Sunday 25 February 2018


பிரெகன் மலை ரயில்வே (Brecon Mountain Railways)

வேல்ஸ் தேசத்தில் மிகப் புகழ் வாய்ந்தது பிரெகன் மலை ரயில்வே (Brecon Mountain Railway). ஒரு மீட்டருக்கும் குறைவாக 0.60 மீட்டர் அகலமுடைய  இருப்புப் பாதையில் ஓடும் இந்த இரயில் நீராவி இயந்திரத்தால் இயக்கப்படுகிறது. பிரெகன் மலை இரயில் பென்ட் (pant) என்னும் இரயில் நிலையத்தில் இருந்து, டொர்பன்டா (Torpantau) என்னும் பள்ளதாக்கு வரை 7 கி.மீ நீளத்திற்கு பயணிக்கிறது. இவ்விரு நிலையங்களுக்கு இடையில் பான்ட்ஸ்டிசில் (Pontsticill) இரயில் நிலையம் உள்ளது. இதன் அருகில் தான் வேல்சின் மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான பான்ட்ஸ்டிசில் நீர்த் தேக்கம் உள்ளது. 

ஏறத்தாழ பென்ட் இரயில் நிலையத்தில் இருந்து 25 நிமிடம் பயணித்தால் டொர்பன்டா பள்ளதாக்கின் உச்சியை அடையலாம். உடலை உறையச் செய்யும் குளிர் நிலை இருந்தாலும் நல்ல சூரியம் வெளிச்சம் இன்று இருந்ததால் பள்ளதாக்கில் இருந்து வரும் குளிர் காற்றை அனுபவித்தபடி சிறிது நேரம் நின்றேன். தூரத்து மலை முகட்டில் மேய்ந்து கொண்டு இருக்கும் கம்பளி ஆடுகள், இடையில் நீர் தேக்கம் என பார்ப்பதற்கே மிக ரம்மியமான பகுதி இது. 

மேலும் இப்பகுதி வேல்சு தேசத்தின் மிகப்பெரிய தேசிய பூங்காக்களில் ஒன்றான பிரெகன் பிகான் தேசிய பூங்காவின் (Brecon Beacons National Park) தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. ஆகையால், பிரித்தானியாவிற்கு சுற்றுலா வருபவர்கள் இந்த பகுதியில் இரண்டு நாள் தங்கி  பிரெகன் பேகான் தேசிய பூங்காவினை நன்கு சுற்றிப் பார்க்கலாம்.


Brecon Mountain Railway ticket office, Pant station.

Pontsticill Reservoir 

Torpantau station

Torpantau station


Torpantau station

Torpantau station

Pontsticill Reservoir 

Torpantau station



Monday 19 February 2018


பாக்டீரியா தொற்றும் அதன் தகவமைப்பும் (Antimicrobial resistance)

பாக்டீரியாவின் தாக்குதலில் இருந்து மனித உயிர்களை காக்கும் பணியில்  ஆன்டிபயாட்டிக்கின் (antibiotic) பங்கு இன்றியமையாதது. இதன் வரலாறு 1928 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் ஸ்காட்லாந்து தேசத்து அறிவியலாளர் மருத்துவர் அலெக்சான்டர் பிளெமிங் ( Alexander Fleming) என்பார் கண்டுபிடித்த பென்சிலினில் (Penicillin) இருந்து துவங்கியது. இன்றைக்கு சந்தையில் அனுமதிக்கபப்ட்ட ஆன்டிபயாடிக் மற்றும் அதன் அடிப்படை தகவலை பிறிதொரு பதிவில் விளக்கமாக பார்ப்போம்.

ஒரு குறிப்பிட்ட பாக்ட்டீரியா தொற்று நோய்க்கு ஆன்டிபயாடிக் மருந்து தரும் போது குறிப்பிட்ட கால இடைவெளியில் பாக்டீரியா தன்னை இந்த மருந்தில் இருந்து தப்பித்து கொள்ளும் உத்தியினை  (survival) தன்னுள்ளே வைத்துள்ளது. இதன் தகவமைப்பு உத்திகள் நான்கு வழி முறைகளில் நடைபெறுகிறது. அதில் முக்கியமானது அரைகுறையாய் கொல்லப்படும் பாக்ட்டீரியா  கிருமிகள் அருகில் இருக்கும் ஆரோக்கியமான கிருமிகளுக்கு இத்தகவலை அனுப்பி விடுகின்றன. பிறகு என்ன, அந்த பாக்டீரியாவின் மரபணு அளவில் சில மாற்றங்களை ஏற்படுத்தி  (Conjugation) எளிதில் ஆன்டிபயாடிக் மருந்துகளிடம் இருந்து தப்பித்து விடும்.

ஆகையால் ஒரு ஆன்டிபயாடிக் மருந்து குறிப்பிட்ட வருடங்களுக்கு மேல் தீவிரமாக பாக்டீரியாவின் தகவமைப்பினை எதிர்த்து செயலாற்ற இயலுவதில்லை. 

அப்படியானால், ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் என்ன ஆகும். பாக்டீரியாவில் தொற்றை பொருத்து அவை உடலினுள் பரவும் வேகத்திற்கு தக்க மனிதன் உயிரை விட வேண்டி வரும். அம்மா, ஆயா வைத்தியம் என்று பலரும் கை வைத்தியம் செய்து கொண்டே பல தீவிர பாக்டீரிய தொற்றுகளின் விபரீதம் தெரியாமல் உயிரை விட இதுவும் ஒரு காரணம்.

என்னடா கொடுமை இது. ஆன்டிபயாடிக் எடுத்தாலும் பாக்டீரியா தப்பித்துக் கொள்கிறதே என யோசிக்க வைக்கிறது அல்லவா?

