Thursday 31 December 2015


ஜப்பான் ஏன் முன்னேறிய நாடாக உள்ளது -9


இன்று தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தின் தலைவரும் எனது பேராசிரியருமான அகிரா புசுசிமா அவர்கள், பல்கலைக் கழக மாணவர்களுக்கும், ஆசிரிய பெருமக்களுக்கும் புத்தாண்டு செய்தியினை முகநூலில் வெளியிட்டுள்ளார்.

இவரது வயது 75, ஆயினும் நான் வியக்கிற சுறு சுறுப்பான இளைஞர். இவரை பற்றி எனது வலைப்பூக்கள் பக்கத்தில் நிறைய எழுதியுள்ளேன்.

இந்த புத்தாண்டு செய்தியில் என்ன சொல்லி இருக்கிறார் என படித்து பார்த்தேன்.

அ. பல்கலைக் கழக இளம் நிலை மாணவர்களுக்கு தேவையான பாடத்திட்டங்களை தற்போதைய சூழலுக்கு தகுந்தவாறு மாற்ற வேண்டும். இதன் மூலம் உலகிற்கான தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகம் (Global TUS) என்ற புதிய சவாலுடன் வெற்றி நடை போடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

ஆ. மாணவர்களுக்கு தேவையான செறிந்த அறிவியல் நுட்பங்களை நம் தாய் மொழியில் பேராசிரியர்கள் எழுதிட வேண்டும். அவர்களது தனித்த ஆராய்ச்சி அறிவினை இளைய தலைமுறைக்கு எடுத்து செல்வதன் மூலம் நாம் அவர்களை நாட்டின் முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல முடியும். அதற்கான உதவிகளை பல்கலைக் கழகமே செய்து தரும். நம் புத்தகங்களை ஜப்பானின் பிற பல்கல்கலைக் கழகங்களும் ஏற்று படிக்கும் படி இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

இ. விஞ்ஞான உலகம் பெரிது, இதற்கான போட்டியில் நம் ஆய்வு மாணவர்களை தட்டி எழுப்ப  புதிய கொள்கைகளை நாம் நிறுவ வேண்டும், நவீனப்படுத்தப்பட்ட உபகரணங்களை பல்கலைக் கழகத்திற்கு கொண்டு வருவதன் மூலம் ஆய்வு மாணவர்களுக்கு எதிர் காலத்தில் வேலை வாய்ப்பினை உறுதி செய்ய இயலும்.

ஈ. பல்கலைக் கழகத்தின் உயர் சமூக மதிப்பீடு மற்றும் மாணவர்களின் தகுதித் திறமையுனை மேலும் வளர்ப்பதே இந்த வருடத்திய சவால் இதற்கான பணியில் உங்களோடு சேர்ந்து செயலாற்றிட காத்திருக்கிறேன்.

இதுதான் அவரது செய்தியின் பிரதான அம்சம்.

ஜப்பான்காரன் வாயில் வடை சுட மாட்டன். சொன்னா செஞ்சிடுவான்.

நம் தமிழக பல்கலைக் கழகங்களில் எந்த‌ ஒரு துணை வேந்தராவது புத்தாண்டு செய்தி தந்துள்ளார்களா?. பல்கலைக் கழகத்தினை உயர்த்திட‌ எதிர்கால திட்டம் என்ற ஒன்றாவது இவர்களிடம் இருக்கிறதா.

நாம் நம் திசைகளை இழந்து வருகிறோமே என அஞ்ச தோன்றுகிறது.


New year wishes from Prof Fujishima, President of Tokyo University of Science, Japan


Tuesday 29 December 2015

ஜப்பான் ஏன் முன்னேறிய நாடாக உள்ளது ‍ 8 -சுவரொட்டி அரசியல் (How Japan maintain as clean country?)



இரண்டு ஆண்டு காலமாக நான் ஜப்பானில் வசித்த போது அனாவசியமாக ஒட்டப்பட்ட எந்த ஒரு சுவரொட்டிகளையும் பொது இடங்களில் கண்டதே இல்லை. சரி தேர்தல் காலங்களில் இங்கு அரசியல்வாதிகள் எப்படி  பொதுமக்களுக்கு அறியப்படுகிறார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்து கொண்டே இருக்கும்.

இங்குள்ள‌ உள்ளூர் நகர் மன்றங்கள் (City Hall) இது போன்ற விளம்பரங்களுக்கென தனித்த சுவரொட்டி பலகைகளை (Advertisement area) நகரின் குறிப்பிட்ட இடங்களில் பொது மக்கள் பார்வை படும் படி வைத்திருக்கிறார்கள். நகர் மன்றத்தில் முறையாக அனுமதி பெற்றவர்கள் மட்டுமே இந்த இடத்தில் பதாகைகள் ஒட்ட முடியும். 


ஜப்பானில் நகர் மன்ற அனுமதி மூலம் வைக்கப்படும் அரசியல் சுவரொட்டிகள்

அரசு சேவை விளம்பரங்கள் கூட இதே போன்ற இடத்தில் மட்டும்தான் காண முடியும். 


தொடர் வண்டிகளின் (Metro trains) உள்ளே கண்ட இடத்தில் யாரும் விளம்பர தாள்களை ஒட்ட முடியாது. இரயில்வே நிர்வாகத்தினர் இதற்கென வைக்கப்பட்டு இருக்கும் பட்டிகளில் (stands) சொருகி விடுகிறார்கள். இதனை இரயிவே நிர்வாகத்தினரிடம் அனுமதி பெற்ற தனியார் நிறுவனங்களே இவற்றினை உரியா காலத்தில் மாற்றி சுத்தம் செய்யும் பொறுப்பினை ஏற்றுக் கொள்கிறார்கள்.

இதனால் அருவருக்க தக்க வகையில் கண்ட இடங்களில் சுவரொட்டி, விளம்பரங்கள் ஒட்டப்படுவது தடுக்கப்படுகிறது.ஜப்பான் மிகவும் சுத்தமான நாடாக இன்றும் உலகின் முன்னால் நிற்க இதுவும் ஒரு முக்கியமான காரணம் ஆகும்.


