Tuesday, 31 January 2017

தடுப்பூசி சந்தேகங்களும், வதந்திகளும் -1

1. உங்களது நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு திடீரென ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் அறுவை சிகிச்சை செய்தால் 50 சதவிகிதம் மட்டுமே பிழைக்க வாய்ப்புண்டு என்று ஒரு மருத்துவர் கூறினால். சரிங்க டாக்டர் எதுக்கு 50 சதவிகிதத்துக்கு ரிஸ்க் எடுக்க வேண்டும். விட்ருங்க போய் சேர்ந்திரட்டும் என சொல்வீர்களா, இல்லை எப்படியாவது முயற்சி செய்து உயிரைக் காப்பாற்றி தாருங்கள் என திடமாக முடிவெடுப்பீர்களா?

அதை உங்களின் பதிலுக்கே விட்டு விடுகிறேன்.

அடிப்படையில், சக மனிதர்கள் மேல் அன்பிருக்கும் எல்லா மனிதருமே ஒரு சதவிகிதம் உயிர் பிழைக்க வாய்ப்பிருந்தாலும் மருத்துவ சிகிச்சை மூலம் அவர்களை காப்பாற்றவே முனைவோம். ஏனெனில், நாம் எல்லோருமே ரத்தமும், சதையும் மட்டுமல்ல அன்பினாலும், பரிவினாலும் நம்மை சுற்றியுள்ளவர்களோடு பின்னப்பட்டிருக்கிறோம்.

இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரு சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவான பக்க விளைவு தடுப்பூசியின் மூலம் ஏற்படும் என்ற ஒரு செய்தியை வைத்துக் கொண்டு “ஊரையே சாகடிக்கப் பார்க்கிறார்கள்”, “இந்த தடுப்பூசி போடப்படும் எல்லா குழந்தைகளுக்கு ஆட்டிசம் என்னும் நோய் தாக்கலாம்” என்ற அச்சத்தினை பரவலாக வாட்சப், முகநூல் வாயிலாக பலர் பரப்புகிறார்கள்.

தடுப்பூசி பற்றிய அச்சம் இயற்கையானது. அதனை தக்க மருத்துவர்களிடம் அல்லது துறை சார் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டு ஐயத்தை தெளியப் பெறலாம். அதை விடுத்து ஒரு முன் முடிவோடு மக்களை வேண்டுமென்றே பயமுறுத்துபவர்களையே நான் “வதந்தியாளர்கள்” என வரையறுக்கிறேன். அதுவும் நள்ளிரவில் வாட்சப் வதந்தி கிளப்புபவர்களை “சுடுகாட்டு பூதம்” என்று அழைப்பதுதான் பொருத்தம் என எண்ணுகிறேன். இந்த வதந்தி பற்றிய அச்சத்தினை நீக்கவே இந்த கட்டுரையினை எழுதுகிறேன்.

2. இந்த தடுப்பூசிகள் ஒரு சதவிகிதம் உறுதிசெய்ய முடியாத பக்க விளைவுகளை உருவாக்கும் என்று கூறியுள்ளீர்களே? அப்படியானால் நூற்றில் ஒரு குழந்தைக்கு பாதிக்குமா. அதுவும் ஆட்டிசம் என்னும் நோய் வரும் என சொல்கிறார்களே?

 அதன் அர்த்தம் அப்படி கிடையாது. சராசரியாக, நூறு குழந்தைகளுக்கு தடுப்பூசி தரும் போது எதாவது ஒரு குழந்தை, அதுவும் அந்த தடுப்பூசியினையும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு பலவீனமான நோய் எதிர்ப்பு திறன் இருந்தால் மட்டுமே ஒரு வேளை பாதிக்கலாம். அதற்காக கண்டிப்பாக நூற்றில் ஒரு குழந்தையினை பாதித்தே தீரும் என்று அர்த்தப்படுத்திக் கொள்வது அபத்தமே. ஒரு வேளை லட்சத்தில் ஒரு குழந்தைக்கோ, அல்லது கோடியில் ஒரு குழந்தைக்கோ அவர்களின் பலவீனத்தை பொறுத்து பாதிப்பு இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். அதற்காக தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை.


இந்த தடுப்பூசி மூலம் ஆட்டிசம் நோய் தாக்குதல் ஏற்படுவதில்லை. ஆட்டிசம் நோய் தாக்குதலுக்கு பல காரணங்கள் உண்டு, அதற்கு முழுக் காரணம் இந்த தடுப்பூசிதான் என்று திட்டவட்டமாக‌ நீருபணம் செய்யும் ஆய்வு முடிவுகள் எதுவும் இது வரை வெளியிடப்படவில்லை.

நான் முன்பே சொன்னதை போல, இந்த தடுப்பூசி எடுத்துக் கொள்ளாவிட்டால் மீசல்ஸ், ரூபல்லா நோயின் தாக்குதல் பரவலாகி நூறு குழந்தைகளையுமே பாதிக்கும் நிலை நிச்சயம் ஏற்படும்.

3. இந்த தடுப்பூசி எடுத்துக் கொள்ளாவிட்டால் என்ன விளைவுகள் ஏற்படும்?

மீசல்ஸ் என்ற வைரஸ் உடல் முழுவதும் தோல்கள் சிவப்பு திட்டுகளாக தடித்து கொடிய விளைவினை ஏற்படுத்துபவை. மேலும் அதி தீவிர காய்ச்சல், மற்றும் சளியினை ஏற்படுத்தி காற்றின் மூலம் பிறருக்கும் இந்த வியாதியினை பரப்புபவை.  இந்த மீசல்ஸை விட கொடியவன் ரூபெல்லா என்ற வைரஸ் கிருமி. இது ஆரம்ப கால கர்ப்பத்தில் இருக்கும் பெண்களை தாக்க வல்லது. மேலும் இது கருச்சிதைவிற்கும் வழி வகுக்கும். அத்தோடு மட்டும் நில்லாமல் கண்ணில் உள்ள விழித்திரை, நரம்புகள், இரத்த கசிவு, இதயம் மற்றும் மூளையினை பாதிக்க வல்லது,

4. இந்த நோய் வந்த பின்பு சிகிச்சை எடுத்துக் கொள்ளலாமே ஏன் அனைவருக்கும் தடுப்பூசி போடுகிறோம். இது அவசியம்தானா?

துரதிஸ்டவசமாக இந்த ரூபெல்லா, மீசெல்ஸ் இரண்டு வைரஸ் தாக்குதலுக்கும் வந்த பின்பு குணப்படுத்துவது மிகவும் கடினம். அதனால்தான் 9 மாத குழந்தை முதல் 15 வயது வரை உள்ள சிறார்களுக்கு இந்த தடுப்பூசி எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆகவே, வந்த பின் நோவதை விட வரும் முன் காப்பதே தடுப்பூசிகளின் பணி. என்பதை இப்போது நீங்கள்  உணர்வீர்கள் என நினைக்கிறேன்.

தற்போது தமிழக அரசு ஒரு 1.8 கோடி குழந்தைகளுக்கு மீசல்ஸ், ரூபல்லா நோய்களை தடுக்கும் தடுப்பூசியினை இலவசமாக வழங்க உள்ளனர். இதன் வாயிலாக இவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல இவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு இவர்கள் மூலம் நோய் தொற்று ஏற்படாமல் இருக்கும் என்பதை இந்த தடுப்பூசி உறுதி செய்கிறது.

5. மம்ஸ், மீசல்ஸ், ரூபல்லா, (MMS)தடுப்பூசி ஜப்பானில் தடை செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியினை பரவலாக எல்லோரும் பகிர்கிறார்களே. அது உண்மையா?

ஜப்பானில் மீசல்ஸ், ரூபல்லா (MMR) மீது தற்போது எந்த தடையும்  இல்லை. மேலே சொன்ன தடுப்பூசி மருந்தினை ஒன்றாக கலக்காமல்,  மீசல்ஸ், ரூபல்லா (MR) இரண்டினை தனித்தும், மம்ஸ் நோய்க்கான தடுப்பூசியினை தனியாகவும் ஜப்பான் அரசு அங்குள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வழங்குகிறது. 