ஆம், பாக்டீரியாக்களும் மனிதர்களைப் போலவே மிகத் திறமையானவை. தன்னை ஒவ்வொரு கால கட்டத்திற்கும் தகுந்த வாறு தகவமைத்துக் கொள்வதில் அதி புத்திசாலி. குறிப்பாக ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராக பாக்டீரியாக்கள் எதிர்ப்பு ஆற்றலை பெறுவதை ஆன்டிமைக்ரோபிய ரெசிஸ்டன்ஸ் (antimicrobial resistance)  என்று அறிவியல் உலகம் அழைக்கிறது. இங்கே மைக்ரோப்ஸ் (microbes) என அழைக்கப்படுவை பாக்டீரியாக்களோடு சேர்த்து, பூஞ்சைகள், வைரஸ்கள், ப்ரோட்டிஸ்ட்டுகள் என பலவகை கிருமிகள் சேர்ந்ததுதான். 

மனித உடலுக்குள் ஏற்படும் ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்சை எப்படி குறைக்கலாம். ஒரு மருத்துவர் உங்களுக்கு மூன்று நாளைக்கு ஆன்டிபயாடிக்  மருந்துகளை பரிந்துரைத்தால் குணமாகினாலும் மருந்துகளை முழுச் சுற்று முடியும் வரை மருந்தினை எடுத்துக் கொள்ளுங்கள். அரைகுறையாய்,  நோய் முற்றிலும் குணமாவது தெரியாமல் இடையிலேயே மருந்தினை நிறுத்தினால், அடுத்த முறை அதே பாக்டீரியா தொற்று மிக வீரியத்துடன் தாக்கும் போது முன்பு கொடுக்கப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்து வேலை செய்யாது. 

ஆகவே மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை முழுச் சுற்றுக்கும் எடுத்துக் கொள்ளுங்கள். மற்றொன்று நீங்களாகவே கூகுளிலோ அல்லது நண்பர்களுக்கு தரப்பட்ட மருந்து பரிந்துரையினையோ எடுத்துக் கொள்வது, அல்லது மெடிக்கலுக்கு சென்று நீங்களாகவே மருந்து வாங்கி உண்பதை தயவு செய்து நிறுத்துங்கள்.  இதுவும் ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் அதிகரிக்கும் காரணிகளில் இதுவும் ஒன்று.


சரி நான் சொல்ல வந்த விசயத்துக்கு வருகிறேன்.

இந்தியாவின் பொதுச் சுகாதாரத்தில் (public health) இன்று வரை சவாலாக இருப்பது திறந்த வெளியில் மலம் கழிப்பது  (open defecation). குறிப்பாக திறந்த வெளியில் மலம் கழிக்கும் போது ஏற்படும் பாக்டீரியா தொற்று அச்சூழலில் வசிக்கும் அனைவரையும் மிக மோசமாக பாதிக்கக் கூடியது. மேலும் இவை அச்சூழலில் மிக வலிமையோடு எதிர்ப்பு சக்தி  (resistance) பெறுவதால் இவற்றினை அழிப்பதும் கடினம். எளிய வார்த்தையில் சொல்லப் போனால் மிக மோசமான ஒரு வெடிகுண்டை ஒவ்வொரு நாளும் திறந்த வெளியில் வெடிக்க வைக்கிறீர்கள்.

இந்த மைக்ரோப்சுகள் நீர் நிலை, குடி நீர் தேக்கிகளில் கலக்கும் போது பல்வேறு வியாதிகளை உண்டு செய்பவை. பிறகு இதனை அழிக்கவல்ல தீர்வு ஒன்றினை பெறுவது என்பது மிகக் கடினம்.

மீண்டும் மீண்டும் ஏன் சொல்கிறேன் என்றால், 1928 ஆம் ஆண்டு தொடங்கி நூற்றுக்கும் மேற்பட்ட ஆன்டிபயாடிக் மருந்து வகைகளை இயற்கை, மற்றும் செயற்கை வேதி பொருட்களை கொண்டு மருந்துலகம் வடிவமைத்து இருந்தாலும், 1987 ஆம் ஆண்டிற்கு பிறகு புதிய வகை ஆன்டிபயாடிக் மருந்துகளை வடிவமைக்க இயலவில்லை. காரணம் ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் என்னும் காரணி.

ஆகையால், திறந்த வெளியில் உங்கள் பகுதியில் மலம் கழிக்கும் வழக்கம் இருக்குமானால் அருகில் இருக்கும் பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநாகராட்சி சுகாதாரத்துறை மூலம் இதனை நிறுத்த வலியுறுத்துங்கள்.

இந்த தளத்தில் அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சேவை மிக முக்கியமானது. 

உலக சுகாதார நிறுவனத்தின்  (World Health Organisation) அறிவுறுத்தலின் படி உலகை எதிர் நோக்கி இருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ்  என்னும் காரணிதான். இது எந்த தேசம், வயது, பாலினம் என எதையும் பார்க்காது தாக்கும் வல்லமை கொண்ட பாக்டீரியாக்களை உருவாக்க வல்லது.

ஆகவே இவ்விசயத்தில் அரசு, பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள், அறிவியலாளர்கள் என எல்லோரும் ஒரு குடையில் கீழ் இயங்கி ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டென்ஸ் சிக்கலுக்கு எதிராக நின்று போராடுவோம்.

குறிப்பு:
தயவு செய்து இந்தப் பதிவில் மரபு வழியாக எதையாவது செய்கிறோம் என உளற வேண்டாம். இவை நம்பிக்கை சார்ந்த பதிவு அல்ல, முழுக்க முழுக்க உலகமே எதிர் நோக்கி இருக்கும் சுகாதார பிரச்சினை. 

சானிட்டரி துறையில் பணி புரியும் என் ஜி ஓக்கள் யாரேனும் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும். பிரித்தானியா, இந்தியா கூட்டு ஆராய்ச்சியில் இந்த தளத்தில் ஆய்வுப் பணி செய்ய பல தகவல்களை சேகரித்துக் கொண்டுள்ளேன்.

