Tuesday 29 December 2015

ஜப்பான் ஏன் முன்னேறிய நாடாக உள்ளது ‍ 8 -சுவரொட்டி அரசியல் (How Japan maintain as clean country?)



இரண்டு ஆண்டு காலமாக நான் ஜப்பானில் வசித்த போது அனாவசியமாக ஒட்டப்பட்ட எந்த ஒரு சுவரொட்டிகளையும் பொது இடங்களில் கண்டதே இல்லை. சரி தேர்தல் காலங்களில் இங்கு அரசியல்வாதிகள் எப்படி  பொதுமக்களுக்கு அறியப்படுகிறார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்து கொண்டே இருக்கும்.

இங்குள்ள‌ உள்ளூர் நகர் மன்றங்கள் (City Hall) இது போன்ற விளம்பரங்களுக்கென தனித்த சுவரொட்டி பலகைகளை (Advertisement area) நகரின் குறிப்பிட்ட இடங்களில் பொது மக்கள் பார்வை படும் படி வைத்திருக்கிறார்கள். நகர் மன்றத்தில் முறையாக அனுமதி பெற்றவர்கள் மட்டுமே இந்த இடத்தில் பதாகைகள் ஒட்ட முடியும். 


ஜப்பானில் நகர் மன்ற அனுமதி மூலம் வைக்கப்படும் அரசியல் சுவரொட்டிகள்

அரசு சேவை விளம்பரங்கள் கூட இதே போன்ற இடத்தில் மட்டும்தான் காண முடியும். 


தொடர் வண்டிகளின் (Metro trains) உள்ளே கண்ட இடத்தில் யாரும் விளம்பர தாள்களை ஒட்ட முடியாது. இரயில்வே நிர்வாகத்தினர் இதற்கென வைக்கப்பட்டு இருக்கும் பட்டிகளில் (stands) சொருகி விடுகிறார்கள். இதனை இரயிவே நிர்வாகத்தினரிடம் அனுமதி பெற்ற தனியார் நிறுவனங்களே இவற்றினை உரியா காலத்தில் மாற்றி சுத்தம் செய்யும் பொறுப்பினை ஏற்றுக் கொள்கிறார்கள்.

இதனால் அருவருக்க தக்க வகையில் கண்ட இடங்களில் சுவரொட்டி, விளம்பரங்கள் ஒட்டப்படுவது தடுக்கப்படுகிறது.ஜப்பான் மிகவும் சுத்தமான நாடாக இன்றும் உலகின் முன்னால் நிற்க இதுவும் ஒரு முக்கியமான காரணம் ஆகும்.


தொடர் வண்டி உள்ளே முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பரங்கள்

தொடர் வண்டி உள்ளே முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பரங்கள்

தொடர் வண்டி உள்ளே முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பரங்கள்

தொடர் வண்டி உள்ளே முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பரங்கள்

இரயில் நிலையங்களில் முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பரங்கள்

உங்கள் பார்வைக்கு:

சமீப காலத்தில் தமிழகத்தின் புதிய தலைவலியாக அவதாரம் எடுத்திருக்கிறது சுவரொட்டி, பிளக்ஸ் விளம்பர பதாகைகள். இவற்றினை கட்டுப்படுத்த வேண்டிய அரசுகளும் அதே வேலையினை செய்வதால் பெரிய வித்தியாசம் இல்லாமல் இந்த அவல நிலை தொடர்கிறது. இதனை பற்றி சுருக்கமாகவே இங்கு எழுதுகிறேன்.

சுவரொட்டி கலாச்சாரத்தினை அரசியல் கட்சியினர் இதனை அங்கிங்கெனாதபடி ஆரம்பித்து வைக்க, தற்போது இந்த கலாச்சாரம் உள்ளூர் ரசிக மன்றங்கள்  வழியாக விரிவுபடுத்தப்பட்டு தற்போது பத்து வயது நிரம்பிய விடலை பையன்கள் திருவிழாக்களில் பிளக்ஸ் பதாகைகள் அடிக்கும்  அவல நிலைக்கு மாறி இருக்கிறது நம் சமூகம்.

இதன் ஊற்றுக் கண் எங்கிருந்து தொடங்குகிறது என்பது நமக்கு பல காலமாய் தெரிந்த ஒன்றுதான்.  இருப்பினும் ஒரு சில உதாரணங்களை பார்ப்போம்.

அரசு ஒரு மேம்பாலத்தினை திறக்கிறது, அதன் வழியே எப்படி செல்ல வேண்டும் என்ற வழித் தட பலகைகள் மீது குற்ற உணர்வோ, அடிப்படை அறிவோ இல்லாமல் போஸ்டர் ஒட்டும் அளவிற்கு நம் அரசியல் பக்தர்களின் பைத்தியம் முற்றி உள்ளது. வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து புதிய இடங்களுக்கு பயணிப்பவர்கள் வழித்தடத்தினை அறிய முடியாமல் எந்த அளவிற்கு இதன் மூலம் அவதிக்குள்ளாவர்கள் என எவரும் சிந்திப்பதில்லை.

