Monday, 19 June 2017

தாய்மொழியில் அறிவியல் புத்தகங்கள், ஆய்விதழ்கள் - வழிகாட்டும் ஜப்பான்

நோபல் பரிசு வரலாற்றில் ஜப்பான் இது வரை 25 விருதுகளை வென்றுள்ளது. இந்த விருது பட்டியலில் தலா ஒரு விருது இலக்கியம் மற்றும் அமைதிக்காக வழங்கபட்டது, ஏனைய 23 விருதுகள் இயற்பியல், வேதியியல், மற்றும் மருத்துவ துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் 86 தேசிய பல்கலைக் கழகங்கள் உள்ளது. இது தவிர 96 பொது பல்கலைக் கழகங்களும், 597 தனியார் பல்கலைக் கழகங்களும் உள்ளது. இதில் ஏறத்தாழ 26 பல்கலைக் கழங்களில் மட்டும் இளம் நிலையில் இருந்து உயர்கல்வி வரை ஆங்கிலம் பயிற்று மொழியாக உள்ளது. ஏனைய கல்வி நிறுவனங்கள் அனைத்தும் முழுக்க ஜப்பானியர்களின் தாய்மொழியாகிய ஜப்பானிய மொழியிலேயே நடத்தப்படுகிறது.
ஆரம்ப பள்ளி முதல், உயர்கல்வி ஆராய்ச்சி வரை ஜப்பானில் அவர்களது தாய்மொழி மூலம் பயில‌ 90 சதவிகித கல்வி நிறுவனங்கள் வாய்ப்பளிக்கிறது. இதன் வாயிலாக ஜப்பானியர்கள் அறிவியல் மற்றும் நுட்ப துறைகளில் உலக அளவில் கோலோச்சுகின்றனர்.
ஆங்கிலத்தை உலகிற்கான இணைப்பு மொழியாக தொழில் நிறுவனங்களில் வைத்துக் கொண்டு முழுக்க பள்ளி மற்றும் உயர்கல்வியினை அவர்களது தாய்மொழியிலேயே தருகிறார்கள்.
முக்கியமாக‌, ஜப்பானில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்திற்கு வெளியே பரந்துபட்ட அளவில் வெகுசன அறிவியல் புத்தகங்கள் கிடைக்கிறது. இந்த வசதி இம்மாணவர்களை கண்டுபிடிப்பாளர்களாக உருவாக்குகிறது.
ஜப்பானில் உயர்கல்வி ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலும் தங்களது தாய்மொழியிலேயே ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுவதால் உள்ளூர் நிறுவனங்கள் எளிதாக அவற்றினை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் உள்ளூரில் புதிய நுட்ப தொழில்களில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இந்த வாய்ப்பு இவர்களது வேலை வாய்ப்பு விகிதத்தை உயர்த்தியுள்ளது. தற்போது ஜப்பானில் சராசரியாக 100 நபர்களுக்கு 130 வேலை வாய்ப்பு பணிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளது, ஆனால் தாய்மொழியில் காணக் கிடைக்கும் வெகுசன அறிவியல் அடிப்படை புத்தகங்கள், ஆராய்ச்சி இதழ்கள் இவை தமிழில் அரிதினும் அரிதாகவே கிடைக்கிறது. இனியாவது காலம் தாழ்த்தாமல் தமிழ் மொழியில் பல மொழி பெயர்ப்பு புத்தகங்களை கொண்டு வரலாம். உயர்கல்வி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் தமிழ் மொழியில் எளிய மக்களுக்கு புரியும் வகையில் சமகால நுட்பங்களை எழுதலாம். அறிவியலுக்கு வெளியே இருப்பவர்கள் வெகுசன அறிவியல் புத்தகங்கள் எழுதலாம்.
எங்களது தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள சர்வதேச போட்டோ கேட்டலிஸ்ட் மையத்தில் காணக் கிடைக்கும் ஜப்பானிய ஆய்விதழ்கள், வெகுசன இதழ்கள் பற்றிய தகவல்களை இக்காணொளியில் பதிவு செய்துள்ளேன்.
இதனை உங்கள் நண்பர்களுக்கு முகநூல், வாட்சப் மூலம் பகிர்ந்து உதவுங்கள்.
உங்கள் கருத்துகளையும், மொழி பரிமாற்றத்திற்கு பரிந்துரைக்கும் அறிவியல் மற்றும் நுட்ப புத்தகங்களை கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும். 
tamilsciencebooks@gmail.com

