Thursday, 31 March 2016


குழந்தைகளுக்கு பிடித்த  மழை மனிதன்  


தூர்தர்சன் தொடங்கி பின்னாளில் பல்கி பெருகிய தமிழ் ஊடகங்களில் வரும்  நடிகர்களை தாண்டி செய்தி வாசிப்பவர்களுக்கென்று ஒரு தனித்த ரசிகர் குழு இருப்பதை கவனித்திருக்கிறேன். அந்த வரிசையில் ஊடகங்களுக்கு அரசு செய்தி அறிவிப்பாக வானிலை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் அறிக்கை தரும் திரு ரமணன் அவர்கள் தமிழக பள்ளி மாணவர்களுக்கென்று மிகவும் பிடித்தவராக  மாறி இருக்கிறார். இவர் சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தின்    இயக்குநராக பணி புரிந்தவர். நேற்றைய தினத்தோடு இவரது பணிக்காலம் முடிவடைகிறது.  இவர் பணி புரிந்த சென்னை வானிலை ஆராய்ச்சி மையமானது  இந்திய பருவநிலை துறையின் கீழ் இயங்கும் பிராந்திய அமைப்பு ஆகும்.

Mr Ramanan, Director, Regional Meterological Center, Chennai, India


தற்போது சமூக வலை தளங்களில் இவரை மழை மனிதராக அவதாரம் எடுத்திருக்க வைத்திருக்கிறார்கள்.

இவரை ஏன் குழந்தைகளுக்கு பிடித்திருக்கிறது?

சம கால பள்ளிகள் விளையாட்டு, நூலக வாசிப்பு, இசை,நடனம் உள்ளிட்ட  கலையினை கற்றல் என்ற அகத் திறன் வெளியினைஅடியே ஒழித்து வெறும் மதிப்பெண்கள் எடுக்கும் கூடங்களாக மாற்றி சித்திரவதை செய்வதன் விளைவே தொலைகாட்சியில் தோன்றி கடும் கன மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடலாம் என சொல்லும் ரமணனை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கிறது.

விசயத்திற்கு வருவோம்.

வெகு சன மக்களுக்கு புரியும் மொழியில் இயல்பாக வானிலை அறிக்கை தரும் ரமணனை இணைய வெளியில்  எதன் பொருட்டு கிண்டல் அடிக்கின்றனர் என்று பார்த்தால் நம்மவர்களின் அறியாமைகளை வைத்து ஒரு பெரிய புத்தகமே போடலாம்.

இவர்கள் சொல்லும் ஒரே குற்றச்சாட்டு வானிலை அறிக்கை துல்லியமாக இருப்பதில்லை என்பதுதான். இப்படி குற்றம் சொல்லும் நபர்கள்தான்  இஸ்ரோ ஒவ்வொரு முறை பூமியை கண்காணிக்கும் செயற்கோளை ஏவும் போது எதற்கு என்று தெரியாமலேயே பத்தாம் பசலிகளாய் இணைய வெளியில் மொக்கைதனமாய் உளறுவதை பார்க்க முடிகிறது. இவர்களில் பலருக்கும் பருவ கால நிலை மற்றும் சுற்று சூழலை கண்காணிக்கும் செயற்கோள்களை இது வரை இஸ்ரோ எத்தனை திட்டங்களை வெற்றி கரமாக நிறைவேற்றியுள்ளது என்பது கூட   தெரியாது.

பெரும்பாலான பொதுமக்கள் இவர்கள் மழை பற்றிய அறிக்கை தருவது மட்டுமே  இவர்கள் பணி என எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். பொதுவாக இவர்களின் அறிவிப்பு கடலோரத்தில் இருப்பவர்கள், மீனவர்கள், துறைமுகப் பகுதி  என அனைவருக்குமான பருவ கால சூழலை கணித்து எச்சரிக்கை தந்த வண்ணம்  இருப்பதால் பொதுமக்கள் இவ்வாறு நினைக்க தோன்றுகிறது.

பருவ நிலையின் முக்கிய கூறூகளான‌ அழுத்தம், வெப்பநிலை, ஈரப்பதம், மழைப்பொழிவு, காற்று மற்றும் வெப்ப சலனம் போன்றவற்றினை தானியங்கி பருவ மையம் (automatic weather station) மூலம் ஒவ்வொரு மணிக்கும் ஆய்வு செய்து தருகிறது.

விவசாயத்திற்கு மிகத் தேவையான‌ மழைப் பொழிவிற்கான‌ பருவ காற்றுகளின் தடம் அதன் போக்கு குறித்த இவர்களது ஆய்வு மிகவும் முக்கியமானது. இதற்காக முன் கூட்டியே கணித்து தரும் தகவல் மிக இன்றியமையாதது. முக்கியமாக, பேரிடர் காலங்களில் வெள்ளப் பெருக்கின் போது அதிக மழைப் பொழிவு இருக்கும் பகுதிகளை எச்சரிப்பது தொடங்கி இவர்களின் பணியினை அடுக்கி கொண்டே போகலாம்.

சூரிய ஆற்றல், காற்றாலை, கடல் அலையில் இருந்து மின்சாரம் எடுத்தல் போன்ற பணிகளில் எந்த இடத்தில் இத்திட்டங்களை நிறுவலாம் என்பது குறித்த‌  இவர்களின் ஆய்வு தரவுகள் மிக உதவியாக இருப்பவை. இவை தவிர புவி வெப்பநிலை (global mean temperature) குறித்த ஆய்வுதரவுகள் புவி வெப்பமயாமாதல்  குறித்த உலகளாவிய செயல்பாடுகளுக்கு மிக இன்றியமையாததாக இருக்கிறது. மேலும் நிலநடுக்கம், சுனாமி குறித்த ஆய்வு மேற்கொள்வதும் இவர்களின் தனித்த பணியாகும்.


மேலே சொன்ன விசயங்களின் அடிப்படைகளை நாம் நம் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறோம். ஆனால் என்றாவது இவற்றினை செயல் விளக்க கல்வி மூலம் நம் பள்ளி மாணவர்களுக்கு தந்திருக்கின்றோமா.

சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தில் பள்ளி குழந்தைகளுக்கு சுற்றிப்பார்க்க‌ அனுமதி உண்டா. அவ்வாறு அனுமதி உண்டெனில் எத்தனை பள்ளிகள் சுற்றுலாவிற்கு அழைத்து சென்று காட்டி உள்ளீர்கள்?  இத்தனை ஆராய்ச்சிகள் நடைபெறும் இடத்திற்கு நம் பள்ளி குழந்தைகளை அழைத்து சென்று காட்ட வேண்டும் என ஏன் நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியவில்லை.

சென்னையின் மத்திய பகுதியில் இருக்கும் அறிவியல் துணை நகரம் என்று ஒன்று உள்ளதை எத்துணை பேர் அறிந்திருக்கிறீர்கள். அதன் செயல்பாடு என்ன என்பதை யாரேனும் உணர்ந்திருக்கிறீர்களா.

ஆனால் அமெரிக்காவில் இருக்கும் நாசாவையும் (NASA) அங்கு சென்றால்தான் பள்ளி குழந்தைகளுக்கு அறிவு கிட்டும் என்று ஏன் பொய்யான பிம்பத்தை பெற்றோர்களிடம் கட்டி அமைத்து பெரும்பாலான தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் பணம் கறப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நம்மிடம் இருக்கும் நல்ல அறிவியல் நுட்ப மையங்களை நாமே புறக்கணிக்கலாமா?


இது போன்ற சூழலில் ஜப்பான் போன்ற நாடுகள் எவ்வாறு தங்களிடம் உள்ள ஆய்வு மையங்களில் பள்ளி குழந்தைகளுக்கு அறிவை ஊட்டுகிறார்கள் என்ற என் அனுபவத்தினை பகிர விரும்புகிறேன்.

சப்பானின் மேற்குபகுதியில் உள்ள ஒசாகா (osaka) நகரத்தின் கீழ் பகுதியில் கியோகோ எல்லையில் (Hyogo prefecture) உள்ளது அகாசி என்னும் நகரம். இந்நகரின் முக்கியமான‌ சிறப்பு இந்நகரின் வழியாகத்தான் ஜப்பான் நாட்டின் நேரத்தினை நிர்ணயிக்கும் பூமத்திய ரேகைகோடு செல்கிறது. ஏறத்தாழ 1886 ஆம் ஆண்டில் ஜப்பான் நிலையான நேரத்தினை (Japan Standard Time) கணக்கிட தேவையான ஆய்வுகளை மேற்கொண்ட போது, உலக நேரத்தோடு ஒப்பிடும் நிலையான நண்பகலை (meridian) கணக்கிட ஏதுவான நகரம் என தெரிவு செய்யப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் அகாசி நகராட்சி கோளரங்கத்தினை (Akashi Municipal Planetarium) வடிவமைத்தனர். தற்போது இது JSTM என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.  ஆகவே இந்நகரம் செல்லமாக “நேரத்தின் நகரம்” (Toki no machi) என ஜப்பானியர்களால் அழைக்கப்படுகிறது. நுழைவுக்கட்டணம் 600 யென். பள்ளி மாணவகளுக்கு முற்றிலும் இலவசம். அலுவல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பதினாறு தளங்களில் ஒரு சில தளங்கள் மட்டுமே சுற்றிப் பார்க்க அனுமதிக்கிறார்கள்.
Akashi Municipal Planetarium, Japan


Akashi Municipal Planetarium

Akashi Municipal Planetarium

Akashi Municipal Planetarium

Akashi Municipal Planetarium

World time comparison, Akashi Municipal Planetarium


பள்ளி மாணவர்களுக்கு விண்வெளியினை (galaxy systems) பற்றிய பிரத்யோகமான முப்பரிமான படங்களை இரண்டாவது தளத்தில் திரையிடுகிறார்கள். மூன்றாவது மட்டும் நான்காவது தளத்தில் உள்ள கோளரங்க அருங்காட்சியகம் (planetarium museum) சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டிப்பாக காண வேண்டியது. சூரியன் எவ்வாறு நகர்கிறது எனபதனை நுட்ப வடிவமைப்புகளை கொண்டு பொம்மைகள் மூலம் விளக்குகிறார்கள். பள்ளி குழந்தைகள் விளையாட்டின் மூலம் சூரியகடிகாரம், கோள்களின் அமைப்பு, அவை எவ்வாறு சூரியனை சுற்றி வருகிறது. பூமத்திய ரேகை, அட்ச ரேகை, தீர்க்க ரேகை போன்றவற்றினை பரிசோதனை செய்து அறிந்து கொள்ளலாம். கடிகாரம் எவ்வாறு வேலை செய்கிறது அவற்றின் பரிணாம வளர்ச்சி போன்றவற்றினை எளிமையாக விளக்குகிறார்கள்.


