Thursday, 12 October 2017


வாட்சப் குப்பைகள் -1

ஒவ்வொரு நாளும் வாட்சப்பை திறந்தால் குறைந்தது ஒரு முன்னோர் புராணமாவது இருக்கும். அந்த காலத்தில் "ஆட்டுக்கல்லில் மாவு அரைத்தோம்", "சாம்பலில் பல் விளக்கினோம்", "கோமணம் கட்டினோம்", "மாட்டு வண்டியில் போனோம்", "விவசாயிகள் பணக்காரர்களாக இருந்தார்கள்" என இந்த பிளாஸ் பேக் நீளும்.
இது போன்ற செய்திகளை படிக்கும் இன்றைய இளைஞர்கள் கொஞ்சம் கிலேசமடைவது உறுதி.
உண்மையில் 1981-85 ஆம் ஆண்டுகளை ஒப்பிடும் போது மனிதர்களின் எதிர்பார்ப்பு ஆயுளானது (life expediency) இன்றைய நவீன அறிவியல் மருத்துவத்தின் உதவியால் எவ்வாறு 2006- 2010 ஆம் ஆண்டுகளில் அதிகரித்து தந்துள்ளது என்ற உண்மையினை கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
குறிப்பாக உலக இறப்பு விகிதத்தில் (global mortality rate) ஒரு லட்சம் பேரில் இதய வியாதிகளால் இறப்பவர்களின் எண்ணிக்கையினை 53% ஆக குறைத்திருக்கிறோம். புற்று நோய்களின் தாக்கத்தால் இறப்பவர்களை 17% ஆக குறைத்திருக்கிறோம். இதர வியாதிகளை 23% குறைத்திருக்கிறோம்.
30 வருடங்களுக்கு முன்பு இருந்த சூழலை விட கடந்த பத்து வருடத்தில் நவீன மருத்துவம், அறுவை சிகிச்சை நுட்பங்கள், இதய நோயினால் இறப்பவர்களை பெருமளவு கட்டுப்படுத்தி உள்ளது.
இவை எப்படி சாத்தியமானது என்பதை உங்கள் அம்மா, அப்பா குடும்பத்தில் எத்தனை பேர் பிறந்தனர், எத்தனை பேர் தப்பி பிழைத்தனர் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நவீன அறிவியல் மருத்துவத்தில் ஏற்பட்ட வியத்தகு முன்னேற்றமே நம் ஆயுளை கூட்டித் தந்துள்ளது.
அதே நேரம் இன்னும் நமக்கு பெரிய சவாலாக‌ இருப்பது புற்று நோய் தான். இதனையும் எளிதாக கட்டுக் கொண்டுக்குள் கொண்டு வர வேண்டுமானால் முன் கூட்டியே கேன்சர் கிருமிகளின் தாக்குதலை கண்டறியும் (prostate cancer) நுணர்விகள் (sensors) கண்டறியப்பட வேண்டும்.
குறிப்பாக‌, நுரையிரல் புற்று நோய், இரத்தப் புற்று நோய், மார்பக புற்று நோய் இவற்றின் தாக்குதலை முதல் நிலையிலே கண்டறிவதன் மூலம் முறையான சிகிச்சை தருவதன் முலம் கேன்சர் தாக்குதலில் இருந்து அவர்களை காப்பாற்ற இயலும்.
முறையான உடல் மற்றும் இரத்தப் பரிசோதனையின் ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் கண்டறிவதன் மூலம் உலகிற்கு சவாலாக இருக்கும் கேன்சர் நோயை முன் கூட்டியே கண்டறிந்து குணப்படுத்த இயலும்.
பெரும்பாலானவர்கள் போலி மருத்துவ கும்பல்களிடம் சென்று கேன்சர் முற்றிய பிறகே மருத்துவர்களை நாடுகிறார்கள். இந்த சிக்கலைத்தான் வாட்சப்பில் முன்னோர் பெருமை பாடும் முட்டாள்கள் ஏற்படுத்துகிறார்கள்.
நவீன மருத்துவத்தில் எல்லா நோய்களுக்கும் தீர்வு உண்டு என்று வாதிடுவது என் நோக்கமல்ல, குறைந்த பட்சம் நோயை முன் கூட்டியே கண்டுணர்ந்து அதனைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் மனிதர்களின் ஆயுட் காலத்தை நிச்சயம் அதிகரிக்க முடியும்.
ஆகவே வாட்சப்பில் வரும் மருத்துவம் சார்ந்த புரளிகளை அடுத்தவருக்கு பார்த்த மாத்திரத்தில் பகிராதீர்கள்.
- முனைவர் சுதாகர் பிச்சைமுத்து
சுவான்சி பல்கலைக் கழகம்
12-10-2017Reference: Cao et al, BMJ 2017;357:j2765
Wednesday, 11 October 2017


பிபிசி (BBC Tamil) தமிழ் இணைய இதழில் வெளி வந்துள்ள எனது முகநூல் பதிவு

http://www.bbc.com/tamil/india-41583199
தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மை யாவை? முக்கியமாக மந்தை எதிர்ப்பு சக்தி எனப்படும் ஹெர்டு இமினியூட்டி என்பதை எளிமையாக விளக்க முடியுமா?

ஒரு ஊரில் கோவில் திருவிழா நடைபெற்றது. அந்த கோவிலில் உள்ள கடவுளுக்கு பால் அபிசேகம் செய்ய அந்த கோவிலின் முன்பு பெரிய தொட்டி வைக்கப்பட்டது. அந்த தொட்டியில் ஊரில் உள்ள எல்லா வீடுகளிலும் இருந்து கண்டிப்பாக ஒரு குடம் பால் ஊற்ற வேண்டும் என்று ஊர்ப் பெரியவர்கள் கட்டளையிட்டனர்.
அத்தொட்டியினை வாய் பகுதி மட்டும் திறந்து இருக்கும்படி செய்து ஊர்க் கோவிலின் முன்பு வைத்தனர்.
அனைவரும் ஒற்றுமையாக கூடி எடுத்த முடிவு என்பதால் ஊர் மக்கள் அனைவரும் அடுத்த நாள் பய பக்தியோடு கடவுளை வேண்டி அத்தொட்டியில் தங்கள் பங்கிற்கான‌ பாலை ஊற்றி வந்தனர்.
அடுத்த நாள் காலையில் அத்தொட்டியில் இருந்த பாலை எடுத்து கடவுளுக்கு மகிழ்ச்சியாக‌ அபிசேகம் செய்தனர்.
இதற்கு இடையில் அவ்வூரில் இருந்த முரட்டு குசும்பன் ஒருவன், அந்த தொட்டியில் பாலுக்கு பதில் நீரை ஊற்றி விட்டேன். எதற்கு நான் செலவு செய்ய வேண்டும்? ஊரே பால் ஊற்றும் போது நான் ஒருவன் தண்ணீர் ஊற்றினால் தெரியவா போகிறது என்று தன் வீர தீர பெருமையினை அண்டை வீட்டாரிடம் சொன்னான்.
இது அப்படியே பரவலாக ஒவ்வொருவரின் வீட்டுக்கும் போனது.
அடுத்த வருடம் கோவில் திருவிழா வந்தது. ஊர் கோவிலின் முன்பு வழக்கம் போல் பால் தொட்டி வைக்கப்பட்டது.
மக்கள் அனைவரும் தங்கள் காணிக்கையினை அத்தொட்டியில் ஊற்றினர்.
அடுத்த நாள் தொட்டியினை திறந்து பார்த்தால் பாலுக்கு பதில் தொட்டி நிறைய தண்ணீர் இருந்தது. எல்லோருக்கும் அதிர்ச்சி. எப்படி தொட்டி முழுவதும் உள்ள பால் தன்ணீராக மாறும் என ஆச்சரியப்படுவதற்கு பதில் ஒவ்வொருவரும் நெளிய ஆரம்பித்தார்கள்.
ஏனெனில் கடந்த வருடம் முரட்டு குசும்பன் கொடுத்த கெட்ட அறிவுரையால் இவ்வருடம் எல்லா மக்களுக்கும் பாலுக்கு பதில் தண்ணீரை ஒவ்வொருவரும் தங்கள் பங்காக ஊற்றி ஏமாற்ற நினைத்து அசிங்கப்பட்டு நின்றனர்.
நண்பர்களே இக்கதை தடுப்பூசி போடாமல் என் குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை என்று கதை கட்டி விடுபவர்களுக்கு நன்கு பொருந்தும்.
இதற்கு "ஹெர்டு இமினியுட்டி" (herd immunity ) என்று பெயர். அதாவது ஊரே பால் ஊற்றும் போது ஒருவர் தண்ணீர் ஊற்றினால் கண்டறிய முடியாது. அதே போல் ஊரில் உள்ள 100 குழந்தைகளில் 1 குழந்தை தடுப்பூசி போடாவிட்டால் நோய் தொற்று ஏற்படும் ஆபத்தில் இருந்து பாதுகாப்பை 99 குழந்தைகளும் நன்கு பெற்று இருப்பதால் அந்த 1 குழந்தைக்கு நோய் வரும் வாய்ப்பினை தடுத்து நிறுத்தி விடும்.
ஆனால் அந்த 1 குழந்தை தடுப்பூசி போடாமல் நன்றாக இருக்கிறதே என எண்ணி 99 குழந்தைகளும் போடாவிட்டால் ஊர் முழுக்க பாலுக்கு பதில் தண்ணீரை தொட்டியில் ஊற்றியது போல் உயிர்க் கொல்லி தொற்று நோய் 100 குழந்தைகளையும் பாதித்து கொடிய விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆகவே தடுப்பூசி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் தவறாமல் போடப் பட வேண்டும். விசமிகளின் பேச்சை புறந்தள்ளுங்கள்.
நம் தேசத்தின் குழந்தைகளே எதிர்கால தூண்கள். இதனை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து நம் எதிர்கால சந்ததியினரை நோயின் கோரப் பிடியில் காப்பாற்ற உதவுங்கள்.
***விசமிகளின் வதந்திகளை ஒரு போதும் நம்பாதீர்கள்
கேள்வி 2: டெங்கு வைரஸ் மனிதர்களை கொல்லும் வல்லமை பெற்று இருந்தால் அதை சுமக்கும் கொசுவை ஏன் கொல்லவில்லை.

