Sunday, 27 September 2015


ஜப்பானின் மத்திய பகுதி ‍-ஒரு பயண அனுபவம்


ஜப்பானின் மத்திய மாகாணமாகிய கிஃப்பு (Gifu) வாழ்க்கையில் ஒரு முறையேனும் பார்க்க வேண்டிய பகுதி. பச்சை பசேல் என போர்வை போர்த்திய மலைகளும், அதில் வழிந்தோடும் அருவிகளும், அதனை சம வெளிகளில் கடத்தி செல்லும் சிற்றாறுகளும் நிறைந்து அதன் துள்ளல் அழகை தரிசிப்பதே சுகானுபவம்

கிஃப்பு மாகாணத்தினை சுற்றி பார்ப்பதற்கு முன்பாக அதனை சுற்றியுள்ள மற்ற மாகாணங்களாகிய  வக்காயாமா (wakayama), நாரா (Nara), ஒசாகா (Osaka), கியோதோ (Kyoto) தொயாமா (Toyama), அய்சி (Aichi), நகானோ (Nagano) உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள முக்கிய பகுதிகளை தரை வழியாககடந்த ஒரு வாரமாக மகிழ்வுந்தில் சுற்றி வந்தது மிகப் பெரும் அனுபவம்

ஜப்பான் நாட்டின் பல தரப்பட்ட மக்கள், அவர்கள் கலாச்சாரம், உணவு, வழிபாட்டு தலங்கள், விவசாய முறை என ஒரு வாரமாக சுற்றி அலைந்து திரிந்து நான் கண்டு உணர்ந்ததை  என் வாழ்வின் பெரும் பேறாகவே கருதுகிறேன்.

இந்த பயணம் முழுவதிலும் ரகு சகோதான் இரவு பகலாக ஏறத்தாழ 2000  கி.மீ தூரம் தொடர்ந்து மகிழ்வுந்தினை ஓட்டி வந்தார். அவருக்கு ஜப்பானிய மொழி சரளமாக பேசத் தெரிந்திருந்ததால், பல தகவல்களை எளிதாக திரட்ட முடிந்தது இப்பயணத்தின் மற்றொரு சிறப்பு என சொல்வேன்

 இந்த அனுபவத்தினை வரும் நாட்களில் எழுத திட்டமிட்டுள்ளேன்.

ஜப்பானின் மத்திய பகுதி நாச்சி அருவி, வக்காயாம மாகாணம், ஜப்பான்
Thursday, 17 September 2015


நாட்டுபுற கலைகள் ‍- ‍ புதிய  பாதை


நம்ம நாட்டுபுற கலைகள் பத்தி யோசிக்கும் போது நம்ம சரியா வெளி உலகுக்கு மார்க்கெட்டிங் பண்ணலையோன்னு ஒரு  வருத்தம் இருந்து கிட்டே இருந்துச்சு

நான் கொரியாவில் இருந்த போது நம் மதுரை மண்ணை சார்ந்த பானுமதி .எப்.எஸ் அக்கா அவர்கள் இந்திய தூதரகத்தின் கலாச்சார மையத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தார்

ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் இருந்து கலைக் குழுவினை கொரிய தூதகரம் மூலம் அழைத்து கொரியர்களுக்கும், கொரிய வாழ் இந்தியர்களுக்கும் அறிமுகப்படுத்தி கொண்டு இருந்தார்கள்

ஒரு முறை அவர்களிடம் பேசும் போது ஏன் நம் தமிழ் பாரம்பரிய கலைஞர்களான பறை, நாதஸ்வரம், தவில், கரகாட்டம் என அறிமுகப் படுத்தக் கூடது என கேட்டபோது, இந்திய வெளியுறவுத் துறையின் விதிமுறைகளை பொறுமையாக சொன்னார்கள்அதில் நாம் எந்த அளவிற்கு பின் தங்கி உள்ளோம் என்பதையும் சுட்டி காட்டினார்கள்.

அதாவது தமிழகத்தினை ஒப்பிடும் போது வட இந்திய கலைஞர்கள் தங்களுக்கென்று பிரத்யோக இணைய வலைதளம், மற்றும் இந்திய கலாச்சார மையத்தில் பதிவு செய்வது என எல்லாவற்றையும் முறையாக செய்து வைத்துள்ளார்கள். மேலும் எப்படி வெளி நாட்டில் உள்ள தூதரகத்தினை தொடர்பு கொள்வது என பல விசயங்களில் முன்னேறி உள்ளார்கள்

நம் ஊரில் கலைகளுக்கா பஞ்சம். ஆனால் அவர்களை அடுத்த நிலைக்கு அரசும் சரி, நம்ம மக்களும் சரி அடுத்த நிலைக்கு அவர்களை எடுத்து செல்ல வில்லை

தயவு செய்து உங்கள் பகுதியில் உள்ள கலைஞர்களையும் அவர்களது குழுவினரையும் ஊக்குவியுங்கள். அவர்களுக்கென்று பிரத்யோக மின்னஞ்சல், இணைய தளம் என வழி காட்டுங்கள். இதற்கொன்றூம் பெரிய செலவுத் தொகை ஆகப் போவது இல்லை. நிச்சயம் இது அவர்கள் வாழ்வில் புதிய வழியினை நிச்சயம் ஏற்படுத்தும்.