நன்றி!
சுதாகர் பிச்சைமுத்து
Note:
Video Courtesy: Dr Nithish Roy
My Sincere thanks to Photocatalysis International Research Center, Tokyo University of Science, Japan.
**This video can be used only for education purpose.
Youtube link
Saturday, 10 June 2017

பிளாஸ்டிக் அரிசி வீண் வதந்தி - 2 (அரிசி ஏன் ஓட்டுகிறது)பிளாஸ்டிக் அரிசியின் பீதிக்கு மிக முக்கிய காரணம் வேக வைத்த சாதத்தை ஆற வைத்து நன்கு பிசைந்து உருட்டும் போது அவை பந்து போல இறுகவதுதான்.

இந்த குழப்பம் எல்லாம் ஏன் வருகிறது?

காலம் காலமாய் சோற்றை சாப்பிடுபவர்கள் இது போன்ற விளையாட்டு சோதனைகளை செய்து பார்க்க தோன்றுவதில்லை. இதன் விளைவாகத்தான் பிளாஸ்டிக் அரிசி போன்ற வீண் பயம் நமக்கு ஏற்படுகிறது. பயம் ஏற்படுவது இயற்கைதான், ஆனால் அது சரியா, தவறா என அறிவியலில் துணை கொண்டு நிச்சயம் தெளிவுற வேண்டும்.

முதலில் சோற்றுப் பருக்கையினை கையால் நசுக்கும் போது ஏன் அது ஒட்டுகிறது என்ற அடிப்படை அறிவியலை காண்போம்.

அரிசியினை கையால் அள்ளலாம். அது கையில் ஒட்டாது. அப்படியே குளிர்ந்த நீரில் போட்டு சிறிது நேரம் போட்டு ஊர வைத்து விட்டு மீண்டும் கையில் அள்ளுங்கள். இப்போதும் அரிசி கையில் ஒட்டாது.

ஆனால் கொதிக்கும் நீரில் அரை மணி நேரம் அரிசியினை போட்டு பிறகு கையில் எடுத்தால் பிசு பிசுவென ஒட்டுகிறது. அப்படியானால் சுடுநீரில் போட்ட பிறகு அரிசிக்கு எப்படி ஒட்டும் தன்மை கிடைக்கிறது. இது பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாக பார்ப்போம்.

அரிசியில் இரண்டு விதமான ஸ்டார்ச் மூலக்கூறுகள் உள்ளது. ஒன்று அமிலோஸ் மற்றொன்று அமிலோ பெக்டின். சுடு நீரில் அரிசியைப் போடும் போது அமிலோ பெக்டின் ஸ்டார்ச் மூலகூறுகள் சங்கிலி போன்ற நீண்ட‌ பிணைப்பில் இருந்து உடைந்து வெளியேறுகிறது. இந்த ஸ்டார்ச் மூலக்கூறூகள் வெளியேற்றத்தால் அவை மிருதுவாகி, பசை போல் ஒட்டும் தன்மையினை பெறுகின்றன.

இந்திய அரிசியினை ஒப்பிடும் போது தென் கிழக்கு ஆசிய நாடுகளில் (கொரியா, சீனா, தைவான், ஜப்பான்) உள்ள அரிசியில் அதிக அளவு அமிலோபெக்டின் ஸ்டார்ச்சும், மிகக்குறைந்த அளவே அமிலோஸ் ஸ்டார்ச்சும் உள்ளது. ஆகவே தான் இந்த நாடுகளில் உள்ள அரிசி சமைத்த பின் அதிக ஒட்டும் தன்மை பெறுகிறது.

