Wednesday 4 April 2018


சூரிய எரிபொருள் உற்பத்தியில் செயற்கை சிலந்தி வலைகள்
(Nanofibers in solar fuel generation)
---------------------------------------------------------------------------------
இயற்கையில் காணக் கிடைக்கும் சிலந்தி வலைகளைப் போலவே எலக்ட்ரோ ஸ்பின்னிங் (electrospining) முறையில் தயாரிக்கப்பட்ட நானோ அளவிலான செயற்கை வலைகள் எவ்வாறு சூரிய எரிபொருளில் பயன்படுகிறது என்ற எமது ஆய்வுக் கட்டுரை Applied Surface Science (Applied Surface Science 2018, 447, 331-337) என்ற ஆய்விதழில் பிரசுரம் ஆகி உள்ளது.

இந்த ஆய்வினை பிரித்தானியாவில் உள்ள சுவான்சி பல்கலைக் கழகத்தில் உள்ள எமது ஆய்வுக் குழுவும், தென்கொரியாவில் உள்ள ஹன்யாங் பல்கலைக் கழகத்தில் (Hanyang University, South Korea) உள்ள ஆய்வுக் குழு மற்றும் ஜப்பானின் தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தில் (Tokyo University of Science, Japan) உள்ள சர்வதேச போட்டோகேட்டலிஸ்ட் நிலையத்தினருடன் (Photocatalysis International Research Center) கூட்டாக இணைந்து இவ்வாய்வினை மேற்கொண்டோம்.

ஒளி மின் வினையூக்கிகள் (photoelectrocatalyst) மூலம் சூரிய ஒளியில் இருந்து நீர் மூலக்கூறுகளை (H2O) பிரித்து ஆக்சிஜன் (O2), மற்றும் ஹைட்ரஹன் (H2) வாயுவினை தயாரிக்கும் நீடித்த (sustainable), புதுப்பிக்கதக்க (renewable) நுட்பம் தற்போது ஆற்றல் சந்தையில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

ஆனால், ஒளி மின் வினையூக்கி மென் படலம் பூசப்பட்ட தகடுகளில் இருந்து ஒளிமின்னிகளை (எலக்ட்ரான் மற்றும் துளைகள்) பிரித்து மின் சுற்றில் இணைக்கப்பட்டுள்ள நேர், எதிர் மின் முனைகளை நோக்கி விரைவாக கடத்துவதென்பது மிகச் சவாலான செயல் ஆகும். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் (நானோ செகன்டுகள்) இந்த மின்னிகளை பிரிக்காவிட்டால் அவை மீள்சேர்க்கை (recombination) செயல் மூலம் அவை வேதி வினைகளுக்கு பயன்படாமல் போகும். இந்த மீள்சேர்க்கை செயல் நேரடியாக சூரிய ஆற்றலை ஹைட்ரஜனாக மாற்றும் செயல் திறனை பாதிக்கும்.





ஒளி மின் வினையூக்கிகளை மென்படலமாக (thin films) நேரடியாக தகட்டின் (electrode) மீது பூசுவதற்கு பதில் ஒன்றுக்கொன்று நன்கு பின்னி பிணையப்பட்ட நானோ அளவிலான, டங்ஸ்டன் ஆக்சைடு (WO3) செயற்கை வலை (nanofiber) மீது பூசுவதன் மூலம் எலக்ட்ரான் மின்னிகளை மட்டும் விரைவாக பிரித்து வெளி மின் சுற்றிற்கு கடத்தலாம். மேலும் முப்பரிமாண முறையில் அடுக்குகளாக இவ்வலையானது பின்னப்பட்டு இருப்பதால் நேரடியாக ஒளி வினையூக்கி மென்படலத்தை பூசுவதை விடவும் இம்முறையில் அதிக எண்ணிக்கையில் அடர்த்தியாக பூச முடியும். இதனால் சூரிய ஆற்றலை ஹைட்ரஜனாக மாற்றும் செயல் திறன் அதிகரிக்கும்.

இந்த நானோ வலை இயற்கையில் சிலந்தி பூச்சிகள் தயாரிக்கும் வலைகளைப் போலவே நானோ நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்டது. இந்த வலையில் உள்ள ஒரு பைபரின் விட்டம் 100- 150 நானோ மீட்டர் அளவில் இருக்கும்.

