Tuesday 11 October 2016

நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா!(International Day of the Girl Child)


அடக் கடவுளே! உனக்கு பெண் பிள்ளையா என பரிதாபமாக‌ பார்த்த இந்திய சமூகத்தை நம் சம கால பெண் பிள்ளைகள் ஒலிம்பிக் மெடலால் அடித்திருக்கிறார்கள்.

ஆண் வரம் வேண்டும் என கோவிலை சுற்றி வருபவர்களையும், அடுத்தாவது ஆண் பிறக்க வேண்டும் என்று "பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்" என மகப் பேறு முயற்சிப்பவர்களையும் ஒவ்வொரு முறை மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவிகள் மதிப்பெண்களால் அடித்து நொறுக்கியுள்ளார்கள்.

பெண் குழந்தைகளின் கல்விக்காக இனி நீ பேசவே கூடாது என மலாலா என்னும் பாகிஸ்தானிய சிறுமியை தலிபான் தீவிரவாதிகளின் குண்டுகள் துளைத்த போது அவள் ஆன்மா அடங்கிப் போகவில்லை. இதோ இன்று உலகில் உள்ள பெண் குழந்தைகளின் கல்விக்காக‌ குரல் கொடுக்கும் நம்பிக்கை பெண்ணாக‌ ஐ.நா சபை உள்ளிட்ட உலக அமைப்புகளை வெற்றி கரமாக சுற்றி வருகிறாள்.

இன்னும் ஆயிரம் ஆயிரம் சவலான துறைகள்  பெண் குழந்தைகளுக்கு காத்திருக்கிறது. ஆராய்ச்சி, விண்வெளித் துறையில் இன்னும் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும். இந்த துறைகளில் உங்கள் பெண் பிள்ளைகளை ஊக்குவியுங்கள்.

பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பெருமிதம் கொள்ளுங்கள். உங்கள் சமூகத்தின் நம்பிக்கைகளை, கட்டுப்பாடுகளை அவள் மேல் திணிக்காதீர்கள். ஏனெனில் பெண்ணுக்கான சுதந்திரம் என்று தனியே ஒன்று இல்லை. இயற்கையின் படைப்பில் அது அவளது உரிமை. அதனை ஆண்கள் தரத் தேவையில்லை. திருடாமால் இருந்தாலே போதும்.

பெண் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்துள்ள உணவு, உடை, கல்வி, மருத்துவ சிகிச்சை, தரமறுக்கும் பாலின பாகுபாடு நிறைந்த சமூகத்தை உடைத்தெறியுங்கள்.





Thursday 6 October 2016

அறிவோம் நோபல் அறிவியலாளர்கள் -1

நேற்றைய காலைப் பொழுதில் ராயல் சுவீடசு அறிவியல் அகாதமியின் செயலர் கோரன் கன்சன் 2016 ஆம் ஆண்டிற்கான வேதியியல் பிரிவு நோபல் பரிசுகளை அறிவித்துக் கொண்டிருந்தார்.
பரிசு அறிவிப்புக்கு பின் இவ்வருடத்திய நோபல் பரிசாளர்களில் ஒருவரான நெதர்லாந்து நாட்டை சார்ந்த‌ பேராசிரியர் பெரிங்கா தொலை பேசி அழைப்பில் வந்தார். அங்கு குழுமியிருந்த பன்னாட்டு ஊடகங்களின் கேள்விகளுக்கு தொலை பேசி வாயிலாக‌அற்புதமாக பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

அதில் ஒரு கேள்வி மிகவும் ஈர்த்தது.

அக்கேள்விக்கு முன் எந்த ஆய்விற்கு இந்த வருட நோபல் பரிசு வேதியியல் துறைக்கு வழங்கப்பட்டது என்பதை சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.

நம் மயிரிழையின் அளவை ஒப்பிடும் போது ஆயிரத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான மூலக்கூறு அளவிலான இயந்திரங்களை (Molecular Machines) வடிவமைத்ததிற்கு இந்த வருடத்திய‌ விருது அறிவிக்கப்பட்டது. இந்த இயந்திரங்கள் நம் உடலில் இருக்கும் வேதி அமிலங்களின் மாதிரிகளை கொண்டு ஆய்வகத்தில் செயற்கையாக வடிவமைக்கப்பட்டவை.

சரி விசயத்திற்கு வருகிறேன், அந்த கேள்வியை நோபல் மீடியா ஊடகத்தில் இருந்து ஒரு பெண்மணி   கேட்டிருந்தார் ;

தற்போது உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் காத்திருக்கும் சவால் என்ன?