இந்த MR தடுப்பூசியினை வழமையான பட்டியலிலுல் (routine), மம்ஸ் தடுப்பூசியினை விருப்ப பட்டியலிலும் (optional) ஜப்பானிய அரசு வரையறுத்துள்ளது. முன்னது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Health Hand Book for Japan Kids (Note that this is for my daughter's health book)


Japan Health Hand Book advised MR vaccine and mumps vaccine separetly (Note that this is for my daughter's health book)

MR தடுப்பூசியானது 1- 2 வயதுக்குற்பட்டவர்களுக்கு முதல் கட்டமாகவும், அக்குழந்தைக்கு வளர்ந்து 5-7 வயதுக்குள் இருக்கும் போது இரண்டாம் கட்டமாகவும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள ஜப்பானிய உடல்நலத் தகவல் மையம் (Japan Healthcare Information) அறிவுறுத்துகிறது. மேலே சொன்ன படி, ஜப்பானிய அரசு கடைபிடிக்கும் அதே எம்.ஆர் தடுப்பூசி முறையினைத்தான் இந்தியாவிலும் கொண்டு வந்துள்ளனர்.

6. இவ்வளவு உண்மை இருந்தும் ஏன் ஜப்பானில் எம் எம் ஆர் ஊசி தடை செய்யப்பட்டுள்ளது என்று தொடர்ந்து ஒரு செய்தியினை பரப்பி வருகிறார்கள்?

இப்படி உண்மையினை ஏற்காமல் தங்களுக்கு ஏற்ற வரிகளை மட்டும் இணையத்தில் இருந்து எடுத்துக்கொண்டு வெறும் அச்சமூட்டும் தகவல்களை பரப்புவதால்தான் அவர்களை நான் வதந்தியாளர்கள் என அழைக்கிறேன்.

**********************************************

ஏன் MMR தடுப்பூசியினை தனித் தனியாக MR எனப் போடுகிறார்கள், இந்த அச்சம் எவ்வாறு எழுந்தது என்பதனை அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

எனது நண்பர்கள், அவர்தம் குழந்தைகளின் நலம் கருதி இந்த பதிவினை எழுதுகிறேன். நிச்சயம் உங்களுக்கு இருக்கும் மருத்துவ ரீதியிலான கேள்விகளை கேளுங்கள். நிச்சயம் எனது மருத்துவ நண்பர்கள் மூலம் அறிவியல் ரீதியில் பதில்கள் பெற்று தருகிறேன்.


Saturday, 28 January 2017


அறிவியலை முடக்கும் வதந்திகளும், மூடநம்பிக்கைகளும்

முன்னைப் போல் ஏன் அடிக்கடி பயணக் கட்டுரைகள் அதிகம் எழுதவில்லை என நண்பர்கள் இன்பாக்சில் கேட்கிறார்கள்.  

கூட்டு ஆராய்ச்சிக்காக‌ தொடர்ச்சியான ஆய்வு கட்டுரைகள் எழுதுவது மற்றும் இன்னும் பிற அலுவல்களால் பெரிய அளவில் புதிய பயணங்களை திட்டமிட இயலவில்லை. ஆனால் மார்ச் மாதவாக்கில் ஓரிரு மாதங்களுக்கு ஜப்பான் சென்று வரலமா எனவும் திட்டமிட்டு கொண்டுள்ளேன்.

இணையத்தில் பெரும்பாலும் மூடநம்பிக்கையாளர்களுடன் மல்லுக்கட்டுவதிலேயே எனது பொக்கிசமான நேரம் கழிகிறது. இதற்கு நடுவில் வாட்சப்பில் வரும் "உண்மையான் தமிழனா இருந்தா ஷேர் பண்ணு", என உயிரை எடுக்கும் மூடர்களின் செய்திகளும் என் நேரத்தை எடுத்துக் கொள்கிறது.

நேற்று தமிழகத்தையே சுற்றி வந்த ஒரு வதந்தியை பற்றி இங்கே சொல்லியாக வேண்டும்.

ஒரு அரசு தன் குடிமக்களில் பொருளாதார ரீதியில் பின் தங்கி இருப்பவர்களின் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போன்ற மருத்துவ வசதிகள் செல்ல வேண்டும் என்று மெனக்கெட்டு பள்ளிகளில் இதனை கட்டாயமாக்க அறிவுறுத்துகிறது. ஆனால் எந்த அடிப்படை புரிதலும் இல்லாமல் ஒரு விசமி வாட்சப் ஆடியோவை இரவில் அனுப்புகிறான் அது விடிவதற்குள் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் சுற்றி வந்து விட்டது.

அரசின் நலத் திட்டங்களையே முடுக்கும் அளவிற்கு சதி செய்யும் இந்த கும்பலின் பின் புலம் என்ன? 

இதில் மிகக் கொடுமை, படித்த பலரும் உலகின் பல நாடுகளில் உட்கார்ந்து கொண்டு இந்த விசமிகளை ஆதரிக்கிறார்கள். அவர்களின் பார்வையில் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் எல்லோரும் பன்னாட்டு கைக்கூலிகளாக சித்தரிப்பதே. இவர்கள் தான் மக்களிடம் அறிவியலை கொண்டு செல்லாமல் தடுப்பவர்கள் என நினைக்கிறேன்.

அறிவியல் நுட்பத்தின் வளர்ச்சியினை சோதனை முடிவுகள் கொண்டே தர்க்க ரீதியில்தான் அலச வேண்டும். இப்படி விசமத்தனமான பரப்புரையால் அல்ல.

இந்த சம்பவத்தை பார்க்கையில் தன் வாழ்நாளையே அறிவியலுக்காக அர்ப்பணித்து பூமி சுரியனைத் தான் சுற்றி வருகிறது என நிறுவ முயன்ற “கலிலியோ” என்ற வானவியல் அறிவியலாளர் அந்நாட்டின் மத அடிப்படைவாதிகளால்  எப்படி துன்புறுத்தி முடக்கப்பட்டார் என்ற செய்தியினை பற்றி இங்கே பகிர்ந்தால் மிகச் சரியாக இருக்கும்.

அறிவியலை புறந்தள்ளி மூடநம்பிக்கையின் பெயரால் ஆட்டம் போட்ட   அடிப்படை மதகுருமார்களால் கலிலியோ வீட்டுச் சிறையில் இருந்த காலத்தில் அந்த சூழலை சித்தரிக்கும் சிலையொன்று நான் பணிபுரிந்த‌ குயின்சு பல்கலைக் (Queens University Belfast) கழகத்தில் லென்யார்டு கட்டிட வரவேற்பரையில்  மக்கள் பார்வைக்கு உள்ளது.

இந்த கலிலியோ சிலையினை உலகின் புகழ் பெற்ற இத்தாலி நாட்டு சிற்பக் கலைஞர் பியோ பெடி (Pio Fedi) அவர்கள்  மார்பிள் கல்லில் வடித்துள்ளார்.. பியோ பெடியின் பிரச்சித்தி பெற்ற “ரேப் ஆப் பாலிகெசனா” (Rape of Polyhexana). இத்தாலியின் பிளாரன்சு நகரத்தில் இன்றும் இந்த சிலையினை பார்க்கலாம்.

கலிலியோ, பைசா நகரில் ஒரு சாதாரண கணித விரிவுரையாளராக பணி புரிந்து கொண்டிருந்தார். இடையில் மனுசன் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நல்ல வாத்தியார் வேலைக்கு அல்லோலப் பட்டிருக்கிறார்.

1595 வரை வானவியலில் அவருக்கு பெரிய ஆர்வம் ஏற்பட்டு இருக்க வில்லை. இந்த கால கட்டம வரை அவர் கோபர் நிக்கசின் கோட்பாடுகளில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் தான் இருந்தார்.

1590 ஆம் ஆண்டு கலிலியோ De Motu (பொருட்களின் இயக்கம்) என்ற கட்டுரையினை வெளியிட்டார். இதில் தனது ஆதர்சன பிம்பங்களான அரிஸ்டாட்டில் மற்றும் ஆர்க்கிமிடீஸின் தத்துவங்களை மேற்கோள் காட்டியிருந்தார். இத்தையக கால கட்டங்களின் பண்டைய கிரேக்கர்களின் "பூமியே அண்டத்தின் மையத்தில் உள்ளது" என்ற கோட்பாட்டினை அவரும் நம்பிக் கொண்டிருந்தார். இந்த நம்பிக்கை அவர் வீட்டுக்கு வந்த ஒரு உறவினர் எதேச்சயாய் தந்த கெப்லர் (Kepler) எழுதிய மிஸ்ட்டீரியம் காஸ்மோகிராமியம் புத்தகம்தான் கலிலியோவை அட்ரா மச்சான் விசிலு என வானவியல் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.