தற்போது ஜப்பானில் உள்ள ஒரு அமைப்பு திண்டுக்கல் சக்தி பறை குழுவினரை ஜப்பானிற்கு அழைத்து இங்குள்ள ஜப்பானியர்களுக்கு பறை இசையினை அறிமுகப் படுத்த இருக்கிறார்கள்இது தமிழர்களாகிய நமக்கு பெருமை தரும் செய்தி.
திண்டுக்கல் சக்தி பறை இசைக் குழுவின் சலாவரிசை, ஜப்பான்.


இது போல  கரகாட்டம், ஒயிலாட்டம், கூத்து, பொம்மலாட்டம், சிலம்பு என எண்ணற்ற தமிழ் கலைகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வர முயற்சி  செய்யுங்கள்இதன் மூலம் இவற்றையும் நாம் வெளி நாட்டவர்களுக்கு அறிமுகம் செய்வதன் மூலம் நம் கலைகளை உலகெங்கும் வார்த்தெடுப்போம்.

திருவிழாக்கள் மட்டுமல்ல, அரசு விழா உள்ளிட்ட நம் வீட்டு விழாக்களிலும்  இவர்களை முன்னிறுத்துவோம்

அழியும் நிலையில் உள்ள நம் தமிழ் கலைகளை காப்பாற்றுவது நம் கடமை.


Sunday, 13 September 2015

இதைவிடவும் அரிய நிதி உண்டோ


ஜப்பானில் தற்போது அறுவடை காலம் தொடங்கி விட்டதுசரி ஒரு நடை வயல் வெளி பகுதி போய் வரலாம் என ஒரு நடை கிளம்பினேன்.

நெற்பயிர்கள் கதிர் முற்றி தலை சாய்ந்து கிடந்திருந்தன. போன வார கடும் மழையின் தாக்கம் போலும். மற்றொரு புறத்தில் நெல் அறுக்கும் எந்திரத்தின் மூலம் ஒருவர் அங்கிருந்த காணி நெல்லை அறுத்து அவற்றை நெல் மணியாய் மாற்றி மற்ற ஒரு சிறு வண்டியில் சேமித்து கொண்டு இருந்தார்.


இங்கு அரசு எல்லா வயலுக்கும்  தனித் தனியாக நீர் பாயும் விதத்தில் நீரேற்று பம்பினை அமைத்து கொடுத்திருக்கிறது. வழிந்தோடும் நீர் மீண்டும் அருகில் உள்ள சிறு கால்வாயில் சேகரிக்கப்பட்டு அந்த பகுதியில் பெரிய கால்வாயில் கலந்துவிடுகிறது. அந்த பகுதி முழுவது சேகரிக்கப்படும் கால்வாய் நீர் பிரதான கால்வாயில் கலந்து மீண்டும் நீரேற்றும் முறை மூலம் வாய்க்காலுக்கு பாய்ச்சப் படுகிறது. இம்முறையில் வயலுக்கு தொடர்ச்சியாக நீர் பாய்ச்சப் படுவதோடு அல்லாமல் எஞ்சிய நீர் வீணாகமல் சேகரிக்கப்பட்டு மீள் சுழற்சியில் பயன்படுத்தப்படுகிறது.
நெல் அறுவடை, உங்கா கிராமம், நோதா நகரம், ஜப்பான்


ஒவ்வொரு காணியிலும் நெல் அறுத்து முடிந்தவுடன் சிந்திய சூடான நெல் மணிகளை கொத்தி தின்ன கூட்டம் கூட்டமாய் காட்டு புறாக்கள் படை எடுத்துக் கொண்டு இருந்தன. அருகில் போனால் போக்கு காட்டு பறந்து கொண்டு திரிந்தன.


வயல் வெளிகளில் சிந்திய நெல் மணிகளை கொத்தி தின்னும் காட்டு புறாக்கள்

வயலில் திரியும் பச்சை தவளை


பச்சை நிற தவளைகள் வண்டி போன சகதியில் இருந்து வெளி வந்து பூச்சிகளை பிடித்து தின்ன ஆரபித்து விட்டன. வயல் நண்டுகள் ஆரஞ்சு நிறத்தில் பெரிய கொடுக்குகளோடு பயமுறுத்தி கொண்டு இருந்தன. புகைப்படம் எடுக்க சென்றால் பொந்துக்குள் ஓடி கண்ணா மூச்சி காட்ட ஆரம்பித்து விட்டன.

