Saturday, 19 March 2016


வீட்டிற்கு வெளியே -கண்டுக் கொள்ளப்படாத நம் சுற்றுலா தலங்கள்


தமிழக சுற்றுலா துறையினை நம் பரப்பளவில் குறைவான கேரள அரசின் சுற்றுலா துறையினரோடு ஒப்பிட்டால் அவர்கள் எந்த அளவிற்கு திறன்பட இயங்குகிறார்கள் என்பது  நாம் கூர்ந்து கவனிக்கப் பட வேண்டிய ஒன்று. மனதை கவரும் விளம்பர உத்திகளோடு இணைய வசதிகளின் மூலம் கேரளாவின் அற்புதமான சுற்றுலா தளங்களை உலக அளவில் எடுத்து செல்கிறார்கள். இதன் தனித்த வருமானம் கேரள அரசிற்கு பெரும் உதவியாக உள்ளது.

நம் தமிழக அரசின் சுற்றுலா துறை ஏன் சுணங்கி உள்ளது. கல் தோன்றா மண் தோன்றா காலத்து என இன்னும் எத்தனை நாளைக்கு உட்கார்ந்த இடத்திலேயே அசையாமல் நீட்டி முழக்கி கொண்டிருக்க போகிறோம். எண்ணற்ற புனித தலங்கள், குடைவரை குகைகள், கடல் புறத்தில் இருக்கும் இயற்கை காட்சிகள், மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பல மலைத்தொடர்கள், குன்றுகள், வரலாற்று ரீதியில் பார்க்க வேண்டிய இடங்கள், என அடுக்கி கொண்டே போகலாம். அரசு மெத்தனம் ஒருபுறம் என்றால் உள்ளூரை தாண்ட மறுக்கும் மக்களின் மனோ நிலை அதற்கு மேல். 

சார் அவனன் இங்க சோத்துக்கே சிரமப்படும்போது எங்களுக்கு எதுக்கு டூர் என சொல்லுவோருக்கு என் பதில் உங்களை விடவும் மிக சராசரி வருமானம் வரும் கொரிய விவசாயிகள் தங்கள் வாழ் நாளில் உலகின் சில‌ நாடுகளையாவது பார்த்து விடுகிறார்கள். இது மட்டும் எப்படி சாத்தியம் ஆகிறது.  பிரச்சினை பொருளாதாரத்தில் அல்ல, நம் அடி மனதில் தேங்கி கிடக்கும் பிசு பிசுப்பான அறியாமையில் உள்ளது.

குறைந்த பட்சம் நாம் வாழும் நூறு கிலோமீட்டரில் இருக்கும் இடத்திற்கு வருடத்தில் ஒரு நாளாவது குடும்பத்துடன் சென்று தங்கி இருந்து சுற்றிப் பார்த்து விட்டு வருகிறோமா. அப்படி போய் இருந்தால் இன்றைக்கு நம்மிடம் இருக்கும் சுற்றுலா தளங்கள் மிக நல்ல நிலைமையில் இருந்திருக்கும். 

இன்றைக்கு வடக்கு அயர்லாந்தின் எல்லையில் உள்ள கடற்கரையோர‌ இடங்களுக்கு சுற்றுலா பேருந்து மூலம் சென்று வந்தேன். இதற்கான கட்டணம் 12.5 பவுண்டு,  இந்த பணத்திற்கு உள்ளூரில் இரண்டு வேலை சாப்பிடலாம். இதை விட ஆச்சரியம் இந்த பணத்திற்கு ஒரு நாள் முழுக்க 120 கிமீ மலையில் பயணித்து அந்த வண்டியின் ஓட்டுநரே ஒரு வழிகாட்டியாக எல்லா இடங்களையும் பற்றி விளக்கி சொல்கிறார். இதே போன்று சாதாரண கட்டணத்தில் ஏன் நம் அரசு செய்யக் கூடாது, அதற்கு பொது மக்களாகிய நாம் ஒத்துழைப்பு கொடுத்தால் நிச்சயம் நடத்தி காட்டலாம். நீங்கள் கோட்டை விடுகிற இந்த‌ இடத்தில்தான் கோவிலை சுற்றி காட்டும் பேக்கேஜ் டீம்கள் உங்களை ஆக்கிரமித்து கொள்கிறார்கள். கோவிலுக்கு போவது உங்கள் தனிப்பட்ட உரிமை அதனை குறை சொல்லவில்லை. ஆனால் அதே சமயம் நம் கலாச்சார பண்பாட்டு இடங்களையும் கொஞ்சம் கவனியுங்கள். 

நான் சென்ற பேருந்தில் உலகின் மிக பிரபலமான தொடர் நாடகமான கேம் ஆப் த்ரோன்சு (Game of Thrones) படப்பிடிப்பு நடந்த இடங்களையும் சுற்றி காண்பிக்கிறார்கள். இந்த நாடகத்தின் ரசிகர்கள் பெருமளவு இந்த சுற்றுலாவில் கலந்து கொள்கிறார்கள். இது வணிக செயல்பாடாக இருந்தாலும் அற்புதமான கடலோர பகுதிகளையும், மலையினையும் மக்கள் காலாற‌ நடந்து ரசிக்கிறார்கள். தங்கள் நிலப் பரப்பினை தெரிந்து கொள்கிறார்கள். ஒப்பீட்டளவில் குணா படத்தில் வரும் குகை தற்போது கொடைக்கானலில் மூடப்பட்டு இருந்தாலும் இன்னும் மக்கள் அங்கு சென்று பார்க்கிறார்கள். காரணம் திரையில் பார்த்த இடங்களை நேரில் பார்ப்பது என்பது ஒரு ஈர்ப்பு. அதே போல் வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த இடங்களை நேரில் சென்று பார்ப்பது, அதனைப் பற்றி அறிந்து கொள்வதில் மட்டும் நமக்கு இந்த ஈர்ப்பு இல்லை ஏன்.  