தொடர்ந்து கெப்லருக்கு கடித பரிவர்தனை மூலம் தனது வானவியல் பற்றிய அபிப்ராயங்களை பகிர்ந்து கொண்டார். அதுவே பின்னாளில் புதிய வானவியல் கொள்கை ஏற்பட பெரிதும் வழிகோலாக இருந்தது.

ஆனால், ஹேலியோ சென்ட்ரிக் (பூமியும் மற்ற கோள்களும் சூரியனை சுற்றுகிறது) கோட்பாட்டினை எடுத்த வைத்த கோபர் நிக்கஸ் தொடங்கி கலிலியோ வரை அப்போதைய மத குருமார்கள்  வீட்டுச் சிறையில் வைத்து முடக்கப்பட்டார்கள்.

கலிலியோவின் இரண்டு கண்டுபிடிப்புகள் உலகையே உலுக்கியது.
1. வேறு, வேறு எடையுள்ள பொருட்கள், மேலே இருந்து விழும் போது ஒரே திசைவேகத்தில் பயணிக்கின்றன. காரணம் புவி ஈர்ப்பு விசை எல்லா பொருட்களின் மீதும் மாறிலியாக செயல்படுகிறது என பல்வேறு சோதனைகள் மூலம் நிறுவினார். (பைசா நகர கட்டிடத்தில் இருந்து வெவ்வேறு எடையுள்ள‌ குண்டுகளை கீழே போடும் போது எவ்வாறு ஒரே நேரத்தில் கீழே விழுகிறது. , ஒரு பீரங்கியில் இருந்து சுடப்பட்ட குண்டுகள் எவ்வாறு ஒரு பரவளைய பாதையில் செல்கிறது போன்ற சோதனைகள் பிரபலமானது.
2. இரண்டவாது அவர் வடிவமைத்த நிறப்பிரிகை அடிப்படையிலான ஒளி நுண்ணோக்கி. இதன் மூலம் வானில் உள்ள நட்சத்திரங்களை பற்றி மேற்கொண்டு ஆராய உதவியாக இருந்தது.

கன்னத்தில் கை வைத்தபடி இருக்கும் இந்த கலிலியோ சிலை அழகியலின் உச்சம். மிக சோர்வாக, அடுத்த என்ன செய்யப் போகிறோம் எனத் தெரியாத நிலையில் இருக்கும் ஒரு மனிதனின் உள் உணர்வுகளை மிகத்துல்லியமாக இந்த சிலைக்கு வயது 150க்கும் மேல் இருக்கும்.

என்னதான் கலிலியோ போன்ற அறிவியலாளர்களை முடக்க நினைத்தாலும் வரலாற்றின் பக்கங்களில் அறிவியலின் முடிவுகளே வென்றது.


உங்களுக்கு வரும் வாட்சப் பதிவுகளை அறிவியல் ரீதியில் ஆராய்ந்து பாருங்கள். பிறகு அது சரியென தீர்க்கமாக முடிவு செய்த பின் அடுத்தவருக்கு அனுப்புங்கள். ஏனெனில் வதந்தி என்னும் ஆள் கொல்லும் கன்னியில் நாமும் நம்மை அறியாமல் சிக்க வைக்கப் படுகிறோம் என்பதை உணருங்கள்.


 Galileo Galilei statue at Queens University Belfat, Northern Ireland

Friday, 27 January 2017

சீனப் புத்தாண்டு - சேவல் வருடம்

சீனாவில் நாளை முதல் புத்தாண்டு கொண்டாட உள்ளனர். இந்த புதிய வருடம் பிப்ரவரி 28, 2018 வரை இருக்கும்.

சீனர்களின் பாரம்பரிய நம்பிக்கை படி சீன ராசிக் கட்டம் 12 விலங்குகளை கொண்டது. இந்த வருடம் சேவலைக் (rooster) குறிக்கிறது. இது ராசிக் கட்டத்தில் பத்தாவது இடத்தில் உள்ளது. அதாவது சேவல் ஆண்டு 2029 ஆம் ஆண்டு மீண்டும் வரும்.

இவ்வாறாக‌ 12 வருடத்திற்கு ஒரு முறை ராசிக்குரிய விலங்குகள் சுழற்சி முறையில் இடம் பெயரும்.

சீனர்களின் நம்பிக்கைப் படி இந்த சேவல் வருடத்தில் பிறப்பவர்கள் நேர்மையாகவும், ஆற்றல் மிகுந்தவராகவும், புத்திக் கூர்மையாகவும், தன்னம்பிக்கையோடும் இருப்பார்களாம். அப்படியே அவர்களுக்கு அமைய வாழ்த்துவோம்.

இன்று அவந்தி தனது பள்ளியில் சீன புத்தாண்டிற்காக காகித அட்டையில் சேவல் பொம்மையும், வாழ்த்து அட்டையும் தயார் செய்திருந்தாள்.


Happy New Year to my beloved Chinese Friends

新年好 / 新年好


 
"தடுப்பூசிகள் மூலம் குழந்தைகளை காப்போம்"
(Immunize and Protect Your Child)

***************************************************************

இன்று காலையில் வாட்சப்பில் ஒரு ஆடியோ வந்தது. அதில் குழந்தைகளுக்கு "தடுப்பூசி போடத் தேவையில்லை அது ஒரு பன்னாட்டு சதி" என்ற கோணத்தில் முழு மூடத்தனமாக விசமக் கருத்தாக இருந்தது.

இதனைக் கேட்பவர்கள், அடடே உண்மைதான் போல் இருக்கு என நினைத்து அதிகமாக வாட்சப்பில் நண்பர்களுக்கு பகிர்கிறார்கள்.

விளைவு, இது போன்று வேண்டுமென்றே தடுப்பூசிகள் பற்றிய தவறான தகவல்களை பரப்புபவர்களால் உலகமெங்கும் வருடம் தோறும் 1.5 மில்லியன் (15 லட்சம்) குழந்தைகள் இறந்து போகிறார்கள் (Source, World Health Organization). இத்தனைக்கும் அவர்களை காப்பாற்றும் மருந்து நம்மிடம் உள்ளது. முழுக்க தவறான பிரச்சாரத்தினை நம்பி நிகழும் அலட்சியத்தால் இந்த மரணங்கள் நிகழ்கிறது.

தயவு செய்து இது போன்ற விசமிகளின் பேச்சை நம்ப வேண்டாம். குழந்தைகளுக்கு அரசு அறிவுறுத்தும் தடுப்பூசிகளை தவறாது உரிய காலத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

30 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் இருந்த பெரியம்மை, சின்னம்மை, போலியோ உள்ளிட்ட பல நோய்களை இந்த தடுப்பூசிகள் மூலம் முற்றிலும் தடுத்துள்ளோம். இந்த உட்டாலக்கடி ஹீலர், அக்குபஞ்சர் கும்பலிடம் கவனமாக இருங்கள்.


எல்லா நாடுகளிலும் நம் இந்தியாவைப் போன்றே குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தினை அந்த நாடுகளில் உள்ள சுகாதரத் துறை மூலம் முன்னெடுக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் குழந்தைகளை பாதிக்கும் நோய்க் கூறுகளை உலக சுகாதர நிறுவனம் கண்டறிந்து அதனை தடுப்பதற்கான வழி முறைகளை எல்லா நாடுகளுக்கும் வழங்கி வருகிறது.

தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய் தாக்குதல்களை உலக சுகாதர நிறுவனம் பட்டியலிட்டு இதில் குறிப்பிட நோய்களுக்கான தடுப்பூசியினை பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சரியான கால இடைவெளிகளில் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தி உள்ளது.

BCG, Polio, Hepatitis B, DTP (Diphtheria, Tetanus and Pertussis)
Haemophilus influenzae type b (Hib), Pneumococcal (Conjugate)
Rotavirus, Measles, Rubella, Human Papillomavirus (HPV), Japanese Encephalitis (JE), Yellow Fever, Tick-Borne Encephalitis (TBE), Typhoid, Cholera, Meningococcal, Hepatitis A, Rabies, Dengue (CYD-TDV), Mumps, Seasonal Influenza (Inactivated Vaccine), Varicella


உலகெங்கும் உள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளின் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் மனித குல விரோதிகளாக சித்தரிக்கும் மூடர்களை ஆரம்பத்திலே இனம் கண்டு அடித்து விரட்டுங்கள்.


ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், எல்லா நாடுகளிலும் இந்த தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் வழி முறைகள் அந்த நாடுகளின் அரசால் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. எல்லா ஊரிலும் அறமே இல்லாத பைத்தியக்காரர்களும் உள்ளனர். அவர்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது. ஏனெனில் அவர்கள் உங்களை அழிப்பதை காட்டிலும் உங்கள் குழந்தைகளை அழிக்க வந்தவர்கள்.

அரசு சுகாதாரத்துறை தரும் வழி காட்டுதலை தயவு செய்து பின்பற்றுங்கள். சரியான தருணத்தில் உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி எடுத்துக் கொண்டு அவர்களை பேரழிவில் இருந்து காப்பாற்றுங்கள்.

உங்கள் நண்பர்களுக்கு இச்செய்தியினை பகிருங்கள். குறிப்பாக, குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு அறிவியல் உண்மையினை எடுத்துச் சொல்லுங்கள்.


பி.கு:
உலக சுகாதார நிறுவனம் அறிவுருத்தியுள்ள நோய்களின் பட்டியலை இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
http://www.who.int/immunization/policy/Immunization_routine_table2.pdf?ua=1


Friday, 6 January 2017


பூச்சிகள் இயக்கும் ரோபோட் (Insect controlled Robot)

விலங்குகள், பூச்சிகள், பறவைகள் யாவுமே இயற்கையின் படைப்பில் மனிதர்களுக்கு நிகராக‌ அதற்குரிய தனித்தன்மை வாய்ந்த குணங்களில் விசேசமானவைதான்.

சில நேரங்களில் நாய், பூனை போன்றவை மனிதர்களால் பயிற்றுவிக்கப்பட்டு அவைகள் சிறிய ரக வண்டிகளை ஓட்டுவதை பார்த்திருப்பீர்கள்.

ஒரு வேளை இதே செயலை சிறிய பூச்சி ஒன்று தானாகவே செய்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். நினைக்கவே வியப்பாக உள்ளதா?

ஜப்பானில் உள்ள தோக்கியோ பல்கலைக் கழகத்தில் உள்ள நொரியாசு அந்தோ, சுகெய் எமொதொ, ரியொகி கன்சாகி ஆகியோர் அடங்கிய ஆராய்ச்சி குழுவானது விட்டில் பூச்சி அல்லது அந்துப் பூச்சிகளின் (moth) வாசனை அறியும் திறனை கண்டறிய ஒரு சிறிய ரக ரோபோட் காரை வடிவமைத்து வெற்றி கண்டுள்ளனர்.

Schematic of Insect-controlled robot (reprint from Anto et al, J. Vis. Exp. (118), e54802, doi:10.3791/54802 (2016)
அதாவது பூச்சி இருக்கும் இடத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் வைக்கப்படும் வாசனை திரவியம் வைக்கப்பட்டிருக்கும். இயற்கையில் இந்த உந்துப்பூச்சிகள் வாசனையினை நன்கு அறியும் திறன் உடையவை. இந்த குணத்தை கொண்டு இலக்கினை முகர்ந்த படியே பூச்சி செல்ல வேண்டும். இது சரியான இலக்கில்தான் செல்கிறதா என கண்டறிய காற்றி நிரப்பப்பட்ட‌ பந்து ஒன்றை   ஓட்டுநர் இருக்கையாக‌ காரினுள் பொருத்தி உள்ளனர். இப்போது அந்துப்பூச்சி அந்த பந்தை ஒரு ஸ்டிரியங் போல தன் கால்களால் சரியான திசையில் திருப்பி வாசனை திரவியம் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அந்த காரை செலுத்துகிறது.


Airflow designs for the treadmill and the odor delivery system (Reprint from Anto et al, J. Vis. Exp. (118), e54802, doi:10.3791/54802 (2016) 

இந்த ஆய்வில் செய்யப்பட்ட பல்வேறு சோதனைகளில்,  நடந்து செல்லும் அந்துப்பூச்சிகளோடு ஒப்பிடுகையில் ரோபோட்களில் பொருத்தப்பட்ட பூச்சிகள் இரண்டு வினாடிகள் தாமதமாக இலக்கை சென்றடைகின்றன. ஆனால், இந்த ஆய்வின் முடிவுகள் இயற்கையில் காணப்படும் உயிரினங்களின் குணங்களில் இருந்து தழுவப்பட்டு செயற்கையாக வடிவமைக்கப்படும் ரோபோட்களை வடிவமைப்பதில் (biologically inspired odor detection systems) பெரும் உதவியாக இருக்கும் என இந்த ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சரி இந்த செயல் மூலம் என்ன பயன் என்றுதானே கேட்கிறீர்கள்.

அளவில் மிகச் சிறியவையாக இந்த உந்துப் பூச்சிகள் இருப்பதால் இதனை வாசனையறியும் திறன் மூலம் சிறிய ரக ரோபோட்களை  உருவாக்கி இலக்குகள் நோக்கி துல்லியமாக செலுத்த முடியும். இந்த உத்தியினை பயன்படுத்தி வழமையாக போதை பொருட்களை கண்டறியப் பயன்படுத்தப்படும் நாய்களுக்கு (Sniffing dog) பதிலாக இதனை பயன்படுத்த இயலும். மேலும் பேரிடர்காலங்களில் மீட்பு பணிகளுக்கும், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வேதி வாயு கசிவுகளை கண்டறியவும் இந்த ஆராய்ச்சி முடிவுகளை பயன்படுத்தலாம்.

ஜப்பான்காரர்கள் விரைவில் பூச்சிகளை கொண்டு பறக்கும் மினி ரோபோட்களை சந்தையில் விற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உயிரியல் ஆராய்ச்சியும், எலக்ரானிக் துறையும் கைகோர்க்கும் அறிவியல் நுட்பம் மனிதர்களின் வாழ்வை மேம்படைய வைப்பவை என இந்த ஆராய்ச்சி நிரூபித்துள்ளது. அவர்களுக்கு நம் வாழ்த்துகளை சொல்வோம்.


 Video Courtesy: சயின்ஸ் இதழ் (www.sciencemag.org)

மூல ஆராய்ச்சி கட்டுரை: 
Ando, N., Emoto, S., Kanzaki, R. Insect-controlled Robot: A Mobile Robot Platform to Evaluate the Odor-tracking Capability of an Insect. J. Vis. Exp. (118), e54802, doi:10.3791/54802 (2016)Monday, 2 January 2017எழுத்தாளர் எஸ்.ராவின் 2016 ஆம் ஆண்டு வாசிப்பு பட்டியல். இவற்றில் உங்களுக்கு பிடித்த தேர்வை வாசிக்க தவறாதீர்கள்.http://www.sramakrishnan.com/?p=5930

********************************************************************
A DISTANT MIRROR: THE CALAMITOUS 14TH CENTURY  – BARBARA W. TUCHMAN
AN NA AKHMATOVA – THE WORD THAT CAUSES DEATH’S DEFEAT
ATTORNEY AT LAW -M. K. GANDHI
DARKNESS VISIBLE: A MEMOIR OF MADNESS -WILLIAM STYRON
THE NOISE OF TIME- THE PROSE OF OSIP MANDELSTAM
ROBERTO BOLAÑO -THE UNKNOWN UNIVERSITY
KOBO ABE -THE FACE OF ANOTHER
THE BOW AND THE LYRE – OCTAVIO PAZ
ALEJO CARPENTIER- REASONS OF STATE
ALBERT CAMUS-A BIOGRAPHY -HERBERT R. LOTTMAN
THE SELECTED POETRY OF PIER PAOLO PASOLINI – STEPHEN SARTARELLI
UNDER THE VOLCANO- MALCOLM LOWRY
FRONTIER TAIWAN:AN ANTHOLOGY OF MODERN CHINESE POETRY
OXFORD ANTHOLOGY OF THE BRAZILIAN SHORT STORY -K. DAVID JACKSON
THE TWOHEADED DEER- RAMAYNA IN ORISSA -JOANNA WILLIAMS
THE PHILOSOPHY OF CHARLIE KAUFMAN – DAVID LAROCCA
FAMILY LIFE -A NOVEL- AKHIL SHARMA
THE INDIAN RENAISSANCE INDIA’S RISE AFTER A THOUSAND YEARS OF DECLINE -  SANJEEV SANYAL
VIRGILIO PINERA – RENE’S FLESH
COMPLETE COLLECTED ESSAYS- V.S. PRITCHETT
FIVE SPICE STREET -CAN XUE
AGITATIONS-ESSAYS ON LIFE AND LITERATURE – ARTHUR KRYSTAL
CARLOS FUENTES- MYSELF WITH OTHERS: SELECTED ESSAYS
THE SELECTED POETRY OF YEHUDA AMICHAI
LUNCH WITH A BIGOT -THE WRITER IN THE WORLD • AMITAVA KUMAR
EDUARDO GALEANO-UPSIDE DOWN: A PRIMER FOR THE LOOKING-GLASSWORLD
THE MELANCHOLY OF RESISTANCE -LÁSZLÓ KRASZNAHORKAI
VISITING MRS. NABOKOV AND OTHER EXCURSIONS-MARTIN AMIS
MARIO VARGAS LLOSA-TOUCHSTONES: ESSAYS IN LITERATURE, ART AND POLITICS
THE NOTEBOOK  / AGOTA KRISTOF

