Saturday 26 March 2016


நூலகங்கள் - ‍ புறக்கணிக்கப்படும் குழந்தைகள்


இன்று அவந்தியை சுவான்சி (Swansea, UK) நகரில் உள்ள மத்திய நூலகத்தின் குழந்தைகள் பகுதிக்கு அழைத்து சென்று இருந்தேன்.

பெரியவர்களுக்கான புத்தக பகுதியினை காட்டிலும் குழந்தைகளுக்கான பகுதியில் ஆயிரக்கணக்கான படக்கதை புத்தகங்கள், காணொளி தட்டுகள், ஆடியோ கதைகள் குவிந்து இருந்தன‌.

குழந்தைகள் விளையாண்டு கொண்டே விரும்பிய புத்தகங்களை எடுத்து படிக்கலாம்.படிக்கும் வண்ணம் இந்நூலகம் விரிந்து பரந்து இருந்தது.

இந்நூலகத்தில் வார இறுதிகளில் மதிய நேரத்தில் பெற்றோர்கள் அங்கு இருக்கும் புத்தகங்களை எடுத்து குழந்தைகளுக்கு வாசித்து கதை சொல்லலாம் (story telling time). இன்று அவ்வாறு கதை சொல்லலாம் என‌ அவந்தியை அழைத்து சென்று இருந்தேன்.

அவள் விரும்பிய புத்தகங்களை எடுத்து தரச் சொல்லி புத்தகத்தை திறந்தால்அவந்தி தானாகவே படங்களை பார்த்து சொந்தமாக கதை சொல்ல ஆரம்பித்து விட்டாள்.

அதில் ஒரு புத்தகம் மிக அருமையாக இருந்தது, கரடியின் பாகங்கள் பற்றி சொல்லும் புத்தகம். வழக்கமான புத்தகம் போல் அல்லாமல் கரடியின் மூக்கு பகுதி படம் வரைந்து அது நன்கு சொர சொரப்பாக இருப்பது போலவும், கால் பகுதி மென்மையான பஞ்சு போலவும், நகங்கள் பள பளவெனவும் அச்சிட்டு இருந்தார்கள். குழந்தைகள் கைகளால் தடவி அதன் பாகங்கள் எவ்வாறு உள்ளது என சொல்லும் வகையில் கதைகள் இருந்தது. இதன் மூலம் குழந்தைகளுக்கான சிந்திக்கும் திறன் நன்கு வளர்கிறது. வித்தியாசமான படக் கதை புத்தகங்கள் வயது வாரியாக அடுக்கி வைத்துள்ளனர். ஆகையால் குழப்பம் இல்லாமல் புத்தகங்களை குழந்தைகளே எடுத்து படித்து கொள்ளலாம்.

எல்லாம் சரி குழந்தைகள் நூலகத்திற்கு சென்று படிக்கும் பழக்கத்தினை எப்படி இங்கே வளர்க்கிறார்கள்.

குழந்தைகளை நூலகத்திற்கு வரவழைக்கும் பொருட்டு சின்ன சின்ன விளையாட்டு போட்டிகள் நடத்துகிறார்கள். 

இன்றைக்கு ஈஸ்டர் விழாக் காலத்தை முன்னிடு பல வண்ணத்திலான ஈஸ்டர் முட்டை பொம்மைகள் நூலகத்தின் புத்தக அலமாரிகளில் ஒளித்து வைத்திருந்தார்கள். கையில் ஒரு தாளை கொடுத்து எந்தெந்த புத்தகத்தின் பின்னால் இந்த முட்டை ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என பட்டியல் இடுபவர்களுக்கு பரிசுகள் தருகிறார்கள். நான் பார்த்த போது தனது பேரன் முட்டையினை தேட ஏதுவாக‌ அவனது தாத்தா அவன் பின்னாலேயே சென்று எழுதி கொண்டிருந்தார். சில நேரங்களில் பொம்மைகளை தேடும் போது அந்த புத்தகங்களை சிறுவர்கள் படித்து பார்க்கிறார்கள். அங்கேயே உட்கிறார்கள் படிக்கிறார்கள். மீண்டும் முட்டை தேடுகிறார்கள். குழந்தைகள் உலகில் புத்தகம் அவர்களை அறியாமலே மெதுவாக திறக்கப்படுகிறது.

சுவான்சி (Swan sea) நூலகத்தில் அவந்தி.

சுவான்சி (Swan sea) நூலகத்தில் அவந்தி.


