Saturday, 31 December 2016

நாட்காட்டியின் கதை (A Story of Modern Calendar)


உலக நாட்காட்டி (calendar) முறைகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது மாயன், அராபிய, அஜ்டெக், காவ்ல், கிரேக்கர்கள், சீனர்கள், யூதர்கள், காப்ட்ஸ். பெரும்பாலான நாட்காட்டி முறை சூரியன், சந்திரன் இரண்டில் எதோ ஒரு நகர்வினை அடிப்படையாக கொண்டே கணக்கிடப்பட்டு வந்தன.

இவை தவிர நம் தமிழ் சமூகத்தில் பருவ காலங்களை முன் வைத்து பெயரிடப்பட்ட மாதங்களும், வருடங்களும் சூரியனின் நகர்வை முன் வைத்து இயங்கி வந்துள்ளன.

ஒவ்வொரு சமூகமும் தனக்கான நம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்டு நாட்காட்டி முறையினை பின்பற்றி வந்தார்கள். குறிப்பாக மேற்கத்திய நம்பிக்கையில் கிறிஸ்துவின்  ஈஸ்டர் தினத்தை (Easter day) வரையறுக்கும் வகையில் பல்வேறு முறைகள் கையாளப்பட்டன. பெரும்பாலும் நாட்காட்டியினை கடவுளே தந்தார் என்ற நம்பிக்கை பலமாக அப்போது இருந்தது.அவை ஜீலியன் நாட்காட்டி (Julion Calendar) என அழைக்கப்பட்டது.  ஆனால் இதில் உள்ள குறைபாடுகளை அப்போது யூதர்களும், இசுலாமியர்களும் சுட்டிக் காட்டி வந்தனர். குறிப்பாக ஆங்கில தத்துவவியலாளர் ரோகர் பேகன் (Roger Becon :1220-1292) என்பார் அதில் குறிப்பிடத்தக்கவர். 

ஒரு வழியாக நாட்காட்டி வடிவமைப்பில் புரட்சிகரமான மாற்றத்திற்கான விதை 16 ஆம் ஆண்டின் துவக்கத்தில் போலந்து நாட்டு வானவியல் அறிஞர் நிக்கோலசு கோப்பர் நிக்கசு (Nicholas Copernicus -1473 1543)என்பாரால் இடப்பட்டது . அவரது  இறப்பிற்கு முன் (1543) ஒரு வருடத்தின் நீளத்தினை மிகத் துல்லியமாக வரையறுத்தார். அவரது சூரிய மையக் கோட்பாட்டிற்கு (helio centric theory) முன்பு வரை மக்கள் சூரியன் பூமியினை சுற்றி வருகிறது என்று பிழையாக கருதி வந்தனர்.

நிக்கோலசின் கண்டுபிடிப்பிற்கு பிறகு  நாட்காட்டியினை சிரமைக்கும் பணி துவங்கப்பட்டது. அதன் படி சூரிய ஆண்டு என்பது முழுமையான நாட்களாக‌ இருக்க வாய்ப்பில்லை என்ற உண்மை புலப்படத் துவங்கியது. ஆகவே இதற்கான எளிமையான தீர்வொன்றை இத்தாலிய மருத்துவர் லூகி லிலியோ (Luiigi Lillio-1510-1576) முன் வைத்தார். இவர்  அலாய்சியசு லிலியசு (Aloysius Lilius) என்று பரவலாக‌ அழைக்கப்பட்டார், மேலும் இவர் வானவியலாளர், தத்துவியலாளர் என்றும் சொல்லப்படுகிறது. 

Aloysius Lilius (Image credit:fhshh.com)
ஒவ்வொரு நானூறு வருடத்திற்கும் மூன்று நாட்களை நீக்கவும்,  அதன் மூலம் ஒவ்வொரு லீப் நாட்களை கூடுதலாகவும் (366 நாட்கள்) சேர்க்க வலியுறுத்தினார். அதாவது 400 ஆல் வகுபடும் ஆண்டுகள் மட்டும் 366 நாட்களுடன் இருக்கும் (1600, 2000, 2400) (bisextile year). அவ்வாறு வகுபடாத நூற்றாண்டுகள் (1700, 1800,1900) செக்குலர் ஆண்டு (Secular years) என்று அழைத்தார், அவை 365 நாட்களை கொண்டிருக்கும். பல திருத்தங்களுக்கு பிறகு ஒருவழியாக நிலவின் வயது ஜனவரி 1 ஆம் திகதி துவங்குகிறது என சீரமைத்தார். இவரது நாட்காட்டியினை திருத்தியமைக்கும் பணியில் குறிப்பிடத்தக்க உதவியினை செய்தவர் ஜெர்மன் நாட்டை சேர்ந்த யூதர் கிறிஸ்டோபோரஸ் கிளாவிசு ( Chirstophorus Clavius-1537-1612) என்பார்.

Chirstophorus Clavius (Image credit:Linda Hall Library)

மேற்சொன்ன இரு அறிஞர்களின் உழைப்பை கவுரவிக்கும் வகையில் பின்னாளில் நிலவில் கண்டுபிடிக்கப்பட்ட பள்ளங்களில் (crators) ஒன்றிற்கு இவர்களது பெயரை சூட்டினார்கள். 

