Thursday 25 August 2016

ஹைக்கூ கவிதை  



ஹைக்கு என்பது ஜப்பானிய மொழியில் காணக் கிடைக்கும் கவிதை வடிவங்களுல் ஒன்று. பெரும்பாலும் இயற்கையையும், காதலையும் சொல்லும் இந்த கவிதை வடிவம் மிகச் சிறியது (17 வார்த்தைகள்; முதல் அடி 5, இரண்டாம் அடி 7, மூன்றாவது அடி 5). இந்த ஹைக்கூ வடிவம் பெரும்பாலும் ஜென் மன நிலையில் இருந்து எழுதப்படுபவை. ஒரு காட்சியலை  கொண்டு தத்துவியலை உணர்த்தும் படி அழகாக நறுக்கு தெறித்தாற் போல் சொல்பவை. 

ஜப்பானிய‌ ஹைக்கூ கவிதை வடிவம்  1600 ஆம் ஆண்டின் மத்திய கால கட்டத்தில் ஹொக்கு  (Hollu) எனப்படும் மரபு கவிதை வடிவில் இருந்து பிறந்தது. பாசோ  ( Matsuo Bashō 1644-1694), சிகி (Masaoka Shiki 1867-1902) ஆகியோர் ஹைக்கூ வடிவில் மிகப் பிரபலமாக அறியப்பட்டவர்கள். பின்னர் 20 ஆம் நூற்றாண்டில் துவக்கத்தில் ஹைக்கூ ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது.

தமிழில் ஹைக்கு வடிவத்தை பின்பற்றி தமிழில் நிறைய கவிதைகள் தற்போது பரவலாக எழுதுகிறார்கள். இதனை இங்கே அறிமுகப்படுத்தி வைத்த பெருமை கவிக்கோ அப்துல் ரகுமான் ஐயா அவர்களையே சாரும்.

சமீபத்தில் இயக்குநர் லிங்கு சாமி அவர்கள் எழுதிய "செல்பி எடுத்துக் கொள்கிறது மரம் - லிங்கு 2" என்னும் கவிதை தொகுப்பினை வேடியப்பன் அவர்களின் டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளது.


இந்த புத்தக வெளியீட்டு விழா இயக்குநர் கெளதம் மேனன் அவர்கள் அலுவலகத்தில் முன்னனி இயக்குநர்கள், எழுத்தாளர்கள் சூழ மிகச் சிறப்பாக எளிய முறையில் நடந்துள்ளது.

வழமையான புத்தக வெளியீட்டு விழாவில் புத்தகத்தை பற்றி ஒரு வரி கூட படிக்காமல் வந்து கழுத்தறுக்கும் எரிச்சல்கள் இல்லாமல் எல்லாருமே மிக அருமையாக கவிதை புத்தகத்தை பற்றி திறனாய்வு செய்து பேசினார்கள்.

கவிக்கோ ஐயா, அண்ணன் அறிவு மதி, பேரா. கு. ஞானசம்பந்தன், எஸ்.ரா, நடிகர் பார்த்திபன், யுக பாரதி, விவேகா, நெல்லை ஜெயந்தா, வெண்ணிலா, இயக்குநர் மிஸ்கின், வசந்த பாலன்,நீயா நானா கோபிநாத், இயக்குநர் ராஜீ முருகன், நலன் குமாரசாமி என தமிழ் சூழலின் பெரிதும் அறியப்பட்ட‌ ஆளுமைகள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.



இந்த கவிதைப் புத்தகம் முழுவதும் ஹைக்கூ கவிதைகளால் ஆனது. ஒரு ஜென் மனோநிலையில் எழுதியதாக கவிஞர் குறிப்பிடுகிறார்



இதில் மகிழ்ச்சியான விசயம் என்னவென்றால் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை தமிழ் கவிதை உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்ததோடு தொடர்ந்து தன் அற்புதமான ஹைக்கூ கவிதைகளால் அதனை நம்மிடம் விரிவுபடுத்திய கவிக்கோ ரகுமான் ஐயா தலைமை தாங்கியது இன்னும் மேன்மை.


இந்த விழாவில் ஒரே வருத்தம், இந்த கூட்டணியில் எப்போதும் இவர்கள் உடன் இருக்கும் நா.முத்துகுமார் இல்லை. ஒருவேளை அவர் அந்த சூழலில் வெளியூர் போய் விட்டாரா என தெரியவில்லை.ஆனால் அவரது மறைவிற்கு பிறகு அவர் இந்த விழாவில் கலந்து கொண்டு பேசியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது.



இந்த விழாவின் காணொளி யூடியூப்பில் கிடைக்கிறது. முக்கியமாக, கவிக்கோ ஐயா, அறிவுமதி, எஸ்.ரா மற்றும் யுக பாரதி அவர்களின் உரை அருமையாக இருந்தது.



அவசியம் காணுங்கள்



------------------------------------
விழாவின் கவிதை வாசிப்பில் இருந்து ஒரு சில கவிதை வரிகள்

பதித்த
எல்லா தடங்களும்
அடுத்த
அலை வரைதான்
************
ஒரு மரத்தை
சாய்த்துத்தான்
இந்த வீணை
செய்யப்பட்டிருக்கிறது
ஒரு முறை மீட்டு
ஒரு வனம் உருவாகட்டும்
**************
சட்டென எதையாவது
உணர்த்தி விட்டு போகிறது
பறவையின் நிழல்
***********************
குழந்தைகள்
விளையாடும் இடத்தில்
பழத்தை நழுவ விடுகிறது
அணில்
*****************
அடையாளத்துகாக‌
தழும்பை காட்டும் போதெல்லாம்
நினைவில் வருகிறார்கள்
கவிதாவும், கணக்கு வாத்தியாரும்
*********************
நிலவொளியில் மயானம்
அமைதியாய் வெட்டியான்
எங்கோ
உதிர்ந்து கொண்டிருக்கிறது
ஒரு பூ
*********************

நீங்கள்
ஒரு மரம்
வைக்கும் போது
ஒரு புத்தனையும்
வரவேற்கிறீர்கள்
***************


இயக்குநர் லிங்குவிற்கு அற்புதமாக ஹைக்கூ கவிதை கை வருகிறது. தொடர்ந்து எழுத வாழ்த்துகள். இதனை வெளியிட்ட வேடியப்பன் அவர்களுக்கும் எமது வாழ்த்துகள்.




