Friday, 13 November 2015

ஒரு விபத்தும் பால‌ பாடமும்

தற்போது பெய்து கொண்டு இருக்கும் பெரு மழையானது  கடலூர் மாவட்டத்தினை வடித்து தின்று ஆர்பரித்து அடங்கி இருக்கிறது.   காங்ரீட் காடுகளான சென்னை மாநகரில் வெள்ளம் இப்போது தப்பாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது. முக நூல் முழுக்க சென்னை நகர் வெள்ளத்தில் தத்தளிக்கும் படங்களை பகிர்ந்து நண்பர்கள் ஆசுவாசப்படுத்தி கொள்கிறார்கள்.





இப்படி ஒரு வெள்ளம் வரும் எனத் தெரிந்தும் எந்த முன்னேற்பாடும் செய்யாத மெத்தன‌ அரசும், தாந்தோன்றி தனமாய் சாக்கடைகளில் கண்டதையும் வீசி சாக்கடைகளின் ஓட்டத்தினை தடுத்து நிறுத்திய‌ பொது மக்களும் இப்போது வெள்ளத்தில் சிக்கி சின்னா பின்னமாகி உள்ளனர்.

இரண்டு பேருக்கும் இல்லாத பொது அக்கறையினால் ஊரே வெள்ளத்தில் மிதக்கிறது.

ஜப்பானில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் வசிக்கும் தெருவில் உள்ளூர் நகர் மன்ற அதிகாரிகள் சாலையின் உயர அகலங்களை அளக்கும் கருவிகளோடு எங்கள் தெருவின் சாக்கடைகளில் ஒழுங்காக நீர் ஓடுகிறதா என பரிசோதித்து கொண்டு இருந்தார்கள். இதை ஏதோ வழக்கமான சோதனை என நினைத்து இருந்தேன். பிறகு இரு வாரம் கழித்து கடுமையான மழை இரு வாரங்களுக்கு மேல் நீடித்தது. ஆச்சரியம், ஒரு சொட்டு நீர் கூட எங்கள் பகுதியில் தேங்கவில்லை. இதற்கு காரணம் அதிகாரிகளின் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள். ஏதோ சாக்கடைதானே என அலட்சியப்படுத்தாமல் மக்களின் நலன் கருதி அவற்றினை சரியான நேரத்தில் ஆய்வு செய்து நீர் ஓடும்படி சரியான நிலையில் வைத்திருப்பது எவ்வளவு அவசியம் என புரிந்து கொண்டேன்

எங்கள் தெருவோடு பிரதான சாலையினை ஒப்பிடுகையில் நான் வசிப்பது தாழ்ந்த பகுதி, இயல்பாகவே தண்ணீர் தேங்க வாய்ப்புண்டு. ஆனால் அவ்வளவு கன மழையிலும் சொட்டு தண்ணீர் என் பகுதியில் தேங்கவில்லை. இதற்கு காரணங்கள் என்ன.

1. ஜப்பானில் பெரும்பாலும் சாக்கடைகள் திறந்த நிலையில் இருப்பதில்லை. இதனால் மக்கள் மனம் போன போக்கில் குப்பைகளை அதுவும் நெகிழி குப்பைகளை சாக்கடையில் வீச முடியாது ஒவ்வொரு பகுதிக்கும் சென்சார் பொருத்தப் பட்டு மக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் இரசாயன பொருட்கள் கழிவு நீர் சாக்கடையில் கலந்தால் உடனே அந்த பகுதியில் சோதனை நிகழ்த்தப்பட்டு எது பிரச்சினை என்று கண்டறியப்படும். 
2. இது தவிர‌, ஒவ்வொரு கிராமத்தினையும் சுற்றியும் ஒரு கால்வாய் ஓடும். இயல்பான நாட்களில் அந்த கால்வாயில் தண்ணீர் ஓடுவதை காண்பதே அரிது. ஆனால் வெள்ளம் பெருகும் நாட்களில் இந்த கால்வாய்கள் அவற்றினை வடித்து குடியிருப்பு பகுதிகளை காக்கும்.

இவ்வளவு கட்டுபாடுகளையும் மீறி ஜப்பானை பாதிப்பது ஆற்றின் கரைகளை உடைத்து கொண்டு எதிர் பாராத விதமாக ஊருக்குள் பாயும் வெள்ளம் மட்டுமே.