இவர்களது பரிந்துரையினை ஏற்று, வழமையாக பின்பற்று வந்த ஜீலியன் காலண்டர்  முறையில் மாற்றம் செய்யப்பட்டு பிப்ரவரி 24, 1582 ஆம் ஆண்டு போப் அதிகாரபூர்வ ஒப்பம் இடப்பட்ட (papal bull - Inter Gravissimas) கடிதம் வெளியானது. இந்த பரிந்துரையில் சொல்லப்பட்டபடி அது வரை கடைபிடிக்கப்பட்ட நாட்காட்டியில் பத்து நாட்களை நீக்கி புதிய கிரிகோரியன் காலண்டர் முறையினை போப், 13 ஆம் கிரிகோரி (Gregory XIII) (1502- 85) 1582 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைமுறைக்கு கொண்டு வந்தார். இங்கிருந்துதான் நாம் தற்போது கடைபிடிக்கும் காலண்டர் துவங்குகிறது. கிரிகோரியன் நாட்காட்டியினை எடுத்தாண்ட விதத்தினை நினைவுகூறும் வகையிலும், லிலியோ அவர்களை கவுரவிக்கும் வகையி லும்  “லிலியன் தேதி” (Lilion date) என கணிப்பொறி துறையில் அழைக்கிறார்கள். மேலும் இவரது நினைவினை போற்றும் வகையில் மார்ச் 21 ஆம் திகதியினை உலக நாட்காட்டி தினமாக கொண்டாட வேண்டும் என்று இத்தாலியில் உள்ள, சிசிலிய மாகாண அரசு ஐக்கிய நாடுகள் சபைக்கு விண்ணப்பித்துள்ளார்கள். 

1576 ஆம் ஆண்டு நாட்காட்டியினை சீரமைக்கு பொருட்டு கவுன்சில் ஆம் டிரென்ட் உறுப்பினர்களுடன் 13 ஆம் போப் கிரிகோரி கலந்துரையாடிய நிகழ்வினை விளக்கும் ஓவியம்  (Image credit:Linda Hall Library)

மாற்றியமைக்கப்பட்ட நாட்காட்டியினை பற்றி வாடிகன் சபையின் அறிவிப்பு "லுனாரியோ" (Image credit: bbvaopenmind.com)வாடிகன் திருச்சபையில் உள்ள 13 ஆம் போப் கிரிகோரியின் கல்லறை

13 ஆம் போப் கிரிகோரி (Gregory XIII)
ஆனால் மாற்றியமைக்கப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டியினை அந்நாட்களில் பலரும் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். இது தங்கள் நம்பிக்கைகள் மற்றும் பண்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர் என்று பலரும் இதனை எதிர்த்தனர். குறிப்பாக பிராடஸ்டான்டுகள் இந்த புதிய முறையினை பலமாக எதிர்த்து பழைய முறையான ஜீலியன் நாட்காட்டி முறையினை தொடர்ந்து கடை பிடித்து வந்தனர்.  இந்த சிக்கலை கண்ட வானவியலாளர்  கெப்லர் சூரியனை விடவும் பிராட்டஸ்டான்டுகள் போப்பை எதிர்ப்பதிலேயே குறியாக இருக்கின்றனர் என்றார்.

சீரமைக்கப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டியினை கத்தோலிக்க நாடான‌ பிரான்சு உடனே ஏற்றுக் கொண்டது. சில வருடங்களுக்கு பிறகே மற்ற கத்தோலிக்க நாடுகளான ஆஸ்திரியா, போலந்து, ஹங்கேரி மற்றும் செருமனியின் ஒரு சில பகுதிகளும் இந்த நாட்காட்டி முறையினை ஏற்றுக் கொண்டது. இந்த சிக்கல் 18 ஆம் ஆண்டின் மத்தியில் வரை  நீடித்தது. ஆங்கில, அமெரிக்க, ஸ்வீடன் காலணி நாடுகள் பழைய முறை (Old Style), புதிய முறை (New Style) என வரையறை செய்து அதனை பயன்படுத்தி வந்தனர். ஒருவழியாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கடைசியாக கிரிகோரிய காலண்டர் முறையினை ஏற்றுக் கொண்ட நாடு இங்கிலாந்து.

இன்றைக்கும் ரசியா, கிரீசு நாட்டின் சில பகுதிகளில் உள்ள‌ அதிதீவிர நம்பிக்கை கொண்ட (Orthodex) கிறித்துவ மதப்பற்றாளர்கள் ஜீலியன் நாட்காட்டி முறைப்படியே ஈஸ்டர் நாளை கொண்டாடுகின்றனர் (கிரிகோரியன் நாட்காட்டியினை ஒப்பிடும் போது 13 நாட்களுக்கு முன்பாகவே). ஆனால் ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு பிறகு  உலகமே இன்று கிரிகோரியன் நாட்காட்டி முறைக்கு மாறி விட்டது. அது எவ்வாறு இந்த புதிய முறையினை ஏற்றுக் கொண்டது என்பது ஒரு நீள் வரலாறு.

கிரிகோரியன் காலண்டரனின் கணக்கீடானது அப்போதைய காலகட்டத்தில் இருந்த வானவியல் கருவிகளினை கொண்டே கணக்கிடப்பட்டது. இவற்றின் துல்லிய தன்மை அறுதியிட்டு சொல்ல இயலாவிட்டாலும், இன்று வரை பெரிய பிழைகள் இன்றி வானவியலாளர்களால் பாராட்டப் படுகிறது.