இக்கோளரங்கின் சிறப்புகள் சிலவற்றினை மட்டும் விளக்குகிறேன். 1) விண்வெளியில் கற்கள் எப்படி இருக்கும் என்பதனை நேரடியாக கண்டு உணரலாம். 2) கோள்கள் சூரியனை சுற்றி வரும் பால் வீதீயினை மாணவர்கள் விளையாடும் வண்ணம் அமைத்திருப்பதால் மாணவர்கள் ஒவ்வொரு கோளுக்கு ஒருவராக நின்று சுற்றி வருவதன் மூலம் கோள்களின் சாய்வு கோணத்தினையும், நேரத்தினையும் எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. 3) உலகின் பழமையான வானியல் நுண்ணோக்கிகள், மற்றும் கடிகாரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 4) ஜப்பானின் நிலையான நண்பகல் நேரத்தினையும், மற்ற உலக நாடுகளின் நேரத்தினையும் ஒப்பிட்டு அறியும் வண்ணம் பார்வைக்கு வைத்துள்ளார்கள். 5) 1950 களில் ஜப்பானின் சேய்கோ (SEIKO) நிறுவனத்தின் மூலம் வடிவமைக்கப்பட்ட குவார்ட்ஸ் படிகத்தால் ஆன (quartz) டிஜிட்டல் கடிகாரம் வைக்கப்பட்டுள்ளது.  ஏறத்தாழ 6 அடிக்கு பெரிய  அலமாரி அளவில் உள்ளது. தற்போது நகத்தினை விட சிறிதாக வடிவமைக்கப்படுகின்ற டிஜிட்டல் கடிகாரங்கள் 60 வருடங்களுக்கு முன்பு எப்படி பெரிய அளவில் இருந்திருக்கின்றது என பார்த்த போது அளவிற் சுருக்குதல் (miniaturization) என்ற விஞ்ஞான நுட்பத்தினை வியக்காமல் இருக்க முடியவில்லை.


இந்த ஆய்வு மையத்தினை சுற்றிப் பார்க்கும் பள்ளி மாணவர்கள் கையில் ஒரு வினாத்தாள் இருக்கும். அவற்றிகான விடையினை உள்ளே சுற்றிப் பார்த்து விடை எழுதி தருகிறார்கள். அவ்வாறு விடை எழுதி தரும் மாணவர்களுக்கு பரிசுகள் தருகிறார்கள். இந்த மையத்திற்கு வரும் பள்ளி மாணவர்கள் சூரியனை மையமாக கொண்ட பூமியின் சுழற்சி முதல் பருவ காலங்களை எப்படி கணக்கிடுவது வரை நேரடியாக விளையாட்டுகள் மூலம் தெரிந்து கொள்கிறார்கள்.


இது போன்று நம் சென்னையில் உள்ள துணை அறிவியல் நகரை போர்க்கால அடிப்படையில் புணரமைக்கலாம். பள்ளி குழந்தைகளை அங்கு அழைத்து சென்று அவர்களுக்கு அறிவியல் நுட்ப அறிவினை ஊட்டலாம்.  தற்போது ஓய்வு பெறும் திரு ரமணன் அவர்களை இத்திட்டத்திற்கு தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம்.

த‌ங்கள் ஓய்வுக் காலம் மிகச் சிறப்பாக அமைய எமது வாழ்த்துகள்.

கேலிக்குள்ளாகும் நம் தேச பக்தி


வார இறுதிகளில் கார்டிப் (cardiff) நகரில் இருந்து சுவான்சியில் (swansea) இருக்கும் வீட்டிற்கு செல்லும் போது சுவான்சி நகரில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள தால்போட் துறைமுகம் (Port Tolpot) வழியாக பயணிப்பது வழக்கம். தெற்கு வேல்சு மாகாண‌ பகுதியில் இருக்கும் கார்டிப்- ‍சுவான்சி நெடுஞ்சாலையில் வழி நெடுக புல்வெளிகள் நிறைந்திருக்கும். கம்பளி ஆடுகள், மாடுகள், குதிரைகள் யாவும் அந்த புல்வெளிகளில் மேய்ந்து கொண்டிருக்கும். பார்க்கவே அற்புதமாக இருக்கும். இந்த சாலையின் இடையில் இருக்கும் தால்போட் துறைமுகப் பகுதியில் மட்டும் எண்ணற்ற தொழிற்சாலைகள் புகையினை கக்கிய படி பார்க்கவே அச்சுறுத்தலாக இருக்கும். அப்படி ஒரு சூழலில் பேருந்தில் இருந்து எடுத்த புகைப்படம்தான் இது. இந்த பயணங்களில் நான் கண்டு ஆச்சரியமடைந்தது இந்தியாவின் தலை சிறந்த நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் டாடா இரும்பு உருக்கு ஆலை ஒன்று என் கண்ணில் பட்டது. இந்த பகுதியில் இருக்கும் மிகப் பெரிய தொழிற்சாலைகளில் முதன்மையானது என்றே சொல்லாலாம். இந்த நிறுவனத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் பணி புரிகிறார்கள். கடல் கடந்து பிரித்தானியாவில் பணி புரிய நான் வந்திருந்தாலும், நம் ஊர் நிறுவனம் இங்குள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திருப்பது குறித்து மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் நேற்று இரவு இந்த தொழிற்சாலையினை மூடுவதாக டாடா குழுமம் அறிவித்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. இதற்கு காரணங்களாக‌ பிரித்தானியாவில் குறைந்த விலையில் சீன இரும்பு பொருட்களின் இறக்குமதி, மற்றும் சர்வதேச சந்தையில் ஸ்டெர்லிங் பவுண்டின் வீழ்ச்சி போன்றவை முக்கிய காரணிகளாக டாட குழுமம் கூறுகிறது. முக்கிய காரணமாக நான் பார்ப்பது, சீன நிறுவனங்கள் தரம் குறைந்த பொருட்களை இந்தியா உள்ளிட்ட கிழக்கு உலகு நாடுகள், தெற்கு ஆசியா, மேற்குலக‌ நாடுகள் என எல்லா இடங்களிலும் இறக்குமதி செய்வதன் மூலம் வலுவாக‌ கால் பதிக்க துவங்கியுள்ளது.இதன் மூலம் உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களை மூட வைப்பதே இதன் நோக்கம். நான் பயணிக்கும் பல நாடுகளிலும் உள்ளூர் அங்காடிகளில் சீன பொருட்களை வெகுவாக‌ பார்க்க முடிகிறது. ஆனால் இந்திய பொருட்களை மிகக் குறைந்த அளவிலேயே பார்க்க முடிகிறது.அடித்து சொல்வேன் இந்திய ஏற்றுமதி பொருட்களின் தரம் இதை விட மிக சிறந்தது. ஆனாலும் நமக்கு கிராக்கி குறைவுதான். இதை விட கொடுமை உள்ளூர் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற இந்தியாவில் கூட நம் மக்கள் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை புறக்கணித்து விட்டு சீன பொருட்களை வாங்குவது இன்று அதிகரித்துள்ளது. இந்த காலக் கொடுமைக்கு இடையில் "மேக் இன் இந்தியா" கோசம் வேறு. உண்மையில் நாம் எங்கு வீழ்ச்சி அடைகிறோம் என்ற புரிதலே இல்லாமலே தேசபக்தி கோசத்தின் மூலம் இன்னும் இன்னும் அதிகமாக நம்மை முட்டாள் ஆக்குகிறது நம் மத்திய அரசு. நம் நீர்நிலைகளை பெப்சி, கோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்களை தாரை வார்த்து கொடுக்கிறோம். அப்போது ஒரு தேச பக்தனுக்கும் கோபம் வரவில்லை. சாலையில் செல்பவர்களை எல்லாம் பாரத மாதாவிற்கு வந்தனம் செய் என மிரட்டுகிற அவலங்கள் நாள் தோறும் காண சகிக்கவில்லை. இந்நிலை தொடர்ந்தால் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கன சிறு தொழில் பொருட்கள் சந்தையில் வாங்க‌ சீந்துவார் இன்றி அழியும். உள்ளூர் பொருட்களை நுகர்வோர் சந்தையில் ஆதரிக்க வேண்டும். அதற்காக பாபா இராம்தேவின் லேகிய பொருட்களை வாங்க வேண்டும் என‌ கோசம் இடாதீர்கள். இராம்தேவை விட இந்தியாவின் சிறு நகரங்களில் இருந்து தரமான அத்யாவசிய‌ பொருட்களை தரும் நிறுவனங்களை முன்னிறுத்துங்கள். டாட குழுமம் இந்த தொழிற்சாலையினை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று தொழிற்சங்க உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையினை நேற்று நள்ளிரவு நிராகரித்து விட்டது. இந்த தொழிற்சாலையில் இருக்கும் தொழிலாளர்களுக்கு நல்லதே நடக்கும் என நம்புவோம்.


Tata Steel Industry, Port Tolpot,  UK.