தமிழ்

எழுத்துகளை எரித்தல் கருத்துகளை ஒடுக்குதல்- எஸ்.வி.ராஜதுரை
சூல் -சோ.தர்மன் நாவல்
வாழும் நல்லிணக்கம் -சபா நக்வி – மொழிபெயர்ப்பு /காலச்சுவடு வெளியீடு
ஆளற்ற பாலம் -கோடீஸ்வரம்மா -காலச்சுவடு வெளியீடு
தஞ்சை பிரகாஷ் கதைகள் – டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு
இருளில் நகரும் யானை  - மனுஷ்யபுத்திரன் கவிதைகள்/ உயிர்மை வெளியீடு
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை  /கலாப்ரியா / சந்தியா பதிப்பகம்
வலம் /விநாயகமுருகன் /நாவல் /உயிர்மை பதிப்பகம்
அஜ்வா / சரவணன் சந்திரன்/ நாவல் /உயிர்மை பதிப்பகம்
10. வால் /சபரிநாதன் கவிதைகள் /மணல்வீடு வெளியீடு

11. ஜென் சதை ஜென் எலும்புகள் /பால் ரெப்ஸ்/ அடையாளம் வெளியீடு

12. போர்த்திரை/ விஜய் ஆம்ஸ்ட்ராங்/ டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு

13. ஆதிரை/ நாவல்/  சயந்தன்

14. எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை? / ந.முருகேசபாண்டியன்/உயிர்மை பதிப்பகம்

15. முயல் தோப்பு/ பாஸ்கர் சக்தி / டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு

16. இடாலோ கால்வினோ / சா. தேவதாஸ்/ பன்முகம் வெளியீடு

17. ஏழு நதிகளின் நாடு /சஞ்சீவ் சன்யால் / சந்தியா பதிப்பகம் வெளியீடு

18. யோவான் 14 : 2  / திசேரா சிறுகதைகள்

19. பார்த்தீனியம் / நாவல்/  தமிழ்நதி

20. மருக்கை /நாவல்/ எஸ் செந்தில்குமார் / உயிர்மை பதிப்பகம்

21. வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்/ ராமச்சந்திர குஹா/ காலச்சுவடு

22. எதிரி உங்கள் நண்பன்/ பால்தசார் கிராசியன்,/ தமிழில்: சந்தியா நடராஜன். / சந்தியா பதிப்பகம்

23. ஒரு சிறு இசை /வண்ணதாசன் /சந்தியா பதிப்பகம்

24. பையன் கதைகள் /வி.கெ.என்/சாகித்திய அகாதெமி

25. இறுதி யாத்திரை / எம்.டி.வாசுதேவன் நாயர் / தமிழில்.கே.வி.ஷைலஜா / வம்சி வெளியீடு

26. கதைவெளி மனிதர்கள் / அ.ராமசாமி / நற்றிணை

27. நேர நெறிமுறை நிலையம்/அகமத் ஹம்தி தன்பினார்/ காலச்சுவடு வெளியீடு

28. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்/  தமிழ்மகன்/உயிர்மை பதிப்பகம்

29. லாகிரி /நரன் / கவிதைகள்

30. குஞ்ஞுண்ணி மாஸ்டரின் குட்டிக் கவிதைகள்/ ஸ்ரீபதி பத்மநாபா

*****************************************************************


Sunday, 1 January 2017


மனிதர்களும் நம்பிக்கைகளும் - 3

ஆச்சரியமாக  யூ டியூப்பில் கண்ணில் பட்டது இந்த காணொளி.

எங்கள் கிராமத்தில் (வேடிச்சிப்பாளையம்) மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் நிகழும் பூமிதி விழாவினை எங்கள் ஊரைச் சேர்ந்த இளைஞர் கமல்நாதன் என்பவர் காணொளியாக பதிவு செய்துள்ளார்.இந்த பூமிதி விழாவில் தாங்கள் வேண்டியது நிறைவேற வேண்டும் என‌ வேண்டிக் கொண்டவர்கள் விரதம் இருந்து நெருப்பு துண்டுகள் நிறைந்த (அக்கினி குண்டம்) குழியில் இறங்கி நடந்து அம்மனுக்கு தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.

தமிழக கிராமங்களில் இன்றளவும் சிறு தெய்வ அம்மன் வழிபாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று.

எங்கள் கிராமத்து திருவிழா எவ்வாறு நிகழும் என்பதை பற்றிய சுவாரசியமான கதையினை ஓய்வு நேரத்தில் எழுதுகிறேன்.

குறிப்பு:

என் பால்ய காலத்தில் இந்த பூமிதி திருவிழாவில் நிகழ்ந்த பல சம்பவங்கள் இன்றும் அப்படியே நினைவில் உள்ளது.

90 களுக்கு முன்பு வரை திராவிட இயக்கம் முழு வீச்சோடு எங்கள் ஊரில் இயங்கி வந்தது. பரவலான புத்தக வாசிப்பு, பெண் கல்வி மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து தங்கள் குரலை எழுப்பி வந்தார்கள்.

குறிப்பாக, இந்த பூமிதி விழாவிற்கு எதிரே திராவிட கழகத்தினர் நெருப்பின் மீது நடப்பது கடவுள் அருளினால் அல்ல அது எல்லோராலும் செய்ய இயலும் என காட்டுவதற்காகவே  கழுத்தில் எலும்பு மாலை, மண்டை ஓடு, காலி சரக்கு பாட்டில்கள் ஆகியவற்றினை கழுத்தில் போட்டுக் கொண்டு சின்ன நெருப்பு குழியில் இறங்கி ஏறுவார்கள். 

அதில் குறிப்பிடத்தக்கவர் ஆண்டவன். பெயரே ஆண்டவன் தான். சாகும் வரை கருப்பு சட்டை போட்ட திக போராளி. இன்று அப்படியான எந்த காட்சிகளையும் பார்க்க இயலவில்லை. திக தோழர்கள் வெகுவாக இந்த பகுதியில் குறைந்து விட்டனர். 

ஆனால் அவர்கள் வாயிலாக முன்னெடுக்கப்பட்ட கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற முயற்சி, பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற செயல்கள் எங்கள் ஊரில் சாத்தியமாகியுள்ளது. இவையெல்லாம் 95களுக்கு பிறகு எங்கள் ஊரில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த வரலாறெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

2017 ஆம் ஆண்டு வாசிக்க வேண்டிய புத்தகங்கள்

இந்த ஆண்டு வாசிக்க வேண்டிய புத்தகங்களை காலையில் எழுந்து பட்டியல் இட்டு வைத்து விட்டேன்.

ஏற்கனவே திட்டமிட்டிருந்த படி சமூக வலை தளங்களில் மேயும் நேரத்தை குறைக்க வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்த துவங்கி உள்ளேன்.

புனைவு (fiction), அல் புனைவு (non-fiction) நாவல்களை தொடர்ச்சியாகவும், வரலாற்று தகவல் மற்றும் சுயசரிதை, புத்தகங்களை அவ்வப்போது அல்லது தினசரி என்றும் வாசிக்கும் முறையினை கையாளுகிறேன். இந்த வருடமும் அதனையே பின்பற்ற நினைக்கிறேன்.

1. Fidel Castero My Life with Iganico Ramonet. Publishers- Penguin Autobiography series. Translated in English by Andrew Hurely.

கூபாவின் (Cuba) மறைந்த மேனாள் அதிபர் பிடல் கேஸ்ட்ரோ அவர்களோடு நுறு மணி நேரம் செலவழித்து கேட்கப்பட்ட கேள்வி பதில்களின் தொகுப்பே இப்புத்தகம். இந்த புத்தகத்திற்காக இதன் ஆசிரியர் இக்னாசியோ ரமோநெத் (Iganico Ramonet) பல முறை கூபாவிற்கு பயணித்துள்ளார். பிடலைப் பற்றி நேரடியாகவே அவரது பதில்கள் மூலம் அறியத்தர இப்புத்தகம் பெரிய வாய்ப்பை வழங்குகிறது.

