Tuesday 29 November 2016

Boron-doped Diamond - An artificial photosynthesis tool in carbon reduction reaction


It’s my pleasure to share our collaborative work has been published in Nature group publication Scientific Reports (Impact factor 5.5). My hearty congrats to lead author Dr Nithish Roy and corresponding author Prof. Terashima-san for demonstrating highly selective Carbon dioxide reduction reaction through silver nanoparticle decorated Boron-doped diamond photoelectrodes.  Hope this work will initiate to develop a broad spectrum of visible light materials, appropriate co-catalyst systems in artificial photosynthesis based CO2 reduction reactions at Photocatalysis International Research Center (PIRC).

The published article can be found in the following link:

A carbon dioxide emission from factories and automobiles is a global issue to save the environment.  Artificial photosynthesis is an emerging route for sustainable conversion of water and CO2 into chemical energy using semiconductor photocatalyst and solar energy. The photo-irradiated semiconductor produce photo charge carriers (electrons and holes), where the photoelectrons from the conduction band are readily available to reduce the CO2 to useful chemical and fuel (hydrogen, ammonia, formic acid, carbon monoxide, acetaldehyde etc) based on the energetic structure of the semiconductor.  Besides the ability of CO2 reduction using nature solar energy, to achieve the selective reaction at semiconductor photocatalyst remains a challenging process.

In the present work, silver nanoparticle decorated Boron-doped Diamond (BDD) electrodes are performed as highly selective CO2 reduction component in the photoelectrocatalytic process. Under UV irradiation, these BDD electrodes reduce CO2 dissolved water into carbon monoxide, which is useful in fuel cell. The ultrafine silver nanoparticle play a key role in making selective reactions routes at BDD. 

This light irradiation was achieved with custom made (patent filed) less power operative UV lamps (7W). In this process, Excellent selectivity (estimated CO:H2 mass ratio of 318:1) and recyclability (stable for five cycles of 3 hour each) for photoelectrochemical CO2 reduction were obtained for the optimum silver nanoparticle-modified BDDL electrode at −1.1 V vs. RHE under 222-nm irradiation. The high efficiency and stability of this catalyst are ascribed to the in situ photoactivation of the BDD surface during the photoelectrochemical reaction. The present work reveals the potential of BDD as a high-energy electron source for use with co-catalysts in photochemical conversion.


Selective results of present work. SEM images of Silver nanoparticle decorated BDD, and Cyclic voltammetry plots. Adopted from Nithish Roy et al, Scientific Reports 6, article number 38010, 2016 (doi:10.1038/srep38010)



The proposed mechanism of selective photoelectrocatalytic CO2 reduction at silver nanoparticle decorated BDD. Adopted from Nithish Roy et al, Scientific Reports 6, article number 38010, 2016 (doi:10.1038/srep38010) 

பெரும் ஊர்திகளில் இருந்தும் தொழிற்சாலைகளில் இருந்தும் வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடு நச்சு வளிமம் நம் சுற்று சூழலில் கடுமையான மாசுக் கேட்டை உருவாக்குகிறது. இது மனிதர்களுக்கு மிக மோசமான நோயினை ஏற்படுத்த வல்லது.

செயற்கை ஒளிச்சேர்க்கை முறையில் இந்த கார்பன் டை ஆக்சைடு வளிமத்தை நீரிலோ அல்லது கரிம வேதிப்பொருள்களில் கரைத்தோ ஒளிமின் வினையூக்கிகள் துணைக் கொண்டு தொழில் பயனுறு விளை பொருட்களாக (ஐதரசன், அமோனியா, கார்பன் மோனாக்சைடு, பார்மிக் காடி, அசிட்டால்டிகைடு, பார்மால்டிகைடு) மாற்ற முடியும்.

ஆனால், ஒளி வினையூக்கி (photocatalyst) மூலம் நடைபெறும் வினையானது கட்டற்ற முறையில் இணைதிறன் ஆற்றல் பட்டையில் உள்ள எதிர்மின்னிகளை கொண்டு இயங்குவதால் குறிப்பிட்ட ஒரு விளை பொருளை தேர்ந்தெடுத்து பெறுவது (Selectivity) என்பது மிகவும் கடினமானது. உதாரணமாக கார்பன் டை ஆக்சைடு வளிமத்தினை அமோனியா -வாகவோ அல்லது கார்பன் மோனாக்சைடு வளிமமாகவோ மட்டுமே மாற்ற வேண்டும், வேறு துணை விளை பொருட்கள் தோன்றக் கூடாது என்னுமாறு கட்டுப்படுத்துவது என்பது கடுமையான செயலாகும்.

இவ்வாராய்ச்சியில் வெள்ளி நானோ துகள்கள் பூசப்பட்ட போரான் புகுத்தப்பட்ட வைர (boron doped diamond) குறைகடத்தி மென் ஏடுகளை ஒளிமின் விளைவு வினையூக்கி களாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட (selective) கார்பன் டை ஆக்சைடு இறக்க வினையினை நிகழ்த்தி காட்டியுள்ளோம். இதன் மூலம் வழமையாக வெளிப்படும் துணை விளைபொருட்களை இவ்வினையில் குறைத்து ஒப்பீட்டளவில் அதிக அளவிலான கார்பன் மோனோக்சைடு வளிமத்தினை மட்டும் பெற்றுள்ளோம்.
இந்த கார்பன் மோனாக்சைடு வளிமத்தினை எரி மின் கலங்களில் உள்ளீட்டு பொருட்களாக செலுத்த முடியும்.
இவ்வாராய்ச்சி கார்பன் டை ஆக்சைடு நச்சு வளிமத்தை தொழிற் பயனுறு வளிமமாக மாற்றித் தந்துள்ளது. மேலும் தொழிற்சாலைகளில் இருந்து நேரடியாக வளி மண்டலத்தில் கலக்கவுள்ள கார்பன் டை ஆக்சைடு நச்சு வாயுவினை தடுத்து பசுமையான வெளியாக வைத்திருக்கவும் உதவுகிறது.
இத்தகைய வினையூக்கிகள் செயற்கை ஒளிச் சேர்க்கை முறையில் கார்பன் டை ஆக்சைடு இறக்க வினைகளுக்கான தடங்களுக்குப் புதிய கதவுகளைத் திறந்துள்ளது.