இந்த கேள்வியினை படித்தவுடன், அட விசத்தை அருந்திய கொசு எப்படி சாகாமல் இருக்கிறது என்பது போன்ற புரிதல் உங்களுக்கு வரும். இது எளிதாக மேலோட்டமாக சிந்திக்கும் எல்லோருக்குமே வருவதுதான். காரணம் மனித உடலமைப்பை வைத்தே கொசுவும் இருக்கும் என்று புரிந்து கொள்வதால் வரும் அடிப்படை சிக்கலே இதற்கு காரணம்.

முதலில் டெங்கு வைரஸ் பாதிக்கப்பட்ட மனிதரை ஏடிஎஸ் எஜிப்டி பெண் கொசு கடிக்கும் போது அது எவ்வாறு கொசுவின் உடலில் செல்கிறது என்பதை அறிவியல் பூர்வமாக எளிதாக தெரிந்து கொள்வோம்.

நிலை -1:  பெண் கொசுக்கள் டெங்கு வைரஸ் பாதிக்கப்பட்ட‌ மனித உடலில் இருந்து இரத்த உணவை (blood meal) உறிஞ்சும் பொழுது அவை கொசுவின் வயிற்றுப் பகுதிக்கு செல்கிறது. அங்கு டெங்கு வைரஸ் 3-5 நாட்களுக்குள் நன்கு வளர்ச்சி பெற்று கொசுவின் எச்சில் சுரப்பிக்கு செல்கிறது  (இணைப்பு படத்தில் பார்க்க).

நிலை -2:  இப்போது டெங்கு வைரஸ் பாதிப்படைந்த ஏடிஎஸ் பெண் கொசு மற்றொரு மனிதரிடம் இருந்து இரத்த உணவைப் பெறும் போது டெங்கு வைரஸ் அம்மனிதரின் இரத்ததில் கலக்கிறது.

இரண்டு நிலைகளும் இன்னும் எளிதாக புரிய‌ இப்போது இன்னும் இரண்டு சிறிய கேள்விகளை பார்த்து விடுவோம்.

குட்டிக் கேள்வி 1: கொசு முதலில் பாதிக்கப்பட்ட மனிதரிடம் இருந்து எடுத்த இரத்தத்தை இன்னொரு மனிதருக்கு கடிக்கும் போது செலுத்துகிறதா?
குட்டிக் கேள்வி 2: பெண் கொசு வாயிலாக மட்டுமே டெங்கு வைரஸ் பரவுகிறது, ஆண் கொசு வாயிலாக ஏன் பரவுவதில்லை.

இரண்டு குட்டிக் கேள்விகளுக்கான விளக்கத்தினை ஒரே பதிலின் மூலம் புரிந்து கொள்ளலாம். பொதுவாக கொசுக்கள் (ஆண், பெண்) செடிகள், பழங்கள் மற்றும் கரும்பு போன்ற குளுக்கோஸ் உள்ள தாவரங்களில் இருந்து தங்களுக்கான ஆற்றலைப் பெறுகின்றன. ஆனால் இனப்பெருக்கத்திற்கான முட்டைகளை இடுவதற்கு பெண் கொசுக்களுக்கு மட்டும் மனித இரத்தம் தேவைப்படுகிறது. அவ்வாறு இரத்த உணவை மனிதர்களிடம் பெறும் போது மனிதர்களின் இரத்தம் உறையாமல் தங்கு தடையின்றி இரத்ததினை உறிஞ்சும் பொருட்டு கொசுக்கள் தங்கள் எச்சிலை கடிக்கும் இடத்தில் பரவச் செய்கிறது. இது மனிதர்களின் இரத்தம் உறையாமல் இருக்கச் செய்கிறது.  

நான் மேலே சொன்னது போல் பெண் கொசுவின் வயிற்றுப் பகுதியில் நன்கு வளர்ந்த டெங்கு வைரஸ் அதன் எச்சில் சுரப்பிகளைச் (Salivary glands) சென்றடையும் போது மனிதர்களின் இரத்ததினை உறையாமல் இருக்கச் செய்ய எச்சிலை பரவ விடும்போது இந்த டெங்கு வைரஸ் கிருமிகள், பாதிக்கப்படாதவரின் இரத்தத்தில் கலக்க ஆரம்பித்து விடும். பிறகு இது அம்மனிதரின் இரத்தத்தில் நன்கு பரவி, வளர்ந்து ஆளையே கொன்று விடும்.
ஆக, பாதிக்கப்பட்டவரை கொசு கடிக்கும் போது உடனே அது இறக்க வாய்ப்பில்லை, மாறாக அந்த இரத்தம் கொசுவின் வயிற்றிற்குள் சென்று நன்கு வளர்ந்து எச்சில் சுரப்பிகள் வழியாக தன் வேலையினை காட்டும்.

குட்டிக் கேள்வி 3: அப்படியானால், கொசுவின் சராசரி வாழ்நாள் எவ்வளவு?

கொசுவின் முட்டையில் இருந்து இரண்டு நாட்களில் நன்கு வளர்ந்த கொசுக்கள் தயாராகி விடும். இவை மூன்றில் இருந்து நான்கு வாரம் வரை வாழும் தன்மை உடையது. ஏடிஎஸ் பெண் கொசு ஒன்றரையில் இருந்து மூன்று வாரம் வரை வாழும். இந்த இடைவெளியில் நான்கு முறை முட்டை இடும். ஒவ்வொரு முறை முட்டை இடும் பொழுது குறைந்தது 50 ல் இருந்து 100 வரை முட்டைகள் இடும். டெங்கு வைரஸ் ஏடிஎஸ் கொசுவின் உள்ளே சென்று விட்டால் அதன் வாழ் நாளான 20 நாட்களுக்குள் இரத்த உணவினைப் பெறும் எல்லா மனிதர்களுக்கும் பரப்பும். ஏனெனில் நான்கு முறை முட்டை இட அவை மீண்டும் மீண்டும் மனிதர்களை கடிக்கும்.

உண்மை இவ்வாறு இருக்க, மனிதர்களைப் போல் ஏடிஎஸ் பெண் கொசுக்கள் பல வருடம் வாழ்ந்து, வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவுடன், விசம் என்று பாட்டிலில் எழுதப்பட்ட திரவத்தை குடித்து உடனே உயிரை விடும் என்றெல்லாம் ரீலர்கள் கற்பனை செய்து கொண்டு கட்டுக் கதைகளை பரப்புகிறார்கள்.

கொசுவின் வாழ்நாள் 3 வாரம் மட்டுமே. முக்கியமாக, டெங்கு வைரஸ் பாதிக்கப்பட்ட கொசுவின் உடலில் டெங்கு வைரஸ் 5 நாள் வரை நன்கு வளர்ந்த பிறகே அதன் எச்சில் சுரப்பிகளை அடையும். பிறகு அது பாதிப்படையாத மனிதரை கடிக்கும் போது டெங்கு வைரஸ் பரவும். 
இப்போது ஏடிஎஸ் பெண் கொசு ஏன் மனிதரை கடிக்கிறது, கொசுவின் வாயிலாக வைரஸ் எப்படி பரவுகிறது என்று புரிந்திருக்கும். இதே முறையில்தான் கொசுவின் வாயிலாக மலேரியா, சிக்கன் குனியா, ஜிகா வைரஸ்கள் மனித உடலுக்கு பரவுகிறது.


 ஆகவே “டெங்குவால் பாதிக்கப்பட்ட கொசுவே சாகவில்லை என்னும் போது மனிதர்கள் எப்படி இறப்பார்கள்” என்று சொல்லி ரீலர்கள் உங்களை மருத்துவமனைக்கு போகாமல் மூளைச் சலவை செய்தால் “அப்பாலே போ, மரண வியாபாரியே” என முகத்தில் அறைந்தது போல் சொல்லுங்கள்.கேள்வி 1: கொசுவின் மூலம் டெங்கு வைரஸ் மனிதருக்கு பரவுகிறது. அப்படி எனில் பாதிக்கப்பட்ட நபருக்கு முதன் முதலில் இந்த வைரஸ் எங்கிருந்து வருகிறது?

