நம்பிக்கைகளும் மனிதர்களும்- 2
பணி நிமித்தமாகவோ, சுற்றுலாவிற்கோ, அல்லது ஒரு நிகழ்ச்சிகாகவோ ஒரு ஊருக்கு போகிறோம். அப்படி செல்கையில் அந்த ஊர் பிடித்துப் போயிற்று என்றால் என்ன செய்வோம், அடடே எப்படியாவது இன்னும் ஒரு முறை வந்து சுற்றிப் பார்க்க வேண்டும் அல்லது இங்கேயே வந்து தங்கிவிட வேண்டும் என்று எப்பொழுதாவது நாம் எண்ணுவதுண்டு.
அந்த வகையில் இத்தாலியில் உள்ள பிளாரன்சு (Florence) நகரினை சுற்றிப் பார்த்து விட்டு உங்களுக்கு பிடித்து விட்டால் மீண்டும் ஒரு முறை போக முடியுமா என ஏங்க வேண்டாம், அங்குள்ள புதிய சந்தையின் (Mercato Nuovo) தெற்கு வாசலில் இருக்கும் பித்தளையால் ஆன காட்டுபன்றியின் மூக்கினை சொறிந்து விட்டு அதன் அகண்ட வாயில் காசைப் போட்டு அது வழுக்கி அதன் காலில் உள்ள சிறிய நீர் ஊற்றில் விழுந்து விட்டால் நிச்சயம் நீங்கள் பிளாரன்சு நகரக்கு மறுபடியும் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
இது என்னடா இது, "குன்றின் மேல் ஏறி பன்றிக்கு நன்றி சொன்னால் வென்றிடலாம் குணசேகரனை" என்று வடிவேல் கூறுவது போல் உள்ளதா.
அப்படி என்ன இந்த காட்டுப் பன்றியின் சிலையில் விசேசம் உள்ளது என கேட்கிறீர்களா?
கதையை கேட்டால் நிச்சயம் நீங்கள் சிரித்து விடுவீர்கள்
அடியேன் 2010 ஆம் ஆண்டு இந்நகருக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது.அப்போது நானும் இந்த நகரின் அழகில் மயங்கி திரும்பி வரும் பொருட்டு இப்பன்றி சிலையின் மூக்கை சொறியப் போனால், உலகமே சொறிந்து அதன் பச்சை நிறம் போய் வெளிறிய மஞ்சள் நிறத்தில் அதன் மூக்கு இருந்தது. அப்படியானால் மக்களின் நம்பிக்கை எந்த அளவிற்கு இருக்கும் என்று பாருங்கள்.
பெத்ரோ தாக்கா (Pietro Tacca) என்னும் இத்தாலிய சிற்பி 1634 ஆம் ஆண்டு கால கட்டத்தில் பருக் (Baroque) பாணியில் வடிவமைத்த சிலைதான் இந்த பொர்சிலினோ (Porcellino) என்னும் காட்டுபன்றியின் சிலை (இத்தாலிய மொழியில் பொர்சிலினோ என்றால் செல்லமாக பன்றிக் குட்டி என்று பொருள்).
சிற்பி தாக்கா வடிவமைத்த பொர்சிலினோ சிலைக்கு மாதிரியாக இருந்தது ரோம் நகரில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய கிரேக்க முறையில் மார்பில் கல்லில் வடிவமைக்கப்பட்ட பொர்சிலினோ சிலைதான். இச்சிலையினை அப்போதைய போப் ஆண்டவர் பிளாரன்சு நகரின் மெடிசி (Medici) எனப்படும் மன்னர் குலத்திற்கு பரிசாக கொடுத்தார். தற்போது இந்த மார்பில் பொர்சிலினோ சிலை இதே பிளாரன்சு நகரில் உள்ள உபிசு அருங்காட்சியகத்தில் (Uffizi Museum) உள்ளது. இந்த மார்பில் சிலையினை மாதிரியாக கொண்டு இரண்டாவதாக வடிவமைக்கப்பட்டதே பித்தளையாலான சிற்பி தாக்கா வடிவமைத்த பொர்சிலினோ சிலை.
இந்த சிலையும் மக்கள் தேய்த்து தேய்த்து பன்றியின் மூக்கு தேய்ந்து விட்டதால் சிற்பி தாக்கா வடிவமைத்த இரண்டாவது பித்தளை சிலையும் பிளாரன்சு நகரின் பர்த்தினி (Museo Bardini) அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டது.
என்னப்பா இது ஒரே குழப்பமாக உள்ளது என்கிறீர்களா.
ஆமாங்க, இப்பொழுது பிளாரன்சு நகரில் புதிய சந்தை வாயிலில் இருக்கும் பொர்சிலினோ சிலை நகலின் நகலிடம் எடுத்த நகல். இப்பொழுது நாம் பிளாரன்சு நகரில் பார்க்கும் சிலையானது 1998 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது.
இந்த பன்றியின் மூக்கை சொறியும் வழக்கத்தினை 1766 ஆம் ஆண்டு கால கட்டத்தில் அங்கு பயணித்த ஆங்கிலேய பயணி தொபியாசு சுமெல்லத் ( Tobias Smollett) கண்டதாக குறிப்பெடுத்துள்ளார்.
இப்பன்றி சிலையின் காலடி பகுதியில் அருமையான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. ஒரு பாம்பு ஒரு தவளையினை முழுங்குவது போலவும், நத்தை மற்றும் நண்டு போன்றவகளையும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நான் பார்த்த பொழுது அதன் அடியில் உள்ள நீரித் தொட்டியில் ஏராளமான காசுகள் கிடந்தது. அவை அங்குள்ள அறக்கட்டளைக்கு நற்பணிகள் செய்ய கொடுக்கப்படுகிறது என தகவல் அறிய முடிந்தது.
இந்த நம்பிக்கை பன்றி சிலையின் நகல் தற்போது உலகமெங்கும் பரவி உள்ளது. ஆம் ஆஸ்திரேலியாவின் சிட்னி மருத்துவமனை வாசலில் இதே போன்ற சிலையினை காணலாம். மேலும் பெல்ஜியம், கனடா, அமெரிக்கா, டென்மார்க், ஜெர்மனி, இங்கிலாந்து, நார்வே என பொர்சிலினோவின் பட்டியல் நீள்கிறது.
உலகில் அதிகம் நகல் எடுக்கப்பட்ட சிலை இதுவாகத்தான் இருக்கும்.அதனால் என்ன நம்பிக்கையினை யார் நகல் எடுத்தாலும் நல்லதுதானே..
அடுத்த முறை பிளாரன்சு நகருக்கு போனால் இந்த பன்றி சிலையின் மூக்கை சொறியாமல் வந்து விடாதீர்கள்.
பிளாரன்சு நகரின் புதிய சந்தையின் தெற்கு வாசலில் ((Mercato Nuovo) ) வைக்கப்பட்டுள்ள (புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு 2010) |
No comments:
Post a Comment