Thursday 24 November 2016

நெம்புகோல் நண்பர்கள் -1

திருச்சி பிசப் ஹீபர் கல்லூரியில் இளம் நிலை இயற்பியல் பயின்று கொண்டிருந்த காலம். பெரிதாய் குறிக்கோள் எதுவும் இல்லை. ஒரு டிகிரி படிக்க வேண்டும் அவ்வளவுதான். கிராமத்தில் இருந்து பெரிய குறிக்கோள் எதுவும் இல்லாமல் பிழைக்க வேண்டும் என கிளம்பும் கூட்டங்களில் இருந்து வந்தவன் நான்.

முதல் வருடம் திருச்சி நால் ரோடு பகுதியில் இருக்கும் வெக்காளியம்மன் லாட்ஜ் ஜில்தான் நான் தங்கியிருந்து படித்தேன். அந்த கால கட்டத்தில் லாட்ஜிக்கு எதிர்புறம் இருக்கும் அன்புடையான் காலணியில் இருந்து என் நண்பன் நரசிம்மன் மூலம் அறிமுகமானவர் தான் சர்மா. வயதில் எனக்கு அவர் சூப்பர் சீனியர். ஆனால் சக வயதினரைப் போல் தான் நட்பு பாராட்டுவார்.

அவர் அப்போது எங்கள் கல்லூரியில் முது நிலை சுற்றுச் சூழலியல் அறிவியல் படித்துக் கொண்டிருந்தார். படிப்பில் படு சுட்டி. அதற்காக எந்நேரமும் புத்தகத்தை படிக்கும் ரகம் கிடையாது. ஒரு முறை விசயத்தை உள் வாங்கி கொண்டால் அப்படியே பத்து பேருக்கு சொல்லும் பாண்டித்ய அறிவு.

கல்லூரியின் பைன் ஆர்ட்ஸ், என் எஸ் எஸ், என ஊர் சுற்றிய காலங்களின் எங்கள் சகாக்கள் சர்மாவிடம் தான் ஸ்கிரிப்ட், ஐடியா எல்லாமே கேட்போம். கிரியேட்டிவிட்டியில் இந்த ஆளை அடிச்சுக்க முடியாது.

பெரும்பாலும், மாலை வேளையில் அல்லது ஓய்வு நேரங்களில் தேநீர் கடைகளில் எங்களது கும்பலோடு நகைச்சுவை ததும்பும் அரட்டைகளுக்கு பஞ்சம் இருக்காது. சர்மாதான் எல்லா உரையாடல்களிலும் மையமாக இருப்பார். தான் படித்த, கேள்வியுற்ற எல்லா நுட்ப செய்திகளையும் சபையில் இறக்குவார்.

கடி ஜோக்குகளில் ஆரம்பிக்கும் உரையாடலின் ஒரு புள்ளி, பேர்டு வாட்சிங் வழியாக வேகமெடுத்து வாட்டர் டிரீட்மெண்ட், என்விரான்மென்டல் பொலியூசன் என பல கிளைகளாக பிரியும்.

இந்த கூத்துகளுக்கு இடையில் ஒரு வருடம் எக்சனோரா அமைப்பிற்காக  விழிப்புணர்ச்சி தரும் குறு நாடகம் போடுவது போன்ற வேலைகளும் செய்தோம். இடையில் ஒரு முறை கொடைக்கானல்  பெருமாள் மலை அருகே இருக்கும் செண்பகனூர் பகுதியில்  பழனி மலை சுற்றுச் சூழல் பாதுகாப்பு குழுமத்தின் (Palani Hills Conservation Council) மூத்த ஆலோசகர், திருச்சி புனித வளனார் கல்லூரி தாவரவியல் பேராசிரியர்   அருட் தந்தை மேத்யூ (Prof. Mathew) அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  இரண்டு நாள் அங்கு தங்கி தாவரங்களை பற்றி அறிந்திராத தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.

சர்மா உடன் சென்ற இந்த பயணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே வழக்கு, கொடைக்கானல் ஏரியினை தூர் வாரி சுத்தப்படுத்தி அதனை குடி நீர் ஆதாரமாக மாற்றியது, விலங்குகள் காரிடார் பாதையினை தனி மனித ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டு பசுமை வேலி அமைத்தது என இந்த அமைப்பின் செயல்பாடுகள் வெளி உலகம் அறியாதது. முக்கியமாக பேர. மேத்யூ வின் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ப்ளோரா பற்றிய புத்தகம் மிக முக்கியமானது.