தொலைநோக்கு கருவிகளின் புதிய புதிய‌ வடிவமைப்பு மூலமாக வானவியல் ஆராய்ச்சியில் ஏற்பட்ட நவீன கண்டுபிடிப்புகள் இன்று மணித்துளி, மாதம் பற்றிய வரையறையில் நிரூபிக்கப்பட்ட பல உண்மைகளை கொண்டு வந்துள்ளது. நாட்காட்டியின் வரையறையில் பின்னால் இருந்த அத்துனை ஆராய்ச்சியாளர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைபட்டு இருக்கிறோம்.

இன்று உலகம் முழுமைக்கும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டி முறையே தற்போது புழக்கத்தில் உள்ளது. இதன் படி பார்த்தால் முதல் உலகமயமாக்கல் முறை (globalization) கிரிகோரியன் நாட்காட்டி முறையில் இருந்துதான் தொடங்குகிறது எனலாம்.

 13 ஆம் போப் கிரிகோரி (Gregory XIII) (1502- 85) செய்த அதிரடி புரட்சி மாற்றமே இன்று நாம் பின்பற்றும் கிரிகோரியன் காலண்டர். ஆகவே ஆங்கிலப் புத்தாண்டு என்று சொல்வதே தவறு.


 அனைவருக்கும் கிரிகோரியன் புத்தாண்டு 2017 வாழ்த்துகள்!

Reference:
The Calender Measuring Time. Written by Jacqueline de Bourgoing. Publisher- Thames & Hudson, New Horizons 2001.


நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Thursday, 29 December 2016

உலகின் முதல் நீர்ப்புகா ஆடையின் முன்னோடி- சார்லசு மெக்கின்டோசு(A pioneer in world’s first waterproof raincoats – Charles Macintosh)

இன்றைக்கு மழை பெய்யும் போது நனையாமல் செல்ல குடை தவிர்த்து நானோ நுட்பவியல் மூலம் வடிவமைக்கப்பட்ட‌ நீர் விலக்குமை (water repelling) ஆடைகள் தயாரிக்கும் அளவிற்கு அறிவியல் நுட்பம் முன்னேறி உள்ளது. இயற்கையில் நாம் காண்கின்ற‌ தாமரை இலையின் மீது நீர் ஓட்டாத (lotus effect) தன்மையினை தழுவி செய்யப்படும் இந்த ஆடைகள்தான் எதிர்காலத்தில் மிகப் பேசுபடுபவையாக இருக்கப் போகிறது. மேலும் இந்த நீர் விலக்குமை தன்மையால் ஆடைகளில் ஒட்டும் அழுக்கு எளிதாக நீங்கும் வல்லமையுடைய துணிகளும் சந்தையில் தற்போது வரத் துவங்கி உள்ளது.

ஆனால், வரலாற்றில் பின்நோக்கி போனால் மழையில் நனையாமல் அணிந்து செல்ல எத்தையக ஆடைகளை தயாரித்திருப்பனர் என்று யோசிக்கவே பிரமிப்பாக இருக்கிறது.

ஆம், நீர்ப்புகா ஆடைகள் (waterproof cloths) வடிவமைக்கப்பட்டு இன்றோடு 250 வருடம் ஆகிறது.

இதன் வரலாறை கொஞ்சம் தெரிந்து கொள்வோமா.

ஐக்கிய முடியாட்சியில் (United Kingdom) தனக்கென்று தனித்த வரலாறு உடையது ஸ்காட்லாந்து தேசம். குறிப்பாக 1824 ஆம் ஆண்டிற்கு முன் இப்பகுதியில் பிறப்பது என்பது ஒரு தண்டனையாக கருதும் அளவிற்கு எப்போதும் மழை பெய்யும் சூழல் இருந்து வந்தது. வெளியே செல்லும் போது குடைகளை எடுத்துக் கொண்டே செல்லும் கட்டாயம் இருந்தது. எப்படி இருந்தாலும் நனைந்து விடும் சூழல் ஒருவித எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.

இதனை தடுக்க எண்ணெய் தடவப்பட்ட ஆடைகளை உடுத்த துவங்கினர். ஆனால் இந்த ஆடைகள் அதிகமான எடையோடு, எண்ணெய் துர்நாற்ற வாடையும் அடித்ததால் வேறு வழியின்றி இதனை உடுத்தி வந்தனர். இந்த சூழலில்தான் அப்பகுதியினை சேர்ந்த சார்லசு மெக்கின்டோசு (Charles Macintosh) என்ற வேதியியலாளர் நீர்புகா ஆடையினை முதன் முதலாக வடிவமைத்து தந்தார். இவர் எவ்வாறு அந்த ஆடையினை வடிவமைத்தார் மற்றும் அவரது வரலாற்றினை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

மெக்கின்டோசு பிரித்தானியாவில் உள்ள கிளாஸ்கோ (Glascow) நகரில் 1766 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் திகதி பிறந்தவர். அதாவது இன்றோடு 250 ஆண்டுகள் ஆகிறது.

Charles Macintosh (image credit: Wikipedia) (https://commons.wikimedia.org/wiki/File:Charles_Macintosh.jpg)
ஒரு குமாஸ்தா எழுத்தராக பணியாற்றிக் கொண்டிருந்தவருக்கு வேதி பொருட்களின் மீது ஏற்பட்ட காதலால் தனது எழுத்தர் பணியை உதறி தள்ளினார். இவரது தந்தை ஜியார்ஜ் மெக்கின்டோசு சாய வேதிபொருட்கள் விற்பனை செய்பவராக இருந்ததால் இவரது வேதியியல் சார்ந்த சோதனைகளுக்கு ஏதுவாக இருந்தது.

