கையெழுத்து (Hand writing menu board)
கணினி மென்பொருள் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் அச்சுத்துறையில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தி உள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பிடும்போது தற்போது கட்டற்ற எழுத்துருக்கள் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது. இப்பொழுது இக்கட்டுரையினை கூட நான் சொல்லினம் என்ற யுனிகோடு எழுத்துரு கொண்டு அலைபேசியில் எளிதாக தட்டச்சு செய்ய முடிகிறது.
அது மட்டுமில்லாமல், சுவர் விளம்பரங்கள், பிளக்ஸ் போர்டுகள் , கடைகளில் அறிவிப்பு பலகைகள் என எல்லாவற்றிலும் அச்சடிக்கப்பட்ட தாள்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம். ஒரு விதத்தில் நம்முடைய நேரம், செலவு ஆகியவை பெரும் சதவிகிதம் மிச்சபட்டிருக்கிறது.
ஆனால், சின்ன கடைகளில் காணப்படும் அறிவிப்புகள், விலை விபரம்,
அங்காடிகளில் பொருட்களின் பெயர் பட்டியல் ஆகியவற்றில் பயன்படுத்தப் பட்டு வந்த கையில் எழுதும் முறை தற்போது வழக்கில் இருந்து மெதுவாக குறைய ஆரம்பித்துள்ளது.
இது ஒரு புறம் இருக்கட்டும், சமீப காலத்தில் பரவலாக நாம் அறிந்த சுவற்றில் எழுதும் ஓவியர்கள் இன்று எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை. அழகான, வித்தியாசங்கள் நிறைந்த அவர்களது கையெழுத்தில் காணப்பட்ட கடைகளின் பெயர் பலகைகள், வாழ்த்து அட்டைகள், வாகன எண்கள் இன்று முற்றிலும் அழிந்து விட்டன. பிளக்ஸ், ஸ்டிக்கர் என நவீன நுட்பங்களுக்கு நாம் மாறி விட்டோம்.
எப்பொழுதாவது நேரம் கிடைத்தால் உங்களிடம் இருக்கும் பழைய கடிதங்கள், வாழ்த்து அட்டைகளில் உங்களின் கையெழுத்தையோ, அல்லது பழைய புகைப்படங்களில் இருக்கும் சுவர் எழுத்துகளையோ பாருங்கள், அவை நாம் இழந்த மொழியின் எழுத்து வளத்தினை சொல்லும்.
நேற்று முழுவதும் சுவான்சி (Swansea) நகரத்தின் கடைகளை சுற்றி வந்தேன். பெரும்பாலான கடையின் பெயர்கள், விலைப் பட்டியல் போன்றவை கையெழுத்தில் மட்டுமே காணப்பட்டது. அந்த எழுத்துகளை பார்க்கவே வசீகரமாக இருந்தது.
Swansea City, UK |
Mumbles village, Swansea, UK |
தமிழில் "ற", " ழ", "ஐ", " த" உள்ளிட்ட பல எழுத்துகளை எழுதும் போது ஒவ்வொருவரும் ஒரு மாதிரி எழுதுவார்கள், அல்லது சுழிப்பார்கள். இதுவே புதிய எழுத்துருக்களின் பிறப்பிடம் எனச் சொல்வேன்.
நம்மிடம் இருந்து எழுத்துகள் மெல்ல அழிந்து கொண்டே இருக்கிறது. முகநூலில் எழுதும் பலரும் கடுமையான இலக்கண பிழைகளோடு எழுதுகின்றனர். இவை யாவும் நாம் தொடர்ந்து எழுதாமல் இருப்பதன் விளைவே, ஒரு வேளை இப்படி தொடர்ந்து நாம் எழுதாமல் இருந்தால் நம் மொழி மெல்ல சிதையும்.
முடிந்த வரை கடைகளில் விலைப் பட்டியல், தற்காலிக அறிவிப்பு பலகைகள் போன்றவற்றினை கையில் எழுதுங்கள். தொடந்து நாமே கைப்பட எழுத்துகளை எழுதுவதால் மொழி நின்று சிறக்கும்.
உதாரணத்திற்கு ஒரு மொழியினை புதிதாக கற்கும் போது ஆசிரியரின் கையெழுத்து எளிதாகவும் புத்தகத்தில் இருக்கும் அச்சு எழுத்துகள் கடினமாக இருப்பது போல் தோன்றும். உண்மையில் புத்தகத்தில் இருக்கும் எழுத்து வடிவமே முற்றிலும் சரியானது. ஆயினும் கையால் எழுதுன் எழுத்துகளே நம் மனதுக்கு நெருக்கமாக நிற்கிறது.
தற்பொழுது சந்தைகளில் பிரத்யோக கரும்பலகைகளும், அவற்றில் எழுத சிறப்பு வண்ண பேனாக்களும், அழிப்பான்களும் வந்து விட்டது. சமீபத்தில் எளிதாக எழுதி அழித்து கொள்ளும் வகையிலான எல் சி டி சிலேட்டுகள் சந்தைகளில் கிடைக்கிறது.
விரைவில் சூரிய ஒளியில் இயங்கும் போட்டோ குரோமிக் (Photochromic) நுட்பத்தில் வண்ண எழுத்துகளை கையால் எழுதி அழிக்கும் சிலேட்டுகள் சந்தைக்கு வரும் வாய்ப்புகளும் உள்ளது. அப்புறம் என்ன உங்கள் கையெழுத்தில் அறிவிப்பு பலகைகளை வையுங்கள்.
குறிப்பு:
சென்ற ஆண்டு கரூரில் உள்ள பிரபல அங்காடியில் பழங்கள் வாங்க சென்று இருந்தேன். அப்போது ஆரஞ்சு பழம் இருந்த இடத்தில் "காமாலை ஆரஞ்சு" என எழுதப் பட்டிருந்தது. ஒரு வேளை இந்த ஆரஞ்சு பழத்தினை உண்டால் காமாலை நோய் தீர்ந்து விடுமோ என ஐயம் வந்து விட்டது. பிறகுதான் தெரிந்தது அது கமலா ஆரஞ்சு என்று. சரி அதை எழுதியவரை பார்த்து திருத்தலாம் என்று போனால் பள்ளி படிப்பினை இடையிலேயே நிறுத்தி விட்டு வேலைக்கு வந்த சிறுவனைப் போல் தெரிந்தான். அவனை கடிந்து கொள்ள மனம் இல்லாமல் அன்பாக அறிவுறுத்தி விட்டு வந்தேன். இந்த நிகழ்வுதான் இக்கட்டுரையினை எழுத வேண்டுன் என்று என்னை தூண்டியது.
No comments:
Post a Comment