Monday, 28 March 2016

சொல்ல மறந்த கதை


சுவான்சி நூலகத்தின் நேர் பின்புறம் பெரிய கடற்கரை உள்ளது.
நேற்று நல்ல மழை வேறு. நூலகத்தின் பின்புற சன்னல் வழியே கடல் ஆர்பரித்து எழுவதை பார்க்கவே மனம் குதூகலித்தது.
அந்த சன்னல் ஓரத்தில் ஒரு மூதாட்டி தலையை குனிந்தபடி ஏதோ முனு முனுத்தபடி இருந்தார். சரி அலைபேசியில் ஹெட் போன் போட்டு யாரிடமோ பேசிக் கொண்டு உள்ளார் போல என அங்கிருந்த புத்தக பகுதியில் புத்தகங்களை பார்க்க துவங்கி விட்டேன்.
அவந்தி கதை சொல்லி முடித்து விட்டு விளையாட ஆரம்பித்து இருந்தாள். அவந்தியின் வயதை ஒத்த ஜாக் என்னும் சிறுவன் நூலகத்தின் உள்ளே விளையாட துணைக்கு கிடைத்ததும் ஓடி ஒளியும் விளையாட்டிற்கு நகர்ந்து விட்டாள்.
விளையாட்டின் தீவிரத்தில் சன்னல் ஓரத்தில் போடப்பட்டிருந்த சுழல் நாற்காலிகளில் ஏறி இருவரும் கத்திக் கொண்டே விளையாண்டு கொண்டிருந்தனர்.
அவந்தியின் சத்தம் நூலகம் முழுவதும் கேட்க ஆரம்பித்து விட்டது. கத்தாதே என்று சொன்னால்தான் அதிகமாக கத்துவாள். அதனால் மெதுவாக அவளிடம் போய் சத்தம் போட்டால் அருகில் இருக்கும் பாட்டிக்கு தொந்தரவாக இருக்கும் என சொல்லி இருவரையும் வேறு இடத்திற்கு போய் விளையாட சொன்னேன்.
அப்போதும் பாட்டி தலையை குனிந்த படியே முனு முனுப்பதை நிறுத்தவில்லை. எனக்கும் கொஞ்சம் திகில் ஆகி விட்டது.
ஒரு வழியாக புத்தகம் எடுக்கும் சாக்கில் பாட்டியின் எதிர்ப்புறம் இருக்கும் அலரியின் பின் நின்று எட்டி பார்த்தேன். பாட்டி காதில் ஹெட் போன் போட்டுக் கொண்டு ஒரு நாவலை வாசித்து கொண்டிருந்தார்.
அவர் கையில் வைத்திருந்த ஒலி பதிவு கருவியில் நாவலை வாசித்து பதிந்து கொண்டிருந்தார். எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.
இது போன்று பதியப்படும் ஒலி புத்தகங்கள், கதைகள் (audio books) எழுத்து வாசிக்கும் வயதுக்கு முன்னர் உள்ள குழந்தைகள், விழிச் சவாலர்கள், பார்வை குறைபாடு உள்ள முதியவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
எத்துணையோ முறை பல நூலகத்திற்கு போய் இருக்கிறேன் ஒரு முறை கூட என் பங்களிப்பாக ஒரு நாவலை வாசித்து பதிந்து வைக்க தோன்றவில்லை. கொஞ்சம் அல்ல நிறையவே வெட்கமாய் இருந்தது.
இனி நூலகங்களுக்கு போனால் ஒலி புத்தக வாசிப்பு வசதி இருந்தால் உங்கள் பங்களிப்பை செய்ய மறக்காதீர்கள். அல்லது முடிந்தால் உங்களிடம் படித்து முடித்த நல்ல புத்தகங்களை உங்கள் கணிப்பொறி அல்லது அலைபேசியின் மூலம் பதிவு செய்து யூ டியூப் போன்றவற்றில் இலவசமாக பதிவேற்றலாம்.
காலத்தை கடந்து உங்கள் குரலும், மொழியும் பிறருக்காக ஒலிக்கட்டும்.

கிராமப்புற அரசு பள்ளியின்  கணிப்பொறி கனவுகள் 

பெருவாரியான‌ மாணவர்கள் கணிப்பொறி அல்லாத‌ துறையில் உயர் அறிவியல் மற்றும் நுட்ப‌ கல்வி பயின்றாலும் பின்னாளில் கணிப்பொறி சார்ந்த வேலை வாய்ப்பை நோக்கியே ஒரு சமூகம் திரும்பி இருக்கும் அதிசயத்தையே இப்போது பார்க்க முடிகிறது. கணிப்பொறி துறை சார் வேலை வாய்ப்பு என்பது  மென்பொருள் துறையில் மட்டுமில்லாமல்   அறிவியல் உயர் ஆராய்ச்சி நுட்ப துறையிலும்   அதன் தேவை இன்றியமையாததாகி விட்டது.


இதன் நீட்சியாக‌ கடந்த பதினைந்து ஆண்டுகளில் பள்ளி கல்வியில் வெகுவான மாற்றங்கள் வரத்துவங்கி விட்டன.  துவக்கத்தில் கணிப்பொறி சார்ந்த கல்வி என்பது 1990 களுக்கு பின்னர் தமிழ‌கத்தில் உள்ள உயர்நிலை பள்ளிகளில் ஒரு சில இடங்களில் மெதுவாக அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் தற்போது துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு எல்லா இடங்களிலும் கொண்டு வரப்பட்டுள்ளது.

வழக்கமான பாடத்திட்டம் என்பதோடு இல்லாமல் கணிப்பொறியில் இப்போது சுட்டிகளுக்கான விளையாட்டு, திறன் சார் போட்டிகள், நுண் அறிவு பயிற்சி வகுப்புகள், மற்றும் காணொளியின் மூலம் பொது அறிவினை வளர்த்தல் என கணிப்பொறியினை கையாள குழந்தைகளுக்கு கற்றுத் தருவது என்பது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.

ஆனால் இது போன்ற அடுத்த கட்ட நகர்விற்கான பணியில் உள்ள குறைபாடு என்னவெனில் நகர்ப்புறத்தில் பயிலும் பள்ளி  மாணவர்களுக்கு கிடைக்கும் கணிப்பொறி ஆய்வக உட்கட்டமைப்பு வசதியைப்போல் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்னும் முழு வீச்சில் கிடைக்கவில்லை என்பதே.

தமிழக அரசு கல்வித் துறை கணிப்பொறி சார்ந்து எல்லா அரசு பள்ளிகளுக்கும் ஓரளவிற்கு பொருள் உதவி செய்து வருகிறது. இருப்பினும் மாணவர்கள் பயில வகுப்பறைகளே இன்னும் போதாத நிலையில் கணிப்பொறி ஆய்வகம் என்பது இன்னும் தீராத கனவாகத்தான் உள்ளது. அதனால் அரசு வழங்கும் திறன் சார் எலக்ரானிக் கருவிகள் யாவும் ஆசிரியர்கள் அல்லது தலைமை ஆசிரியர்களின் மேசைகள், நாற்காலிகளில் வைத்து சொல்லி தரப்படும் அவலங்களை பரவலாக பார்க்க முடிகிறது. இது போக‌ மழை வந்து விட்டால் ஓடி ஒளியவே இடம் இல்லாத ஒழுகும் கட்டிடங்கள் என்ற சூழலில் கணிப்பொறி போன்ற பொருட்களை பாதுகாத்து வைப்பது என்பது மேலும் சவாலான விசயம். 

இது போன்ற ஒரு சூழலில் தான் திருவண்ணாமலை மாவட்டத்தின் போளூர் வட்டத்தில் உள்ள புதுக்கரிகாத்தூர் அரசு தொடக்கப்பள்ளியினை முன் மாதிரி பள்ளிக்கான உட்கட்டமைப்பினை மாற்ற முழுமதி அறக்கட்டளை களத்தில் இறங்கியது. இது வரை பள்ளிக்கு தேவையான நூலகம், குடிநீர் வசதி, கழிப்பறை, குழந்தைகள் அமர வட்ட மேசை, நாற்காலி, கட்டிடத்தை பழுது பார்த்து வண்ணம் பூசுதல் போன்ற பணிகள் நிறைவேறி உள்ளது.

புதுகரிகாத்தூர் கிராமத்தில் பயன்பாட்டில் இல்லாத தொலைகாட்சி அறையினை பள்ளியின் கணிப்பொறி அறையாக பயன்படுத்தி கொள்ள ஊர் பொதுமக்களும் பஞ்சாயத்தும் கூடி ஒருமனதாக முடிவெடுத்து அவ்வறையினை நம்மிடம் தந்தனர். தற்போது இந்த அறையினை பழுது பார்த்து வண்ணம் பூசி சன்னல், தரைத்தளம், கதவு, கணிப்பொறி வைக்க தேவையான மரப் பெஞ்சுகள் போன்றவற்றினை மதுரை டி.வி.எஸ் (T.V.S) நிறுவனத்துடன் இணைந்து முழுமதி அறக்கட்டளை செய்து கொடுத்துள்ளது.

இந்த‌ மீள்கட்டமைப்பு திட்டத்திற்கு தேவையான நிதியில் (22,000 Rs) இருபது சதவிகிதத்தினை முழுமதி அறக்கட்டளையும், மீதி என்பது சதவிகித தொகை என எல்லா பொறுப்பையும் டி.வி.எஸ் நிறுவனமே ஏற்று ஒரு வாரத்திற்குள் கணிப்பொறி அறை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இனி புதுகரிகாத்தூர் கிராமத்தில் இருக்கும் குழந்தைகளின் கணிப்பொறி கனவு நனவாவதில் எமக்கும் பெருமகிழ்ச்சியே.

தற்போது இப்பள்ளிக்கு தேவையான சுற்றுச் சுவர் 2,96,000 ரூபாய் மதிப்பீட்டில் செய்யப்பட உள்ளது. மேலும் தமிழக அரசு பள்ளிக் கல்வி துறையின் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம், திறன் வகுப்பு எலக்ரானிக் கருவிகள், கணிப்பொறி, சோலார் மின் வசதி போன்றவற்றினை வரும் கல்வியாண்டில் செய்ய உள்ளோம். 