தொடர் வண்டி உள்ளே முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பரங்கள்

தொடர் வண்டி உள்ளே முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பரங்கள்

தொடர் வண்டி உள்ளே முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பரங்கள்

தொடர் வண்டி உள்ளே முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பரங்கள்

இரயில் நிலையங்களில் முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பரங்கள்

உங்கள் பார்வைக்கு:

சமீப காலத்தில் தமிழகத்தின் புதிய தலைவலியாக அவதாரம் எடுத்திருக்கிறது சுவரொட்டி, பிளக்ஸ் விளம்பர பதாகைகள். இவற்றினை கட்டுப்படுத்த வேண்டிய அரசுகளும் அதே வேலையினை செய்வதால் பெரிய வித்தியாசம் இல்லாமல் இந்த அவல நிலை தொடர்கிறது. இதனை பற்றி சுருக்கமாகவே இங்கு எழுதுகிறேன்.

சுவரொட்டி கலாச்சாரத்தினை அரசியல் கட்சியினர் இதனை அங்கிங்கெனாதபடி ஆரம்பித்து வைக்க, தற்போது இந்த கலாச்சாரம் உள்ளூர் ரசிக மன்றங்கள்  வழியாக விரிவுபடுத்தப்பட்டு தற்போது பத்து வயது நிரம்பிய விடலை பையன்கள் திருவிழாக்களில் பிளக்ஸ் பதாகைகள் அடிக்கும்  அவல நிலைக்கு மாறி இருக்கிறது நம் சமூகம்.

இதன் ஊற்றுக் கண் எங்கிருந்து தொடங்குகிறது என்பது நமக்கு பல காலமாய் தெரிந்த ஒன்றுதான்.  இருப்பினும் ஒரு சில உதாரணங்களை பார்ப்போம்.

அரசு ஒரு மேம்பாலத்தினை திறக்கிறது, அதன் வழியே எப்படி செல்ல வேண்டும் என்ற வழித் தட பலகைகள் மீது குற்ற உணர்வோ, அடிப்படை அறிவோ இல்லாமல் போஸ்டர் ஒட்டும் அளவிற்கு நம் அரசியல் பக்தர்களின் பைத்தியம் முற்றி உள்ளது. வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து புதிய இடங்களுக்கு பயணிப்பவர்கள் வழித்தடத்தினை அறிய முடியாமல் எந்த அளவிற்கு இதன் மூலம் அவதிக்குள்ளாவர்கள் என எவரும் சிந்திப்பதில்லை.

எங்கு பார்த்தாலும் தற்போது சுவரொட்டி மயம், "நான், நான் என்னும் விளம்பரம் மோகம்"  வெறியாகி மாறி  தற்போது ஸ்டிக்கர் வடிவில் வந்து நிற்கிறது.  

பொறுமையாக சிந்தித்து பாருங்கள், ஆளும் கட்சியின் அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் இந்த மக்களுக்கான நலத்திட்டங்களை செய்ய வேண்டும். இது அவர்கள் கடமை. இந்த கடமையினை செய்ய எதற்கு விளம்பரம். எந்த தாயாவது தன் பிள்ளைகளுக்கு பாலூட்டியதை ஊர் முழுக்க சொல்லி திரிவாளா?. 

பிறகு எதற்கு இப்படி கோடி கணக்கில் விளம்பரங்கள். இந்த செலவில் எல்லா தெருக்களிலும் குப்பை தொட்டிகள் வைத்திருந்தால் நாடாவது சுத்தம் ஆகி இருக்கும்.

எல்லா அரசியல், சினிமா பக்தர்களுக்கும் ஒரே கேள்விதான் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் அல்லது ஊடக வெளிச்சத்தில் நிற்கும் ஒருவரை இனி நீங்கள் போஸ்டர் அடித்து ஊர் முழுக்க ஒட்டினால்தான் மற்றவர்களுக்கு தெரியுமா. அதுதான் தொலைகாட்சிகள் வாயிலாக எல்லா வீடுகளுக்கும் வந்து எல்லோருடைய உயிரையும் எடுக்கிறீர்களே.  

மிகவும் கடினப்பட்டு வெள்ளை அடித்து வைத்திருக்கும் தனிநபர்களின் வீடுகள், தொழிற்சாலைகள், கடைகள் ஆகியவற்றீன் மீது எந்த ஒரு அனுமதியும் பெறாமல் அவற்றின் மீது போஸ்டர் ஒட்டுவது. வீரனே, சூரனே என வண்ணமடித்து விளம்பரம் செய்வது என மனநிலை பிழன்ற சமூகமாகவே நாம் மாறி உள்ளோம்.

* நினைத்த இடத்தில் யாரிடமும் முறையான அனுமதி இல்லாமல் ஆற‌றிவு உள்ள மனிதர்களால் ஒட்டப்படும் இந்த சுவரொட்டிகளால் மிகுந்த அவதிக்குள்ளாவது மனிதர்கள் மட்டுமல்ல, சாலையில் திரியும் ஐந்தறிவு கால் நடைகளும் தான்.  இந்த சாலையோரங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் சுவரொட்டிகளை தின்பதால் அவைகளின் உணவு செரிமானம் கெட்டு இறந்தே போகின்றன. 

* சுவரொட்டிகளால் ஏற்படும் மற்றொரு தீராத தலைவலி அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் அடித்து கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது. இதன் உட்சகட்டமாக பொது சொத்துகளை தீவைத்து  விபத்துகள் ஏற்படுத்துவது.


* தற்போது அடைமொழி கலாச்சாரம் முற்றி விட்டது. அதன் வடிகாலாகத்தான் இந்த சுவரொட்டிகள் உள்ளது. தயவு செய்து அடைமொழியினை தூக்கி எறிந்து விட்டு பெயரை மட்டும் குறிப்பிட்டு அழையுங்கள். இங்கே சுதந்திர இந்தியாவில் எந்த போரும் புரட்சியும் நடைபெறவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன். எனவே அரசியல், சினிமா பக்தர்கள் தொடர்ந்து கிளிசே தனமாக சகட்டு மேனிக்கு பட்ட பெயர்களால் உங்களுக்கு பிடித்தவர்களை பற்றி விளித்து உளறுவதை நிறுத்துங்கள்.