காப்புரிமை பெறப்பட்ட குறை மின் திறனில் இயங்கக்கூடிய    புற‌ ஊதா மின் விளக்குகளை இந்த வினைகளுக்காக வடிவமைத்துள்ளோம்.  நேரடியான சூரிய ஒளியில் இயங்கும்  ஒளி மின் வினையூக்கிகளை வடிவமைத்தால் எதிர்காலத்தில் நேரடியான, பெரிய அளவிலான‌ வெளிப்புற வினை மையங்களை நிறுவலாம்.

ஆராய்ச்சி கட்டுரையினை கீழ்கண்ட சுட்டியில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Sunday 27 November 2016


அவா ஒதோரி (Awa Odori)- கேலிகள் நிறைந்த‌ ஜப்பானிய நாட்டுப்புற நடனம்


ஜப்பானில் நாட்டுப்புற நடனக் கலைகளுக்கு பஞ்சம் இல்லை. ஆனால் அவை நூற்றாண்டுகளை கடந்தும் இன்றும் மக்கள் வழக்கில் தொய்வின்றி கொண்டாடுவதுதான் ஆச்சரியம்.

அப்படிப்பட்ட நாட்டுப்புற நடனங்களில் ஒன்றான “அவா ஒதோரி”  (Awa Odori)  என்னும் நடனத்தை பற்றித்தான் இந்த பதிவில் சொல்லப் போகிறேன். அதென்ன கட்டுரையின் தலைப்பே விநோதமாக உள்ளது என ஆச்சரியப்படுகிறீர்களா. கொஞ்சம் பொறுமையாக படியுங்கள்..

ஜப்பானின் தொகுசிமா (Tohusima) மாவட்டத்தினை பிறப்பிடமாக கொண்ட இந்த நாட்டுப் புற நடனக் கலை  “அவா ஒதோரி”  என அழைக்கப்படுகிறது. இந்த நடனக் கலை தோன்றி ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
நான் தொகுசிமா மாவட்டத்தில் உள்ள‌ அவாசி தீவில் ஒரு சர்வதேச கருத்தரங்கிற்கு சென்ற போது இந்த நடனத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நடனக் குழுவின் பெயர் 'கொஜாகெய்- ரென்" (Gojakei Ren).

நடனம் ஆடும் போது அவர்கள் உரத்த குரலில் "ஒதுரு அகோநி, மிரு அகோவ் ஒனாச்சி அகோனரா ஒதொரனா சன், சன்"என கத்தியபடியே ஆடுகின்றனர். (踊る阿呆に 見る阿呆 同じ阿呆なら 踊らな損、損) இதன் பொருள் "முட்டாள்கள் பார்த்திருக்க, முட்டாள்கள் நடனமாடுகிறார்கள், இருவருமே முட்டாள்களாக இருக்கும் போது பிறகு ஏன் நடனமாடக் கூடாது".  

என்ன‌ இதன் அர்த்தத்தை கேட்டால் சிரிப்பு வருகிறதா. 

மேலும், நடனம் ஆடும் போது இடையிடேயே அவர்கள் கத்தும்   “யத்தோசா, யத்தோசா”, “க‌யத்தா, அயத்தா”, “எராய் யச்சா, எராய் யச்சா யோய், யோய், யோய்” என்பதற்கு பெரிய அர்த்தம் இல்லையென்றாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மை குதுகலிக்க செய்கிறது.

இதன் தனித்த இசை, நடன அடவுகளுக்காகவே  ஜப்பான் முழுவதும்  இன்றும் மக்கள் இந்நடனக் கலையினை ரசித்து பார்க்கின்றனர்.

இப்படி கேலியாக‌  குரல் எழுப்பியவாறு, ஜப்பானிய பாரம்பரிய இசைக் கருவிகளான தைக்கோ மேளம், புல்லாங்குழல், மூன்று தந்தி கம்பி பொருத்தப்பட்ட இசைக் கருவிகளில் பின்னனியில் இசைக்க நடனமாடும் இந்த குழுவை “ரென்” என அழைக்கின்றனர். 

ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரி உடையணிந்து கோமாளிகளை போல் ஆடும் இந்த நடனத்தின் வரலாறு மிக சுவாரசியமானது.

