சின்ன சின்ன மகிழ்ச்சிகள்தான் வாழ்வை சுவாரசியமாக வைத்திருக்கிறது.
கடந்த வாரத்தின் மதிய பொழுதில் எனது ஆய்வு கட்டுரைக்கான வெகுமதி பிரதி (Complementary Copy) போட்டோ கெமிஸ்ட்ரி அண்ட் போட்டோ பயாலஜி சி ரிவியூ (Photochemistry and Photobiology C- Review) இதழில் இருந்து அனுப்பி இருந்தார்கள். நிறைந்த மகிழ்ச்சி.
ஆய்வுக் கட்டுரையினைப் படிக்க கீழ்கண்ட சுட்டியில் பெறலாம (*ஆய்விதழ் சந்தா செலுத்தி இருந்தால் மட்டுமே படிக்க இயலும்)
http://www.sciencedirect.com/science/article/pii/S1389556715000283
இந்த ஆய்வு கட்டுரையினை நான் முதன்மை நெறியாளராக (Corresponding Author) இருந்து வெளியிட்டுள்ளதால் இந்த வெகுமதி பிரதியினை அனுப்பி வைத்துள்ளார்கள். இந்த ஆய்விதழின் நிறுவனர் எனது பல்கலைக் கழக தலைவரும், எனது ஆய்வு நிறுவனத்தின் இயக்குநருமான பேராசிரியர் அகிரா புசுசிமா ஆவார் (Prof. Akira Fujishima). அவர்களோடு இணைந்து இந்த ஆய்வுக் கட்டுரையினை வெளியிட்டது என் ஆய்வு பயணத்தில் ஒரு மகிழ்வான தருணமாகவே பார்க்கிறேன்.
கடந்த ஜீலை மாதத்தோடு என் முனைவர் ஆய்வு பட்டம் முடிந்து ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. ஏறத்தாழ இது வரை 60 க்கும் மேற்பட்ட எனது ஆய்வு கட்டுரைகள் சர்வதேச ஆய்வு இதழ்களில் வெளிவந்துள்ளன.
உலகம் முழுவதிலும் உள்ள 100 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களோடு கூட்டு முயற்சியில் பணியாற்றியதன் மூலம் மட்டுமே இதனை செய்ய முடிந்தது. என் தனிப்பட்ட சாதனை என்று ஒன்றும் இல்லை. இந்த தருணத்தில் என்னோடு ஆய்வுத் தடத்தில் பயணித்த, பயணிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கடன் பட்டுள்ளேன். முக்கியமாக, என் முனைவர் பட்ட நெறியாளர் பேராசிரியர் இரா. சத்தியமூர்த்தி அவர்கள், முனைவர் செந்தில் அரசு அண்ணா, முனைவர் சந்திர மோகன் உட்பட என் மதிப்பிற்குரிய நல விரும்பிகளின் வழிகாட்டுதலால் மட்டுமே இன்று இந்த இடத்திற்கு வர முடிந்துள்ளது.
எது ஆய்வு, ஒரு ஆய்வினை எப்படி அணுக வேண்டும், ஆய்வின் வீழ்ச்சியான பக்கங்களை எப்படி தவிர்ப்பது போன்றவற்றை கற்கவே இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது. இனிதான் தனித்த, செம்மையான ஆய்வினை தொடங்க வேண்டும். அதுவும் மானுடத்தின் மேன்மைக்காக இருப்பின் கூடுதல் மகிழ்ச்சி.
என் தாய்மொழி ஒன்றுதான் எல்லா தருணங்களிலும் எனக்கு சிந்திக்கவும், பல்வேறு தளங்களில் ஆய்வினை பற்றி யோசிக்கவும் தைரியம் ஊட்டியது.
ஆய்வு பயணங்கள் தொடரும்..
//மானுடத்தின் மேன்மைக்காக இருப்பின் கூடுதல் மகிழ்ச்சி.//
ReplyDeleteஉயர்ந்த எண்ணம் !!
உங்களின் ஆய்வு சிறப்பான பாதையில் பயணித்து, முழுமையடைந்து மேலும் பல சான்றோர்களின் பாராட்டுகளை பெற எனது வாழ்த்துக்கள் !!
// என் தாய்மொழி ஒன்றுதான் எல்லா தருணங்களிலும் எனக்கு சிந்திக்கவும், பல்வேறு தளங்களில் ஆய்வினை பற்றி யோசிக்கவும் தைரியம் ஊட்டியது.// இதைவிட மேலான புரிதல் வேறு என்ன இருந்துவிட போகிறது
ReplyDelete