*அரசியல்வாதிகள் மட்டுமல்ல, இந்த விசயத்தில் ஆன்மிக கும்பல்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனக்கள், கோடை கால பயிற்சி கூட்டங்கள், மூலம் பெளத்திரம் என நீண்டு கொண்டே போகும் சுவரொட்டி மடையர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்கா.


பத்து வயதிற்குட்பட்ட நம் பள்ளி குழந்தைகளுக்கு இந்த சுவரொட்டி லும்பர்கள் செய்யும் அட்டகாசங்களை பாடமாக சமூக கல்வியில் வைக்க வேண்டும். அந்த குழந்தைகள் இனி இவர்கள் முகத்தில் காறி உமிழ்ந்தால் மட்டுமே இச்சமூகம் திருந்தும்.


Monday 28 December 2015

ஜப்பான் த‌பால் நிலையங்கள் -4


ஜப்பான் த‌பால் நிலையங்கள் உள்ளிட்ட பொது சேவை அலுவலகங்களில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான, பேனா, தபால் உறைகள் ஒட்ட தேவையான பசை, கால்குலேட்டர், எடை கருவி, கண்ணாடி, அச்சு வைக்கும் மை, உள்ளிட அத்யாவசிய தேவை பொருட்கள் அனைத்தும் இலவசமாக பொது மக்கள் பயன்பாட்டிற்காக‌ வைக்கப்பட்டு இருக்கும்.

இங்குள்ள மக்களும் இதனை முறையாக பயன்படுத்துகின்றனர். இதற்கான கல்வியினை ஜப்பான் பள்ளி பருவத்திலேயே தந்து விடுகிறது

நம் தேசத்தின் அலுவலகங்களில் மக்களுக்கு தேவையான இது போன்ற வசதிகள் கொண்டு வரப்பட வேண்டும். அதே சமயம் மக்கள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டு இருக்கும் பொருட்களை பாதுகாப்பாக பயன்படுத்தி அரசுக்கு நல் ஒத்துழைப்பு தர பொது மக்களையும் பழக்கப்படுத்த வேண்டும்.

இதற்கு நாம் செய்ய வேண்டியது தற்போது பள்ளியில் பயிலும் மாணவர்களை தபால் நிலையங்களுக்கு நேரில் அழைத்து சென்று இது போன்ற வசதிகளை கொடுத்து அவர்களை பயன்படுத்த சொல்லி பழக்க வேண்டும்.

ஒரு நாடு வல்லரசு ஆக தேவையில்லை, அது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் குடியரசு ஆக இருந்தால் போதுமானது.

இன்னும் நம் ஊர் தபால் நிலையங்களில் பசை இல்லை என்ற பழைய பஞ்சாங்கத்தினை மாற்றுவோம்.

Japan Post office, Takayama, Japan
Japan Post office, Takayama, Japan



Sunday 27 December 2015

ஜப்பானிய தபால் நிலையங்கள் - 3

வெளிநாட்டில் இருந்து வரும் கடித மூட்டைகளை வாங்கி அவற்றினை உள்நாட்டு தபால் நிலையங்களுக்கு  அனுப்புவது, அல்லது உள்ளூரில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் தபால் பார்சல்களை கையாளுவவது இது போன்ற வழக்கமான பணிகளுக்காக‌ விமான நிலையங்களில் தபால் நிலையங்கள் இயங்கும் (Mail Processing Center).  இவை பொதுவாக  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அல்லாமல் விமான நிலையத்திற்கு வெளியில் பார்சல் பிரிவாக தனித்து இயங்கும்.

ஆனால், ஜப்பானில் நரிதா சர்வதேச பறப்பகத்தில் (Narita International Airport, Tokyo) விமான நிலையத்தின் உள்ளே  மக்கள் சேவைக்காக 24 மணி நேரமும் தபால் நிலையங்கள் இயங்கி வருகிறது.  இந்த தபால் நிலையங்களின் சேவையானது வழக்கமான உள்ளூர் தபால் நிலையங்களை விட  சற்றே வித்தியாசமானது.

1. வெளிநாடுகளில் இருந்து ஜப்பானுக்கு சுற்றுலா வரும் பயணிகள் அந்தந்த ஊர்களில் வாங்கும் பொருட்களை உள்ளூர் தபால் நிலையத்தில் கொடுத்து விட்டால் அவர்கள் இந்த விமான நிலையத்திற்கு அனுப்பி விடுவார்கள்.  பின்னர் விமானத்தில் பயணிக்கும் நாள் அன்று நேரடியாக இந்த தபால் நிலையத்திற்கு சென்று கடவு சீட்டினை (Passport) காட்டி நம் அடையாளத்தினை உறுதி செய்த பின்னர் பார்சலை பெற்றுக் கொள்ளலாம். 

2. இதுதவிர. ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் விமான பயணத்திற்கு முன்பு வாழ்த்து அட்டைகள் (Greeting cards), நினைவு புகைப்பட அட்டைகள் ஆகியவற்றினை குறைந்த விலையில் அஞ்சல் தலையினை இங்கு வாங்கி ஒட்டி கொடுத்து விட்டால் போதும். விரைவில் நாம் அனுப்பிய முகவரிக்கு விமான சேவை மூலம் சென்று விடும். 

3. எக்கனாமிக் வகுப்பில் பயணிப்பவர்களுக்கு பெரிய‌ தலைவலியாக இருப்பது கையில் எடுத்து செல்லும் பொருட்களுக்கான‌ (cabin and check in luggage) விமான சேவை நிறுவனங்கள் நிர்ணயிக்கும் எடை அளவு.   தப்பி தவறி  இந்த எடைக்கு மேல் எடுத்து சென்றால் ஒரு சில விமான சேவை நிறுவனங்களை தவிர‌  பெரும்பாலான நிறுவனங்கள் கந்து வட்டி கந்தசாமி அளவிற்கு இறங்கி அபராதத்தினை வாங்கி விடுவார்கள். அந்த சமயங்களில் நம் மக்கள் வெளி நாடுகளுக்கு ஆசையாக கொண்டு செல்லும் பதார்த்தங்களையோ அல்லது மளிகை சாமானங்களையோ குப்பையில் எறிந்து விடுவார்கள். ஏனெனில் அபராத தொகை சாமான்களின் விலையினை விட பத்து மடங்கு அதிகம் இருக்கும். ஆனால், நரிதா சர்வதேச பறப்பகத்தில் இந்த பிரச்சின இல்லை. எடை அதிகமான பொருட்களை இங்குள்ள‌ தபால் நிலையத்தில் இருந்து அனுப்பி விடலாம். 

