Monday, 28 March 2016


கிராமப்புற அரசு பள்ளியின்  கணிப்பொறி கனவுகள் 

பெருவாரியான‌ மாணவர்கள் கணிப்பொறி அல்லாத‌ துறையில் உயர் அறிவியல் மற்றும் நுட்ப‌ கல்வி பயின்றாலும் பின்னாளில் கணிப்பொறி சார்ந்த வேலை வாய்ப்பை நோக்கியே ஒரு சமூகம் திரும்பி இருக்கும் அதிசயத்தையே இப்போது பார்க்க முடிகிறது. கணிப்பொறி துறை சார் வேலை வாய்ப்பு என்பது  மென்பொருள் துறையில் மட்டுமில்லாமல்   அறிவியல் உயர் ஆராய்ச்சி நுட்ப துறையிலும்   அதன் தேவை இன்றியமையாததாகி விட்டது.


இதன் நீட்சியாக‌ கடந்த பதினைந்து ஆண்டுகளில் பள்ளி கல்வியில் வெகுவான மாற்றங்கள் வரத்துவங்கி விட்டன.  துவக்கத்தில் கணிப்பொறி சார்ந்த கல்வி என்பது 1990 களுக்கு பின்னர் தமிழ‌கத்தில் உள்ள உயர்நிலை பள்ளிகளில் ஒரு சில இடங்களில் மெதுவாக அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் தற்போது துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு எல்லா இடங்களிலும் கொண்டு வரப்பட்டுள்ளது.

வழக்கமான பாடத்திட்டம் என்பதோடு இல்லாமல் கணிப்பொறியில் இப்போது சுட்டிகளுக்கான விளையாட்டு, திறன் சார் போட்டிகள், நுண் அறிவு பயிற்சி வகுப்புகள், மற்றும் காணொளியின் மூலம் பொது அறிவினை வளர்த்தல் என கணிப்பொறியினை கையாள குழந்தைகளுக்கு கற்றுத் தருவது என்பது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.

ஆனால் இது போன்ற அடுத்த கட்ட நகர்விற்கான பணியில் உள்ள குறைபாடு என்னவெனில் நகர்ப்புறத்தில் பயிலும் பள்ளி  மாணவர்களுக்கு கிடைக்கும் கணிப்பொறி ஆய்வக உட்கட்டமைப்பு வசதியைப்போல் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்னும் முழு வீச்சில் கிடைக்கவில்லை என்பதே.

தமிழக அரசு கல்வித் துறை கணிப்பொறி சார்ந்து எல்லா அரசு பள்ளிகளுக்கும் ஓரளவிற்கு பொருள் உதவி செய்து வருகிறது. இருப்பினும் மாணவர்கள் பயில வகுப்பறைகளே இன்னும் போதாத நிலையில் கணிப்பொறி ஆய்வகம் என்பது இன்னும் தீராத கனவாகத்தான் உள்ளது. அதனால் அரசு வழங்கும் திறன் சார் எலக்ரானிக் கருவிகள் யாவும் ஆசிரியர்கள் அல்லது தலைமை ஆசிரியர்களின் மேசைகள், நாற்காலிகளில் வைத்து சொல்லி தரப்படும் அவலங்களை பரவலாக பார்க்க முடிகிறது. இது போக‌ மழை வந்து விட்டால் ஓடி ஒளியவே இடம் இல்லாத ஒழுகும் கட்டிடங்கள் என்ற சூழலில் கணிப்பொறி போன்ற பொருட்களை பாதுகாத்து வைப்பது என்பது மேலும் சவாலான விசயம். 

இது போன்ற ஒரு சூழலில் தான் திருவண்ணாமலை மாவட்டத்தின் போளூர் வட்டத்தில் உள்ள புதுக்கரிகாத்தூர் அரசு தொடக்கப்பள்ளியினை முன் மாதிரி பள்ளிக்கான உட்கட்டமைப்பினை மாற்ற முழுமதி அறக்கட்டளை களத்தில் இறங்கியது. இது வரை பள்ளிக்கு தேவையான நூலகம், குடிநீர் வசதி, கழிப்பறை, குழந்தைகள் அமர வட்ட மேசை, நாற்காலி, கட்டிடத்தை பழுது பார்த்து வண்ணம் பூசுதல் போன்ற பணிகள் நிறைவேறி உள்ளது.

