Sunday, 6 September 2015

மொழியும் இன்ன பிற உறவுகளும்

மொழிதான் மனிதர்களை கட்டி போடும் சங்கிலி. நம் தாய் வழியே துவங்கும் இந்த பரியந்தம், மெல்ல மெல்ல  சின்ன  வளையங்களாக  நம் கண்ணுக்கு தெரியாமலேயே அறுக்க முடியாத சங்கிலியாக‌
கட்டத் துவங்குகிறோம்.  தன் மண்ணை விட்டு வெளியேறி, எதன் பொருட்டும் புலம் பெயர்ந்து  வாழும் எல்லா மனிதருக்கும் தன் மொழி பேசும் மனிதரை கண்டால் ஒரு வித ஈர்ப்பு நம்மையும் அறியாமல் துளிர்க்க துவங்கி விடும். இதில் சாதி, மதம் எல்லாம் பிற்பாடுதான்

 "என்ன அண்ணன், ஆபீசில் பிசியோ, வாங்களேன் ஒரு காப்பி குடிச்சு போட்டு கொஞ்சம் கதப்போம்" என வாரத்தில் ஒரு நாளாவது எனக்கு முகமது கைசர் அண்ணாவிடம் இருந்து திரிகோணமலை தமிழில் வரும் அலை பேசி அழைப்பு ஒன்றே இந்த ஜப்பான் தேசத்தில் என் வீட்டருகாமையில் கூப்பிடு தூரத்தில் எனக்கு என் மொழியினை கேட்கும் ஒரு ஆறுதல்

இங்கு ஜப்பானில் தோக்கியோவின் புறநகரை தாண்டிய சிறு கிராமத்தில் தமிழை கேட்க வேண்டுமென்றால் அது எனக்கும் அவருக்குமான அலைபேசி உரையாடல் மட்டுமே. கைசர் அண்ணா,  இங்கு ஜப்பான் வந்து 15 வருடங்கள் ஆயிற்று. மகிழ்வுந்துகளை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் வைத்திருக்கிறார். எப்பொழுதும் வியாபாரம் என ஓடிக் கொண்டு இருக்கும் மனுசர், பரபரப்புக்கு இடையிலும் எனக்கு பேசி விடுவார்.  சில நேரங்களில் சற்றே பரபரப்பாகவும் இருக்கும் தருணங்களில் ஏன் அண்ணா கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ளலாமெ என கேட்டால் "என்ண அண்ணா செய்யறது, இண்டைக்கு ஆர்டர் எடுத்தவன் சல்லியை இரவுக்குள் அனுப்பவன் என சொன்னான் இண்டும் அனுப்ப இயலிலையே" என தெறித்து கொண்டு இருப்பார்.  நான் ரொம்பவே மோசம், பல முறை அவருக்கு பேச நினைத்தும் அலுவல் சுமையில் மறந்து விடுவேன். ஆனால் கைசர் அண்ணா கோபித்து கொள்ள மாட்டார்.

கைசர் அண்ணா வீட்டுக்கு போனால் நல்ல உணவும்இலங்கை தமிழும் சேர்த்தே கிடைக்கும்.  வீட்டிற்கு போகும் போதெல்லாம், அனிதா அக்காவையும், பிள்ளையையும் அழைச்சு கொண்டு வாங்கொளேன் என வாஞ்சையோடு அழைப்பார். ஆச்சரியம் என்னவென்றால், வயதில் மிகவும் குறைந்த என்னை அண்ணன் என்றும் என் மனைவி அனிதாவை அக்கா என்றும் தான் அவர்கள் இருவருமே விளிப்பர். உண்மையில் மூத்தவர்களை மதிப்பதில், வாஞ்சையாக அழைப்பதில் நம்மிடம் எண்ணற்ற உறவுச் சொற்கள் இருந்தன.  ஆனால் தமிழ் நாட்டு மனிதர்கள்தான் தற்போது சக மனிதர்களை விளிப்பதில்  கார்ப்பரேட் தரவுகளாய் மாறி விட்டோம்.

நேற்று நெடு நாள் கழித்து திரிகோணமலையில் இருந்து அக்காவும், பிள்ளைகளும் ஜப்பான் திரும்பி இருக்கிறார்கள்வீட்டுக்கு அவசியம் வரவும் என கைசர் அண்ணா கடந்த வாரம் இரண்டு முறை அழைத்தும் எனக்கு கருத்தரங்க வேலைகள் இருந்ததால் போக முடியவில்லை. அது போக இந்தியாவில் இருந்து பேராசிரியர் நண்பர் ஒருவர் வேறு வந்து விட்டார். ஒரு வழியாய் நேற்று இரவுதான் அண்ணா, அக்காவை சந்திக்க முடிந்தது

