Thursday 25 May 2017

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தமிழ் அல்லாது பிற மொழி பேசும் இந்தியாaவின் பல மாநில மக்களோடு தொடர்ந்து பழகி வருகிறேன். அவர்களுடனான‌ முதல் சந்திப்பில் நமக்கு இந்தி மொழி தெரியாது என்று எடுத்த எடுப்பில் ஒரு புகாரை என்னிடம் வைப்பார்கள்.
இத்தனைக்கும் அவர்களுக்கு இந்தி தாய் மொழி கூட‌ கிடையாது. இருந்தாலும் ஒரு பொது ஊடக மொழிக்காக மெனக்கெடுவார்கள்.
அவர்களிடம் சிரித்துக் கொண்டே இந்தி கற்றால்தான் நாம் இருவரும் பேச முடியுமா. ஏன் உங்கள் தாய் மொழியினை எனக்கு சொல்லித் தரக் கூடாது. வேண்டுமானால் என் தாய் மொழி தமிழையும் நான் சொல்லி தருகிறேன் என நான் சொல்லி விடுவேன். பிறகு, என்னிடம் ஒரு போதும் இந்தி பற்றிய புகாரை வாசிக்க மாட்டார்கள்.
இந்தியாவின் பிற பகுதி மக்களோடு நெருங்கி பழகிய வகையில் நாம் எந்த அளவிற்கு விட்டுக் கொடுத்தும், பெற்றுக் கொண்டும் உள்ளோம் என்று எளிதாக உணர முடிகிறது.
தெலுங்கு, மலையாளம், மராட்டி, பெங்காளி, என பல மொழி நண்பர்களுடன் அவர்களது ஊர், கலாச்சாரம், உணவு, உடை, சடங்குகள், நம்பிக்கை என குறிப்பாக பேசுவேன். ஒரு கட்டத்தில் அவர்கள் என்னை அண்ணா என்று மரியாதையோடு அழைக்கத் துவங்கி விடுவார்கள். அதே போலவே அவர்கள் மொழியிலும் அண்ணன், அல்லது தம்பி என்ற வார்த்தைகளை கேட்டு தெரிந்து கொண்டு அவற்றின் வாயிலாகவே அழைப்பேன்.
ஒப்பீட்டு அளவில் தமிழகத்திற்கு வெளியே இருப்பவர்கள் நம்மை பெரிதும் மதிக்க காரணம், இங்குள்ள கல்வியறிவு, தமிழகத்தில் அடுத்தவர்களை மதிக்கும் அடிப்படை மனித தன்மைதான்.
நாம் என்னதான் பேல் பூரி விற்பவர்களை இந்திக்காரர்கள் என தட்டையாக அடையாளம் காட்டினாலும், நம்மவர்களுக்கு இவர்கள் நமக்கு நிகரான எதிரிகள் அல்ல என்று நன்கு தெரியும். ஆனாலும் காலம் காலமாய் தில்லியில் இருந்து கிடைக்கும் ஒரு அவல மரியாதை நம்மை நம் ஊரில் பஞ்சம் பிழைக்க வந்தவரை கொடூரமாக தாக்க தோன்றுகிறது.
நிச்சயம் அவர்கள் ஊரில் வாழும் தமிழர்களுக்கு, நாம் இங்கு வாழும் பிற மாநிலத்தவருக்கு தரும் மரியாதை போல கிடைக்காது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு அந்த ஊர்களில் வாழும் இது போன்ற விழிம்பு நிலை மக்களுக்கும் துளி கூட மரியாதை கிடையாது. இங்குதான் நாம் ஐம்பது ஆண்டுகளாக கற்றுக் கொண்ட சுயமரியாதை அடிநாதமாக வேலை செய்கிறது.
இதுவே சாமானிய மனிதர்களுடான உரையாடலில் நம்மை மதிப்பு மிகுந்தவர்களாக நிற்க வைக்கிறது. குறிப்பாக‌, சாலையோரத்தில் பூக்கட்டி விற்கும் பெண்மணியை அக்கா ஒரு முழம் பூக்கொடுங்க என வாஞ்சையோடு கேட்டு அவர்களையே தலையில் வைத்து விடச்சொல்லவும், டீக்கடை மாஸ்டரிடம் அண்ணே நல்லா சூடா ஒரு டீக்கொடுங்க என்று மழையில் அன்பை நனைக்கவும், முன்பின் தெரியா மனிதர்களை கூட சொல்லுங்க தம்பி என தயக்கம் உடைக்கவுமான ஒரு அன்பின் மொழி நம்மோடு இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
தமிழக வெளியில் மக்கள் பணியாற்ற எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் மக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்ற அடிப்படையில்தான் அவர்களை அணுக வேண்டுமே தவிர பிறப்பால் ஒருவரை நிராகரிக்க எந்த உரிமையும் கிடையாது.
ஒருவன் என்னதான் மேன்மையான தலைமைப் பண்புகளை கொண்டிருந்தாலும் பிறப்பு அடிப்படையிலான தகுதியாக மட்டுமே நிர்ணயிக்கும் வர்ணாசிரமத் தன்மையோடுதான் எல்லோரையும் நான் பார்ப்பேன் என்கிற துர்குணம் தமிழனுக்கு அடிப்படையாக அமைந்தது அல்ல. அவன் விசாலமான அன்பால் மனத் தடைகளற்று இவ்வுலகையே வழிநடத்தும் மாமனிதன். அதனால்தான் கணியன் பூங்குன்றன் என்னும் எம் முப்பாட்டன் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று சொன்னான் ..
இதனை எந்த டிக்சனரியில் மொழி பெயர்த்தாலும் அன்புதான் அடிப்படை கருப்பொருளாக அர்த்தம் தரும்.
அது தமிழன் வெளியே சென்று பொருள் ஈட்டுவது தொடங்கி பிற இன மக்களுக்கு தலைவனாவது மட்டுமல்ல, நம்மவர்களோடு இரண்டறக் கலந்து பாலில் கலந்த சர்க்கரையென வாழும் பிற இனத்தவர்களுக்கும்தான்.
ஆகையால் கணியனும் அவனது வாக்கும் நமக்கு மட்டுமல்ல வையத்திற்கே பொதுவானது.
எல்லா நதிகளும் கடலை நோக்கி பயணிப்பது போல் நாங்கள் எங்கள் மக்களோடு வாழும் எல்லா இனக்குழுக்களையும் அரவணைத்தே மானுடத்தை நோக்கி செல்கிறோம், இதனையே நாங்கள் "திராவிடம்" என்றழைக்கிறோம். நீங்கள் இதனையே கைக்கொண்டு வேறு பெயரால அழைப்பீர்களாயின் மானுடமே உங்களை கைக்கூப்பி தொழும்.
மொழி எல்லோரையும் வாழ வைக்கும் கருவி, அந்த வகையில் தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாயாக இருப்பதில் நமக்கு எப்படி பெருமிதமோ அந்த மகிழ்வை தமிழ் பேசும் எல்லோருக்கும் தங்கு தடையின்றி தருவோம்.

No comments:

Post a Comment