Monday, 30 November 2015


கீழை வானில் உதித்த தமிழ் சுடர் - பேராசிரியர் நொபுரு கராசிமா (Great Tamil Scholar Prof. Noburu Karashima, Japan)

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் தலைவரும் (1989-2010), தோக்கியோ பல்கலைக் கழக வரலாற்று துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியருமான நொபுரு கரசிமா கடந்த வாரம் நவம்பர் 26 ஆம் திகதி இம்மண்ணுலுக வாழ்வை நீத்தார்.
பேராசிரியர் கராசிமா அவர்கள் ()ப்பான்- இந்திய மொழி, வரலாறு குறித்த ஆராய்ச்சியின் முன்னோடி ஆவார். குறிப்பாக திராவிட மொழி வரலாறு குறித்த ஆழமான ஆராய்ச்சியினை மேற்கொண்டவர். தமிழ் மொழியின் மீது தீராத காதல் கொண்ட இப்பெருமகனார் தமிழில் சரளமாக பேசும் ஆற்றல் பெற்றவர்
இந்தியாவின் உயர்ந்த அங்கீகாரமான பத்ம சிறி விருதினை பேராசிரியர் கரசிமா அவர்களுக்கு நம் முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே தோக்கியோவில் நேரில் சந்தித்து வழங்கினார் என்பதில் இருந்து அவரின் மேன்மையினை நாம் அறியலாம்.
 இத்தையக பெருமை வாய்ந்த மாமனிதரின் ஆன்மா தமிழ்த் தாயின் மடியில் உறங்க சென்று விட்டது. அன்னாரது இறுதி புகழ் அஞ்சலியில் உலக தமிழர்கள் சார்பாக நேற்றைய பொழுதில் ஜப்பான் வாழ் தமிழர்கள் கலந்து கொண்டனர்

இவர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பினை ஜப்பானில் இருந்து இயங்கி வரும் முழுமதி அறக்கட்டளை ஏற்று அன்னாருக்கு கீர்த்தி அஞ்சலி செலுத்தியது. பேராசிரியரின் பூத உடலை ஜப்பானியர்களும், தமிழ் அன்பர் பெருமக்களும் சுமந்து வந்து அவருக்கு பிரியாவிடை வழங்கினார்கள்.
இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் உலகெங்கும் இருந்து பேராசிரியர் கராசிமா அவர்களுக்கு வந்திருந்த இரங்கல் செய்தி வைக்கப்பட்டு இருந்தது. குறிப்பாகபேராசிரியர் அவர்களோடு இணைந்து பணிபுரியும் டாக்டர்.சுப்பராயலு அவர்களின் இரங்கல் கடிதம் வாசிக்கப்பட்டது.

தமிழகத்தில் இருந்து இரங்கல் செய்தி அனுப்பியிருந்த மதிப்பிற்குரிய திரு வைகோ, திரு பழ நெடுமாறன் ஐயா ஆகியோரது இரங்கல் செய்தி பேராசிரியர் கராசிமா அவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் எமது நன்றிகள். பேராசிரியர் கராசிம அவர்கள் விட்டு சென்ற ஜப்பானிய தமிழ் மொழி இடையிலான கலை, கலாச்சார ஒற்றுமைகள் குறித்த ஆய்வினை தொடர்ந்து முன்னெடுப்பதே நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.
பேராசிரியர் கராசிமா அவர்களின் புகழ் தமிழ் நெஞ்சங்களின் என்றும் நிலைத்து இருக்கும்.


பேராசிரியர் நொபுரு கரசிமா அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு

பேராசிரியர் நொபுரு கரசிமா அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு

பேராசிரியர் நொபுரு கரசிமா அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட ஜப்பான் வாழ் தமிழ் நண்பர்கள்.

பேராசிரியர் நொபுரு கரசிமா அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட ஜப்பான் வாழ் தமிழ் நண்பர்கள்.

பேராசிரியர் நொபுரு கரசிமா அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு

பேராசிரியர் நொபுரு கரசிமா அவர்களின் மனைவி திருமதி  தகாகோ கராசிமா அவர்கள்

--------------------------------------------------------

முழுமதி அறக் கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் திரு அருள் அவர்கள் பேராசிரியரின் இறுதி அஞ்சலி நிகழ்வினை பற்றி தந்திருக்கும் செய்தியினை கீழே பகிர்ந்துள்ளேன்.