பிடலின் குழந்தை பருவம் தொடங்கி அவர் எவ்வாறு கூபாவின் புரட்சி அரசியலில் இறங்குகிறார், சே குவராவின் நட்பு, கொரில்லா போர், புரட்சி போரின் தொய்வும் சவால்களும், சே வின் மரணம், கூபாவின் ஆயத பற்றாக்குறை, கூபாவும் ஆப்ரிக்காவும், சோவியத் யூனியனின் சிதறல், தன் சகாவும் கூபாவின் முன்னாள் அதிபருமான ஒகாவிற்கு மரண தண்டனை வழங்கியது, கூபாவும் ஸ்பெயினும், இன்றைய கூபா, என 28 அத்தியாயங்களாக இந்த புத்தகம் விரிகிறது.

இதில் சிலிர்ப்பூட்டும் அனுபவம் இதன் மூலப் புத்தகம் முதல் பதிப்பில் எசுப்பானிய (Spainish) மொழியில்தான் எழுதப்பட்டது. பின்னர் அது ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டது. இதன் முதல் பதிப்பில் வராத 24 வது அத்தியாயமான கூபாவும் பிரான்சும் என்ற பகுதி இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்டது. அப்போது 2006 ஆம் ஆண்டில் பிடல் மிகச் சிக்கலான அறுவை சிகிச்சை ஒன்றினை செய்து கொண்டிருந்தார். ஆனால் படுக்கையில் இருந்தவாறே சோர்வின்றி இந்த பகுதியினை பிழை திருத்தம் செய்து தந்துள்ளார். தனக்கு பிறகு கூபாவில் என்ன நிகழப் போகிறது என்பதையும் கணித்து வைத்திருந்த போராளி. பிடலின் மறைவிற்கு பிறகு இந்தப் புத்தகம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன்.

2.  Mystery in the Village- Written by Rebecca Shaw. ரெபாக்கா ஷா பிரித்தானியாவின் புகழ் பெற்ற பெண் புனைவு எழுத்தாளர். இது வரை 27 நாவல்களை எழுதியுள்ளார். அவற்றில் பெரும்பாலானவை மிக வெற்றிகரமாக விற்பனையினை புத்தக சந்தையில் ஏற்படுத்தியவை. டர்ன்கம் மல்பஸ் என்னும் கிராமத்தில் நிகழும் மர்மம் நிறைந்த சம்பவங்களை முன் வைத்து எழுதப்பட்ட புனைவு நாவல் இது. பீட்டர் மற்றும் கரோலின் இருவரின் மகிழ்ச்சியான வாழ்க்கையில் திடீரென நுழைந்த அவளது முன்னாள் காதலன் மோர்கன் மூலம் ஏற்படும் சிக்கல். 

கிறிஸ் மற்றும் டெப்ரோ டெம்லெட்டன் தம்பதிகளின் வாழ்வில் இருந்து டெப்ரோ எவ்வாறு திடீரென காணமல் போகிறார் என்று மர்மங்களோடு பயணிக்கும் இந்த நாவல் டைம்ஸ் இதழின் மிகச் சிறந்த நாவல் என்ற பரிசைப் பெற்றது. 

இவரது மற்ற நாவல்களான Village in Jeopardy, A Village Dilemma, Village Gossip, The Village Newcomers, Very Good - Intrigue in the Village, Talk Of The Village, Village Rumours போன்றவையும் வாசிக்க வேண்டியவை. பெரும்பாலும் இவரது எழுத்துக் களம் பிரித்தானியாவின் நாட்டுப்புற மனிதர்களையே சார்ந்தது. இவருக்கென்று தனித்த ரசிகர் கூட்டம் இன்று உலகம் முழுவதும் உள்ளது. இவர் கையாளும் எளிய, ரசிக்கத்தக்க மொழிக்காகவே இவரது நாவல்களை வாசிக்கலாம்.


3. A Brief History of The Samurai. Written by Jonathan Clements. Robinson Publisher, UK, 2010. ஜோனாதன் கிளமென்ட்ஸ் கிழக்கு ஆசியா பற்றிய வரலாற்று தகவல்களை, சுயசரிதைகளை புத்தகங்களாக எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர். ஆசியாவின் வட மேற்கு பகுதியான ஜப்பானின் சமுராய் பற்றிய இவரது புத்தகம் மிக முக்கியமாக வாசிக்கப்பட வேண்டியது. சாமுராய் என்படுபவர்கள் ஜப்பானிய அரசப் படைகளில் மிக முக்கிய பொறுப்பு வகித்த பாதுகாவலர் அல்லது போர் வீரர்கள். ராஜ்ஜிய விசுவாசத்திற்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் தங்கள் உயிரையே துச்சமென மதித்து போர்க் களங்களில் செயல்பட்டவர்கள். எதிரிகள் சூழ்ந்தால் தங்கள் வயிற்றை கொடூரமாக கிழித்து கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் துணிந்தவர்கள். ஜப்பானிய சமூக வரலாற்றில் சமுராய்களின் பங்களிப்போடு அவர்களை பற்றிய மிக விரிவான தகவலோடு இந்த புத்தகம் விவரிக்கிறது.

சமுராய் ஆவது அவ்வளவு எளிதல்ல என்பது இப்புத்தகத்தை வாசித்தால் விளங்கும். புசிதோ எனப்படும் போர்வீரராகும் மரபு சமுராய் ஆவதற்கான வழிகளை விளக்குகிறது. இன்றும் தோக்கியோ நகரில் உள்ள ஜப்பானிய அரசரின் அரண்மனை முன்பு இருக்கும் குதிரையில் இருக்கும் போர் வீரன் சிலை குசுநோகி மசாசிகெ எனப்படும் சமுராய் வீரனின் புகழை பாடுவது. இந்த வீரன், தான் தோற்பேன் எனத் தெரிந்தும் தனது நாட்டைக் காக்க போர்க்களத்தில் தன் உயிரைத் துறந்தான். தான் உயிரை விடும் முன்பு இன்னும் ஏழு பிறப்பெடுத்து தன் நாட்டை காப்பேன் என சபதமெடுத்தான். அவனது நினைவாகவே இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது என்றால் சமுராய்களை ஜப்பானியர்கள் எப்படி மதிக்கிறார்கள் என புரிந்து கொள்ளலாம். சமுராய்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு ஆச்சரியம் ஒரு சிலர் தங்கள் மன்னர்களது பாதுகாப்பிற்காக அவர்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கும் அதிகாரத்தினையே பெற்றிருந்துள்ளார்கள். அவர்கள் சோகன் என்றழைக்கப்பட்டனர்.

ஜப்பானிய வரலாற்றில் ஆறாம் நூற்றாண்டில் துவங்கி, 17 ஆம் நூற்றாண்டு வரை சமுராய்கள் கடந்து வந்த பாதையினை இப்புத்தகம் விளக்குகிறது.
முக்கியமாக, பிதாட்சு, சுய்கோ சாம்ராஜ்யம் தொடங்கி  கம்மு பேரரசு, சிரகவா, யேயசு மன்னர்கள் காலம் வரை சமுராய்களின் நீண்ட வரலாற்றினை விளக்குகிறது.

இன்றைக்கு நாம் பார்க்கும் அமைதியான ஜப்பான் இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வரை இரத்த வேட்கை நிறைந்த தேசம் என்றால் யாரலும் நம்ப இயலாது. ஜப்பானிய வரலாற்றின் ஆன்மா என்றால் சமுராய் என கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம். இன்றும் ஜப்பானிய பாரம்பரிய நாடகங்களில் (jidaijeki) சமுராய் கதாபாத்திரங்கள் இல்லாமல் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு அவர்கள் சமூகத்தோடு ஒன்றிப்போன இப்புத்தகம் என் மிக விருப்புக்குரிய தேர்வுகளில் ஒன்று என்றே சொல்வேன்.

