Saturday 31 October 2015

சுவான்சி நகரம்- 1   (Swansea City, UK)


இங்கிலாந்து வந்து மூன்று நாட்கள் ஆகிறது. ஆனாலும் மனம் ஜப்பானை சுற்றியே வந்து கொண்டு இருந்தது. அதுவும் இலண்டன் மாநகரின் இரயில் தொடர்வண்டிகளில் செல்லும் போது ஒரே இரைச்சலும், அழுக்கான சூழலும், தோக்கியோ நகரின் நிசப்தமான தொடர்வண்டிகளின் அருமையினை   உணர்த்திக் கொண்டே இருந்தது. 

ஏன்  என் மனம் ஜப்பானோடு ஒப்பிடுகிறது என எனக்கே தெரியவில்லை. முக்கியமாக‌, ஜப்பானின் பெரும்பாலான இரயில் நிலையங்களில் லிப்ட் வசதி உண்டு. ஆகவே பெரும் சுமையோடு வரும்போது இந்த லிப்ட் வசதி பெரும் வரப் பிரசாதம். அது மட்டுமில்லாமல், விழிச்சவால் உடைய மாற்று திறனாளிகளுக்கு எளிதாக இரயில் நிலையம் முழுவதும் சென்று வர‌ அவர்களுக்கென்று வழிகாட்டும் பிரத்யோக கற்கள் பதித்த தடங்கள் இருக்கும். இப்படி எந்த வசதியும் இலண்டன் மாகரின் மெட்ரோவில் காண முடியவில்லை. ஒரு சில இரயில் நிலையங்களிம் மட்டும் மாற்றுத் திறனாளிகளின் சக்கர வண்டிகள் செல்லும் வசதி உள்ளது. இத்தனைக்கும் உலகிற்கே முன்னோடியாக நூறு வருடங்களுக்கு முன்பு நிலவறை தொடர் வண்டி நிலையங்களை (under ground train station - Tube) அமைத்தவர்கள் பிரித்தானியர்கள். 

நேற்றைய இரவில் இலண்டன் நகரில் இருந்து 3 மணி நேர இரயில் பயணம் செய்து சுவான்சி நகருக்கு வந்து சேர்ந்தேன். அழகான கடற்கரை நகரம். இலையுதிர் காலத்தின் மிரட்டலில் தவித்து கொண்டு மரங்கள், பசும் புல்வெளிகள் நிறைந்த வீடுகள், பூங்கா என அழகியல் நிறைந்த ஊராக தெரிந்தது. 

உள்ளூர் பேருந்துகள் அனைத்தும் தெற்கு மற்றும் மேற்கு வேல்ஸ் மாகாணத்தினை அடிப்படையாக கொண்ட பர்ஸ்ட் குழும‌ம் (First groups) எனப்படும் தனியார் நிறுவனத்தினரால் இயக்கப்படுகிறது.  ஸ்ட்ரீட் கார் எனப்படும் மெட்ரோ பேருந்துகள், கிரேகவுண்ட், சிமுரு கிளிப்பர் என பல்வேறு பெயர்களின் தனது பேருந்து சேவையினை செய்து வருகிறது. இதில் பல பிரத்யோக வசதிகள் உள்ளது. முக்கியமானது எனச் சொன்னால், சக்கர நாற்காலியில் பயணிக்கும் மாற்றுதிறனாளிகள் நேரடியாக சாலையில் இருந்து பேருந்தில் ஏறி கொள்ளலாம். விழிச்சவால் உடைய மாற்றுத் திறனாளிகளுக்காக பயிற்றுவிக்கப்பட்ட நாய்களை இலவசமாக உடன் பயணிக்க என எல்லா வசதிகளும் உள்ளது.  பெருவாரியான  பேருந்துகளில் வைபை (WiFi) இணைய வசதி வந்து விட்டது. நாளை வெளியில் சுற்றி விட்டு வந்து நிறைய‌ எழுதுகிறேன்.

சுவான்சி நகரின் கடற்கரை  பாதையான‌ ஆய்ஸ்டர் மவுத் சாலையில் (Oyster Mouth Road) சுவான்சி பல்கலைக் கழகம் (Swansea University Main Campus) உள்ளது. அதன் பின்புறம் மலைப் பகுதியில் ஸ்கெட்டி (Sketty) எனப்படும் பகுதி உள்ளது. அங்குள்ள "ஸ்கொயர் பெக் தேநீர் நிலையம்" எனப்படும் (Square Peg Coffee House) சிற்றுண்டி சாலைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு செல்லலாம் என அங்கு சென்றேன். 

Square Peg Coffee House, Sketty, Swansea City, UK


தேநீர் அருந்தி கொண்டே அங்கு வாசிக்க நிறைய ஆங்கில நாவல்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த மாதத்திற்கான ஓவியர்கள் என தலைப்பிட்டு    சில அற்புதமான வண்ண ஓவியங்களை வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைத்திருந்தார்கள். முற்றிலும் வித்தியாசமாக இருந்ததால், அந்த கடையினை ஒரு முறை முழுதாக சுற்றிப் பார்த்தேன். அப்பொழுது அங்கே வைக்கப்பட்டிருந்த  கரும்பலகையில் அந்த கடையின் இலக்கு என்ன என எழுதி இருந்தார்கள். 

Square Peg Coffee House, Sketty, Swansea City, UK

Square Peg Coffee House, Sketty, Swansea City, UK

Square Peg Coffee House, Sketty, Swansea City, UK


ஒரு தேநீர் கடைக்கு என்ன பெரிய இலக்கு இருக்கும் என ஆச்சரியத்துடன் படித்தேன். இக்கடையில் வரும் இலாபத்தின் பெரும்பகுதியினை கென்யாவில் (Kenya) வசிக்கும் ஏழைக் குழந்தைகளின்  வாழ்க்கை மேம்பாட்டிற்கு செலவிடுகிறோம் என எழுதி இருந்தது. 

வியப்பின் உச்சிக்கு சென்ற நான், அங்கிருந்த யுவதியிடம் நான் ஜப்பானில் இருந்து வந்துள்ளேன், உங்கள் கடையினை பற்றிய மேலதிக தகவலை சொல்ல முடியுமா எனக் கேட்டேன். அந்த யுவதியும் சிரித்துக் கொண்டே அக்கடையில் இருந்த மற்றொரு இளைஞரான ஜோஸ் என்பவரை அழைத்தார்.   சற்றே நீண்ட தாடி  வைத்திருந்த இளைஞர் ஒருவர் வந்தார். ஏறத்தாழ பார்ப்பதற்கு ஆங்கில புராதன படங்களில் வரும் போர் வீரனைப் போல இருந்த ஜோஸ் (Jose) சிரித்து கொண்டே என்னிடம் கைகுலுக்கினார். 