வயலில் இருந்து வெளி வரும் உபரி நீர் சேகரிக்கும் கால்வாய். மற்றும் நீர்  ஏற்று நிலையம்

வயலில் இருந்து வெளி வரும் உபரி நீர் சேகரிக்கும் கால்வாய்

எங்கள் உங்கா கிராமம் சிபா (chiba) மாவட்டத்தின் வடகிழக்கு எல்லையில் உள்ளது. எங்கள் கிராமத்தின் இந்த வயல் வெளிக்கு பின்னால்  எதோ நதி ஓடுகிறது. இந்த நதிக்கு அக்கரையில் சைதாமா (Saidama) மாவட்டம் ஆரம்பிக்கின்றது. இந்த வயல் வெளிகளுக்கு நடுவே நோதா நகரில் இருந்து நகரியாமா நகருக்கு செல்லும் பெரிய சாலை செல்கிறது. இது வயல் வெளிகளுக்கு இடையில் செல்வதால் இந்த இடம் பார்க்கவே கொள்ளை கொள்ளும்
நோதா‍- நகரியாமா விரைவு சாலை

சாலையினை கடந்து அந்தப்புறம் உள்ள காட்டு புத்தர் கோவிலுக்கு செல்ல முடிவெடுத்து அப்படியே சைக்கிளை ஓட்டினேன்.

செல்லும் வழியில் மிகப் பெரிய சமாதிகள் அடங்கிய வளாகம் ஒன்று தென்பட்டது. ஜப்பானில் முன்னோர்களின் சமாதிகள் ஊரின் நடுவில் குடியிருப்பு பகுதிகளிலேயே இருக்கும். நம் ஊரை போல் ஊருக்கு வெளியில் மட்டும் இருக்கும் எனச் சொல்ல முடியாது. இறந்த முன்னோர்கள் கடவுளர்களாக தங்களை காக்கிறார்கள் என ஜப்பானியர்கள் இன்றளவும் நம்புவதால் ஊரின் நடுவில் குடியிருப்புகளோடு இந்த சமாதி பகுதிகளை காணலாம்


Memorial Park Nagareyama  (top view from Unga river)

Holy Memorial Park Nagareyama 

காட்டு புத்தர் கோவிலுக்கு (ரொகுய்சா கோவில்-Rokusha Shrine), செல்லும் வழியில் ஆமை ஒன்று சாலையினை கடக்க முயன்று அடிப்பட்ட நிலையில் பார்த்தேன். இதன் வழியே கடந்த கார் ஒன்றில் அடிப்பட்டு இருக்கலாம். தற்போது அறுவடை காலம் ஆதலாம் பல வயல் வெளிகள் காலியாகும் சூழலில் இவைகள் வேறிடம் பெயரும். அப்படிப்பட்ட சூழலில் நிறைய உயிரினங்கள் இறக்க நேரிடுகிறது

ஆனால் வயலில் திரியும் காட்டு வாத்துகளை மக்கள் எதையும் செய்வதில்லை. ஆதலால் அவைகள் ஓய்வு நேரத்தில் வயலில் இருந்து சேகரமாகும் சிறிய கால்வாய்களில் ஒய்யாரமாகநீந்தி விளையாடுகின்றன

வழிந்தோடும் வயல் நீர் போகும் கால்வாயில் நீச்சலடிக்கும் காட்டு வாத்துகள்
ரொகுய்சா கோவிலின் முன் புறம் வரவேற்பு விதானம் போல் ஒன்று உள்ளது. நுழைவாயின் இடது புறம் மூன்று சிலைகள் உள்ளது. அவர்களின் கையில் பெரிய சூலமும், அவர்களின் கால் அடியில் மிதி பட்ட நிலையில் ஒரு சூரனை போல் ஒருவனும் கிடக்கிறான்.