எங்கு பார்த்தாலும் தற்போது சுவரொட்டி மயம், "நான், நான் என்னும் விளம்பரம் மோகம்"  வெறியாகி மாறி  தற்போது ஸ்டிக்கர் வடிவில் வந்து நிற்கிறது.  

பொறுமையாக சிந்தித்து பாருங்கள், ஆளும் கட்சியின் அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் இந்த மக்களுக்கான நலத்திட்டங்களை செய்ய வேண்டும். இது அவர்கள் கடமை. இந்த கடமையினை செய்ய எதற்கு விளம்பரம். எந்த தாயாவது தன் பிள்ளைகளுக்கு பாலூட்டியதை ஊர் முழுக்க சொல்லி திரிவாளா?. 

பிறகு எதற்கு இப்படி கோடி கணக்கில் விளம்பரங்கள். இந்த செலவில் எல்லா தெருக்களிலும் குப்பை தொட்டிகள் வைத்திருந்தால் நாடாவது சுத்தம் ஆகி இருக்கும்.

எல்லா அரசியல், சினிமா பக்தர்களுக்கும் ஒரே கேள்விதான் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் அல்லது ஊடக வெளிச்சத்தில் நிற்கும் ஒருவரை இனி நீங்கள் போஸ்டர் அடித்து ஊர் முழுக்க ஒட்டினால்தான் மற்றவர்களுக்கு தெரியுமா. அதுதான் தொலைகாட்சிகள் வாயிலாக எல்லா வீடுகளுக்கும் வந்து எல்லோருடைய உயிரையும் எடுக்கிறீர்களே.  

மிகவும் கடினப்பட்டு வெள்ளை அடித்து வைத்திருக்கும் தனிநபர்களின் வீடுகள், தொழிற்சாலைகள், கடைகள் ஆகியவற்றீன் மீது எந்த ஒரு அனுமதியும் பெறாமல் அவற்றின் மீது போஸ்டர் ஒட்டுவது. வீரனே, சூரனே என வண்ணமடித்து விளம்பரம் செய்வது என மனநிலை பிழன்ற சமூகமாகவே நாம் மாறி உள்ளோம்.

* நினைத்த இடத்தில் யாரிடமும் முறையான அனுமதி இல்லாமல் ஆற‌றிவு உள்ள மனிதர்களால் ஒட்டப்படும் இந்த சுவரொட்டிகளால் மிகுந்த அவதிக்குள்ளாவது மனிதர்கள் மட்டுமல்ல, சாலையில் திரியும் ஐந்தறிவு கால் நடைகளும் தான்.  இந்த சாலையோரங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் சுவரொட்டிகளை தின்பதால் அவைகளின் உணவு செரிமானம் கெட்டு இறந்தே போகின்றன. 

* சுவரொட்டிகளால் ஏற்படும் மற்றொரு தீராத தலைவலி அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் அடித்து கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது. இதன் உட்சகட்டமாக பொது சொத்துகளை தீவைத்து  விபத்துகள் ஏற்படுத்துவது.


* தற்போது அடைமொழி கலாச்சாரம் முற்றி விட்டது. அதன் வடிகாலாகத்தான் இந்த சுவரொட்டிகள் உள்ளது. தயவு செய்து அடைமொழியினை தூக்கி எறிந்து விட்டு பெயரை மட்டும் குறிப்பிட்டு அழையுங்கள். இங்கே சுதந்திர இந்தியாவில் எந்த போரும் புரட்சியும் நடைபெறவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன். எனவே அரசியல், சினிமா பக்தர்கள் தொடர்ந்து கிளிசே தனமாக சகட்டு மேனிக்கு பட்ட பெயர்களால் உங்களுக்கு பிடித்தவர்களை பற்றி விளித்து உளறுவதை நிறுத்துங்கள்.

*அரசியல்வாதிகள் மட்டுமல்ல, இந்த விசயத்தில் ஆன்மிக கும்பல்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனக்கள், கோடை கால பயிற்சி கூட்டங்கள், மூலம் பெளத்திரம் என நீண்டு கொண்டே போகும் சுவரொட்டி மடையர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்கா.


பத்து வயதிற்குட்பட்ட நம் பள்ளி குழந்தைகளுக்கு இந்த சுவரொட்டி லும்பர்கள் செய்யும் அட்டகாசங்களை பாடமாக சமூக கல்வியில் வைக்க வேண்டும். அந்த குழந்தைகள் இனி இவர்கள் முகத்தில் காறி உமிழ்ந்தால் மட்டுமே இச்சமூகம் திருந்தும்.


1 comment:

  1. ஒரே ஒரு சந்தேகம். உலகத்திலேயே அணுவுலைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான ஜப்பான் ஏன் இன்னமும் அணு ஆயுத விற்பனையில் ஆர்வம் செலுத்துகின்றது?

    ReplyDelete