3.ஒரு வேளை ஊரை சுற்றி வெள்ளம் வந்தால் குய்யோ முய்யோ என கத்தி கதறாமல் அருகில் உள்ள முகாம்களுக்கு மக்கள் சென்று விடுவார்கள். முகாம்கள் என்றால் நம் ஊர்களில் ஏதோ கலெக்டர் திடீரென திறந்து விடும் நிவாரண‌ கூடம் அல்ல. ஜப்பானில் நில நடுக்கம் என்பது இயல்பானது. சற்று சிந்திந்து பாருங்கள் கடுமையான நில நடுக்கத்தின் போது இங்கு மின்சாரம், வீட்டிற்கு சமைக்கும் அடுப்பு எரிவாய் உள்ளிட்ட அனைத்தும் பாதுகாப்பு கருதி துண்டிக்கப்பட்டு விடும். இப்படி  தீடீர் என ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க ஜப்பானிய அரசு பொது மக்களுக்கு வருடம் முழுவதும் இயங்கும் முகாம்களை வைத்துள்ளது. அது வேறு ஒன்றும் இல்லை. அந்தந்த பகுதியில் இயங்கும் அரசு பள்ளிகள்தான். ஆம் நீங்கள் உங்கள் குழந்தைகளை மழைக்கு கூட ஒதுக்க மனம் வராத அரசு பள்ளிகள் தான் இங்குள்ள மக்களை காப்பாற்றும் ஆபத்துதவிகளாக இருக்கிறது. பேரிடர் காலங்களில் பொது மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, உறைவிடம் ஆகியவை அங்கு தயார் நிலையில் இருக்கும். எப்படி பட்ட சூழலிலும் பொது மக்கள் ச‌ண்டை போட்டு கொள்ளாமல் முறையாக வரிசையில் நின்று, தேவையான பொருட்களை  பெறும் வண்ணம் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

எல்லா பேரிடர் நிகழ்வுகளையும் திறன் அலை பேசிகளில் உள்ள திறன் செயலிகள் (Apps) மூலம் முன் கூட்டியே அறிந்து கொள்ளும் வண்ணம் அறிவியல் நுட்பம் இங்கு ஜப்பானில் முன்னேறி உள்ளது.

நாம் இன்னும் தல, தளபதி படங்களுக்கு அடித்து கொண்டு சாகிறோம்.

சரி பொது மக்களின் விசயத்திற்கு வருகிறேன்.

1. பொது சாலையினை அத்து மீறீ  சாக்கடைகளை ஆக்கிரமித்து கற்களை கொண்டு மூடி அவற்றின் மீது கடைகளையும், வீடுகளை கட்டும் கொடூர ஆக்கிரமிப்பாளர்கள்
2. எந்த பொறுப்பும் இன்றி சாக்கடைகளில் நெகிழி குப்பைகளை வீசும் பொது மனிதர்கள்.
3. துப்புரவு பணி என்பது கலெக்டர் பணிக்கும் மேலானது என உணராமல் அவர்களுக்கு கேவலமான சம்பளம் வழங்கி அவர்களின் சுகாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் தேவையான, அத்யாவசிய உபகரணங்களை வழங்காதது
4. அரசின் நிவாரணம் கிடைத்தவுடன் எல்லாவற்றையும் மறந்து மீண்டும் அத்தனை நாசக் கேட்டையும் மீண்டும் செய்வது
5. பொது சொத்தான ஏரி, கண்மாய், குளம், வெள்ளதாரை எனப்படும் வெள்ள வடிநீர் கால்வாய் ஆகியவற்றை திருட்டு தனமாக ஆக்கிரமிப்பு செய்வது
6. நீர் வடியும் மட்டம் பார்த்து அமைக்கப்படும் சாலைகளை சேதப்படுத்துவது 

என மேற்சொன்ன எல்லா இழி செயல்களையும் செய்யும் பொது சனங்கள் என எல்லோருமே இது போன்ற வெள்ளப் பெருக்கிற்கு காரணம்.

மெத்தனமாய் இருக்கும் அரசும், ஒவ்வொரு பேரிடர் அழிவிழும் திருந்தாத‌ பொதுசனமும் விழித்து கொள்ளாத வரையில் இது போன்ற வெள்ள சேதாரங்களை தடுக்க முடியாது.

பொறுப்பு இருபாலருக்கும் உண்டு என்பதை இனியேனும் உணர்க‌

தீதும் நன்றும் பிறர் தர வாரா.


















No comments:

Post a Comment