இது போன்ற பல வசதிகள் இங்குள்ள தபால் நிலையங்கள் வழங்குவதால் ஜப்பானின் சுற்றுலா வருமானமும் அதிகரிக்கிறது


Japan Post, Terminal 2 and 3 Narita International Airport, Tokyo

Japan Post, Terminal 2 and 3 Narita International Airport, Tokyo

(சென்னை உள்ளிட இந்திய விமான நிலையங்களின் பிரச்சினை போர்டிங் பாஸ் வாங்கும் இடத்தில் ஒரு தபால் நிலையம் கூட இருக்காது. அப்படி இருந்தால், இது போன்ற இக்கட்டான சூழலில் இந்த தபால் நிலையத்தில் இருந்து பொருட்களை விமான (EMS or SAL) அல்லது கப்பல் வழி தபால் (surface shipping) சேவை மூலம் வெளிநாடுகளுக்கு அல்லது நாம் செல்ல வேண்டிய  முகவரிக்கு குறைந்த விலையில் அனுப்பி விடலாம். மேலும் இதன் மூலம் நம் தபால் துறையினருக்கும் வருமானம் அதிகரிக்கும்).


*  தற்போது சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பறப்பக முனையில் புதிய  தபால் நிலையத்தினை சென்ற ஆகஸ்டு மாதத்தில் இருந்து துவங்கி உள்ளார்கள். இந்த தபால் நிலையத்திற்கு வரும் வெளிநாட்டவர்கள் அல்லது பார்வையாளர்கள் அடையாள அட்டையினை காட்டி தங்கள் உருவம் பொறித்த அஞ்சல் தலையினை அச்சடித்து (printing) வாங்கி கொள்ளும் வசதியினை ஏற்படுத்தி உள்ளார்கள். மேலும் இணைய வசதி உள்ளிட்ட, பிரிண்டிங் வசதியினை கட்டண சேவையாக‌ தருகின்றனர். ஆனால் இது போன்ற சேவைகளை விடவும், மேலே குறிப்பிட்ட சேவை அதிமுக்கியமானது. 

* நம் நாட்டு தபால் நிலையங்களில் இருக்கும் அடுத்த முக்கியமான‌ பிரச்சினை பொருட்களை அனுப்ப தேவையான‌ பார்சல் அட்டை பெட்டிகள் (cotton box) கிடைப்பது.  வெளி நாடுகளில் (கொரியா, ஜப்பான்) பார்சல் அனுப்ப‌ சிறிய ரக (1 கிலோ கொள்ளவு) முதல் பெரிய ரக (25 லிட்டர்) பார்சல் பெட்டிகள் வரை தபால் நிலையங்களில் விற்கப்படுகிறது. ஆகையால் அதிக எடையுள்ள பொருட்களை அனுப்ப சிரமம் இல்லாமல் அங்கேயே நாம் அட்டை பெட்டிகளை வாங்கி கொள்ளலாம். இதற்காக வெளி கடைகளில் தேடி அலைய வேண்டாம்.  இது போன்று அட்டை பெட்டிகளை தபால் நிலையத்தில் கொண்டு வந்தால் மக்களுக்கு பெரிதும் உபயோகமாக இருக்கும். அதை விட்டு விட்டு தபால் நிலையத்தில்  தங்க காசுகள் விற்கிறார்கள். இதன் தத்துவம் எனக்கு என்னவென்று புரியவில்லை.



 

Saturday 26 December 2015

அடிப்படை அறிவியலை புரிந்து கொள்ளுங்கள்


தயவு செய்து, உங்கள் பாடத்திட்டத்தினை மாற்றுங்கள்.. குழந்தைகள் மதிப்பெண்ணை நோக்கி ஓடுவது இனியும் பயன் தராது.

எளிமையான கேள்வி. ஒரு கண அடி நீர் (cusec= cubic feet per sec) என்றால் எவ்வளவு நீர் இருக்கும் இது நீரின் எடையினை அளக்கும் அலகா அல்லது நீரின் ஓட்டத்தினை அளக்கும் அலகா என அடிப்படையே புரியாத அளவிற்கு தான் நம் கல்வி இருக்கிறது.

இது தெரிந்திருந்தால் பச்சை குழந்தை முதுகில் ஐம்பது கிலோ எடையுள்ள பொருளை வைப்பது எவ்வளவு பாவம் என அடையாற்றில் அதன் கொள்ளளவை மீறி 20 மடங்கு தண்ணிரை கமுக்கமாக திறந்துவிட்டு இன்னும் பாசாங்கு காட்டும் தமிழக அரசின் தந்திரம் புரியும்.

சரி ஒரு கன அடி நீர் என்றால் என்ன என்பதை இத்துடன் இணைத்துள்ள கட்டுரையில் தெளிவாக தமிழில் விளக்கி உள்ளனர். பேரிடர் காலத்திலாவது அடிப்படை எதார்த்த அறிவியலை படித்த்து தொலைவோம்.

படித்து விட்டு அடையாறின் கொள்ளளவு என்ன அதில் அரசு முன்னறிவிப்பு இல்லாமல் திறந்து விட்ட நீரின் அளவு என்ன என்பதை முதலில் நன்கு புரிந்து கொண்டு பொது வெளியில் பேசுங்கள்.

ஒரு உண்மையினை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சென்னையில் உள்ள ஏரியில் வீடுகள் ஆக்கிரமிப்பு பண்ணியதால் தான் இந்த வெள்ள சீரழிவு என்று பொது வெளியில் பலரும் பேசுவதை பார்க்க முடிகிறது

உண்மைதான் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆனால், சென்னையில் எக்மோர், சைதாபேட்டை, கோடம்பாக்கம் இவையெல்லாம் ஏரியியின் நடுவிலா இருக்கிறது.

இங்கே உள்ள பகுதிகளில் இரண்டாவது தளத்திற்கு வரை தண்ணீர் ஓடியுள்ளது. இங்கு வாழ்ந்த ஏழை, நடுத்தர, பணக்காரர்கள் என எல்லா தரப்பு மக்களும் வீடிழந்து நொந்து போய் உள்ளனர்.ஆகையால் எதனால் சென்னைக்கு இந்த வெள்ளக் கேடு வந்தது என புரிந்து கொண்டு பேசுங்கள்.

