Sunday 4 June 2017

சூரிய மின் கலங்கள் மூலம் இயங்கும் பொருட்கள் தரு தானியங்கி இயந்திரங்கள் (solar powered vending machines)


ஜப்பானின் தெருவோரத்தில் 24 மணி நேரமும் இயங்கும் பொருட்கள் வழங்கு இயந்திரங்கள் (vending machine) மூலம்குடிநீர், குளிர்பானம், தேநீர் அனைத்தும் காசு போட்டு எடுத்துக் கொள்ளலாம்.

2011 ஆம் ஆண்டு ஜப்பானில் கடுமையான நில நடுக்கமும், சுனாமியும் ஏற்பட்ட போது பெரும் மின்சாரத் தடை ஏற்பட்டது. அப்போது மக்கள் குடிநீருக்கு பெரிதும் சிரமப்பட்டனர்.

தற்போது இது போன்ற சிக்கலைத் தீர்க்க பெரும்பாலான பொருட்கள் வழங்கு இயந்திரங்களை சோலார் பேனல்களுடன் இணைத்து வைத்துள்ளனர்.

பொது விநியோக மின்சாரத்தில் தடை ஏற்படும் சூழலில் சிறிய 100 வாட்ஸ் சோலார் பேனல் தயாரிக்கும் மின்சாரம் மூலம் சில்லறை காசுகளை தரும் இயந்திரத்தினை இயக்கவும், இந்த இயந்திரத்தின் உள்ளே உள்ள சிறிய எல் ஈ டி மின் விளக்கினை இயக்கவும் பயன்படுகிறது. ஆகையால் ஒரு வேளை பேரிடர் காலத்தில் மின்சாரம் இல்லாமல் போனாலும் தொடர்ந்து இந்த இயந்திரத்தில் இருந்து பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும் மின்சாரத்தை சூரிய ஒளியில் இருந்து இலவசமாக பெறுவதால் ஆற்றல் சிக்கனமும் ஆயிற்று.

பேரிடர் காலங்களில் இருந்து ஜப்பான் மக்கள் நிறைய கற்றுக் கொள்கிறார்கள். நாமும் இதே போல் சிறிய அளவில் மின்சாரம் தேவைப்படும் இடங்களில் சோலார் பேனல்களை அறிமுகப்படுத்தலாம்.

இந்த நேரத்தில் காசு போட்டால் பொருள் தரும் தானியங்கி இயந்திரம் (vending machine) முதன் முதலில் எப்போது வந்தது என்ற சிறிய தகவலையும் தெரிந்து கொள்வோம்.

சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள் கிபி ஒன்றாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டைச் சேர்ந்த கணித மேதையும், அறிவியல் நுட்பங்களில் தலை சிறந்து விளங்கிய அலெக்சான்ட்ரியா (Alexandria) என்பவர் முதன் முதலில் சில்லறை காசு போட்டால் புனித நீரை தரும் ஒரு அமைப்பை வடிவமைத்தார்.

பின்னாளில் நவீன அறிவியல் கால கட்டத்தில் 16 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இதே நுட்பத்தை பபோலவே தானியங்கி சிகரெட் வழங்கும் இயந்திரத்தை வடிவமைத்தார்கள். அதன் பிறகு 1822 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் ரிச்சர்ட் கார்லெ என்பார் காசு போட்டு செய்தித்தாள் எடுத்துக் கொள்ளும் இயந்திரத்தை வடிவமைத்தார்.

அதன் பிறகு 1867 ஆம் ஆண்டு சைமன் டென்காம் என்பார் தானியங்கி தபால் தலைகளை தரும் இயந்திரத்தை வடிவமைத்து அதற்கு காப்புரிமையும் பெற்றார்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் வடிவமைப்பில் பெரிய மாற்றங்களை கண்ட தானியங்கி பொருள் வழங்கு இயந்திரங்கள் 1880 களில் இங்கிலாந்தில் பரவலாக பயன்பாட்டில் வந்தது. குறிப்பாக தபால் நிலையங்கள், இரயில் நிலையங்களில் இதன் பயன்பாடு பாராட்டத் தக்கது.

சமீப காலத்தில் மைக்ரோமோட்டார்களின் பயன்பாடு பெரிய அளவில் இந்த இயந்திரங்களில் பயன்படுகிறது. ஒவ்வொரு பொருட்களுக்கும் தக்கவாறு இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதைப்பற்றி பேசினால் பத்து பக்கங்களுக்கு எழுத வேண்டி வரும்.

எது எப்படியோ, இன்றைய நவீன கால கட்டத்தில் அறிவியல் நுட்பம் மக்களுக்கான வசதிகளை பெரிய அளவில் எளிதாக்கி தந்திருக்கிறது. அந்த வகையில் பொருட்கள் வழங்கு இயந்திரங்கள் ஒரு முக்கியமான உதாரணமாக சொல்லலாம்.

முக்கியமாக‌ சோலார் பேனல்களை இயன்ற இடங்களில் பயன்படுத்துங்கள்.






புகைப்படம் எடுத்த இடம்:
சுகுபா (Tsukuba) பேருந்து நிலையம், ஜப்பான்.

No comments:

Post a Comment