இப்படித்தான் நம் ஊர் அரிசியிலும் ஸ்டார்ச் வெளியேறும் போது அவை ஒட்டும் தன்மை பெறுகிறது. இதனை நன்கு கையால் பிசைந்து அழுத்தம் தரும் போது அவை பந்து போல் இறுகிக் கொள்கிறது.

மற்றொன்று தரையின் மீது இந்த சோற்று உருண்டையினை போடும் போது தரையானது சமமான‌ எதிர் விசையினை சோற்று உருண்டை மீது செலுத்தும் போது அவை பந்து போல் குதிக்கும். இதே இந்த சோற்று உருண்டையினை ஒரு துணி மீது போட்டால் அதே அளவிற்கு குதிக்காது, காரணம் துணி மிகக் குறைந்த எதிர் விசையினை மட்டுமே சோற்று உருண்டையின் மீது செலுத்தும். ஆகவே, சுடு சோற்றில் நிகழும் ஸ்டார்ச் மூலக்கூறுகள் வெளியேற்றத்தினை புரிந்து கொண்டால் பிளாஸ்டிக் அரிசி என்பது வீண் வதந்தி என்று நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

என் நட்பு வட்டத்தில் பாலிமர் துறையில், அரிசி, உயிரி நுட்பம், விவசாய துறையில் ஆராய்ச்சிப் பணியில் இருக்கும் பல நண்பர்கள் உள்ளனர். உங்களுக்கு இருக்கும் கேள்விகளை இந்த பதிவில் கேளுங்கள். நிச்சயம் அவர்கள் மூலம் பதிலை பெற்றுத் தருகிறேன்.

குறிப்பு:
ஜப்பானில் சோற்று உருண்டை ஒனிகிரி (Onigiri) என்றழைக்கப்படும். இந்த ஒனிகிரி உருண்டைகள் கையளவு வடிவில் பார்க்க பந்து போல் இருக்கும். இதனோடு காய், மீன், கறீ ஆகியவற்றை தூவினாற் போல் போட்டு கடல் பாசி தாள் கொண்டு சுற்றி சாப்பிடுவார்கள். இந்த உருண்டை எல்லாம் தரையில் போட்டால் நம் ஊர் ரப்பர் பந்து தோற்று போகும். ஆகவே பிளாஸ்டிக் அரிசி அச்சத்தை தூக்கி எறியுங்கள்.

Japan Onigiri (Rice ball)

Japan Onigiri (Rice ball)

Japan Onigiri (Rice ball)

Sunday, 4 June 2017

ஜப்பான் ஆரம்பக் கல்வி பாட புத்தகங்கள் -1


“பாடத்திட்டமே சரி இல்லை”, “கணக்கு ஒழுங்காவே சொல்லித் தரமாட்டேன் என்கிறார்கள்”, “ஏ பி சி டி இன்னும் எழுதத் தெரியலை”, “இரண்டு போயம் சரியா சொல்லித் தர மாட்டேங்குறாங்க”, “இத்து போன சிலபஸ்”,

ஜப்பான்காரன பாருங்க தண்ணில ஓடற வண்டி கண்டுபிடிச்சிட்டான், எல்லா வேலையையும் ரோபோட்தான் அங்கு செய்யுதாம்.. அவனுங்க மாதிரி நாமளும் முன்னேறனும். நம்ம ஊர் பாடத்திட்டத்தை அப்டியே தூக்கி எறிஞ்சுட்டு மாத்தனும்... இப்படி நிறைய கூப்பாடுகளை சமீப காலத்தில் கேட்க முடிகிறது..

ஆனால் என்றாவது ஜப்பானிய ஆரம்ப பள்ளிகளில் என்ன சொல்லித் தருகிறார்கள் என்று யோசித்தது உண்டா?