பதில்: வைரஸ் காய்ச்சல் என்பது பல நூறு வருடங்களாக மனிதர்களை தாக்கி வருகிறது. இது எதோ சில வருடங்களுக்கு முன்பு வந்ததைப் போல பலரும் புரிந்து வைத்திருக்கிறார்கள். இந்த அறியாமையைத்தான் ரீலர் கும்பல் பன்னாட்டு சதி, இலுமினாட்டி சதி என்ற மாயையினை மக்களிடம் அள்ளித் தெளிக்கிறார்கள்.
இன்றை நவீன விஞ்ஞான மருத்துவத் துறையில் இருக்கும் நவீன வசதிகள் (நுண்ணோக்கிகள், பகுப்பாய்வு வேதி முறைகள், நுணர்விகள்) அன்றைய கால கட்டத்தில் இல்லாததால் அதனை ஏறத்தாழ ‘மர்மக் காய்ச்சல்’ என்றே புழங்கி வந்துள்ளனர். இதற்கு நல்ல உதாரணமாக பல நூறு வருடங்களுக்கு முன்பே பல லட்சம் மக்களின் உயிரைப் பறித்த ‘பிளேக்’ நோயினைச் சொல்லலாம்.
மனித குல வரலாற்றில் வைரசின் தாக்குதலை வேறு வேறு கால கட்டத்தில் வேறு பெயர்களில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, மனிதர்களிடையே பூச்சிகளால் ஏற்படும் விசக் காய்ச்சலை சீன மருத்துவ என்சைக்ளோ பீடியாவில் (ஜின் பேரரசு 265 -420 கி.பி) விச நீர் (water poison) என்று குறிப்பிட்டுள்ளார்கள். பின்னர், 1780 களில் ஒரே கால கட்டத்தில் ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்காவில் டெங்குவின் தீவிர தாக்குதல் பரவியுள்ளது. இதனை 1789 ஆம் ஆண்டு பெஞ்சமின் ரஸ் (Benjamin Rush) என்பார் கண்டறிந்து இதற்கு ப்ரேக்போன் பீவர் (breakbone fever) என்று பெயரிட்டார்.
ஒவ்வொரு கால கட்டத்திலும் கிருமியியல் துறையில் பல ஆயிரம் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்களின் அயராத உழைப்பினால் டெங்கு காய்ச்சல் பற்றிய ஆராய்ச்சி வெகுவாக முன்னெடுக்கப்பட்டு அதனை கட்டுப்படுத்தும் வழி முறைகள் கண்டறியப்பட்டன.
ஆக, டெங்கு காய்ச்சல் என்பது முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்று சொல்லப்படும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வந்துள்ளது. ஆகவே இது சூழலியலில் இருந்து மனிதருக்கு பரவும் தொற்று நோயே.

Wednesday, 4 October 2017


நோபல் பரிசு 2017 வேதியியல் பிரிவு

2017 ஆம் ஆண்டு வேதியில் பிரிவிற்கான‌ நோபல் விருது "கிரையோ எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி மூலம் திரவத்தில்  (solution) இருக்கும் உயிரி மூலக்கூறுகளின் கட்டமைப்பினை தெளிவாக படம் பிடித்து விளக்கியமைக்கு  தரப்படுகிறது. நுண்ணோக்கியில் பெறப்பட்ட மூலக்கூறுகளின் அதிதெளிவான வடிவமைப்பு  படமானது புரோட்டீன்களின் கட்டமைப்பு எவ்வாறு உள்ளது என்பதை எளிதாக தெளிந்து கொள்ள உதவுகிறது.

இத்தகவல் உயிரி மூலக்கூறு நுட்பத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மூலக்கூறுகளின் (molecule) மீநுண் அளவிற்கும் (nano) கீழே, அணுக்களின் (atom) ஆம்ஸ்ட்ராங் (angstrom) அளவில் உள்ள‌ உயிரி மூலக்கூறுகளின் வடிவமைப்பினை முப்பரிமாண‌ (3-D) முறையில் தெளிவாக‌ அறிந்து கொள்வதன் மூலம் நோய்களை குணப்படுத்த புதிய மருந்துகளை வடிவமைக்கும் பணி எளிதாகிறது. உயிரிமருத்துவ துறையில் மிகப்பெரும் பங்கு வகிக்கும் இந்த ஆய்வினை கெளரவிக்கும் பொருட்டு இவ்விருது வழங்கப்படுகிறது.

பேராசிரியர். ஜேக்கஸ் டியுபொசெட் (லாசேன் பல்கலைக் கழகம், சுவிட்சர்லாந்து), பேராசிரியர் ஜோசிம் பிராங் (கொலம்பியா பல்கலைக் கழகம், அமெரிக்கா), பேராசிரியர் ரிச்சர்ட் ஹென்டர்சன் (கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகம், பிரித்தானியா) ஆகிய மூவரும் கூட்டாக இவ்வருட நோபல் விருதைப் பெறுகின்றனர்.

எலக்ரான் நுண்ணோக்கி 1931 ஆம் ஆண்டு முதன் முதலாக வடிவமைக்கப்பட்டது. இதனை ஒப்பிடும் போது ஏன் இந்த கிரையோ எலக்ரான் அதிநுண்ணோக்கி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது?

சாதாரண‌ எலக்ரான் நுண்ணோக்கியின் மூலம் உயிரி மூலக்கூறுகளை படம் பிடிப்பதில் பெரிய சவாலே அதில் உள்ள நீர் மூலக்கூறுகள்தான். ஆனால் திரவத்தில் இருக்கும் உயிரிகளின் கட்டமைப்பினை கிரையோ எலக்ரான் நுண்ணோக்கி (Cryo-electron microscopy)  மூலம் தெளிவாக‌ முப்பரிமாண‌ முறையில்  அறிய முடிவதால்   மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் எதிர் வரும் காலத்தில் மூலக்கூறுகளின் அளவினையும் தாண்டி அதற்கும் கீழே உள்ள உயிரிகளை இனம் கண்டு கொள்ள இந்த நுண்னோக்கிகள் நவீனத்துடன் வடிவமைக்கப்படலாம். 

அப்படி நடக்குமானால் இதற்கு வானமே எல்லையாக அமையும்.

முனைவர் சுதாகர் பிச்சைமுத்து
சுவான்சி பல்கலைக் கழகம்

04/10/2017


Monday, 2 October 2017

நோபல் பரிசு 2017 ஆம் ஆண்டு உடலியல் மற்றும் மருத்துவப் பிரிவு

 2017 ஆம் ஆண்டிற்கான உடலியல் மற்றும் மருத்துவ பிரிவிற்கான (Physiology and Medicine) நோபல் பரிசினை ஜெப்ரி ஹால் (மைன் பல்கலைக் கழகம், அமெரிக்கா), மைக்கேல் ரோபஸ் (பிரன்டைஸ் பல்கலைக் கழகம் மற்றும் ஹாவர்டு கியூக்ஸ் மருத்துவ நிறுவனம், அமெரிக்கா), மைக்கேல் யங் (ராக் பெல்லர் பல்கலைக் கழகம், அமெரிக்கா) ஆகிய மூவரும் கூட்டாக பெருகின்றனர்.

மனிதர்கள், தாவரம், விலங்குகள்,  பூஞ்சைகள் இவற்றில் நடைபெறும் உடல் கடிகாரம்  (body clock) அல்லது சர்கேடியன் ரிதம் (circadian rhythm) என்ற நிகழ்வினை  மூலக்கூறு இயங்கியல் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்ற நிரூபணத்திற்க்காக இவ்விருது இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவர்களது சோதனை முடிவுகள்  நம் உடல் கடிகாரம் எவ்வாறு புவியின் சுழற்சிக்கு தக்கவாறு ஒத்திசைவாக ஒன்றிப் போகிறது என்ற விடையினை தந்துள்ளது. எளிய வார்த்தைகளில் சொல்வதென்றால், நாம் எந்த நேரத்தில் இரவில் உறங்கினாலும் காலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு தன்னிச்சையாகவே எழுந்து கொள்கிறோம். இவை நம் உடலுக்குள் உயிரணுக்களில் நடைபெறும் வேதி வினைகளின் விளைவே. மேலும் உடல் கடிகாரமானது நம் சுற்றுப்புற சூழலில் இருக்கும் வெளிச்சம், தட்பவெப்பநிலை இவற்றிற்கு தகுந்தவாறு நம் உடலின் இரத்த அழுத்தத்தினை மாற்றுவதோடு, நாம் உறங்க தேவையான மெலனைன் என்னும் ஹார்மோன்களை சரியான முறையில் சுரக்கவும் உதவுகிறது.  இது சொல்வதற்கு எளிதாக இருந்தாலும், இந்த விடையினை சோதனைகள் மூலம் கண்டுபிடித்து நிரூபணம் செய்வது என்பது அவ்வளவு எளிதல்ல.

