Wednesday 8 February 2017

நுண் புற்றுநோய் கட்டிகளை எளிதாக இனம் காணும் ஒளிர்மூலக்கூறுகள் - முனைவர் மகாலிங்கம்  

 (உலகை திரும்பி பார்க்க வைக்கும் தமிழர் களின் ஆராய்ச்சி -1)


தற்போது அமெரிக்காவின் பர்டியூ பல்கலைக் கழகத்தில் (Purdue university USA) உயிரி வேதியியல் ஆராய்ச்சியாளராக பணிபுரியும் இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த்த முனைவர் சக்கரைப்பாளையம் எம். மகாலிங்கம் அவர்கள் புற்று நோய் கட்டிகளை அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் எளிதாக கண்டறியும் ஒளிரும் மூலக்கூறுகள் பற்றிய ஆய்வில் வெற்றி பெற்று அதற்கான காப்புரிமையும் பெற்றுள்ளார். தற்போது இவரது ஆய்வினை புற்று நோய் பாதித்த நோயாளிகளின் உடலில் பரிசோதித்து பார்க்க அமெரிக்க அரசு அமைப்பு அனுமதி தந்துள்ளது.

அவரது ஆய்வினை பற்றி “ஒரு சொல் கேளீர்” முகநூல் பக்கத்திற்கு அவர் வழங்கிய நேர்காணல்.

புற்றுநோய் கட்டிகளின் இருப்பிடத்தை மிகச்சரியாக அவதானித்து அவ்விடத்தில் உள்ள போலேட் ஏற்பிகளுடன் இணைந்து எளிதில் காட்டித் தரும் ஒளிரும் சாய மூலக்கூறுகளை வெற்றிகரமாக வடிவமைத்துள்ளார் (optimal folate receptor targeted fluorescent dye conjugate) முனைவர் மகாலிங்கம். 



முனைவர் மகாலிங்கம், புருடே பல்கலைக் கழகம், அமெரிக்கா

இந்த ஒளிரும் சாய மூலக்கூறுகளுக்கு OTL38 எனப் பெயரிட்டுள்ளார். இதன் சிறப்பம்சம் ஒளிரும் மூலக்கூறுகளை புற்றுநோய் நோயாளிகளின் உடலில் செலுத்தும் போது இவை ஆரோக்கியமான திசுக்களில் இருந்து புற்றுநோய் பாதிக்கப்பட்டிருகும் திசுக்களை சரியாக இனம் கண்டு பிரித்து காட்டிக் கொடுத்து விடும். தற்போது இவற்றை புற்று நோய் கட்டிகள் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் போது எளிதாக கண்களாலாலேயே நோய் பாதிக்கப்பட்ட திசுக்களை பிரித்தரிய இயலும்.

இவரது கண்டுபிடிப்பில் உள்ள சிறப்பினை உணர்ந்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (US Food and Drug Administration (FDA)) தற்போது மருந்து பரிசோதனைகளுக்காக உடலை அர்ப்பணிப்போர்களிடம் மூன்று பேரை தெரிவு செய்து பரிசோதனை செய்து கொள்ள அனுமதித்து உள்ளது. மருத்துவ துறை ஆராய்ச்சியில் வடிவமைக்கப்படும் மருந்து உள்ளிட்ட ஆய்வு பொருட்களை உடலில் பரிசோதித்து பார்க்க பலகட்ட நிரூபணங்களுக்கு பின்பே அனுமதிக்கப்படுவர். அந்த வகையில் தற்போது கிடைத்திருக்கும் அனுமதி முனைவர் மகாலிங்கம் அவர்களின் கண்டுபிடிப்பின் மேன்மையினை நமக்கு எளிதாக விளக்குகிறது.

தற்போது புற்று நோய் அறுவை சிகிச்சை செய்யும் நிபுணர்கள் புற்று நோய் பாதித்து இருக்கும் பகுதிகளை திசுக்களின் அமைப்பியல், அவற்றின் நிறம் மற்றும் உறுதித் தன்மையினை வைத்து ஆரோக்யமான திசுக்களில் இருந்து பிரித்து அறிகிறார்கள். வழமையான இந்த முறைகள் மூலம் பெரிய கட்டிகளை மட்டுமே எளிதாக இனம் காண இயலும். ஆனால் அளவில் மிகச்சிறிய புற்றுநோய் கட்டிகள் உதாரணத்திற்கு ஆரோக்கியமான திசுக்களின் பரப்பு எல்லையில் ஒட்டியிருப்பவை (boundaries), மறைவான நிணநீர் கணுக்களில் (lymph nodes) புதைந்து இருப்பவை ஆகியவற்றை கண்டறிவது மிக கடினம். இத்தையக தருணங்களில் மூலக்கூறு அளவில் உள்ள OTL 38 ஒளிரும் மூலக்கூறுகள் சிக்கலான பகுதிகளில் இருக்கும் புற்றுநோய் தொற்று உள்ள பகுதிகளை கூட‌ எளிதாக இணம் கண்டு அவற்றுடன் ஒட்டிக் கொள்ளும். பின்னர் தகுந்த ஒளியினை இந்த கட்டிகள் மேல் பாய்ச்சும் போது மிக நுண்ணிய பகுதிகளில் பாதிக்கப்பட்டு இருக்கும் புற்று நோய் பகுதிகளை இந்த மூலக்கூறுகள் காட்டிக் கொடுத்து விடும்.