துவக்க காலத்தில் அவரது தந்தைக்கு சாயப் பொருட்கள் தயாரித்து தரும் பணிகளை செய்து வந்துள்ளார். அவரது தந்தையின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு வீணான பொருட்களில் இருந்து பயன்படு பொருட்களை தயாரித்து அதனை சந்தையில் விற்பது. அதில் முக்கியமனாது மனிதர்களின் சிறு நீரில் இருந்து அமோனியா தயாரிப்பது.

 1797 ஆம் ஆண்டு தனது தந்தையைப் போலவே வீணான பொருட்களில் இருந்து பயனுறு பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையினை துவங்கி வேதிப் பொருட்களை தயாரித்து வந்தார். அமோனியம் குளோரைடு, பெர்சிய நீல சாயம், ஆகியவற்றை தயாரித்து வந்தார். மேலும், காரிய மற்றும் அலுமினிய அசிட்டேட் ஆகியவற்றை தயாரித்து  நெதர்லாந்து நாட்டிற்கு விற்று வந்தார். இதனோடு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அமோனியா, படிக உப்பு போன்றவற்றினை தயாரித்து வழங்கினார். இந்த கால கட்டத்த்தில் பல முக்கியமான தொழில்துறை முன்னோடிகளோடு இணைந்து தொழில் செய்தார். அதில் குறிப்பிட்டு ஒன்றை சொல்லலாம். சார்லசு டென்னன்ட் (Charles Tennant) என்பவருடன் இணைந்து உலர் பிளிச்சீங் பவுடரை கண்டுபிடித்து அதற்கு காப்புரிமையும் பெற்றார்.

இதில் வியக்க வைக்கும் ஆச்சரியம் என்னவெனில் சிறிய வயதிலேயே, மேற்சொன்ன வேதிப்பொருட்களை தயாரிக்கும் அளவிற்கு  அவருக்கு  உந்துதலாக இருந்தது எடின்பரோவில் (Edinburg) இருந்த மருத்துவ‌ பேராசிரியர் ஜோசப் பிளேக் (Joseph Black).  இவர் தான் நிலையான காற்று (fixed air) என்றழைக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைடு வாயுவினை கண்டறிந்தவர். அவரிடம் இருந்து கற்றுக் கொண்ட அறிவின் மூலம் அப்போதே வேதியியல் கழகத்திற்கு (Chemical Soceity) ஆல்கஹால், அலும் (alum) வேதி பொருள், காய்களில் இருந்து நீல நிற சாயத்தை தயாரித்தல் போன்ற தலைப்புகளில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவ்வளவு சிறிய வயதில் எல்லோரும் வியக்கும் வண்ணம் இருந்த இவரது செயல்பாடுகள் பின்னாளில் இவரை உலகமே அறியும் படி நிலை நிறுத்தும் என்று  ஆருடம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை.

தன் தந்தையாரின் சாயத் தொழிலை முன்னெடுக்கும் வண்ணம், மரத்தின் மீது வளரும் பச்சை நிற பூஞ்சைகளில் (lichen) இருந்து இளஞ்சிவப்பு (pink) நிற‌ சாயம் தயாரிக்கும் பணிகளை முன்னெடுத்திருந்தார்.  இது துணிகளில் சாயமேற்றும் தொழிற்சாலைகளில், இளஞ்சிவப்பு தொடங்கி நீல நிறம் வரை எவ்வாறு வண்ண நிழல்களை (color shade)  ஏற்படுத்துவது என்ற   முயற்சிகளுக்கு மிகவும் பயன்பட்டது.

இந்த கால கட்டத்தில்தான் அவரது மிக முக்கிய கண்டுபிடிப்பு ஒன்று நாப்தா (Naptha) வேதிப் பொருள் மூலம் வெளிப்பட்டது.

நாப்தா வேதிப் பொருள் வழமையாக தீப்பந்தங்களில் எரிபொருளாக பயன்பட்டு வந்த தார் (tar-எண்ணெய் போன்ற ஹைட்ரோ கார்பன் வேதிப்பொருள்) என்னும் எரிபொருளின் வடிகட்டப்பட்ட‌ ஒரு பக்க-விளைவுப் பொருளாகும்.

மெக்கன்டோசு பல வருடம் முயன்று நாப்தா வேதிப்பொருளை பல்வேறு வகையில் முயற்சி செய்து எவ்வாறு இந்திய ரப்பர் பொருளை கரைக்கிறது என்று கண்டுபிடித்தார். மேலும் அது நீரில் நனையாமல் இருந்ததை கண்டு வியந்தார்.

இந்த நாப்தா பொருளை இரண்டு துணிகளுக்கு இடையில் வைத்து நன்கு அழுத்தி தைத்து நீர் உட்புகா ஆடைகளை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியடைந்தார். இதற்கான காப்புரிமையினை 1823 ஆம் ஆண்டு ஜீன் மாதம் பெற்றார் (காப்புரிமை எண் 4804). இந்த காப்புரிமைதான் பின்னாளில் நீர்புகா துணிகளை கொண்டு மழைகோட்டுகள் தயாரிக்க மிகப் பெரிய உதவியாக இருந்தது.