அடுத்த கேள்வி ஒரு. மில்லி மீட்டர் மழை பெய்தது என்றால் என்ன அர்த்தம். அதை எப்படி புரிந்து கொள்வது..முதலில் மேலே கேட்ட கேள்வியினை புரிந்து கொள்ளுங்கள் அப்புறம் மீண்டும் வருகிறேன்.


பேரிடர் மேலாண்மை கல்வி - ஜப்பான் தரும் நம்பிக்கை ‍- 2
(பாரதியின் நினைவுகளோடு எழுவோம்)

சென்னையின் தெருக்கள் எங்கும் வெள்ள சீர்கேட்டால் ஏற்பட்ட இராட்சத குப்பைகள், சாக்கடை கழிவுகள், இடிந்த வீடுகள், வாகனங்கள் என எங்கு நோக்கிலும் குப்பை காடாய் காட்சி அளிக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் அடித்து சென்றதோடு இல்லாமல், இன்னும் சில இடங்களில் நீர் வடியாமல், சேறும் சக்தியாக காட்சியளிக்கிறது.

இரண்டு இடங்களிலும் மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து தெருக்களில், கிடைக்கும் பொது இடங்களில் கொசுக்கடியில் தங்கி இருக்கின்றனர். எப்படி தங்கள் வாழ்வினை மீண்டும் மீட்கப் போகிறோம் என்கிற துக்கத்தில் துவண்டுள்ளனர்.

குடியிருப்பு, சாலைகள், நீர் நிலைகள் என இவற்றிற்கான‌ புணரமைப்பு மற்றும் மீள் கட்டமைப்பு என்பது நமக்கு இடப்பட்ட மிகப் பெரிய சவால் ஆகும்.

ஜப்பானில் 2011 ஆம் ஆண்டு மார்ச 11 ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றூம் சுனாமி பேரழிவில் பாதிக்கப்பட்ட நகரங்கள் மக்களின் ஒத்துழைப்போடு மூன்றே மாதத்தில் மீள் கட்டமைப்பு செய்யப்பட்டு உள்ளது.

ஆகையால் சென்னை மாநகரையும், கடலூரையும் மக்கள் ஒன்றிணைந்து மீள் கட்டமைப்பு செய்து அவர்களின் துயரை துடைக்க முடியும்..

இந்த மீள் கட்டமைப்பு பணியில் அரசு, தன்னார்வகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், என எல்லாதரப்பும் போர்கால அடிப்படையில் இயங்கினால் நிச்சயம் நம் பழைய நிலைமையினை மீட்டெடுக்க இயலும்.

பாரதியின் இந்த பிறந்த நாளில் "இன்று புதிதாய் பிறந்தோம்" என்ற‌ அவன் வார்த்தைகளில் புத்தெழுச்சியுடன் இந்த இடரில் இருந்து மீண்டு வருவோம்




பேரிடர் நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களிடம் இருக்க வேண்டியவை

2011 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் திகதி ரிக்டர் 9 அலகில் ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் வரிசையாக நின்று குடிநீர் வாங்கும் காட்சி.
முறையாக வரிசையில் நின்று வாங்குவதால் எல்லா மக்களுக்கும் உரிய நேரத்தில் நிவாரணம் கிடைக்கிறது. வழங்குபவருக்கும் இந்த பணி எளிமையாகிறது. ஒரு பேரிடர் காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ஜப்பானிய மாணவர்களுக்கு சிறு வயதில் பள்ளியில் சொல்லி தருகிறார்கள். இம்முகாம்களில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு மட்டும் வரிசையில் நிற்காமல் வாங்கிட சலுகை உண்டு. ஆனாலும் பல முதியவர்கள் வரிசையில் நின்றுதான் வாங்கி செல்வர்.

நாமும் நம் பிள்ளைகளுக்கு இதை சொல்லிக் கொடுப்போம்.

புகைப்படம் நன்றி : டெய்லி மெயில்

ஜப்பானிய உணவு விடுதிகள்
நம் ஊரில் உணவு விடுதிகளில் கடைக்கு சாப்பிட சென்றால் உணவு பட்டியலை பார்த்து ஆர்டர் செய்ய காத்திருக்க வேண்டும். அதுவும் கூட்ட நெரிசல் இருக்கும் போது சென்றால் சுலபத்தில் சிப்பந்திகளை பிடிக்க முடியாது.
சப்பானிய உணவு விடுதிகளில் சாப்பிட செல்லும் போது பதார்த்தங்களை ஆர்டர் சொல்ல சிப்பந்தியை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம்.
எல்லா மேசைகளிலும் வைபை வசதியுடன் எல் ஈ டி தொடு (LED screen) திரைகள் இருக்கும் அவற்றில் உணவு படங்களுடன் விலை பட்டியலும் இருக்கும். அவற்றினை தெரிவு செய்வதன் மூலம் நேரடியாக சமையல் கட்டில் உள்ளவர்களுக்கு நாம் ஆர்டர் செய்வது சென்று விடும்.
மேலும் உணவு அட்டவணையில் சப்பான், கொரிய, சீன மொழி என மூன்றிலும் தருகிறார்கள்.





தமிழகத்தில் தற்போது பெரும்பாலான உணவு விடுதிகளில் தமிழில் உணவு பட்டியலை காண்பதே அரிதாகி விட்டது

 ஜப்பானிய முடி திருத்தும் நிலையங்கள் 2

பால்ய வயதில் என் கிராமத்தில் இருக்கும் முடி திருத்தும் நிலையங்களுக்கு சென்றால் பாதி நாள் கடையிலேயே உட்கார்ந்து இருக்க வேண்டும். ஒரு போதும் வரிசையினை பின்பற்ற மாட்டார்கள். அதுவும் ஞாயிற்று கிழமை கடைக்கு போனால் இராத்திரி ஆகி விடும்.