கடந்த நவம்பர் 26 ஆம் தேதி உயிர்நீத்த ஜப்பானிய தமிழ் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் நொபொரு கரசிமா அவர்களின் இறுதிச்சடங்கு இன்று(நவம்பர் 29) மதியம் 1 மணி அளவில் ஜப்பான் காமகுரா நகரில் நடைபெற்றது.

புத்தமத முறைப்படி நடைபெற்ற இறுதிச் சடங்கில் பல ஜப்பான் வாழ் தமிழர்கள் பங்கேற்றனர். நொபொரு கராசிமா அவர்களின் மறைவிற்கு பலவேறு இடங்களில் இருந்து இரங்கல் கடிதம் வந்திருந்தது, அவர்களோடு இணைந்து பணிபுரியும் டாக்டர்.சுப்பராயலு அவர்களின் இரங்கல் கடிதம் வாசிக்கப்பட்டது, நொபொரு கரசிமா அவர்களின் முதல் மாணவரும் கடைசிவரை அவரின் ஆய்வுகளில் இணைந்து பணிபுரிந்த முனைவர் மிட்சுசிமா அவர்கள் ஐயா உடனான கடைசி நிமிடங்களை பகிர்ந்துகொண்டார், கடைசிவரை நம்பிக்கையோடு தான் செய்துபந்த பணியில் சிரத்தையுடன் ஈடுபட்டிருந்தத்தை விவரிக்கும் போது நெஞ்சம் கனத்தது.

இறுதியாக பேசிய கராசிமா நொபோரு அவர்களின் இணையர் திருமதி. தகாகோ கராசிமா அவர்கள் தன் கணவர் குறித்து, அவர் ஈடுபட்டிருந்த பணியில் எப்போதும் ஆர்வத்துடனும் உற்ச்சாகத்துடனும் செயல்பட்டார், பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டபோதும் எதற்கும் மனம் தளராமல் ஒவ்வொரு பிரச்சனையாக எதிர்கொண்டதன் மூலம் அவர் வெற்றி கண்டார் எனவும், காய்ச்சல் வந்து மருத்துவனையில் சேர்க்கும் போது இது வழக்கம்போல் வரும் இன்னுமொரு காய்ச்சல் எனவும் , இவ்வளவு சீக்கிரம் நம்மைவிட்டு பிரிவார் என நினைத்துபார்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.

திருமதி.தகாகோ கராசிமா அவர்களும் தமிழ்/தமிழர் குறித்து பல புத்தகங்கள் எழுதியவர். கராசிமா அவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் 3 பேரக் குழந்தைகள் உள்ளனர் .

திரு நொபொரு கராசிமா அவர்கள் குடும்பத்தாரிடம் அய்யா.திரு.பழ.நெடுமாறன் மற்றும் அண்ணன் .திரு.வைகோ அவர்களின் இரங்கல் கடிதங்கள் ஒப்படைக்கப் பட்டன .


மேலும் அய்யா .கரசிமா அவர்களின் சடலத்தை ஒரு புறம் ஜப்பானியரும் மறுபுறம் தமிழர்களும் சுமந்து சென்று ஊர்தியில் ஏற்றினர். திருமதி.தகாகோ கராசிமா இறுதி சடங்கில் கலந்து கொண்ட தமிழர்கள் அனைவருக்கும் தமிழில் நன்றி கூறினார். இன்றைய இறுதி சடங்கில் கலந்து கொண்ட தமிழர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை முழுமதி அமைப்பு ஏற்றிருந்தது

------------------------------------------------
புகைப்படங்கள் : அருள், முழுமதி அறக் கட்டளை

Thursday, 26 November 2015


மின் மிதி வண்டி நிலையங்கள் ‍ - பார்சலோனா நகரம்

(BiCing in Barcelona city)

மதியம் 3 மணி வாக்கில் பார்சலோனா நகருக்கு வந்து விட்டேன் .நல்ல பசி. நான் தங்கி இருக்கும் மான்ட்டே கார்லோ விடுதியில் இருந்து (லசு ராம்ப‌லசு வீதி) அருகில் இருக்கும் இடத்திற்கு அப்படியே உலா போகலாம் என நடக்க ஆரம்பித்தேன். நகரம் முழுக்க சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது.