Image credit: Davy Tolmie (https://twitter.com/DavyTolmie/status/611084289145458689)

ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இந்த நீர்புகா ஆடை வடிவம் கிளாஸ்கோ நகரில் உள்ல தையற்காரர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. அவர்கள் இதனை தைப்பதற்கு சிரமமாக உள்ளது என சுணங்கினர். ஆகையால் சார்லசு மெக்கன்டோசு சுயமாகவே கிளாஸ்கோ நகரிலும், பின்னாளில் மான்செஸ்டர் கேஸ் வொர்க்சு என்ற தொழில் நிறுவனத்தின் உரிமையாளரான கக் கார்ன்பி பிர்லெ (Hugh Hornby Birley) என்பாருடன் கூட்டாக சேர்ந்து 1824 ஆம் ஆண்டு மான்செஸ்டர் நகரில் ஒரு நிறுவனத்தினை துவங்கினார். 

இவர்கள் தயாரித்த நீர்புகா ஆடைகளை அதில் இருந்து வரும் வாடையினையும் பொருட்படுத்தாது பிரித்தானிய ராணுவமும், கப்பற் படையும் வாங்கி அங்கீகரித்தனர். முக்கியமாக உறைபனி நிறைந்த‌ ஆர்ட்டிக் துருவ பகுதியினை கண்டறிய சென்ற பிராங்ளின் என்பாரின் செயலுக்கும் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Mackintosh model, from an 1893 catalogue
(Image credit: http://www.mirror.co.uk/tech/who-charles-macintosh-what-makes-9528300)
பின்னர் ஒரு வருடம் கழித்து (1825) பிரித்தானியாவின் ரப்பர் தொழில்களின் தந்தை என்றழைக்கப்பட்ட தாமசு ஹன்காக் (Thomas Hancock) என்பாருடன் இணைந்து இரட்டை கலவையிலான நீர்புகா ஆடைகளை (waterproof double textures) வடிவமைத்து வெற்றி கண்டார்.

அதற்குப் பிறகு அவரது நிறுவனத்தை Charles Macintosh & Co என்று மாற்றினார்கள். மாக்கென்டோசின் நீர்புகா ஆடை வடிவமைப்பில் சில மாற்றங்களை வல்கனைசிங் (vulcanizing) முறையில் தாமசு ஹன்காக் செய்தார்.
இந்த முறையில் ரப்பர் ஆடைகளின் உழைப்பு வெப்ப நிலைக்கு தக்கவாறு எதிர்கொள்ளு திறன் நன்கு மெறுகேறியது.  இந்த ஆண்டு எதிர்பாரா விதமாக மெக்கன்டோசு இயற்கை எய்தினார்.

அவரது உடல் கிளாஸ்கோ நகரில் உள்ள கிளாஸ்கோ தேவாலயத்தில் புதைக்கப்பட்டது. அவரின் மறைவிற்குப் பிறகு அவரது பெயரில் “k” என்ற எழுத்து சேர்க்கப்பட்டு “Mackintosh” என‌ உச்சரிக்கப்பட்டது.

வல்கனைசிங் முறையில் பெரிதும் மெருகேற்றப்பட்ட நீர்புகா ஆடை வடிவம் 1853 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற மிகப்பெரிய கண்காட்சியில் சிறந்த வடிவமைப்பு விருதினைப் பெற்றது. மெக்கன்டோசு மறைவிற்கு பின்  Charles Macintosh & co நிறுவனம் 1923 ஆம் ஆண்டு வரை உலகின் புகழ் பெற்ற டன்லப் டயர் நிறுவனம் வாங்கும் வரை வெற்றிகரமாக நடைபோட்டது.

தற்போது மெக்கன்டோசு பெயர் பொறிக்கப்பட்ட நீர் புகாத மழை கோட்டுகள் பிரித்தானியாவின் பாரம்பரிய ஆடை வடிவங்களில் ஒன்றாக திகழ்கிறது. அவை சுருக்கமாக மேக் கோட்டுகள் (Mac Coat) என அழைக்கப்படுகிறது. இதில் சிறப்பம்சம் என்னவெனில் நூல் கொண்டு தையல் இடப்படாமல் பசை மூலமாக ஒட்டப்பட்ட கோட்டுகள் இன்றும் சந்தையில் கிடைக்கிறது.  மற்றொரு ஆச்சரியம் இன்னும் மெக்கன்டோசு வகை ஆடைகள் ஸ்காட்லாந்து தேசத்தில் இயந்திரங்கள் இல்லாமல் கையால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

ஏறத்தாழ 250 ஆண்டுகளாக மெக்கன்டோசுவின் காலத்தில் இருந்து நீர்புகா ஆடைகள் நம் சமூகத்தில் மிகப்பெரிய பங்களிப்பை தந்துள்ளது. அவரது நினைவினை போற்றும் விதத்தில் இன்று கூகுள் தேடு பொறியில் டூடுல்  (google doodle) சின்னமாக அவரை கவுரவித்துள்ளார்கள்.

மெக்கன்டோசு வேதியியல் ஆராய்ச்சியாளராக மட்டுமில்லாமல் இளம் வயதில் சாதிக்க துடிக்கும்  தொழில் முனைவோர்களுக்கு   முன்மாதிரியாக‌ இருப்பவர். அந்த வகையில் இவரை நினைவூட்டிய‌ கூகுளின் செயல் பாராட்டுக்குரியதே.