மக்களின் நலன் கருதி

அன்புடன்
முனைவர் சுதாகர் பிச்சைமுத்து
சுவான்சி பல்கலைக் கழகம்
19/02/2018





at AMRSan Workshop held at ICT Mumbai, Feb 3-8, 2018


Sunday 18 February 2018

கர்நாடகத்திடம் இருந்து தமிழகம் நீரைப் பெற்றுக் கொண்டு தமிழகம் அவர்களுக்கு திருப்பி தருவது என்ன?
இன்றைக்கு பிற மாநிலத்தவரின் பார்வையில் நிச்சயம் இந்த கேள்வி எழும்.
இதற்கான விடையினை நேரடியாக தேடிப் பார்ப்பதை விடவும் இரு மாநிலங்களுக்குள் மறைமுகமாக பரிமாறக் கொள்ளப்படும் மனித வள ஆற்றல், வணிகம், ஆற்றல் பரிமாற்றம், என பல்வேறு நிலைகளில் நாம் ஒப்பிட்டு பார்க்கலாம்.
முதலில் கர்நாடகத்திடம் இருந்து தமிழகம் நீரைப் பெற வில்லை. "காவிரி நதி நீர்" தேசிய சொத்து. மேலும் தமிழர்களுக்கு சட்டரீதியில் பெற வேண்டிய உரிமையான‌ நீரைப் பெறுகிறோம். இதில் திருப்பி தர வேண்டியது என்ற ஒரு பார்வையே அவர்களை காவிரி நீருக்கு முழுப் பாத்தியம் நிறைந்தவராக்குகிறது.
இங்கே நியூஜெர்சி, நியூயார்க் மாகாணங்களுக்கிடையேயான ஹட்சன் நதி நீர் சிக்கலை ஒப்பிடலாம். ஹட்சன் நதி நீர் பாயும் இரு அருகமை மாநிலங்கள் ஒன்றுக்கொன்று பெறுவது என்ன? தருவது என்ன.
ஆனால் அவர்கள் இதற்கப்பால் அமெரிக்க ஒன்றியத்தின் “இன்டர்நேசனல் காமன் கமிசன்” மூலம் இணைந்து இரு மாநில மக்கள் நலனுக்கான 
கூட்டாகச் செயல்பாடுகளை செய்கிறார்கள். 
அமெரிக்காவின் மாநில சுயாட்சி உரிமை போல் ஒரு வேளை இந்தியாவிலும் அமையுமெனில் கர்நாடகம், தமிழகம் இரண்டும் செக் அன்ட் பேலன்ஸ் முறையில் நேரடியாக இணைந்து செயலாற்றவும் வாய்ப்புள்ளது.

புவிசார் கட்டமைப்பு பார்வையில் காவிரி நதி ஹட்சன் நதியினைப் போல் அல்லாமல் மேட்டில் இருந்து தாழ் நிலையில் தமிழகம் நோக்கி இயற்கையாகவே பாயும் நதி. இதில் ஒவ்வொரு பகுதியும் வேறு வேறான நிலப்பரப்பினை கொண்டவை. ஆகவே இந்த நதியினை நேரடியாக இரு மாநிலத்திற்கும் இடையேயான நீர்ப் போக்குவரத்திற்கு பயன்படுத்த இயலாது. இதற்கப்பால், தமிழகம் எப்படி கர்நாடக மாநிலத்திற்கு இந்நீரைப் பெறுவதன் மூலம் உதவ முடியும்.
தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையே மனித வள மேம்பாட்டில் நிகழும் பரிமாற்றம் மிகப் பெரியது. இன்றைய சூழலில் இந்தியாவின் தகவல் துறை நுட்ப துறையில் இந்தியாவிற்கு அதிக லாபம் தரும் மாநிலம் கர்நாடகம். இதற்கு அடுத்தது தமிழகமும், ஆந்திராவும் உள்ளது.
குறிப்பாக பெங்களூருவில் உள்ள சர்வதேச நிறுவனங்களுக்கு தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளில் படித்த பல ஆயிரக் கணக்கான ஊழியர்களை தமிழகம் தந்திருக்கிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு கர்நாடகத்திற்கு தந்திருக்கும் மனித வள ஆற்றல் மிக அதிகம்.
இந்த பொறியாளர்கள் அனைவரும் மேட்டுக்குடி குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் அல்லர். பலரும் காவிரி பாய்கிற அல்லது வேறு நிலப்பரப்பில் இருந்து ஏழை, நடுத்தர வர்க்கத்தில் இருந்து பயின்று வந்தவர்கள்.
இவர்கள் சம்பளத்திற்காக வேலை பார்க்கிறார்கள் என்று வாதம் வைத்துக் கொண்டாலும், இத்தனை மனித வள ஆற்றலை கொணர்வதற்கு ஆரம்ப பள்ளியில் இருந்து உயர் கல்வி வரை ஒரு அரசு எத்தனை ஆயிரம் கோடி செலவிட வேண்டும் என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
இவை தவிர, கர்நாடகத்திற்கு இங்குள்ள பல சிறு தொழில் நிறுவனங்கள், குறிப்பாக கோவை பகுதியில் இருந்து உதிரி பாகங்களை தருகின்றனர். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆக இரண்டு மாநிலங்களின் வளர்ச்சியும் காவிரி நீர் பங்கீடு வாயிலாகவும், அதற்கு அப்பாலும் ஒன்றுக் கொன்று பிரித்தறிய இயலாதவை. இதன் விளைவினை நேரடியாக அளவிட முடியாது. மேலும் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் விளையும் அரிசி பெரும்பான்மையும் கர்நாடகத்திற்கே அனுப்பப் படுகிறது. கர்நாடகாவில் நெல் உற்பத்தி குறிப்பிடத்தக்க‌ நிலையில் இருந்தாலும் தமிழகத்தில் இருந்து தரப்படும் அரிசி கர்நாடக உணவுத் தேவையில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை தருகிறது.
ஆகையால், தமிழகம் கர்நாடகத்திற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தரும் வளம் குறிப்பிடத்தக்கது.
சர்க்குலர் எக்கானமி (circular economy) பார்வையில் பார்த்தால் காவிரி படுகையில் நிகழும் மனித வள மேம்பாடானது இரு மாநிலங்களிலும் பெரிய மந்திர சாவியாக இருக்கிறது.
இவை எல்லாவற்றையும் விட இன்றைக்கும் கர்நாடக நிலப்பரப்பில் அதிகமான மழைப் பொழிவு காலத்தில் தமிழகம் அத்தனை நீரையும் வடிகாலாக மாற்றி கடலில் கலக்க வைத்து காக்கிறது. இந்த கால கட்டங்களில் தமிழக காவிரி படுகையில் ஏற்படும் வெள்ள சேதம் இன்றும் தொடரும் சோகம். தமிழகம் தன்னையே வருத்திக் கொண்டு கர்நாடகத்தை காக்கும் ஆபத்துதவி.
தமிழகம் கர்நாடகத்திடம் இருந்து பெற்றுக் கொண்டும், திருப்பி கொடுத்துக் கொண்டுதாம் இருக்கிறது. ஆகையால் காவிரி கர்நாடகத்தில் உற்பத்தி ஆகிறது என்ற ஒற்றை பார்வையில் கர்நாடகம் நாம் போற்றக் கூடிய அளவிற்கு ஜென்டில்மேனும் அல்ல, தமிழகம் அன்கன்டிசனலாக அவர்களுக்கு திருப்பி தர வேண்டிய செஞ்ச்சோற்று கடனாளிகளும் அல்ல.
பெருந்தேசிய இனங்களில் தமிழர், கன்னடர் இருவரும் புவிசார் நிலப்பரப்பில் மிக அருகே இணைந்து செயலாற்றிடக் கூடிய வகையில் இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழகம் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக பல விசயங்களில் விட்டுக் கொடுத்து கர்நாடகத்தை அனுசரித்தே வந்திருக்கிறது என்று சொல்லலாம்.

