Saturday, 17 September 2016



எப்பொழுதாவது தமிழ் படங்கள் எரிச்சலடையச் செய்யும் போது   எனது அடுத்த விருப்பு தேர்வு என்பது மலையாளப் படங்களே.ஆனால் எந்த படங்களை பார்ப்பது என்ற குழப்பம் எப்போதுமே இருக்கும்.
அவ்வாறான சூழலில் விமான பயணங்களின் போது என்னென்ன படங்கள் இருக்கிறது என குறிப்பு எடுத்து வைத்துக் கொள்வேன். ஏனெனில் இது போன்ற பயணங்களில் தேர்ந்தெடுத்த நல்ல படங்களை அவர்கள் தருவதால் மொழி தெரியாத எனக்கு நல்ல படங்களை பார்க்கும் அரிய வாய்ப்பு என கருதி தவற விடுவதில்லை.
சமீபத்திய விமான பயணத்தில்  "நார்த் 24 காதம்" (North 24 Kaadtham) என்னும் மலையாளப் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இப்படத்தில் பிரபலை மலையாள இயக்குநர் பாசில் அவர்களின் புதல்வர் நடிகர் பதக் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் ஒரு பயணக் கதையினை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
தன்னை சுற்றி இருப்பவர்களை பற்றி எந்த வித அக்கறையும் இல்லாமல், தன்னை பற்றி மட்டுமே அதீத அக்கறை கொள்ளும் அதி சுத்த மனோபாவம் கொண்ட ஒரு இளைஞனை எவ்வாறு மனம் மாறுகிறான் என்பதே இப்படத்தின் ஒரு வரிக் கதை. கதாநாயகனின் இரயில் பயணத்தில் செல்லும் போது எதிர்பாராத விதமாக ஒரு சக பயணியின் வீட்டிற்கு செல்லும் சூழல் நேரிடுகிறது. ஆனால் அந்த நேரம் பார்த்து கேரளாவில் திடீரென பந்த் நடக்கிறது.
வழமையான பந்த் நடைபெறும் காலத்தில் பேருந்து வசதி இல்லாமல் கேராளாவின் ஒரு கடைக் கோடியில் இருக்கும் அந்த சக பயணியின்  கிராமத்திற்கு செல்வது எத்தையக கடினம் என்பதை தனது பயணத்தின் வழியே உணர்கிறான். அவன் பார்க்கிற சக மனிதர்களின் இயல்பான வாழ்க்கை, அவர்களின் அன்பான உபசரிப்பு ஆகியவை அவன் பார்த்திராத ஒரு எதார்த்த உலகை தரிசிக்கிறான். மெல்ல அவனுக்குள் அந்த மனிதர்கள் ஆக்கிரமிக்கிறார்கள். இந்த பயணம் ஒரு புத்தனைப் போல் அவனைச் சுற்றி இருக்கும் மனிதர்களை பற்றி படிக்க ஒரு வாய்ப்பாக அமைகிறது.
பயணத்தில் இறுதியில் அவனுக்குள் ஏற்பட்டிருக்கும் பெரிய மனமாற்றத்தை முன்னிறுத்தி சமூகத்தை ஏன் படிக்க வேண்டும் என்ற கருத்தை ஆழமாக சொல்லும் இந்த படம் 2013 ம் ஆண்டு இந்தியாவின் தேசிய விருதையும், பிலிம்பேர் விருதையும் பெற்றது. இந்தப் படத்தில் பதக் பாசிலின் இயல்பான நடிப்பு அப்படியே  என்னைக் கட்டிப் போட்டு விட்டது.
பதக் பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளி வந்துள்ள‌ "மகேசின்டெ பிரதிகாரம்" என்னும் மலையாளப் படத்தில் வரும் பாடலை நேற்று  நண்பர் டான் அசோக்கிற்கு பகிர்ந்திருந்தார். பதக் நடித்திருக்கும் படம் என்பதால் உடனே கேட்டுவிட ஆர்வம் மேலிட்டது. நேற்று மட்டும் இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியாது.
"மல மேலே திரி வச்சு
பெரியாறின் தலையிட்டு
சிரி தூகும் பெண்ணள்ளே இடுக்கி.."
அற்புதமான இசை. ரம்மியமான கேரளாவில் இடுக்கி மாவட்டத்தின் சூழலை அழகாய் படம் பிடித்துக் காட்டும், அற்புதமான காட்சி கோர்வை.

நேரம் கிடைக்கும் போது அவசியம் பாருங்கள்.

பிரேமம் படத்தில் வரும் "ஆலுவா புழையுட தீரத்து", "தெளிமானம் மழு வில்லின் நிறமணியும் நேரம்" போன்ற‌ பாடல்கள் இதற்கு முன் என்னை ஆட்டி வித்தவை. தற்போது அந்த வரிசையில் இந்த பாடல் இடம் பிடித்துள்ளது.

