Friday, 15 July 2016

நீரில் வாழும் உயிரினங்களின் மூச்சுத் திறன்

ம் சிறு வயதில் எல்லோரும் நிச்சயம் கிணறு, வாய்க்கால், ஆறு ஆகியவற்றில் நீரில் மூழ்கி மூச்சு பிடித்து விளையாடி இருப்பீர்கள்.

அப்படியே நம் சூழலில் வாழும் பல்வேறு மிருகங்களை ஒப்பிடும் போது, இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் மூச்சை உள்ளிழுத்து வைக்கும் திறன் அது வாழும் சூழலுக்கு தக்கவாறு மாறுபடுகிறது.

உதாரணத்திற்கு தரையில் வாழும் மனிதனின் மூச்சை உள் இழுத்து வைக்கும் திறனும், நீரில் வாழும் உயிரினங்களின் திறனும் ஒன்றல்ல. அதுவும் இன்னும் சொல்லப் போனால் மனிதர்களிலேயே ஒரு நிமிடத்திற்கு மூச்சு விடும் எண்ணிக்கை (Respiratory rate) பிறந்த குழந்தைக்கு 30‍-40 ஆகவும், அதே வளர்ந்த பிறகு ஒரு இளைஞருக்கு 12-15 முறையாகவும் இருக்கும். இவை யாவும் இயற்கையின் படைப்புகள் எவ்வளவு நுணுக்கமானது என்பதை உணரை வைக்கிறது.

சரி விசயத்துக்கு வருகிறேன்.

நேற்று பிரித்தானியாவில் உள்ள‌  பிரிஸ்டல் நகரில் (Bristol) உள்ள மிருகாட்சி சாலைக்கு அவந்தியை அழைத்து சென்றபோது பல சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. அதில்   நீரில் வாழும் மிருகங்கள் எந்த அளவிற்கு தங்கள் மூச்சை தக்க வைத்துக் கொள்கிறது என்ற தகவல் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 a. கடல் பாம்பு 3 மணி நேரம், 30 நிமிடம்

b. ஸ்பெர்ம் திமிங்கலம் ‍ 1 மணி 52 நிமிடம் (பற்கள் உள்ள பாலூட்டிகளில் மிகப்பெரிய விலங்கு இதுதான்)

c. சீல் ஏறத்தாழ 1 மணி நேரம்

d.   பென்குவின் 18 நிமிடம்

e. நீர் யானை ‍ 5 நிமிடங்கள்

இதனை குழந்தைகள் எளிதாக கற்றுக் கொள்ள,   அவர்களே விளையாட்டு மூலம் தெரிந்து கொள்ள‌  ஒரு மின்னனு கடிகாரம் (Start, Stop button based digital display clock) ஒன்றை வைத்திருந்தனர்.
நாம் மூச்சை எவ்வளவு வினாடிகள்/அல்லது நிமிடங்கள் தம் கட்டி வைத்திருக்கிறோம் என இந்த கடிகாரம் மூலம் எளிதாக கணக்கிட்டு கொள்ளலாம்.

Avanthika, Bristol Zoo, Bristol, UK

Digital clock to demonstrate breath air capacity. Bristol Zoo, Bristol, UK

இவ்வாறான சுவாரசியமான விளையாட்டுகளை நம் ஊர் மிருக காட்சி சாலைகளில் அல்லது பள்ளிகளில் தகவல் பலகை போல் தரலாம்.

நீரில் வாழும் உயிரினங்கள்.

என்னதான் நீருக்குள் இந்த உயிரனங்கள் வாழ்ந்தாலும், ஆக்சிஜனை சுவாசிக்க நீருக்கு மேல் வரும் போது தரையில் வாழும் விலங்கிகளால் ஆபத்துதான். உதாரணத்திற்கு சீல் உயிரனம் மூச்சு விட தரைப்பகுதிக்கு வரும் போது துருவ பனிக் கரடிகளால் வேட்டையாடப் படுகிறது.


Wednesday, 13 July 2016அவந்தியின் பொழுதுக‌ள் - ‍ ஒளி விளையாட்டு


பள்ளிக்கு அவந்தியை அழைத்து செல்லும் வழியில் அவளோடு நடக்கும் உரையாடல் எப்போதும் சுவாரசியமானது.