பல நேரங்களில் நாட்டாமை முதல் உள்ளூர் கட்சிகாரர்கள் என வரிசையாக வண்டி கட்டி கொண்டு வந்து விட்டால் அவ்வளவுதான், தங்கள் பாராளுமன்ற அதிகாரத்தினை பயன்படுத்தி வரிசையில் இருப்பவர்களை தாண்டி முடி திருத்தும் அரியணையில் அமர்ந்து விடுவார்கள். அந்த கணங்களில் அறிவின் ஊற்றுக் கண்ணாக அங்கு கிடக்கும் பழைய செய்தி தாள்கள், வார சஞ்சரிகைகள் என எல்லாவற்றையும் மேய்ந்து கொண்டே இருப்பேன்.

இந்த சூழலை பார்த்து அறியும் சிறுவர்கள் மனதில் எதிர்மறையான எண்ணங்களே நிச்சயம் பதியும் என நாம் யாரும் யோசிப்பதில்லை. பின்னாளில் அவர்களும் இதே தவறைத்தான் செய்வார்கள். இதன் நீட்சிதான் பேருந்தில் அடித்து பிடித்து கொண்டு ஏறுவது.

முடி திருத்தும் நிலையங்கள் முன்பைவிட இப்போது எல்லா இடங்களிலும் கொஞ்சம் நவீனம் ஆகி இருக்கிறது. அந்த வகையில் மகிழ்ச்சி.

ஆனால் அந்த வரிசையில் முடி வெட்டிக் கொள்ளும் பழக்கம் இன்னும் வந்த பாடில்லை. சில நேரங்களில் அடி தடி வரை இப்பிரச்சினை நீள்கிறது.

ஜப்பானில் எனது பல்கலைக் கழக வளாகத்தில் ஒரு முடி திருத்தும் நிலையம் உள்ளது. அறுபது வயதிற்கு மேற்பட்ட பெண்மணி ஒருவர் தான் இந்த நிலையத்தினை நடத்துகிறார். வெளியில் உள்ள கடைகளை ஒப்பிடும் போது இங்கு 25 சதவிகிதம் தள்ளுபடி. ஆகையால் நிறைய மணவர்கள், பேராசிரியர்கள் இங்கு முடி வெட்டிக் கொள்கிறார்கள்.

சரி இந்த கடையில் வரும் கூட்டத்தினை எப்படி சமாளிக்கிறார்கள். இந்த முடி திருத்தும் நிலையத்தின் வெளியே ஒரு எழுது பலகை உள்ளது. இதில் ஒரு வாரத்திற்கு முன்பே எந்த தேதியில், மணிக்கு முடி வெட்டிக் கொள்ளலாம் என முன் பதிவு செய்து கொள்ளலாம். ஆகையால் சரியாக அந்த நேரத்துக்கு சென்றால் போதும். அதனால் நம் நேரமும் மிச்சம் ஆகிறது. இந்த கடையில் முடி வெட்டி கொள்பவரை தவிர அங்கே யாரையும் பார்க்க முடியாது.

நிறைய நாடுகளில் தொலைபேசி மூலம் முன் பதிவு செய்து கொள்ளும் முறையினை அறிமுகப் படுத்தி உள்ளார்கள்.

ஆனால் இந்த கரும் பலகை முறை மிகவும் சிக்கனமானது. இவ்வாறு நம் ஊரிலும் நடை முறைப் படுத்தப்பட்டால் மனித வள ஆற்றலை நிச்சயம் நாம் சேமிக்கலாம்.

கடைக்கு செல்ல்லும் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் மத்தியில் வரிசையாக மட்டுமே செல்ல வேண்டும் என்ற எண்ணங்களை நிச்சயம் பதிக்க முடியும்.


Reservation board, Hair dressing shop, Tokyo University of Science Campus, Nodashi, Japan

Reservation board, Hair dressing shop, Tokyo University of Science Campus, Nodashi, Japan

ஜப்பானின் முடி திருத்தும் நிலையங்களில் நூலகங்கள் அளவிற்கு எவ்வாறு புத்தகங்கள் வைக்கப்பட்டு இருக்கும் என்பது பற்றிய எனது பழைய கட்டுரையினை படிக்க இங்கே சொடுக்கவும்.



Wednesday 23 December 2015

Our recent research has been accepted in JMC B journal

Glad to share that our recent work entitled "Single-step electrospun TiO2–Au hybrid electrodes for high selectivity photoelectrocatalytic glutathione bioanalysis: has been published as Cover article in Journal of Materials Chemistry B.
We thank the Editors, JMC B for selecting our work as Front cover article.
Congrats to our biosensors team, Photocatalysis International Research Center (PIRC), Japan.

For full article
-----------------------------------------------------------------------------------------------------------------
We report synthetic protocol of metal nanoparticle embedded metal oxide fibrous membrane by one step electrospining process. In particular, we achieved TiO2/Au nanocomposite membrane directly onto conducting substrate without any binders. This is quite challenging task compare to conventional electrospining process derived two-step electrode fabrication.

We demonstrate Au/TiO2 composite fibrous membranes as photoelectrocatalyst candidate in glutathione biomolecule sensing and realized as high selectivity in the presence of other biomolecules (glucose, cysteine). Furthermore we explore the possibility of "Photoelectrocatalysis" technology in biosensing, which is one of the upcoming tools in bio-nano health area.

The main advantage of this nanocomposite photoelectrode is it can function by accessing nature solar light irradiation as key driving force. The current experimental results suggested that the single-step TiO2-Au HNF fabrication technique reduces the material consumption than multi-step metal-metal oxide composite preparation techniques and thus, anticipated to be attractive in wide range of electrochemical and photoelectrochemical devices. We strongly believe that low cost, ready-to-use, shape controlled TiO2-Au HNF without fiber aggregation could be futuristic in biosensing application with wide range of molecule detection.

--------------------------------------------------------------------------------------------------------------------------


Our work has been published as cover article

ஜப்பானிய பேரரசரின் பிறந்த நாள்

இன்று ஜப்பானிய பேரரசர் (天皇 Tennō) அகிஹிதோ‍  (Emperor Akihito) ‍அவர்களின் பிறந்த தினம். “இந்த நாளை  தென்னோ தஞ்சோபி” என்று ஜப்பானிய மொழியில் அழைக்கிறார்கள். இவ்வருடம் அவர் தனது 82 வது வயதில் அடி எடுத்து வைக்கிறார். அவர் மென்மேலும் பூரண நலத்துடம் பல்லாண்டு வாழ ஜப்பான் வாழ் தமிழ் சமூகம் சார்பாக வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.