பார்சலோனா நகரில் (Barcelona) எலக்ரானிக் மிதிவண்டிகளை (Battery powered Bicycles) வாடகை எடுக்கும் வசதி உள்ளது. இப்படிப்பட்ட எலக்ரானிக் மிதி வண்டிகளை வாடகைக்கு விடுவதை இங்குதான் முதன் முதலாக பார்க்கிறேன்

கார்பன் நச்சு புகையில்லாத பசுமையான சூழலை ஏற்படுத்தும் வகையில் மிக அற்புதமான ஒரு சூழலை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நகரின் பல இடங்களில் எலக்ரானிக் மிதி வண்டிகளை வாடகைக்கு எடுக்க வசதியாக தானியங்கி நிலையங்களை வைத்திருக்கிறார்கள். இதனை பார்சலோனா நகர் மன்ற குழு (Barcelona City Council) முன்னின்று நடத்துகிறது. இதற்கு Viu BiCiNg என்று பெயரிட்டுள்ளார்கள்.


இந்த மிதி வண்டியுடன் பொருத்தப்பட்டுள்ள பாட்டரியில் மின் சக்தியினை தேக்கி வைத்து கொள்ளும் வசதி இருப்பதால், நாம் இரு சக்கர மோட்டார் வாகனங்களை போல் மணிக்கு 20 கிமீ வேகத்தில் ஓட்டி செல்லலாம். மிக இலகுவான எடையில் இருப்பதால் கையாள எளிதாக இருக்கிறது.

நாம் ஓட்டி செல்லும் வழியில் மின் சக்தி குறைந்து விட்டால் கவலையே வேண்டாம். அருகில் உள்ள நிறுத்தத்தில் மிதி வண்டியினை நிறுத்தி விட்டு வேறு ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். அல்லது மிதி வண்டி நிலையங்களில் வைக்கப்பட்டு இருக்கும் டிரான்ஸ்பார்மர் பெட்டியில் இருந்தும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பெரும்பாலும் மிதி வண்டிகள் பொருத்தப்பட்டுள்ள தாங்கு கம்பியில் (stand) இருந்து மிதிவண்டியின் பாட்டரிகளில் மின்சக்தியினை சேமித்து (charging) வைக்கும் படி வைத்திருக்கிறார்கள்கள்.

இந்த மிதி வண்டியினை உள்ளூர் வாசிகள் தங்கள் வீட்டு முகவரி மற்றும் அடையளாங்களை இணையத்தில் பதிந்து தானியங்கி அட்டைகளை வாங்கி கொள்ளலாம். வருடாந்திர சந்தா 47.16 யூரோ. மிதி வண்டி எடுத்த முதல் அரை மணி நேரம் இலவசம். அடுத்த அரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை 0.74 யூரோ ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு செலுத்த வேண்டும். ஆகவே முதல் அரை மணி நேரத்தில் செல்லும் இடத்தில் அருகில் உள்ள நிலையத்தில் விட்டு விடலாம். பார்சலோன நகர் முழுக்க 41 இடங்களில் நிறுத்தம் உள்ளது. இதற்கான செயலிகளை திறன் பேசிகளில் தரவிறுக்கம் செய்து கொண்டால் எந்த இடத்தில் இந்த மிதி வண்டி நிலையங்கள் என அறிந்து கொள்ளலாம்.

சுற்றுலா பயணிகளுக்கு என்று தனியாக வாடகை கடைகளும் உள்ளது.
இந்த பைகிங் (Bicing) என்று அழைக்கப்படும் மிதி வண்டியின் பயன்பாடு வருடா வருடம் அதிகரித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் இந்நகரின் மாசு கேடு பெருமளவு குறைக்கப்பட்டு உள்ளது.

மேலும் மொத்தம் உள்ள மிதி வண்டிகளை அனைவரும் பகிர்ந்து ஓட்டுவதால் மிதி வண்டிகளை நிறுத்தும் இடமும் மிச்சம் ஆகிறது.

ஒரு வேளை மிதிவண்டியினை நிலையத்தில் விடாமல் ஏமாற்றலாம் என நினைத்தால் முடியவே முடியாது. மிதி வண்டி எடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் நிலையத்தில் விடவில்லை என்றால் 4.49 ஒரு மணி நேரத்திற்கு அபாராதம். அடுத்த நாளுக்குள் விடவில்லை காவல்துறை மூலம் நடவைக்கை எடுக்கப்பட்டு 150 யூரோ வரை அபாராதம் வசூலித்து விடுவார்கள்.

அடுத்த முறை பார்சலோனா நகருக்கு போனால் ஒரு முறை இந்த பாட்டரி மிதி வண்டியில் ஒரு முறை வலம் வாருங்கள்

(நிலையத்தில் மட்டுமே இந்த வண்டிகளை நிறுத்த முடியும் என்பதால் இந்த வண்டிகளுக்கு தனிப் பட்ட நிறுத்த வசதி (Stand) இருக்காது)


Saturday, 14 November 2015


ஜப்பான் அங்காடிகள்


ஜப்பானில் உள்ள அங்காடிகளில் மளிகை சாமான்கள் வாங்க போகும் போது வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களை எளிதாக வீட்டிற்கு எளிதாக எடுத்துச் செல்ல படத்தில் காட்டியுள்ளது போன்ற வசதி உள்ளது.