புதுகரிகாத்தூர் கிராமத்தில் பயன்பாட்டில் இல்லாத தொலைகாட்சி அறையினை பள்ளியின் கணிப்பொறி அறையாக பயன்படுத்தி கொள்ள ஊர் பொதுமக்களும் பஞ்சாயத்தும் கூடி ஒருமனதாக முடிவெடுத்து அவ்வறையினை நம்மிடம் தந்தனர். தற்போது இந்த அறையினை பழுது பார்த்து வண்ணம் பூசி சன்னல், தரைத்தளம், கதவு, கணிப்பொறி வைக்க தேவையான மரப் பெஞ்சுகள் போன்றவற்றினை மதுரை டி.வி.எஸ் (T.V.S) நிறுவனத்துடன் இணைந்து முழுமதி அறக்கட்டளை செய்து கொடுத்துள்ளது.

இந்த‌ மீள்கட்டமைப்பு திட்டத்திற்கு தேவையான நிதியில் (22,000 Rs) இருபது சதவிகிதத்தினை முழுமதி அறக்கட்டளையும், மீதி என்பது சதவிகித தொகை என எல்லா பொறுப்பையும் டி.வி.எஸ் நிறுவனமே ஏற்று ஒரு வாரத்திற்குள் கணிப்பொறி அறை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இனி புதுகரிகாத்தூர் கிராமத்தில் இருக்கும் குழந்தைகளின் கணிப்பொறி கனவு நனவாவதில் எமக்கும் பெருமகிழ்ச்சியே.

தற்போது இப்பள்ளிக்கு தேவையான சுற்றுச் சுவர் 2,96,000 ரூபாய் மதிப்பீட்டில் செய்யப்பட உள்ளது. மேலும் தமிழக அரசு பள்ளிக் கல்வி துறையின் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம், திறன் வகுப்பு எலக்ரானிக் கருவிகள், கணிப்பொறி, சோலார் மின் வசதி போன்றவற்றினை வரும் கல்வியாண்டில் செய்ய உள்ளோம். 

இத்தையக பெரும் கல்விப்பணியில் எங்களுக்கு தோள் கொடுத்த‌ டிவிஎஸ் நிறுவனத்திற்கு முழுமதி அறக்கட்டளையின் நன்றிகளும் பாராட்டுகளும்.

வீழ்ச்சியில் இருக்கும் அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பினை சீரமைப்போம் வாருங்கள் நண்பர்களே.   

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், 
ஆலயம் பதினாயிரம் நாட்டல், 
பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி 
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.
-- மகாகவி பாரதியார்

குறிப்பு:

நண்பர்களே, டிவிஎஸ் நிறுவனத்தினர் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல பள்ளிகளுக்கு இது போன்ற கட்டிட வசதிகளை செய்து தந்துள்ளனர். வெளிநாடுகளில், தமிழகத்தில் இருக்கும் அறக்கட்டளைகள் உங்களுக்கு தெரிந்த அல்லது அருகில் இருக்கும் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பினை டிவிஎஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து தாராளமாக முன்னெடுக்கலாம். நீங்கள் தரும் பகுதி நிதியோடு அவர்கள் இப்பணியினை செய்து தர தயாராய் உள்ளனர்.

அவ்வாறு செய்ய நினைப்பவர்களுக்கு முழுமதி அறக்கட்டளை தமது செயல் திட்ட அனுபவங்களை பகிர தயாராய உள்ளது.

எமது மின்னஞ்சல் முகவரி : muzhumathi.org@gmail.com 

(முழுமதி அறக்கட்டளை சார்பாக)
புதுகரிகாத்தூர் அரசு துவக்கப்பள்ளி, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம். புதிய கணிணி அறை.

புதுகரிகாத்தூர் அரசு துவக்கப்பள்ளி, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம். புதிய கணிணி அறை.

புதுகரிகாத்தூர் அரசு துவக்கப்பள்ளி, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம். புதிய கணிணி அறை.

புதுகரிகாத்தூர் அரசு துவக்கப்பள்ளி, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம். புதிய கணிணி அறை.

புதுகரிகாத்தூர் அரசு துவக்கப்பள்ளி, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம். புதிய கணிணி அறை.











No comments:

Post a Comment