இந்த உடல் கடிகாரம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல தாவரங்களுக்கும் இன்ன பிற உயிரினங்களிலும் நடைபெறுகிறது என்ற உண்மையினை  18 ஆம்  நூற்றாண்டில் ஜீன் ஜேக்கஸ் டி ஆர்தஸ் தெ மெய்ரன் (Jean Jacques d’Ortous de Mairan) என்ற வானவியல் அறிஞர் முதன்முதலில் கண்டறிந்தார். இவர் தொட்டாச் சிணுங்கி செடியின் (mimosa plant) இலைகளானது பகலில் சூரிய ஒளியில் விரிவடைந்தும், இரவில் சுருங்கியும் கொள்கிறது. இந்த தொடர் நிகழ்ச்சியினை ஒரு இருட்டு அறையில் வைத்து சோதனை நடத்திய போது குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வெளிச்சம் இல்லாத போதும் அதன் இலைகள் விரிவடைந்து கொள்கின்றன. இவ்வாறு புவி சூழலுக்கு தகுந்தவாறு தாவரம் எவ்வாறு ஒரு நிகழ்வை தொடர்ச்சியாக நடத்துகிறது என்ற கேள்வி அறிவியலாளர்களுக்கு பெரிய சவலாக இருந்தது. இவற்றிற்கான விடையினை இவ்வருட நோபல் பரிசாளர்கள்  கண்டுபிடித்து தந்துள்ளனர்.ஏன் இந்த சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது?
நம் உடலில் இயங்கும் உடல் கடிகாரமானது மனிதர்களின் உறக்கம், உணவு உண்ணுதல், ஹார்மோன்கள் சுரப்பு, சீரான இரத்த அழுத்தம் போன்றவற்றினை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.   உயிரணு, செல், மற்றும் திசுக்களில் நடைபெறும் மிக நுண்ணிய சர்கேடியன் ஒத்திசைவு விளைவானது எவ்வாறு மனித உடலில் சிதைவு நோய்கள், வளர்சிதை மாற்றத்தின் மூலம் ஏற்படும் நோய்கள், வீக்கம் போன்றவறில் பங்காற்றுகிறது என்பதனை நோபல் பரிசாளர்களின் சோதனைகள்  விளக்குகிறது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் குரோனோ உயிரியல் மற்றும் மருந்தியல் துறைகளில் சர்கேடியன் ஒத்திசைவின் கால இடைவெளி, முடுக்கம், இவற்றினை மாற்றி அமைத்து மனித உடல் நலத்தை  முன்னேற்றுவதற்கான புதிய தடங்கள்   இனி வரும் நாட்களில் அமைக்கப்படும்.  சர்கேடியன் கடிகாரம் நம் உடலின் இயக்கத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் (Courtesy: Nobelprize.org)


குறிப்பு:
உடல் கடிகாரம் என்றவுடன் பெரிதாக குழப்பிக் கொள்ள வேண்டாம். ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பல மணி நேரம் விமானப் பயணம் சென்று  இறங்கிய பின்   நம் உடலானது  புதிய சூழலுக்கு உடனே மாறாமல், புறப்பட்ட நாட்டின்  நேரப்படியே இயங்கிக் கொண்டிருக்கும். இதனால் சரியாக உறங்க முடியாது, இந்த சிக்கலை ஜெட் லாக் என்று அழைப்பர். இந்த சிக்கல் யாவும் நம் உடல் கடிகாரத்தில் ஏற்படும் மாற்றமே.   
Tuesday, 26 September 2017

தமிழக வீடுகளின் மின் இணைப்பு வசதி ‍ - திராவிடத்தால் வாழ்ந்தோம்


இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் மின் இணைப்பு வசதியை பெற்றுத் தர‌ "சௌபாக்யா யோஜனா" என்ற திட்டத்தை இன்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நிற்க!
தமிழகத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்புறகளில் மின் வசதியினை இணைக்கும் பணி தொடங்கப்பட்டது. தொடர்ச்சியாக திராவிட ஆட்சிகளில் முன்னெடுக்கப்பட்ட மின் கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகளால் தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கான மின் இணைப்பு விகிதம் புள்ளிவிபரப்படி
2001 ஆம் ஆண்டு - ‍ 78.2%
2007 ஆம் ஆண்டு - 93.4%
2017 ஆம் ஆண்டு - 98.3%
இவை எல்லாம் இந்தியே தெரியாத தமிழக ஆட்சியாளர்களால்தான் சாத்தியமானது என யோசிக்கும் போது மொழியின் பெயரால் சல்லியடிக்கும் பொய்யர்களின் முகத்திரை தற்போது கிழிந்துள்ளது.
பெரியார், அண்ணா பெயரால் சமூக திட்டங்கள் தமிழகத்தில் வரும் போதெல்லாம் இலவசத்தால் தமிழகம் சீரழிகிறது என ஒப்பாரி வைக்கும் கூட்டத்திற்கு இப்போது மோடியின் யோஜனா அறிவிப்புகள் மயிர் கூச்செறிய வைக்கிறது.
இந்தியை தாய்மொழியாக அல்லது அலுவல் மொழியாக‌ கொண்ட மாநிலங்களில் வீடுகளுக்கு தரப்பட்டுள்ள மின் இணைப்பு வசதியின் விகிதம் 2017 ஆம் ஆண்டு புள்ளி விபரப்படி,
பீகார் 58.6%
உத்திர பிரதேசம் 70.9%
மத்திய பிரதேசம் 89.9%
அரியனா 91.7%
ஜார்கண்ட் 80.1%
மகாராஸ்ட்ரா 92.5%
ராஜஸ்தான் 91%
உத்திரகான்ட் 97.5%
2017 ஆம் ஆண்டில் மோடி சொல்வதை 35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் தொடங்கியதன் விளைவு இன்று 98.3% மின் இணைப்பு வசதியினை தமிழகம் பெற்றுள்ளது.
இந்தியை தாய்மொழியாக, அலுவல் மொழியாக கொண்ட மாநிலங்களை விடவும் இந்தி மொழியே தெரியாத‌ தமிழகத்தின் வீடுகள் மின் இணைப்பினைப் பொறுத்த வரை அதிக தன்னிறைவை அடைந்துள்ளது. ஆகையால் இந்தி படித்தால் வடக்கே வேலை கிடைக்கும் என்ற பொய்யுரைகளை வழி மொழியும் கூட்டத்திடம் இருந்து விலகி நில்லுங்கள்.
இந்தியாவின் "செளபாக்யா யோஜனா" போன்ற‌ தன்னிறைவு தேடும் திட்டங்களுக்கு நிரூபணம் செய்யப்பட்ட தமிழகம் எப்போதுமே முன் மாதிரிதான். அந்த வகையில் தமிழர்கள் உங்கள் முதுகில் நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள்.தமிழ் ஒன் இந்தியா இணைய இதழில் பிரசுரிக்கப்பட்ட இக்கட்டுரையின் சுட்டி


Sunday, 17 September 2017

புதிய இந்தியா பிறக்கிறது


இந்தியா ஒளிர்கிறது, புதிய இந்தியா பிறக்கிறது, அடுத்த வல்லரசு நாம்தான் இப்படி ஜிகால்ட்டி வார்த்தைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தியாவில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

விளைவு, பொது வெளியில் எப்படி அற ஒழுக்கத்தோடு நடந்து கொள்வது என்ற அடிப்படை அறிவே இல்லாத மொன்னைச் சமூகத்தை, நாம் எப்படி வளர்த்து வைத்திருக்கிறோம் என்று தெரிகிறது.

ஒவ்வொரு முறை நான் இந்தியா வரும் போதும் இம்சையாய் கருதுவது வரிசையில் நிற்காமல் குறுக்கே போகும் முரட்டு எருமை எப்படி கையாள்வது என்பதே.டில்லி விமான நிலையத்தில் ஒரு உணவக விடுதியில் சாப்பாடு வாங்க பணம் கொடுக்க நின்று கொண்டு இருந்தேன். நான் ஒருவன் மட்டுமே நின்றுக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு பின்னால் ஒரு நிமிடம் கூட நிற்கும் பொறுமை இல்லாமல், நான் பேசிக்கொண்டு இருக்கும் போதே கல்லாவில் இருப்பவரிடம் நேராக பணத்தை நீட்டி அவருக்கு உணவை கொடுக்கச் சொல்லி கேட்டார். நான் ஒருவன் அங்கு நிற்பதையே அவர் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

அட எருமை மாடே என காதில் ஒரு அறை விடும் அளவிற்கு கோபம் வந்தது.

அதே போல் லிப்ட் வாசலை அடைத்துக் கொண்டு உள்ளே இருந்து வெளியே வருபவனை தள்ளிக் கொண்டு ஏறுவது, வாகன டோல்கேட்டில் வரிசையாக நிற்கும் வாகனங்களுக்கு இடையில் உள்ளே புகுவது என இந்த எச்சத்தனம் நீண்டு கொண்டே போகும்.