2016 ஆம் ஆண்டு சிறந்த அறிவியல் நுட்ப  விளக்க செயற்பாட்டாளர்

விகடன் 2016 ஆம் ஆண்டிற்கான டாப் 10 தமிழர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

இதில் நான் ஆவலுடன் எதிர்பார்த்த ஒருவர் பெயர் இடம் பெறவில்லை.

அவர் பெயர் பிரேமானந் சேதுராஜன்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில்   பணிபுரிந்து கொண்டே தாய்த் தமிழ் மொழியில் எளிமையாக அறிவியல் மற்றும் நுட்பவியல் தகவல்களை யூ டியூப் சேனல் மூலம் லட்சக் கணக்கான மக்களுக்கு புரியும் வண்ணம் சென்றடைய வைத்துள்ளார். 

அவற்றில் குறிப்பிடத்தக்கவை

1.கால இயந்திரத்தில் பயணிப்பது எப்படி?
2. ஏ டி எம் பின் நம்பர்  பாதுகாப்பானவையா?
3.ஜி பி எஸ் கருவிகள் எப்படி இயங்குகிறது?
4. நோபல் பரிசு பெற்ற புவி ஈர்ப்பு அலைகள்  கோட்பாடு
5. இரண்டு நோட்டு புத்தகங்களை வைத்து காரை இழுக்க முடியுமா?
6. நுண் கணிதம் என்றால் என்ன‌?

என்று இவரது காணொளிகள் சுவாரசியமாக நீண்டு கொண்டே போகும்

மேலும் Lets Make Engineering Simple (LEMS) என்ற அகாடமியினை துவக்கி முகநூல் வாயிலாகவும் சமூக வலைதளங்களில் எளிய மக்களுக்கு அறிவியலை புரிய வைக்கிறார்.  இந்த வருடம் தமிழகத்தில் உள்ள பல‌ பள்ளிகளுக்கு நேரில் சென்று தனது LMES அகாதமி மூலம் அடிப்படை அறிவியலை விளையாட்டு சோதனைகளாக‌ செய்து காண்பித்துள்ளார். தனி ஒரு மனிதராக தன்னார்வலர்களின் உதவியுடன் இவர் தொடரும் இப்பணியை பாராட்டியே தீர வேண்டும்.ஏனெனில்  இவை எல்லாம் அரசு செய்ய வேண்டிய பணி.

தாய் மொழியில் அறிவியலை எளிமையாக விளக்குவதால் பல ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் எதிர்காலத்தில் வருவதற்கான உந்துதலை இவரது அகாதமி ஏற்படுத்தி தந்துள்ளது. ஆங்கிலத்தை ஒப்பிடும் போது நம் மொழியில் அறிவியல் நுட்ப அடிப்படைகளை விளக்கும் புத்தகங்கள் மிகக் குறைவே. இதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. 

என்னைப் பொறுத்த வரையில் தாய் மொழி வாயிலாக அறிவியல் நுட்பங்களை எளிய வகையில் கற்றுத் தரும் மனிதர்களை நாம் போற்றி பாராட்ட வேண்டும்.

தமிழ் மொழிக்கு மிக அவசியமான தேவையாக இதனைப் பார்க்கிறேன். அந்த வகையில் பிரேமானந் இந்த வருடத்தின் டாப் டென் மனிதர்களில் ஒருவராக நிச்சயம் இருக்க வேண்டியவர். இன்னும் பல இளைஞர்கள் இவரைப் போல் அறிவியல் நுட்ப துறையில் தாய் மொழியில் பணியாற்ற வர வேண்டும்.

வாழ்த்துகள் பிரேமானந். தாய் மொழியில்  உங்கள் அறிவியல் பணி தொடரட்டும்.


Premanth Sethurajan

குறிப்பு:
1.      பிரேமானந் அவர்களின் LEMS என்ற அகாதமியில் வெளி வரும் அறிவியல் நுட்ப சோதனை காணொளிகளை அவரது https://www.youtube.com/user/premanand20081  யூ டியூப் சேனலில் காணலாம். முகநூலில் அவரது நிகழ்ச்சிகளை பின் தொடர நினைப்பவர்கள் இந்த முகவரியில் https://www.facebook.com/LMESAcademy/?fref=ts அவரை தொடரலாம்.

2.       ஆர்வலர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடைகள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு சோதனைகள் செய்து காண்பிக்கப் படுகிறது. இவரது அகாதமிக்கு நன்கொடை செலுத்த விரும்புபவர்கள் இந்த இணைய முகவரியில் http://lmesacademy.com/donate/மேலதிக தகவலை பெறலாம்.

பிரேமானந் பற்றி பி பாசிட்டிவ் இணைய இதழில் வெளி வந்த நேர்காணல் http://bepositivetamil.com/?p=1356

Monday, 26 December 2016
Wednesday, 21 December 2016

கேட்டுக் கொண்டே இருக்கத் தூண்டும் நாட்டுப் புற பாடல்

சோகம் ததும்பிய ஒரு கிராமத்து பெண்ணின் காதலை
நாட்டுப்புற பாடலில் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
இப்பாடலின் சில பகுதி "களவாணி" படத்தில் வரும்.