Japan  Emperor  Akihoto and Empress.

அரசரது பிறந்த நாளை மக்கள் கொண்டாடும் வண்ணம் ஜப்பானில் ஆண்டு தோறும் டிசம்பர் 23 ஆம் தேதியினை தேசிய அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளனர்.

ஜப்பானிய மக்களுக்கு இந்த தினத்தில் இருந்துதான் புதிய வருடம் பிறக்கிறது என சொல்லலாம்.  நடப்பு வருடத்தில்  தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மறந்து புதிய வருடத்தினை  வரவேற்கும் விதமாக‌ முந்தைய நாள் (டிசம்பர் 22ந் தேதி) மாலைப்  பொழுதில் ஜப்பானியர்கள் உணவு விடுதிகளுக்கு சென்று நண்பர்கள், குடும்பத்தினர்கள், அல்லது சக‌ ஊழியர்களோடு மகிழ்ச்சியாக பழைய அனுபவங்களை பேசிவிட்டு புதிய வருடத்திற்கு நகர்கின்றனர்.

பேரரசரின் பிறந்த நாளில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தோக்கியோவில் உள்ள அரண்மனைக்கு சென்று தங்கள் வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர். அரண்மனையின் குறிப்பிட்ட பகுதி வரை பொதுமக்கள் இந்த நாளில் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்களின் வாழ்த்துகளை அரசரும், அரசியாரும் அரண்மனையில் மேல் அலரியில் இருந்து மக்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொள்வர்,  

சனநாயக முறையில் மக்கள் ஆட்சி நடக்கும் பல நாடுகளில் அரசர்கள் வழக்கம் நடைமுறையில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. ஆனால், ஜப்பானியர்கள் இன்றும் அரசரை தங்களின் குடும்பத்தில் ஒருவராக பாவிக்கின்றனர். அதற்கு உதாரணம் இங்குள்ள தேதி முறை. அதை பற்றி விரிவாக சொல்கிறேன்.

ஜப்பான் நாட்டிற்குள் அரசு சார் விண்ணப்பங்களில் பயன்படுத்தப்படும் தேதி முறையானது சற்று வித்தியாசமானது. மற்ற நாடுகளில் பொதுவாக வழக்கில் பயன்படுத்தப்படும் ஆங்கில வருடத்தினை (கி.பி) எடுத்து கொள்ளாமல், ஜப்பானிய பேரரசர்களுக்கென்று உள்ள நாட்காட்டியினை பயன்படுத்துகிறார்கள்.உதாரணத்திற்கு தற்போதைய பேரரசர் அகிஹிதோ அவர்கள் அரியணை பதவியினை 1989 ஆம் ஆண்டு பதவிக்கு வந்தார்

இந்த காலமானது கெய்சி ( 平成 Heisi)  என்று அழைக்கப்படுகிறது. அரசர் பதவியேற்ற 1989 ஆம் ஆண்டில் இருந்து நடப்பு ஆண்டு எத்தனை ஆகியிருக்கிறது என்பதையே வருடமாக எடுத்துக் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு இந்த வருடம் 2015 ஆம் ஆண்டு 26 என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது 1989 ல் இருந்து 26 வருடங்கள் ஆகிறது எனப் பொருள். இவருக்கு பிறகு வேறு அரசர் இதே போல் வரும்போது பழைய ஆவணங்களில் குழப்பம் வரக்கூடாது என்பதற்காக வருடத்திற்கு முன் ஜப்பானிய மொழியில்  平成 Heisi அரசரது காலத்தினை குறிப்பிட்டு எழுதுகிறார்கள். கெய்சியின் ஆங்கில முதல் எழு த்தான “H” என்ற குறியீட்டினையும் வருடத்திற்கு முன்பு பயன்படுத்துகின்றனர்.



  

Tuesday 22 December 2015



சென்னை பெருவெள்ளம் தொடர்பாக என் முகநூல் பக்கத்தில் நான் எழுதியிருந்த‌ கட்டுரையினை கோவையில் இருந்து வெளி வரும் "நம் பிள்ளை" இதழில் "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்னும் பகுதியில் பிரசுரித்துள்ளார்கள்..

நம் பிள்ளையின் ஆசிரியர் திரு சிவக்குமார் அவர்களுக்கு பெரும் நன்றிகள்.












Monday 21 December 2015


வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இந்தியாவிற்கு தேவையா?


வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது கல்வி ஸ்தாபனங்களை நிறுவுவதை ஒட்டி விவாதங்கள் நடந்துவருகின்றன. இதனை நாம் ஆதரிக்கலாமா அல்லது கூடாதா என்ற விவாதத்தினை முன் வைத்து நண்பர் வினையூக்கியார் இந்த தலைப்பினை ஒட்டி ஒரு விவாதத்தினை நண்பர்கள் வட்டத்தில் தொடங்கி வைத்தார். நிச்சயம் நாம் பேச வேண்டிய தலைப்பு. 

எனது பதிலை இங்கே தந்துள்ளேன்

வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் நம் நாட்டிற்கு வந்தால் அவர்கள் கல்வி கட்டணத்தினை உயர்த்தி விடுவார்களா என்று அச்சப்படுகிறீர்களா? பயப்படவே வேண்டாம், கல்வி கட்டணம் நிச்சயம் நிகர் நிலை பல்கலைக் கழகங்களை விட குறைவாகவே இருக்கும். ஏனெனில் அவர்களின் சந்தை திட்டமிடல் வேறு தளத்தில் இருக்கும். நேரடியாக வரும் கல்வி கட்டணம் அவர்களின் இலக்கே அல்ல.

வருமானம் எப்படி வருகிறது என ஒரு சில உதாரணங்களை தருகிறேன்.