பேசிக் கொண்டு இருந்த போது தற்செயலாய் அவர்களின் நடுக்குட்டி அம்ரி யின் தமிழ் புத்தகம் ஒன்றை பார்த்தேன். அவனுக்கு தமிழ் சொல்லி தர திரிகோணமலையில் இருந்து வாங்கி வந்து இருந்தார்கள். அது இலங்கையில் மூன்றாவது வகுப்பு படிக்கும் மாணவருக்கான தமிழ் கையேடு. தமிழ் புத்தகம் அல்லவா, பெரும் காதலோடு மெல்ல எடுத்து புரட்டி பார்த்தேன். என்னால் நம்ப முடியவில்லை தமிழ்நாட்டில் குறைந்தது ஆறாவது அல்லது ஏழாவது படிக்கும் மாணவர்களுக்கு நிகரான தமிழ் இலக்கணம், கட்டுரை, பாடல், உள்ளிட்ட பாடத்திட்டதினை பார்த்து வியந்து போனேன். தமிழகத்தில் உள்ள மூன்றாவது வகுப்பு பாடத்திட்டதினை ஒப்பிடும் போது உண்மையில் நாம் எளிமைப் படுத்துகிறோம் என்ற பெயரில் தமிழுக்கு பெரிய பூசையே போட்டு விட்டோம் என எண்ணுகிறேன்இந்த லட்சணத்தில் இந்தி படி என நாலா பக்கமும் கூச்சல் வேறு






உண்மையில் பிற மொழிகளை கற்கும் விசயத்தில் நாம் ஆரம்பித்து இருக்க வேண்டிய இடம், பிற மொழிகளையும் கற்க வேண்டும், அதன் வாயிலாக அவர்கள் இலக்கியத்தையும், கலாச்சாரத்தையும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அறியப் படும்போது நம் மொழியின் அருமை நன்கு விளங்கும். இது  மட்டும் நம் ஆரம்பப் புள்ளியாக இருந்திருந்தால் தமிழர்கள் இந்தி உட்பட ரசியா, செர்மனி, கொரிய, சப்பானிய, இசுபானிய, பிரெஞ்சு என எல்லாவற்றையும் தமிழகத்திற்கு கொண்டு வந்து இருப்பார்கள்

துரதிஸ்டவசமாக நாம் ஆரம்பித்த இடம் இந்தி படி வேலை கிடைக்கும், இந்தி படித்தால் இந்தியா முழுக்க வலம் வரலாம்   அப்படின்னு ஒரு மழுங்க பிரச்சாரத்த ஆரம்பிச்சானுங்கசரி அவங்க சொல்ற கணக்கு படி பார்த்தா வடக்கே இந்தி தெரிஞ்ச மாநிலத்துல இருக்கிறவன் எல்லாருக்கும் வேலை இருக்கணும்ல, அவன் ஏன் இங்க தமிழ் நாட்டுக்கு வேல தேடிகிட்டு வர்ரான். நம்ம ஆளுங்களும் இந்த விசயத்துல வேணும், இல்ல வேணாம்னு போரடியே அம்பது வருசத்துக்கும் மேலே ஓடிடுச்சுஒரு வகையில பார்த்தா, இந்தி திணிப்பு மேலே ஏற்பட்ட வெறுப்போ என்னவோ தெரியல, நமக்கு மற்ற மொழிகள கத்துக்கலாம்ங்கிற ஆர்வமும் போயிடுச்சு.
  

அதுல பாருங்க, வேலை, வியாபாரத்துக்கு மொழி அவசியம் தேர்ந்தெடுத்த நடுத்தர குடும்பத்து தமிழ் புத்திசாலிங்க நம்ம பக்கத்தில இருக்கிற‌ மலையாளத்தையும், கன்னடத்தையும், தெலுங்கையும் அனுபவ ரீதியாக அந்தந்த ஊருக்கே போய் வந்து எளிமையா கத்துகிட்டு  வியாபாரத்துல‌ கம்பு சுத்த ஆரம்பிச்சிட்டாங்க. இந்த இந்திய படின்னு சொன்ன மேட்டுகுடி சனங்க பூரா இங்கேயே தேர மாதிரி டேரா போட்டு சுத்திகிட்டு இருக்குஇப்ப என்னடான்னா நம்ம பசங்களுக்கு இரண்டு பக்கத்துக்கு பிழையில்லாம தமிழும் எழுத வரல, ஆங்கிலமும் எழுத வரலே. இதுதான் எதார்த்தம்.  

சொல்லப் போனா, இன்னும் ஒரு அம்பது வருசம் இந்தி, சந்தின்னு  எதிர்க்கறதுலயே நம்மகிட்ட மிச்சம் இருக்கிற தெம்பும் போயிரும்.  கூடவே நம்ம தாய் மொழியும் சிதைந்து விடுமோன்னு பயமாகவும்  இருக்கு.









No comments:

Post a Comment