Wednesday 3 August 2016


கார்ப்பரேட் சாமியாரின் மடங்களும் நம் பலவீனங்களும்



"செத்த சும்மா இரு" என நம் நண்பன் சொன்னால் நமக்கு மூக்கின் மேல் கோபம் வருகிறது.


இதையே கார்ப்பரேட் சாமியார்கள் சொன்னால் வேத வாக்காக தெரிகிறது. காரணம், அவர்களுக்கு ஒரு சூப்பர் பவர் இருப்பதாக நம் மனம் கதறுகிறது.


முகநூலில் பலரும் கார்ப்பரேட் சாமியார்களின் பொன் மொழிகளை அவ்வப்போது பகிர்கிறார்கள். எல்லாமே அதகளம் டைப் ஸ்டேட்மெண்ட்கள்.ஒன்னொன்னும் ஒரு தினுசு. 

"வாழ்க்கை ஒரு சுறாபானம், குடிச்சுப்பாரு லிவர் வீங்கி போகும்". என ரைமிங் கணக்காக வரும் பொன் மொழிகள் ஒரு புறம்.


"கண்களை மூடு, மூச்சை நன்கு இழுத்து விடு, கைகளை மேலே தூக்கு" போன்ற இஸ்தலக்கட்டி லாலா கடை கொய்யா போன்ற உட்டாலக்கடி ஜீபூம்பா வசனங்கள்.


பத்தாக் குறைக்கு, இவர்களை செயற்கையாக உருவேற்றி மக்களிடம் கொண்டு சேர்க்கும் வெகுசன இதழ்களில் வரும் செல்ப் கான்பிடன்ட் கட்டுரைகள் "முறுக்கினால் அந்து போகும்", "சன்னலை சாத்து", "மூச்சு விடாட்டி போச்சு" போன்ற செல்ப் பில்டப் கட்டுரைகள் எல்லாமே உங்களை ஒரு போதும் சிந்திக்க விடாது.


புத்தக சந்தைகளுக்கு போனால், மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட ஜென் கதைகள், முல்லா நீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், ஆட்டோபயாகிராபி புத்தகங்கள், பயணக் கட்டுரை புத்தகங்கள் இவையெல்லாம் வாங்கி படித்து தொலையுங்கள் இந்த கார்ப்பரேட் சாமியார்கள் காப்பி அடிப்பதே இந்த புத்தகங்களைத்தான்.


இவர்களுக்கு பிரத்யோகமாக எழுதித் தர எழுத்தாளர்கள் கூட்டம் தனியாக இயங்கி கொண்டிருப்பது நம்மில் பலரும் அறிந்திராத கொடுமை.


உங்கள் குழந்தையுடன் சினிமா, இலக்கியம், கதை, விளையாட்டு, பக்தி, குடும்பத்தின் சுக துக்கம் என எல்லாவற்றையும் தயக்கமின்றி உரையாடுங்கள். ஆலயங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்லுங்கள். தவறு இல்லை. ஆனால் உங்கள் நம்பிக்கையினை உங்கள் குழந்தைகள் மேல் திணிக்காதீர்கள்.


முக்கியமாக இந்த கார்ப்பரேட் சாமியார் மடங்களுக்கு அழைத்து சென்று அவர்கள் காலில் விழச் சொல்லி கொடுமைப் படுத்தாதீர்கள்.


போதை மருந்து கொடுத்துதான் உங்கள் குழந்தைகளை சித்ரவதை செய்ய வேண்டும் என்று இல்லை. எல்லா இறகுகளையும் வெட்டி விட்டு கூண்டுக்குள் அடைத்து வைத்து உலகமே ஒரு இருட்டு என போதிக்கும் குருட்டு போதனை அதனை விட கொடிய போதை.


"வாழ்க்கை வாழ்வதற்கே" இந்த தத்துவம் உங்கள் அருகில் இருக்கும் பன்னீர் சோடா கடை வைத்திருக்கும் ஆயாவிற்கும், சாலையோரத்தில் உறங்கும் அன்றாடங்காச்சிகளும் நன்கு தெரியும். அவர்கள் யாரும் சாமியாரிடம் சென்று கற்றுக் கொள்வதில்லை. தங்கள் வாழ்வில் இருந்தே நிதர்சனத்தை கற்கிறார்கள். இதனை பெரிய விலை கொடுத்து சாமியார்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.


குழந்தைகளுக்கு வாசிக்க நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள். அதை விட பெரிய தத்துவியல் பேராசன்கள் உலகில் இல்லை.


குழந்தைகளை உங்கள் நம்பிக்கையின் பேரில் தொலைத்து வீடாதீர்கள். அவர்கள் உங்கள் மூலம் இந்த உலகிற்கு வந்தவர்கள். அவ்வளவு மட்டுமே.


No comments:

Post a Comment