ஜப்பானில் 4 வயதுக்குட்டப்ட்ட பாலர் பள்ளிகளில் தொடங்கி வகுப்பு 1 மாணவர்களுக்கான‌ புத்தகங்களில் முதலில் சொல்லித் தருவது

எப்படி கழிவறையில் ஆய் போவது?
எப்படி பேனா பிடிப்பது?
எப்படி பெரியவர்கள் இருக்கும் அறையில் நுழையும் போது நாம் முன் அனுமதி பெற வேண்டியது?
சாப்பிட்டு முடித்த பின் பள்ளியினை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது?

இப்படிப்பட்ட சமூக கல்வியைத்தான் ஜப்பானிய‌ பிஞ்சுகளின் மனதில் முதலில் விதைக்கிறார்கள், அதனால் நல்ல குடிமகன்களை பெறுகிறார்கள்.

நண்பர்களே, கணக்குகளை ஒரு கால்குலேட்டர் துணை கொண்டு பின்னாளில் போட்டு விடலாம், ஆங்கிலத்தைக் கூட ஒரு டிரான்சிலேட்டர் வசதியுடன் செய்து விடலாம். ஆனால் சமூக கல்வியை அவர்கள் எங்கே கற்க முடியும்?

ஆரம்ப கல்வியை வேறு தளத்தில் நாம் அணுக வேண்டிய நேரம் இது.

சமச்சீர் கல்வி இந்த தளத்தில்தான் துவங்கியது. முளையும் போதே குய்யோ முய்யோ என கத்தியே அதனை கிள்ளி போட்டு விட்டீர்கள்.
சூரிய மின் கலங்கள் மூலம் இயங்கும் பொருட்கள் தரு தானியங்கி இயந்திரங்கள் (solar powered vending machines)


ஜப்பானின் தெருவோரத்தில் 24 மணி நேரமும் இயங்கும் பொருட்கள் வழங்கு இயந்திரங்கள் (vending machine) மூலம்குடிநீர், குளிர்பானம், தேநீர் அனைத்தும் காசு போட்டு எடுத்துக் கொள்ளலாம்.

2011 ஆம் ஆண்டு ஜப்பானில் கடுமையான நில நடுக்கமும், சுனாமியும் ஏற்பட்ட போது பெரும் மின்சாரத் தடை ஏற்பட்டது. அப்போது மக்கள் குடிநீருக்கு பெரிதும் சிரமப்பட்டனர்.

தற்போது இது போன்ற சிக்கலைத் தீர்க்க பெரும்பாலான பொருட்கள் வழங்கு இயந்திரங்களை சோலார் பேனல்களுடன் இணைத்து வைத்துள்ளனர்.

பொது விநியோக மின்சாரத்தில் தடை ஏற்படும் சூழலில் சிறிய 100 வாட்ஸ் சோலார் பேனல் தயாரிக்கும் மின்சாரம் மூலம் சில்லறை காசுகளை தரும் இயந்திரத்தினை இயக்கவும், இந்த இயந்திரத்தின் உள்ளே உள்ள சிறிய எல் ஈ டி மின் விளக்கினை இயக்கவும் பயன்படுகிறது. ஆகையால் ஒரு வேளை பேரிடர் காலத்தில் மின்சாரம் இல்லாமல் போனாலும் தொடர்ந்து இந்த இயந்திரத்தில் இருந்து பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும் மின்சாரத்தை சூரிய ஒளியில் இருந்து இலவசமாக பெறுவதால் ஆற்றல் சிக்கனமும் ஆயிற்று.

பேரிடர் காலங்களில் இருந்து ஜப்பான் மக்கள் நிறைய கற்றுக் கொள்கிறார்கள். நாமும் இதே போல் சிறிய அளவில் மின்சாரம் தேவைப்படும் இடங்களில் சோலார் பேனல்களை அறிமுகப்படுத்தலாம்.

