Tuesday 10 August 2021

பிரித்தானியாவின் தெற்கு எல்லை

இந்தியாவைப் பொறுத்த வரை, வானுயர உயர்ந்து நிற்கும் அய்யன் வள்ளுவர் சிலை வீற்றிருக்கும் குமரி முனை நமக்கு எப்படி தெற்கு முனையின் எல்லையோ, அதே போல் பிரித்தானியாவின் தெற்கு பகுதியின் எல்லை Land's End என்கிற இடம். இந்த இடம் பிரித்தானியாவின் கார்ன்வெல் (Cornwall) பகுதியின் மேற்கு மூலையில் உள்ளது. இலண்டன் நகரில் இருந்து காரில் பயணித்தால் ஏறத்தாழ 294 மைல் தொலைவில் இவ்விடம் உள்ளது.
குறிப்பாக இலண்டன் நகரில் இருந்து 3 மணி நேரம் பயணத்தில் எக்சிடர் நகரை அடைந்து விடலாம். பிறகு எக்சிடர் நகரத்தின் எல்லையில் தொடங்கும் ஏ 30 நெடுஞ்சாலை கார்ன்வெல் பகுதியில் உள்ள‌ பென்சான்சு (Penzance) நகரின் வழியாக சென்று எல்லைப் பகுதியான செனன் (Sennen) என்னும் கிராமத்தின் அருகே இங்கு கடலோரத்தில் முடிவடையும். கார் பயணம் செய்பவர்களுக்கு இந்த சாலை ஏகாந்தமான அனுபவத்தை தரும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு அரைமணி நேர பயணத்திலும் சாலை ஓரம் ஓங்கி உயர்ந்த மரங்கள் கொண்ட வெவ்வேறான சூழலைக் கொண்ட பகுதிகள் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும். ஏ 30 சாலையின் முடிவின் எல்லையில் உள்ள பெரிய ஊர் பென்சான்சு நகரம். இந்த நகரில் இரண்டு மணி நேரம் தங்கி இதன் கடற்கரை அழகை ரசிக்கலாம். முடிந்தால் ஒரு காபி அருந்தி விட்டு போனால் மனதுக்கு குதுகலமாக இருக்கும். பென்சான்சு நகரில் இருந்து செனன் சிற்றூருக்கு 15 அல்லது 20 நிமிடம் குறுகிய சாலையில் பயணிக்க வேண்டி இருக்கும். சுற்றுலாப் பயணிகளை கவர Land's End பகுதியில் பல சிறப்பு அம்சங்களை கார்ன்வெல் கவுன்சில் ஏற்படுத்தி உள்ளனர். குறிப்பாக குழந்தைகள், பள்ளி மாணவர்களை கவரும் வகையில் சிறிய விலங்கு பண்ணை மற்றும் 3டி அனிமேசன் தியேட்டர் உள்ளது. ஆங்கிலக் கால்வாய் மற்றும் கெல்டிக் கடல் இரண்டும் சந்திக்கும் இப்பகுதியில் நிறைய மலை முகடுகள் நிறைந்த பாதை உள்ளது. இந்த மிக நீண்ட கடற்கரையோரத்தில் கடல் அழகை தரிசித்தபடியே கால் நடையாக நடக்கும் வசதி ஏற்படுத்தி உள்ளனர்.
பிரித்தானியாவின் தெற்கு எல்லைப் பகுதி இது என்பதால் இங்கு நிறுவப்பட்டுள்ள கைகாட்டி பலகை (sign post) முன்பு புகைப்படம் எடுத்துக் கொள்ள வார இறுதிகள் பெரிய கூட்டமே நிற்கிறது. நான் சென்ற போது ஒரு மணி நேரம் நிற்கும் அளவுக்கு கூட்டம் இருந்தத்தால் தள்ளி நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.இந்த பலகையில் உங்கள் பெயர், பிறந்த தேதியுடன் நீங்கள் பிரித்தானியாவின் எந்த ஊரில் வசிக்கிறீர்கள் என சொன்னால் அங்குள்ள புகைப்படக் கலைஞர் அதற்கான எழுத்துகளை தகவல் பலகையில் கோர்த்து விடுவார். இந்த இடத்தில் நீங்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ள பத்து பவுண்ட் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த திசைகாட்டும் பலகைக்கு சற்று அரை கி.மீ தொலைவில் உள்ள வீடுதான் பிரித்தானியாவின் முதலும், கடைசியுமான வீடு ஆகும். ஆகையால் இந்த வீட்டிற்கு சென்று பலரும் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். கடல் எல்லையில் இருந்து பார்க்கும் போது முதல் வீடு இதுதான் என்பதால் இந்த வீட்டின் சன்னல் வழியாக கடலைப் பார்ப்பதற்கு பெரும் கூட்டமே கூடுகிறது. பிரித்தானியாவிற்கு சுற்றுலா வருபவர்கள் நிச்சயம் இந்தப் பகுதிக்கு கட்டாயம் போய் வாருங்கள்.