4. Nagasaki. Written by Craig Collie.  இருபதாம் நூற்றாண்டின் கருப்பு பக்கங்களில் ஒன்றான ஜப்பானின் கிரோசிமா, நாகசாகி நகரங்களின் மீது நிகழ்த்தப்பட்ட‌  அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சு சம்பவங்கள் மனித குலத்தையே பதற வைப்பவை. அதில் “நாகசாகி” நகரின் மீது குண்டு வீசப்பட்ட போது அதில் தப்பி பிழைத்தவர்களின் சாட்சியங்களையும், அமெரிக்க ஜப்பானிய போர்வீரர்களின் அனுபவங்களையும் சேர்த்து இழைத்து புத்தகமாக தந்துள்ளார் கிரெய்க்.

டெலிகிராப், டைம்ஸ். கார்டிய, சண்டே ஹெரால்டு உள்ளிட்ட முன்னோடி சஞ்சரிகை களால் பாராட்டு பெற்ற புத்தகம் இது.

பேட் மேன் (Fat Man) எனப்படும்  புளுட்டோனியம் அணுகுண்டை சுமந்து கொண்டு அமெரிக்காவில் இருந்து கிளம்பியது துவங்கி நாகசாகியின் மீது குண்டை போட்டது வரை பரபரப்பு மிக்க பொழுதுகளை ஒரு த்ரில்லர் கதைபோல் விவரிக்கும் இப்புத்தகம் ஒரு வரலாற்று ஆவணம்.

விதி விளையாடிய 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதத்தின் 9 ஆம் தேதி காலை எப்படி அந்நகரம் இருந்தது என அறியும் போது நம் மனதை உலுக்குகிறது. இந்நாவலுக்கான தரவுகளுக்கு இந்த ஆசிரியர் மிக மெனக்கெட்டு இருக்கிறார். அடிப்படையில் கிரெய்க் ஒரு தொலைகாட்சி ஆவணப்பட தயாரிப்பாளர். ஆகையால் இவருக்கு இந்த செயல் இலகுவாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால் எல்லா தரவுகளும் தேடித் தேடி எழுதுவதென்பது அவ்வளவு எளிதான செயல் அன்று. வரலாற்றுப் பிரியர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

5. காடோடி. ஆசிரியர்‍‍ நக்கீரன் . அடையாளம் பதிப்பகம்.

காடுகள் அழிக்கப்படுதல் இந்நூற்றாண்டின் மிகப்பெரிய சாபங்களில் ஒன்று. தனி மனித லாபத்தையும் மீறி உலகளாவிய பெரும் நிறுவனங்கள் பெரும் வனங்களை குறி வைத்து அழிக்கும் போது அங்கிருக்கும் தொல்குழி மனிதர்களோடு, பல நூறு ஆண்டுகளாக வாழும் மரங்கள், நுண் உயிர்கள், பறவைகள் என அழியும் சோகம் நம்மில் பெரும்பாலானோர் கண்டுகொள்ளாமலே விடப்பட்ட துயரங்களில் ஒன்று. அப்படிப்பட்ட அழிந்த வனங்களில் ஒன்றான போர்னியோ பெருந்தீவிற்குள் கதைசொல்லி வாயிலாக பயணிப்பதே இக்கதை. இத்தீவு தென்கிழக்கு ஆசியாவின் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளால் சூழப்பட்டது. 

இந்நாவலின் ஆசிரியர் நக்கீரன் கவிஞரும், சூழலியல் எழுத்தாளரும் ஆவார். தமிழ்ப் பசுமை இலக்கியத்தில் இவரது எழுத்து தனித்தன்மை கொண்டது. காடோடி நாவல் தமிழ் சூழலுக்கு புதிய தளத்தை தந்துள்ளது. காடுகள் பற்றிய புரிதலை புனைவு நாவல் வழியே சொல்லும் இவரது எழுத்துகளுக்காகவே நான் இப்புத்தகத்தை தேர்ந்தெடுத்துள்ளேன்.

6. ரோலக்ஸ் வாட்ச். ஆசிரியர் சரவணன் சந்திரன். சமூக வலைதளங்களில் இவரது எழுத்து மிகப் பிரபலம். ஆனால் இவரைப் பற்றி நிறைய ஆச்சரியமான விசயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். தொழில் முறை ஆக்கி விளையாட்டு வீரரான சரவணன் சந்திரன் தமிழின் முன்னோடி அச்சு மற்றும் மின் அச்சு இதழ்களில் பணி புரிந்த அனுபவம் கொண்டவர். ஜீ டிவியில் மிகப் பிரபலமாக சென்று கொண்டிருக்கும் சொல்வதெல்லாம் உண்மை தொடரின் முன்னாள் இயக்குநர். இவரது முதல் நாவலான ஐந்து முதலைகளின் கதை நாவல் மிகப் பெரிதாக பேசப்பட்டது (அதுவும் என் பட்டியலில் உள்ளது). எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் சாரு நிவேதிதா இப்புத்தகம் பற்றி அவரது இணையப்பக்கத்தில் சிலாகித்து எழுதி இருந்தார். மேலும் என் நண்பர் க.பாண்டியராஜன் அண்ணனும் இப்புத்தகம் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று என்று பரிந்துரைத்திருந்தார். ஆகவே இவ்வாண்டில் நான் வாசிக்கப் போகும் முதல் புத்தகம் இதுதான்.

மின்னற்பொழுதே தூரம் வலைப்பூக்கள் பகுதியில் “அபிலாஸ் சந்திரனின்” இப்புத்தகம் பற்றிய விமர்சனத்தை இங்கே தருகிறேன்.

"ஒரு எளிய குமாஸ்தா எப்படி பல்வேறு விட்டுக்கொடுத்தல்கள் மூலம் அதிகார தரகனாகி உச்சாணிக்கொம்பை அடைகிறான், அவன் எப்படி தன் மனசாட்சியை விற்று லௌகீக வாழ்வில் வெல்கிறான், அப்படி அவன் சீரழிவுக்கு காரணம் என்ன என மிக விரிவாய் அலசும் நாவல் அது. ரோலக்ஸ் வாட்ச் தலைப்பே எனக்கு பிடித்திருந்தது. சமீபத்தில் இவ்வளவு பொருத்தமான தலைப்புள்ள நாவலை பார்த்ததில்லை. இதில் நாயகன் ஒரு போலி ரோலக்ஸ் வாட்ச் வாங்க வேண்டி ஒரு நண்பரிடம் கேட்க அவரோ போலி வாட்ச் உற்பத்தியாளர்கள் ரோலக்ஸ் வாட்சை மட்டும் போலி செய்ய மாட்டோம் எனும் கொள்கையை பின்பற்றுகிறார்கள் என்கிறார். ஆனால் கடைசியில் அவருக்கு நண்பர் ஒரு ரோலக்ஸ் வாட்சை பரிசளிக்கிறார். அது உண்மையானதா போலியானதா என இறுதி வரை அவனால் கண்டிபிடிக்க முடியாது. அந்த போலி ரோலக்ஸ் வாட்ச் உண்மையில் அவன் தான். அவனால் என்றைக்குமே தன் நண்பனான சந்திரன் போல் ஒரிஜினல் ஆக முடியாது. ரோலக்ஸ் வாட்ச் அவனைப் போன்ற போலிகளுக்கான குறியீடு"

7. அறிவியலில் பெண்கள் ஒரு சமூக வரலாற்றுப் பார்வை. பேராசிரியர் கு.வி. கிருஷ்ணமூர்த்தி எழுதிய புத்தகம் இது. இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் மேனாள் பேராசிரியர் ஆவார். 

இந்நூல் அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் பாதித்த காரணிகள் வரலாற்றினூடே விளக்கி அவை பாலின பாகுபாட்டில் எவ்வாறு முக்கிய விசையாக செயல்படுகிறது என்று தெளிவாக விளக்குகிறது. அதன் மூலம் அறிவியலில் முகம் தெரியா பெண்கள், நன்கறியப்பட்ட பெண்கள், அறிவியலைப் பிரபலப்படுத்திய பெண்கள், ஆண்களுக்கு துணையாக இருந்த பெண்கள் என முன்னூறுக்கும் மேற்பட்ட பெண் அறிவியல் அறிஞர்களை அறிமுகம் செய்கிறது.

மேலும் பெண் அறிவியல் அறிஞர்களின் மன, உடல் திறன்கள் நடத்தை ஆகியவை  எவ்வாறு அவர்களின் பணியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன அவற்றை அவர்கள் கையாண்ட விதம் போன்றவற்றினை தெளிவாக விளக்குகிறது. இப்புத்தகத்தை, அறிவியல் அறிஞர்களாக இருக்கும் பெண்களுக்கும் அவர்களின் ஆற்றலை பயன்படுத்துவோரும், சமுதாயத்தில் பெண்களின் வளர்ச்சியினை விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டுமென நினைக்கிறேன்.