இந்த நேரத்தில் காசு போட்டால் பொருள் தரும் தானியங்கி இயந்திரம் (vending machine) முதன் முதலில் எப்போது வந்தது என்ற சிறிய தகவலையும் தெரிந்து கொள்வோம்.

சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள் கிபி ஒன்றாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டைச் சேர்ந்த கணித மேதையும், அறிவியல் நுட்பங்களில் தலை சிறந்து விளங்கிய அலெக்சான்ட்ரியா (Alexandria) என்பவர் முதன் முதலில் சில்லறை காசு போட்டால் புனித நீரை தரும் ஒரு அமைப்பை வடிவமைத்தார்.

பின்னாளில் நவீன அறிவியல் கால கட்டத்தில் 16 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இதே நுட்பத்தை பபோலவே தானியங்கி சிகரெட் வழங்கும் இயந்திரத்தை வடிவமைத்தார்கள். அதன் பிறகு 1822 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் ரிச்சர்ட் கார்லெ என்பார் காசு போட்டு செய்தித்தாள் எடுத்துக் கொள்ளும் இயந்திரத்தை வடிவமைத்தார்.

அதன் பிறகு 1867 ஆம் ஆண்டு சைமன் டென்காம் என்பார் தானியங்கி தபால் தலைகளை தரும் இயந்திரத்தை வடிவமைத்து அதற்கு காப்புரிமையும் பெற்றார்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் வடிவமைப்பில் பெரிய மாற்றங்களை கண்ட தானியங்கி பொருள் வழங்கு இயந்திரங்கள் 1880 களில் இங்கிலாந்தில் பரவலாக பயன்பாட்டில் வந்தது. குறிப்பாக தபால் நிலையங்கள், இரயில் நிலையங்களில் இதன் பயன்பாடு பாராட்டத் தக்கது.

சமீப காலத்தில் மைக்ரோமோட்டார்களின் பயன்பாடு பெரிய அளவில் இந்த இயந்திரங்களில் பயன்படுகிறது. ஒவ்வொரு பொருட்களுக்கும் தக்கவாறு இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதைப்பற்றி பேசினால் பத்து பக்கங்களுக்கு எழுத வேண்டி வரும்.

எது எப்படியோ, இன்றைய நவீன கால கட்டத்தில் அறிவியல் நுட்பம் மக்களுக்கான வசதிகளை பெரிய அளவில் எளிதாக்கி தந்திருக்கிறது. அந்த வகையில் பொருட்கள் வழங்கு இயந்திரங்கள் ஒரு முக்கியமான உதாரணமாக சொல்லலாம்.

முக்கியமாக‌ சோலார் பேனல்களை இயன்ற இடங்களில் பயன்படுத்துங்கள்.


புகைப்படம் எடுத்த இடம்:
சுகுபா (Tsukuba) பேருந்து நிலையம், ஜப்பான்.

Thursday, 1 June 2017

மயில் நம்மில் எத்னி பேருக்கு தெரியும்.

 ஆங்கிலத்தில் மயிலின் பொது பலவின்பாற் பெயர் Peafowl ஆகும். "இந்திய மயில்" (Indian Peafowl) அல்லது "நீல மயில்" தெற்காசியாவில் அதிகமாக வாழும் பறவை  இனம் ஆகும்.

ஆங்கிலத்தில் ஆண் மயிலுக்கு  Peacock என்றும், பெண்  மயிலுக்கு Peahen  என்று பெயர். தமிழில் இப்படி பால் சார்ந்து மயிலுக்கு தனித் தனி பெயர்கள் உள்ளதா? ஆம் பெண் மயிலுக்கு "அளகு" என்று பெயர், ஆண் மயிலுக்குச் "சேவல்" என்று பெயர் (நன்றி: விக்கிபீடியா).