இத்தையக பெரும் கல்விப்பணியில் எங்களுக்கு தோள் கொடுத்த‌ டிவிஎஸ் நிறுவனத்திற்கு முழுமதி அறக்கட்டளையின் நன்றிகளும் பாராட்டுகளும்.

வீழ்ச்சியில் இருக்கும் அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பினை சீரமைப்போம் வாருங்கள் நண்பர்களே.   

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், 
ஆலயம் பதினாயிரம் நாட்டல், 
பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி 
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.
-- மகாகவி பாரதியார்

குறிப்பு:

நண்பர்களே, டிவிஎஸ் நிறுவனத்தினர் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல பள்ளிகளுக்கு இது போன்ற கட்டிட வசதிகளை செய்து தந்துள்ளனர். வெளிநாடுகளில், தமிழகத்தில் இருக்கும் அறக்கட்டளைகள் உங்களுக்கு தெரிந்த அல்லது அருகில் இருக்கும் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பினை டிவிஎஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து தாராளமாக முன்னெடுக்கலாம். நீங்கள் தரும் பகுதி நிதியோடு அவர்கள் இப்பணியினை செய்து தர தயாராய் உள்ளனர்.

அவ்வாறு செய்ய நினைப்பவர்களுக்கு முழுமதி அறக்கட்டளை தமது செயல் திட்ட அனுபவங்களை பகிர தயாராய உள்ளது.

எமது மின்னஞ்சல் முகவரி : muzhumathi.org@gmail.com 

(முழுமதி அறக்கட்டளை சார்பாக)
புதுகரிகாத்தூர் அரசு துவக்கப்பள்ளி, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம். புதிய கணிணி அறை.

புதுகரிகாத்தூர் அரசு துவக்கப்பள்ளி, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம். புதிய கணிணி அறை.

புதுகரிகாத்தூர் அரசு துவக்கப்பள்ளி, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம். புதிய கணிணி அறை.

புதுகரிகாத்தூர் அரசு துவக்கப்பள்ளி, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம். புதிய கணிணி அறை.

புதுகரிகாத்தூர் அரசு துவக்கப்பள்ளி, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம். புதிய கணிணி அறை.Saturday, 26 March 2016


நூலகங்கள் - ‍ புறக்கணிக்கப்படும் குழந்தைகள்


இன்று அவந்தியை சுவான்சி (Swansea, UK) நகரில் உள்ள மத்திய நூலகத்தின் குழந்தைகள் பகுதிக்கு அழைத்து சென்று இருந்தேன்.

பெரியவர்களுக்கான புத்தக பகுதியினை காட்டிலும் குழந்தைகளுக்கான பகுதியில் ஆயிரக்கணக்கான படக்கதை புத்தகங்கள், காணொளி தட்டுகள், ஆடியோ கதைகள் குவிந்து இருந்தன‌.

குழந்தைகள் விளையாண்டு கொண்டே விரும்பிய புத்தகங்களை எடுத்து படிக்கலாம்.படிக்கும் வண்ணம் இந்நூலகம் விரிந்து பரந்து இருந்தது.

இந்நூலகத்தில் வார இறுதிகளில் மதிய நேரத்தில் பெற்றோர்கள் அங்கு இருக்கும் புத்தகங்களை எடுத்து குழந்தைகளுக்கு வாசித்து கதை சொல்லலாம் (story telling time). இன்று அவ்வாறு கதை சொல்லலாம் என‌ அவந்தியை அழைத்து சென்று இருந்தேன்.

அவள் விரும்பிய புத்தகங்களை எடுத்து தரச் சொல்லி புத்தகத்தை திறந்தால்அவந்தி தானாகவே படங்களை பார்த்து சொந்தமாக கதை சொல்ல ஆரம்பித்து விட்டாள்.

அதில் ஒரு புத்தகம் மிக அருமையாக இருந்தது, கரடியின் பாகங்கள் பற்றி சொல்லும் புத்தகம். வழக்கமான புத்தகம் போல் அல்லாமல் கரடியின் மூக்கு பகுதி படம் வரைந்து அது நன்கு சொர சொரப்பாக இருப்பது போலவும், கால் பகுதி மென்மையான பஞ்சு போலவும், நகங்கள் பள பளவெனவும் அச்சிட்டு இருந்தார்கள். குழந்தைகள் கைகளால் தடவி அதன் பாகங்கள் எவ்வாறு உள்ளது என சொல்லும் வகையில் கதைகள் இருந்தது. இதன் மூலம் குழந்தைகளுக்கான சிந்திக்கும் திறன் நன்கு வளர்கிறது. வித்தியாசமான படக் கதை புத்தகங்கள் வயது வாரியாக அடுக்கி வைத்துள்ளனர். ஆகையால் குழப்பம் இல்லாமல் புத்தகங்களை குழந்தைகளே எடுத்து படித்து கொள்ளலாம்.

எல்லாம் சரி குழந்தைகள் நூலகத்திற்கு சென்று படிக்கும் பழக்கத்தினை எப்படி இங்கே வளர்க்கிறார்கள்.

குழந்தைகளை நூலகத்திற்கு வரவழைக்கும் பொருட்டு சின்ன சின்ன விளையாட்டு போட்டிகள் நடத்துகிறார்கள். 

இன்றைக்கு ஈஸ்டர் விழாக் காலத்தை முன்னிடு பல வண்ணத்திலான ஈஸ்டர் முட்டை பொம்மைகள் நூலகத்தின் புத்தக அலமாரிகளில் ஒளித்து வைத்திருந்தார்கள். கையில் ஒரு தாளை கொடுத்து எந்தெந்த புத்தகத்தின் பின்னால் இந்த முட்டை ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என பட்டியல் இடுபவர்களுக்கு பரிசுகள் தருகிறார்கள். நான் பார்த்த போது தனது பேரன் முட்டையினை தேட ஏதுவாக‌ அவனது தாத்தா அவன் பின்னாலேயே சென்று எழுதி கொண்டிருந்தார். சில நேரங்களில் பொம்மைகளை தேடும் போது அந்த புத்தகங்களை சிறுவர்கள் படித்து பார்க்கிறார்கள். அங்கேயே உட்கிறார்கள் படிக்கிறார்கள். மீண்டும் முட்டை தேடுகிறார்கள். குழந்தைகள் உலகில் புத்தகம் அவர்களை அறியாமலே மெதுவாக திறக்கப்படுகிறது.

சுவான்சி (Swan sea) நூலகத்தில் அவந்தி.

சுவான்சி (Swan sea) நூலகத்தில் அவந்தி.


வார இறுதியில் நூலகத்தில் இருந்து  வீட்டிற்கு எடுத்து சென்று படிக்கும் புத்தகங்களை திறனாய்வு செய்து சுருக்கமாக  நூலகத்தில் தரும் விண்ணப்பத்தில் எழுதி கொடுத்து விட்டால் அதற்கு தனியாக பரிசு உண்டு. இதற்காகவே நிறைய புத்தகங்களை குழந்தைகள் வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர். 

நூலகத்தில் இருந்த மற்றொரு இடம் மிகவும் குழந்தைகளை ஈர்ப்பதாக இருந்தது. பெரிய ஏணி வைத்து அதன் மேல் உள்ள தொட்டியில் புத்தகங்களை கொட்டி வைத்துள்ளனர். குழந்தைகள் ஆர்வமாக ஏணியில் ஏறி அந்த தொட்டிக்குள் இறங்கி அங்கிருக்கும் புத்தகங்களை அங்கேயே அமர்ந்து வாசிக்கின்றனர். 

குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பு அலுப்பூட்டினால்  அங்கேயே அமர்ந்து வண்ணம் தீட்ட தாளும், வண்ணக் குச்சிகளும், கிரேயான் துண்டுகளும் பெட்டி நிறைய போட்டு வைத்திருக்கிறார்கள். 

இன்று அவந்தி பொறுமையாக உட்கார்ந்து வண்ணம் தீட்டி அதனை வீட்டுக்கு வந்தவுடன் அவள் அம்மாவிற்கு பரிசாக கொடுத்து விட்டாள்.


சுவான்சி (Swan sea) நூலகத்தில் அவந்தி.

இன்னொரு நல்ல விசயம் என்னவென்றால், குழந்தைகள் வீட்டிற்கு வேண்டும் அளவிற்கு புத்தகம் எடுத்து வந்து படிக்கலாம். இதற்காக‌ அவர்களுக்கு தனி அடையாள அட்டையும் கொடுத்து விடுகிறார்கள். அவந்தி வரும் போது ஒரு பனிக் கரடி பற்றிய படக் கதை புத்தகத்தினை எடுத்து தர கேட்டாள். எடுத்து அவளிடம் கொடுத்ததும் அப்படி ஒரு மகிழ்ச்சி. 

இங்கு பிரித்தானியாவில் உள்ள பள்ளிகளில் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்து சென்று  படிப்பதை பழக்கபடுத்தி இருப்பதால்  இங்குள்ள நூலகங்களில் குழந்தைகள் நிறைய பேரை பார்க்க முடிகிறது. மேலும் குழந்தைகள்  கார்ட்டூன் படங்களை எடுத்து கணிப்பொறியில் போட்டு பார்த்து கொள்ளவும் வசதி உள்ளது. ஆனால் பெரும்பாலான குழந்தைகள் புத்தகங்களையே எடுத்து படிக்க ஆசைப்படுகிறார்கள். ஆச்சரியமாக இருந்தது.

