Sunday 27 November 2016


அவா ஒதோரி (Awa Odori)- கேலிகள் நிறைந்த‌ ஜப்பானிய நாட்டுப்புற நடனம்


ஜப்பானில் நாட்டுப்புற நடனக் கலைகளுக்கு பஞ்சம் இல்லை. ஆனால் அவை நூற்றாண்டுகளை கடந்தும் இன்றும் மக்கள் வழக்கில் தொய்வின்றி கொண்டாடுவதுதான் ஆச்சரியம்.

அப்படிப்பட்ட நாட்டுப்புற நடனங்களில் ஒன்றான “அவா ஒதோரி”  (Awa Odori)  என்னும் நடனத்தை பற்றித்தான் இந்த பதிவில் சொல்லப் போகிறேன். அதென்ன கட்டுரையின் தலைப்பே விநோதமாக உள்ளது என ஆச்சரியப்படுகிறீர்களா. கொஞ்சம் பொறுமையாக படியுங்கள்..

ஜப்பானின் தொகுசிமா (Tohusima) மாவட்டத்தினை பிறப்பிடமாக கொண்ட இந்த நாட்டுப் புற நடனக் கலை  “அவா ஒதோரி”  என அழைக்கப்படுகிறது. இந்த நடனக் கலை தோன்றி ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
நான் தொகுசிமா மாவட்டத்தில் உள்ள‌ அவாசி தீவில் ஒரு சர்வதேச கருத்தரங்கிற்கு சென்ற போது இந்த நடனத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நடனக் குழுவின் பெயர் 'கொஜாகெய்- ரென்" (Gojakei Ren).

நடனம் ஆடும் போது அவர்கள் உரத்த குரலில் "ஒதுரு அகோநி, மிரு அகோவ் ஒனாச்சி அகோனரா ஒதொரனா சன், சன்"என கத்தியபடியே ஆடுகின்றனர். (踊る阿呆に 見る阿呆 同じ阿呆なら 踊らな損、損) இதன் பொருள் "முட்டாள்கள் பார்த்திருக்க, முட்டாள்கள் நடனமாடுகிறார்கள், இருவருமே முட்டாள்களாக இருக்கும் போது பிறகு ஏன் நடனமாடக் கூடாது".  

என்ன‌ இதன் அர்த்தத்தை கேட்டால் சிரிப்பு வருகிறதா. 

மேலும், நடனம் ஆடும் போது இடையிடேயே அவர்கள் கத்தும்   “யத்தோசா, யத்தோசா”, “க‌யத்தா, அயத்தா”, “எராய் யச்சா, எராய் யச்சா யோய், யோய், யோய்” என்பதற்கு பெரிய அர்த்தம் இல்லையென்றாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மை குதுகலிக்க செய்கிறது.

இதன் தனித்த இசை, நடன அடவுகளுக்காகவே  ஜப்பான் முழுவதும்  இன்றும் மக்கள் இந்நடனக் கலையினை ரசித்து பார்க்கின்றனர்.

இப்படி கேலியாக‌  குரல் எழுப்பியவாறு, ஜப்பானிய பாரம்பரிய இசைக் கருவிகளான தைக்கோ மேளம், புல்லாங்குழல், மூன்று தந்தி கம்பி பொருத்தப்பட்ட இசைக் கருவிகளில் பின்னனியில் இசைக்க நடனமாடும் இந்த குழுவை “ரென்” என அழைக்கின்றனர். 

ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரி உடையணிந்து கோமாளிகளை போல் ஆடும் இந்த நடனத்தின் வரலாறு மிக சுவாரசியமானது.

சுமார் நானுறு ஆண்டுகளுக்கு முன்பு தொகுசிமா மாவட்டத்தினை ஆட்சி செய்த நில பிரபத்துவ மன்னர் "கசுசிகா லெமாகா" (Hachisuka Iemasa, 1558-1638) தொகுசிமாவில் புதிய கோட்டையினை கட்டினார் (Tokushima Catle). இதனை கொண்டாடும் விதமாக மக்கள் நன்கு குடித்து விட்டு தங்கள் மனம் போன போக்கில் ஆடினர். இதுவே பின்னாளில் தனி நடனமாக அமைந்து விட்டது. தொகுசிமா நகரின் புராதன பெயர் “அவா”, “ஒதோரி” என்றால் நடனமாடுவது எனப் பொருள். இதன் பெயராலேயே “அவா ஒதோரி” என்று இந்நடனத்திற்கு பெயர் வந்து விட்டது. அதே நேரம் அவா என்றால் அலைகள் போல கைகளை ஆட்டி ஆடுதல் என்றும் பொருள் படும். ஆகவே இந்த நடனத்திற்கான சரியான வரலாறு இன்னும் தெளிவாக தெரியவில்லை

அவா நடனத்திற்கென்று தனித்த உடைகள் உள்ளது. ஆண்கள் "கப்பி" எனப்படும் தளர்வாக உள்ள‌ பருத்தி கால் சட்டைகளையும், பெண்கள் யுகாதா எனப்படும் இறுக்கமான கால் சட்டைகளையும் அணிந்து நடமாடுகின்றனர்.  

கிமானோ  (ஜப்பானியர்கள் பாரம்பரிய உடை), அரைக்கால் சட்டை அணிந்து கையில் விசிறி ஒன்றினை மேலே ஆட்டியவாறு ஆடும் அவா நடனத்தை கீழ்காணும் காணொளியில் கண்டு களிக்கலாம்.



பின்னனி இசைக்கேற்ப வலது காலை எடுத்து வைக்கும் பொது வலது கையினை மேலே தூக்கியும், இடது காலை முன்னோக்கி எடுத்து வைக்கும் போது இடது கையை மேலெ தூக்கியவாறும் குதிகாலால் உடலை தனித்து கை மணிக்கட்டுகளை சுழற்றியவாறு முன்னோக்கி பாதங்களை எடுத்து வைத்து நடனமாடுகின்றனர்.