தோற்றத்தில் அளகிற்கும் (பெண்), சேவலுக்கும் (ஆண்) உள்ள மிகப்பெரிய வித்தியாசம் அதன் தோகைதான். ஆண் மயிலுக்கு மிக நீண்ட பீலி (இறகு) உண்டு. பெண் மயிலின் பீலி குறைந்த நீளம் உடையது. அகவல், ஆலல், ஏங்கல் போன்ற பல சொற்களால் மயில் எழுப்பும் ஒலியைக்  குறிப்பிடுகிறார்கள்.

நம் சங்க இலக்கியங்களில் மயில் தோகையினை பல பெயர்களில் அழைக்கிறார்கள். அவற்றில்  சரணம், சிகண்டம், கூந்தல், சந்திரகம், கலாபம், கூழை, பீலி, தொங்கல் மற்றும் தூவி என்ற சொற்பதங்களை காண முடிகிறது.  தமிழ் இலக்கியங்களில் மயிலுக்கு பல பெயர் உண்டு (மயூரம், ஞமலி, மஞ்சை).

மற்ற பறவைகளை ஒப்பிடும் போது மயிலுக்கு உள்ள தனிச்சிறப்பு. மயிலின் முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சு மயில் பிறந்த ஒரு சில மணி நேரத்தில் எழுந்து நடக்கத் துவங்கி விடும்.

இப்படி மயிலைப் பற்றி நிறைய பேசிக் கொண்டே போகலாம், ஆனால் சுருக்கமாக மயில் எவ்வாறு தங்கள் ஜோடியுடன் இணை சேர்கிறது என்பதனை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்.

ஆண் மயில் மனிதர்களைப் போலவே பெண் மயிலை ஈர்க்க பயன்படுத்தும் தந்திரம்தான் தன் அழகான தோகையினை விரித்து ஆடுவது.

மனிதர்களைப் போலவே ஆண் மயிலானது பெண் மயிலின் பின்புறம் உள்ள‌ புணர்ச்சி கழிவு பொவாய் (Cloaca)  வழியாகவே உறவு கொண்டு விந்தணுக்களை   செலுத்துகிறது. இவை சினைக் குழாய் (Oviduct) வழியாகச் சென்று அண்டத்தில் உள்ள சினைமுட்டைகளுடன் இணைந்து பெண் மயிலை கருத்தரிக்கச் செய்கின்றது. பிறகு முட்ட இட்டவுடன் பெண் மயில் அடைகாத்து குஞ்சு பொறிக்கின்றன.ஆகையால் ஆண் மயில் தன் கண்ணீர் வழியாக பெண் மயிலை சினை கொள்ள வைக்கிறது என்பது புராணங்கள் வழி வந்த கட்டுக்கதையாகவோ அல்லது மூட நம்பிக்கையாகவோ இருக்கலாம். முற்றிலும் அறிவியலுக்கு முரணானது.

பெண் மயில் எவ்வாறு ஆண் மயிலுடன் இணை ஏற்கிறது (matting) என்பது பற்றிய சுவாரசியமான ஆராய்ச்சி உலகம் முழுவதும் சென்று கொண்டு உள்ளது. அதில் ஒரு விசயத்தை இங்கே பகிர்கிறேன்.

மயிலின் வால் பகுதியில் உள்ள நீண்ட தோகையை விரித்து ஆடும் போது அதில் உள்ள கண்  (eyespot) போன்ற அமைப்புதான் பெண் மயிலை ஈர்க்க உதவும் சமிக்ஞையினை தருகிறது என்று பரிணாமக் கொள்கையினை உலகிற்கு தந்த டார்வின் எழுதியிருந்தார். இதனையே பின் வந்த பெரும்பாலான ஆய்வுகள் ஏற்றுக் கொண்டன. குறிப்பாக 1991 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் திறந்த வெளி பல்கலைக் கழகத்தில் (Open University, England) மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெட்ரி என்பார் மயில் தோகையில் உள்ள கண் போன்ற உருவங்களில் எண்ணிக்கைக்கு ஏற்ப பெண் மயில் ஈர்க்கப்பட்டு இணை சேரும் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று ஆய்வு முடிவினை வெளியிட்டார் (Anim. Behav., 1991, 41, 323-331).

