Wednesday 10 May 2017

இலண்டனில் இருந்து பாரீசுக்கு (சாதனைத் தமிழன்)

------------------------------------------------------------------------------
சுதாகர் ரமணனை கல்லூரி காலத்தில் இருந்து எங்களுக்கு மிக நெருங்கிய நண்பன் என்று சொல்வதை காட்டிலும் எங்கள் நண்பர்கள் குழுவில் நாங்கள் எப்போதும் ஆலோசனை கேட்கும் குருவாகவே வைத்திருக்கிறோம்.

ஏனெனில் எந்த விசயத்தையும் தீர அலசி நிதானமாக முடிவெடுத்தல், எல்லோரிடமும் இணக்கமாக பழகும் தன்மை என்று எல்லா தலைமைப் பண்பும் இருந்ததால்  பிசப் ஹீபர் கல்லூரி இளம் நிலை இறுதி ஆண்டில் தேசிய மாணவர் படையின் (National Cadet Corps) கட்டுப்பாட்டு அதிகாரியாக (Senior Under Officer) நியமித்தது.

இன்று நீங்கள் படிக்கும் உலகப் புகழ் பெற்ற நாவல்களை, நாடகங்களை, கவிதைகளை, வரலாற்றுப் புத்தகங்களை தயாரிக்கும் இங்கிலாந்தின் முன்னோடி பதிப்பகமான கெச்சட்டில் (Hachette) மென்பொருள் துறையில் தற்போது மூத்த அதிகாரியாக பணி புரிகிறார்.

பிரித்தானியாவின் தேசிய கல்வியறிவு அறக்கட்டளை (National Literacy Trust), அங்குள்ள ஆரம்ப்ப பள்ளி துவங்கி உயர் நிலை பள்ளிகள் வரை மாணவர்களிடையே பாடப் புத்தகங்களுக்கு வெளியே இருக்கும் சமூகம் மற்றும் அறிவியல் அறிவை மெருகேற்றும் வண்ணம் பல திட்டங்களை செயல் படுத்துகிறார்கள்.

குழந்தைகளுக்கு வருடம் தோறும் கதை புத்தகங்களை வழங்குவது தொடங்கி அவர்களுக்கென எண்ணற்ற விளையாட்டு முகாம்களை நடத்தி வருகிறது. பிரித்தானியாவின் கிராமப்புற பகுதிகளில் இருக்கும் பள்ளிகளில் இந்த அறக்கட்டளையின் செயல்பாடுகளே இப்பகுதியில் இருந்து குழந்தைகளை வெளி உலகிற்கு மிகச் சிறந்த சான்றோர்களாக ஆக்கி தருகிறது.

பள்ளி குழந்தைகளோடு நிற்காமல் பிரித்தானியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நூலறிவை கொண்டு செல்லும் வன்ணம் எல்லா ஊர்களிலும் உள்ள நூலகங்களோடு இணைந்து பல திட்டங்களை கொண்டு வருகின்றனர். அருங்காட்சியங்களில் குழந்தைகளின் பொது அறிவு, அறீவியல் நுட்ப அறிவை வளர்க்கும் பொறுட்டு பல்கலைக் கழக பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் உதவியுடன் வருடம் தோறும் முகாம்களை நடத்துகிறார்கள்.

பிரித்தானியாவின் தேசிய கல்வியறிவு அறக்கட்டளையானது மக்கள் தரும் நன்கொடையிலேயே முழுக்க முழுக்க இயங்குகிறது.

இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நிதி சேர்க்கும் பொருட்டு நண்பர் சுதாகர் ரமணன் செவ்வாய்க் கிழமையன்று அவரது கெச்சர் நிறுவன ஊழியர்களுடன் இலண்டன் மாநகரில் இருந்து 180 மைல் தொலைவில் உள்ள பாரீஸ் நகருக்கு மிதிவண்டியில் சென்றுள்ளனர். ஏறத்தாழ நாள் ஒன்றுக்கு 60 மைல் வீதம் மூன்று நாட்களில் இந்த தொலைவினை கடந்துள்ளனர்.

என் நண்பனைக் குறித்து நாங்கள் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறோம். ஏனெனில் ஒரு நாட்டிற்கு பணி நிமித்தம் செல்லும் போது அங்குள்ள மக்களோடு அல்லது அங்குள்ள குடிமைச் சமூகத்திற்காக செயலாற்றுவது என்பது அரிதாகவே பார்க்க முடிகிற செயல். ஆனால் எங்கள் நண்பன் இன்று அத்தையக செயல்களுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறான் என்பதே நாங்கள் கற்றுக் கொள்ளும் பாடம்.

பிரித்தானியாவிலோ அல்லது வெளிநாட்டில் வாழும் தமிழ் நண்பர்கள் பிரித்தானியாவின் தேசிய கல்வியறிவு அறக்கட்டளைக்கு நன்கொடை தர நினைத்தால் கீழ் உள்ள சுட்டியில் சென்று உங்கள் பங்களிப்பை செலுத்தலாம்.


குறைந்த பட்சமாக நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு பவுண்டு காசும் பிரித்தானியாவில் உள்ள குழந்தைகளின் கல்வியறிவிற்கு பயன்படும். மேலும் இந்த அறக்கட்டளை வளரும் நாடுகளில் உள்ள குழந்தைகளுக்காகவும் செயல்படுகிறார்கள்.

பிரித்தானியர்களின் நிகழ்விற்கு ஒரு தமிழனாக, இந்தியனாக கலந்து கொண்டு நம் பங்களிப்பை சிறப்பாக செய்தமைக்கு நண்பன் சுதாகர் ரமணனுக்கு ஒரு வாழ்த்து சொல்வோமே!

கெச்சர், இலண்டன் அலுவலகத்தில் இருந்து தங்கள் நிறுவன நண்பர்களுடன் பயணத்திற்கு முன்பு

பாரீஸ் டவர் முன்பு சுதாகர் ரமணன்



No comments:

Post a Comment