Wednesday 24 August 2016

 இன்று புதன்கிழமை காலை இத்தாலி நாட்டின் மத்திய பகுதியில் 6.2 ரிக்டர் அளவிற்கு கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்த நில நடுக்கத்தினால் அமட்ரிசு (Amatrice) என்னும் நகரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நகரம் இத்தாலியின் தலை நகரமான ரோம் நகரில் இருந்து கிழக்கு எல்லையில் சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
வரலாற்று ரீதியில், மிகவும் பழமைவாய்ந்த இந்நகரின் புராதன‌ கட்டிடங்கள், குடியிருப்பு பகுதிகள் ஆகியவை பெருமளவில் சேதாரமாகி உள்ளது. கட்டிட‌ இடிபாட்டிற்குள் சிக்கியவர்களை தீயணைப்பு படையினர், மீட்பு குழுவினர் விரைந்து மீட்டு வருகின்றனர். தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீட்டை இழந்தை தெருவில் உயிர் பயத்தோடு நிற்கின்றனர்.
இந்த துயர சம்பவத்தில் இது வரை 73 பேர் இறந்துள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மோப்ப நாயின் உதவியுடன் கட்டிடத்திற்குள் சிக்கியவர்களை தேடி வருகிறார்கள்.
நெகிழ்ச்சியான வேண்டுகோள்:
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளி உலகை தொடர்பு கொள்ள ஏதுவாக அப்பகுதியில் இணைய வசதி வைத்திருப்பவர்க்ள் தங்கள் வைபை இணைப்பிற்கான கடவுச்சொல்லை நீக்கி வைக்குமாறு செஞ்சிலுவைச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. (நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்)

இத்துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் இயல்பு வாழ்க்கை திரும்பவும், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்கள் அனைவரும் வரும் நலத்துடன் திரும்ப பிராத்தனை செய்வோம்.
Lets pray for Amatrice, Italy to get back to normal life.

**Siate forti , noi siamo con voi

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அமட்ரிசு நகரம்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகள் வரைபடத்தில் குறியிட்டு காட்ட்பப்பட்டுள்ளது

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அமட்ரிசு நகரம்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு குழுவினர்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் வைபை வசதிக்கான கடவுச் சொல்லை நீக்க கோரி விண்ணப்பம்




மனம் கொத்தி பறவை - 2 (தமிழோசை சிற்றிதழ் -கனவுகளின் விளைவு)


அநேகமா 2004 ஆம் வருசம்னு நினைக்கிறேன்.

கொங்கு நாடு கல்லூரியில் நான் ஆராய்ச்சியாளாரா சுத்திகிட்டு இருந்த நேரம். அப்ப செந்தில் அண்ணாவும், முத்துகுமார் அண்ணாவும் ஒரு சிற்றிதழை கொண்டு வரும் ஆசையில் இருந்தாங்க.

ஆனா அது பல காரணங்களால் தள்ளிப் போய் கிட்டே இருந்துச்சு.

அந்த கால கட்டத்தில்தான் நிறைய சிற்றிதழ்கள் வெகு சன மக்களுக்கான‌ சந்தையினை நோக்கி வரத் துவங்கி இருந்தது. கணையாழி, குமுதம் தீரா நதி அப்புறம் இன்னும் கொஞ்சம் இதழ்கள் கடைகளில் கிடைத்துக் கொண்டிருந்தது. அந்த சூழலில்தான் உயிர்மை பெரிய சவாலோடு களத்தில் புதிதாய் இறங்கி இருந்தது. ஓரிரண்டு இதழ்களை படித்ததாய் ஞாபகம். சென்னையினை ஒப்பிடுகையில் கோவையில் எல்லா அச்சு சிற்றிதழ்களும் கிடைக்கவில்லை. 

ஆனாலும் கோவை இலக்கிய உபாசகர்களின் பிரியத்திற்குரிய கூடாகவே இருந்தது. இங்கே திராவிட இயக்கம், தமிழ் தேசியம், மார்க்சியம் ஆகியவற்றை மையமாக கொண்டு  இலக்கிய கூட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

 இந்த சிற்றிதழ் ஆரம்பிப்பதன் பின்னால் இருக்கும் கதை சுவாரசியமானது.

பகல் முழுவதும் ஆய்வு வேலை ஓடிக் கொண்டே இருக்கும். உலக சினிமா, இலக்கியம், நடப்பு அரசியல்  என ஒரு மாசல் வடையின் சுவைக்கு நிகரான ஒரு அரட்டை 9 மணிக்கு மேல் ஆய்வகத்தில் ஓடும். இது மெல்ல நீண்டு பின்னிரவில் இருந்து சில வேளைகளில் அதிகாலை வரை நீளும்.

இந்த இரவு நேர இலக்கிய சம்பாசனையில் நான் வேடிக்கை பார்க்கும் சிறுவனாகவே இருப்பேன். இரண்டு பேரும் பேசி முடித்து சோர்வாகும் தருணத்திற்காகவே உறுமீன் கொக்காக‌ காத்திருப்பேன்.

ஏனெனில் ரெண்டு பேரும் பேசி முடித்து சோர்வடையும் வேளையில் ஜி.என் மில்ஸ் நாலு ரோடு சந்திப்பில் உள்ள‌ அய்யங்கார் பேக்கரியில் டீ குடிக்க போவார்கள். அப்ப கண் முழிச்சு கதை கேட்டு கொண்டிருந்தால் நிச்சயம் எனக்கு டீ, வாழைப்பழம், ரெண்டு பிஸ்கட்டும் கிடைக்கும். அதற்காகவே இவர்கள் ஆற்றும் இலக்கிய, சினிமா உலகின் பிரதாபங்களை கேட்டுக் கொண்டிருப்பேன்.

ஒரு டாப்பிக் பத்து நிமிசத்து மேல் தாங்காது. கிளை கிளையா பிரிஞ்சு ரெக்கை கட்டி பறக்கும். சில நேரம் பேசுன மேட்ட்ரே பேச்சு முசுவுல திருப்பி அரைச்ச மாவு கணக்கா அரைபடும். ஆனா செந்தில் அண்ணா அந்த டாப்பிக்கை திருப்பி சொல்லும் போது அதுல இருக்கிற சுவாரசியத்துக்காகவே கேட்டு கிட்டே இருக்கலாம்.

இந்த ரெண்டு பேருக்கும் இன்னொரு பெரிய வேல இருந்துச்சு, அது கோயம்புத்தூரில் நடக்கும்  எல்லா இலக்கிய நிகழ்வையும் ஒன்னு விடாம  தேடிப் பிடிச்சு போய் கலந்துக்கிறது. அப்படி விழா நடக்கும் நாட்களில் எனக்கு பெரிய கதைகள் கிடைக்கும்.

இதில் இன்னொரு ஜோக்கும் நடக்கும்.

