Sunday, 4 October 2015

ஜப்பான்  அறுவடை திருவிழா - பறை மேளங்களோடு ஒரு சங்கமம் 

(Japanese Autumn Harvesting Festival)



ஜப்பானில் தற்போது இலையுதிர்காலம் துவங்கி விட்டது. மே மாத வாக்கில் விதைக்கப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்யும் நேரமும் இதுவே. ஆகையால் தற்போது ஜப்பானில் எங்கு பார்த்தாலும் வார இறுதியில் விழாக் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமே இல்லை.  

இன்று எங்கள் நோதா  (Nodashi) நகரத்தில் அறுவடை திருவிழா வெகு சிறப்பாக பறை மேளங்கள் மற்றும் சப்பரம் தூக்கி ஆடும் கலாச்சார  போட்டிகளோடு கோலாகலமாக நடைபெற்றதுவிண் அதிரும் பறை முரசுகளோடு சப்பரம் தூக்கி ஆடுவதே இத்திருவிழாவின் சிறப்பம்சம். 


ஜப்பானின் பறை இசைக் கருவிகள் பொதுவாக தய்கோ (Taiko) என்றழைக்கப்படுகின்றது. இவை 6 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் புத்த மதத்தின் மூலம் சீனா வழியாக வந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்மேலும் இந்த பறை மேளங்கள் இந்தியா, மற்றும் கொரியா நாடுகளின் வழியாகவும் வந்திருக்கலாம் என்றும் நம்புகிறார்கள்.

தமிழகத்தில் மேற்கு மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் ஜமாப்பு போன்று பெரிய வடிவிலும், சிறிய வடிவிலும் ஜப்பானிய பறை மேளங்கள் காணப்படுகின்றன.  பெரிய பறை மேளங்களை முகத்து க்கு நேராக உயரத்தில் ஒரு தாங்கு பலகையில் பொருத்தி முரசு கொட்டுவதை போல கட்டைகளை கொண்டு பறையடிக்கிறார்கள். இன்னும் சில வகை பறை மேளங்களை தரையில் படுத்து கொண்டு சற்றே உடலை மேல் எழுப்பிய நிலையில் அடிக்கிறார்கள்ஜப்பான் பறை மேளங்கள் பொதுவாக வெளிநாடுகளில் வாதைகோ (Wadiko) என்று அழைக்கப்படுகிறது

ஜப்பானிய பறை கருவிகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.

முதல் வகை பியொ உய்ச்சி தைகோ (Byō-uchi-daiko 鋲撃ち太鼓). இவ்வகை பறை கருவியானது விலங்கின் தோலை இரு புறமும் காலியான மர உருளை ஒன்றின்  வாய்ப்பகுதியின் மீது இறுக்க கட்டி அதன் பக்கவாட்டில் விறைப்பாக இருக்குமாறு சிறு ஆணிகளை மரப் பட்டைகள் மீது அடித்து செய்யப்படுகிறதுஇதன் மற்றொரு புறம் அப்படியே காலியாக காற்று உள் செல்லும் படி விட்டுவிடப்படுகிறது
இப்பறை கருவியின் விட்டமானது எந்த மர உருளையின் மீது பொருத்தப்படுகிறதோ அந்த மரத்தின் விட்டத்தினை சார்ந்தது. மற்றொரு வகை சிமெ-தைகோ (Shime-daiko (締め太鼓என அழைக்கப்படுகிறது. மரப்பட்டைகளுக்கு பதிலாக விலங்கின் தோலானது இரும்பு வளையங்கள் மீது இழுத்து கட்டப்படுகிறது (பார்க்க உடுக்கை வடிவில் இருக்கும்). இதன் அளவினை வேண்டும் வண்ணம் வடிவமைத்து கொள்ளலாம்.