சுமார் நானுறு ஆண்டுகளுக்கு முன்பு தொகுசிமா மாவட்டத்தினை ஆட்சி செய்த நில பிரபத்துவ மன்னர் "கசுசிகா லெமாகா" (Hachisuka Iemasa, 1558-1638) தொகுசிமாவில் புதிய கோட்டையினை கட்டினார் (Tokushima Catle). இதனை கொண்டாடும் விதமாக மக்கள் நன்கு குடித்து விட்டு தங்கள் மனம் போன போக்கில் ஆடினர். இதுவே பின்னாளில் தனி நடனமாக அமைந்து விட்டது. தொகுசிமா நகரின் புராதன பெயர் “அவா”, “ஒதோரி” என்றால் நடனமாடுவது எனப் பொருள். இதன் பெயராலேயே “அவா ஒதோரி” என்று இந்நடனத்திற்கு பெயர் வந்து விட்டது. அதே நேரம் அவா என்றால் அலைகள் போல கைகளை ஆட்டி ஆடுதல் என்றும் பொருள் படும். ஆகவே இந்த நடனத்திற்கான சரியான வரலாறு இன்னும் தெளிவாக தெரியவில்லை

அவா நடனத்திற்கென்று தனித்த உடைகள் உள்ளது. ஆண்கள் "கப்பி" எனப்படும் தளர்வாக உள்ள‌ பருத்தி கால் சட்டைகளையும், பெண்கள் யுகாதா எனப்படும் இறுக்கமான கால் சட்டைகளையும் அணிந்து நடமாடுகின்றனர்.  

கிமானோ  (ஜப்பானியர்கள் பாரம்பரிய உடை), அரைக்கால் சட்டை அணிந்து கையில் விசிறி ஒன்றினை மேலே ஆட்டியவாறு ஆடும் அவா நடனத்தை கீழ்காணும் காணொளியில் கண்டு களிக்கலாம்.



பின்னனி இசைக்கேற்ப வலது காலை எடுத்து வைக்கும் பொது வலது கையினை மேலே தூக்கியும், இடது காலை முன்னோக்கி எடுத்து வைக்கும் போது இடது கையை மேலெ தூக்கியவாறும் குதிகாலால் உடலை தனித்து கை மணிக்கட்டுகளை சுழற்றியவாறு முன்னோக்கி பாதங்களை எடுத்து வைத்து நடனமாடுகின்றனர்.

இதே நடனத்தின் மற்றொரு வடிவமாக உடல் முழுவதும் ஜப்பானிய பாரம்பரிய உடையான கோடை கால “கிமோனோ”ஆடைகளை அணிந்து தலையில் கோரைப்புல்லில் செய்யப்பட்ட “அமிகசா” என்னும் தொப்பியை அணிந்து ஆடுகின்றனர். தலையில் தொப்பி அணிந்து ஆடுபவர்கள் காலில்  காலணி அணிந்தும், தொப்பி இல்லாமல் ஆடுபவர்கள் காலணி அணியாமல் வெள்ளை நிறத்தில் காலணி உறைகளை மட்டும் அணிந்து நடனமாடுகின்றனர்.  நடனமாடும் போது வலது கையில் விசிறியினை ஆட்டியவாறு ஆடுகின்றனர். அதில் தங்களது குழுப் பெயரை பொறித்து வைத்துக் கொள்கின்றனர்.

நான் இந்த நடனத்தை பார்த்துக் கொண்டிருந்த போது மேடையில் ஏறி இந்நடனக்குழுவினருடன் ஆடுபவருக்கு பரிசு என இந்த ரென் குழுவின் தலைவர் அறிவித்தார். நான் சற்றும் தயங்காமல் மேடையில் ஆடினேன், அவர் மிகவும் மகிழ்ந்து அவர்கள் வைத்திருந்த விசிறி ஒன்றினை பரிசாக எனக்கு தந்தார்.

அவா நடனத்தை கற்றுத் தரும் பள்ளிகள் ஜப்பான் முழுவதும் உள்ளது. தோக்கியோவின் கட்சுசிகா பகுதியில் ஒரு பள்ளியினை பார்த்திருக்கிறேன். தற்போது இந்நடனத்தை மேற்குலக நாடுகளிலும் ஆர்வமாக கற்று வருகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் நிவாகா-ரென் (Niwaka-ren) என அழைக்கப்படும் புது முக வகுப்புகளில் இந்த நடனத்தை கற்றுத் கொள்ளலாம்.

இன்றும் இந்த நடனக் கலையினை போற்றும் விதத்தில் “தொகுசிமா” நகரில் ஆகஸ்டு இரண்டாம் வாரம் (12-15 August) மிகப் பெரிய “அவா ” நடன சங்கமம் நடைபெறுகிறது. இப்பகுதியில்  உள்ள பல ரென் குழுக்களும் இந்நாளில் சாலைகளில் ஆடிச் செல்வர். இந்நடன நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு துவங்கி இரவு பத்து மணி வரை நீளும்.  பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டு களிக்கும் இந்த விழாவை நாட்டுப் புற நடன பிரியர்கள் தவற விடக் கூடாது. இந்நகரில் நடைபெறும் அவா நடனத்தின் மூலம் தங்கள் முன்னோர்களின் ஆன்மாக்களை மீண்டும் மகிழ்விக்க முடியும் என புத்த மதம் நம்புவதால் இதனை தொடர்கிறார்கள்.

தொகுசிமா நகரம் (Tokushima) ஒசாகா மாகாணத்தில் இருந்து ஒரு மணி நேர பயண தொலைவில் உள்ளது. ஜப்பானின் தலை நகர் தோக்கியோவில் இருந்து நேரடியாக விமானத்திலும், ஜேஆர் ரயில் சேவை (JR Railways மூலமாகவும் வந்து சேரலாம். இந்த நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெறும் இடம் தொகுசிமா நகரின் இரயில் நிலையம் அருகிலேயே  உள்ளதால் இரயிலில் பயணிப்பது விமானத்தில் இருந்து வருவதை காட்டிலும் சிறந்தது. ஜப்பானில் நடைபெறும் மிகப்பெரிய நடனத்திருவிழாவும் இதுவே. ஒரு வருடத்திற்கு உலகெங்கும் இருந்து 1.3 மில்லியன் அளவிற்கு இந்த நடனத்தை காண வருகிறார்கள்.