வழியில் கொஞ்சம் போரடிக்கும் போது   ஓட்டப் பந்தயம் நடக்கும். இதில் ஒரே விதிமுறை அவள்தான் எப்போதும் வெற்றி பெற வேண்டும். இல்லை என்றால் மிகவும் அப்செட் ஆகி விடுவாள் (இதுதான் பிரச்சினையே). 

இன்றைய சம்பாசனையில் நிழலைப் பிடித்து விளையாடலாம் டாடி என்றாள். சரி, என எதிர் வெயிலில் நடந்து கொண்டு ஒருவர் நிழலை ஒருவர் காலால் மிதித்துக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தோம். திடீரென மேகங்கள் சூழ்ந்ததால் சூரிய வெளிச்சம் சில நிமிடங்கள் மறைந்து விட்டது. 

அப்படியே நின்று யோசித்தவளிடம், அம்மு, நிழல் எப்படி உருவாகிறது எனக் கேட்டேன்.

வழக்கம் போல் மேடம் ஆங்கிலத்தில் பெரிய‌ லெக்சர் கொடுக்க ஆரம்பித்து விட்டாள்.

"சூரிய‌ ஒளி நிழலை உருவாக்குகிறது, அது ஒவ்வொரு முறை நம் மீது படும் போது புது புது நிழலை உருவாக்குகிறது. சின்ன சின்ன உடைந்த நிழல்கள் ஒன்றாகி பெரிய நிழல் ஆகிறது". இப்படியே சொல்லிக் கொண்டிருந்தவளிடம் சூரிய ஒளி இல்லாமல் சாதாரண வெளிச்சத்தில் (Normal Light) இதே நிழலை உருவாக்க முடியுமா என்றால். அது கடினம் என்றாள். அதற்குள் பள்ளி வந்து விட்டது.

குழந்தைகளின் உலகினை ஆழமாக கவனிக்கும் போது அவர்களின் நுண் ரசனை அல்லது அகவெளித்திறன் எப்போதும் நம்மை ஆச்சரியப்படுத்துபவை. 

நிழல் என்பது ஒரே நேர் கோடாக இல்லாமல் சில நேரங்களில் ஏன் வளைந்து இருக்கிறது என்பதைதான் துண்டு துண்டுகளாக இருக்கும் என அவந்தி சொல்கிறாள். புதிய நிழல் என்ற அவளது சிந்தனை என்னை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது.

இந்த வாரம் அவந்திக்கு சின்ன சின்ன ஒளியியல் விளையாட்டுகள் காட்டலாம் என திட்டமிட்டுள்ளேன். நிழலில் மிருகங்களின் உருவங்களை செய்து காட்டுதல், இரவு விளக்கொளியில் நிற்கும் போது ஏற்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட நிழல்கள் ஆகியவை அவளை இன்னும் சிந்திக்க வைக்கும் என்று தோன்றுகிறது.

அன்றாட வாழ்வில் இருந்து பல விசயங்களை ஒருங்கிணைத்து ஒளி சிதறல், மற்றும் ஒளி விலகல் தத்துவங்களை வைத்து குழந்தைகளுக்கான விளையாட்டுகளை உருவாக்கலாம்.

சிறு வயதில் இருந்து பாடப்புத்தகத்திற்கு வெளியில் எப்போதும் படித்தது இல்லை. காரணம், அவ்வாறு சிந்திக்கும் அறிவை நம் சூழல் நமக்கு தந்ததே இல்லை. 

கற்கும் விசயத்தில் நாம் எல்லோரும் குழந்தைகள் தான்.

ஆனால் நம்மிடம் இருக்கும் பெரிய சிக்கல், யாராவது கேள்வி கேட்டு நமக்கு தெரியாது எனச் சொல்லி விட்டால் மிகப் பெரிய மானப் பிரச்சினை ஆகி விடுமோ என்ற பொது புத்தி எல்லாமும் தெரிந்தவாறு நம்மை காட்டிக் கொள்ள வைக்கிறது. அல்லது நமக்கு தெரியாத விசயங்களை யாரேனும் நமக்கு சொல்லும் போது நம் ஈகோ அதனை ஏற்றுக் கொள்ள விடாமல்  தடுக்கிறது.  இந்த இரண்டுமே நாம் புதிய விசயங்களை கற்பதில் இருக்கும் பெரும் தடைக் கற்கள்.