முதலில் நாம் குடிமை ஒழுக்கத்தைச் சொல்லித் தர வேண்டும்.


http://vanakamindia.com/india-to-teach-civic-literacy/

Tuesday, 5 September 2017

நீட் யாருக்கான நுழைவுத் தேர்வு ‍-4 (நெருப்பில் வீழந்த மலர்கள்)

இரண்டு மாதங்களுக்கு முன்பு அண்ணன் சிவசங்கர் எஸ்.எஸ்அவர்கள் மூலமாக அரியலூரில் இருந்து வெளி உலகிற்கு தெரியவந்தவர் அனிதா.
அனிதா, கடந்த வருடம் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண்ணும், மருத்துவ படிப்பிற்காக தமிழக அரசின் வரையறைப்படி 196.75 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்தும் மத்திய, மாநில அரசின் நீட் நுழைவுத் தேர்வால் மருத்துவ கனவு பலிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட சிவ சங்கர் அண்ணன் இம்மாணவியின் உயர்கல்விக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையினை நண்பர்களிடையே வைத்திருந்தார். நிச்சயம் அவரை மருத்துவர் ஆக்குவோம் அண்ணா என்று சொல்லி வந்த நிலையில் அனிதாவின் மரணச் செய்தி இன்று வந்தடைந்துள்ளது.
இந்தச் செய்தி பொய்யாய் இருக்க வேண்டும் என்று மனம் ஆற்றாமையால் தவிக்கிறது.
பல்லாயிரக் கணக்கான மக்களை மருத்துவராகி காக்க வேண்டியவள், இன்று நம் அலட்சியத்தால் பலியாகி நிற்கிறாள்.
இப்படி எத்தனை அனிதாக்கள், தங்கள் மருத்துவர் கனவு நிறைவேறுமா என்று கடந்த சில மாதங்களாக நடைபிணமாய் தமிழகத்தை சுற்றி வருகிறார்கள் என்று உங்கள் மனக் கதவை திறந்து பாருங்கள்.
"நீட் நுழைவுத் தேர்வு யாருக்கானது" என்று தொடர்ந்து எனது முகநூல் பக்கத்தில் எழுதி வந்தேன். கடை விரித்தேன் கொள்வாரில்லை என்பது போல எல்லோருமே மெளனம் காத்தனர். இதோ எதிர்பார்த்த அந்த விபரீதம் நிகழ்ந்து விட்டது.
வறுமையிலும் கல்வியில் வெற்றி பெற்ற மாணவர்களை துரத்தி துரத்தி வேட்டையாடிய எல்லா கல்வியாளர்களுக்கும் அனிதா தன் உயிரையே பதிலாய் தந்து விட்டு போய் இருக்கிறாள்.
ஏழை மாணவர்களுக்கு படிப்பெதற்கு என்ற வார்த்தைகள் மலையேறிப் போய், ஏழை மாணவர்கள் ஏன் உயிருடன் இருக்க வேண்டும் என்ற கோசத்தையும் நீட் நுழைவுத் தேர்வுகள் சமூகத்தின் முன் வைத்துள்ளது.
நீட் நுழைவுத் தேர்வு தமிழக மாணவர்களின் மருத்துவ கனவில் மண்ணை அள்ளி மட்டும் போடவில்லை. வறுமையான சூழலிலும் கிராமப்புறத்தில் இருந்து முதல் தலைமுறையாக போராடி அதிக மதிப்பெண்கள் பெற்ற அனிதா போன்ற மாணவக் கண்மனிகளின் உயிரையும் எடுக்கத் துவங்கி விட்டது.
லட்சக் கணக்கில் செலவு செய்து பயிலும் வாய்ப்பை மேட்டுக் குடிகளின் பிள்ளைகளுக்கு வழங்கி விட்டு, ஊருக்கு உபதேசம் செய்கிற எல்லோர் கைகளிலும் அனிதாவின் மரணத்திற்கான கொலைப் பழி விழட்டும்.
உங்களின் கள்ள மெளனம்தான் எல்லா அட்டூழியத்திற்குமான திறவு கோல் என்பதை இனியாவது உணருங்கள்.
தமிழக மாணவர்களின் மருத்துவ கனவிற்கு ஒரு அனிதாவின் உயிரை விலையாய் தந்தது போதும், உடனடியாக நீட் நுழைவுத்தேர்வினை தமிழகத்தில் விலக்க கோரி மத்திய அரசிற்கு தமிழக மக்கள் தங்கள் போராட்டத்தின் மூலம் அழுத்தம் தர வேண்டும்.
எம்மை துயரத்தில் ஆழ்த்திச் சென்ற சகோதரி அனிதாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
நம் குழந்தைகளின் உயிரை பறிக்கும் இந்த நுழைவுத் தேர்வுகள் அவசியம்தானா?
இனியாவது உங்கள் மெளனத்தை கலையுங்கள்.

இப்பதிவினை பிரசுரித்த வணக்கம் இந்தியா மின் இதழுக்கு நன்றி.


Friday, 21 July 2017

கனவு மெய்ப்படும்

பெரிய போக்குவரத்து வசதி இல்லாத குக்கிராமத்தில் இருந்து நெடிய போராட்டத்திற்கு பிறகே இந்த இடத்திற்கு நான் வந்துள்ளேன்.
தற்போது, பிரித்தானியாவில் உள்ள சுவான்சி பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்லூரி புலத்தில் (College of Engineering) "பல் செயல்பாட்டு மீநுண் அளவிலான‌ வினையூக்கிகள் மற்றும் அதன் பூச்சுகள்" (Multifunctional Nanoscale Catalyst & Coatings) என்ற ஆய்வுக் குழுவைத் தொடங்கியுள்ளேன் என்பதை நண்பர்களுடன் மகிழ்ச்சியாக‌ பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த வருடத்திற்குள் பிஎச்டி மாணவர்கள், வருகை தரு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முது முனைவர்களை எனது ஆய்வுக் குழுவிற்கு தெரிவு செய்ய உள்ளேன். வாய்ப்புகள் குறித்த செய்திகளை எனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து பகிர்கிறேன்.
நான் கிளம்பி வந்த இடத்தை திரும்பிப் பார்க்கும் போது இன்னும் அங்கேயே தங்கி விட்டவர்களையும்,என் பால் அன்பு காட்டி என் முன்னேற்றத்தினை ஆசிர்வாதித்த அத்தனை உறவுகளையும் நட்பு வட்டத்தையும் நன்றியோடு நினைவு கூறுகிறேன். என் பலமே நண்பர்களும், ஆசிரியர்களும்தான். அவர்களின் வெற்றியாகவே நான் இங்கே நிற்கிறேன்.
எங்கள் கிராமத்திற்கு விவசாயம் தான் ஆதாரப்புள்ளியே. காவிரி நதியில் இருந்து 4 கிமீ தொலைவில் இருந்தாலும் நீர் பாய்வதற்கு ஏதுவாக இல்லாத வாய்க்காலை உடைய கடைமடை பாசானம் பெறும் சூழலில் தான் எங்கள் ஊர் இருந்தது. இருபது ஆண்டுகளில் பயிர்களை காப்பாற்ற இயலாமல் பல குடும்பங்கள் விவசாயத்தில் இருந்து படிப்படியாக எங்கள் கிராமத்தில் இருந்து வெளியேறியது.
அப்படி விவசாயத்தில் இருந்து வெளியேறிய நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு அக்குடும்பத்தில் இருந்த பிள்ளைகளின் கல்விதான் கை கொடுத்தது. அப்படி ஒரு சூழலில் இருந்து வெளியே கிடைத்த வாய்ப்பை பிடித்து மேலே ஏறி வந்தவர்களில் நானும் ஒருவன்.
பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இனத்தவர் வசிக்கும் எங்கள் கிராமத்தில் திராவிட அரசுகள் கொண்டு வந்த இட ஒதுக்கீடுதான் எங்களை கரையேற்றியது. இந்த தருணத்தில் சமூக நீதிக்காக உழைத்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா என்ற இரண்டு பேரரக்கர்களுக்கும் இன்ன பிற ஆளுமைகளுக்கும் என் வெற்றியை சமர்பிக்கிறேன்.
எங்கள் கிராமத்தைப் பொறுத்த வரை நாப்பது ஆண்டுகளுக்கு முன்பு கடந்த தலைமுறையினர் பெற்ற கல்வி, வேலை வாய்ப்பை விட அவர்களின் பிள்ளைகளுக்கு வலுவான கல்வியியும், வேலை வாய்ப்பும் தற்போது கிடைக்க துவங்கியுள்ளது. இந்த வாய்ப்பு இல்லாவிட்டால் எங்கள் கிராமத்தின் கதி என்னவாக ஆகி இருக்கும் என தெரியவில்லை.
சொல்ல முடியாத துயரங்களிலும் அவர்களின் பிள்ளைகளுக்கு நம்பி கல்வியை கொடுத்ததால்தான் இன்று நாங்கள் வெளியே வந்துள்ளோம். சிலர் பிச்சை புகினும் கற்கை நன்றே என்று கல்வியை கடினப்பட்டுதான் அடைந்தார்கள்.
எந்த தங்கத் தட்டிலும் எங்களுக்கான வெற்றிக் கனி வைத்து தரப்படவில்லை. ஆனால், இன்றைக்கு எங்கள் கிராமத்தில் பொறியாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர், வழக்கறிஞர், ஆராய்ச்சியாளர், வெளிநாட்டில் பணி புரிவோர் என முதல் தலைமுறையாக கல்வியைப் பெற்ற கூட்டம் வெளி உலகின் வெளிச்சத்தை பார்த்திருக்கிறது. இவர்களின் உயரத்தையும், வளர்ச்சியையும் கூட எங்கள் கிராமத்தில் உள்ள பெற்றோர்களால் புரிந்து கொள்ள முடியாது. அந்த அளவிற்குத்தான் அவர்களின் கல்வி இருந்தது. ஆனால் அவர்களைப் பொறுத்த வரை அவர்கள் பட்ட துன்பம் இந்த தலைமுறை பிள்ளைகளுக்கு இருக்காது என்ற மகிழ்ச்சியே.
பாட்டனார் ‍ விவசாயி (கைநாட்டு)
தந்தையார் விவசாயி (பியூசி)
மகன் ஆராய்ச்சியாளர் (பி.எச்.டி)
வாழ்க திராவிடம்

