Friday 18 November 2016

கிறிஸ்துமஸ் பனிக்காலம் -1


நேற்று இரவு சுவான்சி நகரில் நல்ல ஆலங்கட்டி மழை. 

சத்தம் கேட்டு சன்னலில் எட்டிப் பார்த்தால் வீட்டின் பின் முற்றம் முழுவதும் குட்டி குட்டியாய் வெள்ளை பந்துகள் நிரம்பி மாக்கோலம் பூசிய மாதிரி இருந்தது. 

முன் வாசலை திறந்து கொண்டு பார்த்தால் தெருவெங்கும் வெள்ளை தார் உருகி வழிந்தோடுவது போல் சொட்டு சொட்டான மழையில் நனைத்து கரைந்து ஓடிக் கொண்டிருந்தது.

அவந்திக்கு பனியில் விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் சீக்கிரம் வெளியேவந்து பாரேன் என கத்தினேன். 

வெளியே எட்டிப் பார்த்தவள்.. டாடி வெளியெ போய் விளையாடலாம் என குதுகலத்துடன் குதிக்கத் துவங்கி விட்டாள்.

வேகமாக ஜெர்க்கினை மாட்டிக் கொண்டு இருவரும் தெருவில் ஓட ஆரம்பித்தோம்.

பார்க்க வெள்ளையாக இருக்கும் இந்த ஆலங்கட்டிகள் அவந்திக்கு  பனித்துகள் போன்றே தோன்றி இருக்க வேண்டும்.

இது எங்கே இருந்து வருகிறது என்று நான் கேட்க‌ இது கிறிஸ்துமஸ் காலம், ஆகையால் வானில்  பனிக்கட்டிகள் உடைந்து மேகத்தின் வழியாக கொட்டுகிறது என்றாள். 




மிக ஆச்சரியமாக இருக்கிறது. இந்த பனிக்கட்டிகளுக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கும் சீசனல் தொடர்பு தாண்டி வேறு எதோ ஒன்று இந்த குழந்தைகளை ஈர்க்கிறது. ஒரு வேளை அவர்கள் படிக்கும், அல்லது பார்க்கும் பேன்டசி கதைகளா எனத் தெரியவில்லை.  அதனாலேயே என்னவோ, பனிக் காலம் நிறைந்த‌ கிறிஸ்துமஸ் கனவுகள் இங்கிருக்கும்  குழந்தைகளுக்கு எப்போதும் உவப்பானவை. 

எனக்கு தெரிந்து இந்த சுவான்சி நகரில் பனி மழை பெய்ததாக கேள்விப்பட்டதில்லை.

ஆனால் எங்கும் பனி சூழ்ந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்  1950 களில் சுவான்சி நகரத்தில் இருந்திருப்பதை A Child"s Christmad in Wales என்ற கவித்துவம் நிறைந்த குறு நாவல் மூலம்   விளங்கி கொள்ள முடிகிறது. நேரம் இருந்தால் இந்த கவிதை உரைநடையினை  எழுதிய‌ வேல்ஸ் தேசத்து மகா கவி திலான் தாமசின் சொந்த குரலில் எப்படி இந்த சுவான்சி நகரம் பனி நிறைந்தது இருந்தது என்று கேட்டு மகிழுங்கள். https://www.youtube.com/watch?v=8HoxycLmMOk

Front cover of A Childs Christmas in Wales- Writtern by Dylan Thomas (photo taken at Dylan Thomas Center Swansea)


இந்த கவிதை நாவலை வைத்து எடுக்கப்பட்ட படத்தை இந்த சுட்டியில் காணலாம். https://www.youtube.com/watch?v=9BTSQYdBuZY


கிறிஸ்துமஸ் பனிக்காலம் அடுத்த மாதம் இன்னும் விரிவடையும்.


No comments:

Post a Comment