1. கத்தரிக்கோல்
2. ஈரத்துணி
3. 250 கி கொள்ளளவு உடைய நெகிழி பை
4. நெகிழி கயிறு
5. ஒட்டு தாள் (sello tape)
In Inegaya Super Market, Yamazaki, Nodashi, Japan

In Inegaya Super Market, Yamazaki, Nodashi, Japan

எதற்கு ஈரத்துணி என்று யோசிக்கிறீர்களா?

 சில நேரங்களில் கடையில் வாங்கிய பொருட்களை நெகிழி பையில் போடும் போது அவற்றை பிரிக்க விரலை இந்த ஈரத்துணியில் தொட்டு விட்டு பிரித்தால் நெகிழி பை  ஈரமான விரலில் எளிதாக ஒட்டிக் கொள்வதன் (adhesion)மூலம் பிரிக்கலாம் .  (வங்கியில் பணம் எண்ணும் போது காசாளர் நீரில் நனைக்கப்  பட்ட பஞ்சில் விரலை தொட்டு விட்டு பண நோட்டுகளை எளிதாக பிரித்து எண்ணுவார். அதே தத்துவம் தான்).

 இது போன்ற வசதிகளை நமது நாட்டில் உள்ள அங்காடிகளில் கொண்டு வரலாம்.

குறிப்பு:

சில அங்காடிகளில் பொருள் வாங்க துணிப் பை கொண்டு சென்றால்  சுற்றுப் புற சூழல் மேம்பாட்டினை வலியுறுத்தும் விதமாக வாங்கும் பொருளில் சிறிய தள்ளுபடி உண்டு.

ஜப்பான் தொடர் வண்டி நிலையங்கள் - ‍ 4

(Japan Railway Station Felicities-4)


சக்கர நாற்காலிகளில் செல்லும் மாற்று திறனாளிகள் தொடர் வண்டிகளில் பயணிக்கும் போது நடை மேடைக்கும் (platform) வண்டிக்கும் உள்ள பெரிய இடைவெளியில் இறங்குவது கடினம்.

இது போன்ற சூழலில் அவர்களுக்கு உதவிட ஜப்பானில் உள்ள தொடர் வண்டிகளில் அழைப்பு சேவை (SOS Phone) உள்ளது. இந்த அழைப்பு மூலம் தொடர் வண்டியின் ஓட்டுநரை அந்தந்த பெட்டியில் உள்ள  முன்னுரிமை இருக்கையின் (priority seats) அருகே உள்ள அழைப்பு பொத்தானை அழுத்தி பெட்டி எண்ணையும் (coach number), இறங்க வேண்டிய நிறுத்தத்தினையும் சொல்லி விட்டால் ஓட்டுநர் முன்னதாகவே அந்த நிறுத்தத்தில் உள்ள ஊழியருக்கு தெரிவித்து விடுவார். 

SOS call option available in train. Photo taken at Tobu Noda Urban line, Japan

SOS call option available in train. Photo taken at Tobu Noda Urban line, Japan

அவர் சக்கர நாற்காலி வண்டியில் இருந்து நடை மேடைக்கு எளிதாக இறங்கும் வண்ணம் தாண்டு பலகையினை வைத்து கொண்டு நிற்பார்.

இன்று உயனோ (Ueno) தொ.வ நிலையத்தின் நடை மேடையில் 
வண்டிக்காக காத்திருந்த போது ஒரு ஊழியர் பலகையினை வைத்து கொண்டு நின்றிறுந்தார். வண்டி வந்தவுடன் அவ்வளவு கூட்டத்திலும் சக்கர நாற்காலியில் வந்தவர் எளிதாக நடை மேடைக்கு இறங்கி விட்டார்.


உயனோ (Ueno) தொடர் வண்டி நிலையத்தில் சக்கர நாற்காலியின் பயணிப்பவருக்கு நடை மேடையில் இறக்கி விட கடமையாற்றும் ஊழியர்.

உயனோ (Ueno) தொடர் வண்டி நிலையத்தில் சக்கர நாற்காலியில் பயணிப்பவர் நடை மேடையில் எளிதாக இறங்கும் பொழுது எடுத்த படம்

இது போன்று வசதி நம் தொடர் வண்டி நிலையங்களில் கொண்டு வந்தால் சக்கர நாற்காலியில் பயணிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும்.