கொஜாகெய்- ரென் குழுவினரின் அவா நடனம். (This photo was taken at Awaji International Multiculutural Center, Awaji Islan, Japan)

கொஜாகெய்- ரென் குழுவின் தலைவர் எங்களை பாராட்டி விசிறி வழங்கிய போது.


நோபல் பரிசாளர் நெகிசி (Ei-ichi Negishi) அவர்களுடன் அவா நடனம் ஆடிய போது எடுத்த படம்


வா நடனத்தை தொகுசிமா தெருக்களில் ஆடும் கலைஞர்கள் (Photo courtesy: tsunagujapan.com)

அவா நடனத்தை தொகுசிமா தெருக்களில் ஆடும் கலைஞர்கள் (Photo courtesy: tsunagujapan.com)

அவா நடனத்தை தொகுசிமா தெருக்களில் ஆடும் கலைஞர்கள் (Photo courtesy: tsunagujapan.com)


குறிப்பு:
1. தொகுசிமா நகரில் உள்ள தொகுசிமா கோட்டை (Tokushima castle) பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. இலையுதிர் (Autumn) காலத்தில் இந்த கோட்டை பார்க்கவே மிக ரம்மியமாக இருக்கும்.

2.  ஜப்பானின் புனித யாத்திரையில் போக வேண்டிய 88 கோவில்களில் 14 கோவில்கள் தொகுசிமா மாவட்டத்தில் உள்ளது. இந்த பகுதிக்கு வருபவர்கள் இந்த இடங்களுக்கும் போய் வர திட்டமிடலாம்.












Saturday 26 November 2016


கோவையில் இருந்து பள்ளி மாணவர்களுக்காக வெளி வரும் நம் பிள்ளை இதழில் எனது "படித்து கிழிக்கட்டும்" என்ற கட்டுரை வெளியாகியுள்ளது.

இக்கட்டுரையில், பிரித்தானியாவில் குழந்தைகளுக்கான நூலக வசதி மற்றும் புத்தக வாசிப்பை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளது.

என் எழுத்துகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் நம் பிள்ளை மாத இதழ் குழுவினருக்கு என் நன்றியும், அன்பும்.


***********************************************************************
உங்கள் பள்ளிகளுக்கு நம் பிள்ளை மாத இதழை பெற சந்தா செலுத்த விருப்பம் உள்ள நண்பர்கள் கீழ் கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும்.
nampillaibook@gmail.com
Tel: 0422 4378607; 956 666 0095; 9842260371; 7200049190












Thursday 24 November 2016

நெம்புகோல் நண்பர்கள் -1

திருச்சி பிசப் ஹீபர் கல்லூரியில் இளம் நிலை இயற்பியல் பயின்று கொண்டிருந்த காலம். பெரிதாய் குறிக்கோள் எதுவும் இல்லை. ஒரு டிகிரி படிக்க வேண்டும் அவ்வளவுதான். கிராமத்தில் இருந்து பெரிய குறிக்கோள் எதுவும் இல்லாமல் பிழைக்க வேண்டும் என கிளம்பும் கூட்டங்களில் இருந்து வந்தவன் நான்.

முதல் வருடம் திருச்சி நால் ரோடு பகுதியில் இருக்கும் வெக்காளியம்மன் லாட்ஜ் ஜில்தான் நான் தங்கியிருந்து படித்தேன். அந்த கால கட்டத்தில் லாட்ஜிக்கு எதிர்புறம் இருக்கும் அன்புடையான் காலணியில் இருந்து என் நண்பன் நரசிம்மன் மூலம் அறிமுகமானவர் தான் சர்மா. வயதில் எனக்கு அவர் சூப்பர் சீனியர். ஆனால் சக வயதினரைப் போல் தான் நட்பு பாராட்டுவார்.

அவர் அப்போது எங்கள் கல்லூரியில் முது நிலை சுற்றுச் சூழலியல் அறிவியல் படித்துக் கொண்டிருந்தார். படிப்பில் படு சுட்டி. அதற்காக எந்நேரமும் புத்தகத்தை படிக்கும் ரகம் கிடையாது. ஒரு முறை விசயத்தை உள் வாங்கி கொண்டால் அப்படியே பத்து பேருக்கு சொல்லும் பாண்டித்ய அறிவு.

கல்லூரியின் பைன் ஆர்ட்ஸ், என் எஸ் எஸ், என ஊர் சுற்றிய காலங்களின் எங்கள் சகாக்கள் சர்மாவிடம் தான் ஸ்கிரிப்ட், ஐடியா எல்லாமே கேட்போம். கிரியேட்டிவிட்டியில் இந்த ஆளை அடிச்சுக்க முடியாது.

பெரும்பாலும், மாலை வேளையில் அல்லது ஓய்வு நேரங்களில் தேநீர் கடைகளில் எங்களது கும்பலோடு நகைச்சுவை ததும்பும் அரட்டைகளுக்கு பஞ்சம் இருக்காது. சர்மாதான் எல்லா உரையாடல்களிலும் மையமாக இருப்பார். தான் படித்த, கேள்வியுற்ற எல்லா நுட்ப செய்திகளையும் சபையில் இறக்குவார்.

கடி ஜோக்குகளில் ஆரம்பிக்கும் உரையாடலின் ஒரு புள்ளி, பேர்டு வாட்சிங் வழியாக வேகமெடுத்து வாட்டர் டிரீட்மெண்ட், என்விரான்மென்டல் பொலியூசன் என பல கிளைகளாக பிரியும்.