ஒரு முறை என் ஜப்பானிய பேராசிரியர் அகிரா புஜிசிமா என்னிடம் வானம் ஏன் நீல நிறமாக இருக்கிறது எனக் கேட்டார். இவர் சூரிய ஒளி மூலம் நீரை பிரித்து (water splitting) ஆக்சிசஜன் வாயுவை தயாரிக்க முடியும் என முதன் முறை நிரூபணம் செய்தவர். கடந்த நான்கு வருடமாக வேதியியல் பிரிவில் நோபல் பரிசுக்கான இறுதியாளர் பட்டியலில் உள்ளார்.

நான் அவரிடம் ஒளி சிதறல் தான் வானில் நீல நிறம் தோன்ற காரணம் என்றேன். அப்படியென்றால் வானம் சில நேரங்களில் மற்ற நிறங்களிலும் ஏன் தெரிகிறது என கிடுக்கி பிடி போட்டார். அதற்கும் ஒளிசிதறல்தான் காரணம் என்றேன். எப்படி ஒரே ஒளிச் சிதறல் நிகழ்வு வேறு வேறு நிறங்களை வானில் உருவாகிறது என்பதை விளக்க முடியுமா என்றார். 

 சரி நானே உனக்கு சிறிய சோதனை ஒன்றை செய்து காட்டுகிறேன் என சொல்லி விட்டு, தன் கையில் இருந்த ஒரு வாட்டர் பாட்டிலை எடுத்து அதனுள் நீரை நிரப்பினார். அதன் அடிப்பகுதி வழியே புற ஊதா  (Ultravoilet Light) வெளிச்சத்தை செலுத்தினார். என்ன நிறம் தெரிகிறது எனக் கேட்டார். நீர் முழுவதும் நீல நிறமாக தெரிகிறது என்றேன்.

அடுத்து அந்த நீரில் வெள்ளை நிற டைட்டானியம் டை ஆக்சைடு துகள் கொஞ்சம் போட்டு பாட்டிலை நன்கு குலுக்கினார். இப்போது டைட்டானியம் ஆக்சைடு துகள் நீரில் நன்கு விரவி மிக‌  லேசான பால் வெள்ளையுடன் அதே சமயம் கண்ணாடி போலவும் (Semi-transparent) இருந்தது.

அதே புற ஊதா நிற வெளிச்சத்தை டார்ச் மூலம் மீண்டும் பாட்டிலின் அடிப்பகுதி வழியே பாய்ச்சினார். இப்போது, தண்ணீர் பாட்டிலில் மூன்று வண்னங்கள் அடுக்குகளாக தெரிந்தது. டார்ச்சுக்கு அருகில் இருக்கும் பாட்டிலின் அடிப்பகுதியில் இருக்கும் நீர் பகுதி ஒரு வண்ணமாகவும், பாட்டிலின் மூடி இருக்கும் மேல் பகுதி வேறு வண்ணத்திலும் இருந்தது.

அதிக அலைக் கற்றை ஆற்றல் (wavelength energy) கொண்ட புற ஊதா ஒளியானது திட நிலையில் இருக்கும் சிறிய டைட்டானியம் டை ஆக்சைடுகளின் மீது பட்டு ஒளிச்சிதறல் மூலம் வண்ணத்தினை உருவாக்குகிறது. அதே நேரம் இந்த அலைக்கற்றை நீரில் ஊடுருவும் போது அதன் ஆற்றல் குறைந்து கொண்டே செல்கிறது. அதன் அலைக் கற்றை ஆற்றலுக்கு தகுந்தவாறு டைட்டானியம் டை ஆக்சைடு துகள்கள் வேறு வேறு நிறங்களை உருவாக்குகிறது.


இதே போலத்தான் வானில் பல வண்ணங்கள் தோன்றும் தத்துவம். வாயு கூழ்ம நிலையில் (aerosol) பரவி இருக்கும் துகள்கள் வானில் ஒளியினை சிதறடிக்கின்றன. அது பூமிக்கு மேலே ஒவ்வொரு அடுக்கிலும் தன் மீது படும் சூரிய ஒளியின் ஆற்றலுக்கு தகுந்தவாறு வேறு வேறு வண்னங்களை ஒளி சிதறல் மூலம் உருவாக்குகிறது. இப்போது ராமன் விளைவினை (Raman effect) கொஞ்சம் படித்தால் உங்களால் நன்கு விளங்கி கொள்ள இயலும்.