போகும் போது ரெண்டு பேரும் சிரித்து கொண்டே ஒரே வண்டியில் போவார்கள். திருப்பி வரும்போது உர்ரென்று சண்டை போட்டுக் கொண்டு வருவார்கள். விழாவில் பேசியவர்கள் கூட‌ சொந்த ஊர் போய் சேர்ந்திருப்பார்கள். ஆனால் கலந்து கொண்ட இலக்கிய விழாவின் அபிப்ராய பேதங்கள் இருவருக்குள்ளும் ஒரு புது வடிவிலான சண்டையினை உருவாக்கி இருக்கும்.

இந்த சண்டை மேலெழுந்து செல்லும் கூம்பு வடிவிலான காற்று சுழி ஒரே சீராக நகர்ந்து கொண்டே செல்வதை போல் சுற்றி சுற்றி  ஆய்வகத்தின் இலக்கிய ஜமாத்தில்  வெடிக்கும்.

அப்போது டீக் குடிக்க போலாமே, என நான் தான் முதல் பிட்டை வீசுவேன். என் கவலை எல்லாம் இவர்கள் சண்டையில் என் டீ கோட்டாவை மறந்து விடக் கூடாது அல்லவா.

இப்படியே போய்க் கொண்டிருந்த டிராக் ஒரு கட்டத்தில் ஆர்வம் வெறியாகி விட்டது. நாமே ஏன் இலக்கிய எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து ஒரு சிற்றிதழாக கொண்டு வரலாம் என யோசிக்க துவங்கினர். அது போக நம் சிந்தனைகளையும் ஒரு கட்டுரையாக எழுதலாமே என்ற ஆர்வமும் சேர்ந்து  ராக்கெட்டுக்கு தீ வைத்தது. என்ன செய்வது இலக்கிய ஆர்வம் என்ற சனிக் குட்டி எப்போதும் சைக்கிளில்தானே வரும்.

இந்த விதை விழுந்து ஆறாவது மாதம் சிற்றிதழின் முதல் வடிவம் வந்து விட்டது.
ஆனால் அதற்காக இருவரும் தூக்கம் பகல் பாராமல் இதழுக்கு பெயர் தேர்வு, லோகோ டிசைன், பதிப்புரிமை, சந்தா கட்டணம், இத்யாதி இத்யாதி என தீயாய அலைந்து கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் செந்தில் அண்ணன் முழு நேர இயற்பியல் ஆராய்ச்சியாளர். தன் சொந்த ஆராய்ச்சியில் ஒரு சிறு குறை கூட வைக்காமல் இந்த வேலைகளையும் சேர்த்து கொண்டே சுத்தினார்.

ஒருவாராய் எல்லா பிரச்சினைகளும் முடிந்து ராக்கெட் ஏவுவதற்கு தயாராக இருந்தது.

புதிய இதழுக்கு "தமிழோசை" எனப் பெயரிடப்பட்டது.

கோவை ஞானி ஐயா உள்ளிட்ட பலரும் இந்த இதழுக்கு வழிகாட்டிகளாக இருந்தனர். நாட்டார் மரபியல், பின் நவீனத்துவம், கவிதை, சிறுகதை, நவீன அறிவியல் நுட்பம் என ஒரு தமிழ் சிற்றிலக்கியத்திற்கான அத்துனை கல்யாண குணங்களும் புதிய இதழில் இருந்தது.

இதழ் வெளியீட்டு விழாவை விஜயா பதிப்பகத்தில் வைத்துக் கொள்ளலாம் என ஒருவாராய் முடிவெடுத்து இருந்தார்கள். இதற்கான காரணங்களில் ஒன்று, கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா அவர்கள், முத்துக்குமார் அண்ணனுக்கு நல்ல‌ நண்பர் என்பதையும் தாண்டி, அவர் பல இளம் எழுத்தாளர்களை அப்போது ஊக்குவித்து புதிய நூல்களை கொண்டு வந்து கொண்டு இருந்தார்.
சரி, இந்த இதழை ஒரு பெரிய தமிழ் ஆளுமை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்த போது தான் ஜாக்பாட் போல எழுத்தாளர் ஜே.கே (ஜெயகாந்தன்) விஜயா பதிப்பகத்தின் ஒரு விழாவிற்கு வரவிருக்கிறார் என்ற செய்தியை வேலாயுதம் ஐயா சொன்னார்.

இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொண்டு புதிய இதழை ஜேகே கையாலே வெளியிட்டு விடலாம் என்று  ஒருவாறாய் முடிவெடுத்தார்கள்.

என்னைப் பொறுத்த வரையில் ஒரு புறம் இதழ் வரப் போகிறது, மற்றொன்று தனிப்பட்ட முறையில் என் வாசிப்பு உலகின் ஆதர்சங்களில் ஒருவரான ஜேகேவை நேரில் பார்க்கப் போகிறேன் என்கிற ஆர்வம் என‌ இரட்டிப்பான‌ மகிழ்ச்சியில் இருந்தேன்.

எல்லாமும் நிறைந்த திருநாளில் “தமிழோசை இதழ் ஜேகே கையால் வெளியிடப்பட்டது. இருவரின் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம், சாதித்த உணர்வு.
அன்று ஜே.கே விடம் நான் ஆட்டோகிராப் வாங்கி வைத்திருந்த தமிழோசை இதழ்  பல இடங்கள் மாறும் போது எங்கு வைத்தேன் என தெரியவில்லை.

மறைந்து போன ஜேகேவின் இறப்பு நாளில் கூட‌ அவர் போட்டுக் கொடுத்த ஆட்டோகிராப் இப்போது இல்லையே என‌ பெரும் துக்கத்தை எனக்குள் கிளப்பி இருந்தது.

என்னதான் ஜேகேவின் படைப்புகள் அழியா பொக்கிசமாய் நம்மிடம் இருந்தாலும், குழந்தைகள் ஆசையாய் கையில் பிடித்திருக்கும் மரப்பாச்சி பொம்மை போல்  அவரது ஆட்டோகிராப் என்னிடம் இல்லையே  என‌ மனசை இழுத்து கொண்டிருந்தது. இதில் இன்னொரு வருத்தம் என்னவெனில் அந்த நிகழ்வில் எடுத்த புகைப்படத்தின் நகல் ஒன்றை முத்துக்குமார் அண்ணா  கொடுத்திருந்தார் துரதிஸ்டவசமாக அதுவும் எங்கு போனது தெரியவில்லை.

தமிழோசை பல சோதனைகளை கடந்து  நான்கு இதழ்கள் வந்தது என நினைக்கிறேன். இந்த இதழுக்காக இருவரும் நிறையவே உழைத்தார்கள். ஓடினார்கள். இதனை சந்தைப் படுத்துவதில் ஒரு கட்டத்தில் போராடி சோர்ந்தார்கள். பெரும் வேதனையில் இந்த இதழை ஒரு கட்டத்தில் கைவிட்டனர்.