இதே நடனத்தின் மற்றொரு வடிவமாக உடல் முழுவதும் ஜப்பானிய பாரம்பரிய உடையான கோடை கால “கிமோனோ”ஆடைகளை அணிந்து தலையில் கோரைப்புல்லில் செய்யப்பட்ட “அமிகசா” என்னும் தொப்பியை அணிந்து ஆடுகின்றனர். தலையில் தொப்பி அணிந்து ஆடுபவர்கள் காலில்  காலணி அணிந்தும், தொப்பி இல்லாமல் ஆடுபவர்கள் காலணி அணியாமல் வெள்ளை நிறத்தில் காலணி உறைகளை மட்டும் அணிந்து நடனமாடுகின்றனர்.  நடனமாடும் போது வலது கையில் விசிறியினை ஆட்டியவாறு ஆடுகின்றனர். அதில் தங்களது குழுப் பெயரை பொறித்து வைத்துக் கொள்கின்றனர்.

நான் இந்த நடனத்தை பார்த்துக் கொண்டிருந்த போது மேடையில் ஏறி இந்நடனக்குழுவினருடன் ஆடுபவருக்கு பரிசு என இந்த ரென் குழுவின் தலைவர் அறிவித்தார். நான் சற்றும் தயங்காமல் மேடையில் ஆடினேன், அவர் மிகவும் மகிழ்ந்து அவர்கள் வைத்திருந்த விசிறி ஒன்றினை பரிசாக எனக்கு தந்தார்.

அவா நடனத்தை கற்றுத் தரும் பள்ளிகள் ஜப்பான் முழுவதும் உள்ளது. தோக்கியோவின் கட்சுசிகா பகுதியில் ஒரு பள்ளியினை பார்த்திருக்கிறேன். தற்போது இந்நடனத்தை மேற்குலக நாடுகளிலும் ஆர்வமாக கற்று வருகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் நிவாகா-ரென் (Niwaka-ren) என அழைக்கப்படும் புது முக வகுப்புகளில் இந்த நடனத்தை கற்றுத் கொள்ளலாம்.

இன்றும் இந்த நடனக் கலையினை போற்றும் விதத்தில் “தொகுசிமா” நகரில் ஆகஸ்டு இரண்டாம் வாரம் (12-15 August) மிகப் பெரிய “அவா ” நடன சங்கமம் நடைபெறுகிறது. இப்பகுதியில்  உள்ள பல ரென் குழுக்களும் இந்நாளில் சாலைகளில் ஆடிச் செல்வர். இந்நடன நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு துவங்கி இரவு பத்து மணி வரை நீளும்.  பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டு களிக்கும் இந்த விழாவை நாட்டுப் புற நடன பிரியர்கள் தவற விடக் கூடாது. இந்நகரில் நடைபெறும் அவா நடனத்தின் மூலம் தங்கள் முன்னோர்களின் ஆன்மாக்களை மீண்டும் மகிழ்விக்க முடியும் என புத்த மதம் நம்புவதால் இதனை தொடர்கிறார்கள்.

தொகுசிமா நகரம் (Tokushima) ஒசாகா மாகாணத்தில் இருந்து ஒரு மணி நேர பயண தொலைவில் உள்ளது. ஜப்பானின் தலை நகர் தோக்கியோவில் இருந்து நேரடியாக விமானத்திலும், ஜேஆர் ரயில் சேவை (JR Railways மூலமாகவும் வந்து சேரலாம். இந்த நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெறும் இடம் தொகுசிமா நகரின் இரயில் நிலையம் அருகிலேயே  உள்ளதால் இரயிலில் பயணிப்பது விமானத்தில் இருந்து வருவதை காட்டிலும் சிறந்தது. ஜப்பானில் நடைபெறும் மிகப்பெரிய நடனத்திருவிழாவும் இதுவே. ஒரு வருடத்திற்கு உலகெங்கும் இருந்து 1.3 மில்லியன் அளவிற்கு இந்த நடனத்தை காண வருகிறார்கள்.

கொஜாகெய்- ரென் குழுவினரின் அவா நடனம். (This photo was taken at Awaji International Multiculutural Center, Awaji Islan, Japan)

கொஜாகெய்- ரென் குழுவின் தலைவர் எங்களை பாராட்டி விசிறி வழங்கிய போது.


நோபல் பரிசாளர் நெகிசி (Ei-ichi Negishi) அவர்களுடன் அவா நடனம் ஆடிய போது எடுத்த படம்


வா நடனத்தை தொகுசிமா தெருக்களில் ஆடும் கலைஞர்கள் (Photo courtesy: tsunagujapan.com)

அவா நடனத்தை தொகுசிமா தெருக்களில் ஆடும் கலைஞர்கள் (Photo courtesy: tsunagujapan.com)

அவா நடனத்தை தொகுசிமா தெருக்களில் ஆடும் கலைஞர்கள் (Photo courtesy: tsunagujapan.com)


குறிப்பு:
1. தொகுசிமா நகரில் உள்ள தொகுசிமா கோட்டை (Tokushima castle) பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. இலையுதிர் (Autumn) காலத்தில் இந்த கோட்டை பார்க்கவே மிக ரம்மியமாக இருக்கும்.

2.  ஜப்பானின் புனித யாத்திரையில் போக வேண்டிய 88 கோவில்களில் 14 கோவில்கள் தொகுசிமா மாவட்டத்தில் உள்ளது. இந்த பகுதிக்கு வருபவர்கள் இந்த இடங்களுக்கும் போய் வர திட்டமிடலாம்.












No comments:

Post a Comment