Saturday 17 February 2018

காவிரி நீர்ப் படுகையும் உச்ச நீதி மன்ற தீர்ப்பும் - 2

காவிரி நதி நீர்ப் பங்கீட்டில் உச்ச நீதி மன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பில் எட்டாவது பக்கம் மிக முக்கியமனாது. அதற்குள் செல்வதற்கு முன் தீர்ப்பு எந்த பார்வையின் அடிப்படையில் அணுகப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

முதலில் கர்நாடகம் தெளிவாக ஒரு விசயத்தை முன் வைக்கிறது. "நதி நீர் பங்கீட்டில் ஒரு நதியின் நீரோட்டத்தினை (water flow)  விடவும் அந்த நதி பாயும் பகுதிகளில் உள்ள நீர் தேவையினை முன் வைத்தே பங்கிட வேண்டும். " 

கர்நாடகம் ஏன் இந்த கூற்றை முன் வைக்க வேண்டும்?

கர்நாடக பகுதியில், காவிரி உற்பத்தி ஆகிறது என்றாலும் தமிழகப் பகுதியில் தான் அதன் பயணம் அதிகம். உதாரணத்திற்கு, காவிரி நதி கர்நாடகத்தில் பாயும் நீளம் தோராயமாக 320 கி.மீ. தமிழகப் பகுதியில் பாயும் நீளம் 416 கி.மீ. இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான நிலப்பரப்பில் பாயும் நீளம் 64 கிமீ. மொத்தம் காவிரி நதியின் நீளம் தோராயமாக 800 கிமீ நீளம். அந்த வகையில் தமிழகம் அதிகம் உரிமை கொண்டாடி விடக் கூடாது அல்லவா. ஆகையால் தேவைகளின் அடிப்படையிலேயே நதி நீர் பங்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.

இரண்டாவது, மற்ற நாடுகளில் இதற்கு முன் நடந்த‌ சர்வதேச நீர் பங்கீட்டு வழக்கின் தீர்ப்புகளை உச்ச நீதி மன்றம் ஒப்பிடுகிறது. உதாரணத்திற்கு, கனடா, அமெரிக்காவிற்கு இடையேயான கொலம்பியா நீர்ப் படுகை சிக்கல். அமெரிக்காவில் நியூஜெர்சி மாநிலத்திற்கும் நியூயார்க் மாநிலத்திற்குமிடையேயான‌ நீர் பங்கீட்டு வழக்கு, என பல வழக்குகளை மேற்கோள் காட்டுகிறது. அத்துடன் இரண்டு வேறு பட்ட அரசியல் ஆளுகையின் கீழ் இருக்கும் நிலப்பரப்புகளுக்கு இடையே பாயும் நதியின் நீரைப் பங்கிடுவதில் சர்வதேச விதியாக கருதப்படும் ஹெல்சிங்கி (Helsinki rules) விதிகளையும் கணக்கில் கொள்வதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பில் சொல்லியுள்ளது.

தற்போது விசயத்திற்கு வருகிறேன். பக்கம் 8ல் (பத்தி 250-260) தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் வீட்டு உபயோக (domestic), மற்றும்  தொழிற்சாலை (industries) தேவைகளையும் வரையறுக்கிறது. இதில் பெங்களூரு (Bangaluru) நகரின் தேவையாக கர்நாடக தரப்பு முன் வைத்திருக்கும் தரவுகளை உச்ச நீதி மன்றம் முக்கிய காரணியாக எடுத்துக் கொண்டுள்ளது. 

அதன் விபரம் பின்வருமாறு;
பத்தி 256 - 1990 ஆம் ஆண்டு கணக்குப் படி, பெங்களூரு நகரின்  நீர்த் தேவையானது 14.52 டிஎம்சி யாகவும், 20 அல்லது 25 வருடங்களில் உத்தேச நீர்த் தேவை தட்டுப்பாடு 30 டிஎம்சியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது பெங்களூரு நகரின் நீர் தேவையானது 64% காவிரிப் படுகைக்கு வெளிப்பகுதியிலும், 36% காவிரி நீர்ப் படுகைப் பகுதியிலும் இருந்து பெறப்படுகிறது. இந்த அளவீட்டில் 25% மக்களுக்கு நாள் ஒன்றிற்கு ஒருவருக்கு 135 லிட்டரும், 75% மக்களுக்கு தலைக்கு 100 லிட்டரும் வழங்கப்படுவதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. இதன் அடிப்படையில் பெங்களூர் நகரின் தேவையானது 17.72 டிஎம்சி ஆகும். இந்த நீரை 50% நிலத்தடி நீர் வாயிலாகவும், மீதம் 50% காவிரி நீர்ப் படுகையில் இருந்தும் பெறப்படுகிறது. 