இந்த கூத்துகளுக்கு இடையில் ஒரு வருடம் எக்சனோரா அமைப்பிற்காக  விழிப்புணர்ச்சி தரும் குறு நாடகம் போடுவது போன்ற வேலைகளும் செய்தோம். இடையில் ஒரு முறை கொடைக்கானல்  பெருமாள் மலை அருகே இருக்கும் செண்பகனூர் பகுதியில்  பழனி மலை சுற்றுச் சூழல் பாதுகாப்பு குழுமத்தின் (Palani Hills Conservation Council) மூத்த ஆலோசகர், திருச்சி புனித வளனார் கல்லூரி தாவரவியல் பேராசிரியர்   அருட் தந்தை மேத்யூ (Prof. Mathew) அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  இரண்டு நாள் அங்கு தங்கி தாவரங்களை பற்றி அறிந்திராத தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.

சர்மா உடன் சென்ற இந்த பயணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே வழக்கு, கொடைக்கானல் ஏரியினை தூர் வாரி சுத்தப்படுத்தி அதனை குடி நீர் ஆதாரமாக மாற்றியது, விலங்குகள் காரிடார் பாதையினை தனி மனித ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டு பசுமை வேலி அமைத்தது என இந்த அமைப்பின் செயல்பாடுகள் வெளி உலகம் அறியாதது. முக்கியமாக பேர. மேத்யூ வின் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ப்ளோரா பற்றிய புத்தகம் மிக முக்கியமானது.

இப்போது போனாலும் பெருமாள் மலையில் உள்ள ஹெர்பேரியம் பார்க்க வேண்டிய ஒன்று.

தேர்வு காலங்கள் தவிரவும், அவரது வகுப்பு நண்பர்கள் அவ்வப்போது சர்மா வீட்டிற்கு குரூப் டிஸ்கசனுக்கு வருவார்கள். இந்த டிஸ்க்சன் கல்லூரியின் கேப்டீரியா, முன் பகுதியில் இருக்கும் கார்டன், மைதானம் என சகல இடங்களிலும் தடையின்றி மனம் போன போக்கில்  நடக்கும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களோடு ஒரு அணிலாய் ஒட்டிக் கொள்வேன்.
நேரம் கிடைக்கும் போது சர்மாவின் முது நிலை வகுப்பிற்கு சென்று வேடிக்கை பார்ப்பேன். இந்த கால கட்டங்களில் அவர்கள் வகுப்பு தோழர்கள்  CSIR விரிவுரையாளர், மற்றும் ஆராய்ச்சி நிதிக்கான போட்டி தேர்வுகளுக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தனர். அவரது வகுப்பு நண்பர்கள் சிவா அண்ணன், சேவியர் சார் எல்லோரும் படிப்பதை பார்த்த போது நாமும் இது போல் உயர் கல்வி பயின்று ஆராய்சிக்கு செல்ல வேண்டும் என்ற உந்துதல் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தது.

எப்போதும் போல் சர்மா இந்த தேர்வுக்கான ஆயத்தங்களில் அலட்டி கொள்ளவே இல்லை.. அவரது நண்பர்களோ விழுந்து விழுந்து மண்டையை உடைத்துக் கொள்வார்கள்.

CSIR தேர்வு முடிவுகள் வந்தது. அந்த வருடத்தில் இந்திய அளவில் Environmental Science துறையில் இரண்டே பேர்தான் தேர்ச்சி பெற்று இருந்தனர். ஒருவர் சர்மா, மற்றொருவர் சேவியர் சார். அவர் தற்போது கல்கத்தா செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பேராசிரியாக பணி புரிகிறார்.

தற்போது சர்மா பெங்களூருவில் உள்ள ஜியார்ஜியா நுட்ப நிறுவனத்தில், முதன்மை தீர்வு  பொறியாளராக பணி புரிகிறார். இந்நிறுவனம் உலக அளவில் ஈ லேர்னிங் முறையில் புதிய உத்திகளுக்கான நுட்பங்களை அறிமுகப்படுத்துகிறது. சர்மா எனக்கு தெரிந்து நல்ல ஆசிரியர், தனக்கு தெரிந்ததை மிக இலகுவாக தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு எளிதாக புரிய வைக்கும் வித்தைக்காரர். நிச்சயம் சர்மாவின் கிரியேட்டிவ் வேட்டைக்கு ஏற்ற காடு இது என்பேன்.

நான் உயர்கல்வி ஆராய்ச்சி பயில சர்மாவின் நட்பு ம் ஒரு முக்கிய காரணம். எதிர் காலம் பற்றிய பெரிய கனவுகள் இல்லாத போது நம் சூழல்தான் அதற்கான விதைகளை விதைக்கிறது. நெருப்புத் துண்டுகளோடு இருக்கும் வரைதான் அது அக்கினி குஞ்சு, இல்லையேல் அது வெறும் கரித்துண்டுதான். நான் அக்கினி குஞ்சாக இருந்ததற்கு காரணம் இந்த நெருப்பு துண்டுகள் தான்.
2005 க்கு பிறகு சர்மாவை சந்திக்க இயலவில்லை. ஆனால் மார்க் முக நூல் வழியாக இதனை சாத்தியப்படுத்தி தந்துள்ளார்.

முது நிலை பயில்பவர்கள் உங்கள் சுற்றுப் புறத்தில் உள்ள இளம் நிலை கல்லூரி, பள்ளி மாணவர்களோடு தொடர்ந்து உரையாடுங்கள். உங்களை முன் மாதிரியாக கொண்டு அவர்களும் மேலே வரக் கூடும்.

சர்மாவிற்கு எப்போதும் என் அன்பு உரித்தாகுக.