எனக்கு பிறகும் எங்கள் கிராமத்தில் இன்னும் பல நூறு ஆராய்ச்சியாளர்கள் இட ஒதுக்கீட்டு வாய்ப்பின் மூலம் மேலே ஏறி வருவார்கள். அவர்களின் நம்பிக்கையாக என் பயணத்தை இங்கே தொடர்கிறேன். இட ஒதுக்கீட்டு வசதி மூலம் கல்வி பெற்று சாதிப்பவர்களுக்கு அறிவு இல்லை என்னும் கூட்டத்தை எங்கள் அறிவாலும், சாதனைகளாலும் திருப்பி அடிப்போம்.
உங்களின் அன்பும், ஆசிர்வாதமும் எப்போதும் எம்மை வழிநடத்தும் என நம்புகிறேன்.
முனைவர் சுதாகர் பிச்சைமுத்து
சுவான்சி பல்கலைக் கழகம்
வேல்ஸ், பிரித்தானியா.

இச்செய்தி குறித்து வணக்கம் இந்தியா மின் இதழில் வெளி வந்த கட்டுரை.


Standing in front of Great Hall, Swansea University (Bay Campus)


Monday, 10 July 2017

வெகுசன அறிவியல் -2 

(‍மக்கள் கூடும் சந்தையில் அறிவியல் சோதனைகள்) – Soapbox Science

கடந்த 25 ஆண்டுகளில் பொது மக்களின் அன்றாட வாழ்வில் மருத்துவம், வீட்டு பொருட்கள் உபயோகம், பயணம், சமையல், உணவுப் பொருட்களை பதப்படுத்துதல், விவசாயம், தகவல் தொடர்பு, கற்றல், பருவ நிலை கணிப்பு என ஒவ்வொரு துறையிலும் உள்ள‌ சிரமங்களை அறிவியல் நுட்ப வளர்ச்சியானது பெருமளவு எளிதாக்கியுள்ளது.

ஆனால் இத்தையக நுட்பங்கள் எப்படி கண்டுபிடிக்கப்படுகிறது, குறிப்பாக‌ ஆராய்ச்சி நிறுவனங்களில் இது சார்ந்த ஆய்வுப் பணிகளை எப்படி செய்கிறார்கள்? இவற்றில் உள்ள அடிப்படை அறிவியல் என்ன என்றெல்லாம் பொது மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

பெரும்பாலும் பொதுமக்களுக்கும் நுட்பங்களுக்கும் உள்ள தொடர்பு என்பது சந்தையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துதலோடு மட்டுமே உள்ளது. அப்படியானால் வளரும் இளம் தலை முறைக்கு எப்படி இந்த அறிவியல் நுட்ப அறிவை கொண்டு செல்வது? இனி எதிர்காலத்தில் நம்க்கு வரப்போகும் தலைமுறைகள் எதிர் நோக்கும் சவால்கள் என்ன என்றெல்லாம் விவாதிப்பதற்கு பொது மக்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்குமான ஒரு தொடர்பு புள்ளி என்பது ஒரு முக்கியமான தேவையாகவே உள்ளது. ஆகவே அது சார்ந்த ஒரு தளத்தினை ஏற்படுத்துவது குறித்து நம் இந்திய சூழலில் நாம் யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இந்த சிக்கலைத் தீர்க்க பிரித்தானியாவில் ஒவ்வொரு நகரிலும் மக்கள் அதிகமாக‌ கூடும் சந்தைகளில், அந்தந்த நகரில் உள்ள‌ பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் அறிவியலாளர்களைக் கொண்டு  திறந்த வெளியில் எளிமையாக, செய்முறை விளக்கத்தோடு அறிவியல் நுட்பத்தை விளக்குகிறார்கள். இந்நிகழ்வின் பெயர் சோப்பாக்ஸ் சயின்ஸ் (Soapbox Sceicne). சோப்பு நுரைக் குமிழிகளை காற்றில் ஊதும் போது எப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அது ஈர்க்கிறதோ அது போல எளிய அறிவியல் சோதனைகள் மூலம் மக்களை ஈர்க்க முயற்ச்சிக்கிறார்கள்.

குறிப்பாக இந்நிகழ்வை முழுக்க முழுக்க‌ பெண் ஆராய்ச்சியாளர்கள் முன்நின்று நடத்துவதுதான் இந்நிகழ்வின் தனிச்சிறப்பே. இதன் மூலம் பாலின பாகுபாட்டில் (Gender inequality) பெண்களுக்கான தடையினை உடைத்து அறிவியல் துறையின் தூதராக‌ ஒரு பெண் ஆற்றல் பெருக்கோடு வருவதை இளம் தலைமுறையினர் ஒரு முன்னுதாரணமாக கொள்வதற்கான வாய்ப்பை இந்நிகழ்வு ஏற்படுத்தி தருகிறது.

இந்நிகழ்வு எப்போது, யாரால், எப்படி துவங்கபப்ட்டது?
இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரில் ஹைடு பூங்கா (Hyde park) உள்ளது. இப்பூங்காவில் பொது மக்கள் தங்களுக்கு விருப்பப்படும் துறைகளில் மற்றவர்களோடு திறந்த வெளியில் உரையாட முடியும். இதற்காக அப்பூங்காவில் “ஸ்பீக்கர் கார்னர்” என்னும் பகுதியினை ஏற்படுத்தி வைத்துள்ளனர். வழமையாக கல்வி நிறுவனங்களில் மாணவர்களோடு உரையாடுவதற்கு ஆசிரியர்கள் பயன்படுத்தும் போர்டு, பவர் பாயின்ட், திரை, என எந்த வசதியும் இல்லாமல் செறிவு மிக்க தங்கள் உரையின் மூலம் நேரடியாக மக்களோடு இப்பூங்காவில் உரையாடுகிறார்கள்.

இந்த “ஸ்பீக்கர் கார்னர்” முறையினை கையாண்டு ஏன் அறிவியல் நுட்பத்தை பொது மக்களுக்கு எளிய முறையில் ஏன் விளக்கி சொல்ல முடியாது என்று யோசித்ததன் விளைவே “சோப்பாக்ஸ் சயின்ஸ்” நிகழ்வு.

யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் லண்டனின் பணிபுரியும் முனைவர் செய்ரியன் சம்மர் (Dr Seirian Sumner) மற்றும் விலங்கியல் நிறுவனத்தில் பணிபுரியும் முனைவர் நாதெல்லி பெட்ரொல்லி (Dr Nathalie Pettorelli) என்ற இரண்டு பெண் அறிவியலாளர்களும் கூட்டாக இணைந்து தங்கள் கண்டுபிடிப்புகளை மக்கள் முன்பு வைத்து திறந்த வெளியில்  உரையாடுவதற்கான தளத்தை “சோப்பாக்ஸ் சயின்ஸ்” என்னும் பெயரில் ஏற்படுத்தினார்கள்.  

இந்நிகழ்ச்சியின் மூலம் STEM என்றழைக்கப்படும் அறிவியல், நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளில் பணியாற்றும் பெண் ஆராய்ச்சியாளர்கள் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை பொது மக்கள் முன்பு விளக்குவார்கள். இந்த இருவரது முயற்சியால் இன்று பிரித்தானியாவின் பல முக்கிய நகரங்களில் இந்நிகழ்ச்சியினை ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் முன்னின்று நடத்தி வருகின்றனர். இவர்களது பணியை மேனாள் பிரித்தானியாவின் பிரதமர் கேமரூன் இவர்களுக்கு “பாயின்ட் ஆப் லைட்” (Points of Light) என்னும் விருதினை தந்து கெளரவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று வேல்சு தேசத்தில் உள்ள சுவான்சி நகரில் உள்ள நகர் மன்ற பகுதியில் சோப்பாக்ஸ் சயின்ஸ் நிகழ்வை சுவான்சி பல்கலைக் கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் நடத்தினார்கள்.

இந்நிகழ்வில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்  ஆர்வமாக கலந்து கொண்டனர். தெருவில் ஒரு சிறு மர மேடை அமைத்து அதன் மீது வெள்ளை நிறத்தில் ஆய்வக கோட்டை மாட்டிக் கொண்டு பெண் ஆராய்ச்சியாளர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை அதன் அடிப்படையோடு, சிறிய மாடல், வரைபடம், பொம்மைகள் இவற்றைக் கொண்டு நேரிடையாக விளக்கினர்.