பத்தி 257 - அதே போல தமிழகத்தின் நீர் தேவையானது 2011 ஆண்டு படி 21.98 டிஎம்சியாக இருக்கும் என்ற கணிப்பில் 50% நிலத்தடி நீரைக் கொண்டும், 50% நீர்நிலைகள் மூலமும் பெற்றுக் கொள்ள முடியும் என்ற காரணியை உச்ச நீதி மன்றம் வைக்கிறது. 

பத்தி 256 மற்றும் பத்தி 257 படி,  தமிழகத்தை ஒப்பிடும் போது பெங்களூரு நகரின் நிலத்தடி நீரைக் கொண்டு அம்மக்களுக்கு விநியோகம் செய்ய இயலாததால் தமிழகத்திற்கு தரப்பட்ட நீரின் அளவில் இருந்து 4.75 டிஎம்சி நீரை குறைத்துள்ளது. 

பெங்களூரு போன்ற பெருநகரம் நகர்மயமாக்கலினால் நீர்த் தேவை அதிகரிக்கும் போது,  தமிழகத்திலும் காவிரி நீர்ப் படுகை பகுதியில் இருக்கும் பெருநகரங்களில் உடனடி நகர் மயமாக்கலினால் நீரின் தேவையும் அதிகரித்து இருக்குமே. அதனை மட்டும் கவனத்தில் உச்ச நீதி மன்றம் எடுத்துக் கொள்ளவில்லை. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், 
பெங்களூரு நகரின் தேவைக்கு அங்குள்ள நிலத்தடி நீரை தீவிரமாக கணக்கில் கொண்டவர்கள், தமிழகத்தில் காவிரி நீர்ப் படுகையில் இருக்கும் சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை மற்றும் இந்த பகுதியில் இருந்து செயல்படும் கூட்டு குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றினால் பயனடைந்து கொண்டிருக்கும் 5 மில்லியன் மக்களைப் பற்றி கணக்கில் எடுத்துக் கொள்ளாதது அதிர்ச்சியாக உள்ளது. 

காவிரி நீர்ப் படுகையில் இருப்பவர்களின் நிலத்தடி நீர் ஆதாரமே கர்நாடகத்தில் இருந்து திறந்து விடப்படும் நீரைப் பொறுத்தே இருக்கும். மேலும், பெங்களூரு நகருக்கு மட்டும் உத்தேச நீர் தட்டுப்பாட்டினை (projection rate of water quantity) கணக்கில் கொண்டவர்கள், வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 2011 ஆண்டில் இருந்து ஏழு ஆண்டுகள் கழித்து இன்றைய தமிழகத்தின் நிலையினையும் வழக்கில் கணக்கில் கொள்ளாதது துரதிஸ்டவசமானது. 

நீர் பங்கீட்டு முறைகளில் உலகம் முழுவதும் பின்பற்றப்படும் ஹெல்சிங் விதிகளோடு, சர்வதேச‌ நிலத்தடி நீர் விதிகளை (International Ground Water Regulations) கணக்கில் கொள்ளாதது வருத்தமே. உதாரணத்திற்கு நீர் நிலை, ஆற்று வழி நீர் தடம் சார்ந்த நிலத்தடி நீரை கணக்கில் அறவே எடுத்துக் கொள்ளவில்லை. 

தமிழகம் ஏதோ நீர் ஆதாரங்களை சரி வர கவனிக்கவில்லை என்று பலரும் ஆதங்கப்படும் அதே சூழலில் பெங்களூரு நகரின் மிக மோசமான கட்டமைப்பும், கடந்த 25 வருடங்களில் கர்நாடக அரசின் தொலை நோக்கற்ற திட்டங்களும்தான் பெங்களூரு நகரை இன்றைய நிலைக்கு தள்ளியுள்ளது. இதையும் நீதி மன்றம் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். 

சமீபத்தில் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் டி.வி. ராமசந்திரன் அவர்கள் தலைமையிலான ஐவர் குழு  "கர்நாடக அரசு மழை நீர் சேகரிப்பினை பெங்களூரு நகரில் சிறப்பாக செயல்படுத்துவதில் தவறி விட்டனர்" என்று தங்களது ஆயவறிக்கையினை சமர்பித்துள்ளனர். 1800 ஆம் ஆண்டு கணக்கு படி பெங்களூரு நகரில் உள்ள ஏரிகளின் நீர் பிடிப்பு கொள்ளளவு 35 டிஎம்சி.  ஆனால், தற்போது அதன் கொள்ளளவு 2 டிஎம்சியாக குறைந்துள்ளது.  இந்த அளவிற்கு நீர் நிலைகளை மோசமான நிலைக்கு தள்ளிய கர்நாடகம் பற்றி எவரும் பேச மாட்டார்கள்.

பத்தி 259 ல் கார்நாடக பகுதியில் இருக்கும் காவிரி படுகையில் கிடைக்கும் நிலத்தடி (ground water) நீரானது 3.82 டிஎம்சி நீர் என உச்சநீதி மன்றம் சிலாகிக்கிறது. ஆனால் அதே அளவு நீரைக் கொண்டு ஏன் அவர்களால் பெங்களூர் நகரை சமாளிக்க முடியாதா? தற்போது  அவர்களுக்கு கிடைக்கும் நீரின் அளவான நாள் ஒன்றிற்கு 1,391 மில்லியன் லிட்டரில் 678 மில்லியன் லிட்டர் காவிரி நீர்ப் படுகையிலும், 672 மில்லியன் நிலத்தடி நீர் வாயிலாகவும், 41 மில்லியன் சுத்திகரிக்கபப்ட்ட நீரிலும் இருந்து கிடைக்கிறது. அவர்களுக்குத் தேவையான நீரினை பெங்களூரு நகரைச் சுற்றியுள்ள ஏரிகளை தூர்வாரி மழைநீரினை தேக்கி வைத்தாலே அவர்களுக்கு தேவையான 672 மில்லியன் லிட்டர் நீரை நாள் ஒன்றிற்கு எளிதாக பெற முடியும். ஆனால் வம்படியான தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நீரில் கை வைத்துள்ளார்கள்.