நேரடியாக இலக்கிய வட்டத்தில் இருப்பவர்களே இந்த துறையில் திணறும் போது இவர்களின் உழைப்பும் ஆர்வமும் மெச்சத் தக்கது.

தமிழ் இலக்கியத்திற்கு ஒரு சாபக் கேடு உள்ளது. இங்கே, இலக்கியம் பற்றி பேசுபவனும், அதைப் பற்றி தொடர்ந்து எழுதுபவனும் எவ்வளவு போராடினாலும் அவனுக்கு இங்கே மரியாதை கிடையாது. ஒரு கட்டத்தில் தமிழ் மொழிக்கென்று உழைப்பவன் சோர்ந்து விடுகிறான். காரணம் நம்மிடம் இருக்கும் சுணக்கமான வாசிப்பு உலகம்.சிறு வயதில் இருந்தே எழுதுபவர்களை ஊக்குவிப்பவர்களும் இங்கே மிகக் குறைவு.

ஒரே ஆறுதல், முந்தைய சூழலை ஒப்பிடும் போது பல மடங்கு வாசிப்பவர்களின் எண்ணிக்கை தமிழ் சூழலில் தற்போது அதிகரித்துள்ளது. இதற்கு டிஜிட்டல் புரட்சியும் ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை.

இணையம் பரவலாக பலருக்கும் புத்தக வாசிப்பை எளிதாக்கி இருக்கிறது. அவ்வளவு ஏன் என் கருத்துகளை, அனுபவங்களை எழுதுவதற்கு கூட ஒரு வெளி கிடைத்திருக்கிறது.

ஆனால் இது போதாது. தமிழ் சூழலக்கு நிறைய புதிய வடிவங்களில் கருத்துமிகு கட்டுரைகள் வர வேண்டும். அறிவியல், பயணக்கட்டுரைகள், சர்வதேச அளவிலான உணவு, கலாச்சாரம், வேலை வாய்ப்பு, பொருளாதார சிக்கல்களை பற்றிய விவாதம் என ஆற்றல் மிகு சூழல் நிறைய வர வேண்டும்.

காலம் பெரும் ஓட்டம் எடுத்து இருக்கிறது. தற்போது செந்தில் அண்ணா, பிரித்தானியாவில் பேராசிரியர் பணியில் உள்ளார். முத்துக்குமார் அண்ணா, எங்கள் கல்லூரியிலேயே தமிழ்த் துறை பேராசிரியராக உள்ளார். ஆனாலும் அன்று இருந்த அதே இலக்கிய ஆர்வம் இன்றும் இவர்களிடம் உள்ளதுதான் ஆச்சரியம்.

நேற்று செந்தில் அண்ணா தேடிப் பிடித்து ஜேகேவோடு நாங்கள் இருக்கும் அந்த புகைப்படத்தினை அனுப்பி இருந்தார். என் பிரியத்திற்குரிய ஜேகேவுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தந்த‌ இருவருக்குமே என் அன்பு நிறை நன்றிகள்.


 இந்தப் புகைப்படத்தின் பின்னால் இவர்களின் வலிகளும், பேசித் தீராத‌ எங்களின் கோவை நாட்களும் உள்ளது.

புகைப்படம். ஜேகேவிற்கு வலது செந்தில் அரசு அண்ணா,  இடது புறம் முத்துக் குமார் அண்ணா (கட்டம் போட்ட சட்டை),  இடையில் கட்டம் போட்ட டீ சர்ட் போட்டுக் கொண்டு நான்

இந்த இதழ் வெளிவர எந்த மாதிரியான சிரத்தைகள் எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதை செந்தில் அரசு அண்ணன் அவரது வலைப்பூக்கள் பகுதியில் வலியோடு விளக்கியுள்ளார்.

http://sunarasu.blogspot.co.uk/2012/06/10.html?m=1





Sunday 21 August 2016


திரைப்படங்களில் பலரும் நடிக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே திரையில் வாழ்கிறார்கள். அவ்வாறு திரையில் வாழும் நடிகர்களில் நான் பார்த்து வியந்த ஒரு மகா கலைஞன் திரு கமல ஹாசன்.

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தன்னை அர்பணித்துக் கொள்ளும் இராட்சசன். அதற்கான உடலை வருத்தும் எந்த மெனக் கெடலையும் செய்ய துணிந்தவர்.

இலக்கியத்தில் தீராத காதலையும், அது சார்ந்த நண்பர்களையும் எப்போதும் பேணத் தெரிந்த கவிதா ரசிகன்.

சம காலத்தில் இந்திய சினிமா துறையில் நடிப்பு கலையோடு, நுட்பம் சார்ந்த புதிய முயற்சிகளை வேறு வேறு பரிமாணங்களில் தரும் கமலின் அர்பணிப்பு என்னை பிரமிக்க வைப்பவை.

தன் குருவின் வழியில் இவருக்கும் பிரான்சு தேசத்து செவாலியே விருது கிடைத்திருப்பது இந்திய சினிமாவிற்கு பெரும் கெளரவம்.

என்றும் இதே இளமையோடும், துள்ளலோடும் உங்கள் கலையுலக பாதையில் பயணிக்க ஒரு அன்பு ரசிகனாக வாழ்த்துகிறேன்.





 ஒலிம்பிக் பாடங்கள் - தென் கொரியா ‍‍- 1


ஆசியாவின் துணைக் கண்டம் என்று அழைக்கப்படும் இந்தியா ஒலிம்பிக் பதக்க பட்டியலில் ஒன்று, இரண்டு என திணறும் சூழலில், கிழக்கு ஆசியாவின் சிறிய‌ நாடான தென் கொரியா பதக்க பட்டியலில் (தங்கம் 9, வெள்ளி 3, வெண்கலம் 9) கோலோச்சுவது சமகால‌ ஆச்சரியங்களில் ஒன்று. நாம் எதிர் காலத்தில் முன்னேறிச் செல்ல‌ அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய பாடங்களும் கொஞ்சம் எச்சரிக்கைகளும் உள்ளது.

இப்போது தொழில் நுட்பம், விளையாட்டு ஆகியவற்றில் பரவலாக அறியப்படும் தென் கொரியா 1988 ஆம் ஆண்டு கோடை ஒலிம்பிக் (1988 Summer Olymic) அங்கு நடக்கும் வரை உலகத்தின் அதிக கவனத்தை பெறாத ஏழை நாடுகளில் அதுவும் ஒன்று. ஆனால் இப்போது வளர்ந்த நாடுகளில் வரிசையில் ஒலிம்பிக்கின் பதக்க‌ வேட்டையாடும்  பத்து இடத்திற்குள் வந்துள்ளது  என்ற பெருமிதத்தை சுமந்து நிற்கிறது.