WO3 நானோ வலைகள் மிகக் குறைந்த நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்படுவதால் இதனை பரந்து விரிந்த பரப்பிலும் (large scale) செயல்படுத்த இயலும். இந்த வசதியினை ஆற்றல் சந்தையில் ஹைட்ரஜன் வாயு உற்பத்தி சார்ந்த பயன்பாட்டோடு, எங்கெல்லாம் எலக்ட்ரான் மின்னிகளை விரைவாக கடத்தக் கூடிய சூழலில் வேதிவினைகள் மற்றும் எலக்ரானிக் மின் சுற்றுகளில் டங்ஸ்டன் நானோவலைகளை பயன்படுத்த இயலும்.


தற்போது நீர் சுத்திகரிப்பு பணியில் இந்த நானோ வலைகளை எமது ஆய்வுக் குழு கூட்டு ஆராய்ச்சி மூலம் சுவான்சி பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து வருகிறது.

இவ்வாய்வு கட்டுரையினை கீழ்கண்ட சுட்டியில் அடுத்து வரும் 50 நாட்களுக்குள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


https://authors.elsevier.com/a/1WqYicXa~obd3


முனைவர் சுதாகர் பிச்சைமுத்து
சுவான்சி பல்கலைக் கழகம்
ஏப்ரல் 04, 2018







முனைவர் ஆராய்ச்சி பட்ட வாய்ப்புகளுக்கு பேராசிரியர்களை எப்படி தொடர்பு கொள்வது?

இரண்டு வாரங்களுக்கு முன்பு முது நிலை இயற்பியல் பயின்ற ஒரு மாணவரிடம் இருந்து ஒரு மின்னஞ்சல்.

அந்த மின்னஞ்சலில் மூன்றே வரிகள் தான் இருந்தது.
"நான் படித்து முடித்து விட்டேன், எனக்கு உங்கள் ஆய்வுக் குழுவில் இடம் இருக்கிறதா?"

இதுதான் இன்றைய சூழல்.

ஒரு பகுதி மாணாக்கர்கள் வெளிநாடுகளில் முனைவர் ஆராய்ச்சி பட்டம் பெறுவதற்கான வழி வகைகளை தெரிந்து கொண்டு முயற்சிக்கிறாரக்ள். மற்றொரு வகையினர் நோட்டீஸ் அடித்து ஆட்டோவில் சென்று பறக்க விடுவது போல் தாந்தோன்றி தனமாக மின்னஞ்சல் அனுப்புகிறார்கள்.

முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு ஆயவு் நிதி (PhD Scholarship) உதவி ஏதேனும் கிடைக்குமா? என பேராசிரியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் கடிதம் (cover letter) மிக முக்கியமானது.

வெளிநாட்டில் உள்ள பேராசிரியர்களை தொடர்பு கொள்ளும் போது 15 விசயங்களை கட்டாயம் கடை பிடித்தால் வெற்றி வாய்ப்பு அதிகம்.