With Mr. Jose, Square Peg Coffee House, Sketty, Swansea City, UK

என்னை அறிமுகப் படுத்திக் கொண்ட பின்பு உங்கள் கடையின் வருமானத்தில் கென்ய குழந்தைகளுக்கு உதவி செய்கிறீர்கள் என எழுதி இருந்ததை படித்தேன், மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் என்றேன். ஜோஸ் சிரித்து கொண்டே நன்றி என்றார். பின்னர் ஜப்பானில் இருந்து முழுமதி அறக்கட்டளை (Muzhumathi Foundation, Japan) மூலம் எமது நண்பர்கள் எவ்வாறு இந்தியாவில், தமிழ் மாணவர்களின் உயர் கல்விக்கு உதவுகிறோம் என சொன்னேன். அவரும் எனக்கு வாழ்த்துகள் சொன்னார். 

பின்னர் எப்படி இவ்வாறு ஒரு சமூக தொண்டு செய்ய திட்டமிட்டீர்கள் என கேட்டேன். அவரது நண்பர்கள் உட்பட சிலர் சேர்ந்து ஒரு அறக்கட்டளை நோக்கம் உடைய வர்த்தக நிறுவனம் ஒன்றினை தொடங்கி, அதில் வரும் இலாபத்தில் ஏழை நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு உதவ திட்டமிட்டதாக தெரிவித்தார். இது மட்டுமில்லாமல், நிறைய சமூக பணிகளையும் இவர்களது நண்பர்கள் முன்னெடுப்பதாக கூறினார். எதிர்வரும் நவம்பர் 11ஆம் தேதி இந்திய முன்னாள் இராணுவத்தினருக்கு நல நிதி வசூலிக்கும் தேநீர் சந்திப்பினை நிகழ்த்தவிருப்பதாகவும், இங்கு இருந்தால் அவசியம் வரவும் என அழைப்பும் விடுத்தார். 

இது போன்ற விழாக்களில் குறும்படங்கள் மற்றும் சிறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி அதில் சேரும் பணத்தினை எங்களது அறக்கட்டளையின் மூலம் உள்ளூரில் தெருவோரத்தில் வசிக்கும் வீடடற்ற மக்களுக்கு தங்கும் வசதியும், கென்யாவில் கைவிடடப்பட்ட நிலையில் தெருவில் வசிக்கும் குழந்தைகளின் வாழ்க்கைக்கான‌ மேம்பாட்டிற்கும் உதவுகிறோம் எனச் சொன்னார்.  

உண்மையில் இது போன்ற இளைஞர்கள்தான் நிகழ் கால மனித மேம்பாட்டின் ஆதர்சனமாக பார்க்கிறேன். நிச்சயம் இது போன்ற இளைஞர்கள் கூட்டம் தமிழகத்தில் வர வேண்டும். அவ்வாறு வரும் இளைஞர்களை நம் மக்கள் ஊக்குவிக்க வேண்டும்.

நீங்கள் எப்பொழுதாவது சுவான்சி நகருக்கு சென்றால் இந்த தேநீர் விடுதிக்கு செல்லுங்கள். இதன் மூலம் ஒரு ஆப்ரிக்க குழந்தைக்கு உதவ முடிந்தால் அந்த புண்ணியமும் உங்களுக்கு சேரும். 

இக்கடையினை பற்றி மேலும் தகவல் அறிய‌


Tuesday 27 October 2015


சின்ன சின்ன மகிழ்ச்சிகள்தான் வாழ்வை சுவாரசியமாக வைத்திருக்கிறது.

 கடந்த வாரத்தின் மதிய பொழுதில் எனது ஆய்வு கட்டுரைக்கான வெகுமதி பிரதி (Complementary Copy) போட்டோ கெமிஸ்ட்ரி அண்ட் போட்டோ பயாலஜி‍ சி ரிவியூ (Photochemistry and Photobiology C- Review) இதழில் இருந்து அனுப்பி இருந்தார்கள். நிறைந்த மகிழ்ச்சி.

ஆய்வுக் கட்டுரையினைப் படிக்க கீழ்கண்ட சுட்டியில் பெறலாம (*ஆய்விதழ் சந்தா செலுத்தி இருந்தால் மட்டுமே படிக்க இயலும்)
http://www.sciencedirect.com/science/article/pii/S1389556715000283

இந்த ஆய்வு கட்டுரையினை நான் முதன்மை நெறியாளராக (Corresponding Author) இருந்து வெளியிட்டுள்ளதால் இந்த வெகுமதி பிரதியினை அனுப்பி வைத்துள்ளார்கள். இந்த ஆய்விதழின் நிறுவனர் எனது பல்கலைக் கழக தலைவரும், எனது ஆய்வு நிறுவனத்தின் இயக்குநருமான பேராசிரியர் அகிரா புசுசிமா ஆவார் (Prof. Akira Fujishima). அவர்களோடு இணைந்து இந்த ஆய்வுக் கட்டுரையினை வெளியிட்டது என் ஆய்வு பயணத்தில் ஒரு மகிழ்வான தருணமாகவே பார்க்கிறேன்.










கடந்த ஜீலை மாதத்தோடு என் முனைவர் ஆய்வு பட்டம் முடிந்து ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. ஏறத்தாழ இது வரை 60 க்கும் மேற்பட்ட எனது ஆய்வு கட்டுரைகள் சர்வதேச ஆய்வு இதழ்களில் வெளிவந்துள்ளன.

உலகம் முழுவதிலும் உள்ள 100 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களோடு  கூட்டு முயற்சியில் பணியாற்றியதன் மூலம் மட்டுமே இதனை செய்ய முடிந்தது. என் தனிப்பட்ட சாதனை என்று ஒன்றும் இல்லை. இந்த தருணத்தில் என்னோடு ஆய்வுத் தடத்தில் பயணித்த, பயணிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கடன் பட்டுள்ளேன். முக்கியமாக‌, என் முனைவர் பட்ட நெறியாளர் பேராசிரியர் இரா. சத்தியமூர்த்தி அவர்கள்,  முனைவர் செந்தில் அரசு அண்ணா, முனைவர் சந்திர மோகன் உட்பட‌ என் மதிப்பிற்குரிய நல விரும்பிகளின் வழிகாட்டுதலால் மட்டுமே இன்று  இந்த இடத்திற்கு வர முடிந்துள்ளது.