இந்தியா தொடர்ந்து ஒலிம்பிக்கில் பலவீனமான ஒரு நோஞ்சான் குழந்தையாக இருக்க பல காரணங்கள் உண்டு. அதில் வீரர்கள் தேர்வில் நடைபெறும் புவிசார் அரசியலும் ஒரு தவிர்க்க முடியாத காரணிகளில் ஒன்று என்பது கசப்பான உண்மை. வழமையாக நம் தேசத்தில் நடைபெறும் தெற்கு வடக்கு பஞ்சாயத்துகளில் வட கிழக்கு பகுதியின் குட்டி மாநிலங்களான  மணிப்பூர், மேகாலயா, அருணாச்சல பிரதேசங்களின் நிலைமை சொல்லி தெரிய வேண்டாம்.

தென் கொரியாவில், இந்தியாவைப் போலவே வலுவான புவி சார் பிரச்சினை மக்களின் மன ஓட்டங்களில் இன்றும் உள்ளது.   இந்த நுண் அரசியலையும் தாண்டி, எவ்வாறு தென் கொரியா ஒலிம்பிக்கில் தன் கரங்களை வலுவாக பதிக்கிறது  என்பதே நாம் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

கொஞ்சம் வரலாற்றில் பின்னோக்கி போவோம்.

தென்கொரியாவின் புவி நிலப் பரப்பு அடையாளங்களை தற்போது Province என்றே அழைக்கின்றனர். தற்போது தென் கொரியாவில் ஒன்பது பிராவின்ஸ் உள்ளது.

ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக மன்னர்கள் ஆட்சி காலத்தில் (நம் ஊர் சேர சோழ பாண்டியர் போல) கொரியா என்ற ஒற்றை நிலப்பரப்பு ஆட்சி கிடையாது. அது எப்போதும் பூசல் நிறைந்த மூன்று தனித்த பேரரசின் எல்லைகளாக இருந்தது.  இதனை “தோ” என்று அழைப்பர். சில்லா தோ (தற்போதைய தென்கொரியாவின் மத்திய மற்றும் வடக்கு பகுதி), கொகுரியோ தோ (தற்போதைய வட கொரியா),பெக்சே தோ (தென் கொரியாவின் தென் கிழக்கு பகுதி) என மூன்று முக்கிய நிலப்பரப்புகள் ஒரே மொழியுடன் வேறு வேறு கலாச்சார பின்னனியினை கொண்டிருந்தது.



கொரியா வரை படம் (Historiographer at the English language Wikipedia, History of Korea-576, CC BY-SA 3.0)

கி.பி 668 ஆம் ஆண்டு கால கட்டத்தில் “சில்லா” பேரரசு மற்ற இரு பேரரசுகளையும் வென்று தன் காலடியில் கொண்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த கொர்யா பேரரசு  (918-1332) தமது கால கட்டத்தில் இந்த மூன்று நிலப்பரப்பும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே நாடாக நிறுவப்பட்டது  (இந்த பேரரசிற்கு பின்னர்தான் கொரியா என்ற பெயர் வந்தது).

இந்த கால கட்டம் வரை மூன்று நிலப்பரப்பிற்கான மொழி உச்சரிப்பு, நாட்டார் வழக்கு, கலாச்சார அடையாளங்கள் யாவும் தனித்தே இருந்தது. இதன் பின்னர் வந்த சோசன் பேரரசு (1392-1910) இதனை வலுவாக்கி ஒருங்கிணைந்த கலாச்சார முறைகளை கொண்டு வந்தது. இந்த கால கட்டத்தில் கொரியா முழுவதும் ஒரே கலாச்சார முறை நிலவியதால் பெண் கொடுப்பு, பெண் எடுப்பு என பரவலான  ஒரு ஒருங்கிணைந்த‌ சமூகம் நிறுவப்பட்டது.

ஆனால் துரதிஸ்டவசமாக வடக்கு பிராந்தியமான‌ கொகுரியோ எல்லை பரப்பு இரண்டாம் உலகப் போரில் வட கொரியாவாக பிரிக்கப்பட்டது. மற்ற இரண்டு நிலப்பரப்புகளும் தென் கொரியாவின் கீழ் வந்தது.

இங்குதான் சிக்கலே தொடங்கியது. தென் கொரியாவின் சுதந்திர ஜனநாயக‌ ஆட்சி அதிகார அமைப்பில் இந்தியாவைப் போன்றே வடக்கு, தெற்கு என புவிசார் எல்லை சார்ந்து அரசியல் பதவிகளில் கோலோச்சும் அதிகார பஞ்சாயத்து நீறு பூத்த நெருப்பாக ஓட ஆரம்பித்தது.

தற்போதைய தலை நகரமான சியோல் கொரியாவின் பழைய தலை நகரம் அல்ல. சில்லா பேரரசின் தெற்கு எல்லையில் இருந்த ஜியோஞ்சு (Gyeongju) நகரமே அப்போதைய கால கட்டத்தில் தலைநகராக இருந்தது. தற்போது இது கலாச்சார நகரம் என அழைக்கப்படுகிறது.

பிறகு நவீன கொரியாவில் சில்லா-தோ வின் கை ஓங்க வேண்டும் என்பதற்காக வடக்கு பகுதியில் அமைக்கப்பட்ட புதிய தலைநகரமே சியோல் ஆகும். சியோலின் (Seoul) சரியான உச்சரிப்பு ச-‍ உல் ()அதாவது புதிய தலைநகரம் என்று கொரிய மொழியில் அர்த்தம். இதனால் மற்றொரு பகுதியான பெக்சே நிலப்பரப்பு மக்கள் மகா காண்டாகி விட்டனர்.

இன்றும் கொரிய அதிபர், அமைச்சர்கள் தேர்வு, விளையாட்டு வீரர்கள் தேர்வு, பிராந்திய வளர்ச்சி ஆகியவற்றில் சியோலை மையமாக கொண்ட சில்லாதோவின் கையே ஓங்கியே இருக்கும். 

ஆனாலும் அவர்கள் எப்படி ஒலிம்பிக்கில் பதக்க வேட்டையாடுகிறார்கள் என்ற சூட்சுமத்தை தேடி கற்க வேண்டும். இதற்கு அப்பால் ஒருங்கிணைந்த தேசிய அளவிலான வளர்ச்சி என்பது கொரியாவிடம் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய பெரிய பாடம்.

முக்கியமாக‌ ஒவ்வொரு கால கட்டத்திலும்  விளையாட்டு துறையில் தங்களிடம்  உள்ள‌ பிரச்சினைகளை தீர அலசி அதற்கான முடிவுகளை தேட துவங்கியதுதான். இதுவே சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் தென் கொரியாவின் பலமான முன்னெடுப்பிற்கு காரணம். குறிப்பாக‌ கொள்கை மற்றும் செயலாக்க குழுக்களை (policy and implementation) ஒவ்வொரு குறிப்பிட்ட கால கட்டத்திலும் நியமித்தார்கள். நம் தேசம் இங்கேதான் சறுக்குகிறது.