தமிழகத்தில் ஒரு சில ஊர்களில் மட்டும் நூலகங்கள் சிறப்பாக இயங்குகிறது. அவை யாவும் பெரியவர்களுக்கான செய்தி தாள் வாசிக்கவும்,  போட்டி தேர்வுகளுக்காக இயங்குபவையாகவே இருக்கின்றன. ஆனால் குழந்தைகளுக்கென்று எந்த நூலகத்திலும் ஒரு பகுதி இருப்பதாகவே தோன்றவில்லை. அவர்கள் புத்தகங்களை கிழித்து விடுவார்கள் என்ற குற்றசாட்டினை மட்டுமே திருப்பி திருப்பி சொல்லி கொண்டிருக்கின்றோம். 

சரி, குழந்தைகள் புத்தகங்களை கிழிக்காமல் இருக்க  இங்கு எப்படி சமாளிக்கிறார்கள். நான்கு வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கான படக் கதை புத்தகங்களின் பக்கங்கள் தடித்த அட்டையில் வடிவமைத்துள்ளனர். 5 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கான புத்தகங்கள் சற்றே கெட்டி தாள்களில் உள்ளது. இந்த கால கட்டத்தில் குழந்தைகள் புத்தகங்களை கையாள கற்று கொடுத்து விடுகிறார்கள். பள்ளிகளில் 6 வயதுக்கு மேல் புத்தகம் படித்து கதை சுருக்கம்  செய்ய பழக்கபடுத்தி விடுவதால் 7 வயதில் அருமையான வாசிப்பிற்கும், அவர்கள் படித்த புத்தகங்களை அவர்களே திறனாய்வு (review) செய்யவும் கைதேர்ந்தவர்கள் ஆகி விடுகிறார்கள். மேற்குலகு நாடுகளில் பெரும்பாலான மக்கள் புத்தக வாசிப்பில் மேம்பட்டவர்களாக இருக்க காரணம் சிறு வயதில் அறிமுகப்படுத்தப்படும் நூலகங்கள் என்றால் அது மிகையாகாது.


நூலகத்தில் குழந்தைகளுக்கு தரப்படும் கதை சுருக்கத்திற்கான படிவம்

தமிழில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மிகவும் குறைவு. காரணம் பெற்றொர்களும், பள்ளிகளும் புத்தக வாசிப்பு என்றாலே அது பாடப் புத்தகம் என்றே பொருள் கொள்கிறார்கள். குழந்தைகளுக்கான புத்தகங்களை வெளியிட‌ பதிப்பகத்தினர் நிறைய முன் வர வேண்டும், அதே வேளையில் புத்தகத்தினை வாசிக்க வைக்க பெற்றோரும் உதவ வேண்டும். இப்போது இருக்கும் புத்தகங்கள் ஒப்பீட்டளவில் போதாது.

தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் புத்தகங்களை குழந்தைகளுக்கு கொடுப்பதில்லை. இது தவறான செயல். பள்ளிகளில் நூலகத்திற்கு என குறிப்பிட்ட மணி நேரத்தினை ஓவ்வொரு வாரமும் ஒதுக்க வேண்டும். குழந்தைகள் அவர்கள் படித்த புத்தகத்தினை அவர்களே திறனாய்வு செய்து எழுதும் பழக்கத்தினை செய்ய வேண்டும். குழந்தைகள் புத்தகத்தினை   படித்து கிழிக்கும் போது தான் அவர்கள் ஞானமடைவார்கள். இதில் நாம் கோபப்பட ஒன்றும் இல்லை. புத்தக வாசிப்பு அறிவு அறவே இல்லாமல் போவதற்கு படித்து கிழிக்கும் குழந்தைகள் பல நூறு மடங்கு போற்ற வேண்டியவர்கள்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் தயவு செய்து நூலகங்களை பயன்படுத்த குழந்தைகளை அனுமதியுங்கள். முக்கியமாக‌ வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதியுங்கள். அவர்களின் உலகம் விரிவடையட்டும்.

தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் பெற்றோர்களே ஆயிரக் கணக்கில், லட்சக் கணக்கில் கல்வி கட்டணம் செலுத்துவோரே, உங்கள் குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் இருந்து உங்கள் குழந்தை புத்தகம் எடுத்து வந்து படிக்கும் வசதி இருக்கிறதா என பள்ளியினை கேட்கவும். அபாக்கஸ் வகுப்பு, கீ போர்டு, இத்யாதிகள் என புற்றீசல் போல கிளம்பி இருக்கும் வகுப்புகளுக்கு செலவு செய்யும் பெற்றோரே,  குழந்தைகளில் அகத்திறன் வளர்ச்சிக்கு கொஞ்சம் நூலக அறிவினையும் கொடுங்கள்.குறிப்பு:

பிரித்தானியாவில் குழந்தைகளுக்கான புத்தக சந்தை மிகப் பெரியது. புத்தக கடைகளில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் 2ல் இருந்து 10 பவுண்டுக்கு மிக நேர்த்தியான வண்ண கதைகளோடு புத்தகங்கள் கிடைக்கிறது. 

இதே போல் தமிழில் இயங்கும் குழந்தைகளுக்கான புத்தகங்களை தேடி பிடித்து வாங்கி கொடுங்கள். வாசிக்கும் பழக்கம் மேம்பட்டால் நிறைய பதிப்பகத்தினர் இத்தளத்திற்கு நிறைய வருவர்.  

இச்சூழலில் குழந்தைகளை முன் வைத்து தொடர்ச்சியாக இயங்கி வரும் தடாகம் பதிப்பகத்தினரின் காடு இதழும், கோவையில் இருந்து வெளி வரும் நம் பிள்ளை இதழுக்கும் எனது பாராட்டுகள். இலாப நோக்கின்றி கடுமையான பொருளாதார நெருக்கடி சூழலில் குழந்தைகளுக்காக இயங்கி வரும் இவர்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு தெரிந்த பள்ளிகளுக்கு சந்தா கட்டினால் குழந்தைகளுக்கு  பெரிய உதவியாக இருக்கும். 

Saturday, 19 March 2016


வீட்டிற்கு வெளியே -கண்டுக் கொள்ளப்படாத நம் சுற்றுலா தலங்கள்


தமிழக சுற்றுலா துறையினை நம் பரப்பளவில் குறைவான கேரள அரசின் சுற்றுலா துறையினரோடு ஒப்பிட்டால் அவர்கள் எந்த அளவிற்கு திறன்பட இயங்குகிறார்கள் என்பது  நாம் கூர்ந்து கவனிக்கப் பட வேண்டிய ஒன்று. மனதை கவரும் விளம்பர உத்திகளோடு இணைய வசதிகளின் மூலம் கேரளாவின் அற்புதமான சுற்றுலா தளங்களை உலக அளவில் எடுத்து செல்கிறார்கள். இதன் தனித்த வருமானம் கேரள அரசிற்கு பெரும் உதவியாக உள்ளது.

நம் தமிழக அரசின் சுற்றுலா துறை ஏன் சுணங்கி உள்ளது. கல் தோன்றா மண் தோன்றா காலத்து என இன்னும் எத்தனை நாளைக்கு உட்கார்ந்த இடத்திலேயே அசையாமல் நீட்டி முழக்கி கொண்டிருக்க போகிறோம். எண்ணற்ற புனித தலங்கள், குடைவரை குகைகள், கடல் புறத்தில் இருக்கும் இயற்கை காட்சிகள், மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பல மலைத்தொடர்கள், குன்றுகள், வரலாற்று ரீதியில் பார்க்க வேண்டிய இடங்கள், என அடுக்கி கொண்டே போகலாம். அரசு மெத்தனம் ஒருபுறம் என்றால் உள்ளூரை தாண்ட மறுக்கும் மக்களின் மனோ நிலை அதற்கு மேல். 

சார் அவனன் இங்க சோத்துக்கே சிரமப்படும்போது எங்களுக்கு எதுக்கு டூர் என சொல்லுவோருக்கு என் பதில் உங்களை விடவும் மிக சராசரி வருமானம் வரும் கொரிய விவசாயிகள் தங்கள் வாழ் நாளில் உலகின் சில‌ நாடுகளையாவது பார்த்து விடுகிறார்கள். இது மட்டும் எப்படி சாத்தியம் ஆகிறது.  பிரச்சினை பொருளாதாரத்தில் அல்ல, நம் அடி மனதில் தேங்கி கிடக்கும் பிசு பிசுப்பான அறியாமையில் உள்ளது.

குறைந்த பட்சம் நாம் வாழும் நூறு கிலோமீட்டரில் இருக்கும் இடத்திற்கு வருடத்தில் ஒரு நாளாவது குடும்பத்துடன் சென்று தங்கி இருந்து சுற்றிப் பார்த்து விட்டு வருகிறோமா. அப்படி போய் இருந்தால் இன்றைக்கு நம்மிடம் இருக்கும் சுற்றுலா தளங்கள் மிக நல்ல நிலைமையில் இருந்திருக்கும். 

இன்றைக்கு வடக்கு அயர்லாந்தின் எல்லையில் உள்ள கடற்கரையோர‌ இடங்களுக்கு சுற்றுலா பேருந்து மூலம் சென்று வந்தேன். இதற்கான கட்டணம் 12.5 பவுண்டு,  இந்த பணத்திற்கு உள்ளூரில் இரண்டு வேலை சாப்பிடலாம். இதை விட ஆச்சரியம் இந்த பணத்திற்கு ஒரு நாள் முழுக்க 120 கிமீ மலையில் பயணித்து அந்த வண்டியின் ஓட்டுநரே ஒரு வழிகாட்டியாக எல்லா இடங்களையும் பற்றி விளக்கி சொல்கிறார். இதே போன்று சாதாரண கட்டணத்தில் ஏன் நம் அரசு செய்யக் கூடாது, அதற்கு பொது மக்களாகிய நாம் ஒத்துழைப்பு கொடுத்தால் நிச்சயம் நடத்தி காட்டலாம். நீங்கள் கோட்டை விடுகிற இந்த‌ இடத்தில்தான் கோவிலை சுற்றி காட்டும் பேக்கேஜ் டீம்கள் உங்களை ஆக்கிரமித்து கொள்கிறார்கள். கோவிலுக்கு போவது உங்கள் தனிப்பட்ட உரிமை அதனை குறை சொல்லவில்லை. ஆனால் அதே சமயம் நம் கலாச்சார பண்பாட்டு இடங்களையும் கொஞ்சம் கவனியுங்கள். 