மேலும் பெங்களுரு நகர்புறத்து மக்களுக்கு தரப்படும் நீரின் அளவை தலைக்கு 150 லிட்டர் என நிர்ணயித்து விட்டு தமிழகத்தில் காவிரி படுகையில் இருக்கும் மாநகரங்களுக்கு தலைக்கு 100-130 லிட்டர் என நிர்ணயித்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இரண்டு சமமான நகரை ஒப்பிட்டிருந்தால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் பெங்களூரு நகருக்கு மட்டும் சிறப்பு கவனம் தந்து விட்டு தமிழகத்தில் உள்ள பெரு நகரங்களை கணக்கீட்டில் புறக்கணித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. 

மொத்தத்தில் நம்மிடம் குறைக்கப்பட்டிருக்கும் 4.75 டிஎம்சி நீர் எத்தையக விளைவினை ஏற்படுத்தும்?

ஒரு டிஎம்சி (tmc.ft) நீரைக் கொண்டு நாள் ஒன்றிற்கு 6 லட்சம் மக்கள் பயனடைவார்கள். அப்படியானால்,  30 லட்சம் மக்களுக்கு தேவையான நீர் இனி நமக்கு நாள் ஒன்றிற்கு குறையும். அதனை எப்படி கூட்டு குடிநீர் திட்டத்தை நம்பி இருப்பவர்கள் சமாளிக்கப் போகிறார்கள். 

இவை எல்லாவற்றிற்கும் உச்சமாக மீண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணியினை ஒன்றிய அரசிடமே தந்துள்ளது உச்ச நீதி மன்றம். இது மீண்டும் பூனையை காவலுக்கு வைக்கும் வேலைதான். 

இந்த பதிவில் தமிழகத்திற்கு குறைக்கப்பட்டு இருக்கும் 14.75 டிம்சி நீரில் 4.75 டிஎம்சிக்கு மட்டும்தான் இந்தப் பதிவில் விளக்கமாக எழுதி உள்ளேன். மீதம் 10 டிஎம்சி நீர் எப்படி எடுத்துக் கொள்ளப்பட்டது என இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.

இவை எல்லாவற்றையும் விட கர்நாடக தரப்பு வாதத்திற்கு நாம் மிகச் சரியாக தரவுகளை முன் வைத்து வாதாடினோமா அதனையும் நாம் தீர்க்கமாக வாசிக்க வேண்டி உள்ளது.
















Friday 16 February 2018

காவிரிப் படுகையும் உச்ச நீதி மன்ற தீர்ப்பும்

தமிழகத்தின் மத்தியப் பகுதியில் இருக்கும் கரூர் நகரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொடும். கரூர் நகரின் எல்லையில் இருக்கும் இனாம் கரூர், தாந்தோனிமலை, ஆண்டாங்கோவில் நகராட்சி பகுதிகளில் வசிப்பவர்களையும் சேர்த்தால் தோராயமாக 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் கரூர் நகரிலும், அதனை ஒட்டியும் வசிக்கிறார்கள்.இவர்கள் அனைவருக்கும் குடிநீரானது எங்கள் ஊரின் அருகில் இருக்கும் காவிரி ஆற்றுப் படுகையில் இருந்துதான் செல்கிறது. 

தமிழகத்தில் இன்று வரை நடைமுறையில் இருக்கும் பல கூட்டு குடிநீர் திட்டத்தில் கரூர்‍- திண்டுக்கல் கூட்டு குடிநீர் திட்டமும் ஒன்று. முதல் திட்டத்தின் மூலம் ஏற்கனவே இதே பகுதியில் இருந்துதான் தினமும் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் செல்கிறது. தற்போது இந்த திட்டம் செயல்படும் நெரூரில் இருந்து பத்து கிமீ தொலைவில் காவிரி ஆற்றில் மாயனூர் பகுதியில் இருந்து இரண்டவாது கூட்டு குடிநீர் திட்டம் திண்டுக்கல்லுக்கு செயல்பட உள்ளது. 

இத்துடன் நாமக்கல் நகருக்கும்  காவிரி ஆற்றுப் படுகையில் இருந்துதான் குடிநீர் செல்கிறது. கரூர், திண்டுக்கல், நாமக்கல் நகரில் உள்ளவர்களோடு சேர்த்து இத்திட்டம் செல்லும் வழியில் இருக்கும் ஆயிரக்கணக்கான‌ கிராமங்களுக்குமான குடிநீர் ஆதாரம் காவிரி நீர் படுகையில் கிடைக்கும் நீர்தான். இதனை வைத்துப் பார்க்கையில், கரூர், திண்டுக்கல், நாமக்கல் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகள் என தோராயமாக 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு காவிரி நீர்ப் படுகைதான் முதன்மை குடிநீர் ஆதாரம்.

இவை தவிர திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் உள்ள குடிநீர் திட்டங்களும் காவிரிநீர் படுகையினை நம்பியே உள்ளது. அந்த வகையில் காவிரி நதியில் இருந்து பெறப்படும் நீர் தமிழகத்தில் 3 ல் ஒரு பங்கு குடி நீர்த் தேவையினை பூர்த்தி செய்து வருகிறது.

சரி,காவிரி நதிப் படுகையின் நீர் ஆதாரம் எங்கிருந்து கிடைக்கிறது?
ஒன்று கர்நாடகவில் இருந்து பெறப்படும் நீர், மற்றொன்று பருவ மழை. இரண்டு ஆதாரங்களில், கூட்டு குடிநீர் திட்டத்தினைப் பொறுத்த வரை கர்நாடகவில் இருந்து பெறப்படும் நீரின் அளவு மிக முக்கியமானது. குறிப்பாக, வருடத்தில் சொற்ப நாட்களே கர்நாடகத்தில் இருந்து வரும் நீரை நிலத்தடி நீராக சேமித்து வைப்பதன் மூலம் மட்டுமே இத்திட்டம் இயங்கி வருகிறது.சமீபத்தில் பொய்த்துப் போகும் பருவ மழையினை கணக்கிலேயே எடுத்துக் கொள்ள இயலாது.