எது ஆய்வு, ஒரு ஆய்வினை எப்படி அணுக வேண்டும், ஆய்வின் வீழ்ச்சியான பக்கங்களை எப்படி தவிர்ப்பது போன்றவற்றை கற்கவே இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது. இனிதான் தனித்த, செம்மையான‌ ஆய்வினை தொடங்க வேண்டும். அதுவும் மானுடத்தின் மேன்மைக்காக இருப்பின் கூடுதல் மகிழ்ச்சி.

என் தாய்மொழி ஒன்றுதான் எல்லா தருணங்களிலும் எனக்கு சிந்திக்கவும், பல்வேறு தளங்களில் ஆய்வினை பற்றி யோசிக்கவும் தைரியம் ஊட்டியது.

ஆய்வு பயணங்கள் தொடரும்..










Monday 26 October 2015

அவந்தியும் ஜப்பானிய பள்ளியும்.. (Avanthi's experience in Japanese Nursery School)


ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டது, ஆனாலும் முதல் நாள் அவந்தி ஜப்பானில் உள்ள சிறுமியர் பள்ளிக்கு  சென்றது மறக்க முடியாத நாளாகத்தான் எங்களுக்கு இருந்தது.

இந்தியாவில் இருந்து அவந்தி ஜப்பானுக்கு  வந்தபோது அவளுக்கு 1 வயது 5 மாதம், மழலை மொழியில் குறியீடுகளோடு பேசிக் கொண்டிருந்தாள்.

எனது மனைவியும் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து கொண்டிருந்ததால், பகல் நேரத்தில் அவந்தியை கவனித்து கொள்ள முடியாது. ஆகையால் வேறு வழியின்றி சிறுமியர் பள்ளிக்கு அனுப்பி வைத்தோம்.

ஒரே ஆறுதல் ஜப்பானில் ஆறு வயது வரை பள்ளி பாடத்திட்டங்கள் கிடையாது. விளையாட்டு, வண்ணம் தீட்டுதல், ஸ்டிக்கர் ஒட்டுதல், பொம்மை செய்தல் என கற்பனைத் திறனை வளர்க்கும் செயல் மட்டுமே கற்பிக்கிறார்கள். ஆறு வயதில் இருந்து பத்து வயது வரை தேர்வுகள் கிடையாது (primary school). முழுக்க முழுக்க சமூக கல்வியே. எப்படி சிறந்த குடி மகனாக நடந்து கொள்வது என்பதை மட்டுமே போதிக்கிறார்கள். காவல் துறையினர் அவந்தியின் பள்ளிக்கே நேரில் வந்து ஐந்து வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு சாலையில் எவ்வாறு விதி முறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். சிக்னல்களில் உள்ள பாதாசாரிகளுக்கான பொத்தானை எப்படி உபயோகிக்க வேண்டும். அவசர காலங்களில் காவல்துறையினரை எப்படி அழைக்க வேண்டும் என அவர்களே வகுப்பு எடுக்கின்றனர். இதுவே இக்குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் போது சாலைகளில் விதிமுறைகளை பின்பற்றி நடக்க உதவியாக உள்ளது.

எவ்வளவு நல்ல விசயங்கள் இருந்தாலும், ஒரு பெற்றோராக‌ முதலில் நாங்கள் பயந்தது, மொழி தெரியாத சூழ லில்  தூக்கம் வருவதையும், பால் வேண்டுமென்றால் எப்படி ஆசிரியரிடம் எப்படி கேட்பாள்  என்று தவித்துக் கொண்டு இருந்தோம். ஆச்சரியம், மூன்றே மாதங்களில் பள்ளியின் அட்டவணை செயல்களோடு ரோபோ போல பழக்கப்பட்டு இருந்தாள்.

காலையில் பள்ளியில் விடச் செல்லும் போது சிணுங்குவாள், அழுவாள், பள்ளிக்கு உள்ளே சென்றதும் அவளது ஆசிரியைகளில் யாராவது ஒருவர் அவளை தூக்கி வைத்து கொண்டால் சிறிது நேரத்தில் சமாதானம் ஆகி விடுவாள். இங்குள்ளவர்கள் நம் ஊரில் உள்ள போது குழந்தைகளை இடுப்பில் தூக்கி வைப்பதில்லை, பெரிய துணி கொண்டு தூளி செய்து முதுகோடு கட்டிக் கொள்கிறார்கள். ஒரு விதத்தில் இது எளிது, நெடுநேரம் குழந்தைகளை சுமந்தாலும் இடுப்பில் வைத்திருப்பது போல் கை வலிக்காது.

வருடம் ஒரு முறை பெரிய அளவில் விளையாட்டு போட்டி வைத்து எல்லா குழந்தைகளையும் கட்டாயம் பங்கேற்க வைக்கிறார்கள் (இது பற்றி தனி பதிவு நிச்சயம் எழுதுகிறேன்). நம் ஊரில் உள்ளது போல விளையாட்டு போட்டிகளுக்கு பெற்றோர்கள் கடைக்கு சென்று பெரும் செலவு செய்து அலங்கார பொருட்கள், துணிகள் வாங்குவது முற்றிலும் கிடையாது.

தூக்கி எறியப்படும் பொருட்களான நூடுல்ஸ் பெட்டி, காலியான பால் பெட்டியின் காகித உறைகள் என வீணான பொருட்களில் பொம்மைகளும், பரிசு பொருட்கள், பதக்கங்கள், தொப்பிகள், அலங்காரப் பொருட்களை குழந்தைகளை கொண்டே ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே செய்யத் துவங்கி விடுகிறார்கள்.

நம்பமாட்டீர்கள் விளையாட்டு போட்டியன்று குழந்தைகள்  வைத்திருக்கும் கைவினை பொருட்களை உற்றுப் பார்த்தால் மட்டுமே அவையெல்லாம் பயன்படுத்திய பொருட்களில் இருந்து செய்தவை என கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம் குழந்தைகளின் கற்பனை சக்தி திறன் அதிகரிப்பதோடு, குப்பைகளை எவ்வாறு பயனுள்ள பொருளாக மறு சுழற்சி செய்யலாம் என கற்றுக் கொள்கிறார்கள்.