நான் சென்ற பேருந்தில் உலகின் மிக பிரபலமான தொடர் நாடகமான கேம் ஆப் த்ரோன்சு (Game of Thrones) படப்பிடிப்பு நடந்த இடங்களையும் சுற்றி காண்பிக்கிறார்கள். இந்த நாடகத்தின் ரசிகர்கள் பெருமளவு இந்த சுற்றுலாவில் கலந்து கொள்கிறார்கள். இது வணிக செயல்பாடாக இருந்தாலும் அற்புதமான கடலோர பகுதிகளையும், மலையினையும் மக்கள் காலாற‌ நடந்து ரசிக்கிறார்கள். தங்கள் நிலப் பரப்பினை தெரிந்து கொள்கிறார்கள். ஒப்பீட்டளவில் குணா படத்தில் வரும் குகை தற்போது கொடைக்கானலில் மூடப்பட்டு இருந்தாலும் இன்னும் மக்கள் அங்கு சென்று பார்க்கிறார்கள். காரணம் திரையில் பார்த்த இடங்களை நேரில் பார்ப்பது என்பது ஒரு ஈர்ப்பு. அதே போல் வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த இடங்களை நேரில் சென்று பார்ப்பது, அதனைப் பற்றி அறிந்து கொள்வதில் மட்டும் நமக்கு இந்த ஈர்ப்பு இல்லை ஏன்.  

நாசாவிற்கு தங்களது பள்ளி குழந்தைகளை விளம்பரத்திற்காக அவர்கள் பணத்திலேயே அழைத்து செல்லும் தனியார் பள்ளிகள் நம் ஊரில் இருக்கும் பல வரலாற்று தளங்களை ஒரு போதும் அவர்களுக்கு அழைத்து செல்வதில்லை. இந்த மடமையினை பெற்றோரும் சேர்ந்து ஊக்குவிப்பதுதான் மிகப் பெரும் கொடுமை. தன்னை சுற்றி இருக்கும் பூகோள இடங்களை பற்றிய அறிவை வளர்த்து கொள்வதில் பெற்றோருக்கும் விருப்பம் இல்லாதது மிகவும் வருத்தமாக உள்ளது.தமிழகத்தில் பல இடங்களில் உள்ள அறிவியல் பூங்கா, பூகோள அரங்கம் உள்ளிட்ட‌ அடிப்படை அறிவியலை வளர்க்கும் இடங்கள் கேட்பாரற்று நோஞ்சான் குழந்தையாக உள்ளது. 

சரி எதார்த்த பிரச்சினையில் இருந்தே இதற்கான ஒப்புமையினை சொல்கிறேன். விழாக் காலங்களில்  சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளில் ஏன் ஐந்து மடங்கு கட்டணம் வசூலிக்க படுகிறது ஏன் என ஒரு முறையாவது யோசித்து இருக்கிறீர்களா.  தனியார் நிறுவனங்கள் அரசின் உயர் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு கையூட்டு கொடுத்து மக்கள் பணத்தினை கொள்ளையடிப்பது என்பது ஒரு முக்கிய காரணியாக இருந்தாலும் மற்றொரு புறம் பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து உட்கட்டமைப்பினை நாம் வணிக ரீதியில் சாதாரண கட்டணத்தில் மக்கள் புழங்கும் வண்ணம் இன்னும் எளிமை படுத்தாமல் இருப்பது ஒரு பெரும் குறை என்றே சொல்லலாம்.


காரணம் எளிது. நீங்கள் சுற்றுலாவை ஒரு அறிவார்ந்த தளத்திலோ அல்லது வெளியில் சென்று உளச்சோர்வை நீக்குவதற்கோ தயார் ஆகி விட்டால் இது சார்ந்த பல நிறுவனங்கள் பேருந்து உள்ளிட்ட கட்டமைப்பிற்கு முதலீடு செய்யும்.  இது லாபகரமான தொழில் என்ற நிலை வரும் போது எல்லா நகரங்களிலும் சுற்றுலா பேருந்துகள் பெருகும் வாய்ப்பு உள்ளது. பிறகு சென்னையில் இருந்து விழாக்காலத்தில் மட்டும் அல்ல எப்போது சென்றாலும் கட்டணம் ஒரே சீராக   இருக்க வாய்ப்புண்டு.

உள்ளூர் பஞ்சாயத்துகள் அருகில் உள்ள பெரு நகரங்களில் இருந்து பேருந்துகளை தங்கள் பகுதியில் உள்ள சுற்றுலா தளங்களை இனம் கண்டு அந்த பகுதிகளுக்கு இயக்கலாம். அருகில் உள்ள பஞ்சாயத்துகளை மாவட்ட ரீதியில் இணைத்து பரிசோதனை முறையில் இதில் உள்ள சிக்கல்களை களைய முயற்சிக்கலாம்.

மக்கள் பெருமளவு சுற்றுலா தளங்களை பயன்படுத்துவதால் கழிப்பறை போன்ற வசதிகள் மேம்படவும் வாய்ப்புள்ளது. இதெல்லாம் கற்பனையில்தான் நடக்கும் என்று கருதினால் சூப்பர் சிங்கரையோ, கிரிக்கெட் மேட்சையோ தொலைகாட்சியில் சத்தத்தினை அதிகமாக வைத்து கேட்டு விட்டு இந்த பதிவை கடக்கவும். ஏனெனில் நீங்கள் ஒரு போதும் கற்பனையில் பார்த்திராத லட்சக் கணக்கான வீடு ஒரு  போட்டி மூலம் உங்களில் ஒருவருக்கு கிடைக்கும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பும் போது நீங்கள் இதனை தாராளமாக செயல்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு முதலில் உங்கள் உள்ளூர், மாவட்ட, மாநில வரைபடங்களை கற்றுக் கொடுங்கள். அவர்களாவது உங்களைப் போல் கூட்டுக்குள் அடையாமல் உலகை பறந்து சுற்றி வரட்டும்.

சுற்றுலா துறையினை மேம்படுத்துவது அரசின் பொறுப்பு மட்டுமல்ல அதில் நம் பங்கும் மிக முக்கியமானது.
Carrick-a-Rede,Northern Ireland.

Carrick-a-Rede,Northern Ireland.

Carrick-a-Rede,Northern Ireland.

Carrick-a-Rede,Northern Ireland.

Carrick-a-Rede, hanging bridge, Northern Ireland.

Carrick-a-Rede,Northern Ireland.

Carrick-a-Rede,Northern Ireland.

Shuttle bus at Giant's cause way, Northern Ireland

Carrickfergus castle, Northern Ireland

Carrickfergus castle, Northern IrelandGiant's cause way, Northern Ireland

Giant's cause way, Northern Ireland

Dark Edges, Northern Ierland


Tuesday, 15 March 2016


நான் பார்த்ததில் ரசித்தது.
பெல்பாஸ்டு நகரின் சாலையின் ஒரு சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த‌ நூற்றாண்டுகளை கடந்த புகைப்படம். 

பெல்பாஸ்டு நகரிம் தொனெகல் சாலையில் உள்ள கார்னெகி (Carnegie Library) நூலகத்தின் வாயிலில் கதைகேட்கும் நிகழ்வுக்காக காத்திருக்கும் குழந்தை.

இங்குள்ள நூலகங்கள், அருங்காட்சியகங்களில் ஓவ்வொரு வாரமும் குழந்தைகளுக்கான கதை சொல்லும் நிகழ்ச்சிகள் (story time) நடைபெறுகிறது.
நம் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி தந்த பாட்டிகள் இப்போது இல்லை. குழந்தைகளின் கற்பனை திறனை விஸ்தரிக்கும் கதை சொல்லிகளையும், கதை சொல்லல் கலையையும் இனியாவது ஊக்குவிப்போம்.

