Monday 18 December 2017

சமீபத்தில் வெளியான‌ விக்டோரியா அன்ட் அப்துல் (Victoria and Abdul) என்னும் ஆங்கிலப்படத்தை இன்று பார்த்தேன்.
இப்போது இருக்கும் பிரித்தானியா மகராணிக்கு முன்பு மகாராணியாக இருந்தவர் விக்டோரிய மகராணி (அலெக்சான்ட்ரிய விக்டோரியா). ஏறத்தாழ 82 ஆண்டுகள் வாழ்ந்தவர். 1834 ஆம் ஆண்டில் பிரித்தானிய மகாராணியாகவும் 1876 ஆம் ஆண்டு முதல் இந்தியாவிற்கும் மகாராணியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டவர்.
இந்தியாவிற்கு மகாராணியானவுடன் இந்தியாவில் இருந்து இரண்டு இசுலாமிய சேவகர்கள் இலண்டனில் உள்ள மகாராணி அரண்மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் அப்துல்.
அப்துல் கரீம் இந்தியாவில் ஆக்ரா பகுதியில் பிறந்தவர். இந்தியாவில் பிரிட்டிஸ் இந்தியாவின் சிறைச்சாலையில் கைதிகள் பற்றீய தகவல்களை பதியும் எழுத்தராக இருந்தவர்.
லண்டணில் அரண்மனைக்கு சென்ற கொஞ்சநாளிலேயே மகாராணியின் மதிப்பிற்குரியவராக இடத்தை பிடிக்கிறார். ஒரு கட்டத்தில் மகாராணிக்கு உருது சொல்லித்தரும் ஆசிரியராக (முன்சி) பதவி உயர்வு பெறுகிறார். இருவருக்கும் இடையில் வார்த்தைகளால விவரிக்க இயலாத அளவிற்கு பெரும் அன்பு இருந்தது. ஏறத்தாழ 70 வயதுடைய மகாராணிக்கு அவரது பேரன் வயதுடைய அப்துல் மேல் அளவற்ற அன்பும் மரியாதையும் இருந்ததால் அவரை இந்தியாவிற்கான‌ தனது அந்தியந்த காரியதரிசியாக நியமித்தார். இது அரண்மனையில் உள்ள அவரது உறவு வட்டத்தில் பெரும் புகைச்சலை கொடுத்தது.
ஒரு கட்டத்தில் ராணியில் இரத்த உறவுகளும், மேல்மட்ட அதிகார வர்க்கமும் அப்துல் மேல் மோசமான புகார்களை சொல்லி ராணியிடம் இருந்து அவரை துரத்த நினைத்தனர். ஆனால் எல்லாம் தவிடு பொடியானது.
இறுதியில் ராணி நோய்வாய்ப்பட்டு இறந்தவுடன் அப்துல் குடும்பத்துடன் இந்தியாவிற்கு அடித்து துரத்தப்படுகிறார். அவரிடம் ராணி அவருக்கு எழுதிய கடிதம் உள்ளிட்ட எல்லா ஆவணங்களையும் ராணியின் மகன் எரித்து விடுகிறார்.
ஆனால் ராணியின் மறைவுக்கு பிறகு இந்தியா திரும்பிய அப்துல் ராணியின் நினைவுகளுடன் ஆக்ராவில் வாழ்ந்து மிகச்சிறிய வயதிலேயே மறைந்து போகிறார்.
வரலாற்றில் பெரிதும் மறைக்கப்ப்ட்ட விக்டோரியா, அப்துல் இருவருக்கும் இடையேயான நெகிழ்ச்சியான அன்பினை இப்படம் தெளிவாக விளக்குகிறது. குறிப்பாக இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்கிற ராணிக்கு அப்துல் உருது மொழி கற்றுத் தருகிறார்.
அப்துல்தான் இந்தியாவின் கலை, கலச்சாரம், என எல்லாவற்றையும் மகாராணிக்கு எடுத்துரைக்கிறார். அதில் ஈர்க்கப்பட்டே மொகலாயர்கள் ஸ்டைலில் இம்ப்ரீயல் தர்பார் என்று லண்டன் அரண்மனையில் தர்பாரை நிறுவுகிறார். இப்படி படம் முழுக்க பல புதிய‌ விசயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.
ஏறத்தாழ அப்துல் 15 வருடம் ராணியின் இறுதிக் காலம் வரை அரண்மனையின் பணியாற்றினார்.
வரலாற்றின் ஆச்சரியம் என்னவென்றால் இந்தியாவின் மகாராணியான விக்டோரியா ஒரு முறை கூட இந்திய மண்ணிற்கு விஜயம் செய்ததே கிடையாது. அப்துல் அவரிடம் பணிக்கு சேர்ந்த பிறகு அவர் மூலமாகவே இந்தியாவைப் பற்றி அறிந்து கொள்கிறார்.
ராணிக்கும் அப்துலுக்கும் இடையேயான உரையாடல் செம்ம கிளாசிக்.
வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பாருங்கள். இது டிராமா டைப் சினிமா, மெதுவாகத்தான் போகும். ஆனால் படம் நெடுக வரும் வசனங்கள் நிச்சயம் நம் மனதைத் தொடும்.
குறிப்பு:
இந்த திரைப்படம் ஸ்ராபாணி பாசு (Shrabani Basu) என்னும் பெண்மணி எழுதிய விக்டோரியா அன்ட் அப்துல் என்னும் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.
அப்துலுக்கு முன் ஜான் ப்ரவுன் என்னும் ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த மெய்காப்பாளரே மகாராணிக்கு மிக நெருங்கியவராக இருந்துள்ளார். அவர் இறந்த நான்கு வருடங்கள் கழித்தே அப்துல் அரண்மனையில் பணிக்கு சேர்க்கப்படுகிறார்.
மகாராணியின் கணவர் இளவரசர் ஆல்பர்ட் இறந்த பிறகு அன்பிற்காக ஏங்கியுள்ளார். அந்த கால கட்டத்தில் 60 வயதான அவருக்கு ஒரு மகனை போல அப்துல் வந்து சேர்ந்திருந்தார். மகாராணி அப்துலுக்கு எழுதிய கடிதங்களில் அன்புள்ள அம்மா, பிரியமுள்ள நண்பர், அளவற்ற முத்தங்களுடன் என்றுதான் கடிதம் எழுதி இருக்கிறார். அவற்றைத்தான் ராணியின் மகன் எரித்து விட்டார்.
இன்று வரை உலகின் அற்புதமான அன்பிற்கு அடையாளமாக விக்டோரியா மகாராணியும், அவரது அந்தியந்த பணியாளர் அப்துலும் திகழ்கிறார்கள்