Tuesday, 31 January 2017

தடுப்பூசி சந்தேகங்களும், வதந்திகளும் -1

1. உங்களது நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு திடீரென ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் அறுவை சிகிச்சை செய்தால் 50 சதவிகிதம் மட்டுமே பிழைக்க வாய்ப்புண்டு என்று ஒரு மருத்துவர் கூறினால். சரிங்க டாக்டர் எதுக்கு 50 சதவிகிதத்துக்கு ரிஸ்க் எடுக்க வேண்டும். விட்ருங்க போய் சேர்ந்திரட்டும் என சொல்வீர்களா, இல்லை எப்படியாவது முயற்சி செய்து உயிரைக் காப்பாற்றி தாருங்கள் என திடமாக முடிவெடுப்பீர்களா?

அதை உங்களின் பதிலுக்கே விட்டு விடுகிறேன்.

அடிப்படையில், சக மனிதர்கள் மேல் அன்பிருக்கும் எல்லா மனிதருமே ஒரு சதவிகிதம் உயிர் பிழைக்க வாய்ப்பிருந்தாலும் மருத்துவ சிகிச்சை மூலம் அவர்களை காப்பாற்றவே முனைவோம். ஏனெனில், நாம் எல்லோருமே ரத்தமும், சதையும் மட்டுமல்ல அன்பினாலும், பரிவினாலும் நம்மை சுற்றியுள்ளவர்களோடு பின்னப்பட்டிருக்கிறோம்.

இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரு சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவான பக்க விளைவு தடுப்பூசியின் மூலம் ஏற்படும் என்ற ஒரு செய்தியை வைத்துக் கொண்டு “ஊரையே சாகடிக்கப் பார்க்கிறார்கள்”, “இந்த தடுப்பூசி போடப்படும் எல்லா குழந்தைகளுக்கு ஆட்டிசம் என்னும் நோய் தாக்கலாம்” என்ற அச்சத்தினை பரவலாக வாட்சப், முகநூல் வாயிலாக பலர் பரப்புகிறார்கள்.

தடுப்பூசி பற்றிய அச்சம் இயற்கையானது. அதனை தக்க மருத்துவர்களிடம் அல்லது துறை சார் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டு ஐயத்தை தெளியப் பெறலாம். அதை விடுத்து ஒரு முன் முடிவோடு மக்களை வேண்டுமென்றே பயமுறுத்துபவர்களையே நான் “வதந்தியாளர்கள்” என வரையறுக்கிறேன். அதுவும் நள்ளிரவில் வாட்சப் வதந்தி கிளப்புபவர்களை “சுடுகாட்டு பூதம்” என்று அழைப்பதுதான் பொருத்தம் என எண்ணுகிறேன். இந்த வதந்தி பற்றிய அச்சத்தினை நீக்கவே இந்த கட்டுரையினை எழுதுகிறேன்.

2. இந்த தடுப்பூசிகள் ஒரு சதவிகிதம் உறுதிசெய்ய முடியாத பக்க விளைவுகளை உருவாக்கும் என்று கூறியுள்ளீர்களே? அப்படியானால் நூற்றில் ஒரு குழந்தைக்கு பாதிக்குமா. அதுவும் ஆட்டிசம் என்னும் நோய் வரும் என சொல்கிறார்களே?

 அதன் அர்த்தம் அப்படி கிடையாது. சராசரியாக, நூறு குழந்தைகளுக்கு தடுப்பூசி தரும் போது எதாவது ஒரு குழந்தை, அதுவும் அந்த தடுப்பூசியினையும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு பலவீனமான நோய் எதிர்ப்பு திறன் இருந்தால் மட்டுமே ஒரு வேளை பாதிக்கலாம். அதற்காக கண்டிப்பாக நூற்றில் ஒரு குழந்தையினை பாதித்தே தீரும் என்று அர்த்தப்படுத்திக் கொள்வது அபத்தமே. ஒரு வேளை லட்சத்தில் ஒரு குழந்தைக்கோ, அல்லது கோடியில் ஒரு குழந்தைக்கோ அவர்களின் பலவீனத்தை பொறுத்து பாதிப்பு இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். அதற்காக தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை.


இந்த தடுப்பூசி மூலம் ஆட்டிசம் நோய் தாக்குதல் ஏற்படுவதில்லை. ஆட்டிசம் நோய் தாக்குதலுக்கு பல காரணங்கள் உண்டு, அதற்கு முழுக் காரணம் இந்த தடுப்பூசிதான் என்று திட்டவட்டமாக‌ நீருபணம் செய்யும் ஆய்வு முடிவுகள் எதுவும் இது வரை வெளியிடப்படவில்லை.

நான் முன்பே சொன்னதை போல, இந்த தடுப்பூசி எடுத்துக் கொள்ளாவிட்டால் மீசல்ஸ், ரூபல்லா நோயின் தாக்குதல் பரவலாகி நூறு குழந்தைகளையுமே பாதிக்கும் நிலை நிச்சயம் ஏற்படும்.

3. இந்த தடுப்பூசி எடுத்துக் கொள்ளாவிட்டால் என்ன விளைவுகள் ஏற்படும்?

