுவனங்கள் தரம் குறைந்த பொருட்களை இந்தியா உள்ளிட்ட கிழக்கு உலகு நாடுகள், தெற்கு ஆசியா, மேற்குலக‌ நாடுகள் என எல்லா இடங்களிலும் இறக்குமதி செய்வதன் மூலம் வலுவாக‌ கால் பதிக்க துவங்கியுள்ளது.இதன் மூலம் உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களை மூட வைப்பதே இதன் நோக்கம். நான் பயணிக்கும் பல நாடுகளிலும் உள்ளூர் அங்காடிகளில் சீன பொருட்களை வெகுவாக‌ பார்க்க முடிகிறது. ஆனால் இந்திய பொருட்களை மிகக் குறைந்த அளவிலேயே பார்க்க முடிகிறது.அடித்து சொல்வேன் இந்திய ஏற்றுமதி பொருட்களின் தரம் இதை விட மிக சிறந்தது. ஆனாலும் நமக்கு கிராக்கி குறைவுதான். இதை விட கொடுமை உள்ளூர் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற இந்தியாவில் கூட நம் மக்கள் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை புறக்கணித்து விட்டு சீன பொருட்களை வாங்குவது இன்று அதிகரித்துள்ளது. இந்த காலக் கொடுமைக்கு இடையில் "மேக் இன் இந்தியா" கோசம் வேறு. உண்மையில் நாம் எங்கு வீழ்ச்சி அடைகிறோம் என்ற புரிதலே இல்லாமலே தேசபக்தி கோசத்தின் மூலம் இன்னும் இன்னும் அதிகமாக நம்மை முட்டாள் ஆக்குகிறது நம் மத்திய அரசு. நம் நீர்நிலைகளை பெப்சி, கோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்களை தாரை வார்த்து கொடுக்கிறோம். அப்போது ஒரு தேச பக்தனுக்கும் கோபம் வரவில்லை. சாலையில் செல்பவர்களை எல்லாம் பாரத மாதாவிற்கு வந்தனம் செய் என மிரட்டுகிற அவலங்கள் நாள் தோறும் காண சகிக்கவில்லை. இந்நிலை தொடர்ந்தால் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கன சிறு தொழில் பொருட்கள் சந்தையில் வாங்க‌ சீந்துவார் இன்றி அழியும். உள்ளூர் பொருட்களை நுகர்வோர் சந்தையில் ஆதரிக்க வேண்டும். அதற்காக பாபா இராம்தேவின் லேகிய பொருட்களை வாங்க வேண்டும் என‌ கோசம் இடாதீர்கள். இராம்தேவை விட இந்தியாவின் சிறு நகரங்களில் இருந்து தரமான அத்யாவசிய‌ பொருட்களை தரும் நிறுவனங்களை முன்னிறுத்துங்கள். டாட குழுமம் இந்த தொழிற்சாலையினை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று தொழிற்சங்க உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையினை நேற்று நள்ளிரவு நிராகரித்து விட்டது. இந்த தொழிற்சாலையில் இருக்கும் தொழிலாளர்களுக்கு நல்லதே நடக்கும் என நம்புவோம்.


Tata Steel Industry, Port Tolpot,  UK.

No comments:

Post a Comment