இந்தியாவின் கிரிக்கெட்டை போலவே தடகளம், வில் வித்தை, பேஸ் பால் மூன்றும் தென் கொரியாவில் அதிகமாக‌ ஸ்பான்சர் செய்யப்படும் உயரடுக்கு விளையாட்டுகள். அதையும் மீறி கவனத்தில் வராத சிறிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தர தனித்த கொள்கை முடிவுகளை எடுத்தனர். அதன் விளைவாக சிறிய நிறுவனங்களின் ஸ்பான்சர்களை அரசே ஒருங்கிணைப்பு செய்தது.


சியோல் ஒலிம்பிக் பூங்கா

மேலும் இந்த குழுக்கள், சிறந்த விளையாட்டு வீரர்களை இனம் காணுதல் ,விளையாட்டு அறிவியல், பயிற்சியாளர், விளையாட்டு வசதி ஆகியவற்றின் முன்னேற்றம் இவற்றில் அதீத கவனம் எடுத்துக் கொண்டார்கள். இதன் மூலம் நன்கு கட்டமைப்பு செய்யப்பட்ட தேசிய அளவிலான போட்டிகளை முன்னெடுத்தது. கடந்த சமீப காலமாக‌, சர்வதேச போட்டிகளில் எப்படி தயார் செய்து கொள்வது என்று சொல்லும் SPLISS (Sport policy factors leading to international sporting success)  மாடலை கொரியா மிகத் தீவிரமாக பின் பற்றி வருகிறது.

ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டி போன்ற சர்வதேச அளவிலான பங்கேற்பிற்கு இந்தியாவின்  புவி சார் அரசியலில் "தமிழகம்" எங்கு நிறுத்தப்பட்டு இருக்கிறது என்ற பரவலான புள்ளி விபரம் தேவைப்படுகிறது.

இன்னும் பல கேள்விகள் தொங்கி நிற்கிறது, நம் பிரதிநித்துவம், தேசிய அளவிலான விளையாட்டு மைதானங்கள், வீரர்கள் தேர்வு மற்றும் பயிற்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு என நம் இருப்பின் அவசியத்தை நாம் தீர அலச வேண்டிய கட்டத்தில் உள்ளோம். இந்த இடத்தில் தான் நாம் மீண்டும் மீண்டும் இந்தி என்னும் ஒரு மாயைக்குள் சிக்க வைக்கப்படுகிறோம்.

நமக்கான இருப்பை கேட்கும் முன் “தென் இந்தியா” என்ற ஒரு லாவகமான லாஜிக்கிற்குள் ஒளிந்து கொண்டு நிதியை தெற்கே கொண்டு வருவதுதான் சாமர்தியமானது. பின்னர் தமிழகத்திற்கான தேவையினை நம் மாநில அரசின் நிதியின் பங்களிப்போடு கிராம அளவில் விளையாட்டிற்கான உட் கட்டமைப்பினை கொண்டு செல்ல முடியும். பள்ளி அளவில் விளையாட்டு வீரர்கள் பங்களிப்பில் சோர்வாக இருக்கும் பள்ளிகளை இனம் கண்டு சரி செய்ய வேண்டும். கிராம அளவிலான விளையாட்டு மன்றங்களை முன்னெடுக்க வேண்டும். இங்கே சாதி ஒரு சகடை சனியாக நின்று கொல்லும் என்பது இன்னொரு பிரச்சினை.

இவை தவிர்த்து பார்த்தால், தென் இந்திய அளவில் தமிழகம் செயல்படலாம் என்றால் துரதிஸ்ட வசமாக அண்டை மாநிலங்களுடன் தமிழகத்தின் உறவு என்பது படு சிக்கலாக மோசமாக உள்ளது. காரணம் நதிநீர் பங்கீட்டு பிரச்சினை. ஒரு வேளை, தென்னிந்திய அளவில் விளையாட்டு பிரதிநித்துவ முன்னெடுப்புகள் நம்மிடையே உள்ள சின்ன கசப்புகளை நீக்க ஒரு காரணியாக அமையலாம்.

இன்னும் பேசுவோம்.

சுதாகர் பிச்சைமுத்து,
வேல்ஸ், பிரித்தானியா


Friday 19 August 2016


ஒலிம்பிக் பதக்க கனவுகள்-1

தென் கொரியா, ஜப்பான், பிரித்தானியா இந்த மூன்று நாடுகளிலும் நான் பார்த்த ஒரே ஒற்றுமை கம்யூனிட்டி பார்க்குகள். இந்த பூங்காக்களில் உள்ள‌ குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள் பாராட்டத் தக்கவை.

அதன் பயனை இன்று ஒலிம்பிக் பதக்கங்களாக அறுவடை செய்கின்றனர்.

பிரித்தானியா     57 பதக்கங்கள்
ஜப்பான்              38  பதக்கங்கள்
தென் கொரியா 18 பதக்கங்கள்

சாலையோரம், கால்வாய் ஓரம், தெருக்களில் இருக்கும் சிறு பூங்கா என எல்லா இடங்களிலும் இரண்டு வயது குழந்தை முதல் 80 வயது முதியவர் வரை விளையாட, உடற்பயிற்சி செய்ய எல்லா வசதிகளும் உள்ளது. முற்றிலும் இலவசம்.  யாரும் இந்த பொருட்களை சேதப்படுத்துவதில்லை.

ஏழை, பணக்காரன், சாதி, அந்தஸ்து என எதுவும் இல்லாமலே தன்னியல்பாகவே ஒரு வீரன் இந்த தேசங்களில் உருவாக முடியும்.

எல்லாவற்றிற்கும் மேலாக மீடியாக்கள் எல்லா விளையாட்டிற்கும் ஒரே மாதிரியான ஆதரவு தருகிறார்கள்.

சிறார்களுக்கான விளையாட்டு அகாதமிக்கள் இந்த மூன்று நாடுகளிலும் பள்ளி அளவிலேயே சிறப்பாக செயல்படுகிறது.

நாம் இன்னும் இந்த படிநிலைகளை கடக்கவே இன்னும் 50 வருடம் ஆகும் போல. போதாக் குறைக்கு விளையாட்டு துறையில் இருக்கும் ஊழல் அரசியல்.

இத்தனை அக்கப் போர்களுக்கு நடுவில் இரண்டு பெண்கள் விருதை வென்று தந்துள்ளார்கள்.

உங்கள் பகுதியில் இருக்கும் பூங்காக்களில் உள்ள‌  சின்ன சின்ன விளையாட்டு, உடற்பயிற்சி கருவிகளை பாதுகாப்பாக நிறுவுங்கள்.