இப்படிப் பட்ட சூழலில்தான் கர்நாடகம் தமிழகத்திற்கு 192 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு சொல்லியிருந்த நிலையில், தற்போது அந்த அளவில் இருந்து 14.75 டி.எம்.சியினை உச்ச நீதி மன்றம் குறைத்துள்ளது.   






இது தமிழகத்தில் இருக்கும் பல லட்சம் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தையே நிச்சயம் பாதிக்கும். 

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பில் தமிழகத்தின் நிலத்தடி நீர் ஆதாரத்தையும் கணக்கில் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். உண்மையில், கர்நாடகம் தரும் நீரில் தான் காவிரி ஆற்றின் படுகையில் நீர் சேமிப்பு நிகழும். மேலும் சமீப வருடங்களில் அளவுக்கு அதிகமாக அள்ளப்பட்ட காவிரி ஆற்று மணலால் நிலத்தடி நீர் மட்டம் மிக மோசமாக உள்ளது. 

எதிர் வரும் கோடைகாலம் உண்மையிலேயே தமிழகத்திற்கு பெரும் சவாலாக இருக்கும்.

நதி நீர் ஆதாரங்களைப் பொறுத்தவரை தனி ஒரு மாநிலம் சொந்தம் கொண்டாட முடியாது என்று உச்சநீதி மன்றம் தந்திருக்கும் தீர்ப்பு வரவேற்க வேண்டியது எனினும் நமக்கான உரிமையினை பிடுங்கிய வகையில் சொல்லனா துயரை தமிழக மக்களுக்கு உச்சநீதி மன்றம் தந்துள்ளது.













Saturday 10 February 2018


சாக்கடை நீர் ஒரு பொக்கிசம்


உங்களுக்கு பிடித்தமான பறவைகள் ஐந்தை சொல்லுங்கள் என்று யாராவது கேட்டால், நிச்சயம் அதில் காகம் இருக்கவே வாய்ப்பில்லை.

வசீகரிப்பான நிறம், குரல் என்று இல்லாததால் காகம் பெரிதாக மனிதர்களால் ஈர்க்கப்படவில்லை என்றாலும் காகம் குறித்து பல்வேறு பாசிட்டிவான‌  நம்பிக்கைகள் உலகமெங்கும் நிலவுகிறது. 

காக்கை ஆகச் சிறந்த புத்தி கூர்மையுடைய (intelligent) பறவை என்று அறிவியலாளர்கள் தற்போது நிரூபித்துள்ளார்கள்.. மனிதர்களின் நடவடிக்கைகளை கவனிக்கும் காகங்கள் அதனை அப்படியே செய்யவும் பழகுகிறது. குறிப்பாக காகம் அதிகம் சுத்தத்தினை எதிர்ப்பார்க்கும்  பறவை. புறாக்கள் என்னதான் அழகாக இருந்தாலும் அது மனிதர்களைப் போலவே எல்லா இடங்களையும் அசுத்தப் படுத்துவதோடு, மனிதர்களின் வாழ்விடங்களையும் ஆக்கிரமித்து கொள்ளக் கூடியவை.

ஆனால் காகங்கள் மனித நடமாட்டமே இல்லாத மரங்களின் கிளைகளில் வசிக்கும் தன்மை கொண்டது. மனிதர்கள் புழங்கும் இடங்களை அசுத்தப்படுத்தாதவை.

சரி எதற்கு இந்த காகம் பற்றிய பீடிகை. 

இங்கே புகைப்படத்தில் பார்க்கும் நீர்த் தேக்கத்தில் ஏராளமான காகங்கள் குளிப்பதையும் நீர் அருந்துவதையும் காணலாம்.




At sewage water treatment plant inside Rashtriya Chemicals and Fertilisers, Chembur, Mumbai.
காகங்கள் சுத்தமான நீர் நிலையில் மட்டுமே தனக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும். அதனாலேயே மனிதர்கள் பயன்படுத்தும் சுற்றுப் புறத்தோடு அனுசரித்து வாழ்பவை. அந்த வகையில் பார்த்தால் இந்த நீர் நிலை மிக சுத்தமானது என்று நாம் நிச்சயம் நம்பலாம்.

ஆனால், இந்த நீர்த் தேக்கத்தில் உள்ள நீரானது முழுக்க மும்பையின் ஒரு பகுதியில் இருந்து பெறப்பட்ட சாக்கடை (sewage) நீரை சுத்திகரிப்பு செய்தது என்றால் நம்ப முடிகிறதா?

மனித கழிவுகள், குப்பைகள், உணவு கழிவுகள் என பல்வேறு கழிவுகளை நீக்கி நீரை மட்டும் வடி கட்டி பல்வேறு நிலைகளில் சுத்திகரிப்பு செய்து இந்த நீரை ஒரு தேக்கத்தில் தேக்கி வைத்திருந்தார்கள். இந்த குப்பை சுத்திகரிப்பு நிலையம், மும்பை நகரின் செம்பூரில் உள்ள‌ ராஸ்ட்டிரிய ரசயானம் மற்றும் உரத் தொழிற்சாலையின் (Rashtriya Chemicals and Fertilisers) உள்பகுதியில் நிறுவப்பட்டுள்ளது.

மும்பை நகரின் எல்லைப் பகுதியில் இருந்து மிகப் பெரிய கால்வாய் மூலம் குப்பைகளை வடிகட்டி நீரை மட்டும் பிரித்து இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு  கொண்டு வருகிறார்கள். பின்னர் ஏரியேசன், உயிரி நுட்பம், மற்றும் தலைகீழ் சவ்வூடு பரவல் (reverse osmosis) என பல நிலைகளில் சுத்திகரித்து கிருமிகளற்ற, கடினமான தாதுக்கள் நீக்கப்பட்ட மிக‌ சுத்தமான நீரை தனியாக நீர்த் தேக்கத்தில் தேக்கி வைக்கிறார்கள்.

