Monday 19 June 2017

தாய்மொழியில் அறிவியல் புத்தகங்கள், ஆய்விதழ்கள் - வழிகாட்டும் ஜப்பான்

நோபல் பரிசு வரலாற்றில் ஜப்பான் இது வரை 25 விருதுகளை வென்றுள்ளது. இந்த விருது பட்டியலில் தலா ஒரு விருது இலக்கியம் மற்றும் அமைதிக்காக வழங்கபட்டது, ஏனைய 23 விருதுகள் இயற்பியல், வேதியியல், மற்றும் மருத்துவ துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் 86 தேசிய பல்கலைக் கழகங்கள் உள்ளது. இது தவிர 96 பொது பல்கலைக் கழகங்களும், 597 தனியார் பல்கலைக் கழகங்களும் உள்ளது. இதில் ஏறத்தாழ 26 பல்கலைக் கழங்களில் மட்டும் இளம் நிலையில் இருந்து உயர்கல்வி வரை ஆங்கிலம் பயிற்று மொழியாக உள்ளது. ஏனைய கல்வி நிறுவனங்கள் அனைத்தும் முழுக்க ஜப்பானியர்களின் தாய்மொழியாகிய ஜப்பானிய மொழியிலேயே நடத்தப்படுகிறது.
ஆரம்ப பள்ளி முதல், உயர்கல்வி ஆராய்ச்சி வரை ஜப்பானில் அவர்களது தாய்மொழி மூலம் பயில‌ 90 சதவிகித கல்வி நிறுவனங்கள் வாய்ப்பளிக்கிறது. இதன் வாயிலாக ஜப்பானியர்கள் அறிவியல் மற்றும் நுட்ப துறைகளில் உலக அளவில் கோலோச்சுகின்றனர்.
ஆங்கிலத்தை உலகிற்கான இணைப்பு மொழியாக தொழில் நிறுவனங்களில் வைத்துக் கொண்டு முழுக்க பள்ளி மற்றும் உயர்கல்வியினை அவர்களது தாய்மொழியிலேயே தருகிறார்கள்.
முக்கியமாக‌, ஜப்பானில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்திற்கு வெளியே பரந்துபட்ட அளவில் வெகுசன அறிவியல் புத்தகங்கள் கிடைக்கிறது. இந்த வசதி இம்மாணவர்களை கண்டுபிடிப்பாளர்களாக உருவாக்குகிறது.
ஜப்பானில் உயர்கல்வி ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலும் தங்களது தாய்மொழியிலேயே ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுவதால் உள்ளூர் நிறுவனங்கள் எளிதாக அவற்றினை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் உள்ளூரில் புதிய நுட்ப தொழில்களில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இந்த வாய்ப்பு இவர்களது வேலை வாய்ப்பு விகிதத்தை உயர்த்தியுள்ளது. தற்போது ஜப்பானில் சராசரியாக 100 நபர்களுக்கு 130 வேலை வாய்ப்பு பணிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளது, ஆனால் தாய்மொழியில் காணக் கிடைக்கும் வெகுசன அறிவியல் அடிப்படை புத்தகங்கள், ஆராய்ச்சி இதழ்கள் இவை தமிழில் அரிதினும் அரிதாகவே கிடைக்கிறது. இனியாவது காலம் தாழ்த்தாமல் தமிழ் மொழியில் பல மொழி பெயர்ப்பு புத்தகங்களை கொண்டு வரலாம். உயர்கல்வி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் தமிழ் மொழியில் எளிய மக்களுக்கு புரியும் வகையில் சமகால நுட்பங்களை எழுதலாம். அறிவியலுக்கு வெளியே இருப்பவர்கள் வெகுசன அறிவியல் புத்தகங்கள் எழுதலாம்.
எங்களது தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள சர்வதேச போட்டோ கேட்டலிஸ்ட் மையத்தில் காணக் கிடைக்கும் ஜப்பானிய ஆய்விதழ்கள், வெகுசன இதழ்கள் பற்றிய தகவல்களை இக்காணொளியில் பதிவு செய்துள்ளேன்.
இதனை உங்கள் நண்பர்களுக்கு முகநூல், வாட்சப் மூலம் பகிர்ந்து உதவுங்கள்.
உங்கள் கருத்துகளையும், மொழி பரிமாற்றத்திற்கு பரிந்துரைக்கும் அறிவியல் மற்றும் நுட்ப புத்தகங்களை கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும். 
tamilsciencebooks@gmail.com

நன்றி!
சுதாகர் பிச்சைமுத்து
Note:
Video Courtesy: Dr Nithish Roy
My Sincere thanks to Photocatalysis International Research Center, Tokyo University of Science, Japan.
**This video can be used only for education purpose.
Youtube link




No comments:

Post a Comment