வார இறுதியில் நூலகத்தில் இருந்து  வீட்டிற்கு எடுத்து சென்று படிக்கும் புத்தகங்களை திறனாய்வு செய்து சுருக்கமாக  நூலகத்தில் தரும் விண்ணப்பத்தில் எழுதி கொடுத்து விட்டால் அதற்கு தனியாக பரிசு உண்டு. இதற்காகவே நிறைய புத்தகங்களை குழந்தைகள் வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர். 

நூலகத்தில் இருந்த மற்றொரு இடம் மிகவும் குழந்தைகளை ஈர்ப்பதாக இருந்தது. பெரிய ஏணி வைத்து அதன் மேல் உள்ள தொட்டியில் புத்தகங்களை கொட்டி வைத்துள்ளனர். குழந்தைகள் ஆர்வமாக ஏணியில் ஏறி அந்த தொட்டிக்குள் இறங்கி அங்கிருக்கும் புத்தகங்களை அங்கேயே அமர்ந்து வாசிக்கின்றனர். 

குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பு அலுப்பூட்டினால்  அங்கேயே அமர்ந்து வண்ணம் தீட்ட தாளும், வண்ணக் குச்சிகளும், கிரேயான் துண்டுகளும் பெட்டி நிறைய போட்டு வைத்திருக்கிறார்கள். 

இன்று அவந்தி பொறுமையாக உட்கார்ந்து வண்ணம் தீட்டி அதனை வீட்டுக்கு வந்தவுடன் அவள் அம்மாவிற்கு பரிசாக கொடுத்து விட்டாள்.


சுவான்சி (Swan sea) நூலகத்தில் அவந்தி.

இன்னொரு நல்ல விசயம் என்னவென்றால், குழந்தைகள் வீட்டிற்கு வேண்டும் அளவிற்கு புத்தகம் எடுத்து வந்து படிக்கலாம். இதற்காக‌ அவர்களுக்கு தனி அடையாள அட்டையும் கொடுத்து விடுகிறார்கள். அவந்தி வரும் போது ஒரு பனிக் கரடி பற்றிய படக் கதை புத்தகத்தினை எடுத்து தர கேட்டாள். எடுத்து அவளிடம் கொடுத்ததும் அப்படி ஒரு மகிழ்ச்சி. 

இங்கு பிரித்தானியாவில் உள்ள பள்ளிகளில் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்து சென்று  படிப்பதை பழக்கபடுத்தி இருப்பதால்  இங்குள்ள நூலகங்களில் குழந்தைகள் நிறைய பேரை பார்க்க முடிகிறது. மேலும் குழந்தைகள்  கார்ட்டூன் படங்களை எடுத்து கணிப்பொறியில் போட்டு பார்த்து கொள்ளவும் வசதி உள்ளது. ஆனால் பெரும்பாலான குழந்தைகள் புத்தகங்களையே எடுத்து படிக்க ஆசைப்படுகிறார்கள். ஆச்சரியமாக இருந்தது.

தமிழகத்தில் ஒரு சில ஊர்களில் மட்டும் நூலகங்கள் சிறப்பாக இயங்குகிறது. அவை யாவும் பெரியவர்களுக்கான செய்தி தாள் வாசிக்கவும்,  போட்டி தேர்வுகளுக்காக இயங்குபவையாகவே இருக்கின்றன. ஆனால் குழந்தைகளுக்கென்று எந்த நூலகத்திலும் ஒரு பகுதி இருப்பதாகவே தோன்றவில்லை. அவர்கள் புத்தகங்களை கிழித்து விடுவார்கள் என்ற குற்றசாட்டினை மட்டுமே திருப்பி திருப்பி சொல்லி கொண்டிருக்கின்றோம். 

சரி, குழந்தைகள் புத்தகங்களை கிழிக்காமல் இருக்க  இங்கு எப்படி சமாளிக்கிறார்கள். நான்கு வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கான படக் கதை புத்தகங்களின் பக்கங்கள் தடித்த அட்டையில் வடிவமைத்துள்ளனர். 5 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கான புத்தகங்கள் சற்றே கெட்டி தாள்களில் உள்ளது. இந்த கால கட்டத்தில் குழந்தைகள் புத்தகங்களை கையாள கற்று கொடுத்து விடுகிறார்கள். பள்ளிகளில் 6 வயதுக்கு மேல் புத்தகம் படித்து கதை சுருக்கம்  செய்ய பழக்கபடுத்தி விடுவதால் 7 வயதில் அருமையான வாசிப்பிற்கும், அவர்கள் படித்த புத்தகங்களை அவர்களே திறனாய்வு (review) செய்யவும் கைதேர்ந்தவர்கள் ஆகி விடுகிறார்கள். மேற்குலகு நாடுகளில் பெரும்பாலான மக்கள் புத்தக வாசிப்பில் மேம்பட்டவர்களாக இருக்க காரணம் சிறு வயதில் அறிமுகப்படுத்தப்படும் நூலகங்கள் என்றால் அது மிகையாகாது.