ஆனால் பின்னாளில் 2008 ஆம் ஆண்டு ஜப்பானில் தோக்கியோ பல்கலைக் கழகத்தில் மயில் எவ்வாறு இணை சேர்கின்றது என்ற மிக நெடிய ஆய்வில் பல புதிய தகவல்களை நிரூபணமாக தந்தனர் (Animal Behaviour 75(2008) 1209–1219).

வழமையாக  பரந்து விரிந்து அதிக எடை உள்ள தோகை கொண்ட ஆண் மயிலே அதிகமாக பெண் மயிலை ஈர்கிறது என்ற கற்பிதத்தை தாண்டி குறைவான தோகைகளை கொண்ட ஆண் மயிலையே பெண் மயில்கள் இணைக்கு ஏற்கின்றன என்ற உண்மையினை அவர்கள் கண்டறிந்தனர். காரணம் அதிக தோகை எடையினால் இணை சேரும் போது ஏற்படும் சிரமங்களை (physical stress) பெண் மயில் விரும்புவதில்லை. இந்த ஆய்வானது அது வரை பெண் மயில்கள் எவ்வாறு இணை சேர்கின்றன (mating success rate) என்ற தளத்தில் ஆய்வாளர்கள் கொண்டிருந்த கருத்தினை மாற்றியமைத்தது.

 இதே பார்வையில் 2011 ஆம் ஆண்டு கனடாவில் உள்ள குயின்சு பல்கலைக் கழகத்தில் ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது (R. Dakin, R. Montgomerie / Animal Behaviour 82 (2011) 21-28). குறிப்பாக‌, தோகைகள் உடைய மற்றும் தோகைகள் நீக்கப்பட்ட  ஆண் மயில்களுடன் பெண் மயிலை கலந்து ஆய்வினை மேற்கொண்டனர். ஆச்சரியமாக, குறைவான தோகைகள் உடைய ஆண் மயிலுடன் சில தருணங்களில் அவை இணை சேருகின்றன என்ற உண்மையினை அவர்கள் கண்டறிந்தனர். எப்படி தோகை விரித்து சமிக்ஞை தராமல் பெண் மயில் ஆண் மயிலின் குறிப்பை உணருகிறது என்று தீவிரமாக சோதனை செய்து பல முடிவுகளை அறிவித்தனர்.

பெண் மயில் தனது சிறு கூட்டத்தில் உள்ள பல ஆண்களுடன் விருப்பத்திற்கேற்ப இணைகிறது. பொதுவாக இதனை பாலிகேமஸ் இனம் என விலங்கியலில் வரையறுக்கின்றனர். ஆகையால் ஒரு பெண் மயில் ஈர்க்கப்பட ஆண் மயிலின் தோகையில் உள்ள கண் போன்ற உருவ அமைப்பு அல்லாது அதன் நடத்தை (behavior), தோற்றம் (appearance) அவை எழுப்பு ஒலி (vocal) என பல வகையில் ஈர்க்கப்படலாம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

நம் குழந்தைகளுக்கு பறவை, விலங்குகள் பற்றிய நடத்தையியல், சூழலியல் தகவமைப்பு ஆகியவற்றை சொல்லிக் கொடுங்கள்.  ஒவ்வொரு விலங்கும், பறவையும் வித்தியாசமான நடத்தையியலை உடையது. இதனை அறிந்து கொள்வதன் வாயிலாக நாம் சூழலியலை புரிந்து கொள்ளவும் அதனோடு நம் சுற்றுப் புறத்தை பகிர்ந்து கொள்ளவுமான ஒரு பரந்து பட்ட பொது அறிவைத் நாம் பெறலாம்.

புராணங்க புரட்டு கதைகளை விலக்கி வைத்துவிட்டு அறிவியலின் வாயிலாக உண்மையினை அறிவோம்.