மீசல்ஸ் என்ற வைரஸ் உடல் முழுவதும் தோல்கள் சிவப்பு திட்டுகளாக தடித்து கொடிய விளைவினை ஏற்படுத்துபவை. மேலும் அதி தீவிர காய்ச்சல், மற்றும் சளியினை ஏற்படுத்தி காற்றின் மூலம் பிறருக்கும் இந்த வியாதியினை பரப்புபவை.  இந்த மீசல்ஸை விட கொடியவன் ரூபெல்லா என்ற வைரஸ் கிருமி. இது ஆரம்ப கால கர்ப்பத்தில் இருக்கும் பெண்களை தாக்க வல்லது. மேலும் இது கருச்சிதைவிற்கும் வழி வகுக்கும். அத்தோடு மட்டும் நில்லாமல் கண்ணில் உள்ள விழித்திரை, நரம்புகள், இரத்த கசிவு, இதயம் மற்றும் மூளையினை பாதிக்க வல்லது,

4. இந்த நோய் வந்த பின்பு சிகிச்சை எடுத்துக் கொள்ளலாமே ஏன் அனைவருக்கும் தடுப்பூசி போடுகிறோம். இது அவசியம்தானா?

துரதிஸ்டவசமாக இந்த ரூபெல்லா, மீசெல்ஸ் இரண்டு வைரஸ் தாக்குதலுக்கும் வந்த பின்பு குணப்படுத்துவது மிகவும் கடினம். அதனால்தான் 9 மாத குழந்தை முதல் 15 வயது வரை உள்ள சிறார்களுக்கு இந்த தடுப்பூசி எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆகவே, வந்த பின் நோவதை விட வரும் முன் காப்பதே தடுப்பூசிகளின் பணி. என்பதை இப்போது நீங்கள்  உணர்வீர்கள் என நினைக்கிறேன்.

தற்போது தமிழக அரசு ஒரு 1.8 கோடி குழந்தைகளுக்கு மீசல்ஸ், ரூபல்லா நோய்களை தடுக்கும் தடுப்பூசியினை இலவசமாக வழங்க உள்ளனர். இதன் வாயிலாக இவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல இவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு இவர்கள் மூலம் நோய் தொற்று ஏற்படாமல் இருக்கும் என்பதை இந்த தடுப்பூசி உறுதி செய்கிறது.

5. மம்ஸ், மீசல்ஸ், ரூபல்லா, (MMS)தடுப்பூசி ஜப்பானில் தடை செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியினை பரவலாக எல்லோரும் பகிர்கிறார்களே. அது உண்மையா?

ஜப்பானில் மீசல்ஸ், ரூபல்லா (MMR) மீது தற்போது எந்த தடையும்  இல்லை. மேலே சொன்ன தடுப்பூசி மருந்தினை ஒன்றாக கலக்காமல்,  மீசல்ஸ், ரூபல்லா (MR) இரண்டினை தனித்தும், மம்ஸ் நோய்க்கான தடுப்பூசியினை தனியாகவும் ஜப்பான் அரசு அங்குள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வழங்குகிறது. 

இந்த MR தடுப்பூசியினை வழமையான பட்டியலிலுல் (routine), மம்ஸ் தடுப்பூசியினை விருப்ப பட்டியலிலும் (optional) ஜப்பானிய அரசு வரையறுத்துள்ளது. முன்னது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.




Health Hand Book for Japan Kids (Note that this is for my daughter's health book)


Japan Health Hand Book advised MR vaccine and mumps vaccine separetly (Note that this is for my daughter's health book)

MR தடுப்பூசியானது 1- 2 வயதுக்குற்பட்டவர்களுக்கு முதல் கட்டமாகவும், அக்குழந்தைக்கு வளர்ந்து 5-7 வயதுக்குள் இருக்கும் போது இரண்டாம் கட்டமாகவும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள ஜப்பானிய உடல்நலத் தகவல் மையம் (Japan Healthcare Information) அறிவுறுத்துகிறது. மேலே சொன்ன படி, ஜப்பானிய அரசு கடைபிடிக்கும் அதே எம்.ஆர் தடுப்பூசி முறையினைத்தான் இந்தியாவிலும் கொண்டு வந்துள்ளனர்.

6. இவ்வளவு உண்மை இருந்தும் ஏன் ஜப்பானில் எம் எம் ஆர் ஊசி தடை செய்யப்பட்டுள்ளது என்று தொடர்ந்து ஒரு செய்தியினை பரப்பி வருகிறார்கள்?

இப்படி உண்மையினை ஏற்காமல் தங்களுக்கு ஏற்ற வரிகளை மட்டும் இணையத்தில் இருந்து எடுத்துக்கொண்டு வெறும் அச்சமூட்டும் தகவல்களை பரப்புவதால்தான் அவர்களை நான் வதந்தியாளர்கள் என அழைக்கிறேன்.

**********************************************

ஏன் MMR தடுப்பூசியினை தனித் தனியாக MR எனப் போடுகிறார்கள், இந்த அச்சம் எவ்வாறு எழுந்தது என்பதனை அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

எனது நண்பர்கள், அவர்தம் குழந்தைகளின் நலம் கருதி இந்த பதிவினை எழுதுகிறேன். நிச்சயம் உங்களுக்கு இருக்கும் மருத்துவ ரீதியிலான கேள்விகளை கேளுங்கள். நிச்சயம் எனது மருத்துவ நண்பர்கள் மூலம் அறிவியல் ரீதியில் பதில்கள் பெற்று தருகிறேன்.






No comments:

Post a Comment