Saturday 10 June 2017

பிளாஸ்டிக் அரிசி வீண் வதந்தி - 2 (அரிசி ஏன் ஓட்டுகிறது)



பிளாஸ்டிக் அரிசியின் பீதிக்கு மிக முக்கிய காரணம் வேக வைத்த சாதத்தை ஆற வைத்து நன்கு பிசைந்து உருட்டும் போது அவை பந்து போல இறுகவதுதான்.

இந்த குழப்பம் எல்லாம் ஏன் வருகிறது?

காலம் காலமாய் சோற்றை சாப்பிடுபவர்கள் இது போன்ற விளையாட்டு சோதனைகளை செய்து பார்க்க தோன்றுவதில்லை. இதன் விளைவாகத்தான் பிளாஸ்டிக் அரிசி போன்ற வீண் பயம் நமக்கு ஏற்படுகிறது. பயம் ஏற்படுவது இயற்கைதான், ஆனால் அது சரியா, தவறா என அறிவியலில் துணை கொண்டு நிச்சயம் தெளிவுற வேண்டும்.

முதலில் சோற்றுப் பருக்கையினை கையால் நசுக்கும் போது ஏன் அது ஒட்டுகிறது என்ற அடிப்படை அறிவியலை காண்போம்.

அரிசியினை கையால் அள்ளலாம். அது கையில் ஒட்டாது. அப்படியே குளிர்ந்த நீரில் போட்டு சிறிது நேரம் போட்டு ஊர வைத்து விட்டு மீண்டும் கையில் அள்ளுங்கள். இப்போதும் அரிசி கையில் ஒட்டாது.

ஆனால் கொதிக்கும் நீரில் அரை மணி நேரம் அரிசியினை போட்டு பிறகு கையில் எடுத்தால் பிசு பிசுவென ஒட்டுகிறது. அப்படியானால் சுடுநீரில் போட்ட பிறகு அரிசிக்கு எப்படி ஒட்டும் தன்மை கிடைக்கிறது. இது பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாக பார்ப்போம்.

அரிசியில் இரண்டு விதமான ஸ்டார்ச் மூலக்கூறுகள் உள்ளது. ஒன்று அமிலோஸ் மற்றொன்று அமிலோ பெக்டின். சுடு நீரில் அரிசியைப் போடும் போது அமிலோ பெக்டின் ஸ்டார்ச் மூலகூறுகள் சங்கிலி போன்ற நீண்ட‌ பிணைப்பில் இருந்து உடைந்து வெளியேறுகிறது. இந்த ஸ்டார்ச் மூலக்கூறூகள் வெளியேற்றத்தால் அவை மிருதுவாகி, பசை போல் ஒட்டும் தன்மையினை பெறுகின்றன.

இந்திய அரிசியினை ஒப்பிடும் போது தென் கிழக்கு ஆசிய நாடுகளில் (கொரியா, சீனா, தைவான், ஜப்பான்) உள்ள அரிசியில் அதிக அளவு அமிலோபெக்டின் ஸ்டார்ச்சும், மிகக்குறைந்த அளவே அமிலோஸ் ஸ்டார்ச்சும் உள்ளது. ஆகவே தான் இந்த நாடுகளில் உள்ள அரிசி சமைத்த பின் அதிக ஒட்டும் தன்மை பெறுகிறது.

இப்படித்தான் நம் ஊர் அரிசியிலும் ஸ்டார்ச் வெளியேறும் போது அவை ஒட்டும் தன்மை பெறுகிறது. இதனை நன்கு கையால் பிசைந்து அழுத்தம் தரும் போது அவை பந்து போல் இறுகிக் கொள்கிறது.

மற்றொன்று தரையின் மீது இந்த சோற்று உருண்டையினை போடும் போது தரையானது சமமான‌ எதிர் விசையினை சோற்று உருண்டை மீது செலுத்தும் போது அவை பந்து போல் குதிக்கும். இதே இந்த சோற்று உருண்டையினை ஒரு துணி மீது போட்டால் அதே அளவிற்கு குதிக்காது, காரணம் துணி மிகக் குறைந்த எதிர் விசையினை மட்டுமே சோற்று உருண்டையின் மீது செலுத்தும். ஆகவே, சுடு சோற்றில் நிகழும் ஸ்டார்ச் மூலக்கூறுகள் வெளியேற்றத்தினை புரிந்து கொண்டால் பிளாஸ்டிக் அரிசி என்பது வீண் வதந்தி என்று நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

என் நட்பு வட்டத்தில் பாலிமர் துறையில், அரிசி, உயிரி நுட்பம், விவசாய துறையில் ஆராய்ச்சிப் பணியில் இருக்கும் பல நண்பர்கள் உள்ளனர். உங்களுக்கு இருக்கும் கேள்விகளை இந்த பதிவில் கேளுங்கள். நிச்சயம் அவர்கள் மூலம் பதிலை பெற்றுத் தருகிறேன்.

குறிப்பு:
ஜப்பானில் சோற்று உருண்டை ஒனிகிரி (Onigiri) என்றழைக்கப்படும். இந்த ஒனிகிரி உருண்டைகள் கையளவு வடிவில் பார்க்க பந்து போல் இருக்கும். இதனோடு காய், மீன், கறீ ஆகியவற்றை தூவினாற் போல் போட்டு கடல் பாசி தாள் கொண்டு சுற்றி சாப்பிடுவார்கள். இந்த உருண்டை எல்லாம் தரையில் போட்டால் நம் ஊர் ரப்பர் பந்து தோற்று போகும். ஆகவே பிளாஸ்டிக் அரிசி அச்சத்தை தூக்கி எறியுங்கள்.

Japan Onigiri (Rice ball)

Japan Onigiri (Rice ball)

Japan Onigiri (Rice ball)

No comments:

Post a Comment