Japanese Autumn Harvesting Festival, Nodashi, Chiba, Japan

Japanese Autumn Harvesting Festival, Nodashi, Chiba, Japan

இது தவிர பறை மேளங்களின் வடிவம் மற்றும் அளவினை பொறுத்து அதன் பெயர்கள் மாறுபடுகிறது மூன்றடி உயரம் உள்ள பறை மேளங்கள் சு‍-தைகோ (Chu-daiko), குமி-தைகோ (Kumi-daiko) என்று அழைக்கப்படுகின்றன. திருவிழா காலங்களில் கோவில்களின் இசைக்கப்படும் ஒதைகோ (Odaiko) எனப்படும் இராட்சத வடிவிலான பறை மேளங்கள் திகில் ஊட்டக் கூடியவை.

நோதா நகரில் நடைபெற்ற அறுவடை திருவிழாவில் இசைக்கப்பட்ட பறை மேளத்தின் காணொளியினை கீழ்கண்ட சுட்டியில் காணலாம்.





நம் ஊர் திருவிழாக்களில் உற்சவரை சிறு ரதம் அல்லது பல்லக்கில் வைத்து எல்லா தெருக்களிலும் ஊர்வலம் வருவதைப் போலவே ஜப்பானியர்கள் இந்த அறுவடைத் திருவிழாவில் தங்களது ஏழு இராசி கடவுளர்களில் ஒருவராகிய தய்கொகு (வளங்களின் அதிபதி, இவர் ஒரு கையில் நெல் மூட்டையினையும் மற்றொரு கையில் நெல் அடிக்க பயன்படும் மரசுத்தியினையும் வைத்துக் கொண்டு இருப்பார்) கடவுளின் சிலையின் சிறு தேரின் மேல் பதித்து அவைகளை புனித விளக்குகள் மூலம் அலங்கரித்து வைத்திருக்கிறார்கள். 



Daikoku, One of the Seven fortune gods in Japan




Japanese Autumn Harvesting Festival, Nodashi, Chiba, Japan

Japanese Autumn Harvesting Festival Nodashi, Chiba, Japan


இந்த சிறு தேரானது இரண்டு நீண்ட கழிகள் மேல் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த கழிகளை இரண்டு புறமும் தோளில் சுமந்து கொண்டு ஆடுகிறார்கள். அப்பொழுது தேரின் மீது அந்த அணியினர் இருவரோ, அல்லது மூவரோ ஏறி நின்று கொண்டு அணியினை உற்சாகப் படுத்துகிறார்கள். இந்த தேரினை ஜப்பானியர்கள் தங்களது பாரம்பரிய உடையினை அணிந்து கொண்டுதான் சுமக்கிறார்கள். 


தனித்த நடன அசைவுகளோடு முன்னும் பின்னுமாக தேரை ஆட்டியபடியே நடனமாடுவதை காணவே அற்புதமாக இருக்கும். இவ்விளையாட்டினை பல்வேறு குழுக்களாக பிரிந்து விளையாடுகிறார்கள். நகரின் ஒவ்வொரு பகுதியினை சார்ந்த மக்களும் குழுக்களாக ஒவ்வொரு அணியிலும் பங்கேற்கிறார்கள். இவர்கள் அனைவரும் நகரின் சமுதாய மையங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறார்கள். 

சப்பரம் தூக்கி நடனமாடும் காணொளியினை கீழ்கண்ட சுட்டியில் காணலாம்



இன்றைய திருவிழாவில் இரண்டு அம்சங்கள் என்னை கவர்ந்தது.

ஜப்பானில் பறை இசை மேளங்கள் என்பது ஒரு கலாச்சாரத்தின் கலை அம்சமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. தேர்ந்த பயிற்சியின் மூலம் குருவின் மூலம் இதனை யார் வேண்டுமானாலும் இசைக்கலாம். இதற்கு சாதியோ, சமூக அந்தஸ்தோ தேவை இல்லை.

தேர் விளையாட்டில் எல்லா வயது தரப்பினரும் பால் வேறுபாடின்றி கலந்து கொண்டு குதூகலிக்கின்றனர். இத்திருவிழாவின் மூலம் தத்தம் பகுதி மக்களோடு கலாச்சார ரீதியில் பிணைக்கப்படுகிறார்கள். இந்த போட்டியில் சமூக தட்டு பேதமின்றி எல்லோரும் மகிழ்ந்திருக்கிறார்கள்.  




No comments:

Post a Comment