சின்ன சின்ன அறிவியல் சோதனைகளை குழந்தைகளின் அறிவியல் திறனை மட்டுமல்ல நம் அறிவையும் நன்கு வளர்க்கும்.  

குழந்தைகள் கேள்விகள் கேட்கும் போதும்,பதில் சொல்லும் போதும் கூர்ந்து கவனியுங்கள். வாயை மூடு என்று சொல்லும் போது  அவர்களின் சிந்தனை திறனும் சேர்த்தே மூடப்படுகிறது.


 எனக்கும் அவந்திக்கும் நடந்த உரையாடல்


Thursday, 7 July 2016


வடிவங்களும் கணிதமும்


இன்று புத்தக கடையில் களமாடிய பொழுது "Awesome Algebra, A fun, Fact-filled guide to algebra and why it counts" - Author "Michael Willers" என்ற‌ இந்த புத்தகம் கண்ணில் பட்டது. தூக்கி விட்டேன்.
அல்ஜீப்ரா என்னும் "இயற்கணிதம்" எளிய முறையில் வடிவங்கள் மற்றும் எண்கள் எப்படி வரலாற்று ரீதியாக வழக்கத்தில் வந்துள்ளது. மற்றும் அதன் பின்னனி தகவலை கதை போல் கொடுத்துள்ளதால் ஒரு நாளில் இந்த புத்தகத்தை படித்து முடித்து விடலாம். 

எண்களின் உலகம் சுவாரசியமும், புதிரும் நிறைந்தது. இந்த கணித சிக்கலை அவிழ்க்க வடிவங்கள் (shapes) நமக்கு பெரும் பலமாக நிற்கிறது. பெரும்பாலும் கணிதத்தை எண்களின் அடிப்படையிலேயே நாம் குழந்தைகளுக்கு பயிற்று விப்பதால் பலருக்கும் கணிதம் என்றால் ஒவ்வாமை ஆகிறது. எண்கள் ஒரு கட்டத்தில் நம் நினைவு அடுக்குகளில் விரிவடைய மறுக்கிறது. அதனாலேயே,  நுண் கணிதம் (calculus) தொடங்கி உயர் கணிதம் நமக்கு வேப்பங்காயாக கசக்கிறது.

நிச்சயம் 10‍ -12 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இது போன்ற புத்தகங்களை பரிந்துரைக்கலாம். அவை பின்னாளில் அவர்களுக்கு உயர் கல்வியில், ஆராய்ச்சியில், பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணத்திற்கு கணிதத்தில் குறிப்பிடப்படும் பை (π) என்ற குறியீடுக்கும், ச்சை (φ)என்ற குறியீடுக்கும் என்ன அர்த்தம் மற்றும் அதற்கிடையே உள்ள‌ என்ன வேறுபாடு போன்ற விளக்கங்களை கதை போல விளக்குகிறது இந்த புத்தகம்.

உங்கள் குழந்தைகளுக்கு, அல்லது நண்பர்கள்/ உறவுகளின் குழந்தைகளுக்கு வடிவங்களையும் அது பற்றிய கற்பனைத் திறனையும் வளர்க்க உதவும் எளிய புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள்.  வடிவங்களை வைத்து விளையாடுவது, அது பற்றிய புதிர்களுக்கு விடை தேடுவது மூலம் அவர்களின் கணிதத் திறன் நன்கு வளரும்.

அறுகோணம், எண் கோணம் என  ஒழுங்கற்ற வடிவங்களை பல்வேறு வழிகளில் ஒருங்கிணைத்து அவற்றை ஒரு சதுரமான ஒழுங்கு வடிவமாக மாற்றி விளையாடும் விளையாட்டின் மூலம் எண் கணிதத்தை எளிதாக கற்கலாம்.   அது பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன். 

Wednesday, 6 July 2016


கருப்பு சட்டைக்காரன் ‍ - சுவான்சி ஜாக் (Swansea Jack)


இன்று சுவான்சி கடற்கரையோரம் மெது ஓட்டத்தை முடித்து விட்டு வரும் வழியில் சுவான்சி கிரிக்கெட் கிளப் மைதானத்திற்கு எதிரே கடற்கரையோரம் வைக்கப்பட்டிருந்த ஒரு நினைவுச் சின்னம் என்னை ஈர்த்தது.