Sharma with Siva anna and Xavier Sir at his MSC class room (photo credit, Siva Rajan Anna)



Wednesday 23 November 2016

Nanotrees in photoelectrocatalytic water oxidation - Artificial Photosynthesis Tool


Glad to share that our recent collaborative work on has been accepted in Nanoscale journal (RSC Publishers, Impact Factor: 7.76). Congrats to my collaborators and lead author Dr Hyungu Han, Palacky University, Czech Republic.




This work explores the utilization of bi-composite based nanotrees in photoelectrocatalytic water oxidation process. Multistep process of 1-D Fe2O3 (Hematite) nanowire branches grown on TiO2 hollow nanotube play a primary photoabsorber, which harvest the sun light and produce the photocharge carriers. Interestingly, the light harvesting range in the visible wavelength region can be probed by varying the dimension of nanowire branches. A simple chemical bath deposition was adopted to fabricate the nanowire structures. Though, the Fe2O3 @TiO2 nano-tree structure is relatively complicated to compare with flat film type structure, a multifunctional chareacteristcs of internal light scattering, band gap modulation in light reception, rapid charge transport could result high efficient photocharge carrier generation and separation.


This work can be adopted for solar light driven artificial photosynthesis application as well as energy storage device where the high internal surface area and effective charge transport required.


******************


ஒளிகடத்திகளாக செயல்படும் அகலமான ஆற்றல் பட்டை உடைய‌ டைட்டானியம் டை ஆக்சைடு நானோ உருளை தண்டின் மீது தொகுக்கப்பட்ட சிறிய இரும்பு ஆக்சைடு நானோ கிளைகள் ஒருங்கிணைந்து நானோ மரங்களாக வேதி முறையில் தயாரித்துள்ளோம். குறிப்பாக‌, இந்த நானோ மரங்களை அதி கடத்தும் திறனுடைய உலோக ஆக்சைடுகள் பூசப்பட்ட கண்ணாடி தட்டுகள் மீது தயாரித்துள்ளோம். இவை நானோ அளவில் நுண்ணோக்கி கொண்டு பார்க்கும் போது மரங்கள் நிரம்பிய தோப்புகளை போல் காட்சியளிக்கும்.


இந்த தகட்டினை நீரினுள் வைத்து, சூரிய ஒளியில் குறைந்த மின் அழுத்தத்தினை அது இணைக்கப்பட்டுள்ள மின் சுற்று வழியே பாய்ச்சும் போது மிகச் சிறந்த நீர் ஆக்சிஜனேற்றம் செய்யும் ஒளிமின் வினையூக்கிகளாக‌ செயல் படுகின்றன‌. இவ்வாராய்ச்சியின் சிறப்பு என்னவெனில் இரும்பு ஆக்சைடு கிளைகளின் நீளம் மற்றும் விட்டத்தினை வேதி முறையில் எளிமையாக மாற்றியமைக்கும் பொழுது சூரியனில் இருந்து அவை கிரகித்து கொள்ளும் போட்டான்களின் அளவு அதிகரிக்கிறது. இதன் மூலம் ஒளிமின் சோதனையில் அவை உண்டாக்கும் மின்னிகளின் அளவை அதன் இணைதிறன் மற்றும் கடத்து பட்டைகளில் அதிகரிக்கிறது. குறிப்பாக, இணை திறன் பட்டையில் உருவாகும் புரைமின்னிகள் (holes) திறனுறு வகையில் வினையூக்கியாக செயல்பட்டு நீர் மூலக்கூறுகளை ஆக்சிஜனேற்றம் செய்கிறது.


இத்தையக‌ நானோ மர வடிவக் கூறுகள் வழமையாக தயாரிக்கப்படும் மெல்லிய ஏடுகள் சார்ந்த ஒளிமின்வினையூக்கிகளை காட்டிலும் செறிவான‌ ஒளிச் சிதறல், மின்னிகளை சேகரிக்கும் வெளி முனையத்தில் அதிகமாக கொண்டு செல்லுதல், குறைந்த மீள் சேர்க்கை இடைக்காலம் ஆகிய பண்புகள் இதன் பயன்பாட்டை சிறந்த ஒன்றாக‌ எடுத்துரைக்கின்றது. மேற்கூறிய சிறப்பான செயல்பாட்டினால் இரும்பு ஆக்சைடு ‍‍ நானோ கிளைகள் தொகுக்கப்பட்ட டைட்டானியம் ஆக்சைடு தண்டுகள் நீரில் இருந்து ஒளி மின் வினையூக்கி நிகழ்வு மூலம் ஹைட்ரஜன் வாயுவை தயாரிக்கிறது. இம்முறையில் பெறப்படும் ஹைட்ரஜன் வாயுவின் உற்பத்தி வழமையான இதர நுட்பங்களை ஒப்பிடும்போது மிகக் குறைவாக இருந்தாலும் வரும் காலத்தில் இதன் திறன் இன்னும் செறிவூட்டப் பட வாய்ப்புள்ளது.

இது போன்ற நானோ வடிவ மரங்கள் சூரிய ஒளியில் செயல்படும் செயற்கை ஒளிச்சேர்க்கை நிகழ்வுகள் சார்ந்த பயன்பாடுகளுக்கு சிறந்த ஒளிமின் வினையூக்கிளாக(photoelectrocatalyst) பிரயோகிக்கபடுவதோடு, அதிகமான உள் பரப்பு பகுதியினை கொண்டிருப்பதால் ஆற்றல் தேக்கிகளிலும் இதனை பயன்படுத்தலாம்.




 மனிதர்களின் சாபங்கள்

இன்னைக்கு என் வீட்டம்மா சுவான்சி சிட்டி சென்டரில் ரெண்டு வேலை கொடுத்திருத்தாங்க.  