இப்போது போனாலும் பெருமாள் மலையில் உள்ள ஹெர்பேரியம் பார்க்க வேண்டிய ஒன்று.

தேர்வு காலங்கள் தவிரவும், அவரது வகுப்பு நண்பர்கள் அவ்வப்போது சர்மா வீட்டிற்கு குரூப் டிஸ்கசனுக்கு வருவார்கள். இந்த டிஸ்க்சன் கல்லூரியின் கேப்டீரியா, முன் பகுதியில் இருக்கும் கார்டன், மைதானம் என சகல இடங்களிலும் தடையின்றி மனம் போன போக்கில்  நடக்கும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களோடு ஒரு அணிலாய் ஒட்டிக் கொள்வேன்.
நேரம் கிடைக்கும் போது சர்மாவின் முது நிலை வகுப்பிற்கு சென்று வேடிக்கை பார்ப்பேன். இந்த கால கட்டங்களில் அவர்கள் வகுப்பு தோழர்கள்  CSIR விரிவுரையாளர், மற்றும் ஆராய்ச்சி நிதிக்கான போட்டி தேர்வுகளுக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தனர். அவரது வகுப்பு நண்பர்கள் சிவா அண்ணன், சேவியர் சார் எல்லோரும் படிப்பதை பார்த்த போது நாமும் இது போல் உயர் கல்வி பயின்று ஆராய்சிக்கு செல்ல வேண்டும் என்ற உந்துதல் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தது.

எப்போதும் போல் சர்மா இந்த தேர்வுக்கான ஆயத்தங்களில் அலட்டி கொள்ளவே இல்லை.. அவரது நண்பர்களோ விழுந்து விழுந்து மண்டையை உடைத்துக் கொள்வார்கள்.

CSIR தேர்வு முடிவுகள் வந்தது. அந்த வருடத்தில் இந்திய அளவில் Environmental Science துறையில் இரண்டே பேர்தான் தேர்ச்சி பெற்று இருந்தனர். ஒருவர் சர்மா, மற்றொருவர் சேவியர் சார். அவர் தற்போது கல்கத்தா செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பேராசிரியாக பணி புரிகிறார்.

தற்போது சர்மா பெங்களூருவில் உள்ள ஜியார்ஜியா நுட்ப நிறுவனத்தில், முதன்மை தீர்வு  பொறியாளராக பணி புரிகிறார். இந்நிறுவனம் உலக அளவில் ஈ லேர்னிங் முறையில் புதிய உத்திகளுக்கான நுட்பங்களை அறிமுகப்படுத்துகிறது. சர்மா எனக்கு தெரிந்து நல்ல ஆசிரியர், தனக்கு தெரிந்ததை மிக இலகுவாக தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு எளிதாக புரிய வைக்கும் வித்தைக்காரர். நிச்சயம் சர்மாவின் கிரியேட்டிவ் வேட்டைக்கு ஏற்ற காடு இது என்பேன்.

நான் உயர்கல்வி ஆராய்ச்சி பயில சர்மாவின் நட்பு ம் ஒரு முக்கிய காரணம். எதிர் காலம் பற்றிய பெரிய கனவுகள் இல்லாத போது நம் சூழல்தான் அதற்கான விதைகளை விதைக்கிறது. நெருப்புத் துண்டுகளோடு இருக்கும் வரைதான் அது அக்கினி குஞ்சு, இல்லையேல் அது வெறும் கரித்துண்டுதான். நான் அக்கினி குஞ்சாக இருந்ததற்கு காரணம் இந்த நெருப்பு துண்டுகள் தான்.
2005 க்கு பிறகு சர்மாவை சந்திக்க இயலவில்லை. ஆனால் மார்க் முக நூல் வழியாக இதனை சாத்தியப்படுத்தி தந்துள்ளார்.

முது நிலை பயில்பவர்கள் உங்கள் சுற்றுப் புறத்தில் உள்ள இளம் நிலை கல்லூரி, பள்ளி மாணவர்களோடு தொடர்ந்து உரையாடுங்கள். உங்களை முன் மாதிரியாக கொண்டு அவர்களும் மேலே வரக் கூடும்.

சர்மாவிற்கு எப்போதும் என் அன்பு உரித்தாகுக.


Sharma with Siva anna and Xavier Sir at his MSC class room (photo credit, Siva Rajan Anna)



No comments:

Post a Comment