Sunday, 1 January 2017


மனிதர்களும் நம்பிக்கைகளும் - 3

ஆச்சரியமாக  யூ டியூப்பில் கண்ணில் பட்டது இந்த காணொளி.

எங்கள் கிராமத்தில் (வேடிச்சிப்பாளையம்) மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் நிகழும் பூமிதி விழாவினை எங்கள் ஊரைச் சேர்ந்த இளைஞர் கமல்நாதன் என்பவர் காணொளியாக பதிவு செய்துள்ளார்.



இந்த பூமிதி விழாவில் தாங்கள் வேண்டியது நிறைவேற வேண்டும் என‌ வேண்டிக் கொண்டவர்கள் விரதம் இருந்து நெருப்பு துண்டுகள் நிறைந்த (அக்கினி குண்டம்) குழியில் இறங்கி நடந்து அம்மனுக்கு தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.

தமிழக கிராமங்களில் இன்றளவும் சிறு தெய்வ அம்மன் வழிபாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று.

எங்கள் கிராமத்து திருவிழா எவ்வாறு நிகழும் என்பதை பற்றிய சுவாரசியமான கதையினை ஓய்வு நேரத்தில் எழுதுகிறேன்.

குறிப்பு:

என் பால்ய காலத்தில் இந்த பூமிதி திருவிழாவில் நிகழ்ந்த பல சம்பவங்கள் இன்றும் அப்படியே நினைவில் உள்ளது.

90 களுக்கு முன்பு வரை திராவிட இயக்கம் முழு வீச்சோடு எங்கள் ஊரில் இயங்கி வந்தது. பரவலான புத்தக வாசிப்பு, பெண் கல்வி மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து தங்கள் குரலை எழுப்பி வந்தார்கள்.

குறிப்பாக, இந்த பூமிதி விழாவிற்கு எதிரே திராவிட கழகத்தினர் நெருப்பின் மீது நடப்பது கடவுள் அருளினால் அல்ல அது எல்லோராலும் செய்ய இயலும் என காட்டுவதற்காகவே  கழுத்தில் எலும்பு மாலை, மண்டை ஓடு, காலி சரக்கு பாட்டில்கள் ஆகியவற்றினை கழுத்தில் போட்டுக் கொண்டு சின்ன நெருப்பு குழியில் இறங்கி ஏறுவார்கள். 

அதில் குறிப்பிடத்தக்கவர் ஆண்டவன். பெயரே ஆண்டவன் தான். சாகும் வரை கருப்பு சட்டை போட்ட திக போராளி. இன்று அப்படியான எந்த காட்சிகளையும் பார்க்க இயலவில்லை. திக தோழர்கள் வெகுவாக இந்த பகுதியில் குறைந்து விட்டனர். 

ஆனால் அவர்கள் வாயிலாக முன்னெடுக்கப்பட்ட கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற முயற்சி, பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற செயல்கள் எங்கள் ஊரில் சாத்தியமாகியுள்ளது. இவையெல்லாம் 95களுக்கு பிறகு எங்கள் ஊரில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த வரலாறெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.








No comments:

Post a Comment