பேராசிரியர் பெரிங்கா மிக நேர்த்தியாக‌ தன் பதிலை தெளிவாக சொன்னார்.  "இந்த சூழலில் நான் ரைட் சகோதரர்களை பற்றி நினைவு கூற விரும்புகிறேன்.ஏறத்தாழ 100 வருடங்களுக்கு முன்பு, முதன் முதலாக அவர்கள் வானில் பறக்க நினைத்த போது, மக்கள் ஏன் தற்போது பறக்கும் கருவிகள் தேவை என கேள்வி எழுப்பினர், ஆனால் தற்போது போயிங் 747 உள்ளிட்ட பல விதமான விமானங்கள் வந்து விட்டது. அதைப் போன்ற ஒரு கேள்வியாகவே நான் உணருகிறேன்.
வாய்ப்புகள் என்பது மேன்மையானது. தற்போது இருக்கும் சூழலில் வேதியியலின் துணை கொண்டு நம்மால் இயன்ற பொருட்களை கொண்டு மூலக்கூறு இயந்திரங்களை வடிவமைத்துள்ளோம். ஒரு கால கட்டத்தில் மாறுபடும் செயல்பாடுகளை (dynamic functionality) கொண்ட பொருட்களை கொண்டு  இந்த இயந்திரங்களை வடிவமைக்கும் போது அவை எண்ணற்ற பயன்பாடுகளை தோற்று விக்கும்.
எதிர் காலத்தில் திறன் மிகு பொருட்கள் நிறைய தொகுக்கப்படும் சூழலில் இந்த இயந்திரங்கள் பெரிய வரமாக அமையும். முக்கியமாக‌ இந்த மூலக்கூறு இயந்திரங்கள் தங்களை மீள் கட்டமைப்பு செய்து கொள்வதோடு தானே தகவமைப்பு செய்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்படும். மேம்படுத்த சமிக்ஞைகள் மூலம் தன் பண்புகளை தானே செறிவூட்டிக் கொள்ளும். இதன் வாயிலாக நானோ அளவிலான ஆற்றல் மாற்றிகளை வடிவமைக்கலாம் (Nano Energy Convertors).மேலும் அளவில் மிகச் சிறிய மூலக்கூறு இயந்திரங்கள் தாங்கள் தயாரித்த ஆற்றலை தன்னகத்திலேயே சேமித்து வைத்துக் கொண்டு எந்த வித புற ஆற்றலிமின்றி தானாகவே இயங்கலாம். இது நானோ மோட்டார்கள் என்னும் முற்றிலும் ஒரு புதிய துறையாக வளரும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும்."
  
யோசித்துப் பார்த்தால் அறிவியல் நுட்பம் எவ்வளவு மகத்தானது எனப் புரிந்து கொள்ள இயலும். இந்த மூலக்கூறு அளவிலான நனோ இயந்திரங்கள் மாத்திரை வடிவில் ஒரு குப்பியில் வைத்து நாம் விழுங்கி விட்டால் போதும். இதனோடு இணைக்கப்பட்டுள்ள மருந்தை கிருமிகள் இருக்கும் பகுதிக்கு தேடிச் சென்று (targeted drug delivery) அழித்து  விட்டு மருந்தை ஒரு கொரியர் பையனைப் போல அங்கு செலுத்தி விடும். சிக்கலான அறுவை சிகிச்சைகள் இனி எளிதாகலாம். இப்படி பல புதிய பயன்பாடுகள் எதிர்காலத்தில் நிச்சயம் கிடைக்கப் பெறலாம்.

கடந்த நூறாண்டுகளில் அறிவியலின் துணைக் கொண்டு மானுடத்தின் தேவைகளை பெருமளவு எளிதாக்கி இருக்கிறோம். இன்னும் நானோ அறிவியல்  உலகை சிறிதாக்கும்.

















Wednesday 5 October 2016


2016 Nobel Prize in Chemistry


2016 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசினை சொன் பியர் சொவச்சு (Jean-Pierre Sauvage), பிரேசர் சுடோடர்டு (Sir J. Fraser Stoddart), பெர்னார்டு பெரிங்கா (Bernard L. Feringa) ஆகிய மூவரும் கூட்டாக பெறுகின்றனர்.

மூலக்கூறு இயந்திரங்கள் வடிவமைப்பு மற்றும் தொகுப்புக்காக நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்படுகிறது





The Nobel Prize in Chemistry 2016 was awarded jointly to Jean-Pierre Sauvage, Sir J. Fraser Stoddart and Bernard L. Feringa "for the design and synthesis of molecular machines".

Tuesday 4 October 2016




2016 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள்







Sunday 2 October 2016

காந்தி ஜெயந்தி


கொரியாவில் பணி புரிந்த காலத்தில் டாக்சியில் பயணம் செய்யும் போது டாக்சி ஓட்டுநர்கள் தவறாமல் என்னிடம் சொல்லும் தகவல். காந்தி, தாகூரை தெரியும் என்பதே. எப்படி என ஆச்சரியமாக கேட்டால், அவர்களுக்கு பாடப் புத்தகத்தில் இவர்களை பற்றிய தகவல்கள் உள்ளதென ஆச்சரியமூட்டுகிறார்கள்.

அதே போல ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்யும் போது காந்தியை பற்றி விரிவாக பேசுகிறார்கள். காந்திய சிந்தனைகளை பற்றி புலகாங்கிதம் அடைகிறார்கள். 

அவ்வளவு ஏன், காந்தியைப் பற்றிய உயர்வான எண்ணமே நம்மை ஆட்டிப் படைத்த பிரித்தானிய நாட்டின் பெரியவர்களிடமும் பேசும் போதும் வெளிப்படுகிறது.

எதிரிகளும் இவர் பெயரை மிக கண்ணியத்தோடு உச்சரிக்கின்றனர்.

எல்லைகளை தாண்டி எல்லோரையும் இந்த கிழவன் அகிம்சை என்னும் ஆயுதத்தால் கட்டி போட்டுள்ளான் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.


காந்தி நீர் ஒரு அன்பு அரக்கரய்யா..


Selfie with Mahatma at Madame Tussauds London