நூலகத்தில் குழந்தைகளுக்கு தரப்படும் கதை சுருக்கத்திற்கான படிவம்

தமிழில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மிகவும் குறைவு. காரணம் பெற்றொர்களும், பள்ளிகளும் புத்தக வாசிப்பு என்றாலே அது பாடப் புத்தகம் என்றே பொருள் கொள்கிறார்கள். குழந்தைகளுக்கான புத்தகங்களை வெளியிட‌ பதிப்பகத்தினர் நிறைய முன் வர வேண்டும், அதே வேளையில் புத்தகத்தினை வாசிக்க வைக்க பெற்றோரும் உதவ வேண்டும். இப்போது இருக்கும் புத்தகங்கள் ஒப்பீட்டளவில் போதாது.

தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் புத்தகங்களை குழந்தைகளுக்கு கொடுப்பதில்லை. இது தவறான செயல். பள்ளிகளில் நூலகத்திற்கு என குறிப்பிட்ட மணி நேரத்தினை ஓவ்வொரு வாரமும் ஒதுக்க வேண்டும். குழந்தைகள் அவர்கள் படித்த புத்தகத்தினை அவர்களே திறனாய்வு செய்து எழுதும் பழக்கத்தினை செய்ய வேண்டும். குழந்தைகள் புத்தகத்தினை   படித்து கிழிக்கும் போது தான் அவர்கள் ஞானமடைவார்கள். இதில் நாம் கோபப்பட ஒன்றும் இல்லை. புத்தக வாசிப்பு அறிவு அறவே இல்லாமல் போவதற்கு படித்து கிழிக்கும் குழந்தைகள் பல நூறு மடங்கு போற்ற வேண்டியவர்கள்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் தயவு செய்து நூலகங்களை பயன்படுத்த குழந்தைகளை அனுமதியுங்கள். முக்கியமாக‌ வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதியுங்கள். அவர்களின் உலகம் விரிவடையட்டும்.

தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் பெற்றோர்களே ஆயிரக் கணக்கில், லட்சக் கணக்கில் கல்வி கட்டணம் செலுத்துவோரே, உங்கள் குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் இருந்து உங்கள் குழந்தை புத்தகம் எடுத்து வந்து படிக்கும் வசதி இருக்கிறதா என பள்ளியினை கேட்கவும். அபாக்கஸ் வகுப்பு, கீ போர்டு, இத்யாதிகள் என புற்றீசல் போல கிளம்பி இருக்கும் வகுப்புகளுக்கு செலவு செய்யும் பெற்றோரே,  குழந்தைகளில் அகத்திறன் வளர்ச்சிக்கு கொஞ்சம் நூலக அறிவினையும் கொடுங்கள்.



குறிப்பு:

பிரித்தானியாவில் குழந்தைகளுக்கான புத்தக சந்தை மிகப் பெரியது. புத்தக கடைகளில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் 2ல் இருந்து 10 பவுண்டுக்கு மிக நேர்த்தியான வண்ண கதைகளோடு புத்தகங்கள் கிடைக்கிறது. 

இதே போல் தமிழில் இயங்கும் குழந்தைகளுக்கான புத்தகங்களை தேடி பிடித்து வாங்கி கொடுங்கள். வாசிக்கும் பழக்கம் மேம்பட்டால் நிறைய பதிப்பகத்தினர் இத்தளத்திற்கு நிறைய வருவர்.  

இச்சூழலில் குழந்தைகளை முன் வைத்து தொடர்ச்சியாக இயங்கி வரும் தடாகம் பதிப்பகத்தினரின் காடு இதழும், கோவையில் இருந்து வெளி வரும் நம் பிள்ளை இதழுக்கும் எனது பாராட்டுகள். இலாப நோக்கின்றி கடுமையான பொருளாதார நெருக்கடி சூழலில் குழந்தைகளுக்காக இயங்கி வரும் இவர்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு தெரிந்த பள்ளிகளுக்கு சந்தா கட்டினால் குழந்தைகளுக்கு  பெரிய உதவியாக இருக்கும். 

No comments:

Post a Comment