இந்த நாட்டுப்புற‌ பாடலை எழுதியவர் பிரளயன். பாடியவர் கிருஸ்ணசாமி

*********************************

ஊரடங்கும் சாமத்துல‌
நான் ஒருத்தி மட்டும் விழிச்சிருந்தேன்

ஊர்கோடி ஓரத்துல உன்
நினைப்புல படுத்திருந்தேன்
காத்தடிச்சு சல சலக்கும்
ஓலெயெல்லாம் உன் சிரிப்பு
புரண்டு படுத்தாலும்
பாவி உன் மக நினப்பு

வெள்ளியில தீப்பெட்டியாம்
மச்சானுக்கு விதவிதமாம் பீடிக் கட்டாம்
வாங்கி தர ஆச வெச்சேன்
காச சுள்ளி வித்து சேத்து வச்சேன்

சண்முகனார் கோவிலுக்கு
 சூடம் கொளுத்தி வச்சேன்
போறவங்க வர்ரவங்க பேச்சை எல்லாம் நான் கேட்டு வச்சேன்

ஒரு பாக்கு போட்டாலே
உள் நாக்கு செவந்திடுமே
உன் மேல ஏக்கம் வந்து
என் தூக்கம் எல்லாம் போச்சு மச்சான்

கழனி சேத்துக்குள்ள‌
களை எடுத்து நிக்கையில்ல‌
உன் சொத்தப் பல்லப் போல
ஒரு சோழிய நான் கண்டெடுத்தேன்
கண்டெடுத்த சோழி ரெண்டு கலங்கி நிக்கயில்லெ
களையெடுப்பு பிந்துதுன்னு பண்ணையாரு ஏசினாரே

கள்ளிச் செடியிலெல்லாம்
கருவேல முள்ளெடுத்து
உன்பேர என்பேர‌
ஒரு சேர எழுதினோமோ

ஊணிக் கரையோரம்
உக்கார்ந்து பேசினமோ
ஊருக்காரன் தலையக் கண்டு
ஓடி நாம ஒளிஞ்சோமே

சும்மா கிடந்த போதே
துள்ளுகிற சாதிக்காரன்
சங்கமா சேர்ந்திருக்கான்
வம்பு பண்ண காத்திருக்கான்

என்ன பண்ண போறானோ
ஏது செய்ய போறானோ
நம் கதிய நினச்சு மச்சான்
என் மனசு பதை பதைக்கு

சாதி சொல்லி பிரிச்சாலும்
யாரும் வந்து தடுத்தாலும்
உன்னயே சேருவன்னு
துண்டு போட்டு தாண்டினியே
அந்த வார்த்தையில
நான் இருக்கேன்
வாக்கப் பட காத்திருக்கேன்

ஊரடங்கும் சாமத்துல‌
நான் ஒருத்தி மட்டும் விழிச்சிருந்தேன்
Sunday, 11 December 2016


"நேற்றைய வாழ்வை, இன்று வாழவே முடியாது. அது முடிந்து விட்டது. கனவில் வேண்டுமானால், வாழலாம். ஆனால், அது உண்மை வாழ்வாகாது. அதை மறுபடியும் உயிர்பித்து வாழ முடியாது. வாழ்வில் பின்னோக்கிச் செல்லவே முடியாது. அதே போல, நாளை என்பதும் இன்று இல்லை. அது எப்பொழுதும் நாளையகாவே இருக்கப் போவதும் இல்லை. அது வந்து கொண்டே இருக்கும் ஒரு மாயையைத் தோற்றுவிக்கிறது. அது ஒரு வீண் நம்பிக்கைதான். நாளை நடப்பதை யார் அறிவார்."
-‍ ஓசோ (Osho)
("வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்" நூலில் இருந்து)

டிசம்பர் 11. இன்று ஓசோ பூமிக்கு வந்த நாள்.Saturday, 10 December 2016


மொழிகளை உடைக்கும் இசை

இந்த வருட இலக்கியத்திற்கான (literature) நோபல் பரிசு அமெரிக்காவின் புகழ் பெற்ற பாடகர் பாப் திலன்  (Bob Dylan)அவர்களுக்கு வழங்கப்பட்டது. நோபல் விருது வரலாற்றில் இலக்கியத்திற்காக விருது பெறும் முதல் பாடல் ஆசிரியர் (songwriter) இவர்தான். அமெரிக்க பாரம்பரிய பாடல்கள் வழியாக புதிய கவிதை வடிவத்தை தந்தமைக்கு இந்த விருது இவருக்கு தரப்பட்டுள்ளது.

Bob Dylan (Nobel prize winner 2016 in Literature) (Photo credit: http://pitchfork.com)
இன்று ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் இவ்வருடத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நோபல் பரிசு குழுவின் மரபுப் படி நடைபெற்றது. 

தனக்கு வழங்கப்பட்ட விருதை நேரில் வந்து பெற இயலாத சூழலில் தனது விருது ஏற்புரையினை கடித்ததில் அனுப்பி இருந்தார் பாப் திலன்.

இந்த சூழலில், இன்றைய விருது வழங்கும் நிகழ்வில் பாப் திலனின் மிகப் புகழ் பெற்ற “A Hard Rain’s A-Gonna Fall” என்ற பாடலை ஸ்வீடன் நாட்டு இசைக் குழு கன்ஸ் எக்  (Hans Ek) தலைமையில் இசைத்தது. இப்பாடலை "பட்டி ஸ்மித்" (Patti Smith) என்ற பெண்மணி பாடினார்.

மிகப் பெரிய நோபல் பரிசாளர்கள் மிகுந்த சபையில் இப்பாடலை பாடுவதற்கு பட்டி ஸ்மித் முதலில் திணறினார். சபையினர் மகிழ்வோடு கைதட்டி அவரை உற்சாகப் படுத்தினர். இந்த சபையில் ஸ்வீடன் நாட்டு அரச குடும்பத்தினரும் அமர்ந்திருந்தனர். 