நம் மூளை  வயதாகும் போது என்ன ஆகும்? மூளையின் செயல்பாடுகள் என்ன? டிமன்சியா என்னும் மறதி நோய் எவ்வாறு ஏற்படுகிறது என்பதனை அருமையான வண்ணப்படங்களோடு விளக்கினர். இதற்காக மூளை படத்தினை வரைந்து நமக்கு ஏற்படும் உணர்வுகளை தனித் தனி அட்டைகளில் எழுதி பொது மக்களையே தேர்ந்தெடுக்க வைத்தனர். உதாரணத்திற்கு மகிழ்ச்சி, கவலை, சிந்தனை, பாடல் என ஒவ்வொரு நிகழ்வையும் நமது மூளை எந்த பகுதியில் செயலாற்றும் என விளையாட்டு மூலம் விளக்கினர்.

மின் திரைகளில் எப்படி வன்ணம் உருவாகுகிறது. இந்த கருவிகளில் உள்ள நெகிழ் தன்மை (Flexible surface) உடைய பரப்பில் எப்படி மெல்லிய ஏடுகளாக மின்சுற்றுகளை ( thin film electrical circuit) அச்சடித்தல் (printing) முறையில் தயாரிக்கிறார்கள் என்பதை SPECIFIC என்ற ஆய்வு மையத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் நேரிடையாக சோதனை மூலம் விளக்கினர். ஸ்கீர்ன் பிரின்டிங் முறையில் மின் சுற்றுகளை தயாரிக்க அதற்கான இங்க், பெயின்ட்டுகள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதையும் நேரடியாக விளக்கினர்.

தேனீக்களின் பெட்டிகளை நேரடியாக கொண்டு வந்து அவை எவ்வாறு தேனை வெளியில் இருந்து சேகரித்து வந்து பெட்டியில் கூட்டில் தேனை சேமிக்கிறது என அருமையாக விளக்கிச் சொன்னார்கள்.

கோடை காலத்தில் ஒரு கட்டிடத்தின் உள்ளே எப்படி  குளிர்ச்சியாகவும், அதே நேரம் குளிர் காலத்தில் அதே கட்டிடம் எப்படி உள்ளிருக்கும் சூட்டை வெளியே விடாமல் வெதுவெதுப்பாக வைத்திருக்கிறது (solar thermal systems) என்பதை மிக அருமையாக விளக்கி காட்டினார்கள்.

நவீன நுட்ப வளர்ச்சியில் கம்பியில்லா (Wireless) தொலைதொடர்பில் எப்படி இணையத்தில் தகவலை பெறமுடிகிறது என விளக்கி புரிய வைத்தார்கள்.  அங்கு வைக்கப்பட்டு இருந்த வாழைப்பழத்தினை கொண்டு செய்யப்பட்ட பியானோ போன்ற இசை எழுப்பும் கருவி குழந்தைகளை மிகவும் குதூகலப்படுத்தியது.

நம் உடலில் உள்ள மரபணு மூலக்கூறுகள் எப்படி இருக்கும் என்பதை எளிய மாடல் விளையாட்டு மூலம் குழந்தைகளுக்கும் பெரியவர்களும் தெளிவாக புரியும் படி விளக்கி காட்டினார்கள். இந்நிகழ்வில் வைக்கப்பட்டு இருந்த மிட்டாய்களை குச்சியால் இணைத்து குழந்தைகள் விளையாடினர். இந்த மிட்டாய் பொம்மை மூலம் மரபணு எப்படி இருக்கும் என்று விளக்கி சொன்னதும் குழந்தைகளுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. இந்த சோதனை மூலம் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தினை கொண்டு நம் மரபணு மூலக்கூறுகளில் ஏற்படும் முறிவை அல்லது சேதத்தினை சரி செய்வது என்று எளிதாக புரியும் சொன்னது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது.

இப்படி 12 விதமான‌ அறிவியல் நுட்ப சோதனைகளை தனித்தனியாக‌ 30 நிமிடத்திற்கு விளக்கினர். ஒருவர் மேடையில் பேசும் போது இரண்டு தன்னார்வலர்கள் அவருக்கு உதவியாக இருந்தனர். சில தன்னார்வலர்கள் பொது மக்களிடையே  படிவத்தை தந்து இந்த சோதனைகளில் இருந்து எத்தையக அறிவியலை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்று கருத்துகளை கேட்டு தொகுத்து கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு நிகழ்விலும் சோப்பு நுரைக் குமிழிகளை ஊதியபடியே இருந்தனர். அவை வானில் சின்ன சின்னதாய் பறந்த படியே இருந்தது. பறந்து கொண்டிருந்த ஒவ்வொரு குமிழும் பெண் கல்வி, நிரூபணங்களை நோக்கிய அறிவியல், நுட்பத்தினால் சமூகத்திற்கு ஏற்படும் மேம்பாடு, குழந்தைகளின் கற்பனை என்று வேறு வேறு நம்பிக்கைகளை நமக்கு சொல்வதாய் இருந்தது.
பிரித்தானியாவில் துவங்கிய இந்த வெகுசன அறிவியல் முன்னெடுப்பு உலகமெங்கும் பரவி பெண் கல்வியில் நிச்சயம் மேம்பாட்டினை ஏற்படுத்தும் என திடமாக நம்புகிறேன்.


இது போன்ற திறந்த வெளி அறிவியல் நுட்ப உரையாடலை தமிழக சூழலில் நிச்சயம் முன்னெடுக்கலாம். Sunday, 9 July 2017

மொழி என்னும் பெருவரம்-2 மொழி பரிமாற்றக் கருவிகள் (Language translators)

இன்று சந்தையில் கிடைக்கும் எலக்ரானிக் கருவிகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் அதிகம் விற்க வேண்டியது மொழி பரிமாற்று கருவிகள்தான் (Language translators).

ஏனெனில் இந்தியாவில் அரசு அலுவல் மொழியாகவே 22 மொழிகள் உள்ளது. ஏறத்தாழ 130 கோடி மக்கள் உள்ள இந்திய தேசத்தில் மொழி சார்ந்து மிகப்பெரிய வணிக சந்தையே உள்ளது.ஆனால் இந்த மொழிகளை ஒவ்வொரு மாநிலத்தவரும் எளிதாக அறிவதற்கான ஒரு கருவி ஏன் இது வரை செய்யப்படவே இல்லை என்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை தருகிறது.

இந்த மொழிபரிமாற்று வசதி இந்திய பாராளுமன்றத்தில் (simultaneous interpretation system) உள்ளது. மொழிவாரி மாநில உறுப்பினர்களுக்கு ஏதுவாக பிற மாநில உறுப்பினர்கள் பேசுவதை அவர்கள் விரும்பும் மொழிக்கு  மாற்றி தருவார்கள். பல் மொழி (multiple languages) பேசும் ஐ.நா சபை, ஐரோப்பிய மன்றம் இவற்றில் இது போன்ற வசதி உண்டு. இந்தியாவில் பாரளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் காதில் போட்டுக் கொண்டிருக்கும் ஹெட் போனில் உறுப்பினர்கள் பேசுவதை துல்லியமாக கேட்பதோடு அவர்கள் விரும்பும் அலுவல் மொழியில் (selected list) ஒன்றை தேர்ந்தெடுக்கும் வசதியும் உள்ளது.

இவ்வாறான மொழி பரிமாற்று கருவிகளில் உள்ள நுட்பம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு சந்தையில் அதிக விலைக்கு மட்டுமே கிடைத்தது. ஆனால், இன்று எலக்ரானியல் துறையில் ஏற்பட்ட நவீன வளர்ச்சி மொழி பரிமாற்று துறையில் வியத்தகு வசதிகளை ஏற்படுத்தி உள்ளதோடு மிகக் குறைந்த விலைக்கும் இத்தையக கருவிகள் கிடைக்கிறது. இன்றைக்கு மக்கள் வெகுவாக பயன்படுத்தும் கையடக்க கூகுள், ஆன்ட்ராய்ட் மொபைல் பேசிகளில் கூட மொழி பரிமாற்று வசதி எளிதாக வந்துவிட்டது.

சீனா, கொரியா, ஜப்பான் நாடுகளில் கையடக்க அளவில் நாம் பயன்படுத்தும் கால்குலேட்டர் போல‌ மொழி பரிமாற்று கருவிகள் கிடைக்கிறது.  இவர்களது மொழியினை உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழி பரிமாற்றம் செய்து கொடுப்பதால் வர்த்தக தளத்தில்   பிற மொழி பேசுபவர்களுடனான‌ உரையாடலை எளிதாக்கி உள்ளது.  மேலும் இந்நாடுகளில் உள்ள பள்ளி, பல்கலைக் கழக மாணவர்கள் சொல் அகராதியாகவும், ஆராய்ச்சி கட்டுரைகளை மொழி பெயர்க்க, ஆங்கிலத்தில் உள்ள உயர்கல்வி புத்தகங்களை புரிந்து கொள்ள அதிகமாக பயன்படுத்துகின்றனர்.


சந்தையில் கிடைக்கும் மொழி பரிமாற்று கருவிகள்.