Sunday, 13 March 2016

திண்ணைகள் நிறைந்த வீதி -1


வெள்ளை வேட்டியும், பூ போட்ட சட்டையும் நிறைந்த மனிதர்கள் வாழ்ந்த என் கிராமத்தில் அப்போது இன்டி சுசுகி வண்டியில் கூலிங் கண்ணாடி சகிதமாக நேர்த்தியான கட்டம் போட்ட சட்டையும், படிய சீவி ஒரு சினிமா நடிகரை போன்ற ஒரு தோரணையில்தான் அந்த இளைஞரை பார்த்திருந்தேன். அப்போது நான் நான்காவது அல்லது ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். டிகிரி படிப்பு அரிதாக படித்திருந்த என் கிராமத்தில் அப்போது டிகிரி படிப்பை முடிந்திருந்த அந்த மனிதர் எங்கள் பகுதியின் செல்ல பிள்ளை.நாங்கள் வசித்த பகுதியில் பெருந்தன வீட்டில் பிறந்த கடைக் குட்டி. வேலை நிமித்தம் அவர் திருப்பூருக்கு குடி பெயர்ந்து இருந்ததால் நாளும், கிழமைக்கு அரிதாகத்தான் ஊருக்கு வருவார். அவர் என் உறவினர் வட்டத்தில் இருந்தாலும் நெருங்கி பேசும் அளவிற்கு அவ்வளவான சூழலும் வயதும் அப்போது இல்லை. ஆனால் தெருவில் உள்ள மற்ற உறவினர்களோடு பேசும் போது வான்டடாக அவர் வண்டிக்கு அருகில் நின்று அவரது பைக்கை தொட்டு பார்த்து சிலாகிப்பேன். பெரும்பாலும் கிழக்கு தெருவில் இருக்கும் கல்லு பெட்டியார் தாத்தா கடையின் வாசலில் தான் அவரது நண்பர்களுடனான சம்பாசனை இருக்கும். எங்களிடம் சில்லுண்டியாக வம்பிழுக்கும் மாமன் மச்சான்களை எல்லாம் ஓட விட்டு தெறிக்க விடுவார். நான் பார்த்து பயந்த ஆட்கள் எல்லாம் இவரை கண்டால் தெறிக்கிறார்களே என்பது அவர் மேல் கூடுதலாக‌ ஒரு ஈர்ப்பை தந்தது. அப்போதைய கால கட்டத்தில் சொற்பமான புல்லட்டும், லூனா, டிவிஸ் 50 வண்டிகளுக்கு இடையில் அவரது இண்டி சுசுகி வண்டிக்கு பெரிய கெத்தும் இருந்தது. சொல்லப் போனால் ஒரு சினிமா கதாநாயகனுக்கான தோற்றத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் மீதாக வழமையான ஒரு ஈர்ப்பு அப்போது என் பகுதியில் இருந்த பதின்ம வயது பெண்கள் உட்பட பலருக்கும் இருந்ததை ஒரு வாராய் ஊகிக்க முடிந்தது. எங்கள் ஊரில் இருக்கும் ஒரே அவஸ்தை தெருவின் எல்லா வீடுககளில் இருந்து ஒரிரண்டு நல விசாரிப்புகளையாவது கடந்துதான் செல்லத்தான் முடியும். சுற்றிலும் நெருக்கமான உறவுகள், ஒருவர் வீடு விட்டாலும் கோபித்து கொள்வார்கள். கிராமத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே வாய்க்கும் இன்ப அவஸ்தை அது. அதே அவஸ்தையைத்தான்அவர் ஊருக்கு வரும் போதெல்லாம் கடந்து இருக்க கூடும் இருக்கும் என இப்போது என்னால் உணர முடிகிறது. அவசர நேரத்தில் வந்தாலும் வண்டியில் இருந்து கீழே இறங்காமல் உட்கார்ந்த படியே எல்லா உறவினர் வீட்டின் வாசலில் நின்றபடியே ஒரு ஆரன் அடித்து ஹலோ சொல்லி விட்டு கடந்து விடுவார். அவருக்கு அத்தை முறையில் உள்ளவர்கள் எல்லாம் வாஞ்சையாய் அவரை கன்னத்தை பிடித்து நெட்டி முறிப்பார்கள். என்னதான் ரத்த உறவுகளாக இருந்தாலும் கண்ணுக்கு தெரியாத பிரச்சினைகளை பூதமாக்கி அங்கும் பங்காளிகளோடு முறைத்து கொண்டு போகும் என் கிராமத்து தெரு ஆட்கள் பேதமின்றி இவரிடம் எல்லோரும் எப்படி பிரியமாக இருக்கிறார்கள் என ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுவேன். கொஞ்சம் நான் வளர்ந்தவுடன் ஊருக்கு வரும் போது எப்போதாவது பார்த்தால் புன்னகைப்பார். பெரிய அளவில் பேசிக் கொண்டது இல்லை. அப்போதும் அவரது வண்டியும், ப்ராண்டட் சட்டையும், சிகரெட்டை அநாயசமாக ஊதுவதுமான‌ அவரது மேனரிசம் என்னை எப்போதும் விட்டு விலகவே இல்லை. காலம் ஆடிய பகடை ஆட்டத்தில் யார்தான் தப்பிக்க கூடும். வியாபாரத்தில் நட்டம், நண்பர்கள் சேர்க்கை என காலம் அவரை நிறையவே புரட்டி போட்டிருந்தன. ஒரு கட்டத்தில் பெரும் சரிவில் அவர் இருக்கிறார் என தெருவில் பேசும் பேச்சுகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.ஆனாலும் ஊருக்கு அவர் வரும் போது அவரது கெத்து ஒரு போதும் குறைந்ததே இல்லை. நாகரீகமான உரையாடலோடு கடந்து போவதுமான அந்த மனிதரை ஒரு பத்து வருடத்திற்கு முன்பு புதுக்கோட்டையில் நடந்த பிரபு அண்ணாவின் திருமணத்தில் விடுதியில் ஒரே அறையில் இருந்ததால் சந்தித்து பேச முடிந்தது. இப்போது நானும் முனைவர் ஆராய்ச்சியில் இருந்தேன். அதானால் அவருடன் தயக்கமின்றி பேச முடிந்தது. உங்கள் ப்ராண்டடு சட்டை, பேண்டும், இன்டி சுசுகி வண்டியும் என் பால்ய காலத்தில் என்னை பெரிதும் ஈர்த்தவை என்று அவரிடம் சொன்னபோது பெரிதும் சிலாகித்தார். ஆச்சரியமாக என்னை பார்த்து விட்டு, சாரி தம்பி உன்னிடம் அதிகம் பேசியது இல்லை என்றாலும் உன்னை பற்றி நம் உறவினர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன் என்றார். ஒரு மணி நேரமாக அவரோடு பேசிக் கொண்டிருந்தாலும் தலை முறையினை கடந்து பேசத் தெரிந்த அவரோடு இயல்பாக என்னால் கடக்க முடிந்தது. திருமணத்திற்கு அவசியம் நீ எனக்கு பத்திரிக்கை அனுப்ப வேண்டும் என்று அன்பு கோரிக்கை வைத்தார். எனது காதல் திருமணத்தின் அவசரத்தில் விடுபட்ட பல உறவுகள் வட்டத்தில் அவரும் இருந்தார். ஆனால் நல்ல ப்ராண்டட் சட்டைகளை ஒவ்வொரு முறை எடுக்கும் போது அவரது நேர்த்தியான உடை உடுத்தும் முறை எப்போதும் ஞாபக இடுக்குகளில் இருந்து கொண்டே இருக்கும். சரி ஊருக்கு போகும் போது அவரை பார்த்தால் ஒரு சாரி சொல்லி விடலாம் என தோன்றும். ஆனால் நேற்று இரவு செருமனியில் இருக்கும் விஜய் மாப்பிள்ளை ஊரில் இருக்கும் மனோகர் மாமா மாரடைப்பால் தவறி விட்டார் என்று முகநூலில் குறுஞ்செய்தி அனுப்பி இருந்ததை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. அவரது மூத்த அண்ணன் என் பிரியத்துக்குரிய இளங்கோ பெரியப்பாவும் தவறி ஒரு ஆண்டுதான் இருக்கும் என நினைக்கிறேன். சற்றேறக்குறைய 50 வயதின் தொடக்கத்தில் இருக்கும் மூன்று பெண் பிள்ளைகளின் தகப்பனாக அவரது மரணத்தினை அவ்வளவு எளிதாக கடக்க முடியவில்லை. வாழ்ந்த மனிதர்களை காலம் பொருளாதார ரீதியில் வீழ்த்தும் போது அதன் தீராத வலியில், தன் இருப்பியலை தக்க வைத்து கொள்ளவும் பழைய வாழ்க்கையில் இருந்து மீள முடியாமல் பல்லில் சிக்கி கொண்ட கரும்பு சக்கையை போல அவஸ்தையுறும் பல‌ மனிதர்களை பார்த்திருக்கிறேன். அந்த வரிசையில் மனோகர் சித்தப்பாவும் ஒருவர். அவரது தனிப்பட்ட குணாதிசயங்களை பற்றி எழுதுவதை நான் நாகரீகமாக தவிர்க்கவே விரும்புகிறேன். என்னளவில் அவரை ஒரு ஹீரோவாகவே பார்த்திருக்கிறேன். அதுதான் என்னை எழுத தூண்டியது. நம்மையும் அறியாமல் நம் உடல் மொழியோ, பேச்சோ, எழுத்தோ நம்மை சுற்றி இருப்பவர்களை ஈர்க்கும். அந்த ஈர்ப்பின் ஒரு புள்ளியாகவே அந்த மனிதரும் இருந்தார். என் கிராமம் இப்போது பெரிதும் மாறி விட்டது. பெரும்பாலான வீடுகளின் பிள்ளைகள் கார்ப்பரேட் ஊழியர்களாகி விட்டார்கள். புலம் பெயர்ந்து பல நாடுகளில் இருந்தாலும் என் கிராமத்தின் முதல் ஸ்டைலிசான மனிதாராகவே நான் பார்க்கிறேன். இன்டி சுசுகி வண்டியில் சுற்றி திருந்த, எல்லோருக்கும் பிரியமான ஒருவர் அதே தெருவை இறந்த சடலமாக கடந்து அவரது வீட்டில் படுக்க வைக்கப்படும் போது என்ன மாதிரியான உணர்வுகள் இருந்திருக்கும் என்பதை என்னால் எழுத முடியவில்லை. ஒரே வருத்தம்தான் எனக்கு. கடைசி வரை அவருக்கு ஒரு சாரி சொல்ல முடியாமலேயே போய் விட்டது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.Monday, 7 March 2016

உலக மகளிர் தினம் (March-8, International Women Day)


சாலையோர நடைபாதைகளில் வைக்கப்படும் சிலைகள் அழகியலோடு ஒரு தத்துவத்தையோ அல்லது கதையோ சொல்வது போல் இருக்கும். அதற்காகவே பொறுமையாக இந்த சிலைகளை நின்று தரிசனம் செய்வேன்.

அன்றைய நாளில் வழக்கமான வார இறுதிக்காக ஊர் சுற்றும் வேலையில்தான் அந்த சிலையினை பார்த்தேன். 

உழைத்த‌ களைப்பில்லாமல், உறுதியோடு நிற்கும் ஆகிருதியான இரு பெண்களின் உருவம்  அது.  ஒரு பெண்ணின் சிலையில் மார்போடு பதிக்கப்பட்ட பால் புட்டி, குழந்தைக்கு பாலூட்ட கூட நேரமில்லாமல் வேலை நிமித்தம் பரபரப்போடு ஓடித் திரியும் நம் ஊர் தாய்மார்களை நினைவூட்டுபவை.  மற்றொரு பெண்ணின் உடலில் கழுத்தில் தொங்கவிடப்பட்ட தட்டச்சு இயந்திரம், தொலைபேசி உள்ளிட்ட இயந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இது கீழ் மட்ட அளவில் பணிபுரியும் பெண்கள் எவ்வாறு பணிக்கு நிகரான ஊதியம் வழங்கப்படாமல் சுரண்டப்படுகிறார்கள் என்பது பற்றிய புள்ளி விபர தகவகளோடு பதியப் பட்ட விபரங்கள் என இச்சிலை அதிகார வர்க்கத்தை, ஆணாதிக்க சமூகத்தினை நிறுத்தி கேள்வி கேட்க செய்பவை.  