முக்கியமாக இந்நூல் முழுவதும் ஆசிரியர் எடுத்தாளும் நேர்த்தியான தமிழ்ப் பதங்கள் அறிவியல் தமிழில் கட்டுரைகள் எழுதும் ஆசிரியர்களுக்கு முன் மாதிரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இப்புத்தகத்தின் ஆசிரியர் கல்வித் துறையில் பேராசிரியராக இருப்பதால் மத்திய நடுவன் அரசு பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கும் ஆய்வுத் தொகை பற்றிய தகவலையும் புத்தகத்தின் இறுதியில் தந்துள்ளார்.

இப்புத்தகம் தரவுகள் நிரம்பிய ஆவணப் புத்தகமாகவெ கருதலாம். அந்த வகையில் இதனை வாசிக்க ஆவலாக உள்ளேன்.

8. முகிலினி. ஆசிரியர்: இரா .முருகவேள். பொன்னுலகம் பதிப்பகம்
கோவை, ஈரோடு மாவட்டங்களின் பின்னணியில் சிறுமுகை விஸ்கோஸ் ஆலை ஊடாக அறுபதாண்டு வரலாற்றை நாவலாக விவரிக்கும் புனைவு‍ அல் புனைவு கலப்பு நாவலே முகிலினி. 

ஒரு தொழில்சாலை எவ்வாறு ஒரு பகுதியில் உருவாகிறது. அதற்கு அரசு தரும் சலுகைகளோடு அது எவ்வாறு அப்பகுதியில் சூழலினை கெடுக்கிறது. அதை எப்படி அரசு இயந்திரம் கண்டு கொள்ளாமல் செல்கிறது என்ற கேள்விகளை முன் வைத்து நகர்கிறது முகிலின் நாவல்.

தமிழ்த் தேசிய கதாபாத்திரமான‌ ராஜீவிற்கும், பொதுவுடமைவாதி கதாபாத்திரமான ஆரானுக்கும் இடையேயான முரண்களோடு தொடங்கி பின்னர் காந்திய வழியில் கிராமப் பொருளாதாரம், இயற்கைக்கு திரும்புதல் போன்ற சிந்தாந்தங்களை விவாதிக்கிறது.

மூன்று பகுதிகளாக இந்த நாவல் விரிவடைகிறது. முதல் பகுதியில் பவானி அணையில் வரலாறு நீண்டு விரிவடைகிறது. பின்னர் இரண்டாவது பகுதியில் எவ்வாறு இத்தாலியில் பிரபல செயற்கை இழை (ரேயான்) தயாரிக்கும் நிறுவனமான‌ இத்தாலியானா விஸ்கோஸாவிம் தொழிற்சாலை தொடங்கப்பட்டு எவ்வாறு அது கோவையினை சுற்றியுள்ள பகுதிகளில் சூழலியல் சீர்கேட்டை விளைவிக்கிறது என விவரனை செய்கிறது. மூன்றாவது பகுதியாக ஈரோடு, திருப்பூர் பகுதியில் நிலவும் சாதியை அடிப்படையாக கொண்டு நிகழும்  உள்முரண், அரசியல், தொழில்போட்டி என பயணிக்கிறது.
தமிழ் மகனின் வெட்டுப் புலி நாவலுக்கு பிறகு இந்நாவலும் திராவிட அரசியலைப் பேசுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் நாவலை வாசிக்க என்னை தூண்டும் ஒரு காரணம் எனச் சொல்லலாம்.

9. The collected poems of Dylon Thomas. The Centneary Edition. Edited by John Goodby.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களில் மிக முக்கியமானவர் பிரித்தானியாவின் வேல்சு தேசத்தை சேர்ந்த திலன் தாமஸ். சேக்ஸ்பியர், ஜாய்ஸ் இவர்களுக்கு பிறகு ஆங்கில மொழியின் மயக்கத்தினை உலகறியச் செய்தவர் திலன் தாமஸ். மரபுகளை உடைத்து ஓசை சந்தங்களை அடிப்படையாக கொண்ட திலனின் வார்த்தைகள் ஆங்கில கவிதை உலகிற்கு மிகப் புதிது.

கிராமர் பள்ளியில் பணியாற்றிய இவரது தந்தை ஒரு ஆங்கில ஆசிரியர். ஆகையால், இளம் வயதிலேயே இவரது தந்தை மூலம் ஆங்கில இலக்கியம் கற்றவர். உயர்நிலைப் பள்ளி கல்வியினை முடித்து விட்டு  19 வயதில் லண்டனுக்கு சென்று ஒன்னரை ஆண்டு காலம் பத்திரிக்கை ஒன்றில் பணி புரிந்து விட்டு ஊர் திரும்பினார். அதற்கு பிறகு காலத்தால் நிலைத்து நிற்கும் கவிதைகளை புத்தகங்களாக தந்தார்.

இவரது மேப் ஆப் லவ், டெத் அன்ட் என்ட்ரன்சஸ் மிகப் பிரலபமான கவிதை தொகுப்புகள். இரண்டாம் உலக்போரின் போது பிபிசி நிறுவனத்தில் பணியாற்றியபடியே தனது புனைவு சிறுகதைகளை    Portrait of the Artist as a Young Dog என்ற புத்தகமாக‌ எழுதினார்.

மிக இளம் வயதிலேயே (39) தனது ரசிகர்களை தவிக்க விட்டு விட்டு அமெரிக்க பயணத்தின் போது இயற்கை எய்தினார். திலன் ஒரு கலகக்காரர், பெண்களின் நட்பை பெரிதும் நேசித்தார், எப்போதும் புகைத்தபடியே இருக்கும் இவரது புகைப்படங்கள் மட்டுமே நமக்கு இன்று காணக் கிடைக்கிறது. இவரது காதல் ரசம் சொட்டும் “திலனின் காதல் கடிதங்கள்” (The love letters of Dylan Thomas) தொகுப்பு காதலர்கள் அனைவரும் நிச்சயம் வாசிக்க வேண்டியது. நோய்வாய்ப்பட்டிருந்த‌ தன் தந்தைக்கு அவர் எழுதிய என்ற Do not go Gentle கவிதையும், The Hand that signed, The Force that Through, A refusal to Mourn கவிதைகளும் மிகப் பிரச்சித்தி பெற்றவை.

இவரது கவிதைகள் நாடகங்களுக்காகவே எழுதப்பட்டது போன்ற தோற்றம் உடையது. சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற பாப் திலன் மற்றும் பீட்டல்ஸ் இசைக் குழுவினரால பெரிதும் சிலாகிக்கப்பட்ட கவிதைகளுக்கு சொந்தக்காரர் திலன் தாமஸ்.

இவர் எழுதிய “அன்டர் மில்க் வுட்” கவிதை (Under Milk Wood) ஒரு நவீன செவ்வியல் இலக்கியம் என்றால் மிகையாகாது. இந்நாவலில் வரும் விழிச் சவால் உடைய கேப்டன் கதபாத்திரத்திற்கு சுவான்சி நகரில் சிலையே வைக்கப்பட்டுள்ளது என்றால் அவரது கவிப்புலமை விளங்கும்.

“ராபர்ட் நை” (Robert Nye) சொன்னது போல திலன் “எந்த முகமூடிக்கும் பொருந்தாத பிம்பத்தை உடையவர்”. கட்டட்டற்ற வாழ்வின் மூலம் கவிதை உலகில் பாடித் திரிந்தவர். கொண்டாட்ட மனோநிலையின் உச்சம் திலன் தாமஸ். இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளில் இருக்கும் ஓரிரண்டை இந்த ஆண்டில் மொழி பெயர்க்க வேண்டும் என விரும்புகிறேன். பார்ப்போம்.

*******************
இவை தவிர இன்னும் பத்து புத்தகங்கள் (கு.அழகிரிசாமியின் சிறுகதைகள், ஐந்து முதலைகள், தூப்புக்காரி, India Rising, கொற்கை, பிறகு முக்கியமான தமிழ் ஆளுமைகளின் புதிய நாவல்கள்) என்று தனி விருப்ப பட்டியலில் உள்ளது. ஆனால் மேற் சொன்னவை நிச்சயம் வாசிக்கப் பட வேண்டியவை.

எனது பட்டியலில் விடுபட்ட வாசிக்க வேண்டிய புத்தகங்கள் இருப்பின் நண்பர்கள் தயவு செய்து பரிந்துரைக்கவும்.