நம்ம மக்கள் வாயை பிளக்கும் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் தனது பிராண்டின் மூலம் பள்ளி அளவில் வெறும் பாட திட்டங்கள் மற்றும் வினா தாள் தருவதன் மூலம் பல நாடுகளுக்கு விற்று நல்ல பணம் பார்க்கின்றன. கேம்பரிட்ஜ் பாடத்திட்டம் இருக்கிறதா என கேட்டு சேர்க்கும் பெற்றோர்கள் இப்போது சென்னை வரை வந்து விட்டார்கள். சத்தியமாக சொல்கிறேன், இவர்கள் யாரும் ஒரு முறை கூட நம் சமச்சீர் பாடத்திட்டத்தை திருப்பி கூட பார்திருக்க மாட்டார்கள். நம்மிடம் இருக்கும் சமச்சீர் கல்வியினை கொஞ்சம் தூசு தட்டினால் பட்டைய கிளப்பலாம். இதே நிலைமைதான் பல்கலைக் கழகங்களிலும் நடக்கிறது.

சரி நாம் எப்படி அடுத்த கட்டதிற்கு நம் பல்கலைக் கழகங்களை கொண்டு செல்வது?
இப்போது தமிழக பல்கலைக் கழகங்களில் இருக்கும் துணைவேந்தர்கள், உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் நடக்கும் ஊழலை ஒழித்தாலே நாம் உலகின் முன் மாதிரியான பல்கலைக் கழகங்களை கொண்டு வரலாம். 

இப்போது உள்ள இந்த பிரச்சினைகளை களையாமல் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை உள்ளே விட்டால் இங்கே இருக்கும் பல்கலைக் கழகங்கள் இன்னும் நிர்வாக ரீதியில் மோசமாகி விடும். நம்மிடம் இருந்த நல்ல அரசு மருத்துவமனைகளை வேண்டும் என்றே எப்படி ஒழித்து விட்டு தனியார் மருத்துவமனைகளில் நாம் இப்போது பிச்சை எடுக்கிறோமோ அதே நிலைமைதான் வரும் (மிக சிக்கலான அறுவை சிகிச்சைகளை இன்னும் பல அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செய்து வெற்றி பெறுகிறார்கள், ஆனால் அவர்கள் பத்திரிக்கையில் விளம்பரம் செய்து கொள்வதில்லை, ஆனால் பொது சனங்கள் இன்னும் தனியார் மருத்துவமனையில்தான் நல்ல சிகிச்சை தருகிறார்கள் என நம்ப வைத்தது நம் சமூகம்.


வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இங்கு வந்து கல்வி நிறுவனம் நடத்தினால் ஒரு பிரயோசனம் உண்டு, அந்த பிராண்டின் மூலம் அந்தந்த நாடுகளுக்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பார்கள். இங்கிலாந்து, அமெரிக்க பல்கலைக் கழகங்கள் தற்போது சீனாவில் கடை விரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியாதான் அவர்களின் அடுத்த குறி. ஆகவே இப்பொழுது பல்கலைக் கழகத்தில் இருக்கும் பிரச்சினைகளை தூர் வாரினாலே நாம் அடுத்த பாய்ச்சலுக்கு தயார் ஆகலாம்.

தற்போது எல்லா பல்கலைக் கழகங்களிலும் பண மழை கொட்டும் தொலை தூர கல்வியில் நடக்கும் சீர்கேடுகளை நிறுத்தினாலே கோடிகளில் பணம் மிச்சப்படும். தமிழக பல்கலைக் கழகங்களின் இணைய தளத்தினை பாருங்கள். ஐம்பது வருடத்திற்கு முன் வந்த குலேபாகவலி படத்தின் ரீ பிரிண்ட் ரேஞ்சுக்கு இருக்கும்.

நம் பல்கலைக் கழகங்களை போர் கால அடிப்படையில் புணரமைக்க வேண்டும், அதற்கு தேவையான வருமான அந்தந்த பல்கலைக் கழகத்திலேயே கிடைக்கிறது. ஆகவே வெளி நாட்டு பல்கலைக் கழகங்கள் தேவை இல்லை என்பதே என் கருத்து

Saturday 19 December 2015


ஜப்பான் ஏன் முன்னேறிய நாடாக உள்ளது- 6


போன வாரம் எங்கள் நோதா நகர‌ பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையத்திற்கு சென்று இங்கிலாந்துக்கு ஐந்து பெட்டிகளில் பொருட்களை அனுப்ப சென்றிருந்தேன். 

அங்கிருந்த தபால் நிலைய அதிகாரி, நீங்கள் ஏன் பெட்டியினை கடினப் பட்டு சுமந்து வருகிறீர்கள். தொலைபேசியில் அழைத்து முகவரியினை சொன்னால் நாங்களே நேரில் வந்து எடுத்து கொள்கிறோம் என்று சொன்னார். 

இன்று தொலைபேசியில் அவர்களை அழைத்து நேரில் வந்து பார்சலை எடுத்து கொள்ள முடியுமா என கேட்டேன். எந்த நேரத்தில் வர வேண்டும் என்ற நேரத்தினை பதிவு செய்து கொண்டு, தற்போது நேரில் வந்து பதிமூன்று பெட்டிகளையும் எடுத்துக் கொண்டார்கள். 

 சுமார் ஐம்பது வயதை ஒத்த பெண்மணி ஒருவர் மட்டுமே தபால் நிலைய வண்டியினை ஓட்டி வந்திருந்தார். பொறுமையாக எல்லா பெட்டிகளையும் எடை போட்டு தேவையான எல்லா வேலைகளையும் அவரே செய்தார். அத்தனை பெட்டிகளையும் அவரே வண்டியில் தூக்கி வைத்தார். உதவிக்கு சென்ற என்னையும் தடுத்து விட்டார். இறுதியில் மொத்த கட்டணத்தில் பத்து சதவிகிதம் தள்ளுபடியும் வழங்கினார். மிக ஆச்சரியமாக இருந்தது.

இந்தியாவில் உள்ள தபால் நிலையங்களில் இது போன்று வசதிகளை கொண்டு வந்தால் நேரில் சென்று பொருட்களை எடுத்து கொள்ளும் வசதி இருந்தால் தனியார் தபால் சேவை நிறுவனங்களை காட்டிலும் அதிக லாபத்தினை ஈட்ட முடியும். மேலும் நிறைய பொருட்களை அனுப்புபவர்களுக்கு அவர்கள் இடத்தில் இருந்தே வேலையினை முடிக்க ஏதுவாக இருக்கும்.   
Postal parcel service, Japan Post (JP), spot pick up from my research centre. 

Postal parcel service, Japan Post (JP), spot pick up from my research centre.