பாடலின் பல வரிகளினை, ஒருவித சங்கடத்தில் பிழையோடு பாடினாலும் பாப் திலனின் அந்த கவித்துவமான வரிகள் ஸ்மித்தின் இரக்கம் நிறைந்த குரலில் கேட்கவே அவ்வளவு ஏகாந்தமாக இருந்தது.

பாடல் பாடி முடித்ததும் மிகப் பெரும் கரகோசத்தின் மூலம் பாடகி பட்டி ஸ்மித்தை பாராட்டினார்கள்.

நேரம் கிடைக்கும் போது இந்நிகழ்ச்சியில்  பாப் திலனின் இதயத்தை கரைய வைக்கும் பாடலை ஸ்மித்தின் குரலில் கேட்டு ரசியுங்கள் (1.03 மணி நேரத்தில் இப்பாடல் ஆரம்பிக்கும்).குறிப்பு:

**பாப் திலன் தனக்கு வழங்கப்பட்ட நோபர் பரிசினை இரண்டு வாரம் கழித்துதான் ஏற்றுக் கொண்டார்.அது நோபல் பரிசுக் குழுவினரிடையே ஒரு வித சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனால் பாப் திலன் எப்போதுமே தன் குணத்தை யாருக்கும் மாற்றிக் கொள்ளாதவர். ஆகையால் அவரது ரசிகர்களுக்கு இது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை

**திலனின் பாடல்கள் நாட்டுப்புற வடிவத்தினால் ஆனவை, அவற்றில் வலிகள் நிறைந்த அடிமைத்தனங்களை எதிர்க்கும் புரட்சி வரிகளும், சொல்ல முடியாத துயரங்களும், அரசியலும் மிகுத்து காணப்படுபவை.

**1960 களில் அமெரிக்காவின் ஆளுமை மிக்க பாடகர்களில் பாப் திலனும் ஒருவர். இன்றளவும் அவருக்கென்று ரசிகர் கூட்டம் குறையாமல் உள்ளது

*பிரித்தானியாவின் வேல்சு தேசத்து புகழ் பெற்ற கவிஞர் திலன் தாமசின்  (Dylan Thomas) மீது பெரும் ஈர்ப்பு ஏற்பட்டதால் தனது பின்னொட்டு பெயருடன் "திலன்" (Dylan) எனச் சேர்ந்து கொண்டார். திலன் தாமசின் கவிதை வரிகளைப் போலவே பாப் திலனின் பாடல் வரிகள் தனித்துவம் மிக்கவை.


இப்பாடலின் வரிகள்

 A Hard Rain's A-Gonna Fall 

Oh, where have you been, my blue-eyed son
And where have you been, my darling young one
I've stumbled on the side of twelve misty mountains
I've walked and I've crawled on six crooked highways
I've stepped in the middle of seven sad forests
I've been out in front of a dozen dead oceans
I've been ten thousand miles in the mouth of a graveyard
And it's a hard, and it's a hard, it's a hard, and it's a hard
It's a hard rain's a-gonna fall

Oh, what did you see, my blue-eyed son
And what did you see, my darling young one
I saw a newborn baby with wild wolves all around it
I saw a highway of diamonds with nobody on it
I saw a black branch with blood that kept drippin'
I saw a room full of men with their hammers a-bleedin'
I saw a white ladder all covered with water
I saw ten thousand talkers whose tongues were all broken
I saw guns and sharp swords in the hands of young children
And it's a hard, and it's a hard, it's a hard, it's a hard
It's a hard rain's a-gonna fall

And what did you hear, my blue-eyed son?
And what did you hear, my darling young one?
I heard the sound of a thunder that roared out a warnin'
Heard the roar of a wave that could drown the whole world
Heard one hundred drummers whose hands were a-blazin'
Heard ten thousand whisperin' and nobody listenin'
Heard one person starve, I heard many people laughin'
Heard the song of a poet who died in the gutter
Heard the sound of a clown who cried in the alley
And it's a hard, and it's a hard, it's a hard, it's a hard
It's a hard rain's a-gonna fall

Oh, what did you meet, my blue-eyed son?
Who did you meet, my darling young one?
I met a young child beside a dead pony
I met a white man who walked a black dog
I met a young woman whose body was burning
I met a young girl, she gave me a rainbow
I met one man who was wounded in love
I met another man who was wounded with hatred
And it's a hard, it's a hard, it's a hard, it's a hard
It's a hard rain's a-gonna fall

And what'll you do now, my blue-eyed son?
And what'll you do now, my darling young one?
I'm a-goin' back out 'fore the rain starts a-fallin'
I'll walk to the depths of the deepest black forest
Where the people are many and their hands are all empty
Where the pellets of poison are flooding their waters
Where the home in the valley meets the damp dirty prison
And the executioner's face is always well hidden
Where hunger is ugly, where souls are forgotten
Where black is the color, where none is the number
And I'll tell it and think it and speak it and breathe it
And reflect it from the mountain so all souls can see it
Then I'll stand on the ocean until I start sinkin'
But I'll know my song well before I start singin'
And it's a hard, it's a hard, it's a hard, it's a hard
It's a hard rain's a-gonna fall

Written by Bob Dylan • Copyright © Bob Dylan Music Co.