பெண்களின் உழைப்பு சுரண்டலை நிர்வாணப்படுத்துவதாய் நிற்கும் இந்த சிலை பெல்பாஸ்டு நகரில் கிரேட் விக்டோரியா தெருவில் யுரோபா விடுதி அருகில் உள்ள வணிக வளாகத்தின் வாயிலில் வைக்கப்பட்டுள்ளது. இச்சிலையினை லோயிசு வால்சு (Louise Walsh)  என்பார் 1992 ஆம் ஆண்டு வடிவமைத்துள்ளார்.  இச்சிலைக்கு  முகம் தெரியாத பெண் தொழிலாளிகளின் நினைவு சின்னம் (Monument to the Unknown Woman Worker)  என பெயரிட்டுள்ளனர்.

தங்கள் உழைப்பால், சீரிய சிந்தனையால் இச்சமூகத்தினை தாங்கும் எல்லா மகளிருக்கும் எமது இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

பெல்பாஸ்டு நகரில் கிரேட் விக்டோரியா தெருவில் உள்ள  முகம் தெரியாத பெண் தொழிலாளிகளின் நினைவு சின்னம் (Monument to the Unknown Woman Worker) .

பெல்பாஸ்டு நகரில் கிரேட் விக்டோரியா தெருவில் உள்ள  முகம் தெரியாத பெண் தொழிலாளிகளின் நினைவு சின்னம் (Monument to the Unknown Woman Worker) .

பெல்பாஸ்டு நகரில் கிரேட் விக்டோரியா தெருவில் உள்ள  முகம் தெரியாத பெண் தொழிலாளிகளின் நினைவு சின்னம் (Monument to the Unknown Woman Worker) .பெல்பாஸ்டு நகரில் கிரேட் விக்டோரியா தெருவில் உள்ள  முகம் தெரியாத பெண் தொழிலாளிகளின் நினைவு சின்னம் (Monument to the Unknown Woman Worker) .Sunday, 6 March 2016


வேல்சு தேசத்தின் நாட்டுபுற நடனம் (Wales Folk Dance)


பிரித்தானியாவின் வேல்சு (Wales) தேசம் மிகப் பெரும் பாரம்பரிய மொழி வளமும், கலை வளமும் மிக்கது. 1500 களின் பின் பகுதியில் இங்கிலாந்தின் திருச்சபை வழிபாடுகளுக்காக  கொண்டு வரப்பட்ட சீர்மை சட்டத்தின் (Uniformity Act) படி, வேல்சு தேசத்தில் வாழ்ந்த மக்களை உறுதி செய்யப்படாதவர்கள் (Non-conformist) என வரையறுத்து அவர்களின் நாட்டுபுற பாடல், நடனங்களை தடை செய்தது.

பின்னர் 1700 களில்  வேல்சு தேசத்தின் நாட்டுபுற நடனக் கலையானது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து மற்று இதர ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டும் அங்கிருந்த கலை வடிவங்களில் உள்வாங்கியும் அதன் தொன்ம வடிவங்களில் சற்றே மாற்றம் பெற்றது. அவற்றில் ஒரு சில‌வையாக‌ காண கிடைத்த‌ மெய்லியோனன் (Meillionen) , அபெர்ஜென்னி (Abergenni),போன்ற வேல்சு நடனங்கள் அப்போது இருந்த ஒரு சில வேல்சு கலை ஆர்வலர்களால் மீட்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன‌. 

19 ஆம் நூற்றாண்டின் தொடக்க கால கட்டத்தில் முற்றிலும் வேல்சு நடனங்கள் அழிய தொடங்கிய போது 1949 ஆம் ஆண்டு இவற்றினை முற்றிலும் மீட்டெடுக்க வேல்சு நாட்டுப் புற நடன கழகம் (Wales Folk Dance Society) தொடங்கப்பட்டது. தற்போது வேல்சு தேசத்தில் உள்ள பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் வேல்சு இளைஞர்கள் குழுவின் (Urdd Gobaith Cymru) வாயிலாக இக்கலைகள் தற்போது பயிற்றுவிக்கப்படுகிறது.

வேல்சு தேசத்தில் தலை நகராக உள்ள கார்டிப் நகரில் வருடந்தோறும்  புனித யோவானின் மாலை நேர விழாவில் நடைபெறும்  வேல்சு நாட்டுப்புற நடனப் போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது.

புனித தாவீது (St David) நாளுக்கான விழாக் கொண்டாட்டங்களில் ஒரு நிகழ்வாக சுவான்சி நகரில் உள்ள பள்ளி குழந்தைகள் வேல்சு தேசத்தின் அதிகார சின்னமான டிராகன் கொடிகளை ஏந்திக் கொண்டு இசையமைத்தபடி நகரை சுற்றி வந்தனர். இந்நிகழ்வினை சுவான்சி நகரில் உள்ள வாட்டர்பிரண்ட் அருங்காட்சியகத்தில் நிறைவு செய்தனர். இந்நிறைவு விழாவில் வேல்சு நாட்டுப்புற நடனக் கழகத்தின் சார்பில் நாட்டுப்புற நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் உள்ளூர் பொது மக்களும் குழந்தைகளும் கலந்து கொள்ளும் வண்ணம் உற்சாகப்படுத்தப்பட்டனர். புல்லாங்குழல், ஆர்மோனியம், மற்றும்  வயலின் பின்னனி இசையில்  கை கோர்த்தபடி ஜோடியாக ஆடும் இந்த நாட்டுப் புற நடனம் எவரையும் ஈர்க்க வல்லது. 

வேல்சு நாட்டுப் புற நடன கழகத்தின் துணைத் தலைவரான டாம் வில்லியம்ஸ்  தங்களது நாட்டுப்புற‌ அடவுகளையும், உத்திகளையும் விழாவில் பங்கேற்றவர்களுக்கு தனது குழுவின் மூலம் பயிற்று வித்து அவர்களையும் நடனமாட வைத்தது ஆச்சரியப்படுத்தியது. 

கலைகள் அடக்குமுறைகளால் ஒடுக்கப்படும்போது, அழியும் போது எழுந்து நிற்க வேண்டும் என்ற படிப்பினையினை வேல்சு நாட்டுப் புற நடனக் கழகம் நமக்கு கற்பிக்கிறது. தங்கள் கலைகளை இலவசமாகவே கற்று தருகிறார்கள். மேலும் பொது மக்களை நாட்டுபுற நடனக் கலைகளின் பால் ஈர்க்கும் வண்ணம் சுவான்சி நகரின் மையப் பகுதியில் மக்கள் கூடும் இடங்களில் இசையோடு கூடிய நடனத்தினை நிகழ்த்தி காட்டுகிறார்கள்.

நம்மிடம் இருந்த நாட்டுப்புற கலை வடிவங்களில் நிகழ்த்து கலைகள் யாவும் அழிவின் விழிம்பில் உள்ளது. இவைகளை மீட்டெடுக்க வேண்டுமெனில் தற்போது வறுமையில் வாடும் நிகழ்த்து கலைஞர்களை மீட்டெடுத்து அவர்கள் மூலம் நம் வருங்கால தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும்.

வேல்சு தேச நாட்டுப்புற நடனத்தின் காணொளியினை கீழ்கண்ட சுட்டியில் காணலாம்.


வேல்சு நாட்டுப்புற இசை கலைஞர்களின் இசையோடு சேர்ந்த நடன நிகழ்ச்சி

வேல்சு நாட்டுப்புற இசை கலைஞர்களின் இசையோடு சேர்ந்த நடன நிகழ்ச்சி

வேல்சு நாட்டுப்புற இசை கலைஞர்களின் இசையோடு சேர்ந்த நடன நிகழ்ச்சி

வேல்சு நாட்டுப்புற இசை கலைஞர்களின் இசையோடு சேர்ந்த நடன நிகழ்ச்சி

வேல்சு நாட்டுப்புற இசை கலைஞர்களின் இசையோடு சேர்ந்த நடன நிகழ்ச்சி

வேல்சு நாட்டுப்புற இசை கலைஞர்களின் இசையோடு சேர்ந்த நடன நிகழ்ச்சி

வேல்சு நாட்டுப்புற இசை கலைஞர்களின் இசையோடு சேர்ந்த நடன நிகழ்ச்சி

வேல்சு நாட்டுப்புற இசை கலைஞர்களின் இசையோடு சேர்ந்த நடன நிகழ்ச்சி

  வேல்சு நாட்டுப்புற இசை கலைஞர்களின் இசையோடு சேர்ந்த நடன நிகழ்ச்சி

வேல்சு தேசத்தின் அதிகாரபூர்வ டிராகன் சின்னம்


குழந்தைகளை இசையமைக்க ஊக்குவிக்கும் வேல்சு நாட்டுப்புற இசை கலைஞர்

வேல்சு நாட்டுப்புற நடனக் கழகத்தின் துணை தலைவர் டாம் வில்லியம்ஸ்

வேல்சு நாட்டுபுற நடன கலைஞர்கள்

வேல்சு நாட்டுபுற நடன கலைஞர்கள்

வேல்சு நாட்டுபுற நடன கலைஞர்கள்

வேல்சு நாட்டுபுற நடன கலைஞர்கள்

வேல்சு நாட்டுபுற நடன கலைஞர்கள்

வேல்சு நாட்டுபுற நடன கலைஞர்கள்

வேல்சு நாட்டுபுற நடன கலைஞர்கள்