ரொகுய்சா கோவில் (Rokusha Shrine), நகரியமா, சிபா (Chiba)  மாவட்டம், ஜப்பான் 

ரொகுய்சா கோவில் (Rokusha Shrine), நகரியமா, சிபா (Chiba)  மாவட்டம், ஜப்பான் 

ரொகுய்சா கோவில் (Rokusha Shrine), நகரியமா, சிபா (Chiba)  மாவட்டம், ஜப்பான் 

ரொகுய்சா கோவில் (Rokusha Shrine), நகரியமா, சிபா (Chiba)  மாவட்டம், ஜப்பான் 

ரொகுய்சா கோவில் (Rokusha Shrine), நகரியமா, சிபா (Chiba)  மாவட்டம், ஜப்பான் 

ஜப்பானில் கோடை காலத்திலும் (ஜீலை), குளிர் கால தொடக்கத்திலும் (நவம்பர்)  தேர் திருவிழாக்கள் பிரசித்தம். அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் சப்பரங்கள் செய்யப்பட்டு வீதிகள் வழியாக நடனமாடிக் கொன்டே வருவர். அந்த விழா முடிந்த உடன் கால் கோல்களை கோவிலில் கூரை செய்து அதில் போட்டு வைத்து விடுகிறார்கள். அத்தையக கழிகளை அங்கே காண முடிந்தது. பிரதான தெய்வமாகிய போதி சத்துவருக்கு இடது புறத்தில் மற்றொரு கூரையில் தனி தெய்வம் ஒன்று உள்ளது அவருக்கு நேர் எதிரே கை கால் கழுவும் நீர் தொட்டியும் குவளையும் வைக்கப்பட்டிருந்தது. இங்கே கோவிலின் உள்ளே செல்லும் முன் அந்நீர் தொட்டியில் கை, முகம், வாய் ஆகியவற்றினை சுத்தம் செய்து விட்டு அந்த குவளையினையும் கழுவி வைத்து விட்டுதான் கோவிலுக்குள் செல்ல வேண்டும்

நம் ஊரில் மாவிலையில் தோரணம் கட்டி கோவிலின் வாசலில் காப்பு கட்டுவது போல் வைக்கோலினால் செய்யப்பட்ட விளக்குமாறு போன்ற அமைப்புடன் காப்பு கட்டி பிராதன கடவுளின் மர ஆலயத்தின் முன்னால் தொங்க விட்டுள்ளனர். அதன் பின்னர் நடு நாயகமாக உத்திரத்தில் இருந்து கட்டப்பட்ட நீன்ட கயிற்றில் மணி ஒன்று தொங்குகிறது

 நான் போய் இருந்த கதவுகள் மூடி இருந்தன. ஆகையால் தரிசனம் செய்ய இயலவில்லை. புத்தம் சரணம் கச்சாமி என கன்னத்தில் போட்டு கொண்டு விட்டு திரும்பி விட்டேன்

அப்படியே எதோ (Edo) நதிக்கரைக்கு போய் திரும்பலாம் என மீண்டும் வயல்களை கடந்து நடக்க ஆரம்பித்தேன். தற்போது பெயத மழையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு எதோ நதியில் வழக்காம ஓடும் நீரை விட அதிகமாக கரை புரண்டு ஓடுகிறது. வழியும் நீர் உங்கா சிற்றாறு வழியாக திருப்பி போகிறது

கரையெங்கும் தற்போது பைரித்ரம் பூக்கள் மலர்ந்து குலுங்குகின்றன. வண்ணத்து பூச்சிகளும், வண்டுகளும் தேனை பருக கூட்டம் கூட்டமாய் திரிகிறது. வாய்க்காலின் பாதி மூழ்கிய செடிகளிலும், புதர்களிலும் நாரைகள் கூட்டம் கூட்டமாய் வரத் தொடங்கி விட்டது. எங்கள் பகுதி மக்கள் இதுதான் சமயம் என்று தூண்டிலை தூக்கி கொண்டு வந்து அமர்ந்து விட்டார்கள்

கால்வாய் கரையில் பூத்திருக்கும் பைரித்ரம் பூக்களில் தேன் மது அருந்தும் வண்ணத்து பூச்சிகள்
கால்வாய் கரையில் பூத்திருக்கும் பைரித்ரம் பூ


வைணவத்தில் பிரச்சித்தி பெற்ற மணக்கால் நம்பி ஆச்சாரியர் உலக பற்றில் திளைத்திருந்த ஆளவந்தான் மகாராஜாவை மிகப் பெரும் நிதி உனக்கு தருகிறேன் என திருவரங்கம் அழைத்து செல்கிறார். அங்கு பள்ளி கொண்ட கோலத்தில் ஒய்யாரமாக படுத்திருக்கும் திருவரங்க பெருமானை காட்டி இதை விடவும் பெரிய நிதி உண்டோ என சொன்ன போது ஆளவந்தார் திருவரங்கனின் அழகில் மெய் மறந்து நின்றதை போல் இன்றைய மருத நிலக் காட்சிகள் என்னை கட்டி போட்டு விட்டது. உண்மையில் இதனை விடவும் அரிய நிதி உண்டோ என திகைத்திருக்கிறேன்..

  இன்னும் ஒரு மாதத்தில் இங்கு இலையுதிர் காலம் துவங்கி விட்டால் மீண்டும் பசுமையினை பார்க்க ஐந்து மாதங்கள் காத்திருக்க வேண்டும்.