இவரது கண்டுபிடிப்பின் நம்பகத்தன்மை மற்றும் வீரியத்தினை முதல் (phase 1) மற்றும் இரண்டு கட்டமாக (phase 2) மருத்துவர்கள் பரிசோதனை செய்து உறுதி செய்துள்ளனர். புற்று நோய் பாதிக்கப்பட்ட நோயாளியின் உடலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கட்டிகளில் 96 சதவிகிதம் நோய் பாதிக்கப்பட்ட திசுக்களை ஒளிரும் மூலக்கூறுகள் எளிதாக அடையாளம் கண்டு கொள்ள உதவியுள்ளது.முக்கியமாக சிக்கலான நிணநீர் கட்டிகளில் புதைந்திருந்த புற்றுநோய் திசுக்களை 98 சதவிகிதம் கண்டுபிடித்து சொல்லியுள்ளது.

பெரும்பாலும் 40 சதவிகித புற்றுநோய் பிரச்சினைகள் அறுவை சிகிச்சை நடந்த இடத்தில் இருந்து மீண்டும் பரவுவதற்கு காரணம் புற்றுநோய் பாதித்த நுண்ணிய கொத்துகள் அறுவை சிகிச்சை நிபுணர்களின் கண்களுக்கு புலப்படாமல் அரிதாக ஒளிந்து கொள்வதே காரணம் ஆகும். இந்த சிக்கலை உணர்ந்த FDA அமைப்பு இவரது கண்டுபிடிப்பினை விரைவு நிலையாக கருதி (fast-track status) மூன்றாம்/இறுதி கட்டமாக (phase 3) இதனை நோயாளிகளின் உடலில் பரிசோதித்து பார்க்க தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

2010 ஆம் ஆண்டு முதல் 2013 வரையிலான ஒளிரும் மூலக்கூறுகள் பற்றிய ஆய்வின் போது OTL38 மூலக்கூறுகளை “ஒளிரும் மூலக்கூறு முகவர்களாக” (optical fluorescence agents) மருத்துவ துறை பயன்பாடுகளில் பயன்படுத்தும் படி முனைவர் மகாலிங்கம் வடிவமைத்தார். தற்போது இதன் பயன்பாடு “கருப்பை புற்றுநோய்” அறுவை சிகிச்சைகளில் கண்டுபிடிப்பானாக இந்த வருடத்திய பரிசோதனைகளில் பயன்படுத்தப்பட உள்ளது. ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளாக பல கட்டமாக விலங்குகளில் உள்ள புற்றுநோய் கட்டிகளில் இதனை பரிசோதித்து வெற்றி கண்ட பின்பே இந்த வெற்றியினை தன்னால் அடைய முடிந்தது என கூறுகிறார் மகாலிங்கம்.

மேலும் OTL38 மூலக்கூறுகள் அடிப்படையில் அகச்சிவப்பு ஒளியில் இயங்கும் வண்ணநிறமியால் (near IR dye) ஆனவை, ஆகையால் ஆரோக்கியமான திசுக்களில் இருந்து புற்று நோய் கட்டிகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள உதவியாக இருக்கின்றன. மேலும் வழமையான அகச்சிவப்பு சாயங்களுடன் ஒப்பிடும் போது விலை குறைந்தவை. மிகத்துல்லியமாக புற்றுநோய் பாதித்த பகுதிகளை கண்டறிந்து தருவதால் அறுவை சிகிச்சை பின்னதான அச்சமும் நோயாளிகளுக்கு தேவையில்லை என்கிறார் மகாலிங்கம்.

முனைவர் மகாலிங்கத்தின் கனவு தனது ஆராய்ச்சி தனது நாட்டு மக்களுக்கு சென்றடைய வேண்டும். அதற்காக விரைவில் இந்தியாவின் முன்னோடி கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக இணைந்து தன் ஆராய்ச்சியினை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாக தனது விருப்பத்தினை தெரிவித்தார். மேலும் தனது OTL38 ஒளிரும் மூலக்கூறுகள் எல்லா தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில்  இந்தியாவில் ஒரு நிறுவனத்தையும் தொடங்க  உள்ளதாக தெரிவித்தார்.

நம் சாதனை தமிழரின் ஆராய்ச்சி கனவு நிறைவேற வாழ்த்துவோம்.

முனைவர் மகாலிங்கம் அவர்களின் OTL38 கண்டுபிடிப்பின் காப்புரிமை தகவல்

புற்றுநோய் தினத்தன்று முனைவர் மகாலிங்கம் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு வழங்கிய நேர்காணல்





2 comments:

  1. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. congrats. Certainly, it's a breakthrough in cancer research. a dye in NIR region for cancer detection is a great milestone. I am also working endoscopy system for cancer detection.

    My best wishes
    uday

    ReplyDelete