குழந்தைகளை காலையில் விட்டவுடன் அங்கிருக்கும் சிறிய மேசை நாற்காலிகளில் குழந்தைகள் உட்கார பழக்கப்படுத்தப்பட்டு, கோப்பைகளில் பால் அருந்தவும், தீனிகள் தின்னவும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

சாப்பிட்டு முடிந்தவுடன், வரிசையாக சென்று அங்குள்ள குழாயில் கைகழுவி விட்டு கை துடைக்கும் காகிதங்களில் (Tissue) கைகளில் உள்ள ஈரத்தினை துடைத்து கொள்கிறார்கள். மறக்காமல் குப்பைகளை அந்த தொட்டிகளில் போடக் கற்றுக் கொள்கிறார்கள். இதற்காகவே குப்பை போடும் விளையாட்டினை கற்றுக் கொடுக்கிறார்கள்.

முதலில் எல்லா குழந்தைகளுக்கும் பழைய செய்தி தாள்களை கொடுத்து யார் அதிகம் கிழித்து குப்பைகள் போடுகிறார்கள் என போட்டி நடக்கும். பின்னர் அத்தனை குப்பைகளையும் சரியாக யார் குப்பை தொட்டியில் போடுகிறார்கள் என அடுத்த போட்டி, இப்படி ஆறு மாதத்தில் தொடர்ச்சியான பயிற்சியில் சுத்தமான சூழலை வைத்திருக்க பழக்கப்படுத்தபடுகிறார்கள்.

அவந்தி முதலில் நோதா நகரில் உள்ள நாகானே (Nagane Hoikwan School, Nodashi) சிறுமியர் பள்ளியில் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக போய் வந்தாள். தற்போது கடந்த ஆறு மாதமாக எங்கள் வீட்டில் இருந்து ஒரு கிமீ தொலைவில் உள்ள உமேசதோ (Umesado Hoikwon School) சிறுமியர் பள்ளிக்கு சென்றாள். 

பழைய பள்ளியினை ஒப்பிடும் போது, இப்பள்ளி நவீன வசதிகளோடு கட்டப்பட்ட புதிய பள்ளி. ஆகையால் அதன் உட்கட்டமைப்பே நம்மை வசீகரீக்கும். 




Umesato Nursary School, Nodashi, Japan

Umesato Nursary School, Nodashi, Japan


பள்ளியின் உள் வாசலை அடைந்தவுடன் அங்கிருக்கும் வருகை அட்டையினை தானியங்கி இயந்திரத்தில் செலுத்தி பதிவு செய்து வைத்து விட வேண்டும். 

காலணிகளை மாணவர்களின் பெயர் எழுதியுள்ள‌ பெட்டியில் வெளியில் வைத்து விட வேண்டும். இதே பழக்கம் ஜப்பானிய உயர் நிலை பள்ளிகள் வரை தொடரும். அங்கு, பள்ளிக்குள் பயன்படுத்த பிரத்யோக காலணிகளை தனியாக அணிந்து கொள்ளலாம்.

அவந்தி அவளே அவளது காலணிகளை கழட்டி அவளுடைய பெட்டியில் சரியாக வைத்திருக்க பழக்கபட்டிருந்தாள். பகலில் தினமும் இரண்டு மணி நேரம்  குழந்தைகள் தூங்க வைக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு தேவையான உணவினை பள்ளியிலேயே தயாரித்து வைத்து விடுகிறார்கள். மிகச் சரியாக தராசு கொண்டு அளக்கப்பட்டு சரிவிகித உணவினை சமமாகவே எல்லா குழந்தைக்கும் கொடுக்கிறார்கள். சிறியது, பெரியது, பிடித்த குழந்தைகள் என பேதமே கிடையாது. எல்லோரும் சமமாகவே நடத்தப்படுகின்றனர். முக்கியமாக ஆசிரியரும் இதே உணவினை குழந்தைகளோடு அமர்ந்து உண்ண வேண்டும். 

நாம் "சாப்பாடு" என்று உணவினை பொதுவாக அழைப்பது போல், ஜப்பானியர்க‌ள் அவர்கள்  உண்ணும் உணவினை "கோகன்" (gohan) என்றழைக்கிறார்கள்.
சமைத்த அரிசி சாதம் உட்பட பெரும்பாலான மற்ற உணவும் இதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது.  பொதுவாக கோகனில் வேக வைத்த சோறு, சூப் (மீசோ), ஒரு இறைச்சி துண்டு (மீன், கோழி, பன்றி அல்லது மாட்டு இறைச்சி இவற்றில் ஏதாவது ஒன்று), இனிப்பு ஆகியவை இருக்கும். சாப்பாட்டிற்கு முன் அனைவரும் உணவு தயாரித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இதாதாகிமசு" (itadakimasu) என்று ஒருமித்த குரலில் சொல்லிய பிறகே உண்ண வேண்டும். இதை வீடு, வெளி கடைகள் என  எல்லா இடங்களிலும் இந்த  வழக்கத்தினை கடைபிடிக்கிறார்கள். இதன் நேரிடையான பொருள் நான் இந்த உணவினை பெற்றுக் கொள்கிறேன் என்பதே. ஆனால் நன்றி நவிலலே இதன் முக்கியப் பொருள்.  அனைவரும் உண்டு முடித்த பின் "கொசிசோ சாமா தெசிதா" (gochiso sama deshita) என நன்றியுடன் முடிக்க வேண்டும். இதன் நேரடி பொருள், இந்த உணவு ஒரு விருந்தினை போல் இருந்தது என அவர்களை பாராட்டுவதே.



கடைசி நாளின்போது அவந்திக்கு விடைகொடுக்கும் பொருட்டு பள்ளியில் வைக்கப்பட்டிருந்த பிரிவு வாழ்த்து செய்தி


அவந்தி தன் வகுப்பு சிறுமியர்களோடு விளையாடிய போது எடுத்த படம்

அவந்தி தன் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் சிறுமியர்களோடு  எடுத்த படம்

அவந்தி தன் வகுப்பு சிறுமியர்களோடு விளையாடிய போது எடுத்த படம்
கடந்த வாரம், வியாழன் அன்று அவந்தி இந்தியா செல்ல இருக்கிறாள். இனி அடுத்த வாரம் முதல் பள்ளிக்கு அவந்தி வரமாட்டாள் என என் மனைவி தயங்கி தயங்கி சொன்னவுடன் அவர்களது ஆசிரியர்களின் முகம் வாடி விட்டது. 