இப்பாடலை பரிந்துரைத்த‌ நண்பர் டான் அசோக்கிற்கு நன்றி.



சுயமரியாதை தந்த எங்கள் முப்பாட்டன்

கரூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையினை ஒட்டியவாறே சுமார் 50 கி,மீ தூரத்திற்கு காவிரி ஆற்றைக் கைப் பிடித்தவாறே நெடுஞ்சாலை பயணிக்கும். இந்த பகுதி ஒன்றில்தான் எனது தாயாரின் சொந்த ஊர் கிருஸ்ணராய புரம் இருக்கிறது.

சரி பாதியாய் 1960 களில் இவ்வூரில் மூன்று அக்ரகாரங்களும், பிற்படுத்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட‌ மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் என்று  சாதிய கட்டமைப்போடு எல்லா குணங்களும் நிரம்பிய ஊராகவே இருந்தது.  

இந்த கால கட்டத்தில், திண்ணை பள்ளியில் இருந்து தமிழகம் வெகுவாக உயர் நிலைப் பள்ளிகளுக்கு மாறிக் கொண்டு இருந்தது. ஆனாலும் பெண்களைப் படிக்க வைப்பதா, படித்தால் எப்படி கட்டி கொடுப்பது, ஊர் பேசுமே  என்ற பிற்போக்கு தனமான பொது புத்தி எல்லா தரப்பு மக்களையும் அஞ்ச வைத்து கொண்டிருந்தது. கிராமத்து திண்ணை பள்ளியில் 5 ஆவது வகுப்பு முடித்து விட்டு என் தாயாரை  மேற் கொண்டு படிக்க வைக்கலாமா, அல்லது வீட்டிலேயே இருக்க வைக்கலாமா என அவர் குடும்பமே யோசித்ததில் தவறு இருக்க வாய்ப்பில்லை.

மேலும் திண்ணைப் பள்ளிகளில் கூட ஒடுக்கப்பட்ட மக்கள் திண்ணைக்கு கீழே தான் அமர்த்த வைக்கப்பட்டனர். இன்னும் ஒரு படி மேலே போய், குறிப்பிட்ட உயர் மேல் சாதி மட்டுமே அருகில் இருக்கும் பெரு நகரப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப் பட்ட காலம்.

இந்த சூழலில்தான் பெரியார் என்னும் ஈரோட்டு கிழவன் திருச்சிக்கு செல்லும் வழியில் அம்மாவின் நெருங்கிய உறவினர்  முத்துசாமி என்னும் குருக்கள் வீட்டில் தங்கி ஓய்வெத்து விட்டு போவார். அவர் இங்கே தங்கி இருக்கும் காலங்களில் கிருஸ்ணராய புரம் பகுதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சுயமரியாதை பிரச்சாரங்கள், மேடைப் பேச்சுகள் பிரபலமாகத் தொடங்கி இருந்தது.  

இவ்வூரில் பள்ளி கட்டிடத்திற்கு என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருந்த வேளையில் காசு வைத்திருக்கும் எல்லா பிற்படுத்தபட்ட, ஒடுக்கப்பட்ட‌ சமூகத்து ஆட்களையும் பெரியார்தான் கூப்பிட்டு பேசினார். கட்டிடக் கமிட்டி என்று ஒன்றை நியமித்து முத்துசாமி அவர்கள் தலைமையில் நிதி வசூலித்து அரசு பள்ளிக்கு கட்டிடங்கள் கொண்டு வரவும் உற்சாகப்படுத்தினார். பெண் பிள்ளைகளை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதின் பேரில் அம்மாவை ஆறாம் வகுப்பில் இப்பள்ளியின் முதல் பேட்சில் 101 ரூபாய் கட்டிட நன்கொடையாக கொடுத்து தாத்தா சேர்த்தார். அவ்வாறு மக்களிடம் பெறப்பட்ட நிதியில்தான் அன்றைய அரசுப் பள்ளிகள் கட்டப்பட்டன.

அதுவரை “சேது மணி” என்று இருந்த என் தாயார் பெயரை சமூக நீதிக்கென்று போராடிய இரும்பு பெண்மணியான தன் இணையர் மணியம்மை போல் ஆற்றல் மிகு பெண்மணியாக வர‌ வேண்டும் என வாழ்த்தி  என் தாயாருக்கு மணியம்மை  என்றே பெயர் சூட்டினார். பின்னாளில் என் தாயார் பட்டயப் படிப்பு முடித்து தொழிற்கல்வி ஆசிரியர் பணி பெற்று, எங்களையும் கல்வி பெற ஊக்குவித்தார். தொடர்ச்சியாக அஞ்சல் வழியிலேயே பி.லிட். எம்.ஏ, பி.எட் ஆகியவற்றில் தமிழ் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழாசிரியையாக கரூர் மாவட்ட  அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்றில் ஓய்வு பெற்றார்.