ராஸ்டிரிய உரத்தொழிற்சாலையின் ஐம்பது சதவிகித நீர்த் தேவையினை குப்பையில் இருந்து மறு சுழற்சி செய்யப்பட்ட நீரில் இருந்தே பெறுகிறார்கள். அதை விட ஆச்சரியம் மும்பை நகரில் உள்ள குடிசைகள் நிறைந்த சேரிப் பகுதிகளுக்கு டாய்லெட் மற்றும் இதர தேவைகளுக்கான பயன்பாட்டில் 75 சதவிகிதம் இந்த நீரைப் பயன்படுத்துகிறார்கள்.

நாள் ஒன்றிற்கு 22.75 மில்லியன் டன் மாநகராட்சி சாக்கடை கழிவில் இருந்து 15 மில்லியன் டன் குடி நீரை சுத்திகரித்து பெறுகிறார்கள். தற்போது டிராம்பே பகுதியில் மற்றொரு சாக்கடை நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நவீன நுட்ப வசதிகளுடன் நிறுவி உள்ளனர்.

மும்பை போன்ற கோடிக் கணக்கான மக்கள் வசிக்கும் பகுதியில் இது போன்ற கழிவு நீரை பாதுகாப்பாக சுத்திகரிப்பதோடு அதில் இருந்து கிடைக்கும் சுத்தமான நீரை மறு சுழற்சிக்கு செய்வதன் மூலம் சுற்றுப் புற சுகாதார சீர்கெட்டை பெருமளவுக்கு தடுக்க முடிகிறது. மேலும், மனித செயல்பாடுகள், தொழிற்சாலை தேவைகள் இவற்றில் வீணாகும் நீர்ப் பயன்பாடும் சேமிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில்  அதிகரித்து வரும் மக்கள் தொகையினால் எதிர் வரும் காலத்தில் நீர்த் தேவை மிகப் பெரிய சவாலாக இருக்கும். உதாரணத்திற்கு இந்தியாவின் கையிருப்பு நீரின் அளவு 2025 ஆம் ஆண்டு தோராயமாக 1320 கன மீட்டர் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஏறத்தாழ பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு 2001 ஆம் ஆண்டு நீர் இருப்பு 1816 கன மீட்டராக இருந்தது. இடைப்பட்ட 17 ஆண்டுகளில் 496 கன மீட்டர் கொள்ளவு தற்போது வேகமாக குறைந்துள்ளது. அப்படி என்றால் 2025 ஆண்டு நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

நீர் தட்டுப்பாட்டினை எதிர்க் கொள்ள ஒரே உத்தி கழிவு நீரினை மறு சுழற்சி செய்து அதில் இருந்து குடி நீர் அல்லாத மனித தேவைகளை பூர்த்தி செய்வது, விவசாயத்திற்கு பயன்படுத்துவது என முயற்ச்சிக்கலாம்.

சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் கேப்டவுன் நகரில் மிகப்பெரிய நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இங்கே நாள் ஒன்றிற்கு தற்போது கேப்டவுன் நகர் மன்றம் மூலம் ஒரு குடும்பத்திற்கு 25 லிட்டர் மட்டும் ரேசன் முறையில் வழங்கி வருகிறார்கள்.  இந்த 25 லிட்டர் நீரை வைத்து ஒரு குடும்பம் எப்படி வாழ முடியும் என யோசிக்கவே கொடுமையாக உள்ளது. மே மாதம் கோடையில் மிகப் பெரிய நீர் வறட்சியினை எதிர் கொள்ள "ஜீரோ டே" என்று இப்பொழுதே கேப் டவுன் நகரில் நாட்களை கணக்கிடத் துவங்கி விட்டார்கள்.

தமிழகம் கோடை காலத்தில் காவிரி நீருக்காக கர்நாடகத்தையே எதிர்பார்த்து உள்ளது. பருவ மழை பொய்த்து போனால் நிலைமை மிக மோசமாகி விடும். நம்மிடம் கைவசம் உள்ள‌ ஏரி, கண்மாய்களை தூர் வாரி வைப்பதோடு, அவற்றில் குப்பைகள், பிளாஸ்டிக் பைகள், முட்புதர்கள் என மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும். குறிப்பாக ஆக்கிரமிப்பு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்.

நகர்ப் புற பகுதிகளில் சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு அதிகமாக நீரை உறிஞ்சும் தொழிற்சாலைகள் இந்த நீரைக் கொண்டு இயங்கவும் அறிவுறுத்தலாம்.

மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகள் என தனித் தனியாக பிரித்துப் போட்டால் குப்பைகள் மறு சுழற்சி மூலம் மின்சாரம், உரம் போன்ற விலை மிகு பொருட்களை நன்மையாக பெற முடியும்.

குடிநீர் சேமிப்போடு, கழிவு நீரையும் சுத்திகரிக்கும் நுட்பங்களை விரைவாக கற்பதோடு பயன்படுத்தவும் பழகிக் கொள்ள வேண்டும்.

நம் நீர் நிலைகளில் காகம் பெருகட்டும்.


குறிப்பு:
உலக நாடுகளிலேயே சிங்கப்பூர்தான் கழிவு நீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்துவதில் முன்னனியில் உள்ளது. கழிவு நீரோடு, மழை நீரையும் சேதாரம் இல்லாமல் சேகரித்து தலை கீழ் சவ்வூடு பரவல் நுட்பம் மூலம் சுத்திகரித்து அவற்றை "NEwater"  என்ற பெயரில் குடிநீராக பாட்டில்களில் சந்தையில் விற்கிறார்கள்.



சிங்கப்பூர் அளவிற்கு இல்லை என்றாலும் மும்பையில் உள்ளது போல் சாக்கடை கழிவு நீரை சுத்திகரித்து மறு சுழற்சி பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம்.