சுவான்சி ஜாக் என்ற பெயரோடு, ஒரு நாயின் சிற்பம் அந்த நினைவு சின்னத்தில் பொறிக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த தகவல் இன்னும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஜாக் கருப்பு நிற ரெட்ரீவர் இன வகையை சேர்ந்தது. ஜாக் தன் உரிமையாளர் வில்லியம் தாமசு என்பாருடன் வேல்சு தேசத்தின் சுவான்சி நகருக்கு அருகே தவே (Tawe) நதிக்கரையில் வாழ்ந்து வந்தது. ஜாக் 1930 ஆம் ஆண்டு பிறந்திருக்க வேண்டும் என்பதை அங்கிருந்த கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.சுவான்சி ஜாக்கின் நினைவு சின்னம்

சுவான்சி ஜாக்கின் நினைவு சின்னம்

ஒரு நாள் ஜாக்கும், தாமசும் நடந்து சென்று கொண்டிருந்த போது அருகே ஒரு நீர் நிலையில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கும் ஆபத்தில் இருந்த போது உள்ளே நீந்திச் சென்று துணிச்சலுடன் அவனை காப்பாற்றியது. அச்சம்பவத்திற்கு பிறகு தான் வாழ்ந்த ஏழு வருடங்களில் 27 நபர்களை நீரில் மூழ்கும் ஆபத்தில் இருந்து காப்பாற்றி உள்ளது.

பல உயிரை காப்பாற்றிய ஜாக் துரதிஸ்டவசமாக எலிக்கு வைக்கப்பட்டிருந்த விசத்தை உண்டு 1937 ஆம் ஆண்டில் தன் இன்னுயிரை இழந்தது. 

நீரில் மூழ்கும் மனிதர்களை நீந்தி சென்று துணிச்சலுடன் அவர்களை கரைக்கு இழுத்து வந்து காப்பாற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல, அதுவும் ஐந்தறிவு படைத்த ஒரு அற்புத விலங்கு அதை செய்வது மிகப்பெரிய சாதனைதான்,

ஜாக்கின் மறைவினை போற்றும் வகையில் அதன் உடல் பொதுமக்களால் நினைவு கூறும் வண்ணம் சுவான்சி கடற்கரையில் அதன் உடல் எரிக்கப்பட்டு அங்கு பெரிய நினைவு சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. 

இன்றும் வேல்சு தேசத்தில் வீர தீர செயல்களுக்கு சுவான்சி ஜாக் என்னும் வார்த்தை ஒரு உத்வேக மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது. உலகின் நினைவுகூறத்தக்க ஆற்றல் மிகு நாய்களின் பட்டியலில் சுவான்சி ஜாக்கின் பெயரும் உள்ளது. 

நான் சென்ற சமயம், ஜாக்கின் கல்லறையின் மீது வைக்கப்பட்டிருந்த சிறு மலர் கொத்து, இன்றும் ஜாக் மீது இங்குள்ள மக்கள் வைத்திருக்கும் பாசத்தை உணர முடிகிறது.

  
ஜாக் தன் உரிமையாளர் வில்லியம் தாமசுடன்.

ஜாக் தன் உரிமையாளர் வில்லியம் தாமசுடன்.குறிப்பு:
எல்லா நாய்களும் ஜாக் போன்றதுதான். அதன் மேல் பிரியம் வைத்திருப்பவர்களுக்கு எந்த சூழலிலும் ஒரு ஆபத்து என்றால் அவை தன் உயிரையும் கொடுக்க‌ வல்லது. நண்பர்களே நாய் நன்றி உள்ள பிராணி என்பதனையும் தாண்டி அது மனிதர்களை  நம்பி வாழும் ஒரு அற்புத ஜீவன். அதனை நேசிக்கா விட்டாலும் பரவாயில்லை, குரூர மனதோடு அதனை தாக்குவது, அல்லது உயரமான பகுதிகளில் இருந்து தூக்கி எறிந்து கொல்வது போன்ற செயல்கள் நம் ஆழ்மனநிலையில் புதைந்து இருக்கும் வக்கிரத்தின் குறீயீடுகளே. 

அன்பை விதைக்க  முயற்ச்சிப்போம்!
http://www.walesonline.co.uk/news/wales-news/birth-ivor-allchurch-death-hero- 8771111

http://mentalfloss.com/article/58584/12-amazing-dogs-remember-national-dog-day