விளையாட்டு மைதானங்களை ஆக்கிரமிப்பது, பூங்காவில் உள்ள உடற்பயிற்சி பொருட்களை சேதப்படுத்துவது போன்ற இழிவுகளை நிறுத்த போராடுங்கள்.


அப்புறம் பாருங்கள் இந்த தேசத்தில் இருந்து லட்சக் கணக்கான வீரர்கள் ஒலிம்பிக்கிற்கு வருவார்கள்.

ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்கள் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.


சரித்திரமாகும் புகைப்படங்கள்

இந்த புகைப்படத்தினை ஒரு வித்தியாசமான சூழலில் பதிவு செய்தேன்.

அந்த மதிய வெய்யிலில் வானத்தை கிழித்துக் கொண்டு போர் ரக விமானங்கள் பறந்து பறந்து சாகசங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தன. சுவான்சி நகர கடற்கரை முழுவதும் எப்போதும் இல்லாத அளவிற்கு கூட்டம் வழிந்து கொண்டிருந்தது. எல்லா கண்களும் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. 

ஆனால் இவற்றை துளியும் சட்டை செய்யாமல் நாலைந்து சிறுவர்கள் கடற்கரையில் குதுகலமாக ஈர கால்சட்டையோடு நீளம் தாண்டுதல் விளையாட்டில் மும்முரமாய் இருந்தனர். கடைசி வரை அந்த சிறுவர்களில் எவனும் வானத்தை அண்ணாந்து கூட பார்க்கவில்லை. அவர்களின் உலகில் அவர்கள் கரைந்து கொண்டிருந்தார்கள்.

யார் கண்டது நாளை இந்த சிறுவர்களின் எவனாவது ஒருவன் விமானத்தை ஓட்டிக் கொண்டு தாங்கள் விளையாண்ட கடற்கரையினை மேலிருந்து ஏக்கத்தோடு பார்க்கக் கூடும் என நினைத்துக் கொண்டேன்.




புகைப்படங்கள் நாம் வாழ்ந்த வாழ்க்கையினை மட்டும் சொல்வதில்லை, ஒரு தலைமுறையின், ஒரு இடத்தின் வரலாற்றை சொல்கிறது. சில நேரங்களில் சின்ன புகைப்படங்கள் பலருக்கும் உந்துதலாகவும்,பாடமாகவும் பல புகைப்படங்கள் உலக அளவில் நிலைத்து நின்று விடுகிறது.

புகைப்படங்கள் எடுத்தால் ஆயுள் குறைவு என்ற மூடநம்பிக்கைகளில் இருந்து வெளியேறி ஆபத்தான சூழலில் செல்பி எடுத்து உயிரை போக்கி கொள்ளும் அளவிற்கு நவீனமாகி இருக்கிறோம். 

தன்னை சுற்றி இருக்கும் இயற்கையினை, ஒளியின் ரகசியங்களை, சக மனிதர்களின் வாழ்வியல் நிகழ்வுகளை பதிவு செய்ய எப்போதும் தங்கள் கழுத்தில் காமிராவை சுமந்து திரியும் எல்லா ஒளிப்பதிவு கலைஞர்களுக்கும் உலக புகைப்பட தின வாழ்த்துகள்.

இன்றைய புகைப்படம் நாளைய சரித்திரம்.






Thursday 11 August 2016

டியூரோ நகர தேவாலயம் (Truro Cathedral)



ஒரு நகருக்கான எந்த பரபரப்பும் இல்லாமல், அமைதியாக படுத்திருக்கும் ஒரு பசுவின் கன்றை போலவே டியூரோ  (Truro) நகரம் இருந்தது. கொஞ்சம் சூரிய ஒளியின் கதகதப்பில் மக்கள் அங்குமிங்குமாக நகரத் துவங்கிய மதிய நேரத்தில் தான் டியூரோ நகர தேவலாயத்திற்கு  (Turo Cathedral) சென்றோம்.

என் உடன் வந்திருந்த பேராசிரியர் செந்தில் அண்ணா, பல முறை இந்த தேவாலயத்தை பார்த்திருப்பதால் நான் வெளியில் அமர்ந்திருக்கிறேன். நீ வேண்டுமானால் உள்ளே சென்று சுற்றிப் பார்த்து விட்டு வா என்று சொல்லி விட்டார்.

சரி அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என சொல்லி விட்டு நான்  மட்டும் தேவாலயத்தின் உள்ளே சென்று ஒரு சுற்று சுற்றினேன்.

இந்த டியூரோ நகர தேவாலயம் கன்னி மேரியின் ஆசிர்வாதம் பெற்றது என மக்கள் நம்புகின்றனர். இந்த தேவாலயம் 1880 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1910 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு மக்கள் வழிபாட்டிற்கு அர்பணிக்கப்பட்டுள்ளது.

ஆச்சரியம் என்னவென்றால், இந்த தேவாலயம் இருக்கும் இடத்தில் தான் 1259 ஆம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்ட பாரிஸ் வழிபாட்டு தலம் (Parish Church) இருந்தது. பிறகு அதனை இடித்து விட்டு புதிய தேவாலயம் கட்டலாம் என முடிவெடுத்த போது முழுவதும் இடிக்க வேண்டாம் என போராடி பழமையின் நினைவாக‌ஒரு பகுதியினை (தெற்கு பகுதி) புதிய கட்டிடத்துடன் இணைத்து விட்டனர்.

ஆகையால் நீங்கள் இந்த தேவாலயத்திற்கு சென்றால் பின்புறம் இருக்கும்  பழைய பகுதியினை காணலாம்.

இந்த தேவாலயத்தின் முக்கிய‌ சிறப்பு என்னவென்றால் மத்திய  கால கட்டத்தில் (Mediaval Period) ஐரோப்பாவில் பெரிதும் பேசப்பட்ட கோத்திக் (Gothic architecture) பாணியிலான கட்டிட அமைப்பில் இதன் மேற்கூறைகள் வேயப்பட்டுள்ளது. இது போன்ற கட்டிட அமைப்பினை சென்ற வருடம் ஸ்பெயின் தேசத்தின் பார்சிலோனா நகருக்கு சென்ற போது அங்குள்ள‌ தேவாலயங்களில் பார்க்க முடிந்தது. அங்குள்ளது போலவே வண்ணங்களால் ஆன கண்ணாடி பூச்சு ஓவியங்களை இங்குள்ள சுவற்றில் பார்க்கலாம்.