வேலைய முடிச்சிட்டு அப்படியே நான் எப்பவும் அந்த ஏரியாவில் சுத்தறது வழக்கம். அதுவும்எ சிட்டி சென்டர் பக்கம்  இருக்கும் சர்ச் வாசலில் (St Mary Church, Central Swansea) போடப்பட்டு இருக்கும் பெஞ்சுகளில்  உட்காருவதே தனி சுகம். காரணம் சிட்டி சென்டரில் இந்த இடத்துக்கென்று ஒரு ரம்மியமான சூழல் இருக்கு. நிறைய மரங்கள் சூழ்ந்து எப்போதும் பறவைகள் நிறைந்து இருக்கும். 

தேவாலயத்தின் முன் முற்றம் வாசலில் இருக்கும் வயதான மரங்களின் கீழ் இலையெல்லாம் வீழ்ந்து கிடக்கும். புறாக்களும், சீகில்ஸ் பறவையும் லேசான இளம் வெயிலின் கீத்து பட்டு பொன் மஞ்சள் போர்த்திய அந்த சருகுகளில் புழுக்களை தேடி கொத்தி தின்று கொண்டு இருக்கும். இந்த ரொமாண்டிக்க அனுபவிக்கவே அங்க போவேன்.

அந்த சர்ச் வாசலில்  போடப்பட்டு இருக்கும் பெஞ்ச்சில்   உட்கார்ந்து கொண்டு கடந்து செல்பவர்களை வேடிக்கை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

இந்த ரம்மியமான சூழலில் இருக்கும் இந்த தேவாலயத்திற்கு பின்னால் ஒரு சோக வரலாறு இருக்கு.

கி.பி 1300 களில் கட்டப்பட்ட இந்த ஆங்கிலிக்கன் சர்ச், 1700 களில் திடீரென்று சரிந்து விழுந்து விட்டது. பின்னர் இடிந்த பகுதிகள் மீண்டும் 1890ல் புணரமைக்கப்பட்டது. இதற்கு பின்னால்தான் நான் சொல்லும் கதையின் சுவாரசியமே உள்ளது.

தேவாலயத்தை புணரமைக்க டென்டர் விட்டபோது, உள்ளூர் கட்டிட பொறியாளர் ஒருவர் அந்த வேலையை தான் எடுத்துச் செய்ய‌ விரும்பினார். தன் திறமை மூலம் இடிபாடுகளாக‌ இருக்கும் இந்த தேவாலயத்தை வலுவானதாக கட்ட முடியும் என நம்பினார். ஆனால் துரதிஸ்டவசமாக, தேவாலயத்தை புணரமைக்கும் பணி லண்டன்வாசியான ஆர்தர் பிளம் பீல்டு என்பவருக்கு தரப்பட்டது. இதனால் உள்ளூர்வாசி மிக கடுமையாக இந்த முடிவை எதிர்த்தார். இவருக்கு அந்த அளவிற்கு திறமை கிடையாது என கொந்தளித்த அவர், இந்த தேவாலயத்தின் எதிரே (நான் அமர்திருக்கும் இடத்தில்) சிவப்பு நிற செங்கல்லில் ஒரு பெரிய கட்டிடத்தை கட்டி அதில் மரத்தால் செய்யப்பட்ட‌ சாத்தான் சிலையினை நிறுவி விட்டார்.

அந்த சாத்தானின் கீழ் ஒரு வாசகத்தையும் காண்டாகி பொறித்து வைத்தார்.
 "ஒரு நாள் இந்த தேவாலயம் இடிந்து விழும் பொழுது இதை கட்டியவனின் திறமையை கண்டு இந்த சாத்தான் எள்ளி நகையாடும்".

சாபத்தின் உருவமாக இருக்கும் இந்த சாத்தான் சிலையினை சுவான்சியின் சாத்தான் (Old Nick) என்று உள்ளூர்காரர்கள் அழைக்கின்றனர். இந்த சிலை மாதிரியினை தற்போது பல இடங்களில் சாபத்தின் குறியீடாக வேல்சு தேசத்தில் வைத்துள்ளனர். ஆச்சரியம் கனடாவில் கூட இந்த சிலையினை வைத்துள்ளனர்.

இந்த சிலை தற்போது சிட்டி சென்டரில், இந்த தேவாலயத்தின் அருகில் இருக்கும் குவாட்டரன்ட் (Quadarant) எனப்படும் வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கு இந்த தேவாலயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எது எப்படியோ எப்ப இந்த மனுசன்  இப்படி சாபம் விட்டானோ, சுமார் 50 வருசம் கழித்து 1941 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மன் நாஜிப் படையினரின் குண்டு வீச்சில் இந்த தேவாலயம் பலத்த சேதத்தை சந்தித்தது. அப்புறம் மீண்டும் ஒரு வழியாக 1950க்கு பிறகு இந்த தேவாலயத்தை புணரமைத்துள்ளனர்.

அப்பாடா ஒரு வழியா இந்த ஆளோட சாபம் அழிஞ்சிருச்சுன்னு பார்த்தா, தேவாலயத்தின் முன் வாசலில் உள்ள பலகையில் எழுதி இருந்ததை பார்த்து சங்கடமாகி போய் விட்டது. அதில் சர்ச்சின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளதால் நிதி தாருங்கள் என எழுதி இருந்தது.அடக் கடவுளே, ஒரு மனிதனின் ஆழ் மனதில் இருக்கு வன்மம், சாபம் எந்த அளவிற்கு கொடியது என நினைத்துக் கொண்டேன். அதே நேரம்,  இன்று நான் பார்த்த காட்சி மனித சாபங்களை விடவும் மனிதரின் அன்பென்பது எல்லாவற்றையும் உடைக்கும் என காட்டியது.