1. உங்கள் கல்விப் பின்புலம் (academic background)
2. ஏன் குறிப்பிட்ட பேராசிரியரை தொடர்பு கொள்கிறீர்கள் (அப்பேராசிரியர் குழுவின் ஆராய்ச்சிக் கட்டுரையினை வாசித்து விட்டு குறிப்பிடலாம்) (research back ground)
3. குறிப்பிட்ட ஆய்வுக் குழுவில் நீங்கள் என்ன கற்றுக் கொள்ள போகிறீர்கள்? நீங்கள் என்ன பங்களிப்பீர்கள்? (learning and contribution)
4. உங்களது முதுநிலை கால கட்டத்தில் குறிப்பிட்டத்தக்க சாதனைகள் ஏதேனும் புரிந்திருந்தால் இரண்டு வரியில் குறிப்பிடலாம். (achievement)
5. வாய்ப்பு இருந்தால் தெரிவியுங்கள் என்று பேராசிரியருக்கு வேலை சொல்வதை விட, தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன் என சொல்வதே நலம் (diplomacy).
6. உங்களைப் பற்றிய resume 2-3 பக்கத்திற்குள் இருப்பது நலம் (short biography).
7. தங்களுக்கு தெரிந்தவற்றையும் (hands of experience), ஆர்வமுள்ளவற்றையும் (research interest) தனித்தனியாக குறிப்பிடவும். எல்லாமே தெரியும் என குறிப்பிட்டால் அவை உங்களது நம்பகத் தன்மையினை குறைத்து மதிப்பிடவே வழி வகுக்கும்
8. முது நிலையின் போது நீங்கள் செய்த பிராஜக்ட் குறித்து இரண்டு பக்கங்களில் சுருக்கமாக (abstract) எழுதவும். இந்த திட்டம் தங்களுக்கு எத்தையக அறிவியல் நுட்ப புரிதலை தந்தது (understanding) என எழுதவும். இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக அடுத்த நிலையில் என்ன கற்க விரும்புகிறீர்கள் (future plan) என சுருக்கமாக குறிப்பிடவும். இப்பகுதியில் அப்பேராசிரியரின் குழுவினருடன் எதேனும் ஒரு புள்ளி ஒத்துப் போகுமாறு இருந்தால் நலம்.
9. கடிதத்தில் அளவுக்கு அதிகமாக உணர்ச்சி பெருக்கு (enthusiastic), நன்றி நவிழல் (too much praising) தேவையில்லை. அதே நேரம் கொஞ்சம் மரியாதையுடன் (politeness) எழுதுதல் உங்களைப் பற்றிய பாசிடிவ் எண்ணத்தை ஏற்படுத்தும்.
10. பேராசிரியருக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டு உடனே பதில் தருமாறு மீண்டும் மீண்டும் நினைவூட்டுவது எரிச்சலைத் தரும் (frequent reminders). வெளிநாடுகளில் பணி புரியும் பேராசிரியர்களுக்கு பணிச்சுமை மிக அதிகம். ஆகவே ஓய்வு நேரத்தில் மட்டுமே அவர்கள் பதில் தர இயலும்.
11. குறிப்பிட்ட பேராசிரியரிடம் ஆய்வு நிதி இல்லாவிட்டாலும் உங்கள்
, மற்றும் உங்களின் அணுகுமுறை (behaviour) பிடித்துப் போகும் பட்சத்தில் அவரது நண்பர்கள் குழுவிற்கு உங்களைப் பரிந்துரைக்க (referring to others) வாய்ப்புள்ளது. ஆகவே நீங்கள் எப்படி ஒருவரை தொடர்பு கொள்கிறீர்கள் என்பது மிக முக்கியம்.
12. Resume, cover letter எழுதுவது எப்படி என இணைய தளத்தில் இருந்து கொஞ்சம் பயிற்சி செய்யலாம். உங்கள் நட்பு வட்டத்தில் யாரேனும் வெளிநாடுகளில் ஆராய்ச்சித் துறையில் பணி புரிபவர்களிடம் ஒரு முறை உங்கள் கடிதத்தை தந்து ஆலோசனை (friendly advise) கேட்கலாம்.
13. உங்களுக்கு நன்கு அறிமுகமாகிய இந்திய பேராசிரியர்களின் பெயரை ரெபரன்சாக தரவும். ரெபரன்ஸ் பகுதியில் இரண்டு பேராசிரியர்களின் பெயரைத் தரவும். அதில் ஒருவர் உங்கள் முதுநிலை பிராஜக்ட் வழிகாட்டியாக (guide) இருந்தால் இன்னும் நலம்ம். அவர்களது மின்னஞ்சல், தொலைபேசி எண்ணை குறிப்பிடவும். இயன்றவரை அவரது தகவல் அவர் பணி புரியும் கல்வி நிறுவனத்தின் வெப்சைட்டில் இருந்தால் அந்த முகவரியினையும் குறிப்பிடலாம். நீங்கள் ரெபரன்சாக அவரது பெயரை தரும் முன்பு அவரது ஒப்புதலைக் கட்டாயம் பெறவும்.
14. ஒரே கடிதத்தை அப்படியே பெயரை மட்டும் மாற்றி மற்ற பேராசிரியர்களுக்கு அனுப்பாதீர்கள். ஒவ்வொரு கடிதமும் தனித்தன்மையோடு (uniqueness) இருக்க வேண்டும்.
15. உலகம் முழுவதும் ஆய்வுப் பணிகளுக்கென தனித்த இணையதளங்கள் (research job portals) உள்ளது. இயன்றவரை வாரம் ஒரு முறை இந்த தளங்களில் வெளியாகும் வாய்ப்புகளை தொடர்ந்து கண்காணித்து வரலாம்.


ஒவ்வொரு வாய்ப்பும் மேன்மையானது. வாய்ப்புகள் கதவை தட்டும் போது, அதனை வாசற்படியிலேயே தவற விடாதீர்கள்.

வாழ்த்துகள்!

முனைவர் சுதாகர் பிச்சைமுத்து
சுவான்சி பல்கலைக் கழகம்
ஏப்ரல் 4, 2018