டியூரோ நகர தேவாலயத்தின் மற்றொரு சிறப்பு இங்கு நடைபெறும் ஆர்கன் இசையோடு கூடிய அற்புதமான ஆராதனை வழிபாட்டு பாடல்கள். நான் உள்ளே சென்ற பொழுது மதிய நேர ஆராதனை பாடல்களுக்கான பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். 2 நிமிடம் கண்ணை மூடி அப்பாடலை கேட்க அவ்வளவு சுகமாக இருந்தது.

ஒருவழியாக சுற்றிப் பார்த்து விட்டு வெளியே வந்து வாசலில் தேவாலயத்தின் உச்சியை அண்ணாந்து பார்த்து கொண்டிருந்தேன். தெளிவாக மேகங்கள் பின்னனியில் கோபுர உச்சி அழகியலோடு மின்னியது. ஆனால் நீண்ட நேரம் பார்த்தால் நிச்சயம் கழுத்து சுளுக்கி கொள்ளும். சும்மாவா, 76 மீட்டர் உயரம் ஆயிற்றே.

தேவாலயத்தின் வாசலில் அரை வட்டமாக  இருக்கும் முகப்பு பகுதியில்  200 பேர் வரை உட்காரும் அளவிற்கு விலாசமாக இருக்கிறது. கொஞ்சம் மர பெஞ்சுகள், பூத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. தேவலாயத்தை ஒட்டி நகரின் சந்துகள் போகிறது. எதிரில் ஒரு தபால் நிலையம் உள்ளது. தேவாலயத்தை ஒட்டிச் செல்லும் புனித மேரி தெருவில் மட்டும் மகிழுந்துகள் போகிறது. 

**இந்த சுட்டியில் தேவாலயத்தின் உள் பகுதியினை சுற்றிப் பார்க்கலாம்

வாசலில் சிறிது நேரம் உட்கார்ந்து பேசி விட்டு பக்கத்து தெருவில் சென்று புகைப்படம் எடுக்கலாம் என நகரத் துவங்கினோம். அப்போது வழியில் வந்து கொண்டிருந்த உள்ளூர் பாட்டி எங்களை விசாரிக்க துவங்கினார். அவருக்கு வயது எப்படியும் 90 இருக்கும். நாங்கள் பேசுவதை ஒரு முறைக்கு இருமுறை கேட்டபின்பே எங்களுடன் உரையாடினார். 

நாங்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றதும் அவருக்கு மகிழ்ச்சி. அவரது கணவர் ஒரு வெள்ளைக்காரர். சுதந்திரத்திற்கு முந்தைய பிரித்தானிய இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். பிறகு பிரித்தானியாவின் ராணுவத்தில் பணி புரிந்துள்ளார்.  இந்தியா சுதந்திரம் அடைந்த பின் பிரித்தானியாவிற்கு வந்து விட்டார் எனச் சொன்னார்.

அவர் பணி புரிந்த காலத்தில் போரில் நிறைய மக்களை கொல்லவேண்டிய சூழல் இருந்ததாகவும் பின்னர் கடுமையான மன உளைச்சலில் தவித்ததாக‌  சொன்னார். பிறகு இந்த மன உளைச்சலில் இருந்து மீள ஆப்ரிக்கா சென்று அங்குள்ள மருத்துவமனையில் இருவரும் மக்களுக்கு சேவை செய்துள்ளனர்.

எங்களோடு பேசிக் கொண்டிருந்தவர், தேவாலயத்தின் எதிரே இருந்த ஒரு கற்தூணை சுட்டிக் காட்டினார். அவர் காட்டும் வரை அவ்வளவு நேரம் அங்கிருந்த எங்களுக்கே அது புலப்படவில்லை. அதன் மீது எந்த வித தகவலும் இல்லை.

என்ன பாட்டி, இந்த தூணில் என்ன விசேசம்? என்றோம்.

அவர் சிறு வயதில் இருந்த போது, இந்த நகரில் தவறு செய்பவர்களை அந்த தூணின் முன்பு நிறுத்தி கடுமையான தண்டனை தந்துள்ளனர். 

ஆனால், இன்று அந்த கல் தூண் எந்த சுவடும் இல்லாமல்  அமைதியாக‌ ஒரு மூலையில் நின்று கொண்டிருக்கிறது. அதன் அருகில் இருக்கும் மர பெஞ்சில் இருந்த ஆண்களும், யுவதிகளும் செல்பி எடுத்து விளையாண்டு கொண்டிருந்தனர்.

எழுபது வருடங்களில் இந்த இடம் அடைந்த மாற்றத்தினை ஆச்சரியத்துடன் எங்களுக்கு விளக்கி கொண்டிருந்தார்.

உண்மையில்  சக மனிதர்களின் மேல் அன்பை பொழிவதில் மானுடத்தின் மேன்மை உலகமெங்கும் பெருமளவில் முன்னேறி இருந்தாலும்  இன்னும் போர் நின்று விட்டதாக தெரியவில்லை. அதன் சாட்சியாகவே அந்த தூண் தெரிந்தது. அந்த தூண் மீண்டும் உயிர்தெழவே கூடாது என நினைத்து கொண்டு அங்கிருந்து நகரத் துவங்கினோம்.

குறிப்பு:

வாய்ப்பு கிடைத்தான் பிரித்தானியாவில், கார்ன்வெல் பகுதியில் உள்ள இந்த டியூரோ நகர தேவாலயத்தை சுற்றிப் பார்க்க தவறாதீர்கள். இந்த இடம் லண்டனில் இருந்து சுமார் 400 கி,மீ தொலைவில் உள்ளது





டியூரோ தேவாலய முகப்பு  (Truro Cathedral)


டியூரோ தேவாலய முகப்பு  (Truro Cathedral)


டியூரோ தேவாலய முகப்பு  (Truro Cathedral)


டியூரோ தேவாலய உள் மேற்கூரை  (Truro Cathedral)


டியூரோ தேவாலய உள் பகுதி (Truro Cathedral)


டியூரோ தேவாலய உள் பகுதி (Truro Cathedral)

வெளிப்புற வட்ட வடிவிலான சன்னலின் உட்பகுதி   


வண்ண கண்ணாடியில் வரையப்பட்ட ஓவிய‌ பூச்சு  

வண்ண கண்ணாடியில் வரையப்பட்ட ஓவிய‌ பூச்சு  

வண்ண கண்ணாடியில் வரையப்பட்ட ஓவிய‌ பூச்சு  

மதிய ஆராதனை இசை பயிற்சி

வண்ண கண்ணாடியில் வரையப்பட்ட ஓவிய‌ பூச்சு  


தெற்கு பகுதியில் உள்ள இரட்டை கோபுரங்கள்

தெற்கு பகுதியில் உள்ள இரட்டை கோபுரங்கள்

கோவில் வாசலில் உள்ள தண்டனைத் தூண்


கோவில் வாசலில் உள்ள தண்டனைத் தூண்