அடுத்த நாள் அவந்தியின் பள்ளிக்குள் சென்ற போது வரவேற்பரையில் உள்ள கரும்பலகையில் அவந்தியின் கார்ட்டூன் படம் வரையப்பட்டு, அவந்தி நாளையில் இருந்து பள்ளிக்கு வரமாட்டார், ஆகையால் அவருக்கு மகிழ்ச்சியாக விடை கொடுக்க வேண்டும் என்று அதில் வாழ்த்தும் எழுதி இருந்தார்கள். 


அவந்தியின் கடைசி நாளில் அவள் விளையாடிய போது புகைப்படங்கள் எடுத்து, வாழ்த்து அட்டை ஒன்றினை தயாரித்திருந்தார்கள்.  அவள் இந்த ஆறு மாத காலத்தில்ச் செய்த பொம்மைகள், விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட‌ வண்ணம் தீட்டிய அட்டைகளை ஒரு பையில் போட்டு பரிசாக தந்தார்கள். பின்னாளில் அவந்திக்கு இது பெரும் நினைவு பரிசாக இருக்கும்.  


அவந்தியின் ஆசிரியர்களுக்கு ஒரு துளி கூட ஆங்கிலம் தெரியாது. ஆனாலும் அவளுடைய குறிப்பேட்டில் தினமும் எழுத வேண்டி முடிந்த வரை மொழி பெயர்ப்பு சாதன (Translator) உதவியுடன் மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் குறிப்பு எழுதி வைப்பார்கள். அந்த குறிப்புகளில் இலக்கண பிழைகளை விடவும், அவர்களின் அன்பே மேலோங்கி நிற்கும். 

இந்த பள்ளியின் ஆசிரியர்களுக்கு நாங்கள் நிறைய நன்றிக் கடன் பட்டிருகின்றோம். திருவாசகத்தில் மாணிக்க வாசகர் சொன்ன து போல்,  "பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து" என்ற உரைக்கு நிகராக தாயினும் அதிகமாய் கவனித்து கொண்டார்கள். 



私たちは、幼稚園の先生に感謝 良い習慣や態度を教えるために. どうもありがとうございました

 ஜப்பான் இரயில் பயணிகளின் உடைமை பெட்டிகளுக்கான எண் பூட்டு வசதி





Auto number lockers in Japan Airport train
User defined number lock system is really nice technique and convenience for passengers while travelling with huge luckages. Particularly travel towards airport.
The attached number lock system can be used in the free of cost in the train. Passengers can fix the one time password for lock and fix their luggage.
Photo taken at Narita Express. Japan
Narita Express, Japan

Narita Express, Japan

Narita Express, Japan




சமையல் கற்றுத் தரும் ஜப்பானிய நிறுவனம்


ஜ‌ப்பானில் பெண்களுக்கு சமையல் கற்றுக் கொடுப்பதற்கென்று பிரத்யோக நிறுவனம் ஒன்று உள்ளது. அதன் பெயர் ABC Cooking Studio.
ஜப்பானில் மட்டும் இதற்கு 134 கிளைகள் உள்ளது. 2000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்  இந்நிறுவனத்தில் பயிற்றுவிக்கிறார்கள். சர்வதேச உணவு, ஜப்பானிய உணவு, பேக்கரி ரொட்டி, குழந்தைகள் உணவு, கேக் போன்றவைகளை கற்றுக் கொடுக்கிறார்கள்.
ஒரு நாள் வகுப்பு முதல் பல நாள் வகுப்பு என பலதரப்பட்ட பிரிவுகளில் வகுப்புகள் உண்டு.மேலும் இந்நிறுவனத்திற்கு கொரியா, தைவான், ஹாங்காங், சீனா, சிங்கப்பூர் நாடுகளில் கிளைகள் உள்ளது.
நம் ஊரிலும் இது போல நம் பாரம்பரிய சமையல், மற்றும் புது உத்திகளை கற்றுத் தரலாம்.

ABC cooking studio, Kashiwa station, Japan




Saturday 24 October 2015

அறிவிப்பு பதாகைகள் ‍ (Posters)


தோக்கியோ நகரின் புற நகர் பகுதியான கசிவா (Kasiwa) நகரில் தோக்கியோ பல்கலைக் கழகத்தின் மற்றொரு வளாகம் உள்ளது. இந்த வளாகத்தின் இயக்குநரான பேராசிரியர் தகாகி கசிதா (Prof.Takaaki Kaj) இந்த வருடத்திற்கான இயற்பியல் பிரிவின் நோபல் பரிசினை வாங்கி உள்ளார். 

இவரது பெருமையினை பொது மக்களும் அறியும் பொருட்டு கசிவா இரயில் நிலையத்தின் மேற்கு வாயிலின் அருகில் அறிவிப்பு பதாகை  ஒன்றினை வைத்துள்ளார்கள்.

இன்றைய தினம் இந்த இடத்தினை கடக்கும் பொழுது பள்ளி மாணவர்கள் நின்று இந்த செய்தியினை படித்து விட்டு போனதை கண்டேன். மகிழ்ச்சியாக இருந்தது.  நிச்சயம் நோபல் பரிசு என்றால் என்னவென்று அவரது ஆசிரியர்களிடம் மேலதிக தகவலை கேட்பார்கள். அடுத்த தலைமுறையாவது புதிய உயரங்களை நோக்கி நகர்வதற்கான ஒரு வாய்ப்பாகவே நான் இதனை பார்க்கிறேன்.

நம் தமிழகத்தில் திரையில் நடிக்கும் நடிகர்களுக்கு கட் அவுட்டும், பால் அபிசேகம் செய்யும் இளைஞர்கள் தயவு செய்து நாட்டிற்கு பெருமை சேர்க்கும் ஆசிரிய பெருமக்களது சாதனைகளுக்கு சிறிய அளவில் யாருக்கும் தொந்தரவு இல்லாத வகையில் அறிவிப்பு பதாகைகளை வைக்கலாம். 

கசிவா (Kasiwa) நகர இரயில் நிலையம், மேற்கு நுழைவாயில், ஜப்பான்

இயற்பியல் பரிசிற்கான நோபல் பரிசு வென்றவர்கள் பற்றிய எனது பழைய கட்டுரையினை படிக்க இந்த சுட்டியில் காணலாம்

Friday 23 October 2015

ஜப்பானிய பல்கலைக் கழகங்கள் -1


எமது தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மிதி வண்டி நிறுத்தும் இடம்.




வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் நேர்த்தியாக எவருக்கும் இடைஞ்சல் இல்லாமல் மாணவர்கள் தங்கள் மிதி வண்டியினை நிறுத்துகிறார்கள்.

இதற்கான பயிற்சி இவர்களின் பள்ளி பருவத்திலேயே துவங்கி விடுகிறது.

Friday 16 October 2015

நம்பிக்கைகளும் மனிதர்களும்- 2 


பணி நிமித்தமாகவோ, சுற்றுலாவிற்கோ, அல்லது ஒரு நிகழ்ச்சிகாகவோ ஒரு ஊருக்கு போகிறோம். அப்படி செல்கையில் அந்த ஊர்  பிடித்துப் போயிற்று என்றால் என்ன செய்வோம், அடடே எப்படியாவது இன்னும் ஒரு முறை வந்து சுற்றிப் பார்க்க வேண்டும் அல்லது இங்கேயே வந்து தங்கிவிட வேண்டும் என்று எப்பொழுதாவது நாம் எண்ணுவதுண்டு. 

அந்த வகையில் இத்தாலியில் உள்ள பிளாரன்சு (Florence) நகரினை சுற்றிப் பார்த்து விட்டு உங்களுக்கு பிடித்து விட்டால் மீண்டும் ஒரு முறை போக முடியுமா என ஏங்க வேண்டாம், அங்குள்ள புதிய  சந்தையின் (Mercato Nuovo)   தெற்கு வாசலில் இருக்கும் பித்தளையால் ஆன‌ காட்டுபன்றியின் மூக்கினை சொறிந்து விட்டு அதன் அகண்ட வாயில் காசைப் போட்டு அது வழுக்கி அதன் காலில் உள்ள சிறிய நீர் ஊற்றில் விழுந்து விட்டால் நிச்சயம் நீங்கள் பிளாரன்சு நகரக்கு மறுபடியும் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

இது என்னடா இது, "குன்றின் மேல் ஏறி பன்றிக்கு நன்றி சொன்னால் வென்றிடலாம் குணசேகரனை" என்று வடிவேல் கூறுவது போல் உள்ளதா. 

அப்படி என்ன இந்த காட்டுப் பன்றியின் சிலையில் விசேசம் உள்ளது என கேட்கிறீர்களா?

கதையை கேட்டால் நிச்சயம் நீங்கள் சிரித்து விடுவீர்கள்

அடியேன் 2010 ஆம் ஆண்டு இந்நகருக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது.அப்போது நானும் இந்த நகரின் அழகில் மயங்கி திரும்பி வரும் பொருட்டு இப்பன்றி சிலையின் மூக்கை சொறியப் போனால், உலகமே சொறிந்து அதன் பச்சை நிறம் போய் வெளிறிய மஞ்சள் நிறத்தில் அதன் மூக்கு இருந்தது. அப்படியானால் மக்களின் நம்பிக்கை எந்த அளவிற்கு இருக்கும் என்று பாருங்கள்.

பெத்ரோ தாக்கா (Pietro Tacca) என்னும் இத்தாலிய சிற்பி 1634 ஆம் ஆண்டு கால கட்டத்தில் பருக் (Baroque) பாணியில் வடிவமைத்த‌ சிலைதான் இந்த பொர்சிலினோ (Porcellino) என்னும் காட்டுபன்றியின் சிலை (இத்தாலிய மொழியில் பொர்சிலினோ என்றால் செல்லமாக பன்றிக் குட்டி என்று பொருள்).

சிற்பி தாக்கா வடிவமைத்த‌ பொர்சிலினோ சிலைக்கு   மாதிரியாக இருந்தது ரோம் நகரில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய கிரேக்க முறையில் மார்பில் கல்லில் வடிவமைக்கப்பட்ட  பொர்சிலினோ சிலைதான்.  இச்சிலையினை அப்போதைய‌ போப் ஆண்டவர் பிளாரன்சு நகரின் மெடிசி (Medici) எனப்படும் மன்னர் குலத்திற்கு  பரிசாக கொடுத்தார். தற்போது இந்த மார்பில் பொர்சிலினோ சிலை இதே பிளாரன்சு நகரில் உள்ள உபிசு அருங்காட்சியகத்தில் (Uffizi Museum) உள்ளது. இந்த மார்பில் சிலையினை   மாதிரியாக கொண்டு  இரண்டாவதாக வடிவமைக்கப்பட்டதே பித்தளையாலான சிற்பி தாக்கா வடிவமைத்த‌ பொர்சிலினோ சிலை. 

இந்த சிலையும் மக்கள் தேய்த்து தேய்த்து பன்றியின் மூக்கு தேய்ந்து விட்டதால் சிற்பி தாக்கா வடிவமைத்த இரண்டாவது பித்தளை சிலையும் பிளாரன்சு நகரின் பர்த்தினி (Museo Bardini) அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டது. 


என்னப்பா இது ஒரே குழப்பமாக உள்ளது என்கிறீர்களா. 

ஆமாங்க, இப்பொழுது பிளாரன்சு நகரில் புதிய சந்தை வாயிலில் இருக்கும் பொர்சிலினோ சிலை நகலின் நகலிடம் எடுத்த நகல்.  இப்பொழுது நாம் பிளாரன்சு நகரில் பார்க்கும் சிலையானது 1998 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. 


இந்த பன்றியின் மூக்கை சொறியும் வழக்கத்தினை 1766 ஆம் ஆண்டு கால கட்டத்தில் அங்கு பயணித்த ஆங்கிலேய பயணி தொபியாசு சுமெல்லத் ( Tobias Smollett) கண்டதாக குறிப்பெடுத்துள்ளார்.

இப்பன்றி சிலையின் காலடி பகுதியில் அருமையான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. ஒரு பாம்பு ஒரு தவளையினை முழுங்குவது போலவும், நத்தை மற்றும் நண்டு போன்றவகளையும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 நான் பார்த்த பொழுது அதன் அடியில் உள்ள நீரித் தொட்டியில் ஏராளமான காசுகள் கிடந்தது. அவை அங்குள்ள அறக்கட்டளைக்கு நற்பணிகள் செய்ய கொடுக்கப்படுகிறது என தகவல் அறிய முடிந்தது.