நான் உட்கார்ந்து இருந்த இடத்தில் வீடற்ற மனிதர் ஒருவர் நீண்ட தாடியுடன், கையில் தன் நாயை பிடித்தவாறு தளர்வா நடந்து போய் கொண்டு இருந்தார்.அவருக்கு எதிரே நடந்து வந்த  ஒரு காதலர் அவரை அக்கறையுடன் நிறுத்தி விசாரித்தனர்.

அந்த யுவதி வீடற்ற மனிதரிடம் ஏன் தளர்வாக உள்ளீர்கள் எனக் பரிவாக கேட்டார்.

அவர் தனக்கு உடல் நிலை சரியில்லை என்ற உடன் அந்த யுவதி சற்றும் யோசிக்காமல் அவருக்கு தன் பையில் இருந்து பணம் எடுத்துக் கொடுத்ததோடு, அந்த நாய்க்கு அருகில் இருந்த அங்காடியில் சென்று நாய் பிஸ்கட் பெட்டி ஒன்றை ஓடிப் போய் வாங்கி வந்து தந்தாள். பின்னர் அந்த நாயை தடவிக் கொடுத்து விட்டு காதலரை இறுக்கி அணைத்தவாறு நடக்கத் தொடங்கி விட்டாள்.

அவள் ஒரு தேவதை போல் எனக்கு மட்டுமல்ல அந்த வீடற்ற மனிதருக்கும் தெரிந்திருப்பாள்.

மனிதர்களின் சாபங்களை பற்றி நான் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் சக மனிதர்கள் பால் நாம் கொள்ளும் அன்பு அதனை விழுங்கி  விடும் ஒரு தரிசனத்தையும் நான் கண்டேன்.


அன்பு அரக்கர்கள் உலகை எப்போதும் வெல்கிறார்கள்.


St Mary Church, Swansea

St Mary Church, Swansea


St Mary Church, Swansea

St Mary Church, Swansea

St Mary Church, Swansea

St Mary Church, Swansea

St Mary Church, Swansea



Monday 21 November 2016

நாட்டுக் கோழி உப்பு கண்டம் கறி (Chicken Uppu Kandam)

கரூர் பகுதிகளில் உப்பு கண்டம் கறி என்பது படு பிரசித்தம். திருவிழாவில் மீந்த பச்சை மாமிச கறியை சேமித்து வைக்க‌ உப்பு போட்டு காய வைத்து கருவாடு போல செய்யும் உப்புக் கண்டம் அல்ல. இது நாட்டுக் கோழி கறியை குறைந்த செலவு சாமான்கள் கொண்டு எளிமையாக உலர்ந்த கறி போல் மணக்க மணக்க செய்வது.

இம்முறை இந்தியா விடுமுறைக்கு சென்று இருந்த போது எப்போதும் போல் நண்பர்கள் அழைப்பு. பசுமையான தென்னந்த் தோப்பில் விறகு அடுப்பில் மண் மணத்தோடு நாட்டுக் கோழி உப்புக் கண்டம் சுவைக்கும் வாய்ப்பு வாய்த்தது.

செய்முறையினை எனக்காக பொறுமையுடன் செய்து காண்பித்த நாவல் பாலு அண்ணன் அவர்களுக்கு பெரும் நன்றி.

நீங்களும் வீட்டில் முயற்சித்து பாருங்கள். உப்புக் கண்டம் சுவைப் பிரியர்களுக்கு ஒரு எளிய வரப் பிரசாதம் என்றால் மிகையில்லை.

செய்முறை ‍ ஒரு கிலோ கறிக்கு
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் 50 மில்லி
சீரகம் 25 கிராம் (தூளாக பொடி செய்தும் போடலாம், அல்லது அப்படியே பயன்படுத்தலாம்)
வர மிளகாய் 15‍ 20 (காரத்தை பொறுத்தது)
மஞ்சள் தூள், உப்பு (தேவையான அளவு)
நாட்டுக் கோழி 1 கிலோ

செய்முறை
நல்லெண்ணெயில் கடுகு, சீரகம், வர மிள்காய் போன்றவற்றை போட்டு நன்கு வதக்கிய பின் ஒரு கிலோ கோழிக்கறியை போட்டு தேவையான அளவிற்கு தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும். இதில் திட்டமாக மஞ்சள் தூள், உப்பு போட்டுக் கொள்ளவும். நன்கு கலக்கி கொதிக்க விடவும்

ஊற்றிய நீர் நன்கு கொதித்து சுண்டும் வரை கறியை வேக விடவும். இடையில் அவ்வப்போது கறியை கரண்டியால் சீரான இடைவெளிகளில் கலக்கி விடவும்.
அனைத்து தண்ணீரும் நன்கு சுண்டிய பின், கறி வெந்துள்ளதா என பார்த்து சூட்டில் இருந்து இறக்கி விடவும்

சுவையான உப்புக் கண்டம் கறி தயார்.

உப்புக் கண்டம் கறி எவ்வாறு செய்வாது என்ற செயல் முறையினை இந்த காணொளியில் காணலாம். (https://youtu.be/uVNwHulOHZc)



நீர் நன்கு ஊற்றி கொதிக்கும் போது

நீர் நன்கு ஊற்றி கொதிக்கும் போது

பாலு அண்ணன் செயல் விளக்கம்

நீர் நன்கு சுண்டிய பிறகு

உப்புக் கண்டம் கறி