ஆனால் இந்தியா போன்ற பல் மொழி பேசும் நாட்டில் இந்த கருவிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யலாம். இந்த வசதி இந்தியாவில் வணிக நிமித்தம் ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கு பயணம் செய்பவர்கள், ஓட்டுநர்கள், சுற்றுலா பயணிகள், விடுதி சிப்பந்திகள் என பல தரப்பட்ட மக்களுக்கு மிக்கபெரிய அளவில் கை கொடுக்கும்.

தமிழ் மொழியில் உள்ள ஒரு வார்த்தையினை குரலாக பேசி உள்ளீடாக தரும் போது அதனை ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுகு, இந்தி, வங்காளம், குஜராத்தி என எல்லா மொழிகளையும் பரிமாற்றும் வசதியை எளிதாக கொண்டு வர முடியும்.

இன்றைக்கு மீநுண் நுட்பத்தில் (nanotechnology) தகவல் சேமிப்பில் ஏற்பட்டுள்ள புரட்சி இத்தையக பன்மொழி பரிமாற்றத்தினை மேலும் எளிதாக்க தர இயலும். அதாவது இன்று நீங்கள் பயன்படுத்தும் 8 ஜிகா பைட் (8 GB) உள்ள டிரைவில் ஒரு சொல் அகராதியை நிறுவி விட்டால், நீங்கள் தேடும் வார்த்தையினை தட்டச்சும் போது அதற்கு இணையான பிற மொழி வார்த்தையினை உடனே பெறலாம். இவ்வாறு நீங்கள் செய்யும் போது ஒரு வருடத்தில் குறைந்தது 100 வார்த்தைகளையாவது நீங்கள் திருப்பி திருப்பி மொழி பரிமாற்றம் செய்யும் போது அதற்கு இணையான வார்த்தைகளை உங்கள் மூளை பதிவு செய்து கொள்ளும்.மெனக் கெட்டு இந்தியினை திணித்து, உள்ளூர்காரர்களின் தாய்மொழியையும் சிதைத்துத்தான் ஒரு மொழியை வளர்க்க வேண்டியதில்லை.

ஐரோப்பிய ஒன்றியப்  பகுதிகளில் நான் அடிக்கடி பயணம் செய்யும் போது நான் ஆச்சரியப் படுவது உள்ளங்கை அளவே உள்ள மிகச்சிறிய சொல் அகராதிகள் (mini dictionary) புத்தக சந்தைகளில் குறைந்த விலைக்கு கிடைக்கிறது. இவற்றோடு ஆங்கிலத்தில் இருந்து எல்லா மொழிகளுக்குமான சொல் அகராதிகளும் சந்தையில் கிடைக்கிறது. ஒரு முறை பயணத்தில் சோதனை முயற்சியாக இந்த கையடக்க சொல் அகராதியை பயன்படுத்துங்களேன். அடுத்த முறை நீங்கள் பத்து புதிய வார்த்தைகளையாவது மற்றொரு மொழியில் தெரிந்து வைத்திருப்பீர்கள்.

ஆயிரக்கணக்கான பிற மொழி வார்த்தைகளை எலக்ரானியல் கருவிகளில் தரும் போது அதற்கான நினைவக (memory) வசதி உள்ளதா?

2000 ஆம் ஆண்டில் எலக்ரானிக் சந்தையில் USB (universal series bus) டிரைவ் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் டேட்டா கொள்ளளவு 8 MB (1 MB= 1048576 Byte). அன்றைய கால கட்டத்தில் வழமையாக பயன்படுத்தப்பட்டு வந்த 3.5 இஞ்ச் அளவுள்ள பிளாப்பி டிஸ்க்கின் நினைவக‌ கொள்ளளவை விட 11,380 மடங்கு USB டிரைவின்  கொள்ளளவு  அதிகம்.

பிறகு USB டிரைவில் உள்ள நினைவகங்களில் டேட்டாவை பதிந்து வைக்கும் வேகம் (மெகாபைட்/செகன்டு), அதில் பயன்படுத்தப்படும் குறைகடத்தி (semiconductor) பொருள் என பல்வேறு வளர்ச்சியினால் தற்போது வடிவத்தில், எடையில் அதே அளவுள்ள 8 MB USB டிரைவின் இடத்தில் 8ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி வரை தற்போது கிடைக்கிறது.  தற்போது தற்போது நினைவகத்தின் கொள்ளளவு “டெரா பைட்” அளவில் இன்னும் விரிவடைந்து ஒரு நூலகத்தில் உள்ள அத்தனை புத்தகங்களையும் சுருக்கி சட்டைப்பைக்குள் வைக்கும் அளவிற்கு சென்று கொண்டுள்ளது.

சரி இப்போது விசயத்திற்கு வருகிறேன்.

மேலே சொன்னபடி, கடந்த காலத்தை ஒப்பிடும் போது மொழி பரிமாற்று கருவிகள் தமிழில் இருந்து பல மொழிகளையும் உடனுக்குடன் மொழி பெயர்க்கும் வண்ணம் செய்ய நினைவக கருவிகளின் நுட்ப வளர்ச்சி நிச்சயம் கை கொடுக்கும். குறைந்த பட்சம் ஆங்கிலம், இந்தி, தென்னிந்திய மொழிகள் உள்ளிட்ட ஆறு மொழிகளுக்கான சொல் அகராதியை உடனுக்குடன் வார்த்தைகளாக மொழி பெயர்க்கும் கருவிகளை மிகக் குறைந்த விலையில் சந்தைக்கு கொண்டு வரலாம். பின்னர் குரல் உள்ளீட்டு மொழி பரிமாற்று கருவிகளை (audio translator) வெகு எளிதாக கொண்டு வரலாம்.

சமீபத்தில் உடனுக்குடன் குரல் பரிமாற்றம் செய்யும் (instantaneous interpretation) கருவியினை சீனா உலக‌ சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. சீன மொழியில் எவ்வளவு பெரிய வாக்கியத்தினை பேசினாலும் உடனடியாக ஆங்கிலத்திலும், அதே போல ஆங்கிலத்தில் இருந்து சீன மொழிக்கும் பரிமாற்றம் செய்து தருகிறது இக்கருவி. ஜப்பானியர்கள் ஒரு படி மேலே போய் உடையில் அணிந்து கொள்ளும் (ili wearable translator) மொழி பரிமாற்று கருவிகளை சந்தைக்கு கொண்டு வந்துள்ளனர். இத்தையக வசதி அந்நாட்டிற்கு வணிக ரீதியில் வருபவர்களுடன் உரையாடுவதற்கு எளிதில் கை கொடுக்கிறது.

World first wearable language translator (ili- Japan product)

Pilot: Language Translator (smart earpiece language translator)

இந்த குரல் பரிமாற்று கருவிகளில் மற்றொரு வசதியும் உள்ளது. ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு புத்தகங்களை மொழி பெயர்க்கும் போது அதனை அப்புத்தகம் எழுதப்பட்ட மொழியில் ஒருவர் பேசி குரல் உள்ளீடாக தந்து விட்டால் போதும். நாம் விரும்பும் மொழிக்கு எளிதாக பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் ஒரு மொழியில் கிடைக்கும் தகவல்கள் மற்றொரு மொழியினருக்கும் எளிதாக கொண்டு செல்லலாம். தற்போது சந்தையில் கிடைக்கும் ஆடியோ புத்தகங்களை இதற்கு நல்ல உதாரணமாக சொல்லலாம்.

விமானப் பயணங்களில் சிப்பந்திகள் பாதுகாப்பு அறிவிப்புகளை ஒரு மொழியில் தரும் போது அதனை தேவைப்படும் உள்ளூர் மொழிக்கும் மாற்றிக் கொள்வதற்கான‌ வசதிகளை எளிதாக இந்த நுட்பத்தின் மூலம் கொண்டு வர முடியும்.

தமிழ் மொழியினை நுகர்வு சந்தைகளில் பயன்படுத்தும் போது நம்மவர்களுக்கு பெரிய அளவில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தும். மொழி பரிமாற்ற விசயத்தில் நாம் நகர வேண்டிய தளம் இதுவே. நவீன நுட்பங்கள் உதவியுடன் தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் ஆடியோ கைடு எனப்படும் குரல் உள்ளீட்டு மொழி பரிமாற்ற கருவிகளை அறிமுகப்படுத்தலாம். தமிழகத்திற்கு வரும் பல நாட்டவருக்கும் நம் கலாச்சார தகவல்களை எளிதில் பதிய வைக்க முடியும்.


சந்தையில் கிடைக்கும் குரல் வழி சுற்றுலா வழிகாட்டி கருவிகள் (audio tour guide devices)


At Alhambra palace, Spain. Wearing audio tour guide device.

அத்தோடு எலக்ரானியல் கருவிகளில் தமிழை ஒரு இயக்கு மொழியாக (operating language) மாற்ற இந்த வசதி பெரிதும் உதவும்.

இப்படி நாம் சொல்லிக் கொண்டே போகலாம். ஆகவே இதில் முதல்படியாக தமிழில் இருந்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளுக்கான எலக்ரானியல் சொல் அகராதியை தயார் செய்வோம்.

முனைவர் சுதாகர் பிச்சைமுத்து
E-mail: vedichi@gmail.com
சுவான்சி பல்கலைக் கழகம்
09-07-2017