இந்த நம்பிக்கை பன்றி  சிலையின் நகல் தற்போது உலகமெங்கும் பரவி உள்ளது. ஆம் ஆஸ்திரேலியாவின் சிட்னி மருத்துவமனை வாசலில் இதே போன்ற சிலையினை காணலாம். மேலும் பெல்ஜியம், கனடா, அமெரிக்கா, டென்மார்க், ஜெர்மனி, இங்கிலாந்து, நார்வே என பொர்சிலினோவின் பட்டியல் நீள்கிறது.

உலகில் அதிகம் நகல் எடுக்கப்பட்ட சிலை இதுவாகத்தான் இருக்கும்.அதனால் என்ன நம்பிக்கையினை யார் நகல் எடுத்தாலும் நல்லதுதானே..

அடுத்த முறை பிளாரன்சு நகருக்கு போனால் இந்த பன்றி சிலையின் மூக்கை சொறியாமல் வந்து விடாதீர்கள்.

பிளாரன்சு நகரின் புதிய சந்தையின் தெற்கு வாசலில்  ((Mercato Nuovo) ) வைக்கப்பட்டுள்ள (புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு 2010)  




Thursday 15 October 2015

எது மக்களின் பத்திரிக்கை?

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட மாபெரும் கிழக்கு ஜப்பான் நிலநடுக்கம் (Great Japan Earthquake) மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலைகளால் பெரும் அழிவினை சந்தித்த நகரம் இசினோகாமி (Ishinokami). இது மியாகி (Miyaki) மகாணத்தில் உள்ள கடற்கரையோர நகரம்.

ஜப்பானிய அரசின் புள்ளி விபரப்படி இந்தசுனாமி பேரலையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,580. மேலும் 2013 ஆம் ஆண்டு ஜப்பானின் தேசிய காவல் நிறுவனத்தின் கணக்கு படி மியாகி உள்ளிட்ட இவாதே, புகுசிமா மாகாணங்களில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 2698.

ஒரே நாளில் ஏற்பட்ட சுனாமியில் இசினோகாமி நகத்தில் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் மக்கள் வீட்டினை இழந்து, உறவுகளை இழந்து நடுத் தெருவில் நின்றனர். கடலில் அடித்து செல்லப்பட்ட உறவுகளை தேடி ஒருபுறமும், தங்கள் வாழ்வாதாரங்களை  இழந்து அடுத்த வேளை குடிநீருக்கும், உணவையும் தேடி திக்கற்றவர்களாக  அலைந்தனர்.

சமீபத்தில் இந்த நகரத்திற்கு முழுமதி அறக்கட்டளை நண்பர்களுடன் செல்லும் வாய்ப்பு கிடைத்த போது அந்நகரெங்கும் குவியல் குவியலாக காணப்பட்ட கல்லறைகளை கண்டபோது நான்கு வருடத்திற்கு முன்பு நடந்த சம்பவங்களை கற்பனை  செய்து பார்க்க முடிந்தது

சுனாமியின் போது இறந்தவர்களுக்காக எழுப்பபட்ட கல்லறைகள். இசினொகாமி நகரம்

இசினொகமி நகரின் கடற்கரையோரத்தில் சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் பிராத்தனை கூடம்.

இசினொகமி நகரின் கடற்கரையோரத்தில் உள்ள துவக்கப் பள்ளி, சுனாமியாலும், தீ விபத்தாலும் பாதிக்கப்பட்டபோது எடுத்த படம்.

சரி விசயத்திற்கு வருகிறேன். இந்த இசினொகாமி நகரத்தில் அமைந்துள்ள "இசினொகாமி கிபி சிம்புன்" ( Ishinomaki Hibi Shimbun)  என்ற மாலை நேர தினசரி செய்திதாள் 1901 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த தினசரியானது மியாகி மாகாணத்தில் உள்ள இசினொகாமி, கிகாசி மட்சுசிமா, மற்றும் ஒனகவாசொ நகரங்களில் விநியோகிக்கப்படுகிறது.

2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி சுனாமி பேரலையானது இசினொகாமி நகரத்திற்குள் 9 மீட்டர் அளவிற்கு சூழ்ந்தது. இந்த சூழலில் தினசரி அலுவலகத்தின் முதல் தளம் முற்றிலும் நீரால் சூழ்ந்து, இரண்டாவது தளத்தின் பாதி வரை கடல் நீர் அடித்து சென்றது. நகரமே மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி கிடந்தது. நல்லவேளையாக இந்த சுனாமி அழிவில் பத்திரிக்கையில் வேலை பார்த்த அலுவலர்கள் அருகில் உள்ள மலைகளில் ஏறி உயிர் தப்பினர்.

ஒரு நகரமே மின்சாரம் இல்லாமல், வெளி உலக தகவல் தொடர்பு எல்லாமே துண்டிக்கப்பட்டு ஏறத்தாழ சுடுகாடாக இருக்கும் போது இத்தினசரியின் தலைவரான திரு கொய்ச்சி ஒமி ( Koichi Ohmi) ஒரு முடிவு செய்தார். நாளைய வாழ்வு என்னவாகும் எனத் தெரியாத நம் மக்களுக்கு தொடர்ந்து நம்பிக்கை ஊட்ட வேண்டும் என உறுதி கொண்டார் .  

தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் லட்சக் கணக்கான மக்களுக்கு அரசின் புணரமைப்பு மட்டும் மீள் கட்டுமான செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும். எப்படி முடியும்? என அவரது சகாக்கள் கேட்டபோதுஇரண்டாம் உலகப் போர் சமயத்தில் செய்திதாள்கள் தடைசெய்யப்பட்ட நேரத்தில் இப்பத்திரிக்கை எவ்வாறு கையெழுத்து செய்திகளாக மக்களிடம் கொண்டு சேர்த்தது என்ற இத்தினசரியின் பழைய‌ வரலாற்றினை நினைவூட்டி அவர்களுக்கு தெம்பூட்டினார்.

அவர்களிடம் இருந்த சுருள் தாள் மற்றும் மை பேனாக்களைக் கொண்டு சுவரொட்டி வடிவில் செய்திகளை ஒரு பக்கத்தில் எழுதினர். இதன் தலைமை ஆசிரியர் கிரொயுகி தகெயுச்சி-‍சன்  (Hiroyuki Takeuchi) மற்றும் அவரது சக அலுவலர்களும் மார்ச் 12 ஆம் தேதி ஆறு  கையெழுத்து சுவரொட்டிகளாகசெய்திதாளை தயாரித்தனர்முதல் தலைப்பு செய்தியே இதுதான்: ஜப்பானின் மிகப்பெரிய நிலநடுக்கமும், சுனாமியும்.