இடைப்பட்ட காலத்தில் பேருந்தில் எங்கள் கிராமத்தில் இருந்து 100 கி.மி தொலைவு தினமும் பயணித்து குளித்தலை அருகே உள்ள குக்கிராமம் ஒன்றிலும் பணி புரிந்தார். அவரின் பயணம் மகத்தனாது. பெண்கள் வேலைக்கு போய் ஆண்கள் சாப்பிடுவதா என பிற்போக்கு தனமாக பேசும் கிராமப் புறங்களில் இருந்து வந்த என் தாயார் 1970 களில் ஆரம்பித்து 2015 வரை நிகழ்த்தி இருப்பது பெரும் சாதனை என்றே சொல்வேன். இன்று என் கிராம‌த்தில் பெண்கள் பலரும் கல்வியில், வேலையில் பெரிய அளவில் சாதித்து காட்டியுள்ளனர். இது பெரியார் என்னும் தொடக்க புள்ளியில் இருந்து புறப்பட்டதாகவே என் தாயாரின் வரலாறு எனக்கு சொல்கிறது.

இங்கே நான் முக்கியமாக ஒன்றை ஒப்பிட்டு சொல்ல நினைக்கிறேன். தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஜப்பான், கொரியாவில் கூட பெண்ணுரிமை என்பது 100 சதவிகிதம் கிடையாது. உயர் பொறுப்பு பதவிகளில் பெண்களை அமர்த்த இன்னும் யோசிக்கும் ஆணடிமைத் தனம் மிகுந்த சமூகமே இன்னும் உள்ளது.  ஆனால், இந்த இடைப்பட்ட 50 ஆண்டுகளில் காலம் தமிழகத்தில் பெண்களின் நிலை வெகுவாக மாறி உள்ளது. பெண்கள் உயர் கல்வி பயில்கிறார்கள், தங்களுக்கான இணையரை தேடும் உரிமையினை  சட்ட ரீதியாக‌ பெற்று இருக்கிறார்கள். இவை யாவும்  தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக இங்கே நடைபெற்றுக் கொண்டு இருக்கும் திராவிட ஆட்சிகளின் நன் விளைவுகளே என்பதை கூறுவதில் நான் உவகை அடைகிறேன்.

இவை எல்லாமே பெரியார் என்னும் ஒரு கிழவனால் வந்தது என்று சொல்ல மாட்டேன். ஆனால் அதற்காக உழைத்தவர்களில் பலரையும் இங்கே வினையூக்கியாக செயல்பட்டு கொண்டு வந்த பெருமை அவரையே சாரும். பெரியார் தமிழகம் முழுக்க மூத்திர சட்டியோடு தொன்னூரு வயதிலும் சுற்றி தன் எழுத்தாலும், பேச்சாலும் இங்கே ஒரு சாதி பேதமற்ற சமூக வெளியை கட்டமைத்தார். இறை மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என அவர் போராடியது சுயமரியாதை என்னும் மானுட விழிப்பிற்கே. அவர் மீது எண்ணற்ற விமர்சனங்களை வைத்தார்கள், தூற்றினார்கள். ஆனாலும் அந்த கிழவனின் புகழ் அரை நூற்றாண்டுகள் கடந்து இன்னும் ந‌ம் இளைஞர்களை ஈர்த்துக் கொண்டு இருக்கிறது. காரணம், அவர் முன் வைத்த எல்லா காலத்திற்குமான புரட்சி கர சிந்தனைகளே.

 பெரியார் என்னும் கிழவன் இல்லாவிட்டால் சேதுமணியாக இருந்த என் தாயார் பால்ய விவாகம் செய்து கொண்டு  அடுப்பூதும் பெண்ணாகவே சமையல் கட்டில் தன் வாழ்வை கடந்து இருக்கக் கூடும். ஆனால், சுயமரியாதை மிக்க ஒரு பெண்ணாக, ஒரு தமிழாசிரியராக‌ பல நூறு மாணவர்களை அவர் தன் முப்பத்தைந்து ஆண்டுகால ஆசிரியப் பணியில் உருவாக்கி சாதித்தவை அதிகம்.

பெரியார் எங்களுக்கு குடும்ப விளக்கு. வாழ்க பெரியார், ஓங்குக அவர்தம் புகழ்.

வெண்தாடி வேந்தனின் இந்த 138 வது பிறந்த தினத்தில் சுயமரியாதை கருத்துகளை ஆழமாக எங்கள் பகுதிகளில் பரப்புரை செய்த வேடிச்சிப்பாளையம் திராவிட கழக தோழர்களுக்கும், அவ்வாறான ஒரு சூழலை எங்களுக்கு சாத்தியப்படுத்தி தந்த எனது உறவினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


 அன்னை மணியம்மையோடு தந்தை பெரியார்