நாசாவிற்கு தங்களது பள்ளி குழந்தைகளை விளம்பரத்திற்காக அவர்கள் பணத்திலேயே அழைத்து செல்லும் தனியார் பள்ளிகள் நம் ஊரில் இருக்கும் பல வரலாற்று தளங்களை ஒரு போதும் அவர்களுக்கு அழைத்து செல்வதில்லை. இந்த மடமையினை பெற்றோரும் சேர்ந்து ஊக்குவிப்பதுதான் மிகப் பெரும் கொடுமை. தன்னை சுற்றி இருக்கும் பூகோள இடங்களை பற்றிய அறிவை வளர்த்து கொள்வதில் பெற்றோருக்கும் விருப்பம் இல்லாதது மிகவும் வருத்தமாக உள்ளது.தமிழகத்தில் பல இடங்களில் உள்ள அறிவியல் பூங்கா, பூகோள அரங்கம் உள்ளிட்ட‌ அடிப்படை அறிவியலை வளர்க்கும் இடங்கள் கேட்பாரற்று நோஞ்சான் குழந்தையாக உள்ளது. 

சரி எதார்த்த பிரச்சினையில் இருந்தே இதற்கான ஒப்புமையினை சொல்கிறேன். விழாக் காலங்களில்  சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளில் ஏன் ஐந்து மடங்கு கட்டணம் வசூலிக்க படுகிறது ஏன் என ஒரு முறையாவது யோசித்து இருக்கிறீர்களா.  தனியார் நிறுவனங்கள் அரசின் உயர் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு கையூட்டு கொடுத்து மக்கள் பணத்தினை கொள்ளையடிப்பது என்பது ஒரு முக்கிய காரணியாக இருந்தாலும் மற்றொரு புறம் பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து உட்கட்டமைப்பினை நாம் வணிக ரீதியில் சாதாரண கட்டணத்தில் மக்கள் புழங்கும் வண்ணம் இன்னும் எளிமை படுத்தாமல் இருப்பது ஒரு பெரும் குறை என்றே சொல்லலாம்.


காரணம் எளிது. நீங்கள் சுற்றுலாவை ஒரு அறிவார்ந்த தளத்திலோ அல்லது வெளியில் சென்று உளச்சோர்வை நீக்குவதற்கோ தயார் ஆகி விட்டால் இது சார்ந்த பல நிறுவனங்கள் பேருந்து உள்ளிட்ட கட்டமைப்பிற்கு முதலீடு செய்யும்.  இது லாபகரமான தொழில் என்ற நிலை வரும் போது எல்லா நகரங்களிலும் சுற்றுலா பேருந்துகள் பெருகும் வாய்ப்பு உள்ளது. பிறகு சென்னையில் இருந்து விழாக்காலத்தில் மட்டும் அல்ல எப்போது சென்றாலும் கட்டணம் ஒரே சீராக   இருக்க வாய்ப்புண்டு.

உள்ளூர் பஞ்சாயத்துகள் அருகில் உள்ள பெரு நகரங்களில் இருந்து பேருந்துகளை தங்கள் பகுதியில் உள்ள சுற்றுலா தளங்களை இனம் கண்டு அந்த பகுதிகளுக்கு இயக்கலாம். அருகில் உள்ள பஞ்சாயத்துகளை மாவட்ட ரீதியில் இணைத்து பரிசோதனை முறையில் இதில் உள்ள சிக்கல்களை களைய முயற்சிக்கலாம்.

மக்கள் பெருமளவு சுற்றுலா தளங்களை பயன்படுத்துவதால் கழிப்பறை போன்ற வசதிகள் மேம்படவும் வாய்ப்புள்ளது. இதெல்லாம் கற்பனையில்தான் நடக்கும் என்று கருதினால் சூப்பர் சிங்கரையோ, கிரிக்கெட் மேட்சையோ தொலைகாட்சியில் சத்தத்தினை அதிகமாக வைத்து கேட்டு விட்டு இந்த பதிவை கடக்கவும். ஏனெனில் நீங்கள் ஒரு போதும் கற்பனையில் பார்த்திராத லட்சக் கணக்கான வீடு ஒரு  போட்டி மூலம் உங்களில் ஒருவருக்கு கிடைக்கும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பும் போது நீங்கள் இதனை தாராளமாக செயல்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு முதலில் உங்கள் உள்ளூர், மாவட்ட, மாநில வரைபடங்களை கற்றுக் கொடுங்கள். அவர்களாவது உங்களைப் போல் கூட்டுக்குள் அடையாமல் உலகை பறந்து சுற்றி வரட்டும்.

சுற்றுலா துறையினை மேம்படுத்துவது அரசின் பொறுப்பு மட்டுமல்ல அதில் நம் பங்கும் மிக முக்கியமானது.
Carrick-a-Rede,Northern Ireland.

Carrick-a-Rede,Northern Ireland.

Carrick-a-Rede,Northern Ireland.

Carrick-a-Rede,Northern Ireland.

Carrick-a-Rede, hanging bridge, Northern Ireland.

Carrick-a-Rede,Northern Ireland.

Carrick-a-Rede,Northern Ireland.

Shuttle bus at Giant's cause way, Northern Ireland

Carrickfergus castle, Northern Ireland

Carrickfergus castle, Northern IrelandGiant's cause way, Northern Ireland

Giant's cause way, Northern Ireland

Dark Edges, Northern Ierland


No comments:

Post a Comment