பின்னர் மார்ச் 12 லிருந்து 17 ஆம் தேதி வரை ஆறு நாட்களுக்கு மின்சாரமே இல்லாத சூழலில் 42 சுவரொட்டி செய்தி தினசரிகளை தயார் செய்து நகரின் முகாமெங்கும் ஒட்டி மக்களிடையே நம்பிக்கையினை ஊட்டினர். வெளி உலக தொடர்பே இல்லாத சூழலில் மக்களுக்கு கிடைத்த ஒரே செய்தி இவர்களுடையதுதான். பின்னர் மார்ச் 18 ஆம் தேதி மின்சாரம் கிடைத்தவுடன் நகலெடுத்து செய்தி தினசரியினை மக்களிடம் கொண்டு சேர்த்தனர். ஒரு வழியாக மார்ச் 19 ஆம் தேதி அச்சு இயந்திரம் சரி செய்யப்பட்டு வழக்கம் போல் செய்திகளை மக்களிடம் கொண்டு சென்றனர்.

இவர்களின் தன்னிகரற்ற சேவையினை பாராட்டும் விதம் 2011 ஆம் ஆண்டு செம்டபர் மாதம் சர்வதேச செய்தியாளர் கழகம் இவர்களை அழைத்து கெளரவித்தது. மேலும் அமெரிக்காவில் வாசிங்டன் நகரில் உள்ள செய்தி அருங்காட்சியகத்தில் (Nueseum) இவர்கள் வெளியிட்ட 42 கையெழுத்து தினசரிகளில் ஒன்றை மக்களின் பார்வைக்கு வைத்துள்ளது.


அமெரிக்காவின் வாசிங்டன் நகரத்தில் உள்ள நியூசியத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள  தினசரியின் கையெழுத்து சுவரொட்டி.


இது பற்றி இச்செய்தி தின‌சரியின்   தலைவர் திரு கொய்ச்சி ஒமி அவர்களிடம் கேட்டபோது, அழிவின் சோகத்தில் எங்கள் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதை காட்டிலும் எங்களுக்கு வேறு பணி இருக்க முடியாது. ஏனெனில் எங்களுக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளிகளே எங்கள் மக்கள்தான். எந்த சூழலிலும் தொய்வின்றி அவர்களுக்கு செய்தியினை எடுத்து செல்லுதல்  எங்கள் கடமை என்று கூறியுள்ளார். ஜப்பானியர்களின் கடினமான சூழலிலும் கடமை அர்ப்பணிப்புடன் வேலை பார்க்கும் குணத்திற்கு இதுவும் ஒரு உதாரணம்.

சுனாமியின் போது வெளியிடப்பட்ட கையெழுத்து சுவரொட்டி செய்திதாளை விவரிக்கும் அதன் தலைமை ஆசிரியர் கிரொயுகி தகெயுச்சி-‍சன் 


சுனாமியின் போது வெளியிடப்பட்ட கையெழுத்து சுவரொட்டி செய்திதாளை விவரிக்கும் அதன் தலைமை ஆசிரியர் கிரொயுகி தகெயுச்சி-‍சன் 

உண்மையில் இது போன்ற பல ஊடக செய்தியாளர்கள் நம் தமிழகத்தில் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி பணி புரிகின்றனர். ஆனால் அவர்களை வழி நடத்த வேண்டிய ஊடக முதலாளிகளின் நிலையினை நான் சொல்லி தெரிவதில்லை.


நடுநிலைமையோடு, பேசாப் பொருளையும், மக்களுக்கு தேவையான, அவர்களின் பிரச்சினைகளை சமூகத்திற்கு துணிச்சலுடன் முன்னெடுக்கிற பத்திரிக்கையே தலைமுறைகளை கடந்து "இசினொகாமி கிபி சிம்புன்" தினசரி போல் காலத்தால் பேசப்படும்.

(என்னதான் இன்டர்நெட், திறன்பேசிகளில் செய்தி தினசரிகள் பார்க்கும் வசதி வந்தாலும் அச்சு இயந்திரங்களின் வழியாக செய்தி தினசரிகளை படிப்பது என்பதே தனித்த அனுபவம் ஆகும்)

இயற்கை வெந்நீர் ஊற்று - Hot Spring in Japan



பூமிக்கு அடியில் இருந்து இயற்கையாகவே வெளிப்படும் வெந்நீர் ஊற்று நீரில் எண்ணற்ற தாதுக்கள் (minerals) அடங்கியுள்ளன.

ஜப்பானில் கிடைக்கப்பெறும் வெந்நீர் ஊற்றில் காணப் பெறும் கந்தக தாதுக்கள் (sulphur) உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

சமீபத்தில் சின்கோதகா (Shinhotaka Robe Car) பகுதிக்கு சென்றிருந்த போது இயற்கை வெந்நீர் ஊற்றில் வேகவைக்கப்பட்டமுட்டைகளை உண்ணும்  வாய்ப்பு கிட்டியது. சற்றே கந்தக நெடி அடிக்கும் இம்முட்டைகள்  சுவைக்க வித்தியாசமாக இருந்தது. ஆனால் ஜப்பானியர்கள் இதனை பெருமளவில் தேடி உண்ணுகிறார்கள்.



கந்தக தாது நிறைந்த இயற்கை வெந்நீர் ஊற்றில் அவிழ்க்கப்பட்ட முட்டைகள் (இடம்: Shinhotaka Robe Car, Toyoma Prefecture, Japan)


நான்கு முட்டை விலை 400 யென்

(இதே போன்று ஜப்பானின் புஜி (Fuji) எரிமலை  (volcano)   பகுதியில் அருகில் உள்ள கக்கோனே (hakone) மலை பகுதியில் இருந்து வெளி வரும் கந்தக வெந்நீர் ஊற்றுகளில்  அவிழ்க்கப்பட்ட முட்டைகள்   மிகவும் பிரசித்தம். அவை கரிய நிறத்தில் காணப்படும்)

கக்கோனே மலைப் பகுதியில் உள்ள இயற்கை வெந்நீர் ஊற்றில் அவிழ்க்கப்படும் முட்டைகள் (Photocredit: www.samuraitours.com).