Friday 16 February 2018

காவிரிப் படுகையும் உச்ச நீதி மன்ற தீர்ப்பும்

தமிழகத்தின் மத்தியப் பகுதியில் இருக்கும் கரூர் நகரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொடும். கரூர் நகரின் எல்லையில் இருக்கும் இனாம் கரூர், தாந்தோனிமலை, ஆண்டாங்கோவில் நகராட்சி பகுதிகளில் வசிப்பவர்களையும் சேர்த்தால் தோராயமாக 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் கரூர் நகரிலும், அதனை ஒட்டியும் வசிக்கிறார்கள்.இவர்கள் அனைவருக்கும் குடிநீரானது எங்கள் ஊரின் அருகில் இருக்கும் காவிரி ஆற்றுப் படுகையில் இருந்துதான் செல்கிறது. 

தமிழகத்தில் இன்று வரை நடைமுறையில் இருக்கும் பல கூட்டு குடிநீர் திட்டத்தில் கரூர்‍- திண்டுக்கல் கூட்டு குடிநீர் திட்டமும் ஒன்று. முதல் திட்டத்தின் மூலம் ஏற்கனவே இதே பகுதியில் இருந்துதான் தினமும் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் செல்கிறது. தற்போது இந்த திட்டம் செயல்படும் நெரூரில் இருந்து பத்து கிமீ தொலைவில் காவிரி ஆற்றில் மாயனூர் பகுதியில் இருந்து இரண்டவாது கூட்டு குடிநீர் திட்டம் திண்டுக்கல்லுக்கு செயல்பட உள்ளது. 

இத்துடன் நாமக்கல் நகருக்கும்  காவிரி ஆற்றுப் படுகையில் இருந்துதான் குடிநீர் செல்கிறது. கரூர், திண்டுக்கல், நாமக்கல் நகரில் உள்ளவர்களோடு சேர்த்து இத்திட்டம் செல்லும் வழியில் இருக்கும் ஆயிரக்கணக்கான‌ கிராமங்களுக்குமான குடிநீர் ஆதாரம் காவிரி நீர் படுகையில் கிடைக்கும் நீர்தான். இதனை வைத்துப் பார்க்கையில், கரூர், திண்டுக்கல், நாமக்கல் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகள் என தோராயமாக 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு காவிரி நீர்ப் படுகைதான் முதன்மை குடிநீர் ஆதாரம்.

இவை தவிர திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் உள்ள குடிநீர் திட்டங்களும் காவிரிநீர் படுகையினை நம்பியே உள்ளது. அந்த வகையில் காவிரி நதியில் இருந்து பெறப்படும் நீர் தமிழகத்தில் 3 ல் ஒரு பங்கு குடி நீர்த் தேவையினை பூர்த்தி செய்து வருகிறது.

சரி,காவிரி நதிப் படுகையின் நீர் ஆதாரம் எங்கிருந்து கிடைக்கிறது?
ஒன்று கர்நாடகவில் இருந்து பெறப்படும் நீர், மற்றொன்று பருவ மழை. இரண்டு ஆதாரங்களில், கூட்டு குடிநீர் திட்டத்தினைப் பொறுத்த வரை கர்நாடகவில் இருந்து பெறப்படும் நீரின் அளவு மிக முக்கியமானது. குறிப்பாக, வருடத்தில் சொற்ப நாட்களே கர்நாடகத்தில் இருந்து வரும் நீரை நிலத்தடி நீராக சேமித்து வைப்பதன் மூலம் மட்டுமே இத்திட்டம் இயங்கி வருகிறது.சமீபத்தில் பொய்த்துப் போகும் பருவ மழையினை கணக்கிலேயே எடுத்துக் கொள்ள இயலாது.

இப்படிப் பட்ட சூழலில்தான் கர்நாடகம் தமிழகத்திற்கு 192 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு சொல்லியிருந்த நிலையில், தற்போது அந்த அளவில் இருந்து 14.75 டி.எம்.சியினை உச்ச நீதி மன்றம் குறைத்துள்ளது.   






இது தமிழகத்தில் இருக்கும் பல லட்சம் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தையே நிச்சயம் பாதிக்கும். 

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பில் தமிழகத்தின் நிலத்தடி நீர் ஆதாரத்தையும் கணக்கில் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். உண்மையில், கர்நாடகம் தரும் நீரில் தான் காவிரி ஆற்றின் படுகையில் நீர் சேமிப்பு நிகழும். மேலும் சமீப வருடங்களில் அளவுக்கு அதிகமாக அள்ளப்பட்ட காவிரி ஆற்று மணலால் நிலத்தடி நீர் மட்டம் மிக மோசமாக உள்ளது. 

எதிர் வரும் கோடைகாலம் உண்மையிலேயே தமிழகத்திற்கு பெரும் சவாலாக இருக்கும்.

நதி நீர் ஆதாரங்களைப் பொறுத்தவரை தனி ஒரு மாநிலம் சொந்தம் கொண்டாட முடியாது என்று உச்சநீதி மன்றம் தந்திருக்கும் தீர்ப்பு வரவேற்க வேண்டியது எனினும் நமக்கான உரிமையினை பிடுங்கிய வகையில் சொல்லனா துயரை தமிழக மக்களுக்கு உச்சநீதி மன்றம் தந்துள்ளது.













No comments:

Post a Comment